Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அம்மாவைத் தேடி…

 

மழை மாதத்தின் பின் மதியம். மேகங் கள் வெண்புகையாக வானத்துக்கும் பூமிக்குமாக நிரம்பித் ததும்பி இருந்தன. விமானத்தின் கண்ணாடி சன்னல் வழியே, அரபிக் கடலின் நுரை விளிம்புடன் நீண்டு செல்லும் மெரினாவின் கடற்கரை தொலைவில் தெரிகிறது.

நெளிநெளியாக விரிந்த சாம்பல் நிற நீர்ப் பரப்பில் உரசி, உடன் வருகிறது சூரியன். கண்கள் கூசும் உலோகப் பரப்பாக விரிந்து கிடந்தது கடல்.

இத்தனை உயரத்தில் அம்மாவின் நினைவு வந்தது ஆச்சர்யமாக இருந்தது. மனதின் ஆழத்தில் இருந்து விதவிதமான அம்மாவின் முகங்கள் நினைவுக்கு வந்தன.

சன்னலில் கடல் மறைந்து இப்போது வானம். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை வெண்மை. தொலைவில் சூரியன் காயமாகக் கசிந்துகொண்டு இருந்தது. இந்தப் பயணம்கூட அம்மாவின் முகங்களைத் தேடிக் கிளம்பிய பயணம்தான். ஓர் ஒளிப்பதிவாளனாக திரைப்படத்தில் பதிவு செய்த பாடலுக்கு படப்பிடிப்பு நடத்துவதுதான் வழக்கம். ஆனால், பதிவு செய்த ஒரு பாடலுக்கு முதன் முறையாக நிழற்படங்கள் எடுக்க வேண்டும். அதுவும் விதவிதமாக அம் மாவின் முகங்களை. முகங்கள் வித விதமாக இருந்தாலும், உலகத்தில் அம்மா ஒன்றுதானே!

மதுரை வந்து இறங்கியதும் தரை வழிப் பயணம். திரும்பவும் சன்னல் ஓர இருக்கை. கடந்து செல்லும் மரங்கள். தொலைவில் தெரியும் வானம். மதுரையில் இருந்து தேனி வரை வழி யில் கடந்து செல்லும் கிராமங்கள். படப்பிடிப்புக்கு இங்கு வந்த ஏப்ரல் மாதத்தில் கோடை காலத்தின் வெயில் எரிந்துகொண்டு இருந்தது. இப்போது சாலையின் இரு பக்கமும் பச்சைக் கம் பளம். நிலக் காட்சிகள் முழுதுமாக மாறி இருந்தன.

சன்னலோரப் பயணம் எங்கு நிகழ்ந்தாலும் அது நினைவுகளுடன் தொடர்பு உடையதாகவே இருக்கிறது. பெரும்பாலும் சொந்த ஊருக்குத் திரும்புகிற சாயல்களுடன் இருக்கிறது. சென்ற வரு டம் கடும் பனிக் காலத்தில் ஜெர்மனி யின் டுசுல்டஃப் நகரத்தில் இருந்து பீலஃபில்ட் செல்லும் வழியில் ஒரு சன்னலோரப் பயணம். பனியில் கறுத்து இலை உதிர்த்த பெயர் தெரியாத மரங்கள் கடந்து செல்கின்றன. எனினும் அது அம்மாவைப் பார்க்க சென்னையில் இருந்து சிவகங்கை திரும்புகிற சன்னல் காட்சிகளின் சாயலுடன் இருந்தது.

தேனி செல்லும் நெடுஞ்சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேல் மேகங்கள் நகர்ந்துகொண்டு இருந்தன. அந்த அதிகாலையில் மழை பெய்துகொண்டு இருந்தது. இரண்டு டிஜிட்டல் கேமராக்கள் உடன் இருந்தன. ‘மக்களைப் படம் எடுக்கும் ஒரு நிழற்படக் கலைஞன், ஒரு வேட்டைக்காரனைப்போல இருக்க வேண்டும்’ என்ற பிரஸ் ஸானின் மேற்கோள் நினைவில் இருந்து கொண்டே இருந்தது. வேட்கையுடன் காத்திருக்கும் ஒரு நிழற்படக் கலை ஞன் முன், ஒரு நல்ல நிழற்படம் ஒரு கணம் மட்டுமே தோன்றி மறைகிறது. அந்த மாய கணத்தினைக் கண் இமைக்கும் நேரத்தில் தவற விட்டால், பிறகு அந்த தரிசனம் தோன்றுவதே இல்லை.

மண் சாலை. தலையில் இருக்கும் சுருமாட்டின் மேல் தூக்குச் சட்டி. ஓர் அம்மா கையில் பையனைப் பிடித்துக்கொண்டு, ஒற்றையடிப் பாதையில் தனியே நடந்து செல்கிறாள். முகத்தில் சோகம் கப்ப, ஒரு தாய் தோளில் மண்வெட்டியுடன் சாலையோரம் வயல் வேலைக்குச் செல்கிறாள். கைக்குழந்தை வெயிலில் விளையாடிக்கொண்டு இருக்க, ஓர் அம்மா செங்கல் அறுக்கிறாள்.

வயதான ஒரு தாய் தேநீர் நிலையத் தின் வெளியே ஈரமான தரையில் மணப் பலகையில் அமர்ந்து, இட்லி அவிக்கிறாள். கருவேல மரத்தில் குழந்தைக்குத் தொட்டில் கட்டி விட்டு, உச்சி வெயிலில் ஒரு தாய் கல் உடைக்கிறாள்.

‘ஆத்தா, ஒரு போட்டோ எடுத்துக்கலாமா…’

‘எடுத்துக்க… புள்ள குட்டிகள காப்பாத்த எப்படி எல்லாம் கருமாயப்படுறோம்னு டி.வி-யில போட்டுக் காட்டு… அதுக்குத்தானே எடுக்கிற’

‘இல்லல்ல…’

‘புடிச்சு, கவர்மென்ட்டுல போய்க் காட்டு… லட்சக்கணக்குல, கோடிக் கணக்குல அடிக்கிறாய்ங்க. ஆனா, ஒரு லோனு கேட்டா தர மாட்டேய்ங் கிறாய்ங்க…’

டிஜிட்டல் கேமராவின் செவ்வகத்தில் விதவிதமாக உறையும் அம்மாவின் முகங்கள்.

‘வைகை அணை 6 கி.மீ’ என்ற மைல் கல் இருக்கும் வனாந்தரத்தில், ஒரு தாய் தலை முழுக்க விறகுச் சுமையோடு மாடு மேய்க்கிறாள். செக்கானூரணி பேருந்து நிலையத்தில் ஒரு தாய் பூ கட்டுகிறாள்.

இன்னொரு தாய் அடிவானத்துக்குப் போகும் சாலையில் தனது சோகத்தை ஆடுகளிடம் பேசிக்கொண்டே நடக்கிறாள். இன்னொரு தாய் களை எடுத்து முடித்து, வரப்பில் அமர்ந்து கஞ்சியையும் மொச்சைப் பயிறு வெஞ்சனத்தையும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாள்.

‘அந்தாக்கில பேச்சிய கஞ்சி குடிச்ச மாதிரி எடுங்கண்ணே… சிரிப்பைப் பாரு கௌவிக்கு.’

‘அட இருப்பா…’ என்று முந்தானையையும் கால் சேலையையும் வெட்கத்துடன் இழுத்துவிட்டுக்கொள்கிறது பாட்டி.

‘போட்டோ புடுச்சு என்னா பண்ணப்போறி யாம்?’

‘சும்மாதான்… வாரேனத்தோவ்…’

‘பொசுக்குனு எடுத்துட்ட. அம்புட்டுத் தானா?’

‘அம்புட்டுதான்…’ பாட்டிக்குத் தெரியாமல் நான் படம் எடுத்துக்கொண்டே இருக்கிறேன்.

‘எங்கே இருந்து வாரவன்?’

‘மெட்ராஸ்ல இருந்து…’

‘அம்புட்டு தூரத்துல இருந்தா வந்திருக்க… உக்காருய்யா…’

‘இருக்கட்டும்த்தா… இது உங்க வயலா?’

‘ம்க்கும்… கூலி வேலைதான்யா…’

‘பிள்ளைக..?’

பாட்டி நிமிர்ந்து என்னைப் பார்க்கிறது.

‘பூராம் கட்டிக் குடுத்து, பட்டணத்துப் பக்கம் போயிருச்சுக…’ – பாட்டி சாப்பிடுவதை நிறுத்தி எங்கோ தொலைவில் பார்க்கிறது. மௌனத்தில் காட்டுக் குருவிகளின் சத்தம்.

‘வர்றேன்த்தா…’

‘இருய்யா… ரெண்டு வாய் கஞ்சி குடிச் சிட்டுப் போ…’

கண் கலங்குகிறது. தன்னைத் தேடி யார் வந்தாலும் அம்மாவுக்கு அது பிள்ளைதான். முகம் மாறினாலும் அம்மா ஒன்றுதானே.

கலங்கும் கண்களைத் துடைத்துக்கொண்டே வரப்பில் நடந்து வந்து காரில் அமர்ந்தேன். வந்திருக்கும் ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தின் கவிஞர் வைரமுத்துவின் பாடல் தொடர்ந்து பாடிக்கொண்டே இருக்கிறது.

‘உழவுக் காட்டிலே வெதை வெதப்பா…

ஓணான் கரட்டுல கூழ் குடிப்பா…

ஆவாரங் குழையில கை தொடப்பா…

பாவமப்பா’ – பாடலின் இசையும் பார்க் கிற யதார்த்தமும் மனதை அறுக்கிறது. இசை யும் காட்சியும் சரியாகப் பொருந்துகிறகணத் தில் உடல் சிலிர்க்கவைக்கும் மின்சாரம் இருக்கிறது.

விதவிதமான தாய் முகங்கள். கோயில் அருகே இருக்கும் வேப்ப மர நிழலில்அமர்ந்து, ஒரு தாய் தனக்குத்தானே பேசிக்கொண்டு ஊமத்தஞ் செடிகளை வெட்டிக்கொண்டு இருக்கிறார். வயதில் முதிர்ந்த ஓர் அம்மா, யாரும் இல்லாத வீட்டின் திண்ணையில் உட் கார்ந்து காலியான கிராமத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். குழந்தைகளின் வழியே இந்தக் கிராமத்தை உருவாக்கியவர் தனிமையில் இருக்கிறார். கிராமம் அமைதியாக இருக்கிறது. வெயில் கொளுத்தும் காலியான வீதிகளில் தெரு நாய்கள் ஓடுகின்றன.

நாங்கள் படம் பிடித்த ஒரு மண் வீடு மழையில் இடிந்து தரை மட்டமாகக்கிடந் தது. கோடையில் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை செம்மண் காடாக இருந்த நிலக் காட்சிகள், பச்சை நிறத்துக்கு மாறிவிட்டன. படத்தில் காதல் சின்னமாக இருந்த வேல மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. பருவம் எத்தனைவிதமான மாற்றங்களை நிகழ்த்துகிறது. இரவும் பகலுமாகப் படம் எடுத்த அதே இடத்துக்கு, ஆறு மாதங்கள் கழித்து, நண்பன் சீனுராமசாமியும் நானும் திரும்பவும் வந்து இருக்கிறோம். ஜெனரேட்டரின் சத்தம், படப்பிடிப்பின் இரைச்சல் எதுவும் இல்லாமல், இந்த அத்துவான வெளியில் தனியாக நிற்பது ஓர் ஆன்ம அனுபவமாக இருந்தது.

இரண்டு நாட்களாக நிழற்படம் எடுத்து அறைக்குத் திரும்பியதும் மிகவும் அயர்ச்சியாக இருந்தது. வயல் வேலை செய்வதைவிடப் படம் எடுப்பது ஒன்றும் பெரிய உடல் உழைப்பு இல்லை. என்றாலும், ஏன் இந்த மனச் சோர்வு? ஐ.நா. சபையின் நிழற்படக் கலைஞர் ஜான் ஐசக் கருணாகரன், தொடர்ந்து போர்க் காட்சி களைப் படம் எடுத்ததால், அவர் மன நிலை பிறழ்ந்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஒரு சூரியகாந்திப் பூவைப் படம் எடுத்ததுமே அவர் மனநிலை சரி ஆகிறது. மனிதனின் வீழ்ச்சிகளையும் அழிவுகளையும் பார்த்துச் சோர்ந்த அவரது ஆழ் மனம், இயற்கையின் எளிய படைப்பான சூரியகாந்திப் பூவின் மூலம் சரியாகிறது.

அதுபோலப் பசியோடு இருக்கும் கழுகின் அருகே இருக்கும் குழந்தையைப் படம் எடுத்து புலிட்சர் விருது வாங்கினார் கெவின் கார்ட்டர். அந்தக் குழந்தையைக் காப்பாற்றாமல் அதைப் படம் எடுத்தது அவரது சுயநலம் என்று விமர்சனங்களும் அவரது மன சாட்சியும் கேள்விகளை எழுப்பிய போது… தற்கொலை செய்து கொண்டார்.

‘ஒரு சொல் கொல்லும். ஒரு சொல் வெல்லும்’ என்பது நம் பழமொழி. ஒரு சொல்லே கொல்லும் என்றால், ஆயிரம் சொற்களுக்கு இணையாகச் சொல்லப்படும் ஒரு நிழற்படம் என்ன எல்லாம் செய்யும்? ஜான் ஐசக்கும், கெவின் கார்ட்டருமே உதாரணம்.

ஒரு நிழற்படம்… பார்க்கிறவரைப் பாதிக்கிறது என்றால், அது எடுத்தவரை என்னவெல்லாம் செய்யும்? சுனாமி ஏற்படுத்திய அழிவுகளை நிழற்படம் எடுத்த நண்பர் நெடுநாட்கள் காய்ச்சலில் இருந்தார். இலங்கை இனப் படுகொலை குறித்து வெளியாகும் காட்சிகளே நம்மைப் பாதிக்கிறது என்றால், அதை நேரடியாகப் பார்த்துப் பதிவு செய்த கலைஞனின் மன நிலை என்னவாக இருக்கும்?

கடந்த இரண்டு நாட்களாக சோகமும், ஏழ்மை

யும், அப்பாவித்தனமான புன்னகையுமாகக் கிராமங்களில் எடுத்த விதவிதமான தாய்களின் முகங்கள் காட்சியாக மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு முகத்திலும் சொல்லப்படாத நூறு கதைகள். ஒரு முகம் என்பது வெறும் முகம் மட்டுமா? அது துவங்கிவைக்கும் நினைவுகள் எத்தனை?

அப்போது என்னிடம் ஜெனித் என்கிற ஒரு ரஷ்ய கேமரா இருந்தது. அதை வைத்து அம்மாவைத் தெரியாமல் படம் எடுக்க முயற்சிப்பேன். ஒரு நல்ல உருவப் படம் என்பது படத்தில் இருப்பவரின் குணாதிசயத்தைச் சொல்ல வேண்டும் என்பதால், எப்போதும் ஓய்வு இல்லாமல் வேலை செய்து கொண்டு இருக்கிற அம்மாவை அந்த நிலையில் தெரியாமல் படம் எடுப்பதுதான் சரியாக இருக்கும். அது எனது பயிற்சிக் காலம் என்பதால், குவியத்தைச் சரி செய்யுமுன் அம்மா வுக்கு நான் படம் எடுப்பது தெரிந்து விடும். ‘வேணாம்ப்பா…’ என்ற புன்னகையை மீற முடியாது.

ஓர் ஆசிரியையாக பள்ளிக் குழந்தை களுடன் அம்மாவை நிழற்படம் எடுக்கிற எண்ணம் முதன்முதலாக வந்தபோது என்னிடம் கேமரா இல்லை. நிழற்படம் என்பது பட்டு சேலை அணிந்து, நகைகளுடன் எடுக்கிற ஒன்று என்கிற எண்ணம் அம்மா விடம் ஆழமாக இருந்ததால்… பணி ஓய்வு அடைந்த பின்னும் ஓர் இயல்பான போட்டோவைக் கடைசி வரை நான் எடுக்கவே இல்லை.

பதிவுசெய்த தருணங்களைவிட, தவறிய கணங்களே வலிமையானவை. ஒரு நிழற்படக் கலைஞனின் மனதில் எடுத்த நிழற் படங்களைவிட, எடுக்கத் தவறிய படமே ஒரு விதமான ஏக்கத்துடன் அசைந்துகொண்டே இருக்கிறது. அதி நவீனப் படக் கருவிகள் இப்போது என் கைவசம் இருக்கின்றன. மிகத் தொலைவில் இருப்பதையும் அருகில் எடுக்கிற லென்ஸ்கள் இருக்கின்றன. ஆனால், எடுக்க நினைக்கிற முகம் லென்ஸ்களுக்குச் சிக்காத தொலைவில் நினைவில் மட்டுமே இருக்கிறது.

மழை பெய்துகொண்டு இருந்தது. சென்னைக்கு விமானம் புறப்படத் தயாராக இருந்தது. எனக்கான இருக்கையில் அமர்ந்தேன். இரண்டு நாளில் கேமராவின் செவ்வகத்துக்குள் பார்த்த விதவிதமான அம்மாக்கள். நிழற்படங்கள் சலனம்கொண்டு மனதுக்குள் ஓடத் துவங்கின. அந்த முகங்கள் அனைத்திலும் பொதுவான ஒன்றுதான் இருந்தது. தனிமையின் சோகம். பெற்ற குழந்தைகள் அருகில் இருக்கும் போதுதானே அம்மா. இல்லாதபோது? அரும்பாடுபட்டு வளர்த்த குழந்தைகள் எல்லாம் தன்னை விட்டுவிட்டுத் தொலை தூரத்துக்குப் போக, அம்மா தனிமையில் என்ன செய்வார்?

‘தி ரோட் ஹோம்’ திரைப்படத்தில் தறி நெய்கிற அம்மா, ‘சினிமா பேரடைஸோ’வில் பூத் தையல் செய்கிற அம்மா, ‘டோக்கியோ ஸ்டோரி’யில் காத்திருக்கிற அம்மா. இதெல்லாம் சோகம் என்றால், நிஜத்தில் தூக்குத் தண்டனைக் கைதியாக இருக்கிற பேரறிவாளனின் விடுதலைக்காகக் காத்திருக்கும் அம்மாவின் தனிமை எத்தனை கொடுமை யானது?

உலகத்தின் எந்த மூலையாக இருந்தாலும், தனது குழந்தையின் வரவுக்காக ஓர் அம்மா காத்திருக்கிறார். அறியாமல் அழுகிறார். பெற்ற பிள்ளைக்காக ஒரு தாய் தனது முதுமைப் பருவத்தில் காத்திருப்பது எத்தனை சோகம்? இதெல்லாம் புரிந்து அடிக்கடி ஊருக்குப் போக நினைக்கிறேன். ஆனால், காத்திருப்பவர் அங்கு இல்லை.

பெய்யும் மழையில் சத்தத்துடன் விமானம் மேலே எழுகிறது. இருளில் நகரத்தின் விளக்குகள் கலங்கலாகத் தெரிகின்றன. இறக்கையில் விட்டு விட்டு ஒளிரும் நீல விளக்கொளியில் சன்னலில் மழை நீர் பக்கவாட்டில் தாரையாக வழிந்துகொண்டு இருக்கிறது. சன்னல் கண்ணாடியில் கை வைக்கிறேன். மறு பக்கத்தில் துடைக்க முடியாமல் வழிந்துகொண்டே இருக்கிறது நீர். அம்மாவின் கண்ணீர்!

- ஜனவரி 2011 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)