மது + மாது = காதல்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 23,398 
 

மது, மாது ஆகியவற்றில் சிக்கக் கூடாது என்பார்கள். நான் காதலில் சொக்கிய மாதுவின் பெயரே மது. மதுமதி. தெளிந்த நீரோடைபோல் ஓடிக் கொண்டிருந்த என்னை இப்படிச் சுழற்றியடித்து, பஸ் ஸ்டாண்ட், அடையாறு எனத் திருப்பிவிட்டு அலையவிட்டது என் அம்மாதான்.

எல்லா நாட்களைப் போல்தான் அன்றும் விடிந்தது. ஆனால் முடியவில்லை. ஜாகிங்கிற்காக இத்தியாதிகளோடு எப்பொழுதும்போல் கிளம்பி கடற்கரையை அடைந்து மூச்சிரைக்காமல் நடந்து பின் வேகமெடுத்து, உடம்பை வேர்க்க வைத்தேன். தினமும் வரும் பேரிளம் ஆன்ட்டிகள் ரீபோக், அடிடாஸ்களுக்குள் கடினப்பட்டு தம்மை நிறைத்து, தளும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் கடந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஆல் இந்தியா ரேடியோவிற்கு எதிரே வந்து எப்பொழுதும் பால் ஒரு டீயைச் சொன்னேன். குடித்துவிட்டு எப்போதும்போல் கிளம்பி இருக்க வேண்டும். ஆனால் அங்கே சற்றுத் தொலைவில் பஸ் ஸ்டாபில் நின்றிருந்த பெண்ணைப் பார்த்ததும், பார்த்துக் கொண்டே இந்தேன். அவளும் தான். அனிச்சையாய் புருவத்தை உயர்த்திச் சுருக்கினாள். நானும் தான். அதற்குள் பேருந்து ஒன்றுவர அதில் ஏறிப்போய் இல்லை, போகவில்லையவள், ஏறுவதற்கு என்னைச் சமீபத்தவள், அப்படியே நின்றுவிட்டாள்.

மது மாது

“நீ… நீங்க, ரகு, ரகுதானே?’ அவள் கேட்டுக் கொண்டிருக்கும்பொழுதே கண்டுபிடித்துவிட்டேன். அந்தக் கண்ணும், கண் ஓரத்தில் லேசாய் இருக்கும் சிறு தழும்பும் தெற்றுப்பல் சிரிப்பும்.

“ஹே, மது, எப்படி இருக்க?’ சட்டென குட்டைப்பாவாடை ரெட்டைச்சடை மது கண் முன் நின்றிருந்தாள்.

பைக்கில் ஏற்றிக்கொண்டேன். அடையாறுபோய்க் கொண்டிருப்பதாகவும் அங்கே ஏதோ மல்ட்டிமீடியா கோர்ஸ் செய்து கொண்டிருப்பதாகவும் எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது இத்தியாதிகளையும் பேசிக் கொண்டே வந்தவள், தோளையழுத்தி நிறுத்தச் சொல்லி இறங்கி, “அம்மா, எப்படிடா இருக்காங்க’ என்று விசாரித்துவிட்டு அவளருகே வந்த ஒருவனிடம், “க்ளாஸ் ஸ்ட்டார்ட்டாகிடுச்சாப்பா?’ என்று கேட்டுக் கொண்டே எனக்குக் கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டுப் போய்விட்டாள்.

மதுமதி என்னோடு எல்கேஜியில் இருந்து மூன்றாவது வரை படித்தவள் என்பது மட்டும்தான் நினைவில் இருக்கிறது. பொலபொலவென வெயில் நிறைத்துக் கொண்டு விட்டது. வீட்டையடைந்து குளித்துக் கொண்டிருக்கும் பொழுது அம்மாவின் குரல் கேட்டது.

“எங்கடா சுத்திட்டு வர்ற? வேலைக்குச் சேர்ந்த ரெண்டாவது நாளே லேட்டா போவியா?’

“டைம் இருக்கும்மா, வரேன் இரு.’

தயாராகி டைனிங்டேபிளில் அமர்ந்துகொண்டே, “மதுவ ஞாபகம் இருக்காம்மா? அவளப் பார்த்தேன். காலைல, அதான் லேட்டாகிடுச்சு.’
கையில் தோசைக் கரண்டியோடு எதிரே வந்து நின்றாள் அம்மா.

“மதுவா, எப்பிடிடா இருக்கா? ஆன்ட்டி ஆன்ட்டினு காலச் சுத்திட்டே இருப்பா, எவ்ளோ வருஷமாச்சு, இங்கதான் இருக்காங்களா? நம்பர் குடு, பேசறேன்.’

அம்மாவின் ஆர்வமிகு குரலை கேட்க ஆச்சரியமாய் இருந்தது. லேசில் எக்ஸைட் ஆகமாட்டாள்.

“தெர்லமா எங்க இருக்கான்னு, அவதான் கண்டுபிடிச்சா என்ன, அடையார்ல ஏதோ கோர்ஸ் பண்றாளாம், கம்ப்ளீட் ஆகப் போகுதுன்னு சொன்னா, நம்பர் கேட்கலயே!’

சொன்னவனை பார்த்துக் கொண்டே இருந்தாள் அம்மா. தோசை கருகும் வாடை வந்ததைச் சொன்னேன். உள்ளே சென்று தோசையை எடுத்து வந்தவள் தட்டில் போட்டுவிட்டு அருகில் அமர்ந்து சொல்லத் தொடங்கினாள்.

“ஏண்டா ரகு. காலம் பொல்லாததுடா. எல்கேஜில இருந்து மூணாவது வரைக்கும் நீங்க ரெண்டுபேரும் படுத்துன பாடு இருக்கே. கொஞ்ச நஞ்சமாடா?எப்பப்பாரு மதுதான் உனக்கு. இன்னிக்கு மது ஸ்கேல் கொடுத்தா. இன்னிக்கு மது ரப்பர பிடிங்கிட்டான்னு, அவ ஸ்கூலுக்கு வரலைன்னா நீ மூஞ்சத் தூக்கிட்டு வருவ. அவளும் உன்னையே தான் சொல்லிட்டு இருக்கான்னு அவங்க வீட்ல சொல்லிட்டு இருப்பாங்க.’

முதல்முறை சுவாரஸ்யம் தட்டியது. மனதே இல்லாமல் அலுவலகம் நோக்கி வண்டியைச் செலுத்தினேன். கூடவே மங்கலாய் யூனிஃபார்ம், பரத், விபா, ப்ரேயர் சத்தம், மைதானம் என நினைவடுக்குகளுக்குள் இருந்து ஒவ்வொன்றாய் தட்டுப்படத் துவங்கியது. ஆனாலும் அம்மா சொல்வது போல் மது குறித்து அவ்வளவு ஈடுபாடு இருந்தது நினைவிற்கு வரவில்லை.

அலுவலகம் அடைந்ததும் எதிர்பட்ட வினோதினி புன்னகைத்தாள்.
வழக்கத்தைவிட முன்னதாகவே வீட்டிற்கு கிளம்பிவிட்டேன். வினோதினி, ரமேஷ்பாபு, குமார் சார் எனக் கலவையாக நேரத்தைக் கடத்திவிட்டு வந்திருந்தேன். எதுவோ ஒன்று வீடு நோக்கி இழுத்துக் கொண்டிருந்தது என்னை.

ஃப்ரெஷ் அப் செய்துகொண்ட அதில் ஈடுபாடு காட்டாதவன் போலக் காட்டிக் கொண்டே அம்மாவை நோக்கிக் குரல் கொடுத்தேன். “நேற என்னம்மா நைட்டுக்கு என்ன?’

“கத்திரிக்காடா!’

தேவையில்லாத பொழுதெல்லாம் தொணதொணவென பேசிக் கொண்டிருப்பவள் இன்று ஒரு வார்த்தையோடு முடித்துக் கொண்டு விட்டாள்.. மெதுவாய் சமையற்கட்டுப் பக்கம் போய் தண்ணீர் எடுத்துக் குடித்தேன். வதக்கிக் கொண்டிருந்தாள்.

“சீக்கிரமே வந்துட்டியேடா, டீ சாப்பிடுறயா? வேண்டாம், அப்புறம் சாப்ட முடியாது’ என்றவள் மெதுவாய்த் திரும்பினாள்.

“ஆனாலும் மதுவோட மொபைல் நம்பர வாங்காம வந்திருக்கியேடா.’
அப்பாடாவென இருந்தது. முகம் பிரகாசமாவதை மறைக்க முயன்று இயல்பாகக் கேட்டேன். “விடும்மா, ஜஸ்ட் எப்வோ கூடப்படிச்சா’ உண்மையாகவே அப்படித்தான் தோன்றியது. வினோதினி இந்நேரம் வீட்டிற்கு போயிருப்பாளா அல்லது குமார் சார் டிராப் பண்ணுவாரா என்ற யோசனையும் இருந்து கொண்டிருந்தது.

“என்னடா இப்படிச் சொல்லிட்ட? ஒருதடவ என்ன ஆச்சு தெரியுமா? ஸ்கூல்ல இருந்து வந்துட்டு நீ பேசவே இல்ல, உம்முனு மூஞ்சு வச்சுட்டுப் போய் படில உட்காந்துட்ட, நானும் பெரியம்மாவும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தோம், டீச்சர் அடிச்சாங்களா, பசங்க ஏதாவது பண்ணாங்களான்னு எதக் கேட்டாலும் பதிலே சொல்லாம ஊமக்கோட்டான் மாதிரி உட்கார்ந்துருக்க. நேரம் ஆக ஆக எனக்கா பயம். பெரியம்மா வேற, பிள்ளக்கி ஏதாவது சூன்யம் அது இதுன்னு ஆரம்பிச்சு புளியக்கரச்சுட்டா, எனக்கு அழுகையே வந்துருச்சு.’
இப்பொழுது கத்திரிக்காய் வாசம் மூக்கைத் துளைக்க ஆரம்பித்திருந்தது.

“ஐயோ, அப்புறம் என்ன பண்ணேன்?’

“பண்ண, பண்ண, பாவக்காய் கூட்டப்பண்ண, அந்தக் கூத்து இருக்கே, உங்க அப்பா ஆபீஸ்ல இபுருந்து வந்ததும், ஓடிப்போய் அவர் காலக் கட்டிட்டு விம்மிக்கிட்டே ஏதோ சொல்ற, சத்தமே வரமாட்டேங்குது, அப்பா பதறிப்போய் என்னைப் பார்க்குறாரு, பிள்ளய என்ன பண்ணனு கத்துறாரு.’

டி.வி ரிமோட்டை கீழே வைத்துவிட்டு அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“நீ திக்கித் திக்கிச் சொல்ற, “அப்பா, மது எங்கூட டூ விட்டுட்டாப்பா’ன்னு!’

“ஹ்ஹாஹா, இதெல்லாம் ஓவர்ம்மா.’

“இப்ப சிரி, அன்னிக்கு வந்த கோவத்துக்கு உங்க அப்பாமட்டும் தடுக்கலேன்னா அடி பின்னி இருப்பேன். மூணு மணிநேரமா நான் பட்ட பாடு இருக்கே… பிள்ளக்கி அதுவாகி இருக்குமோ அது ஆகி இருக்குமோன்னு, டூ விட்டாளாம் டூ.’

குக்கர் விசிலடித்தது. “எத்தனாவதுடா?’

“யாருக்குத் தெரியும்?’ என்று நினைத்துக் கொண்டே ஹாலுக்கு வந்தேன். மதுவைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. “ஏம்மா, நம்பர் வாங்காம வந்திட்டேனே? எப்படிம்மா பார்க்குறது?’

“எப்பிடிப் பார்க்குறதா? நாளைக்கி காலைல அதே எடத்துக்குப் போடா…’

சொல்லிவிட்டு டி.வி.க்குள் ஐக்கியமாகிவிட்டாள்.

அதிகாலையில் எழுவது வழக்கம்தான் என்றாலும், அன்று அதியதிகாலையிலேயே எழுந்து கருப்பு டி ஷர்ட்டைத் தேடிக் கண்டுபிடித்துப்போட்டு ஜாகிங் கிளம்பிவிட்டாலும், ஓடியது என்னவோ மனதுதான். சற்று முன்னதாகவே ஆல் இண்டியா ரேடியோவிற்கு முன்னர் நின்றாகிவிட்டது. நாலாவது டீ ஆளைக்காணோம். நேற்று அவள் அருகில் வந்தவன் முகம் நினைவிற்கு வந்தது. ஒருவேளை அவனிடம் வண்டி இருக்குமோ?
அடையாறில் அவளை இறக்கிவிட்ட இடத்தில் நின்றிருந்தேன். வெறிச் என இருந்தது. நடமாட்டமே இல்லை. ரொம்ப சீக்கிரம் வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் எல்லாம் இல்லை. சீக்கிரம் தான். ரொம்ப நேரம் காத்திருந்தும் வருவதற்கான அறியையும் காணோம். குறியையும் காணோம்.

தளர்வாய் வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருக்கும்பொழுதே அம்மா கத்துவதுகேட்டது. “ஏண்டா “நாளைய இயக்குனர்’ போட்டா அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசைய மாட்ட, அதுவும் ஃபைனல் நடந்துட்டு இருக்கு எங்கடா போன?’

அம்மா நீ வாழ்க, ஆஹா இன்று ஞாயிறு. அதனால்தான் அவள் வரவில்லை என்று நினைக்கும்பொழுது மறுநாளுக்கான காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன, குறும்படமாய்.

ஆனால், திங்கள் போய் புதனும் போய்விட்டது. அவளைத் தேடி அடையாறு, ஆல் இண்டியா ரேடியோ ஸ்டாப் எவன ஜாகிங் போகாமலே துரும்பாகிவிட்டதுபோல் ஒரு ஃபீலிங். தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருந்த நாட்கள் இப்படியாக்கவிட்டாள் அம்மா. ஃபேஸ் புக்கில் ஆயிரம் மதுக்களில் இவளைக் காணோம். வினோதினி பேசத் துவங்கிவிட்டாள். ஆனாலும் அம்மா கூறிய பள்ளிக் கதைகளைக் கேட்டதில் இருந்து மதுவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. நினைப்பதெல்லாம் நடந்துவிடாவிட்டாலும் தெய்வமேதுடா? போன்ற தத்துவங்கள் தலைதூக்கத் துவங்கிவிட்டன.

சனிக்கிழமை மதியம் வட பழனியில் ரமேஷ்பாபுவை நம்மவீடு வசந்தத்தில் இறக்கிவிட்டு வண்டியை கிளப்புகையில் என்னை நோக்கி, பஸ் ஸ்டாப்பில் இருந்து ஓடி வந்தாள். ஆம். மதுதான். வண்டியை விட்டு இறங்கி, மூச்சு வாங்கும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ஹே ர….கு… ஹூம்…’

“மது என்னாச்சு… கூல்…’

“ஒண்ணுமில்லப்பா, அன்னிக்கு அப்பிடியே போய்ட்டேன். பெரிசா ஒண்ணும் தோணல. வீட்ல அப்பாகிட்ட ஜஸ்ட் உன்னப் பார்த்தேன்தான் சொன்னேன். ஓ மை காட், அப்பா, நாம சின்ன வயசுல பண்ணதப் பத்திச் சொல்லச் சொல்ல ஒருமாதிரி ஆகிடுச்சு, உடனே பார்க்கலாம்னா நம்பரே வாங்கல, அண்ட் மறுநாளே ஊருக்குப் போய்ட்டேன் ஒரு ப்ராஜெக்ட்க்காக!’

பார்த்துக் கொண்டே இருந்தவனை அசைத்தாள்.

“வா போலாம்’ என பில்லியனைத் தட்டினேன். ஏறிக் கொண்டாள்.

இனி, கட்டிக் கொள்வாள்.

– ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

1 thought on “மது + மாது = காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *