கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: December 27, 2023
பார்வையிட்டோர்: 5,779 
 

(1977ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13

7.பூட்டிய அறையின் மர்மம்

போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும், தமயந்தி வெற்றிப் பெருமிதத்துடன் பரஞ்சோதியைப் பார்த்தாள். இருந்தபோதிலும் அவர் ஆத்திரப்படவில்லை. ஏனென்றால், பரஞ்சோதியின் மனதில் வேறொரு சந்தேகம் தலைதூக்கியது. எதற்காகத் தன்னை கேஸிலிருந்து விலகும்படி இவள் வற்புறுத்துகிறாள்? ஒருக்கால் இவளே தன் கணவனை மறைத்து வைத்திருப்பாளோ….?

இன்ஸ்பெக்டர் கதிர்வேல், தமயந்தி கூறிய புகாரை ஒரு பேப்பரில் எழுதி, அவளிடம் கையெழுத்து வாங்கினார். அந்தச் சமயத்தில் ஒரு கறுப்புப் பெட்டியை சுமந்தபடி சுசீலா அங்கு வந்து சேர்ந்தாள். “நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா, பரஞ்சோதி?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். சுசீலாவின் பக்கம் திரும்பிய பரஞ்சோதி, “நீ அதைச் சுழலவிடு, சுசீலா,” என்றார்.

சுசீலா அந்தக் கறுப்புப் பெட்டியைத் திறந்து, அத ள்ளிருந்த ஒரு டேப் ரிக்கார்டரை இயக்கினாள். பரஞ்சோதி புன்னகை பூத்தபடி நின்று கொண்டிருந்தார். டேப் ரிக்கார்டரிலிருந்து குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன-.

“….உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தருகிறேன், நீங்கள் இந்த விவகாரத்திலிருந்து விலகி விடுங்கள்” என்று தமயந்தியின் குரல் ஒலித்தது. பிறகு, பரஞ்சோதியின் குரலும் தமயந்தியின் குரலும் ஒலித்தது. “……உங்கள் பிடிவாதத்தை விட்டு விடுங்கள், பரஞ்சோதி, நான் பெரும் பணக்காரி என்னால் சாதிக்க முடியாததொன்றுமில்லை, அதிலும் நான் பெண். எனவே உலகம் நான் சொல்வதைத்தான் நம்பும். என்னைப் பகைத்துக் கொண்டு நீங்கள் சோலைப்பாக்கத்தில் தொழில் நடத்த முடியாது. எனவே கடைசியாகக் கேட்கிறேன், உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்….”

“நிறுத்துங்கள்!, நிறுத்துங்கள்!” என்று அலறிய தமயந்தி, “நான் என் கேசை வாபஸ் வாங்கிக¢ கொள்கிறேன்” என்று தவித்தாள். சுசீலா டேப் ரிக்கார்டரை நிறுத்தி விட்டாள்.

பரஞ்சோதி புன்னகையோடு தமயந்தியைப் பார்த்தார். அவள் அவரை முறைத்துப் பார்த்துவிட்டு, இன்ஸ்பெக்டர் கதிர்வேலிடமிருந்து கேஸ் சீட்டை வாங்கிக் கொண்டாள்.

“இது மாதிரி ஏதாவது அசம்பாவிதம் நடக்குமென்று தெரிந்துதான், நான் பணக்காரப் பெண்மணிகளிடம் பேசும்போது இந்த டேப் ரிக்கார்டரை சுழல விடுவேன். ஆனால் கைதாகி போலீஸ் ஸ்டே க்கு நான் வருவது இது தான் முதல் தடவை” என்றார் பரஞ்சோதி. தமயந்தி ஆத்திரத்தோடு முணு முணுத்தபடி அங்கிருந்து கிளம்பினாள்.

“மன்னித்துக் கொள்ளுங்கள், பரஞ்சோதி, நான் அந்தப் பெண் கூறியதை உண்மை என்று நம்பி விட்டேன்” என்றார் கதிர்வேல்.

“பரவாயில்லை” என்று பெருந்தன்மையாகக் கூறிய பரஞ்சோதி, “தன்னை இந்தக் கடத்தல் சம்பந்தமாகக் கேள்விகள் கேட்டுத் துன்புறுத்துவதைத் தடுக்க அவள் என்னை விலகிடும்படி கூறினாள் போலிருக்கிறது” என்று தனக்குத் தானே கூறிக் கொள்வதைப் போல் கூறிக் கொண்டு, இன்ஸ்பெக்டரிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டார் பரஞ்சோதி. தன் உயிரைக் காப்பாற்றியதற்காக ஆத்திரப்பட்டுத்தான் சங்கர் மீது சந்தேகம் விழும்படி பாஸ்கர் செய்திருக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. எனவே பாஸ்கர் இல்லாத நேரத்தில் அவன் அறையைச் சோதனை செய்து பார்க்க வேண்டுமென்று முடிவு கட்டினார். எதனாலோ, இந்தக் கடத்தலையும் கொலைகளையும் பாஸ்கர்தான் செய்திருக்க வேண்டுமென்று அவருக்குச் சந்தேகம் இருந்தது.

உடனே தன் ஜாகைக்குச் சென்று தனது கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, சுசீலாவை அங்கேயே இருக்கும்படிக் கூறிவிட்டு, பாஸ்கரின் ஜாகையை நோக்கிக் கிளம்பினார். தனது காரை எடுத்துக் கொண்டு செல்லாமல், ஒரு வாடகைக் காரில் ஏறிக்கொண்டு கிளம்பினார். போகும் அவசரத்தில், தான் எங்கே போகிறோம் என்பதை சுசீலாவிடம் சொல்ல மறந்து விட்டார். இருந்த போதிலும் அதற்காக அவர் கவலைப்பட்டு’ கொள்ளவில்லை.

பாசுதேவ் வீதியை அடைந்ததும், வாடகைக்காருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு பாஸ்கர் குடியிருந்த கட்டிடத்தை நோக்கி நடந்தார். அவர் அந்தக் கட்டிடத்தில் அடி எடுத்து வைத்தபோது, வேணு சுவாரசியமாக ஒரு நாவலைப் படித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். “வேணு, வேணு,’’ என்று அவர் இருமுறை அழைத்தபிறகு தான் அவன் அவரைத் திரும்பிப் பார்த்தான்.

“பாஸ்கர் இருக்கிறானா, அல்லது எங்காவது வெளியே போய் இருக்கிறானா?” என்று கேட்டார் பரஞ்சோதி. “வெளியே போயிருக்கிறார், வருவதற்கு ஒருமணி நேரமாகும்” என்றான் வேணு. தனது சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை உருவி எடுத்த பரஞசோதி, அதை வேணுவின் கையில் திணித்தபடி, “அவன் அறையின் மாற்றுச் சாவி உன்னிடம் இருக்கிறதல்லவா? அதை எனக்கு ஒரு பத்து நிமிஷங்களுக்கு இரவல் கொடு” என்றார்.

வேணு தயங்கினான். உடனே இன்னொரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினார் பரஞ்சோதி. உடனே அவன் அந்தச் சாவியை அவரிடம் கொடுத்துவிட்டு, “இது பாஸ்கருக்குத் தெரிந்தால் என் உயிர் போய்விடும்” என்றான் கதி கலக்கத்தோடு.

“நான் விரைவில் உன்னிடம் இதைக் கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். நீ உன் வேலையைப் பற்றிப் பயப்படவேண்டியதில்லை” என்று அவ க்குத் தைரியமளித்த பரஞ்சோதி மாடிக்குச் சென்றார். மாடியில் எல்லா ஜாகைகளும் பூட்டப்பட்டிருந்தன. சங்கரின் ஜாகை போலீசாரால் சீல் வைக்கப்பட்டிருந்தது. சில வினாடிகள் அந்தக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார் பரஞ் சோதி. “பாவம், சங்கர்” என்று முணு முணுத்துக் கொண்டார் பரஞ்சோதி.

அந்தக் கட்டிடம் முழுவதும் நிசப்தத்தில் ஆழந்திருந்தது. எங்கோ ஒரு அறையில், ஒரு பழைய காலத்துக் கடிகாரத்தின் “டிக! டிக்!” என்ற பலமான சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அங்கு யாருமே இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்ட பரஞ்சோதி தன்னிடமிருந்த சாவியால் பாஸ்கரின் ஜாகைக் கதவைத் திறந்தார்.

உள்ளே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடையச் செய்தது.

8.பாதாள அறையில் பயங்கர ஒளி

பூட்டிய அந்த அறைக்குள், கதவுக்கு எதிரே நாற்காலியில் ஒரு மனிதன் அமர்ந்தபடி,
ஒரு துப்பாக்கியைப் பரஞ்சோதியை நோக்கி நீட்டிப் பிடித்துக் கொண்டிருந்தான். சந்தியாவின் ஜாகையில் பரஞ்சோதி பார்த்த அதே மனிதன்தான் அது.

“கைகளைத் தூக்கியபடி உள்ளே வா” என்றான் அந்த மனிதன். அவன் குரலைக் கொண்டு அவன் யாரென்று புரிந்து கொண்டார் பரஞ்சோதி. அன்றிரவு டெலிபோனில் பேசிய சுந்தர்தான் அவன்! வியப்போடு அவன் முகத்தைப் பார்த்து, தனது கைகளை உயரத் தூக்கியபடி உள்ளே நுழைந்தார் பரஞ்சோதி.

நாற்காலியில் அமர்ந்திருந்த சுந்தர், நாற்காலியை விட்டு எழுந்து, பரஞ்சோதியை அதில் அமரும்படிக் கூறினான். அதே சமயம் பாஸ்கர் வந்து சேர்ந்தான். பரஞ்சோதியின் அருகே வந்து அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். பிறகு சுந்தர் அவரைத் துப்பாக்கி கொண்டு மிரட்ட, பாஸ்கர் அவரை நாற்காலியோடு சேர்த்துக் கட்டினான்.

“நீ வெளியே சுதந்திரமாக உலாவிக் கொண்டிருக்கும் பொழுது எதற்காகக் கடத்தப்பட்டு விட்டதாக நடிக்கிறாய், சுந்தர்?” என்று கேட்டார் பரஞ்சோதி.

“என் மனைவி என் காரியங்களில் குறுக்கிடாமல் இருப்பதற்காகத்தான் அப்படி செய்தேன்” என்று கூறிய சுந்தர், “நீங்கள் எப்படி என்னை அடையாளம் கண்டு கொண்டீர்கள்?” என்று கேட்டான்.

“நான் உன் குரலைக் கொண்டு உன்னை அடையாளங் கண்டுகொண்டேன். எதனால் உன் மனைவிக்கு உன் செய்கைகள் தெரியக்கூடாதென்று நீ விரும்புகிறாய்?” என்று கேட்டார் பரஞ் சோதி.

“தான் ஒரு கடத்தல்காரனின் மனைவி என்பதை அவள் தெரிந்து கொள்ளும் பொழுது நிலைமை எப்படி இருக்குமென்று யோசித்துப் பாருங்கள். அதனால்தான் நான் கடத்தப்பட்டு விட்டதாகக் கூறி ஒளிந்துகொண்டு என் கடத்தல் வேலைகளைத் தொடர்ந்து செய்ய நான் இங்கே வந்தேன்” என்று கூறினான் சுந்தர்.

“இதையெல்லாம் உன்னிடம் கூறுவதால், நீ போய் போலீசில் கூறி விடலாமென்று நினைக்காதே, பரஞ்சோதி! ஒரு முறை என் பிச்சுவாவிற்குத் தப்பி விட்டாய். ஆனால் இப்போது நீ உயிரோடு தப்பப் போவதில்லை” என்று கூறிச் சிரித்த பாஸ்கர், “உனக்கு என் அறைச் சாவியைக் கொடுத்த வேணுவின் கதையைத் தீர்த்து விட்டு வருகிறேன்” என்று கூறியபடி தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மாடிப் படிகளில் தட தடவென்று இறங்கினான்.

தன்னால் வேணுவுக்கு தீங்கு நேர்ந்து விட்டதே என்று தவித்தார் பரஞ்சோதி. ஆனால் அவர் செய்யக்கூடியது எதுவுமில்லை. சில நிமிஷங்களில் துப்பாக்கி வெடிக்கும் சத்தமும், வேணுவின் மரண ஓலமும் கேட்டன. அதைக் கேட்டதும் பரஞ்சோதியின் ரத்தம் கொதித்தது. தனது ஆத்திரத்தை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். சில வினாடிகளில் பாஸ்கர் திரும்பி வந்தான். பரஞ்சோதியின் கைகள் இரண்டையும் பின்புறம் இழுத்து வைத்துக் கட்டினான் பாஸ்கர். பிறகு அவரை நாற்காலியோடு சேர்த்துக் கட்டியிருந்த கட்டை அவிழ்த்து விட்டு, பரஞ்சோதியை நிற்க வைத்தான்.

“இவரை என்ன செய்யலாம், பாஸ்கர்?” என்று கேட்டான் சுந்தர்.

“பாழடைந்த மாளிகையில் உள்ள சுரங்க அறையில் அடைத்து விடு” என்றான் பாஸ்கர்.
உடனே சுந்தர் முகம் பேயறைந்தாற்போல் மாறியது. அவன் முகத்தில் ஏற்பட்ட மாறுதலை பரஞ்சோதி கவனித்து விட்டார். சில வினாடிகளில் தன்னைச் சமாளித்துக் கொண்ட சுந்தர், பரஞ்சோதியை கீழே தன் கார் நின்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான். பரஞ்சோதி ஒன்றும் பேசாமல் அவனோடு சென்றார்.

“பவானியை யார் கொன்றார்கள்?” என்று சுந்தர் காரைக் கிளப்பியதும் கேட்டார் பரஞ்சோதி.

“பாஸ்கர்தான் அவளைக் கொன்று விட்டான்” என்று கூறிய சுந்தர், “அங்கு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பையன்தான் டெலிபோன் செய்து யாரோ இருவர் அவளைப் பார்ப்பதற்கு வந்துள்ளதாகக் கூறினான். நான் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் பவானியைச் சுட்டுக் கொன்று விட்டான்” என்று கூறும்பொழுதே அவன் குரல் கரகரத்தது.

“சந்தியாவை நீதான் கொலை செய்தாயா?”

“ஆமாம்! அவளிடம் யாராவது பணம் கொடுத்தால், பேசக் கூடாத விஷயங்களையெல்லாம் பேச ஆரம்பித்து விடுவாள். அதனால் தனக்கு ஆபத்து வந்து விடுமென்று பயந்தான் பாஸ்கர். சங்கருக்கு எதிராக நாங்கள் சாட்சியைத் தயாரித்ததை அவள் அறிந்திருந்தாள். அவளை நான் எப்படிக் கொலை செய்தேன் என்று இப்பொழுதுகூட எனக¢கு ஆச்சரியமாக இருக்கிறது” என்றான் சுந்தர்.

அதற்குள் அந்தப் பாழடைந்த மாளிகையை அவர்கள் அடைந்து விட்டனர். பரஞ்சோதியும் தமயந்தியும் வந்து பணத்தை வைத்த அதே மாளிகைதான் அது.

“உன்னுடைய மெய்க்காப்பாளன் மோகனைக் கொலை செய்தது யார்?” என்று கேட்டார் பரஞ்சோதி.

“பாஸ்கர்தான் அவனைக் கொன்றான்.”

அந்த இடம் பயங்கரமாகக் காட்சியளித்தது. மாலை ஆறு மணியாகி விட்டதால் அந்த மாளிகை இருண்டு, பேய்க்களை பரப்பியபடி நின்று கொண்டிருந்தது. அந்த மாளிகையை ஒட்டி இருந்த ஒரு சிறிய மண்டபத்தருகே பரஞ்சோதியை அழைத்துச் சென்றான் சுந்தர்.

இருவரும் அங்கு உள்ளே சென்ற சுரங்கப் பாதையில் நடந்து சென்றனர். வளைந்து வளைந்து சென்ற அந்தப் பாதையில், தனது டார்ச் விளக்கை அடித்தபடி பரஞ்சோதியை அழைத்துச் சென்ற சுந்தர், ஒரு இடத்தில் நின்றான். அந்த இடம் ஒரு அறையை போல இருந்தது.

ஒரு மூலையில், சாக்குகளால் மூடப்பட்டு ஏதோ ஒன்று குவியலாகக் கிடந்தது. அதற்குக் கொஞ்ச தூரத்தில் மூன்றடிநீளச் சங்கிலி இரண்டு தொங்கிக் கொண்டிருந்தன. அதனருகே பரஞ்சோதியை அழைத்துச் சென்ற சுந்தர். அவரைச் சுவற்றோடு சேர்த்து சங்கிலியால் பிணைத்தான். பிறகு அவரது கைக்கட்டை அவிழ்த்து விட்டான். அவரிடம் ஒரு டார்ச் விளக்கையும் கொடுத்தான்.

“என்னை என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டார் பரஞ்சோதி.

“உங்களை இங்கேயே விட்டு விடுவோம் இந்தச் சுரங்கத்தில் ஏதோ ஒரு மிருகம் இருக்கிறது. அது உங்களைத் தின்றுவிடும்” என்று கூறியபொழுதே சுந்தரின் உடல் வெடவெடவென்று நடுங்கியது. திகிலோடு திரும்பி அந்த சாக்குக் குவியலைப் பார்த்தபடி பேச ஆரம்பித்தான்.

“போன வாரம் மனோகரை இங்கே கொண்டு வந்து கட்டி வைத்தோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு நாங்கள் வந்து பார்த்தபோது அவனது எலும்புகள் மட்டுமே இங்கே இருந்தன. அந்த சாக்குகளுக்கடியில் கிடப்பது மனோகரின் எலும்புகள்தான்” என்றான். பிறகு, “உங்களுக்கு நான் டார்ச் விளக்கு கொடுத்திருப்பது பாஸ்கருக்குத் தெரிந்தால் என்னைக் கொலை செய்து விடுவான். இருந்தபோதிலும் இன் ம் மூன்று நான்கு நாட்களுக¢கு அவன் இங்கே வரமாட்டான். நீங்கள் தப்பிச் செல்ல நான் அனுமதிக்க முடியாது, பரஞ்சோதி, உங்கள் உயிர் நற்கதி அடையவேண்டுமென்று நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியபடி அங்கிருந்து கிளம்பினான் சுந்தர்.

மனோகரைப் பற்றி சுந்தர் கூறியது உண்மைதானென்று பரஞ்சோதி புரிந்து கொண்டார். ஏனென்றால், தனது டார்ச் விளக்கின் ஒளியில் பார்த்தபோது சாக்குகளுக்கடியில் மனித எலும்புகள் கிடப்பதைப் பார்த்தார். ஒரு மனிதனை அப்படி சாப்பிடும் மிருகம் என்னவாக இருக்கும் என்று வியந்தபடி தனது டார்ச் விளக்கை அணைத்து வைத்துக் கொண்டார். அடுத்தாற்போல் என்ன செய்வதென்று யோசனையில் ஆழந்தவர் திடுக்கிட்டார். சில அடி து£ரத்தில் இரண்டு நெருப்புக் கோளங்கள் பயங்கரமாக ஜ்வாலை வீசின.

9.பதியைக் கொன்ற பாவை மேதாவி

பரஞ்சோதியை எதிர்கொண்ட பயங்கரம் சில வினாடிகள் அந்த நெருப்புக் கோளங்களையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார் பரஞ்சோதி.

அவருக்கு சந்தர் கூறியது நினைவிற்கு வந்தது. ஏதோ மிருகம் மனோகரைத் தின்று விட்டதென்று, அவர் உடல் சிலிர்த்தது. அந்த நெருப்புக் கோளங்கள் சிறிது சிறிதாக பெரிதாகிக் கொண்டே வந்தன.

சட்டென்று தனது டார்ச் விளக்கை அந்தத் திசையில் ஒளியைப் பாய்ச்சுமாறு செய்தார் பரஞ்சோதி, ஆனால் அந்த நெருப்புக் கோளங்கள் மறைந்து விட்டன. அது என்னவாக இருக்குமென்ற சிந்தனையில் ஆழ்ந்தார் பரஞ்சோதி. சில வினாடிகளில் வேறொரு திசையில் அந்த நெருப்புக் கோளங்கள் தோன்றின. பிறகு மீண்டும் மறைந்து அவர் கால் அருகே காட்சியளித்தது. டார்ச் விளக்கின் ஒளியில் அதைப் பார்த்த பரஞ்சோதி பிரமை தட்டிப் போய் விட்டார்.

மூன்றடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட ராட்சஸ எலிதான் அது! அதை பரஞ்சோதி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, அது அவர் குரல் வளையை நோக்கிப் பாய்ந்தது. பரஞ்சோதி அதைப் பிடித்துத் தள்ளப் பார்த்தார். அந்த எலியின் குறி தவறியதினால் அவரது ஷர்ட்காலரை தனது கூரிய பற்களால் கவ்வி இழுத்தது. கொஞ்சம் பரஞ்சோதி அசட்டையாக இருந்திருந்தால் அவர் குரல் வளையில் கடித்துக் குதறி இருக்கும். தன் பலங்காண்ட மட்டும் அதை அறைந்தும், குத்தியும் பார்த்தார். ஆனால் அதனாலெல்லாம் அது பயந்து ஒடுவதாகத் தெரியவில்லை. அருகே கிடந்த சில கற்களை எடுத்து அதன்மீது வீசினார் பரஞ்சோதி.

அதன் பிறகு அந்த எலி எங்கே போயிற்றென்று அவருக்குத் தெரியவில்லை. அவரது டார்ச்சும் மிகவும் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. இன் ம் கொஞ்ச நேரத்தில் அது அணைந்து விடுமென்று புரிந்து கொண்டார் அவர். அங்கிருந்து தப்புவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தார் பரஞ்சோதி. ஆனால் அவரைப் பிணைத்திருந்த சங்கிலி மிகவும் வலுவுள்ளதாகத் தோன்றியது. அங்கே கிடந்த கற்கள் மிகவும் சிறியவை. எனவே அவற்றால் அந்தச் சங்கிலியை தகர்க்க முடியாதென்று அவருக்குத் தெரியும். அதனால் வேறு ஏதாவது மார்க்கம் இருக்கிறதா என்று பார்த்தார். வேறு எந்த வழியும் புலப்படவில்லை.

இன் ம் எத்தனை எலிகள் அங்கே இருக்கின்றனவோ என்று வியந்தார் பரஞ்சோதி. அவை ஒன்று திரண்டு வந்தால் தன்னால் சமாளிக்க முடியுமா என்று அவருக்குச் சந்தேகமாக இருந்தது. கட்டப்பட்ட இந்த நிலையில் தன்னால் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடியும் என்று யோசித்தார். தன்னை இம்மாதிரி கட்டிப் போட்டதற்குப் பதிலாக தன்னைக் கொலை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. தான் இந்தப் பயங்கர எலியினால் கடிபட்டு, சித்ரவதைக்கு ஆளாகி சாக வேண்டுமென்றுதான் பாஸ்கர் விரும்பி இருக்கிறான்.

அவருக்கு உடனே மனோகரின் நினைவு வந்தது. பாவம்! அவன் எவ்வளவு சித்ரவதைகளை அ பவித்திருப்பான். உயிரோடும், உணர்ச்சியோடும் இருக்கும்பொழுது இவ்வாறு எலிகள் ஒரு மனிதனைக் கடித்துக் குதறினால் அவ க்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்! இத்தகைய தண்டனையைப் பெற அவன் என்ன குற்றம் செய்திருப்பானென்று யூகிக்க முயன்றார் பரஞ்சோதி. ஆனால் அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை. சுசீலாவிடமாவது, தான் எங்கே போகிறோமென்பதைக் கூறி விட்டு வந்திருந்தால் ஒருக்கால் தனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காதென்று அவருக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த கணம் அவளால் என்ன உதவி செய்திருக்க முடியுமென்றும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். .

தனக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் எலியினால் தொந்தரவு ஏற்படுமென்று அவருக்கு நிச்சயமாகத் தெரிந்தது. இருந்தபோதிலும் அவர் இருந்த நிலையில் சிந்தனை செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. அவருக்குத் திடீரென்று சந்தியாவின் நினைவு வந்தது. அன்று காலை தினசரியில் அவளைப் பற்றிய செய்தி வந்திருந்தது. ஆனால் அவளைக் கொலை செய்தது யாராக இருக்குமென்று போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதில் காணப்பட்டது. பவானியின் பிரேதமும் கண்டுபிடிக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அ ப்பப்பட்டிருந்த போதிலும் குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், கூடிய விரைவில் இரண்டு கொலைகளையும் செய்த நபரையோ, நபர்களையோ கண்டுபிடித்து விடுவதாகவும் போலீசார் உறுதி அளித்திருந்தனர். சந்தியாவின் பிணத்தையும், பவானியின் பிணத்தையும் கண்டுபிடித்த போலீசார் இன் ம் கொஞ்ச நேரத்தில் வேணுவின் பிணத்தையும் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் கொலை செய்யப்படுவதற்கு முன்பே இங்கு கொண்டு வந்து அடைக¢கப்பட்ட மனோகரைப் பற்றிப் போலீசாருக்குத் தெரியாது. தன்னையும் போலீசாரால் கண்டுபிடிக¢க முடியாது. நல்ல இடமாகத்தான் தேர்ந்தெடுத்துத் தன்னை அடைத்திருக்கிறார்கள் என்று நினைத்தார்.

அவர் கட்டளைப்படி தமயந்தியின் ஜாகையை ராஜு இப்பொழுது கண்காணித்துக் கொண்டிருப்பான். சுசீலா ஆபிசிலேயே அவர் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பாள். தான் உயிருடன் திரும்பிச் சென்று அவளைப் பார்ப்பாமோ என்று அவருக்குச் சந்தேகமாக இருந்தது. ராஜுவிடம், தமயந்தியின் ஜாகையைக் கண்காணிக்கச் சொன்னதற்குப் பதிலாக பாஸ்கரின் ஜாகையைக் கண்காணிக்கச் சொல்லி இருந்தால் தனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று அவருக்குத் தோன்றியது. இருந்த போதிலும் இப்பொழுது அவர் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. பாஸகருக்கும், சுந்தருக்கும்தான் அவர் அங்கே அடைபட்டிருப்பது தெரியும். ஆனால் அவரைக் காப்பாற்றக் கூடியவர்கள் யாருமில்லை.

சுந்தர் இளகிய மனம் படைத்தவன் என்றே அவருக¢குத் தோன்றியது. இருந்தபோதிலும் அவன் திரும்பி வந்து தன்னைக் காப்பாற்றுவான் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. ஏனென்றால் பாஸ்கரின் கட்டளையை அவன் நிறைவேற்றாவிட்டால் சிறிதும் ஈவிரக்கமில்லாமல் சுந்தரைக் கொன்று விடுவான் பாஸ்கர் என்று அவருக்குத் தெரியும். தனக்காக, இருபது ரூபாயைப் பெற்றுக் கொண்டு சாவி கொடுத்த வேணுவை தனக்குத் தெரிந்தே பாஸ்கர் சுட்டுக் கொன்றதையும் எண்ணிப் பார்த்தார் பரஞ்சோதி. வேணுவின் மரணத்திற்குத் தான்தான் காரணமென்று அவர் மனச்சாட்சி உறுத்தியது. ஒருக்கால் தன்னை எதிர்பார்த்தே, சுந்தரை வேணுவுக்குத் தெரியாமல் கொண்டு வந்து அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு வெளியே போவதாகவும், தான் திரும்பி வர ஒருமணி நேரமாகும் என்றும் பாஸ்கர், வேணுவிடம் கூறிவிட்டுச் சென்றிருக்க வேண்டும்.
மெதுவாக எழுந்து நிற்க முயன்றார் பரஞ்சோதி. ஆனால் அவரைப் பிணைத்திருந்த சங்கிலி சிறியதாக இருந்ததால் அவராக எழுந்து நிற்க முடியவில்லை. அதனால் மீண்டும் கீழே உட்கார்ந்து கொண்டார் பரஞ்சோதி. அங்கிருந்து தப்பிச் செல்வதென்பது முடியாத காரியமென்று அவருக்குத் தோன்றியது. வரப் போகும் ஆபத்தை எதிர்பார்த்து அங்கே காத்துக் கொண்டிருப்பதைத் தவிர அப்பொழுது அங்கே செய்யக்கூடியது ஒன்றுமில்லை. சிலவினாடிகளில், ஒரு ஜோடி நெருப்புக் கோளங்கள் தோன்றின. ஒரு எலி வருகிறதென்பதைப் புரிந்து கொண்ட பரஞ்சோதி அதைச் சமாளிப்பதற்காகத் தன்னைத் தயார் செய்து கொண்டார். தனக்கருகே கிடந்த கற்களில் சிலவற்றைத் தன் கைகளால் துழாவி எடுத்து வைத்துக் கொண்டார். டார்ச் விளக்கை உபயோகிக்க அவர் விரும்பவில்லை. இருட்டிலேயே தனது எதிரியைச் சமாளிப்பதென்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார்.

ஆனால் இரண்டு நெருப்புகள் தோன்றிய இடத்தில் இப்பொழுது எட்டு நெருப்புக் கோளங்கள் காட்சியளித்ததைக் கண்டதும் பரஞ் சோதியின் இரத்தம் உறைந்து விடும் போல இருந்தது. தன்னைத் தாக்குவதற்கு நான்கு எலிகள் வந்துள்ளன என்பதைப் புரிந்து கொண்டதும் அவர் கதி கலங்கிப் போய் விட்டார்.

அந்த எலிகள் மெதுவாகப் பரஞ்சோதியை நோக்கி நகர்ந்தன. தன்னிடமிருந்த கற்களை, அவற்றை நோக்கி வீசினார். உடனே அந்த எலிகள் பயங்கரமாகத் கத்தியபடி அங்குமிங்கும் ஓடின. பிறகு, மீண்டும் பரஞ்சோதியை நோக்கி ஓடிவந்தன. அவற்றை பயமுறுத்துவதற்காக அவர், தனது பலங் கொண்ட மட்டும் பலவிதமான சத்தங்களை எழுப்பினார். அதனால் அவர் தொண்டை வலித்த போதிலும், அந்த எலிகள் அந்தக் கூச்சலைக் கேட்டு பயந்து போய் சில அடி தூரம் பின்னால் சென்று நின்று கொண்டு பரஞ்சோதியை தங்களது பயங்கர விழிகளால் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. பரஞ்சோதி விடாமல் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார். அந்தச் சமயத்தில், “பரஞ்சோதி! பரஞ்சோதி! எங்கே இருக்கிறீர்கள்?” என்று சுசீலாவின் குரல் எங்கிருந்தோ ஒலித்தது.

– தொடரும்…

– 1977

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *