பிராயச்சித்தம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2023
பார்வையிட்டோர்: 2,639 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கார் வந்து வாசலில் நின்றது. 

வெளி வராந்தாவில் தயாராக இருந்த பெட்டி படுக்கை களை எடுத்துக் கொண்டுபோய் காரில் ஏறினான் தர்வான். 

“கற்பகம்!… கற்பகம்!… சீக்கிரம் !…” 

கண்களைத் துடைத்துக் கொண்டே அங்கு வந்தாள் கற்பகம். 

விசுவம் அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு, “அசடாக இருக்கிறாயே” என்றான். 

“ஆமாம். அசடானதினாலேதான் உங்களை…!” மேலே பேச முடியாமல் கற்பகத்துக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. நீர் நிரம்பிய கண்களுடன் கணவன் முகத் தைப் பார்த்துக் கொண்டு நின்றாள். 

விசுவத்திற்குக் கொஞ்சம் கோபம் வந்தது. இருந்தாலும் புறப்படுகிற தருணத்தில் அவளை கடிந்துகொள்ள அவ னுக்கு மனம் வரவில்லை. பரிவு மிக்க குரலில், “உன் எண்ண மும், பயமும் ரொம்ப முட்டாள் தனமானது கற்பகம். இதை உனக்கு ஆயிரம் தடவை தெளிவு படுத்திவிட்டேன். இப்பவும் சொல்லிவிட்டுப் போகிறேன். சங்கர சிரௌதிகள் பரம்பரைக்கு நாக்கு ஒன்றுதான்! நீ நினைக்கிற மாதிரி மதி மயங்கிப் படுகுழியில் விழமாட்டேன். கண்களைத் துடைத்துக் கொள். தைரியமாக, சந்தோஷமாக எனக்கு உத்தரவு கொடு” என்று கூறி அவளைத் தேற்றினான். 

தன் கையிலிருந்த விபூதியை அவன் நெற்றியிலிட்டு “என்னவோ, அபய ஹஸ்தத்தோடு அதோ உட்கார்ந்திருக் கிறானே பழனி மலையான் – அவன்தான் உங்கள் பக்கத்தி லிருந்து காப்பாத்தணும். போயிட்டு வாங்கோ, வருஷப் பிறப்புக்குக் கண்டிப்பாய் ஆத்துக்கு வந்துடணும், ஆமாம்!” என்று கடைசியில் ஆக்ஞையிட்டு உத்தரவு கொடுத்தாள் கற்பகம். 

“நான்தான் வரேன்னேனே…வந்துடறேன். குழந்தை யைக் கவனிச்சுக்கோ பத்திரம்… வரட்டுமா!” 

மௌனமாகத் தலையசைத்தாள் கற்பகம். 


அஞ்சனா பில்ம்ஸாரின் “வாஸவதத்தா” என்ற படத்திற்கு வசனமெழுதவென்று விசுவகுமார் சென்னைக்கு வந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. 

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு அவன் படித்துக் கொண்டிருந்த சென்னையாக இப்பொழுது இல்லை ! 

ஒரே நாகரிக மயம். சினிமா ஸ்டைல் ! தாம்பத்ய ஜோடிகளும், யுவதிகளும்,நாகரிக உடைகளுடன் நடமாடும் காட்சி அவனை நிலைதடுமாறச் செய்தது! 

கிராமத்துப் பசும்புல் வெளியில்கண்ட கற்பனையும் எழுத்தும், பட்டண வாசத்துச் சூழ்நிலையில் அவனால் காண இயலவில்லை! 

போதாக் குறைக்கு படத்தின் கதாநாயகி வாஸவதத்தாவாக நடிக்கவிருக்கும் பூர்ணாதேவியின் சிநேகமும் அவளுடைய தோற்றமும் அவனைப் பித்தனாக்கி விட்டன 

“பூர்ணா! நீதான் அந்த பாரதி வர்ணித்த புதுமைப் பெண்! அழகு, குணம், படிப்பு, ஆராய்ச்சி, சுயநல தியாகம் இவ்வளவும் உன் பெயரின் அழகுக்கு அழகு செய்கின்றன! உன்னுடன் பேசுவதே மனிதன் கற்க வேண்டிய ஒரு கலை! 

“கற்பகமும் இருக்கிறாளே – ஒரு பெண் என்று : ஒரு நாளாவது, சிரிப்பும் விளையாட்டும், ஸல்லாபமுமாக இருந்த துண்டா அவளுடன்? பொழுது விடிந்ததிலிருந்து இரவு பத்து மணி வரைக்கும் சமையலறையில் தான் அவளைப் பார்க்க லாம்! சை!” இந்த மாதிரி எண்ணங்கள் அவனைத் துருவின ! கற்பகத்தையும், பூர்ணாவையும் மறுபடி மறுபடி ஒத்திட்டுப் பார்த்தது அவன் உள்ளம். 

பாவம்! கிராமியப் பண்பில் வளர்ந்த கற்பகத்திற்குக் காதலைப்பற்றி என்ன தெரியும் ? ‘தானடங்க தன் குலமடங்க’ என்று, மட்டு மரியாதையாக, கணவனையே தெய்வமாக மதித்து உபசரிக்கவும், போர்த்தின முதுகு திறக்காமலும், குனிந்த தலை நிமிராமலும் சாதுவாய் இருப்பாள்! இதுதான், கற்பகத்திற்கு அவளுடைய பாட்டி சொல்லிக் கொடுத்த நாகரிகம்! 

இந்த நாகரிகம், கிராமத்திலே இருந்த போது விசுவத்திற்கும் நியாயமாகவேதான் பட்டது! 

பட்டணம் வந்து, படக் கதை எழுத காதலையும் கலையை யும் வர்ணிக்க முயன்று, சுபாவமே நடிப்போ, என்று மலைக் பூர்ணாவின் கண்வீச்சும், கக்கூடிய சாதுர்யக்காரியான பேச்சும், இடையிடையில் மோத, தெருவிலும், ‘செட்’டிலும் காணும் யுவதிகளுடைய நவநாகரிக அலங்காரங்களும் அவ னுடைய உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பிவிட்டன. 

இவற்றிற்கு முன், வீட்டைவிட்டு புறப்படும் சமயம் மனைவிக்குக் கொடுத்த வாக்குறுதியும், நாணயமும் காற்றில் பறந்தோடின! இப்பொழுது பழைய விசுவமல்ல அவன் ! 

நாளாக ஆக, பூர்ணாவின் சிநேகம் காதலாகக் கனிய ஆரம்பித்தது. வசனகர்த்தா விசுவ குமாரும், ஹிரோயின் பூர்ணா தேவியும் இன்ப சிகரத்தில் உலவும் பருவம் இது! 

மற்றுமிரண்டு மாதங்கள் உருண்டன. 


மணி பதினொன்று! தோளில் தோற்பை ஊசலாட, விசுவகுமார் இருந்த அறையின் கதவுப்புறமிருந்த திரையைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் பூர்ணாதேவி. 

சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தான் குமார். 

பூர்ணா அதைப்பிடுங்கி வீசியெறிந்துவிட்டு, முறைப்புடன், “மறுமுறை சிகரெட்டுடன் உங்களைப் பார்த்தேன்…” என்றாள். 

”ஊம்! என்ன செய்து விடுவாய்!” 

“அது அப்புறம் தெரிகிறது…சட்! என்ன நாற்றம்!…சை!” 

“சட், சீ. தூ ! என்று கொண்டு இதென்ன வேண்டியிருக்கிறது? எட்டப் போய் உட்காரேன் !” 

“சொல்ல மாட்டீர்களா என்ன……? இதென்னது கடிதம் சுக்கு நூறாகிக்கிடக்கிறதே!…” என்று அந்தத் துண்டுகளை யெல்லாம் பொறுக்கினாள் பூர்ணா. 

“இதோ பார்- இங்கே துண்டு கிடக்கிறது; எல்லாவற் றையும் பொறுக்கி, பிணைத்துப் படி!” 

“படிக்கத்தான் போகிறேன்” என்று அனைத்தையும் சிரமப்பட்டு ஜோடித்துப் படித்தாள் பூர்ணா. 

திக்கென்றது அவளுக்கு. ஒரு தடவைக்கு நாலு தடவையாகப் படித்துப் பார்த்தாள். மின்வெட்டைப்போல பழைய நினைவொன்று அவள் மனவெளியில் பளிச்சிட்டது! 

“ஊஹும், நாடகக்காரி என்றால் அவ்வளவு ஏளனமாடீ உனக்கு! அவள் நகத்தழகு காணுவாயா நீ?” என்ற இடிக்குரல் இப்பொழுதுதான் உறுமுவது போல பிரமை ஏற்பட்டது அவளுக்கு! 

பூர்ணாவின் மருட்சியையும் முக விகாரத்தையும் கண்டு மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தான் விசுவம். 

பூர்ணாவின் நினைவு அவள் கணவனுடன் குடும்பம் நடத்திய காலத்திற்குச் சென்று கொந்தளித்தது. 

அழகின் ஆலயமாகவும், அறிவின் உறைவிடமாகவும் இருந்து, கணவனிடம் பரிபூரண அன்பு வைத்து அவனை ஆராதித்ததற்கு அவன் அவளிடம் காண்பித்த அருமை அது! 

தனது தகைமைக்குச் சிறிதும் ஒவ்வாத கணவனாக இருந்தும், தனது நாதன் என்ற மகத்துவத்திற்குப் பணிந்து கால்களைப் பற்றிக் கொண்டு மன்றாடிய பொழுது-தாலி கட்டிய மனைவியை உதைத்துத் தள்ளிவிட்டு ஓடிய கிராதகனிடம் இருப்பதா இன்னும்? 

“வாழ்வா அது? இனி அவன் என் கணவனல்ல; சத்துரு. சத்துருவைப் பழி தீர்க்க வேண்டும். வஞ்சம் தீர்க்க வேண்டும். தீர்த்தே ஆக வேண்டும். அதற்காக நான் எந்த நரகத்தில் விழவேண்டுமாயினும் தயார்” என்றேன். 

“இதோ!.. பழி தீர்த்து விட்டேன். ஆனால்…ஐயோ…ஆம்…இன்னும் சாவகாசம் இருக்கிறது…பிராயச்சித்தம் செய்ய…” 

உதறிக்கொண்டு எழுந்து, வராந்தா ஓரம் வந்து, “ஸலாம் ?” என்று கூப்பிட்டாள். 

காரில் உட்கார்ந்திருந்த டிரைவர் எழுந்து பூர்ணாவின் முன்பு வந்து நின்றான். 

“தஞ்சாவூருக்குப் போகவேண்டும். பெட்ரோல் இருக்கிறதா, வண்டியில்?” 

“கொஞ்சம் வேண்டியிருக்கும்.” 

“உங்களிடம் இருக்கிறதா குமார்?” 

இருக்கிறது என்ற அர்த்தத்தில் தலையை அசைத்தான் குமார். 

“வேண்டியதை எடுத்துக்கொள்” என்று டிரைவருக்குக் கூறிவிட்டு, விசுவத்தின் பக்கம் திரும்பி, “புறப்படுங்கள், குமார்!” என்றாள். 

“எங்கே?” 

“இறங்கும் போது தெரிகிறது” என்றாள் பூர்ணா. 

குமாரையும் பூர்ணாவையும் ஏற்றிக் கொண்டு கார் தஞ்சாவூரை நோக்கிப் பறந்தது. 


மற்றும் மூன்று மாதங்கள் ஓடின. 

“வாஸவதத்தா” அமோக வரவேற்புடன் எங்கு கண்டாலும் உலவிக் கொண்டிருந்தாள். 

பூர்ணாவின் புகழ் சினிமா உலகை உலுப்பி எடுத்தது ! பூர்ணாவைத் தேடித் திரிந்துகொண்டு படமுதலாளிகள் திண்டாடினார்கள். 

அவளை எங்கேயும் காணமுடியவில்லை அவர்களால்.

“பூர்ணா”

“என்ன?”

“இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த அக்ஞாதத்தில் ஓய்வெடுத்துக்கொள்ளப் போகிறாய்?” 

“ஏன்?” 

“என்ன ‘ஏன்’ என்கிறாய்? இந்தச் சிறை வாசத்திற்கு ஒய்வு என்று பேரோ?” 

“என்ன செய்யச் சொல்லுகிறீர்கள்?” 

“ஒன்றும் செய்யவேண்டாம். தேடி வருபவர்களுக்கு என்னால் இனி ஜவாப் சொல்ல முடியாது. ஆமாம்!” 

ஒரு நிமிஷம் பொறுத்து சாவதானமாக, “கவலைப் படாதீர்கள். நாளை முதல் நீங்கள் அந்த சள்ளைப்பட வேண்டி வராது. கீழேபோய் கொஞ்சம் காப்பி அனுப்புகிறீர்களா சூடாக…” 

“உபரி என்ன வேண்டும்?” 

“உபரி வேண்டாம். காப்பி மட்டும் – சூடாக இருக்கட்டும்.” 

“நல்ல காப்பி, நல்ல சூடு!” என்று கூறிக் கொண்டே திரும்பினான் கேலியாக. 

ஐந்து நிமிஷத்தில் காப்பி வந்தது. அதை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டாள். 

கொதிக்கக் கொதிக்க சொட்டுச் சொட்டாக டம்ளர் காப்பியையும் சாப்பிட்டுவிட்டு ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டாள். 

எழுந்து அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவினாள். சரி, மூளை ஒரு தீர்மானத்திற்கு ஒத்து வந்து விட்டது! “காசும் பணமும், உணவும், படுக்கையும் பார்த்தாகிவிட்டது. நீரில் கிடந்த சோற்றை அரித்தும் தின்றாயிற்று – நெய்யும், பாலும், உண்டாயிற்று, போக போக்யங்களை மென்று விழுங்கி துப்பியும் ஆயிற்று! 

“இந்த நிமிஷம் எனக்கு எதன்மேலும் பற்றுதலில்லை. என் எதிர்கால ஸ்மரணையில் தெய்வாம்சமாக விளங்கி என்னை ஆற்றுபவள் கற்பகம் என்ற ஒருத்திதான். 

“குமார் மூன்று மாதமாகப் பிரயத்தனம் செய்து கன் னெஞ்சுடன் உங்கள் மீது வைத்த பிரேமையை எனது ஆசைகளை – இன்பக் கோரிக்கைகளை – தகர்த்து எறிந்துவிட்டேன். 

“கற்பகம், உத்தம ஸ்திரீ எனது மதிமயக்கத்தால், நான் பட்ட ஆவிக் கொதிப்பையே உனக்கும் உண்டாக்கி விட்டேன். இனி அந்தத் தவறைச் செய்யக் கூடாது என்ற உறுதிக்கு வந்துவிட்டேன். எப்பொழுது அந்த பிரதிக்ஞை செய்து விட்டேனோ அப்பொழுது அந்த வீட்டில் நானிருப்பது கூடாது. என் காதல் தேவனை… சை, துர் எண்ணம்!… குமார்… ஏன்… இனிய என் மனதை, சை, என்ன துஷ்ட எண்ணம். நான் நிமிர்ந்து பாராதிருந்தால்…இத்தனை கால மும் இருந்தது போல…? கொடுத்து வைத்தால்தானே…? சரி…… இனி அதைப் பற்றிப் புலம்பி என்ன லாபம்! ஏதோ, காதல், உண்மை அன்பு… இவற்றின் மாய் ஜாலங்களில் மனதைப் பறிகொடுத்தேன்…பூமிதேவி போன்ற கற்பகத்தின் வாழ்வில் இருளைத் தோற்றுவித்தேன்… நல்லவேளை…இப்போதாவது உணர்ந்து கொண்டேனே, அது போதும்!” என்று இவ்வாறாக மனதை திருப்திப் படுத்திக்கொண்டு படுக்கையில் சாய்ந்தாள். 


“பூர்ணா மதுரை சென்று வருவதாகப் போய் ஒரு வாரமாகி விட்டது. இன்னும் வரக் காணோமே கடிதமாவது வருமோ” என்ற நினைவில் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் கற்பகம். 

கடிதம் வந்து விட்டது. 

அதைக் கொண்டுவந்து குமாரிடம் கொடுத்தாள் கற்பகம். பிரித்துப் படித்தான். கையில் கடிதத்தை வைத் துக்கொண்டே சிந்தனையில் ஆழ்ந்துவிட்டதைக் கண்ட கற்பகம், “என்ன எழுதியிருக்காள்?” என்று தாபத்தோடு கேட்டாள். 

“குமார், தங்கள் கடிதம் கிடைத்தது. தங்கள் உத்தரவுப் படி உடனே வரமுடியாததற்கு வருத்தப்படுகிறேன். 

“நான் மற்றும் சில செய்திகளைத் தருகிறேன். பூர்ணா தனது சொத்து, சுதந்திரம் யாவையும் எனது அறிவுக் கண்ணைத் திறந்துவிட்ட கற்பகத்திற்குக் காணிக்கையாக செலுத்திவிட்டாள். 

“இனி அவளுக்கு பந்தமில்லை, பாசமில்லை. உலகில் இனி ஒன்றுமே இல்லை! உடம்பில் தெம்பு உள்ளவரை க்ஷேத்திரா டனம் செய்து, நினைவுள்ளவரை நடமாடி, என்றோ ஒரு நாள் ஒருநாள் உடம்பு விழுந்துவிடப் போகிறது. அதைப்பற்றி இனி கவலையில்லை. 

“கற்பகம்! நல்ல குலத்தில் பிறந்தேன். கல்யாணம், செய்துகொண்டேன்: வாழ்ந்தேன். கணவனை நாடகக் கலைக்கு நான் தாரை வார்த்ததும் – பிறகு நிகழ்ந்ததும் யாவும் உனக்குச் சொல்லியிருக்கிறேன்! பங்களா, மோட்டார் கூர்க்கா, அஷ்ட ஐஸ்வரியம் எல்லாம் அனுபவித்து விட் டேன். இனி அவைகளை யெல்லாம் உனக்கு மனமார அர்ப் பணம் செய்வதை சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள். கற்பகம், நன்றாக இரு ! நான் செய்த பாபத்திற்கு நிவாரணம் தேட வந்து விட்டேன். 

“குமாருக்கு எனது நமஸ்காரம்.- பூர்ணா” 

“ஐயையோ, அவளை என்ன சொன்னீர்கள்? என்ன விபரீத மிது?” 

“நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இந்த மாதிரி அவள் ஏதாவது செய்வாள் என்பது மாத்திரம் அவள் உன் கடிதத்தைப் பார்த்ததிலிருந்தே…” 

“எந்தக் கடிதம்?” 

“அதுதான், சொல்லல்லியா நான் கிழித்துப் போட்ட துண்டுகளை….”

“ஓ, அதுவா ! சரி, அது கிடக்கு, காரை எடுத்துண்டு ஓடுங்கோ முன்னாடி… அவள் இல்லாதே…”

“அவள் நான் போகிற மட்டில் அங்கே உட்கார்ந்திருப் பாளோ…! அவ்வளவுதான்…” 

கற்பகத்திற்கு ரொத்திராகாரமாகக் கோபம் வந்தது. கண்களை உருட்டி விழித்து, “அவ்வளவு தானா? அவளைப் பரதேசியாக்கித் துரத்திவிட்டு, நாம் சொத்தை யெல்லாம் அனுபவிப்பதா… ஆனந்தமாக? ஆமாம், பெண் மனம் பெண்ணுக்குத்தானே தெரியும்? நீங்கள் என்ன கண்டீர்கள்? அவள்… போய்விட்டாளா? சரி. இதை யெல்லாம் தான தருமம் செய்யுங்கள்… நம்முடைய செல்வம் நமக்குப் போதும்” என்றாள். 

குமார் அப்போது பொறி கலங்கி உணர்விழந்து சோர்ந்திருந்தான். கற்பகம் கண்ணீரை வடித்துக்கொண்டு பதுமை யாக நின்றாள். 

வாசலில், 

“அம்மா, தாயே, ஏழைக்கு ஒரு வாய் அன்னம் கொடு, தாயே” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டாள் கற்பகம். 

“பிச்சை கொடு” என்றான் குமார். 

பூர்ணாவின் தியாகம் ஏழைகளுக்குப் பயன் தந்தது!

– உயிரின் அழைப்பு, முதற்பதிப்பு: 1966, சாரதி பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “பிராயச்சித்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *