கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 6, 2023
பார்வையிட்டோர்: 5,254 
 

(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குருத்து 7-9 | குருத்து 10-12 | குருத்து 13-15

குருத்து பத்து 

பகலின் ஒளி மங்கி, அந்தியின் இருள் மயங்கும் சந்தி நேரத்தில் வானத்தில் கண் சிமிட்டும் வைர மலர்களைக் கடற்கரையில் உட்கார்ந்தபடியே கண்டு களித்துக்கொண்டிருந்தான் ராஜா. அவனருகில் அமர்ந்திருந்த பாரதி, கடல் அலை களையும். அவற்றுக்குப் பின்னால் உயர்ந்தும் தாழ்ந்தும் மிதந்துகொண்டிருந்த நிழல் சித்திரம்போன்ற படகுகளையும் பார்த்துக்கொண்டிருந்தாள். 

ஜன சந்தடி அதிகமில்லாத இடமாகப் பார்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்று, அவர்களுக்குப் பின்னணியாக அமைந்திருந்தது. 

“படகிலே ஒரு முறை பிரயாணம் செய்ய வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது” என்றாள் பாரதி. 

“எனக்கும் கூடத்தான்; ஆனால் அதற்கு ‘விஸா’வும் ‘பாஸ் போர்ட்’டும் வாங்க வேண்டும்?” என்றான் ராஜா. 

“கப்பலில் வெளி நாட்டுக்குப் பயணம் செய்வதாயிருந்தால்தானே அதெல்லாம் வாங்க வேண்டும்” பாரதி கேட்டாள். 

“இல்லை, படகிலே போவதாயிருந்தாலும் வேண்டும். நீயும் நானும் வாழ்க்கைப் படகில் பயணம் செய்யவேண்டுமானால், அதற்கு என் அத்தையிடமும், உன் தந்தையிடமும் ‘பாஸ் போர்ட்’ வாங்கியாக வேண்டும்” என்றான் ராஜா. 

பாரதி சிரித்துவிட்டாள். 

“சினிமாவிலே காதலர்கள் ‘டூயட்’ பாடிக்கொண்டு படகில் போவார்களே, அது எனக்குக் கட்டோடு பிடிக்காது” என்றான் ராஜா. 

“ஏன்?” என்று கேட்டாள் பாரதி. 

“அந்தக் காதலர்கள் நாமாக இல்லையே என்றுதான்!” என்றான் ராஜா, 

கரையை நோக்கி வந்து கொண்டிருந்த படகுகளைப் பார்த்தபடியே, “முதன்முதல் இந்தப் படகைக் கண்டு பிடித்தது யார்?” என்று கேட்டாள் பாரதி. 

“நான்தான்” என்றான் ராஜா. 

“நீங்களா?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் பாரதி.

“ஆமாம், இப்போது நாம் சாய்ந்து கொண்டிருக்கிறோமே இந்தப் படகையும், இந்த இடத்தையும் கண்டு பிடித்தது நான் தானே!” என்றான் ராஜா. 

“ரேடியோ குவிஸ் புரோகிராமில் ‘படகைக் கண்டு பிடித்தது யார்?’ என்று கேட்டால், இந்த மாதிரிப் பதில் சொல்லி வைக்காதீர்கள்! உங்கள் என்ஜினீரிங் காலேஜுக்கே அவமானம்!” என்றாள் பாரதி. 

“எங்கள் என்ஜினீரிங் காலேஜ் அதற்காக ரொம்பப் பெருமைப்படும். படகைக் கண்டுபிடித்த அறிவாளியை இந்த உலகத்துக்கு அளித்த பெருமை எங்கள் கல்லூரிக்குக் கிட்டுமல்லவா…” 

“போதும் உங்கள் தமாஷெல்லாம்! நான் இப்போது ஒரு முக்கியமான கேள்வி கேட்கப் போகிறேன். அதற்குக் கொஞ்சம் ஒழுங்காகப் பதில் சொல்ல வேண்டும்… தெரியுமா?” 

“அதோ பட்டாணி சுண்டல்காரப் பையன் வருகிறான். முதலில் இரண்டு பொட்டலம் சுண்டல் வாங்கிக் கொண்டு விடுகிறேன். அப்புறம் பேசலாம்…” என்றான் ராஜா. 

“உங்களுக்குச் சுண்டல் என்றால் ரொம்பப் பிடிக்குமா?”

“அதெல்லாம் ஒன்றுமில்லை. சுண்டல் வாங்கவில்லை யென்றால், அந்தப் பையன் திரும்பத் திரும்ப இந்தப் பக்கம் வந்து, நம்மையே சுற்றிக் கொண்டிருப்பான்…” என்று கூறிய ராஜா, அந்தச் சுண்டல்காரப் பையனை அருகில் அழைத்து இரண்டு பொட்டலம் சுண்டலை வாங்கிக் கொண் டான். அந்தப் பையன் அப்பால் போனதும்,”ம் இப்போது கேள்-பதில் சொல்கிறேன்” என்றான் ராஜா. 

பாரதி கேட்டாள்! “இத்தனைப் பெரிய கடலைப் படைத்த கடவுள் எதற்காக இந்தக் கடல் நீரை உப்பாகப் படைத்தார்! இவ்வளவு உப்புத் தேவையா?” 

“கொஞ்சம் அதிகம்தான்” என்று கூறிய ராஜா, சுண்டலில் கரித்த உப்பைச் சகித்துக் கொள்வதுபோல் முகத்தைச் சுளித்துக்கொண்டான். 

பொத்துக் கொண்டு வந்த சிரிப்பைக் ‘கலீர்’ என்று கொட்டி விட்டாள் பாரதி. 

பின்னர், “நான் கேட்கிற கேள்விக்குச் சரியாகப் பதில் கூறப் போகிறீர்களா, இல்லையா?” என்று சற்றுக் கோபமாகக் கேட்டாள். 

“அந்தச் சுண்டல்காரப் பையன் இந்தப் பக்கம் வந்தால் அவனுக்கு நன்றி கூற வேண்டும்” என்றான் ராஜா. 

“ஏன்?” 

“‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழமொழி. இந்தப் பையனோ சுண்டலில் ‘டபிள்’ உப்புப் போட்டிருக்கிறான். நம் நன்றியை அவனுக்குத் தெரிவிக்க வேண்டாமா?” 

“உங்களால் தாமாஷாகப் பேசாமல் இருக்க முடியாது ; என்னால் சிரிக்காமலும் இருக்க முடியாது.” 

“நீ சொல்ல நினைப்பதெல்லாம் நான் பேச வேண்டும். நான் பேசும் பேச்சுக்கெல்லாம் நீ சிரிக்க வேண்டும்…” என்று அப்போதே ஒரு சினிமாப் பாட்டைக் கொஞ்சம் மாற்றிப் பாடினான் ராஜா. 

“ரொம்ப நன்றாகப் பாடுகிறீர்களே!” 

“இப்போது நாம் இரண்டு பேரும் படகில் பயணம் செய்தால் ஒரு டூயட்டே பாடலாம்” என்றான் ராஜா. 

“கடவுள் கடல் நீரை உப்பாகப் படைத்ததற்குக் காரணம் சொல்லாவிட்டால் நான் உங்களுடன் டூ” என்றாள் பாரதி. 

“இரண்டு பேர் சேர்ந்தால் டூ தான். தனியாக இருந்தால் ஒன்…” என்று கூறிய ராஜா, “நாமெல்லாம் ஆண்டவனிடம் நன்றியோடு இருக்கவேண்டும் என்பதற்குத்தான். ஒரு வேளை உணவு படைப்பவர்களை உப்பிட்டவர்கள் என்று கூறி அவர்களை உள்ளளவும் நினை என்கிறோம். கடவுள் இந்த உலகத்து மக்களுக்கெல்லாம் உணவைப் படைத்து வைத்திருக்கிறார். அந்த உணவுக்கு வேண்டிய உப்பையும் படைத்து வைத்திருக்கிறார். உலகத்தில் வாழும் உயிர்களுக் கெல்லாம் உப்பிட்டு வரும் அந்தக் கடவுள், கடல் நீரில் கலந்திருக்கும் உப்பைப் போலவே நம் கண்ணுக்குப் புலனாகாத சூட்சும வடிவத்தில் இருந்து வருகிறார்” என்றான். 

பாரதி ராஜாவையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். 

“என்ன பாரதி! அப்படிப் பார்க்கிறாய்? எனக்கு இவ்வளவு ஞானம் எப்போது வந்துவிட்டது என்றுதானே? இன்று காலையில்தான்… என் அத்தையின் மேஜைமீது கிடந்த ஒரு புத்தகத்தில் இந்த விஷயத்தை இன்று காலையில்தான் படித்தேன்…” என்றான் ராஜா. 

கையினால் மணலைக் கீறியபடியே, ராஜா கூறிய உயர்ந்த தத்துவத்தை எண்ணி, வியந்துகொண்டிருந்த பாரதி சட்டென, “ஐயோ!” என்று அலறியபடி கையை உதறிக் கொண்டாள். 

அவள் வலது கை ஆள்காட்டி விரலில் இரத்தம் பெருகி வழிவதைக் கண்டு பதறிப்போன ராஜா, “என்ன பாரதி, கையை ஏதாவது கீறிவிட்டதா என்ன?” என்று கேட்டான். 

“ஆமாம், கண்ணாடித் துண்டு” என்று மணலில் புதைந்து கிடந்த ஒரு பெரிய கண்ணாடித் துண்டை எடுத்து ராஜாவிடம் கொடுத்தாள் பாரதி. 

“இந்தக் கண்ணாடித் துண்டு உன் கையைக் கீறியதா. அல்லது உன்னுடைய கை கண்ணாடித் துண்டைக் கீறியதா?” என்று கேட்டான் ராஜா. 

சினிமாக்களில் கதாநாயகிக்கு ஏதாவது ஆபத்து நேரும் போது (அதுதான் நேருமே), கதாநாயகன் அவளைக் காப்பாற்ற ஓடி வருவான். அச்சமயம், வில்லனுக்கும் அவனுக்கும் சண்டை நடக்கும். அந்தச் சண்டையில் கதாநாயகன் வெற்றி பெறுவான். உடனே கதாநாயகி, கதாநாயகனைக் காதலிக்கத் தொடங்கி விடுவாள். 

ராஜா தன்னுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு நிகழ்ச் சியை எதிர்பார்க்கவில்லை யென்றாலும், அந்தக் கண்ணாடியை ஒரு வில்லனாகவே மதித்து அதைக் கடலில் வீசியெறிந்தான். உடனே எழுந்து சென்று தன்னிடமிருந்த கைக்குட்டையைக் கடல் நீரில் நனைத்து வந்து அவள் கைவிரலைச் சுற்றிக் கட்டினான். இரத்தப் பெருக்கு நின்றது. 

“மணலில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அஜாக்கிரதையாகக் கீறினால், இப்படித்தான் நேரும்” என்றான் ராஜா. 

“ஆமாம்; சுவரில் ஆணி அடிக்கும்போதுகூட ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்” என்றாள் பாரதி. 

அன்றொரு நாள், கல்லூரி ஆண்டு விழாவின்போது சுத்தியலால் தன் கைவிரலை நசுக்கிக் கொண்டதையும், பாரதி அப்போது தன் கைக்குட்டையால் கட்டுப் போட்ட தையும் பாரதி சுட்டிக் காட்டுகிறாள் என்பதை ராஜா புரிந்துகொண்டான். 

“நீ ரொம்பப் பொல்லாதவள்!” என்று பாரதியின் கன்னத்தை லேசாகக் கிள்ளினான் ராஜா. தன் கரங்களால் அவன் கைகளைத் தடுத்தபடியே ராஜாவையே கண் கொட்டாமல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் பாரதி. திடீரென ஏதோ நினைத்துக் கொண்டவள்போல், “இப்போது நான் என் கைவிரலைக் கீறிக் கொண்டதுபற்றி மகிழ்ச்சி அடைகிறேன்” என்றாள், 

அவள் அப்படிக் கூறியபோது ராஜாவுக்குப் பெருமை தாங்கவில்லை. பாரதி தன்மீது கொண்டுள்ள அன்பைத் தான் இப்படி மறைமுகமாகச் சொல்லுகிறாள் என்று எண்ணி மகிழ்ந்தான் அவன். 

அவன் அவ்வாறு மகிழ்ந்துகொண்டிருந்தபோதே,”என் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா? இந்தக் கைக்குட்டைதான். இது என்னுடைய கைக்குட்டை. அன்று கல்லூரியில், நீங்கள் கையை நசுக்கிக் கொண்டபோது, இந்தக்கைக் குட்டையால் தானே கட்டுப்போட்டேன். அப்புறம் இதைத் தாங்கள் திருப்பிக் கொடுக்கவேயில்லை. நல்ல வேளை இப்போது திரும்பி வந்துவிட்டது” என்று சிரித்துக் கொண்டே கூறினாள் பாரதி. 

“…நீ ரொம்ப ரொம்ப…” என்று கூறத் தொடங்கிய ராஜாவின் வார்த்தையை, “பொல்லாத பெண். ஆகையால் ரொம்ப ரொம்ப உஷாராயிருங்கள்” என்று முடித்துவிட்டு எழுந்திருந்தாள் பாரதி. 

“இதற்குள் ஏன் எழுந்துவிட்டாய், பாரதி?” 

“இப்போது மணி என்ன தெரியுமா…எட்டரை!” என்று கூறிக்கொண்டே புறப்பட்டாள் பாரதி. 

ராஜா வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது, மணி ஒன்பது. டாக்ஸி ஒன்றைப் பிடித்துப் பாரதியை அவள் வீட்டில் கொண்டுவிட்டு வருவதற்குள் அவனுக்கு நல்ல பசி எடுத்துவிட்டது. வீட்டுக்குள் நுழையும்போதே ‘பசி பசி’ என்று அலறிக் கொண்டு சமையலறையை நோக்கி விரைந்தான். அங்கு ஞானம் கையில் திருப்புகழை வைத்துக் கொண்டு தன்னுடைய வசத்துக்கு உட்படாத குரலில் பாடிக் கொண்டிருந்தாள். 

‘பசி உயிர் போகிறது; என்ன பாட்டு வேண்டியிருக்கிறது?” என்று கேட்டுக் கொண்டே வந்த ராஜா,”அத்தை! சாப்பிட்டாச்சா?” என்று கத்தினான். 

“அத்தை இங்கே இல்லை; மாடியிலே படித்துக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ?” என்றாள். 

“அத்தை, அத்தை!” என்று அழைத்தான் ராஜா. பதில் இல்லாமல் போகவே மாடிக்குப் போய்ப் பார்த்தான். அத்தை அங்கே மேஜைமீது தலையைக் கவிழ்த்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். 

“அத்தை ! சாப்பிட வரவில்லையா?” என்ற ராஜாவின் குரல் கேட்டதும், அவள் தலையை நிமிர்த்தி, “எனக்கு வேண்டாம், ராஜா! பசியே இல்லை. நீ சாப்பிடு போ” என்று கூறி அனுப்பிவிட்டு அப்படியே எழுந்து போய்ப் படுக்கையில் சாய்ந்து கொண்டாள். 

‘இத்தனை நேரம் நீ எங்கே போயிருந்தாய்?’ என்று அத்தை கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று அஞ்சிக் கொண்டே வந்த ராஜாவுக்கு அவளுடைய பதில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. 

“சரி, அத்தை! நான் போய்ச் சாப்பிடுகிறேன்'” என்று கூறிக்கொண்டே கீழே இறங்கிப் போய்விட்டான் ராஜா. 

சீக்கிரமே சாப்பாட்டை முடித்துக்கொண்ட ராஜாவும் அன்று அதிக நேரம் கண் விழித்துக் கொண்டிருக்கவில்லை. அவனுடைய நினைவெல்லாம் பாரதியைப் பற்றியதாகவே இருந்தது. அவளுடன் கடற்கரையில் உட்கார்ந்து உல்லாசமாக உரையாடிக் கொண்டிருந்த இன்ப நினைவுகளிலேயே அவன் எண்ணம் லயித்திருந்தது. 

ரேடியோவைத் திருகிச் சற்றுநேரம் இங்கிலீஷ் பாட்டு களைக் கேட்டுவிட்டு உறங்கப் போய்விட்டான். 

மணி பன்னிரண்டுக்குமேல் இருக்கலாம். பார்வதி படுக் கையில் இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டேயிருந் தாள். எந்த நாளிலும் அவளுக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டதில்லை. 

சேதுபதியின் நினைவு மயக்கம் அவள் உறக்கத்தை விழுங்கிவிட்டிருந்தது. மயக்கமும் உறக்கமும் கலந்த கனவு நிலையில் புரண்டு கொண்டிருந்த பார்வதியின் இதழ்கள் அவளையும் அறியாமல் புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தன. அந்தக் கனவிலே அவள் சேதுபதியின் புறத் தோற்றத்தைக் கண்டுவிட்டுச் சிரிக்கவில்லை. 

அன்று மாலை அவர் கூறிய உயர்ந்த கருத்துகள், எந்த விஷயத்திலும், அவருக்குள்ள ஆழ்ந்த ஞானம், உதாரணங்களின் மூலம் விஷயத்தைத் தெளிவாக்கித் தரும் ஆற்றல் இவ்வளவும் அவள் உள்ளத்தில் பதிந்து போயிருந்தன. 

இன்ஷடூரன்ஸ் கம்பெனிபற்றி அவர் கூறிய கருத்தும், ஒரு வழிப்பாதை உதாரணமும் அவள் நினைவில் தோன்றின. 

அந்தப் புதுமையான கருத்தையும் உதாரணத்தையும் சேதுபதி மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லுவதுபோல் தோன்றியது. சேதுபதியின் அறிவுக் கூர்மையை நினைத்து நினைத்து வியந்தது அவள் உள்ளம். அந்தக் கனவு மயக்கத்தில் அவள் உள்ளத்தில் தேங்கிய மகிழ்ச்சியை, வியப்பை, ரசிப்பை அவள் உதடுகள் புன்சிரிப்பின் மூலமாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. 

அதே சமயத்தில் ராஜாவின் உறக்கத்தில் பாரதி தோன்றியிருந்தாள். அவள் சிரிப்பிலே, உற்சாகத்திலே, போலியான கோபத்திலே, அவள் தளிர்க் கரத்தின் மென்மையிலே லயித்திருந்தான் ராஜா. அந்த லயத்தின் பிரதிபலிப்பாக அவன் முகம் மகிழ்ச்சியாய் அடிக்கடி மலர்ந்து கொண்டிருந்தது. 

குருத்து பதினொன்று 

ராஜாவின் உறக்கத்தை, முழுமையான மெய்ம்மறந்த உறக்கம் என்று கூறமுடியாது. விழிப்பும் உறக்கமும் கலந்து கிடந்த ஒரு மயக்கம் அவனை அணைத்துப் பிணைத்துக்கொண்டிருந்தது. விடியற்காலைக்குரிய இருளோடு லேசாக ஓர் ஒளியும் கலந்து கிடக்குமே, அந்த மாதிரி. 

அந்த அரை குறையான உறக்கத்தில் ராஜாவின்முன் பாரதி தோன்றுவதும் மறைவதுமாக மாயாஜாலம் புரிந்து கொண்டிருந்தாள். சொப்பன உலகத்தின் விசித்திரங்களெல்லாம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தன. 

சினிமாக்களில் வரும் பூர்வ ஜன்மக் காதலியைப்போல் அவள், ‘கல கல’ வென்று சிரித்த வண்ணம் மெல்லிய துகிலுடன் காற்றிலே மிதந்து வந்தாள். அடுத்த கணம் காற்றிலேயே கரைந்து மறைந்தாள். உறங்கிய நிலையிலேயே, கனவின் மயக்கத்திலேயே ராஜா அந்தச் சொப்பன இன்பத்தை அனுபவித்தவனாய் அவளுடைய அங்க அசைவு ஒவ்வொன்றையும் ரசித்துப் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தான். 

அவள் ‘கல கல’வென்று சிரித்தபோது பாரிஜாத மலர் கள் குயிலின் குரல் பெற்று உதிர்வன போன்ற பிரமை உண்டாயிற்று. மறுகணம் அவள் சிவந்த இதழ்கள் முறுவலிக்க, நீண்ட விழிகள் அலைய, கால் சதங்கைகள் ‘கலீர் கலீர்’ என ஒலிக்க ஒரு நடனப்பெண் வடிவத்தில் தோன்றித் தன் மெல்லிய கரங்களால் ராஜாவைப் பற்றி இழுத்தாள். 

இந்த இன்ப அனுபவம் வெகு நேரம் நீடித்திருக்கவில்லை. இதற்குள் அவன் தூக்கம் கலைந்துவிடவே இடையே அறுபட்ட பிலிம் சுருள் மாதிரி, அந்தச் சொப்பனக் காட்சி தடைப்பட்டுப் போயிற்று. 

பாரதியின் அழகு வடிவத்தை, ஸ்பரிச இன்பத்தைத் தொடர்ந்து அனுபவிக்க முடியாமற் போன ராஜா, கலைந்து போன தன் துயிலை மீண்டும் தன் வசமாக்கிக் கொண்டு அந்தச் சொப்பன நிகழ்ச்சியின் தொடர்ச்சியில், பாரதியின் மலர்ந்த விழிகளை, சிவந்த இதழ்களை, பூக்கும் முறுவலை மீண்டும் மீண்டும் கண்டு ரசிக்க விரும்பினான். 

காதல் வயப்பட்டவர்கள் எல்லோருக்குமே இந்தச் சொப்பன அவஸ்தை உண்டு போலும்! ஆமாம்; அங்கே மாடியில் படுத்திருந்த டாக்டர் குமாரி பார்வதி, சேதுபதியின் உருவத்தைத் தன் கண்ணெதிரில் கொண்டு நிறுத்த வெகு பாடுபட்டுக் கொண்டிருந்தாள்; அவளால் இயலவில்லை.உண்மையில் அவளுக்குச் சேதுபதியின்பால் ஏற்பட்டிருந்தது உடல்பூர்வமான காதல் அல்லவே! அவரை அவள் நேசிப்பது, அவர் அன்பை வேண்டுவது, அவர் துணையை நாடுவது, அவருடனேயே பேசிக்கொண்டிருப்பது, அவரைப் பிரிந்திருக்கும் நேரங்களில் அவரைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆயினும், பார்வதியின் இந்த ஆசைகளுக்கெல்லாம் காரணம் காதல் அல்ல; கேவலம் உடலாசையைப் பின்னணியாகக்கொண்ட, உடலாசை தீர்ந்ததும் அழிந்து போகிற அற்பமான காதல் அல்ல. சேதுபதியிடம் இவள் கொண்டுள்ள நேசத்துக்கும் பாசத்துக்கும், அன்புக்கும் அக்கறைக்கும் முன்னால், வயதும் புறத் தோற்றமும் மிக மிக அற்பமானவை. வயதின் கவர்ச்சியும் அழகின் வசீகரமும் மங்கிப்போன பிறகு, வலிவிழந்து விட்ட பின்னர், காலம் கடந்த காலத்தில் தோன்றியுள்ள காதல் இது. அதனால்தான் சேதுபதியின் தோற்றத்தை அவளால் உருவகப்படுத்திப் பார்க்க இயலவில்லை. 

ராஜாவைப் போலவே பார்வதியின் உறக்கமும் அடிக்கடி தடைப்பட்டுக்கொண்டிருந்தது. தூக்கம் கலைந்த போதெல்லாம் அவள் உறங்க முயன்று கொண்டிருந்தாள். 

உறங்கிய போதெல்லாம் சேதுபதியின் தோற்றத்தை உருவகப்படுத்த முயன்று கொண்டிருந்தாள்; உறக்கம் வந்தது. ஆயினும் அவளால் சேதுபதியின் உருவத்தைக் காண முடியவில்லை. 

அன்று மாலை அவர் கூறிய வார்த்தைகள் அனைத்தும் அவள் நெஞ்சத்தில் பதிந்து கிடந்தன. இன்ஷூரன்ஸ் பற்றிய தன்னுடைய அறியாமையை அறியநேர்ந்த சேதுபதி என்ன எண்ணியிருப்பார் என்பதை நினைத்தபோது அவளுக்கு வெட்கமாயிருந்தது. நஷ்டம் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குத்தானே? என்று அதிமேதாவியைப் போல் தான் கூறியபோது, அவர் அலட்சியமாகச் சிரித்த சிரிப்பில் எத்தனைப் பொருள் பொதிந்து கிடந்தன! 

‘நீ மெத்த படித்தவளாயிருக்கலாம்; பட்டங்கள் பெற்றிருக்கலாம்; அறிஞர்கள் பலரோடு வாதாடி வெற்றி பெற்றிருக்கலாம்; கல்வி கேள்விகளில் வல்லவளா யிருக்க லாம். ஆனாலும் இந்தச் சின்ன விஷயம் உனக்குத் தெரிய வில்லையே, என்று அவர் தம் சிரிப்பின்மூலம் கூறாமல் கூறி விட்டாரே! இப்போது அதை எண்ணிய பார்வதிக்கு வெட்க மாயிருந்தபோதிலும், கூடவே இன்பமாகவும் இருந்தது! 

என்னுடைய பெரு மதிப்புக்கும், நேசத்துக்கும் பாத்திரமாகியுள்ள சேதுபதிதானே சிரித்தார்? அந்தச் சிரிப்பு என்னுடைய அறியாமையைப் பற்றியதுதானே? என் அறியாமையை எள்ளி நகையாடும் அளவுக்கு என்னிடம் அவர் உரிமை எடுத்துக் கொண்டதால் அல்லவா அவர் அவ்வாறு சிரித்தார்? அப்படியானால் அவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறது; அக்கறை இருக்கிறது; ஆசை இருக்கிறது; பாசமும், பரிவும் இருக்கின்றன. அந்தச் சிரிப்புக்கு இதெல்லாம்தான் பொருள். சேதுபதியின் சிரிப்பு அவள் காதுகளில் ரீங்காரமிட்டது. அந்தச் சிரிப்பின் இனிமையிலே, பாசத்திலே, பரிவிலே என்றுமே அனுபவித்தறியாத சுகம் இருப்பதை அவள் உணர்ந்தாள். அந்த உணர்ச்சிகளை யெல்லாம் ஒன்றாகத் திரட்டிப் புன்முறுவலாக வெளிவிட்டுக் கொண்டிருந்தன அவளுடைய இதழ்கள். 

மணி ஒன்பது இருக்கும். ராஜாவுடன் டாக்ஸியில் வந்து இறங்கிய பாரதி, நெஞ்சு படபடக்க மெதுவாக அடிமேல் அடி வைத்தவளாய், தன் தந்தைக்குத் தெரியாமல் வீட்டுக் குள் சென்றுவிட எண்ணினாள். நடு ஹாலில் படுத்திருக்கும் சேதுபதியைக் கண்டதும் திடுக்கிட்டுப்போன பாரதி, முன்னொரு நாள் தான் நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது “இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?” என்று தந்தை கேட்டதும், தான் அதற்குக் கல்லூரி ஹாஸ்டல் மாணவியுடன் கணக்குப் பாடம் கற்றுக் கொண்டிருந்ததாகப் பொய் சொன்னதும், தான் கூறிய அதைப் பொய்யென்று புரிந்து கொண்ட அப்பா, அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் வார்த்தைகளை நிஜமென்று நம்புவதுபோல் நடந்துகொண்டதும் அவள் நினைவுக்கு வந்தன. 

அப்பா தூங்குகிறாரா என்று கடைக் கண்ணால் கவனித்துக்கொண்டாள். சேதுபதிக்குக் காது ரொம்பக் கூர்மை. தூங்கிக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் நிழலாடினாலும் அறிந்து கொண்டுவிடுகிற சூட்சுமமான அறிவு அவருக்கு உண்டு. இன்று பாரதி வரும்போது அவர் விழித்துக் கொண்டுதான் படுத்திருந்தார். மணி ஒன்பதுக்குமேல் ஆகிவிட்டது என்பதையும், பாரதி லேட்டாக வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்பதையும் அவர் உணராமலில்லை. ஆயினும் பயந்தபடியே உள்ளே வந்துகொண்டிருந்த பாரதியை அவர் கண்டிக்க விரும்பவில்லை. எந்தவித உணர்ச்சியையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் மாலை ஐந்து மணிக்குக் கல்லூரியிலிருந்து வரும் பாரதியை எப்படி வரவேற்பாரோ அவ்வாறே வரவேற்றார். 

“என்ன பாரதி! யாரோ ஒரு பிரண்டைப் பார்க்கப் போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றாயே, பார்த்து விட்டாயா?” என்று சகஜமாக விசாரித்தார். 

“ஆமாம்” என்று மெல்லிய குரலில் பதில் கூறினாள் பாரதி. 

“இத்தனை நேரம் சாப்பிடாமலா பேசிக் கொண்டிருந்தாய்? வா, வா, உள்ளே போய்ச் சாப்பிடலாம். உனக்காக நானும் சாப்பிடாமல் காத்திருக்கிறேன்” என்று அன்பும் பரிவும் கலந்த குரலில் வரவேற்றார். தந்தையின் அன்பு மொழிகளில் பாரதி மெய் சிலிர்த்துப்போனாள். அப்பாவா இப்படிப் பேசுகிறார்? நிஜமாகவேதான் இப்படிக் கூறுகிறாரா? அல்லது கோபத்தை விழுங்கிவிட்டு மேலாக அன்பொழுகப் பேசுகிறாரா? 

‘ஏன் லேட்?’ என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே! நிஜமாகவே என்மீது கோபமில்லையா? அவருடைய சாந்தமான பேச்சும், அன்பும் வரவேற்பும் பாரதிக்குப் பெரும் வேதனையை அளித்தன. 

‘அப்பா! நான் நேரம் கழித்து வீட்டுக்கு வந்திருக் கிறேன். இப்போது மணி ஒன்பது; தயவு செய்து என்னைக் கொஞ்சம் கோபித்துக் கொள்ளுங்கள் அப்பா!’ என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்ள வேண்டும் போலிருந்தது. தன்னை அவர் கோபமாக நாலு வார்த்தை திட்டி அனுப்பினால்தான் உள்ளம் அமைதியுறும்போல் தோன்றியது. ஆனாலும் தன் வேதனையை அடக்கிக் கொண்டவளாய் மௌனமாகச் சமையலறையை நோக்கி நடந்தாள் பாரதி. 

சேதுபதிக்கும் பாரதிக்கும் மேஜைமீது உணவு தயாராகக் காத்திருந்தது. தந்தையும் மகளும் அருகருகே அமர்ந்ததும், சேதுபதியின் சகோதரி உணவு வகைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பரிமாறினாள். சேதுபதி எதுவும் பேசாமல் மௌனமாகவே சாப்பிடத் தொடங்கினார். அவர் முகத்தில் மகிழ்ச்சியில்லை. பேசிய இரண்டொரு வார்த்தைகளிலும் உற்சாகமில்லை. 

ஒருவன் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தபோதிலும் கவலைகள் பட்டபோதிலும் சாப்பிடும் நேரங்களில் மட்டும் எல்லாவற்றையும் மறந்து நிம்மதியுடன் சாப்பிடவேண்டும். என்று சேதுபதி அடிக்கடி கூறுவது வழக்கம். தம்முடைய அனுபவத்திலும் அவர் இந்தக் கொள்கையைக் கடை பிடிக்கத் தவறியதில்லை. வியாபாரத்தில் பல லட்சம் ரூபாய் நஷ்டமாகியிருந்தாலும் லாபமாகியிருந்தாலும் இரண்டையும் சமநிலையில் ஜீரணம் செய்துகொள்ளும் சக்தி அவருக்கு உண்டு. அவர் முகபாவத்திலிருந்து, லாபம் நஷ்டம் எதையும் கண்டுபிடித்துவிட முடியாது, அத்தகைய திடசித்தம் வாய்ந்தவர் முகத்தில் இன்று மட்டும் ஏன் இத்தனைக் கவலை? அமைதியின்மை? 

அப்பாவின் கவலைக்கு என்ன காரணம்? என்று யோசித்தாள் பாரதி. தன் அண்ணனின் முகத்தில் என்றுமில்லாத வருத்தம் சூழ்ந்திருப்பதன் காரணம் என்னவென்று புரியாமல் தவித்தாள் சேதுபதியின் தங்கை. 

சேதுபதியின் கை விரல்கள் சாப்பாட்டை அளைந்து கொண்டிருந்தன. அவர் உள்ளம் எங்கேயோ அலைந்து கொண்டிருந்தது. 

மௌனமாக. இதைக்கவனித்துக் கொண்டிருந்த பாரதியும் அத்தையும் ஒருவருக்கொருவர் ஜாடைகளாலேயே பேசிக் கொண்டனர். 

அப்பாவின் வருத்தத்துக்கு என்ன காரணம்? ஏன் சோற்றை அளைந்து கொண்டிருக்கிறார்? என்று பாரதி கேட்டாள். இல்லை, அவள் முகபாவமும் கைஜாடைகளும் அப்படிக் கேட்டன. 

“எனக்கென்ன தெரியும். உன் அப்பா சங்கதி? ஒரு வேளை பஞ்சு மில் தீப்பற்றி எரிந்து விட்டதை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?” சேதுபதியின் சகோதரி பதில் கூறினாள். இல்லை அவளுடைய கண்களும் அபிநயங்களும் அவ்வாறு பதில் கூறின. 

மகளும் சகோதரியும் மௌன மொழியில், அபிநயங்களின் மூலமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்த சேதுபதி லேசாகச் சிரித்துக் கொண்டே, “என்ன பாரதி! அத்தையும் மருமகளும் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நான் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறேன் என்றுதானே? பஞ்சு மில் எரிந்து போயிற்றே என்று நான் வருத்தப்படுவதாக எண்ணுகிறீர்களா? வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் போது கவலைப்படுவது என்பது எனக்குத் தெரியாத விஷயம். பணம் வந்து போவதுபற்றி நான் எப்போதுமே கவலைப் பட்டதில்லை; கவலைப்படவும் கூடாது. ஆனால் படக்கூடாத ஆசைகளைப் பட்டுவிட்டு, அது நிறைவேறாமல் போகும்போது வருந்த நேரிடுகிறதல்லவா? என் வருத்தத்திற்குக் காரணம் ஆசை நிறைவேறவில்லையே என்பதால் அல்ல. நிறை வேறாத ஆசையை ஏன் பட்டோம் என்றுதான் வருந்துகிறேன்” என்றார். 

‘அப்படிப்பட்ட அந்த ஆசை என்ன?’ வென்று சேதுபதியைக் கேட்கும் தீரம் பாரதிக்கோ, அவள் அத்தைக்கோ இருக்கவில்லை. 

ஆனால் பாரதி மட்டும் தன் தந்தையைப் பார்த்து, “அப்படியானால் அந்த ஆசையை விட்டு விடுங்களேன்” என்றாள். அது கேட்ட சேதுபதி தமக்குள்ளாகவே சிரித்துக் கொண்டார். அவருடைய உள்ளத்தின் அடிவாரத்தில் ஆழ்ந்து கிடக்கும் ரகசியம், இதுவரை பார்வதியேகூட அறியாத அந்த ரகசியம், மகளிடமோ தங்கையிடமோ சொல்லி ஆறுதல் பெறக் கூடிய தல்லவே! 

சாப்பாட்டை அரை குறையாக முடித்துக் கொண்ட சேதுபதி, சட்டென்று நாற்காலியைவிட்டு எழுந்து நின்றவராய், “சரி, பாரதி! நேரமாகிறது. நீ போய்ப் படிக்கலாம்” என்று கூறிவிட்டுத் தமது அறையை நோக்கிச் சென்றார். 

‘ஆசையை விட்டுவிடும்படி அப்பாவுக்குச் சுலபமாகச் சொல்லி விட்டேன். என் மனத்திலுள்ள ஆசையை என்னால் விடமுடியவில்லையே! ராஜாவைப்பற்றி என் அந்தரங்கத்தில் கொண்டுள்ள எண்ணங்களை அகற்றிவிட முடியவில்லையே!’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளாய்த் தன்னுடைய அறையை நோக்கி நடந்தாள் பாரதி. 

தம்முடைய அறைக்குள் பிரவேசித்த சேதுபதியின் உள்ளம் பார்வதியைப்பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அவளுடன் அன்று மாலை விவாதித்துக் கொண்டிருந்த விஷயங்களெல்லாம் அவர் நினைவுக்கு வந்தன, பார்வதியிடம் எனக்கு ஏன் இத்தனை அக்கறை! எந்நேரமும் என் மனம் ஏன் அவளைப்பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறது? 

அவள் எப்போதும் என் அருகிலேயே இருக்க வேண்டும் என்று என் உள்ளம் விரும்புவது எதனால்? அவளைப் பிரிய நேரும் போதெல்லாம் ஏதோ ஒரு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதைப் போன்ற வருத்தம் ஏற்படுவானேன்? இதற்கெல்லாம் என்ன காரணம்? 

சேதுபதியின் பார்வை தற்செயலாகச் சுவரில் மாட்டப் பட்டிருந்த அவருடைய மனைவியின் படத்தின் மீது சென்றது. அந்தப் படத்திலுள்ள சரஸ்வதியின் உருவம் சேதுபதியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தது. அந்தக் காட்சி, ‘எனக்குத் துரோகம் செய்யலாமா?’ என்று, தன் குற்றத்தை எடுத்துக் காட்டிச் சிரிப்பதுபோல் தோன்றியது சேதுபதிக்கு. 

‘சரஸ்வதிக்கு நான் என்ன துரோகம் செய்தேன்? பார்வதியை நான் விரும்புகிறேன்; அவள் துணையை நாடுகிறேன்; அவளிடம் பேசிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்; அவளைப் பிரிய நேரும்போது வருத்தமடைகிறேன்; உண்மைதான். இதனாலெல்லாம் சரஸ்வதிக்கு நான் எவ்விதத் துரோகமும் செய்துவிடவில்லையே! சரஸ்வதியைப் பிரிந்தது முதல் இத்தனை ஆண்டுக் காலமும் வேறு எவளையும் சரஸ்வதியின் ஸ்தானத்தில் வைத்துப் பார்த்த தில்லை. விரும்பியதுமில்லை… பார்வதியிடம் நான் கொண்டுள்ள அன்புக்கு, ஆசைக்கு என்னால் விளக்கம் கூறமுடியவில்லைதான். ஆனால் அது கேவலம் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் உடலாசையைப் பின்னணியாகக் கொண்ட காதல் அல்ல. அவளை நான் விரும்புகிறேன்…அவ்வளவுதான் ..’ 

விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் சாய்ந்து கொண்ட சேதுபதியின் உள்ளத்தில் அலை அலையாக எழுந்த எண்ணங்களும் கேள்விகளும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு, ஒன்றுக் கொன்று பதில் கூறிக்கொண்டு அவரைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தன. குழம்பிய உள்ளத்துடன் அவர் விழித்துக் கொண்டிருந்தார். 

மணி பன்னிரண்டுக்குமேல் இருக்கும். சேதுபதி அயர்ந்து தூங்கத் தொடங்கினார். தூக்கத்தில் ஏதேதோ குழப்பமான கனவுகள்.எல்லாம் பார்வதியைப் பற்றியவையே. 

அந்தக் குழப்பத்திலும் அவர் முகம் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். அதற்கு என்ன காரணமோ? கனவிலே நிகழ்ந்த நிகழ்ச்சிகளோ என்னவோ? 

தாம் ஏழைச் சிறுவனாக இருந்தபோது பட்ட துன்பங்கள், தன்னை வளர்க்கவும் படிக்க வைக்கவும் தன்னைப் பெற்ற தாய் பட்ட கஷ்டங்கள், வறுமையின் கொடிய பிடியில் சிக்கிக்கொண்டு தானும் தன் தாயும் அனுபவித்த இன்னல்கள், அப்போது உயர்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், தான் முன்னுக்கு வந்து பெரும் பணத்தைத் திரட்டிக் குவித்தபோது படிப்படியாக மேல் நிலையிலிருந்து கீழ் நிலைக்குத் தாழ்ந்துபோனது, சமூகத்தில் தனக்கு ஓர் உயர்ந்த அந்தஸ்து ஏற்பட்டபோது, தன்னைவிட உயர்ந்தவர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களில் பலர் கீழ்ப்படிக்கு இறங்கியது – இவ்வளவும் அவர் கனவில் தோன்றின. 

கடைசியாக அன்று கல்லூரி விழாவில் தன்னை அறிமுகப் படுத்திய பார்வதி, அவர் முன்னால் தோன்றிப் பேசத் தொடங்கினாள். 

‘திருவாளர் சேதுபதியைப்பற்றி நான் புகழப் போவதில்லை. காரணம் ஏற்கெனவே அவரைப்பற்றி அறிந்து கொண்டுள்ள நமக்கு, அவர் அளித்த நன்கொடை ஒரு பெரிய விஷயமாகத் தோன்றாது. அத்துடன் இப்போது அவரைப் புகழ்ந்தால் அவர் கொடுத்த நன்கொடைக்காகப் புகழ்வதாகத்தான் தோன்றும். ஒருவன் தன் தாயாரை, தன்னைப் பெற்றவள் என்பதற்காக மதிப்புக் கொடுக்காமல், அவள் லேடீஸ் கிளப் பிரஸிடெண்டானவுடன் புகழ்வதைப் போலாகும்.” 

இந்த அறிமுகப் பேச்சின் மூலம் சேதுபதியின் உள்ளத்தில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிட்ட பார்வதியை அவர் வெறும் கல்லூரி பிரின்ஸிபாலாக மட்டும் மதிக்க வில்லை. அவளை ஓர் உயர்ந்த பீடத்தில் ஏற்றித் தம்முடைய அந்தஸ்து, கெளரவம், அறிவு, ஆற்றல் இவ்வளவுக்கும் ஈடு கொடுக்கக்கூடிய பெருமை வாய்ந்தவளாகக் கருதினார். அன்று பார்வதி அவரை விமான நிலையத்துக்குத் தேடிச் சென்று மூக்குக் கண்ணாடியைக் கொடுத்தபோது, ஏற்கெனவே அவளைப்பற்றி அவர் கொண்டிருந்த எண்ணம் மேலும் ஒரு படி உயர்ந்துவிட்டது. அவருடைய அந்த மதிப் பீட்டில் பார்வதி உயர்ந்தது மட்டுமல்ல, சேதுபதி தம்மைத் தாமே ஒரு படி தாழ்த்திக்கொண்டார். 

“மூக்குக் கண்ணாடியை மறந்து வந்துவிட்டீர்களே, இது ரொம்ப அவசியமல்லவா? வெளியூருக்குப் போகுமிடத்தில் இது இல்லை யென்றால், முக்கிய காரியம் கெட்டுப் போகுமே வேறு எதை மறந்தாலும் பரவாயில்லை. வேறொன்று உடனே வாங்கிவிடலாம். மூக்குக் கண்ணாடியை நினைத்த நேரத்தில் வாங்கிவிட முடியாதே!” என்றுகூறி, அவள் அந்தக் கண்ணாடியை எடுத்து வெகு அலட்சியமாகக் கொடுத்தபோது அவள் முன் நான் எவ்வளவு சிறியவனாகி விட்டேன்? அவள் அந்த நேரத்தில் எவ்வளவு பொறுப்புடன், கண்ணியத்துடன் நடந்து கொண்டாள். நானோ இன்று இன்ஷூரன்ஸ் பற்றிய பேச்சு எழுந்தபோது அவள் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு நஷ்டம் என்று கூறிய தவறைச் சுட்டிக்காட்டி, அவள் குற்றத்தை எடுத்துக்காட்டி அவளைத் திருத்த முற்பட்டேன். அவள் அறியாமையைச் சுட்டிக் காட்டியதும், அவள் தவறைத் திருத்தியதும் சரியாயிருக்கலாம். ஆனால் அவளைத் தாழ்த்திவிட்ட குற்றம் என்னுடையதல்லவா? தெரியாமல் அவள் நஷ்டம் என்று கூறியபோது நான் சிரித்திருக்கக் கூடாதல்லவா? தம்முடைய குணத்தையும் அவளுடைய பண்பையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்ட சேதுபதியின் எண்ணத்தில் பார்வதி மேலும் உயர்ந்து காட்சி அளித்தாள். அவளுக்கு முன்னால் தான் மேலும் ஒரு படி தாழ்ந்து விட்டதாகக் கருதினார். 

‘இனி இம்மாதிரிக் குற்றத்தை ஒரு நாளும் செய்யமாட் டேன். யாரையும் குறை கூறி, அவர்கள் குற்றத்தை உணரச் செய்து, நம்மைக் காட்டிலும் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை உண்டாக்கமாட்டேன். குறையை நாசூக்காகச் சொல்லித் திருத்தவேண்டும். அதுதான் பண்பு. ஒருவருடைய குறையை எடுத்துக் கூறும்போது, அவர்களை விட நாம் அறிவாளி என்ற அகம்பாவம் நம் உள்ளத்தில் ஏற்படக்கூடாது. நம்மைவிடச் சிறந்த அறிவாளிகள் இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் நாம் ஒரு சிறு துரும்பு…’ சேதுபதி ஒரு முடிவுக்கு வந்தார். அந்த முடிவில் அவருக்கு ஒரு நிம்மதி பிறந்தது. அப்படியே தூங்கிப்போனார். 

குருத்து பன்னிரண்டு 

பக்கத்து வீட்டுப் பசு மாட்டின் கனிந்த குரல், காலைப் பத்திரிகை வந்து விழும் சலசலப்பு, பால் டிப்போ சைக்கிள் மணியோசை இவையாவும் பார்வதிக்கு விடியற்காலை வேளையில் வழக்கமாகக் கேட்டுப் பழக்கமாகிவிட்ட ஒலிகள். ‘இன்று இன்னும் அந்த ஒலிகளைக் கேட்க முடிய வில்லையே, ஏன்?’ என்று யோசித்தவளாய்க்-கைக் கடிகாரத் தைப் பார்த்துக் கொண்டாள். அதில் மணி ஐந்தரைதான் ஆகியிருந்தது. 

‘ஒரு வேளை இந்தக் கடிகாரம் மெதுவாக ஓடுகிறதோ?’ என்று எண்ணியவளாய், “ராஜா! ராஜா!” என்று அழைத்தாள். 

அவன் உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்தான். கீழே இறங்கிச் சென்று ஹாலில் மாட்டப்பட்டிருந்த அந்த பிரெஞ்சு நாட்டுக் கடிகாரத்தைப் பார்த்தபோது, அதுவும் ஐந்தரை மணியையே காட்டியது. அந்தக் கடிகாரத்தின் மீது அவளுக்கு அதிக நம்பிக்கை! 

‘மணி ஐந்தரைதான் ஆகிறதா?…அப்படியானால், நான் இன்று வழக்கத்தைக் காட்டிலும் சீக்கிரமே எழுந்து விட்டிருக்கிறேன்…’ என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள். 

உண்மையில், பார்வதி அன்று உறக்கத்தைவிட்டு எழுந்திருக்கவே இல்லை. இரவெல்லாம் தூங்கியும் தூங்காமலும் படுக்கையில் புரண்டவாறு சேதுபதியைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருந்தவளுக்கு, ‘எப்போது தூங்கினோம், எப்போது விழித்துக் கொண்டோம்?’ என்ற உணர்வே துளியும் இல்லை. 

படுக்கையினின்றும் வெகு சீக்கிரமே எழுந்துவிட்டவள், உள்ளத்தில் அமைதியோ உற்சாகமோ இன்றி இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தாள். புத்தகங்களை எடுத்துப் புரட்டினாள். பலகணியின் வழியாகக் கீழ்த்திசையில் நிகழ்ந்து கொண்டிருந்த விடியற்காலை ஜாலங்களைப் பார்க்கலானாள். எதிலும் மனம் லயிக்காமற் போகவே, கீழே இறங்கிச் சென்று குளிர்ந்த நீரில் உடல் குளிரக் குளித்துப் பின்னர், உடை மாற்றிக் கொண்டு கண்ணாடியின்முன் சென்று தன் உருவத்தையே சற்றுநேரம் பார்த்துக்கொண்டாள். கூந்தலை அழகாகச் சீவி, கொண்டைபோட்டு, ஊசிகளால் அவற்றைக் கட்டுப்படுத்திய பின்னர், நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு ஒருமுறை தலையைச் சாய்த்துப் பார்த்தவளாய், ‘அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை நாற்பதுக்கும் ஒன்றிரண்டு வயது குறைவாகவேதான் மதிப்பிடலாம்’ என்று சமாதானம் சொல்வதுபோல் எண்ணிக் கொண் டாள். 

மேஜைமீது கிடந்த மூக்குக் கண்ணாடியை எடுத்துச் சீலையின் தலைப்பால் அதைத் துடைத்து அணிந்துகொண்ட பிறகு மீண்டும் ஒரு முறை, நிலைக்கண்ணாடியின் முன்போய் நின்று தன் உருவத்தைப் பார்த்தாள். இப்போது இரண்டு வயது அதிகமாகி விட்டது போல் தோன்றியது. 

‘பரவாயில்லை; வயது சற்று அதிகமாகத் தோன்றினாலும், இந்தக் கண்ணாடி அணிந்த பிறகே முகத்தில் அறிவின் களை வீசுகிறது’ என்று தனக்குத்தானே திருப்தி அடைந்தாள். 

அடுத்த கணமே அவளுக்கு இன்னொரு எண்ணமும் உண்டாயிற்று. 

‘வயதைப்பற்றியோ, வசீகரத்தைப்பற்றியோ, இத்தனைக் காலமும் ஏற்படாத கவலைகள் இப்போது மட்டும் தோன்று வானேன்? என் உள்ளத்தில் எழுந்துள்ள பலவீனமான எண்ணங்களுக்கு இதுவே அறிகுறியாக இருக்கலாமோ?’ என்று யோசித்துப் பார்த்தாள். 

‘இதற்கெல்லாம் என்ன காரணம்? யார் காரணம்? ஆம்; சேதுபதியேதான். அவருடைய அறிவை, உறவை, பரிவை, அன்பு மொழிகளை என் உள்ளம் நாடுகிறது’. 

‘என் எண்ணத்தை வெளிப்படையாகக் கூறவும் முடிய வில்லை; மனத்திற்குள்ளே மறைத்து வைக்கவும் இயலவில்லை’. 

சோடா புட்டியின் நெஞ்சுக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கும் கண்ணாடிக் குண்டுபோல், சேதுபதிபற்றிய எண்ணம் என் நெஞ்சுக்குள் புகுந்து அலைந்து கொண்டிருக்கிறது. 

‘என் உள்ளத்தை, உள்ளத்தில் புகுந்துகொண்டிருக்கும் இரகசியத்தை அவர் புரிந்து கொண்டிருக்கிறாரா? புரிந்து கொண்டுதான் பேசாமல் மௌனம் சாதிக்கிறாரா? நான் படும் வேதனைகளை அவர் அறிந்து கொண்டிருக்கிறாரா? அல்லது அறிந்து கொண்டுதான் அறியாதவர்போல் நடித் துக் கொண்டிருக்கிறாரா?’ 

‘அவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறது, அவர் என்னை நேசிக்கிறார். என் உள்ளத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்? ஆமாம்; அதனாலேயே மாலை வேளைகளில் நான் அவர் வீட்டுக்குச் செல்லும் நேரங்களில் எனக்காகக் காத்திருக்கிறார். பாரதியே சொல்கிறாளே, “கொஞ்ச நாட்களாகத் தான் அப்பா மாலை நேரங்களில் வீட்டில் தங்கியிருக்கிறார்” என்று. அதற்கு என்ன காரணம்?’ எப்படி யெல்லாமோ பற் பல கோணங்களில் சிந்தித்துப் பார்த்தும், பார்வதியால், நிச்சயமான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. சேதுபதி உண்மையிலேயே அவளை நேசிக்கிறாரா இல்லையா என்பதை அவளால் உறுதிப்படுத்த முடியவில்லை. 

தன் எண்ணத்தை, ஆசையை வெளிப்படுத்த முடியாத நிலைமை ஒரு புறம், அவராகவே தன் நிலையைப் புரிந்து கொண்டும் மௌனம் சாதிக்கிறாரா என்ற சந்தேகம் இன்னொரு புறம். அவருக்குத் தன்னிடம் அன்பு இருக்கிறதா இல்லையா – என்பதை அறிந்து கொண்டுவிட வேண்டுமென்ற துடிப்போடு இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள் பார்வதி. அப்போது மணி ஐந்தரைகூட ஆகவில்லை. 

‘இந்த நிலையை நீடிக்க விடக்கூடாது. மனத்திற்குள்ளாகவே வைத்துப் புழுங்கவும் கூடாது. இன்று இதற்கு ஒரு முடிவு கண்டுவிட வேண்டும், ஒரு சிறு சோதனையின் மூலம் அவர் எண்ணத்தைப் புரிந்துகொண்டு விடவேண்டும்’ என்று தீர்மானித்துக் கொண்டாள். 

மணி ஒன்பதரைக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, வாசல் ஹாலுக்கு வந்து நின்றாள் பார்வதி. அங்கே பகவான் பரமஹம்சரும், தேவியாரும் சாந்தமாக, அமைதியாகக் காட்சி அளித்தனர். 

‘தேவி! என் மனத்துக்கு அமைதியைக் கொடு’ என்று வேண்டிக் கொண்டவளாய், அந்த இரு உருவங்களுக்கும் தலை குனிந்து வணங்கிவிட்டு காரில் போய் ஏறிக் கொண் டாள். 

கார் வாசல் காம்பவுண்டைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினான். கார் கல்லூரிக் காம்பவுண்ட் சுவரை நெருங்கித் திரும்பிய நேரத்தில் மிஸஸ் அகாதா குடையைப் பிடித்தவண்ணம் காலை விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருந்தாள். 

“குட்மார்னிங் மேடம்” என்று அவள் சற்று உடலைத் தாழ்த்திக் கூறியபோது, பார்வதியும் பதில் வணக்கம் தெரிவித்தாள். அப்போது மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம்! 

‘போர்ட்டிகோ’வில் போய் கார் நின்றது. அட்டெண்டர் ஆறுமுகம் வழக்கம்போல் காரின் கதவைத் திறக்க ஓடி வந்தான். 

பிரின்ஸிபால் பார்வதி காரைவிட்டு இறங்கித் தன்னுடைய அறைக்குள் போய் அமர்ந்து கொண்டாள். மின்சார விசிறி சுழலத் தொடங்கியது. 

மேஜையின் மீது ஏதேதோ பைல்கள் அவள் கையெழுத்துக்காகக் காத்துக் கிடந்தன. அவள் அவற்றைப் படித்தாள். சிலவற்றைப் புரிந்துகொண்டும், சிலவற்றைப் புரிந்து கொள்ளாமலும் கையெழுத்துகளை ஏனோதானோ வென்று போட்டுத் தீர்த்தாள். 

இரண்டில் ஒன்று தெரிந்துகொண்டு விடவேண்டும் என்ற துடிப்பில் உள்ளம் ஊசலாடிக் கொண்டிருந்தது. 

அவள் அறிவுக்குப் புலப்பட்ட ஒரே வழி அந்தச் சோதனைதான். அவருக்கு உண்மையில் தன்னிடம் அன்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு விடுவதற்கு அது ஒன்றுதான் வழி. 

‘இனி மாலை வேலைகளில் தங்கள் பங்களாவுக்கு என்னால் வரமுடியாது. அந்த நேரத்தில் எனக்குக் கல்லூரியில் நிறையப் பணிகள் இருப்பதால் பாரதியை இன்று முதல் என் வீட்டுக்கே அழைத்துச் சென்று டியூஷன் சொல்லித்தரப் போகிறேன்’ என்று ஒரு கடிதம் எழுதி ஆறுமுகத்திடம் சேதுபதியின் வீட்டிற்கு அதைக் கொடுத்தனுப்புவது என்பதே அதன் முடிவு. 

காகிதத்தை எடுத்து மிகச் சுருக்கமாகக் கடிதத்தை எழுதி முடித்தவள், ஒரு முறை அதைத் திரும்பப் படித்தும் பார்த்தாள். 

அந்தக் கணம், அந்தக் கடிதத்தை அவன் படித்துக் கொண்டிருந்த சமயம் அவள் தன்னையே சேதுபதியாகவே எண்ணிப் படிக்கும்போது, அவர் என்ன நினைப்பார் என்பதைக் கற்பனையில் ஊகித்துப் பார்த்தாள். 

‘பாவம்! திடீரென்று இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்க்கும்போது அவருக்கு மிகவும் ஏமாற்றமாயிருக்கும்! என்மீது நிஜமாகவே அவருக்கு அன்பு இருந்தால், இனி என்னைச் சந்திக்க முடியாதே என்பதை எண்ணி வருத்தப்படுவார். என்னைக் காண்பதிலும் என்னுடன் உரையாடிக் கொண்டிருப்பதிலும் விருப்பம் இருந்தால், அதற்கு இனி சந்தர்ப்பம் இல்லாமற் போய்விடுமே என்பதை நினைத்து ஏங்கிப் போவார். சாக்குப் போக்குச் சொல்லி டியூஷனைத் தம் வீட்டிலேயே வைத்துக் கொள்ளும்படி பாரதியிடம் சொல்லி அனுப்புவார். அல்லது தம் கையாலேயே கடிதம் எழுதி அனுப்புவார். அப்போது, அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்க்கும்போது என் உள்ளம் பரவசப்படும். சேதுபதி தன்னிடம் கொண்டுள்ள அந்தரங்கமான ஆசையை அறிந்து பெருமகிழ்ச்சி அடைவேன்.’ 

‘ஆறுமுகம்!’ என்று மணியடித்து அழைத்த பார்வதியின் குரலில் ஏதோ ஒரு புதுமை தொனித்தது. ஆறுமுகம் உடனே எதிரில் வந்து நின்றான். 

“இந்தா, இந்தக் கடிதத்தைக் கொண்டுபோய் சேதுபதி யின் வீட்டில் கொடுத்துவிட்டு வா” என்று உறையிட்டு முடிய அக்கடிதத்தை அவனிடம் கொடுத்தனுப்பினாள். 

ஆறுமுகம் திரும்பி வந்தபோது, மணி பன்னிரண்டு. “என்ன ஆறுமுகம் கடிதத்தைக் கொடுத்துவிட்டாயா?… சேதுபதி படித்துப் பார்த்தாரா?”… என்று ஆவல் தூண்டும் பரபரப்போடு விசாரித்தாள் பார்வதி. 

“அவர் வீட்டிலே இல்லீங்க.பத்துமணிக்கே ஆபீசுக்குப் போய்விட்டாராம். அந்த வீட்டிலே ஒரு அம்மா இருந்தாங்க. அவங்ககிட்டே கொடுத்துட்டு வந்துட்டேன்” என்றான் அவன். 

பார்வதியின் எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த சேதுபதிக்கு அலுவலகத்தில் எந்த வேலையும் ஓடவில்லை. பார்வதியைச் சந்திக்கும் நேரங்களில் நேரில் கேட்டுவிடுவது என்று எத்தனையோ முறை முடிவு செய்தும் முடியாமற் போய்விட்டது. நேரில் காணும்போது என்ன காரணத்தாலோ பேச முடிவதில்லை. எப்படிப் பேசுவது? என்னவென்று பேசுவது? 

தன்மீது பார்வதிக்கு உண்மையிலேயே ஆசையிருக்குமானால், அதை அறிந்துகொள்வதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. ‘இன்று முதல், மாலை நேரங்களில் தன்னால் வீட்டுக்கு வரமுடியாதென்றும் புதிய தொழிற்சாலை ஒன்று தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் இன்னும் சில மாதங்களுக்குத் தனக்கு ஓய்வே இருக்காதென்றும் பார்வதியிடம் கூறவேண்டும். அப்போது அவள் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாவாள். தன்னுடன் இனி பேசமுடியாது. தன்னைச் சந்திக்க முடியாது. என்று அறிய நேரும்போது மிகவும் வருத்தப்படுவாள். டெலிபோனில் இதை நான் கூறும்போது அவள் ஏதேனும் பதில் கூறுவாள். அப்போது அவள் குரல் உற்சாகம் இழந்து தொனிக்கும். அந்தக் குரலில் ஏமாற்றமும், வருத்தமும் கலந்து பிரதிபலிக்கும். அதிலிருந்து அவள் என் மீது கொண்டுள்ள ஆசையும் அக்கறையும் புலப்படும்’. 

இந்த முடிவுடன் டெலிபோனைக் கையில் எடுத்து பிரின்ஸிபால் பார்வதியுடன் பேசத் தொடங்கினார். 

‘ஹல்லோ!’ சேதுபதியின் கம்பீரமான குரல் டெலி போன் குழலில் ஒலித்தபோது பார்வதியின் உடல் ஒருமுறை சிலிர்த்தது. 

“சேதுபதி பேசுகிறேன்” என்று அவர் மேலும் தொடர்ந்தபோது, யாரை நினைத்து நினைத்து இதுகாறும் உருகிக் கொண்டிருந்தாளோ, யாருக்காக என்னென்ன எண்ணமிட்டுக் கொண்டிருந்தாளோ, யாருடைய குரலைக் கேட்க ஏங்கிக் கொண்டிருந்தாளோ, யாருடன் உரையாட ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாளோ, யாருடைய அந்தரங்கத்தை அறியக் காத்துக் கொண்டிருந்தாளோ அந்தக் குரலைக் கேட்டபோது, அவளுடைய உள்ளம் படபடவென்று அடித்துக்கொண்டது. தான் எழுதிய கடிதத்தைப் பார்த்து விட்டுத்தான், அதைப் பார்க்காதவர்போல் டெலிபோன் செய்திருக்கிறார் என்று எண்ணியவளாய்த் தன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு, மிக அமைதியாக, “நான் தான் பார்வதி பேசுகிறேன். வணக்கம்” என்றாள். 

‘வணக்கம்’ என்று பதிலுக்குக் கூறிய சேதுபதி. “ஒன்று மில்லை; இன்றுமுதல் எனக்கு அதிக வேலை இருக்கிறது. புதிய தொழிற்சாலை ஒன்று தொடங்கப் போகிறேன். ஆகையால், மாலை வேளைகளில் இனி ஓய்வு இருக்காது. வீட்டுக்குத் திரும்பி வர ஒன்பதாகிவிடும். பாரதியைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது. இதைச் சொல்வதற்குத்தான் கூப்பிட்டேன்.” 

“அப்படியா! ஆகட்டும்” பார்வதியின் குரலிலிருந்து சேதுபதியால் எதையும் ஊகிக்க முடியவில்லை. 

சேதுபதி அன்று மாலை வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மேஜையின் மீது பார்வதியின் கடிதம் அவருக்காகக் காத்திருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தவர், ‘பார்வதி என்னிடம் டெலிபோனில் பேசிய பிறகே, எனக்கு இக்கடிதத்தை எழுதியிருக்க வேண்டும். என்னிடம் அவளுக்குள்ள அன்பு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே டெலிபோனில் பேசுவதற்கு முன்பே கடிதம் எழுதியிருப்பது போல் எழுதியிருக்கிறாள்’ என்று எண்ணிக் கொண்டார். 

சேதுபதி தன் கடிதத்தைக் கண்டுவிட்டே டெலிபோனில் பேசியிருக்கிறார் என்று பார்வதி எண்ணிக் கொண்டதைப் போலவே, பார்வதியிடம் தான் டெலிபோனில் பேசிய பிறகே அவள் கடிதம் எழுதியிருக்கிறாள் என்று சேதுபதி எண்ணிக் கொண்டார். 

அன்று மாலை கல்லூரி விட்டதும், பார்வதி சேதுபதியின் வீட்டுக்குச் செல்லவில்லை. 

“பாரதி! இன்று முதல் உனக்கு என் வீட்டில்தான் டியூ ஷன். ஏறிக்கொள் வண்டியில்” என்றாள். 

ஒன்றுமே அறியாத பாரதி, மகிழ்ச்சியோடு காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். பிரின்ஸிபால் வீட்டில்தான் இனி டியூஷன் என்னும் சேதி பாரதிக்கு அளவிலாத மகிழ்ச்சியை அளித்தது. 

காரணம், ராஜாவை அங்கே தினமும் சந்திக்கலாம் அல்லவா? 

அன்று மணி ஏழரை வரை டியூஷன் நடந்தது. அந்த நேரத்தில் ராஜா குறுக்கும் நெடுக்குமாகப் பலமுறை அலைந்து கொண்டிருந்தான். 

பார்வதியின் மனத்தில் அமைதியில்லை. ‘அவசரப்பட்டு சேதுபதிக்குக் கடிதம் எழுதிவிட்டேனே; தினம் தினம் அவரைச் சந்திப்பதில், அவருடன் பேசுவதில், அடைந்த இன்பமும் ஆறுதலும் இனிக் கிட்டாதே! என்ன அசட்டுத்தனம்! எதற்காகக் கடிதம் எழுதினேன்? அவரை இனி எந்தக் காரணத்தை வைத்துக்கொண்டு சந்திப்பேன்?’ சேதுபதி தன்னைவிட்டே நழுவிச் சென்றுவிட்டது போலவும் வெகு தூரத்துக்கு அப்பால், இன்னும் அப்பால் அடிவானம் பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கும் எல்லை விரிப்பில் ஒரு சிறு புள்ளியைப்போல் அவர் நகர்ந்து கொண்டிருப்பது போலவும் தோன்றியது பார்வதிக்கு. 

‘டெலிபோனில் எதற்காகப் பேசினேன்? தினம் தினம் அவளைச் சந்தித்து உரையாடி மகிழும் இன்பத்தை நழுவ விட்டுவிட்டேனே! என்ன அசட்டுத்தனம்!’ தம் செய்கையை எண்ணித் தாமே வருத்தப்பட்ட சேதுபதிக்குப் பார்வதி தன்னைவிட்டு நழுவி விட்டது போலவும், தன்னால் நெருங்க முடியாத தொலைவில், அதற்கும் அப்பால் வான முகட்டின் எல்லையில் ஒரு சிறு புள்ளியாக மாறி நிற்பதைப் போலவும் தோன்றியது. 

மணி எட்டு இருக்கும்.

“பாரதி நீ வீட்டுக்குப் போகலாம். எனக்கு உடம்பு சரியில்லை. மற்ற பாடங்களை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்…ராஜா! பாரதியை அவள் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வா” என்றாள் பார்வதி. 

அந்த வார்த்தையை எதிர்பார்த்துக் காத்திருந்த ராஜா வுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சினிமா டியூன் ஒன்றைச் சீட்டியடித்துத் தன் உற்சாகத்தை வெளிப்படுத்த எண்ணினான். ஆயினும் உற்சாகத்தை அடக்கிக்கொண்டு, ஓடிப்போய்க் காரின் கதவைத் திறந்து பாரதியை அதில் ஏறிக்கொள்ளச் சொன்னான். 

கார் நகர்ந்து, வாசல் காம்பவுண்டைத் தாண்டி வலது பக்கம் திரும்பியது. அந்தப் பக்கம்தான் சேதுபதியின் வீடு இருந்தது. கடற்கரை இருந்த திசையும் அதுதான்.

– தொடரும்…

– விசிறி வாழை, 12வது பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *