கிழவி

 

காலையில் எழுந்திருக்கும்போதே வயிற்றைச் சுருட்டிப் பிடித்து இழுத்தது, அன்னம்மாக் கிழவிக்கு. குடிசையின் மூலையில் இருந்த அடுக்குப் பானைகளில் கைவிட்டுத் துழாவினாள். கஞ்சி காய்ச்சலாம் என்றால் ஒரு பொட்டுத் தானியம் கூடச் சிக்கவில்லை. முந்தின நாள் இரவு, பச்சைத் தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்தது ஞாபகம் வந்தது. மீண்டும் அப்படியே மதியம் வரை படுத்துக் கிடந்தாள்.

“ஊரான் வூட்டுச் சொத்துன்னாப் பேயாப் பறக்குறாளுவ… ஒழைச்சுச் சம்பாதிக்கிறதே ஒட்டலியாங்காட்டியும்.. இதுதானா ஒட்டப் போவுது, நாயிங்க!” புலம்பியபடியே அறைந்து அறைந்து சாணத்தை இரு கைகளாலும் பிசைந்தாள் பாக்கியம்.

சத்தம் கேட்டு எழுந்து வெளியே வந்தாள் அன்னம்மாக் கிழவி.

“இன்னாடீ பாக்கியம், எதுத்தாப்புலே யாருமேயில்லை… நீ பாட்டுக்குப் பித்துக்குளி கணக்காப் பொலம்பினுகீற… இன்னா வெவகாரம்?” என்று கேட்டாள்.

“ஒண்ணுமில்ல அத்தை. எங்க கயனியில அந்தக் கட்டைல போற பேபி கீறாளே… அவ தன்னோட மாட்டை மேய்ச்சலுக்கு அவுத்து வுட்டுட்டுக் கண்டுக்காத மாதிரி வரப்புல நிக்கிறாளாம். எங்க வூட்டுக்காரரு பாத்துட்டுக் கேட்டாக்க, தானா கவுத்தை இழுத்துகினு மாடு ஓடிடுச்சுங்கறாளாம். என்னா தெகிரியம் பாத்தியா அத்தே?”

“அட விடுடீ! வாயில்லாத ஜீவன். ரெண்டு புல்லு துண்றதுலதான் நீ கொறஞ்சு போயிடப் போறியாங்காட்டியும்?”

“நீ பேபிக்கு உறவுக்காரி ஆச்சே, வுட்டுக் கொடுத்துப் புடுவியா?” என்று சலித்தபடி பாக்கியம் சாண உருண்டையை ஒரு கையால் எடுத்து லாகவமாக வீசிச் சுவரில் வட்டமாகப் பதிய வைத்தாள்.

“ஏன் அத்தை, வூட்டுல கேவுரு இல்லியா? காலைல வவுத்துக்கு ஏதும் குடிச்சியா இல்லியா?” என்று பரிவோடு பாக்கியம் கேட்டாள்.

“ஹுக்கும். குடிக்கலைன்னா இன்னா செத்தா பூடுவேன்? என் மவளுவ இருக்காளுவ, ஒருத்திக்கு மூணு பேரு. ஒரு வார்த்தை சொல்லி விட்டா ஓடி வந்து பூ மாதிரித் தாங்குவாளுக, தெரியுமா?” சொல்லி வாய் மூடவில்லை.

“யம்மோவ்!” என்றபடி அபுரூபம் வந்து எதிரில் நின்றாள் – அன்னம்மாவின் மூத்த மகள்.

“இன்னிக்கு நெத்திலிக் கருவாடு வறுத்து மொளகு ரசம் வெச்சேனா… ஒன்னை உட்டுட்டுச் சாப்ப்புடப் புடிக்கலைம்மா, அதான் கூட்டிட்டுப் போலாம்னு ஓடியாந்தேன்!”

“நல்லாருக்கே நாயம்?” புதுக்குரல் ஒன்று முளைத்தது.

அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். கம்சலை. அன்னம்மாவின் இரடாவது மகள்! வியர்க்க விறுவிறுக்க வந்து நின்று கிழவியின் கையைப் பிடித்தாள்.

“யம்மோவ், இன்னிக்கு மாரியாத்தாளுக்குப் படையல். வடை, அப்பளம், பாயஸம்லாம் பண்ணிப்புட்டு ஒன்னியக் கூட்டிட்டுப் போவலாம்னு வந்திருக்கேன்… இன்னிக்குப் போய் கவுச்சி சாப்புடலாமா?” என்று சொல்லித் தாயின் கையைப் பிடித்து இழுத்தாள் கம்சலை.

பாக்கியத்துக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அன்னம்மாக் கிழவி வாயைத் திறந்தாள்:

“எனுக்கு இன்னாத்துக்கு நெத்திலி கருவாடும், வடை பாயாஸமும்? இப்பத்தான் கேவுரு கூழு சட்டி நெறயக் கரைச்சுக் குடிச்சேன். வயிறு நிறைஞ்சுடுச்சு. போதும் புள்ளைகளா, போய் ஒங்க வேலையைப் பாருங்க!”

“எம்மா, நீ பொய் சொல்ற! மூஞ்சியைப் பாத்தா, சாப்புட்டதும் சாப்புடாததும் தெரியாமப் போயிடுமாக்கும்? போன வாரம்தான் நீ மொதலியாரு கயனிக்குக் களை எடுக்கப் போனியாம். கூலிக்காசு கூட அவங்க ஒனக்குத் தரலைன்னு கேள்விப்பட்டேன். தள்ளாத காலத்துல சொந்தக் கால்ல நிக்கணும்னு வீம்பு புடிச்சு, இந்த இடிஞ்ச குடிசைல கெடந்து ஏன் பாழாப் போறே..? ஒரு ரெண்டு நாளாவது வந்து நிம்மதியா என் வூட்டுல குந்து. நான் சமைச்சுப் போடற சோத்தையும் குழம்பையும் வயிறாரச் சாப்பிடு.. என் மனசு சந்தோஷப்படும்!” என்றாள் அபுரூபம்.

“ஹுக்கும்..” கனைப்புச் சத்தம் கேட்டது.

நிமிர்ந்து பார்த்தாள் பாக்கியம்.. செவந்தி – அன்னம்மாவின் மூன்றாவது மகள். ஆத்திரத்தோடு வந்து எதிரில் நின்றவள், தன் தமக்கைகளை நெருப்புப் பார்வையால் முறைத்தாள்.

“மூக்குல வேர்த்தாப்புல எல்லோரும் முந்திக்கிட்டீங்களா? இன்னிக்கு அம்மாவை ஒங்க ரெண்டு பேர் கூடவும் அனுப்ப முடியாது. போன மாசமெல்லாம் நீங்க கூட்டிட்டுப் போயிச் சீராட்டினீங்க இல்லியா? இந்த மாசம் எனக்கு நீங்க விட்டுக் கொடுக்கணும். அம்மோவ், ஒன் பேரன் ஆனந்து பாட்டியைப் பாக்கணும், கூட்டிகினு வான்னு அயுதுகினே இருக்கான். எங்க வூட்டுல விருந்தெல்லாம் ஒண்ணும்  கெடையாது. வெறும் கேவுரு களியும், கீரைக் கொழம்பும் பண்ணி, முட்டை அவிச்சு வெச்சிருக்கேன். நீ கட்டாயம் என் வூட்டுக்குத்தாம்மா வரணும்!” என்று தாயைப் பிடித்து இழுத்தாள்.

கிழவியை ஆளாளுக்கு இழுக்க, பாக்கியம் மத்திய°தத்துக்கு வந்தாள். “எம்மாடி.. அக்கா – தங்கச்சிங்களுக்குள்ளாற ஏன் சண்டை சாடிக்கிறீங்க? அத்தைக்கு ஆரு வூட்டுக்குப் போவப் புடிக்குதோ அங்க இன்னிக்குப் போவட்டும். நாளைக்கு இன்னொருத்தர் வூட்டுக்குப் போவட்டும். நாளை கழிச்சு மூணாவது மவ வூட்டுக்குப் போவட்டும். இன்னா நாஞ் சொல்றது?”

அன்னம்மாக் கிழவி பொக்கை வாய்ச் சிரிப்புடன் ஒரு ஞானியைப் போன்று தன் மூன்று மகள்களையும் அவர்கள் போடும் சணைடையையும் வேடிக்கைப் பார்த்து நின்றாள்.

கடைசியில் மகள்கள் மூவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இன்று மூத்த மகள் அபுரூபம் அன்னம்மாவை அழைத்துப் போகலாமாம்; அடுத்த முறை கம்சலை; அதற்கும் அடுத்த முறை செவந்தி!

தாயை அழைத்துக்கொண்டு அபுரூபம் கிளம்பும்போது பாக்கியம், “அக்கா, வாங்களேன் எங்க வூட்டுக்கு. நெத்திலிக் கருவாடு தொட்டுக்கிட்டு ஒரு வாய் ரசஞ் சோறு சாப்ட்டுப் போவீங்க!” என்று உபசாரமாகக் கூறினாள்.

“வேண்டாம்டியம்மா, நீ சொன்னதே சாப்புட்ட மாதிரி இருக்கு. ஒங்க அம்மா தள்ளாத கெயவி. அது இந்த வயசுலியும் கயனில போய் வேலை கெடைச்சாப் பாடுபடறதையும் கெடைக்காட்டா பட்டினி கெடக்கறதையும் நெனைச்சா ரொம்பக் கஷ்டமா இருக்கு. நெரந்தரமா தாயாரைக் காப்பாத்த ஒரு வழி பண்ணுனீங்கன்னா அதுவே எனுக்கு நெத்திலிக் கருவாடு சாப்புட்ட மாதிரித்தான்…!” என்றாள் பாக்கியம்.

சின்ன வயதிலேயே அன்னம்மாக் கிழவியின் கணவர் இறந்து விட்டாலும் படாதபாடு பட்டு தன் மூன்று மகள்களுக்கும் கல்யாணம் செய்து கொடுத்து விட்டாள்.

அறுபது வயதிலும் தன் உழைப்பை நம்பி வாழும் அந்தக் கிழவி எந்த மகள் வீட்டுக்கும், அவர்கள் வருந்தி வருந்தி அழைத்தால்தான் போவாள். அப்படியே போனாலும் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் தங்கியதில்லை!

ஒரு பக்கம் காய்ந்த வறட்டிகளைச் சுவரிலிருந்து பெயர்த்துத் தரையில் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த பாக்கியம் தூரத்தில் அன்னாம்மாக் கிழவி செல்வதைப் பார்த்து விட்டாள்.

“அத்தே, அத்தே!” என்று கூவிக்கொண்டே போய் கிழவியை வழிமறித்தாள். “இன்னா அத்தே, விருந்து பலமா? ஆமா, இன்னா ரெண்டே நாள்ல திரும்பிட்டே?”

“அடப் போடீ போக்கத்தவளே!” என்று மேலே நடக்கத் தொடங்கிய கிழவியை, “இரு அத்தே, ஒன்னியத்தான் பாக்கணும்னு நெனைச்சிகினு இருந்தேன், நீயே வந்துப்புட்டே! ஒரு ரெண்டு ரூபாக் காசு இருந்தாக் கடன் கொடேன். மூலைக்கடை செட்டியாருக்குக் கடனைத் திருப்பித் தந்துட்டு வெத்திலை வாங்கணும். வர்ற புதன் கிழமை உன் பணத்தைத் திருப்பித் தந்துப்புடறேன் அத்தை!”

“அட நீ ஒரு பொவுசு கெட்டவ.. யார்கிட்டேடி காசு இருக்கு?”

“இன்னா அத்தை, என்கிட்டேயே பொய் சொல்றே? நேத்திக்கு தபால்காரரு ஒனக்கு பென்சன் துட்டு கொணாந்தாரு. நாந்தானே அபுரூபம் வூட்டுக்கு அனுப்பி வெச்சேன்..”

“ஆமா… கொணாந்தான்.. குடுத்தான்.. இல்லேங்கலடீ! ஆனா எம்மவ அபுரூபம் தன்னோட புள்ளைங்களுக்குத் துணிமணி எடுக்கறதுக்கும் இ°கூலுக்குப் பணம் கட்டணும்னும் கேட்டு வாங்கிட்டாளே… இப்ப சல்லிக் காசு கூட என்கிட்டே இல்லியேடீ..!”

“இன்னாது… அத்தினி ரூவாயையுமா வாங்கிக்கினா? நீ ஏன் குடுத்தே?”

“இன்னாடீ பாக்கியம்? ஏன் குடுத்தேன்னா கேட்கறே? டவுன்ல ஓட்டல்ல சோறு துன்னா பில்லு குடுப்பான்.. பாத்திருக்கியா? அது மாதிரித்தான். மொளகு ரசம் சோறும் நெத்திலிக் கருவாடும் சும்மாப் போட்டுப்புடுவாளாமா? ரெண்டு நாள் சோத்துக்கு பில்லுப் பணம் யாரு தர்றது?.. நான் என் பென்சன் பணத்தைக் கொடுத்திட்டு வந்துட்டேன்..!”

“அப்படின்னா ஒனக்கு அடுத்த வேளைக் கஞ்சி..?”

“ஆண்டவன் ஊத்துவான்டீ! இந்தக் கழுதைங்களை நம்பியா என்னைப் படைச்சான் கடவுளு? மாசாமாசம் எனக்குப் பென்சன் பணம் வர்ற சமயம் ஓடியாந்து சீராட்டுக்கு அழைச்சிகிட்டுப் போவாளுங்க. நானும் எம்மேல அன்பினால் கூப்பிடறதா நெனச்சு ஆரம்பத்துல போனேன். அப்புறமேட்டுத்தான் புரிஞ்சது – அன்பு எம்மேல இல்ல… எனக்கு வர்ற மணியார்டர் துட்டு மேலதான்ன்னுட்டு. புருஷனுக்கு வைத்தியம் பாக்கணும்னும், புள்ளங்களுக்கு செலவு இருக்குன்னும், அரிசி வாங்குன கடன் கொடுக்கணும்னும் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு தபாவும் ஏதாச்சும் கதை சொல்வாளுங்க. நானும் நம்பிட்ட மாதிரிக் காசை முழுசாக் கொடுத்துப்புட்டு வந்துடுவேன். பெத்த மகளுக நடிச்சுச் சாமர்த்தியமா என்னை ஏமாத்திட்டதா சந்தோஷப்படுவாளுங்க. ஆனா, நா ஒவ்வொரு மாசமும் ஏமாந்துட்டதா நடிச்சுப் பணத்தைக் கொடுத்து அவளுங்களைச் அந்தோஷப்படுத்த முடியுதேன்னு சந்தோஷப் பட்டுகினு வந்துடுவேன்!”

அன்னம்மாக் கிழவி பேசியபோது சிலை போல நின்ற பாக்கியத்தின் விழிகளில் நீர் திரண்டு பொல பொலவென்று கொட்ட ஆரம்பித்தது. அருகில் சென்று கிழவியின் உழைத்துக் காய்ப்பேறிய கரங்களை ஆறுதலாகப் பற்றிக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள்.

(இலக்கியச் சிந்தனையால் சிறந்த சிறுகதை எனத் தேர்வு செய்யப்பட்டது. ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த கதை.) 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்தப் பங்களாவின் வாசலில் நின்று கேட்டுக்கு அப்பால் தெரியும் வீதியைப் பார்ப்பதும், பங்களாவின் உட்புறம் பார்ப்பதும், பின் இருப்புக் கொள்ளாமல் இங்குமங்கும் நடப்பதுமாக இருந்தார் ராமேசன். ``ஏங்க உங்களைத்தானே, சந்நியாசிகளை இன்னும் காணோமே..?'' எனக் கூறிக் கொண்டே உள்ளேயிருந்து வந்தாள் அவரின் சகதர்மிணி ...
மேலும் கதையை படிக்க...
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து, சொந்த ஊரான புதூருக்கு இவன் போன போது ஏகப்பட்ட மாற்றங்கள். ``மிஸ்டர் ராஜேஷ்! உங்க ஊருக்கு விசிட் போறேன். ஒருநாள் லீவு போட்டுட்டு வாங்களேன். காரில் ஜாலியாப் பேசிகிட்டுப் போன மாதிரியும் இருக்கும்; உங்களுக்கு ஒரு மாறுதலாகவும் ...
மேலும் கதையை படிக்க...
வாசலில் நிழலாடியது. “யம்மோவ்...” என்று குரல் கேட்டது. பரிச்சயமான குரல். சமையல் வேலையாய் இருந்த நான் வெளியே வந்தேன். “என்ன பர்வதம்! இந்த நேரத்துல வரமாட்டியே? என்ன விஷயம்?” பர்வதம் எங்கள் வீட்டில் வேலை பார்ப்பவள். கணவன் ஏதோ ஒரு வங்கி ‘ஏ.டி.எம்.’மில் ‘வாட்ச்மேன்’. மாதம் ...
மேலும் கதையை படிக்க...
என் வீடு இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் ஓரமாக இருந்தது அந்த மரம்! என் அலுவலக நண்பர் விக்ரம் தினம் காரில் அந்த வழியாக வருவார். ஓசி லிஃப்ட் தருவார். அவருக்காக மர நிழலில் காத்திருந்தபோது, செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்ச்சாரி டீக்கடையிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
``உம்... ஆரம்பிச்சுற வேண்டியதுதானே?'' நடுவளவு பெரிய தனக்காரர் தங்கசாமி ஊர்க் கூட்டத்தை நோக்கிக் கேட்டார். பஞ்சாயத்துத் தலைவர்களும், கூடியிருந்தவர்களில் பலரும் தலையசைத்துச் சம்மதம் தெரிவிக்க, தங்கசாமி செருமிக் கொண்டு, புங்கனூராரைப் பார்த்துச் சொன்னார்: ``ஏனுங்கோ, பிராது கொடுக்க வந்தவிய நீங்க. உங்க பிராதைச் சபையில சொல்லுங்க!'' தலை ...
மேலும் கதையை படிக்க...
அந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கு வந்த ஏழெட்டுப் பெண்களும் அவர்களோடு என் மகள் லதாவும் வரிசையாக நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். நான் கண்ணாடித் தடுப்புக்கு வெளியில் ரிசப்ஷனில் காத்திருந்தேன். இது லதாவுக்கு ஏழாவது முயற்சி. இந்த வேலையாவது கிடைக்க வேண்டுமே என்று சிதம்பரம் நடராஜப் ...
மேலும் கதையை படிக்க...
தூரத்தில் வரும்போதே பஸ் ஸ்டாப்பில் ஒரு கும்பல் தெரிந்தது. அது பஸ்சுக்காகக் காத்திருக்கும் வழக்கமான கும்பல் அல்ல என்பது சாரதிக்குப் புரிந்தது. மோட்டார் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டுத் தன் போலீஸ் மிடுக்குடன், ''ஏய்! நகரு, நகரு! என்ன இங்கே கூட்டம்?'' ...
மேலும் கதையை படிக்க...
சீறிச் சுழன்றடித்தது பேய் மழை. பளீர், பளீர் என்று வானத்தில் கோடிழுக்கும் மின்னல்கள், அண்டமே அதிர்கிறாற் போல இடிச் சத்தம்! நள்ளிரவில், கொட்டும் மழையில், சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு விருட் விருட்டென்று ஓட்டமும் நடையுமாக ஓர் இளம்பெண் செல்வதென்றால்..? எவ்வளவு ...
மேலும் கதையை படிக்க...
பொழுது விடிந்ததும் வேலம்மாள் எழுந்து வீட்டுக்கு முன்னால் இருந்த கிணற்றினுள் எட்டிப் பார்த்தாள்; பாறைதான் தெரிந்தது. கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்து விட்டாள். கடந்த பத்து நாட்களாக அரை அடி ஆழம் நீர் தெரியும். பகலில் இறைத்தானதும் இரவில் ஊறி, காலையில் மீண்டும் அரையடித் ...
மேலும் கதையை படிக்க...
ட்ரம்ஸ் அடிப்பின் அதிர்வில் செவிப்பறை கிழிந்தது. வீட்டுக்கு முன் வீதி நடுவில் செத்தை, குப்பைகளை எரித்து, சுற்றி வட்டமாக நின்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் இளைஞர்கள். கட்டுப்படி பாண்டு செட் என்று கோணல் மாணலாக நீல பெயிண்டில், வட்ட வடிவமான எல்லாப் ...
மேலும் கதையை படிக்க...
அதிதி
முகங்கள்
பிணைப் பூக்கள்
ஒரு நாள்… மறு நாள்!
எழுதப்படாத தீர்ப்புகள்!
ஒரு இண்டர்வியூவில்
போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புரொபஸர்!
இதயம் இரும்போ!
கீரிப்பட்டி வேலம்மா
தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)