Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஜெயித்த நரி

 

(இதற்கு முந்தைய ‘கோமதியிடம் சத்தியம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

“மாரியாத்தா கோயிலுக்கு போயே சத்தியம் செய்யட்டுமா?”

“என்கிட்ட மட்டும் சத்தியம் பண்ணுங்க, போதும்.”

இசக்கி சத்தியம் செய்து கொடுத்தார். “நீ போட்ட கோட்டை என்னிக்காவது தாண்டியிருக்கேனா. இதுல மட்டும் தாண்டறதுக்கு?”

இதெல்லாம் கூட ஆம்பளைகளின் ‘கடுசு’த்தனம் தானே! தான் போடுகிற ஒரு கோட்டுக்குள் பொம்பளையை மடக்கிப் போடுகிற நரித்தனம்தானே! நண்டு வளைக்குள் நரி தன் வாலைப்போட்டு வைப்பது, நண்டு நல்லா வாலைச் சாப்பிட்டு ஏப்பம் விடவா? கிடையாதே! அதுமாதிரி வெகு நேரத்துக்கு கோமதி மெளனமாகவே கிடந்தாள். நரிக்கு மெளனம் சரிப்படலை.

“என்ன, என்னமோ சத்தியம் பண்ணச் சொன்ன, நானும் பண்ணினேன். கேட்டுக்கிட்டு ஒண்ணுஞ்சொல்லாம பேசாம இருக்கியே எதையோ யோசிச்சுக்கிட்டு! நம்பிக்கை இல்லையா நான் சொன்னதில?”

“அய்யய்ய அதெல்லாம் இல்லீங்க. நா வேற ஒரு விசயத்தை யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.”

“என்ன அது?”

“ஒங்களுக்கு எங்க எப்படி பொண்ணு பாக்கிறதுன்னு…”

இந்த விசயம் பாளையங்கோட்டை முழுசும் ஒரு வீடு பாக்கியில்லாம வெடிச்சி சிதறிப் போனது. பனங்காட்டு இசக்கிக்கு அடிச்ச யோகத்தைப் பாத்தீகளா, அவரு சம்சாரமே அவருக்குப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருக்காம். யாருக்குக் கிடைக்கும் இப்படியாப்பட்ட யோகம், நம்ம இசக்கி அண்ணாச்சியைத் தவிர? இந்த மாதிரி பேசித் தீர்த்தார்கள்.

இசக்கியின் மச்சான்களின் வருகை எல்லாம்கூட வேற வேற தினுசுகளில் ஊர்கோலமே வந்தன.

“இசக்கி அண்ணாச்சியும், அவுகளோட பெரிய மச்சானும் கட்டிப் புரண்டுல்ல ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிக்கிட்டாகளாம்! போலீசு வந்துதேன் சண்டையை வெலக்கி விட்டதாம்.” இந்த மாதிரி இன்னும் வேற வேற தினுசுகளில் புரளி ரெக்கை கட்டிப் பறந்தது.

ஆனா ஒண்ணு, அன்னைக்கி கோமதி ‘ஒங்களுக்கு எங்கே எப்படி பொண்ணு பாக்கிறதுனுதேன் தெரியலை’ன்னு சொன்னதும் உடனேயே இசக்கி மனைவியின் ரெண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு நன்றி சொல்லி ஆனந்தக் கண்ணீரையெல்லாம் வடித்துவிடவில்லை. நரிக்குணம் அப்படியெல்லாம் குளிர்ந்துபோன மனசைக் காட்டிக்கொண்டு விடுமா? பிறகென்ன அது நரி?

“எனக்குப் பைத்தியம் விட்ருச்சி! இப்ப பைத்தியம் ஒனக்கு ஆரம்பிச்சிருக்கு!” என்று நரி பிகு செய்துகொண்டது.

“இல்லைங்க நெசமாத்தேன் சொல்றேன்.”

“இப்ப வாயை மூடுறியா இல்லையா?”

“நானே ஒரு நல்ல பெண்ணா பாத்து, கல்யாணத்தை செஞ்சி, சட்டுப்புட்டுன்னு வாரிசு பொறக்கறதுக்கு வழி பண்ணியாகணும்…”

“பார்ரா இவளை வாயை மூடு மூடுன்னா பேசிக்கிட்டே போறதை!”

“ஒங்களுக்கு வாரிசைப் பெத்துக் கொடுக்காத பாவத்துக்கு இதை நா செய்யத்தேன் போறேன்.”

“ஒன்கிட்ட பேசிச் ஜெயிக்க முடியாது.”

“இல்லாத வீட்டுப் பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை. நல்ல குணக்காரியா பாக்கணும்.”

“என்னத்தையோ செய்! ஒன் பிரியம்.”

“அவசரப்பட்டு அன்னைக்கி என் அண்ணன் தம்பிகளை கூட்டியாந்ததுக்கு என்னை மன்னிச்சிருங்க.”

“அன்னிக்கே ஒன்னை மன்னிச்சுட்டேன். ஆனா அந்தப் பயல்களை மன்னிக்க மாட்டேன். இனிமே அவனுங்க மூஞ்சியிலேயும் முழிக்க மாட்டேன். என்னமோ பெரிய யோக்கியனுங்க மாதிரி பேச வந்துட்டானுங்க. இவனுங்க செய்யறதெல்லாம் போக்கிரித்தனம்! மொள்ள மாரித்தனம்! நானென்ன இவனுங்க மாதிரி மச்சினிகிட்ட ‘ராங்’ பண்ற ஆளா கேக்கறேன்? தெரியாதுன்னு நெனச்சானுங்க போலிருக்கு! அதேன். எதுவும் வெளியில தெரிஞ்சிட்டாத்தேன் அசிங்கம், கேவலம், அநியாயம் எல்லாம். தெரியலைன்னா பத்தினித்தனம்! ராமச்சந்திரமூர்த்தி ஆயிடுறான்கள்! இருக்கட்டும் இருக்கட்டும் எங்க போயிடப் போறானுங்க!

“இப்ப நெசமாவே கல்யாணம் நடக்கப்போகுது. அதுவும் அவன்களோட தங்கச்சிக்காரியே பொண்ணு பாத்து கட்டிவைக்கப் போறா! என்ன செய்யறாங்கன்னு பாக்கலாம். அன்னைக்கி என்னை கன்னா பின்னான்னு அவமதிச்சுப் பேசினதுக்கு இதேன் தண்டனை. பாவம், அன்னைக்கே ஒருத்தனுக்கு பஸ்ல இருந்து இறங்கினப்ப கீழே விழுந்து கை ஒடிஞ்சி போச்சாம். திருப்பியும் வந்து கத்தினானுங்கன்னா கால் ஓடியும். அது தெரியலை அவனுங்களுக்கு! என்னைக்கும் என்னை அவமானப் படுத்தியவன் வாழ்ந்ததா சரித்திரமே கெடையாது. அவனுங்க இங்க கெளம்பி வந்தா இதை கட் அண்ட் ரைட்டா சொல்லிப்புடு..! அவனுங்க அதுக்குமேல வந்தா நா பாத்துக்கிறேன்…”

குற்றாலத்தில் இடி இடித்தால் கோயம்புத்தூரில் விளக்கு அணையும் என்பார்கள். அதுமாதிரி பாளையங்கோட்டையில் வெடித்த வேட்டுச் சத்தம் இலஞ்சியில் கேட்டது. இசக்கியின் மச்சான்களும் பாளைக்கு திரும்பி வர வேண்டியதாயிற்று. அதில் ஒரு மச்சானுக்கு கையில் பெரிய கட்டுப் போட்டிருந்தது. இசக்கி அண்ணாச்சி சொன்னதும் நெசம்தான். ஆனால் இந்தத் தடவை மச்சான்கள் மாப்பிள்ளையுடன் சண்டை போடறதுக்கு வரலை. சண்டையை சகோதரியிடம் போடுவதற்காக வந்திருந்தார்கள். பந்து இப்ப அந்த மைதானத்தில்தானே!

ஆனால் அவர்களின் எந்தப் பேச்சும் கோமதியிடம் எடுபடவே இல்லை. “இது என் குடும்ப விசயம். யாரும் தயவுசெஞ்சி தலையிடாதீங்க” என்று கோமதி சுருக்கமா பேசி அனுப்பிட்டா. அதுக்கு மேல ஒரு வார்த்தைகூட கோமதி பேசத் தயாரில்லை.

“நீ இப்படி ஒன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டா யாரு என்ன செய்ய முடியும்? எப்பிடியும் போ! ஆனா நாளக்கி எங்ககிட்ட வந்து ‘அய்யா குத்துதே, கொடையுதே’ன்னு ஒப்பாரி கிப்பாரி வச்சே, சும்மா விடமாட்டோம். சாக்கிரதை.”

“எதுக்கு அண்ணே வீணா இவகிட்ட நின்னு பேசிகிட்டு… வாங்க போகலாம். இவளுக்கும் நமக்கும் இனிமே எந்த சொந்தமும் கெடையாது.”

“அதை நல்லா சத்தமா சொல்லிட்டு வா.”

அதே மாதிரி நல்லா சத்தமா திரும்பவும் சொல்லிவிட்டு, துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு இலஞ்சிகாரன்கள் இஞ்சினும் ரயில் பெட்டிகளும் போல ஒருத்தன் பின்னால் ஒருத்தன் வேகமாகப் போனார்கள்.

இசக்கி அண்ணாச்சி சொன்னது மாதிரி இவன்களும் சரியில்லாத பயல்கள்தான்! இல்லாவிட்டால் இப்படியா கிளம்பிப் போவார்கள். இருந்து ஒரு வழி பண்ண வேண்டாமா கூடப் பிறந்தவளுக்கு? தன்னுடைய தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்கிறாள் என்பது தெரிஞ்சும் விட்டுட்டுப் போலாமா இப்படி? அவர்கள் வீட்டுப் பொம்பளைப் பிள்ளை இல்லையா கோமதி? அதுவும் மண்ணை அள்ளிப் போடுவது தெரிகிற போதுதானே ரொம்பக் கிட்டே வந்து நிக்கணும்? இப்பப் பாத்து துண்டை உதறிப் போட்டுட்டு எழுந்து போனா என்ன அர்த்தம்? சொந்தம் பந்தம் என்கிறதெல்லாம் இவ்வளவுதான் போலிருக்கிறது. சொன்ன சொல்லைக் கேட்டுடணும். இல்லாவிட்டால் சொந்தம் விட்டுப் போயிடும்.

கடைசியில் நரி ரொம்ப எளிதாக ஜெயித்துவிட்டது!

நண்டை வாயில் போட்டுச் சாப்பிட்டுவிட்டது.

ஆனால் கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்கிற வேலையை மிக லேசாக நினைத்துக் கொண்டிருந்தார் இசக்கி. ஏழைப்பட்ட சனங்கள் பொண்ணுகளை கூட்டிக்கொண்டு அவர் எதிர்பார்த்த மாதிரி வாசலில் வந்து க்யூவில் நிற்கவில்லை. 

தொடர்புடைய சிறுகதைகள்
முரளிக்கு வயது இருபத்திநான்கு. மிகவும் ஏழ்மையான குடும்பம். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுதி பாளையங்கோட்டை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளம் நிலை எழுத்தாளராக வேலை கிடைத்தவுடன், முதல்நாள் மிகுந்த ஆர்வத்துடன் அலுவலகம் கிளம்பிச் சென்றான். முரளி கெட்டிக்காரன். திறமையானவன். ஆனால் ...
மேலும் கதையை படிக்க...
அதிர்ந்து போனான் முத்து. ஒரு கணம் திகைத்தவன், அடுத்த கணம் தான் பார்த்த உண்மையின் அசிங்கம் உறைக்க, உடனே தன் வீட்டுக் குடிசையின் வாசலிலிருந்து மெளனமாக விலகினான். உடம்பு பட படத்தது. மனம் வலித்தது. குடிசையின் பின் புறமுள்ள சிறிய பிள்ளையார் கோவிலின் அரச ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு வயது இருபத்தியேழு. தனிமை என்னை வாட்டுகிறது. ஒரு பெண்ணின் அருகாமைக்காக என் மனசும் உடம்பும் ஏங்குகிறது. பதின்மூன்று வயதினிலேயே இந்த எதிர்பார்ப்பு எனக்கு ஆரம்பமானது. பின்பு அதுவே ஏக்கமானது. இன்னமும் குறைந்த பட்சம், பன்னிரண்டு வருடங்கள் - ஒரு மாமாங்கம் - இந்த ...
மேலும் கதையை படிக்க...
"வேணு சாலை விபத்தில் இறந்து விட்டார். இன்று மாலை தகனம். உடனே கிளம்பவும் - சந்துரு." காலை பத்தரை மணிக்கு அலுவலகத்தில் இந்த டெலிகிராம் என் கையில் கிடைத்தது. உடனே பதட்டமடைந்தாலும் சிறிது நிதானித்துக் கொண்டேன். வேணு, என் மனைவி சரஸ்வதியின் மூத்த அண்ணன். ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘மாமியார் வீட்டிற்கு விஜயம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) இதற்கிடையே வராத மாப்பிள்ளை வந்திருக்கிறார் என்றதும் வீட்டு அடுப்புகள் சுறு சுறுப்பாக எரியத் தொடங்கி இருந்தன. பேச்சு சுவாரசியமாகப் போய்க் கொண்டிருந்தபோதே, ஒரு சட்டி மலைப் பூண்டு ...
மேலும் கதையை படிக்க...
நாம்
அதிதி
தொடுதல்
புத்திர சோகம்
மகள்களின் சம்மதம்

ஜெயித்த நரி மீது ஒரு கருத்து

  1. JAVITH says:

    அண்ணாச்சி நல்லவரா கெட்டவரா? சுவாரசியம் மிகுந்த எழுத்து உங்களுடையது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)