Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சாருமதியின் வீடு

 

அந்த முற்றத்தில் இப்போது பாதச்சுவடுகள் கூடுகின்றன.

புதிய,புதிய சுவடுகள்…

யார்,யாரோ…? எவர்,எவரோ…?

அந்த வீடு முன்னெப்போதும் காணாத பலபேரைத் தன் அறைகளுக்குள் அனுமதிக்கிறது.

இன்னும் கொஞ்ச நாள்தான்.

அதற்குப் பிறகு அந்த வீட்டின் மீதான எனது நெருக்கம் விலக வேண்டியதுதான்.

இது வரைக்கும் அதனோடிருந்த ஒட்டுறவு கழன்று வெறும் ஏக்கப் பெருமூச்சுக்களோடு அதைத் தாண்டிப் போகவேண்டியதுதான்.

எனக்கே இந்த அவதி என்றால்…சாருமதிக்கு…?

சாருமதி இங்கு இல்லை.

அவள் இப்போது இங்கு இல்லாமலிருப்பதே நல்லது.

எப்போதாவது அவள் திரும்பி வருவாள் என்ற நிலையும் இனி இல்லாமலாகும்.

இனி,எந்த ஒரு காலத்திலும்,அவள் இங்கு வரப் பிரியப்படமாட்டாள்.

எப்போதாவது வந்திருக்கலாம்.

வராமல் விட்டுவிட்டு இனி ஏங்குவதில் அர்த்தமொன்றுமில்லை.

சாருமதியின் வீடு எப்படியெல்லாம் இருந்தது அப்போது.

வாயிலின் இரண்டு பக்கமும் சரிந்து,வீட்டை நோக்கிச் செல்லும் பச்சைச் செடிகள் மூன்றடிக்கு அழகாகக் கத்தரிக்கப்பட்டிருக்கும்.புல்வேலி போல் பசுமை. முன் படலைக்குக் குடை பிடிப்பது போல் ஜாம் மரம். குறுணல்,குறுணலாக சிவந்த பழங்களையும்,கூடவே சில குருவிகளையும் கொண்டிருக்கும்.பின் வளவில் ஒரு பெருநெல்லி நின்றது. சாருமதியின் அம்மா பெரிய,நீண்ட கொக்கத்தடி தந்து நெல்லிக்காய் பறித்த ஞாபகம் நெஞ்சின் ஓரத்தில் பதுங்கியிருக்கின்றது

சிறுவயதில் சாருமதி பள்ளிக்கு வரும்போது,நெல்லிக்காய் கொண்டுவருவாள்.எங்கள் வீட்டுப்பக்கம் வேறெங்கிலும் பெரிய நெல்லி இருந்ததில்லை. அவள் ஒன்றொன்றாய்,

ஒவ்வொருவருக்கும்,நெல்லிக்காய் பகிர்ந்து தருவாள்.இன்னொன்று…இன்னொன்று…என்று கேட்டு, அவளது நெல்லிக்காய்களுக்காகவே நான் அவளோடு சிநேகமாயிருக்கிறேன்.

அவள் எனக்கு நெருக்கமான சிநேகிதி என்றில்லை.அவள் என்னூர்க்காரி என்பதால்,சிறு வயதில் ஆரம்பித்த நட்பு.அவ்வளவுதான்.அவளுக்கு நெருக்கமாக அஞ்சுவும்,யாழியும் ஒட்டிக்கொண்டு திரிந்தார்கள். எனக்கு பானு நெருக்கமாயிருந்தாள்.சாருமதி எனக்கு சாதாரணமான ஒரு வகுப்புத் தோழி.அவ்வளவே.

ஆனால்,ஒரு நெல்லிக்காய்க் காலத்தில்,அவளோடு என் உறவு முறிந்து போனது.

அது அவளது தோழிகளதும்,என் தோழியினதும் போட்டியினால் ஏற்பட்டதாயிருக்கலாம்.

ஒவ்வொருமுறையும் பெரி நெல்லிக்காயில் எனக்குள்ள விருப்பம் உணர்ந்து,கொண்டுவந்து தருவாள் அவள். அந்த நெல்லிக்காய்ப் பரிமாற்றம் எல்லாவித நட்புக்களைவிடவும், அபரிதமானதாயிருந்தது. ஆனால், அந்தமுறை அஞ்சுவும், யாழியும் என்மீதிருந்த சாருவின் அன்புரிமையைப் பறித்துவிட முனைந்தனர். அதிகூடிய நட்புக்களாய்த் தாங்கள் இருக்கும்போது அவள் எப்படி முதல் நெல்லிக்காயை என்னிடம் தரலாம் என்பதாகத்தான் தொடங்கிற்று அது.

சாரு அதற்குப் பதில் சொல்லமாட்டாமல் திணறினாள்.எத்தனை புதிய நட்புக்கள் வந்தாலும், இளமையிலே ஆரம்பித்த நட்பை அவள் எப்படி உடைத்துவிடமுடியும்?

அதற்குள் பானு குமுறிவிட்டாள்.நெல்லிக்காய் வேண்டுமானால் சந்தையில் வாங்கிக் கொள்ளலாம். இதற்குப்போய் ஒரு நட்புத் தேவையா…? என்று உருவேற்றினாள் அவள்.

அதற்குப் பிறகு சாருமதியும்,நானும் பேசிக்கொள்வதில்லை.அஞ்சுவோடும்,யாழியோடும்,பானு முறுகிக்கொண்டாள். நெல்லிக்காயில் அவர்களுக்கு விருப்பமதிகமில்லாவிட்டாலும்,நெல்லிக்காய்க் காலங்களில் என் கண்களில் படும்படி கன்னங்களை உப்பவைத்துக் கொண்டு செல்வதை, நான் கண்டும் காணாத மாதிரிச் சென்றிருக்கிறேன்.

இதெல்லாம், பத்தாம் வகுப்பில் நாங்கள் படிக்கும்போது நடந்தது.பிறகு,இரண்டு வருடங்கள் நாம் பேசிக் கொள்ளாமலேயே கழிந்தது.அம்மா சாருமதி வீட்டுக்குப் போகின்ற வேளைகளில்,சாருவின் அம்மா பை நிறைய நெல்லிக்காய்களைக் கொடுத்து விட்டிருப்பாள்.அம்மாவுக்கும்,சாருவின் அம்மாவுக்கும்,நாம் பேசிக் கொள்ளாதது குறித்து நிறைய வருத்தம் இருந்தாலும்,காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டார்கள்.

சின்ன வயதில் நான் பெரும்பாலும் அங்குதான் விளையாடி வளர்ந்தேன்.அவள் வீட்டு முற்றம். அதில்
சரித்து வெட்டப்பட்டிருந்த பச்சை அடர்ந்த குறுவேலிகளுக்கிடையே ஒழித்து விளையாடுவோம். இரண்டு அண்ணன்கள் அவளுக்கு. அவர்களது நண்பர்களால் அவளது வீடு அமர்க்களப்படும். சிறுவயதில் அவர்களோடு சேர்ந்து நானும்,சாருவும் விளையாடியிருக்கிறோம்.வளர்ந்தபிறகு பையன்கள் நிற்கும் வீடு எனும் நினைப்பு என் குடும்பத்தைச் சலனப்படுத்தியது.அதன் விளைவாக நான் அங்கு போதல் ஓரளவு மட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்துவந்தது.

அவளோடு கதைக்காமல் விட்ட பிறகு,அந்த வீடு,எனக்கு முற்றிலும் அந்நியமானது போலிருநதது. டியூஷனுக்கு,அவளது வீட்டைத் தாண்டித்தான் போய்வரவேண்டியிருந்தது. அவளது அண்ணன்கள், படலையின் ஜாம் மரத்துக்குக் கீழ்,யாரேனும் நண்பர்களோடு கலகலத்துக் கொண்டிருப்பார்கள். அவளும், நானும் ஒற்றை,ஒற்றையாக வந்துகொண்டிருப்போம்.

சில வேளைகளில் அவள் முன்னால்…

சில வேளைகளில் நான் முன்னால்…அவளது பெரியண்ணா எங்களைக் கிண்டலடித்துச் சிரிப்பான்.

அவளானால்,வீட்டில் அவனோடு அது குறித்து மல்லுக்கட்ட முடியும்.

என்னால் அது முடியாது.

தலையைக் குனிந்துகொண்டு வந்துவிடுவேன்.

காலம் அப்போது கரும்புகைகளால் நிரம்பியிருந்தது.

அடிக்கடி குண்டுகள் வந்து வீழத் தொடங்கியிருந்தன.

கொஞ்ச நாளில் அவளது அம்மா, தன்பேரிலிருந்த ஆறுபரப்புக்காணியை விற்பதற்காக ஓடித்திரிந்தாள்.

நெடுநாள் அலைச்சலின்பின் காணியை விற்றுத் தன் ஆண்பிள்ளைகளைக் கொழும்புக்கு அனுப்பிவிட்டாள். அவர்களும் அதற்குப் பிறகு ஒன்றொன்றாய் ஏதேதோ தேசங்களுக்குப் போனதாயறிந்தேன்.

நாங்கள் ஏ.எல்லுக்கு வந்தோம்.அஞ்சுவும்,யாழியும் பட்டணத்துப் பாடசாலைக்குப் படிக்கப் போனார்கள். பானுவோ,கலைப் பிரிவில் சேர்ந்துகொண்டாள்.நானும்,சாருவும்,விஞ்ஞானப்பிரிவில் ஒன்றிணைந்தோம். பழைய நட்புகள் விலகப்,புதுப்புது நட்புகள் சேர்ந்தன. ஆனால், எங்களுக்கிடையிலான இடைவெளி அப்படியே தானிருந்தது.

ஏனோ, என்னாலும் அவளோடு பேச முடியவில்லை.

அவளும் என்னோடு வலிந்து பேசவில்லை.

அஞ்சுவும்,யாழியும் பிரிந்து போனபின் அவள் ஒருநாளும் நெல்லிக்காய் கொண்டுவரவுமில்லை. அம்மாவிடம், அவள் அம்மாகொடுத்தது போக, மீதி நெல்லிக்காய்களை அவளின் அம்மா சந்தைக்குக் கொடுத்தனுப்புவதாகப் பிறகு அறிந்தேன்.

அடுத்த இரு வருடங்களுக்கு நாங்கள் பட்டுக்கொள்ளாமல் பழகிக் கொண்டோம்.அவளுக்கு அதிகமாய் நண்பர்கள் இருந்தார்கள். இரண்டு அண்ணன்கள் இருந்ததாலோ என்னவோ,அவள் ஆண்பிள்ளைகளோடு மிகவும் இயல்பாகப் பேசுவாள்.அது,யார் கண்ணைக் குத்தியதோ தெரியவில்லை.எங்களுக்கு முதல் வகுப்பில் படித்த ‘சேந்தனோடு’ அவள் கதைப்பதாக என் வகுப்புப் பெண்கள் கிசுகிசுத்தார்கள்.அவள் இயல்பாய்க் கதைத்ததை அவர்கள் தப்பாய் அர்த்தப்படுத்திக்கொண்டார்களோ…?அல்லது ‘சேந்தனை ‘ அவளுக்குப் பிடித்துக்கொண்டதோ அது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாய் இருக்கலாம்.

சிலவேளை,அஞ்சுவும்,யாழியும் கூட அவளோடு தொடர்பில் இருந்திருப்பின் அதை அறிந்திருக்கலாம்.

அதைப்பற்றி அவளிடம் கேட்பதற்குரிய எந்த உரிமையும் என்னிடத்தில் இல்லை,

உயர்தரப்பரீட்சை எழுதி மறுமொழி வந்து,இரண்டாம் தடவைக்கு நாங்கள் முயற்சி செய்துகொண்டிருந்த காலகட்டம் அது.

அப்போதுதான்,அவள் சீக்கிரத்திலேயே போய்விடப் போகிறாள் என்றார்கள்.

அவள் அம்மாவுக்கு,உடம்பு முடியாமல் போய்,கடைக்குட்டிப் பெண்ணான அவளுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்துபார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் வந்தபோது,அவளுக்கு வயது வெறுமே இருபது தான். அண்ணன்கள் அவளுக்கு வெளிநாட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள்.அப்போது போக்குவரத்து சிக்கற்பட்டுக் கொண்டிருந்த காலம்.வடக்கைத் தாண்டுவதென்பதே பெரும்பாடாகவிருந்தது.

அவளுக்குக் கல்யாணம் முற்றாகிற்றென்று,அவளது அம்மா,எனது சித்தியிடம் சொல்லியிருந்த செய்தி என் காதிற்கும் கசிந்து வந்தது.

“இப்பவாவது ஒருக்கால் போட்டுவா…” அம்மாவின் குரலில் சாருமதி மீதிருந்த பரிவு எட்டிப்பார்த்தது.

நெடுநெடுவென்று நீண்ட,நாட்களின் பின்னரான ஒரு மாலைப்பொழுதில் அவளது வீட்டிற்கு மறுபடியும் சென்றிருந்தேன்.சிரித்தபடியே வாசலுக்கு வந்தாள்.எனக்கு அவளைப் பார்க்கத் துக்கம் ஒரு பாறைபோல,தொண்டைக்குள் அழுத்தியது. என்ன மனநிலையோடு அவளை
அணுகுவதென்று தெரியவில்லை.

இறுகிப்போன மௌனத்துடனிருந்தேன்.

ஒருவேளை அவள் உண்மையிலேயே ‘சேந்தனைக்’ காதலித்து,தாய்க்காக இந்தக் கல்யாணத்தை ஏற்றிருக்கின்றாள் என்றால், அதற்காக நான் சந்தோஷப்பட முடியாது.

மிக நிறைவாக,இந்தத் திருமணத்தையே அவள் தன வாழ்வின் உன்னத தருணமாகக் கருதி அவள் கிளம்புகிறாள் என்றால், அவளை நான் வாழ்த்தாமல் இருப்பது அந்தச் சந்தர்ப்பத்திற்கு இசைகேடாகிப் போகலாம்.

இயல்பிற்கு மீறி என்னாலும் அவளிடம் அதிகம் பேசமுடியவில்லை.டீயும்,பிஸ்கட்டும் கொண்டுவந்து தந்தாள். அவளால் அந்தச் சந்தர்ப்பத்தில் அதை மட்டுமே தர முடிந்தது.அதிலிருந்து அவளது மகிழ்ச்சி குறித்து எதையும் ஊகிக்க முடியவில்லை.இருவருக்குமிடையே இடைவெளி விழுந்திருந்தது. திரை கழன்று இருவரும் பேச ஆரம்பித்தபோது ஒன்றொன்றாய் ஆட்கள் வரத் தொடங்கினார்கள். அவளது பழைய சிநேகிதிகளும் கூட…எங்கிருந்தோ மோப்பம் பிடித்து வந்துவிட்டார்கள்.

விடைபெற்றபோது அவள் என்னைப் பார்த்து இயல்பாய்ப்புன்னகைத்தாள். நான் அவள் கரத்தைப் பற்றிக் குலுக்கினேன்.

“விஷ் யூ ஓல் த பெஸ்ட்…” என வாழ்த்தினேன்.

குளிர்ந்திருந்த அவள் கரம் கொஞ்ச நேரம் என் கைக்குள் இருக்கவேண்டும் போலிருந்தது.

“மதி…” என்று அவளது அம்மாவின் குரல் கேட்டபோது அவள் என்னிடமிருந்து விலகிக் கொண்டாள்.

“ஓகே…பை…” என விடைபெற்றுக் கொண்டேன்.

அதன்பிறகு அவள் போய்விட்டாள் என்பதனைச் சித்தி மூலம் அறிந்துகொண்டேன்.நீண்ட நாட்களுக்கு,அவள் வாசலுக்கு வந்து விடை பெற்ற கணங்கள் என் உள்மனதைக் கிளறிக்கொண்டேயிருந்தன. அன்று வாசலுக்கு வந்த கடைசிக்கணத்தில் அவள் என்னிடம் என்ன சொல்லவந்தாள்…?அவள் கண்களில் இருந்தது என்னவென்பதை என்னால் பின்வந்த நாட்களில் யூகிக்க முடியவில்லை. அவளது திருமணம் இந்தியாவில் நடந்ததென்றும்,கொஞ்ச வாரங்கள் கொழும்பில் நின்ற அவளது அம்மா,தானும் பிள்ளைகளிடம் சென்றுவிட்டாள் என்றும் பிறகு அறிந்து கொண்டேன்.அவளுக்கு நெருக்கமான உறவாயிருந்த அவளது மாமா வீட்டில் அவளது திருமணப் புகைப்படத்தையும் ,அவளது குழந்தையின் புகைப்படத்தையும் பார்க்கக் கிடைத்தது.அவளைப் பற்றிக் கடைசிக் கணங்களில் ஏற்பட்ட கலக்கம் அந்த நிமிடத்தில் தீர்ந்துபோனது.

அவள் நன்றாகத்தான் இருக்கிறாள்.

அவளோடு கதைத்துத் திரிந்ததாகச் சொல்லப்பட்டசேந்தனிடத்தில் அவள் போனபின்னர் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை. அதனால் என்னிடம் தொடர்ந்து எந்தவிதமான சஞ்சலமும் ஏற்படவில்லை.

அதன் பிறகு சாருமதியின் வீடு கொஞ்சக்காலம் அவளுடைய ஒன்றுவிட்ட மாமாவின் பராமரிப்பில் இருந்தது. ஐந்தாறு மாதங்கள். அப்போது நாங்கள் பெரிநெல்லிக்காய் வேண்டி அங்கு போவோம். ஒற்றை,ஒற்றையாய் விழும் நெல்லிக்காய்களை உப்பில் ஊறவைத்துச் சாப்பிடுவோம்.

அப்போதெல்லாம் நான் அவளை இரக்கத்தோடும்,அவளது தோழிகளை எகத்தாளத்தோடும் நினைத்துக் கொள்வேன்.

ஆனால், பிறகு அதற்கும் வழியில்லாமல் போனது.

ஐந்தாறு மாதங்களில்,அவள் வீட்டு மதிலுக்குமேல் மூன்றடி உயரத்திற்கு தகரங்கள் அடிக்கப்பட்டு, கேற் அருகில் மண் அணை கட்டி காவலரண் ஏற்பட்டது.உள்ளே மேலும் கட்டுமானப்பணிகள் நடப்பதற்கு ஏதுவாய், மணல்,சல்லியோடு உழவு இயந்திரங்கள் ஒழுங்கையால் போய்த்திரும்பும்.

உள்ளே பெரிய வேலைப்பாடுகள் நடப்பதாய்ப் பானு சொல்வாள்.அங்கே இரவிரவாய் வேலை நடக்கிறதென்றும், யாரோ பெரியவர்கள் தங்குகின்ற அசுமாத்தம் இருந்ததென்றும் ,ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.

ஆனையிறவுப் பக்கம் அடிபாடு தொடங்கமுதல் அந்த வீடு சில நாட்கள் ஒரே கூச்சலும், கும்மாளமுமாய் இருந்தது.போராட்டப் பாடல்கள் உள்ளிருந்து கசட் ரெக்கோடர்களில் உணர்ச்சி ததும்ப எழும்பி உயிரை அருட்டுவதாக இருக்கும்.அதன்பின் அடிபாடுகள் நடைபெறும் காலங்களில் விவிரிக்கவியலாத ஒரு நிசப்தம் அந்த வீட்டைச் சூழ்ந்திருக்கும்.

இடையில் ஒருநாள் அந்த வீட்டைக் கடந்து சென்ற வேளையில்,சேந்தனை அவ்விடத்தில் கண்டேன். சீருடையுடன் இருந்தான்.எனக்கு அவனை அங்கு கண்டது அதிர்ச்சியாயிருந்தது.அவன் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. உள்ளே போய்விட்டான்.

அதற்குப் பிறகு அவனைக் காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை.

ஒருவருடம் அவர்கள் மாறிமாறிப் பல குழுக்களாக அந்த வீட்டில் இருந்தார்கள்.அதற்குப் பிறகு அவர்களும் அந்த வீட்டில் இருக்கமுடியாமற் போனது.

மாறிமாறி வெடிச்சத்தங்கள் துரத்திய ஒரு பொழுதில் அவர்கள் அந்த இடத்தைக் காலி செய்தார்கள். பிறகு,மறுபடியும்,அந்த இடத்தை அவளது மாமா பராமரிக்கத் தொடங்கினார்.

அந்த வீட்டில் இடைக்கிடை சோதனைகளும்,ஆயுதத் தேடல்களும் நிகழும்.அங்கே ஒருதடவை ஒழித்து வைக்கப்பட்ட சில ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.அதன்பிறகு அந்த வீடு கடும் பாதுகாப்பின் மத்தியில் அமளிதுமளிப்பட்டது.மாமா கூட அங்கு வருவது தடைப்பட்டது. பிறகு கொஞ்சநாளில் அக்குவேறு, ஆணிவேறாகத் துளைக்கப்பட்ட பிறகு அந்த வீடு மாமாவிடம் கையளிக்கப்பட்டது.

அங்கு நெல்லிமரத்தின் கீழ்,பெரியதாக ஒரு பதுங்குகுழி அமைக்கப்பட்டிருந்ததென்றும்,அதற்குள் இரண்டு, மூன்று அறைகள் அமைந்திருந்ததென்றும் கதையோடு கதையாக செய்திகள் வந்தன. ஒழுங்கைக்குள் இருந்ததாலோ என்னவோ மற்றைய வீடுகள் போல் இராணுவம் அந்த வீட்டைத் தான் எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ச்சியாய் மாமாவும் அங்கு போய்த் தங்கி வந்ததனால்,அந்த வீடு நெடுநாட்களுக்குப் பின் மீட்கப்பட்டதாய் சொல்லிக் கொண்டார்கள். பிறகு, அங்கிருந்த நெல்லிக்காய் நினைவு மடிந்துபோன ஒரு பொழுதில் மீண்டும் அந்த நினைவை மேலெழச் செய்யும் வண்ணம் அங்கு போக வேண்டி நேர்ந்தது.

அது முதலாவது சமாதானகாலத்திற்கு முன்னர் வெடித்த போராகவிருந்தது

கடும் ஷெல் மழைக்கு மத்தியில் மீளமுடியாத திணறல் ஏற்பட்டது.

ஓய்வொழிச்சல் இல்லாத ஷெல்லடிக்குள் இரு பக்கத்திற்குமிடையிலான யுத்தத்தில் சிக்கிக்கொண்டபோது ஒவ்வொன்றாய் குடும்பங்கள் விலகி ஓடின.

நாங்கள் ஒரு இருபது,முப்பது குடும்பங்கள் எஞ்சியிருந்தோம்.ஓடுவதற்கு இடமின்றி சாருமதி வீட்டு பங்கருக்குள் தஞ்சம் புகுந்தோம்.ஐந்து பகல்.ஐந்து இரவு.அரிசிமாவும்,பிஸ்கட்டும்,தேநீருமாய் அங்கேயே வசித்தோம்.கொங்கிரீட் அறைகளுடனிருந்த உறுதியான பங்கர்.

வெடிச்சத்தங்கள் இடைவெளி விட்டபோது ,அவளது வீடும்,நெல்லியும் அவளது நினைவை என்னுள் வளர்த்துக்கொண்டே இருந்தது.அப்போது நெல்லியில் காய்கள் இருக்கவில்லை.ஆனாலும்,நிமிர்ந்து அந்த மரத்தைப் பார்ப்பதற்கு எனதியல்பு தவறிவிடவுமில்லை.

தொடர்ந்து தங்கமுடியாமல் ஊரை விட்டு விலகியபோது,அவளது வீட்டுச்சுவர்கள் ஷெல் சிதறல்களால் உருக்குலைந்திருந்ததைக் காணமுடிந்தது.

முதல்நாளில் கூட அங்குதான் இருந்தோமா…?எனும் ஆச்சரியம் பீதியாய் உருமாற எங்கள் ஊரை முதல் தடவையாகப் பிரிந்து போனோம்.

இரு வருடங்களின்பின் மீளவும் ஊர் திரும்பியபோது,எங்களுடைய வீடுகள் போலவே,அவளுடைய வீடும்,யன்னல்கள் நொறுங்குண்டு,உருக்குலைந்திருந்தது.நெல்லிமரத்தடியிலிருந்த பங்கர் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டிருந்தது.

மாமா மட்டும்,மீண்டும்,மீண்டும் அவளது வீட்டைக் கவனமெடுத்து பராமரித்துக் கொண்டிருந்தார்.

எனக்கோ அவளது வீட்டைப் பார்க்கும் கணந்தோறும்,அவள் ஊரைவிட்டுப் பிரிந்த நாளும், அந்த வீட்டில் ஒருபோது சேந்தனைச் சீருடையில் கண்டதுமே மனதில் நிழலாடிக் கொண்டிருந்தது.

அவனைப் பற்றிய தகவல்கள் மட்டும் எனக்குத் தொடர்ந்து கிடைக்கவில்லை.

சாருமதி மட்டும் சுகமாய் இருப்பதாய் அறிந்தேன்.

பிறகு எனக்கும் கல்யாணமாகி,குழந்தைகள் பிறந்து,அவர்களும் பள்ளிக்கூடம் போய்,நெல்லிக்காயில் ஆசை வைத்து,நெல்லிக்காய் கேட்கிற அளவிற்குக் காலம் வளர்ந்து போயிற்று.

ஒருநாள்,சின்னவனின் ஆய்க்கினை தாளாது சாருமதி வீட்டுக்குப் போய்,நீண்ட கொக்கத்தடி எடுத்து
நெல்லிக்காய்களைத் தட்டி விழுத்திக்கொண்டிருந்தேன்.

அருகிலே வெடி வைத்துத் தகர்க்கப்பட்ட பங்கர் புதர் மூடிக் கிடந்தது.அதைப் பார்த்தபோது சேந்தன்
நினைவில் வந்தான்.

நாங்கள் ஆபத்திற்கு ஒதுங்கிய பங்கர்,அவன் ஒருகாலத்தில் தங்கியிருந்த இடமாயிருக்கும்.அவன் அங்கே பெரிய பதவியில் இருந்தானாம்.கடைசிப் போரில் காணாமல் போய்விட்டான்.அவனைப் பற்றிய எந்தத் தடயமும் இல்லாமல் அவனது குடும்பம் அல்லாடிக்கொண்டிருந்ததது.

நெல்லிக்காய்களோடு நானும்,மகனும் திரும்பிக்கொண்டிருந்தபோது மாமாவும், இன்னொருவரும் வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கீழிறங்கிக் கொண்டிருந்தனர்.

முன்பு வாசலிலிருந்து வீட்டை நோக்கிச் சரித்து வளர்க்கப்பட்ட பசிய புல்வேலியின் அடையாளம்
கொஞ்சமும் இல்லை.

வந்தவர் தெருவில் இறங்கியதும் நான் மாமாவிடம் கேட்டேன்.

“என்ன மாமா…வாடகைக்கு விடப் போறீங்களோ…?”

“ஏன் வாடகைக்கு விட வேணும்? இவ்வளவு காலம் பாத்த நான் இனியும் பாக்கமாட்டனே…?”

அவரது குரலில் ஆதங்கம் இருந்தது.

அப்ப ஆர் மாமா வீட்டை, இப்பிடிப் பாத்திட்டுப் போகீனை…”

மாமா ஒரு நிமிடம் மௌனமானார்.கனத்த கணமொன்று விடை பெற்றபோது பெருமூச்சோடு சொன்னார்.

“வீட்டை விக்கிறதெண்டால், ஆக்கள் பாத்திட்டுத்தானை வாங்குவீனை….”

“என்ன …” என் சொற்கள் வீறிட்டன.

அது சாருமதியின் சீதன வீடு.

ஒருகாலத்தில் வீடு திரும்புவாள் என எதிர்பார்க்கப்பட்ட சாருமதி.

எதற்காக அவள் வீட்டை விற்கவேண்டும்…?

அவளுக்கென்ன குறைச்சல் அங்கே!

“அப்ப, அவள் இனி வரவே மாட்டாளா….?” என்றேன் அளவிடமுடியாத் துயருடன்.

“வரமாட்டாள்…” என்றார் மாமா திடமுடன்.

“ஏன்…?”

மீண்டும் கனத்த நிமிடங்கள்.

“சாருமதீன்ரை பிள்ளை போன வருஷம் ஒரு அக்சிடென்ரிலை ஆப்பிட்டிட்டான்…”

“அது போன வருசமேல்லோ…சுகமாப் போச்சுதெண்டறிஞ்சன்…” எனது குரலை உடைத்து
மாமா சொன்னார்.

“இல்லை, அவன் இன்னும் கோமா நிலையிலை தான்.இன்னும் நினைவு வரேல்லை……”

அதற்கு மேல் ஒன்றும் என் காதில் விழவில்லை.

நான் அவளது வீட்டைக் கடைசி முறையாகப் பார்க்கிறேன்.

அவளது நினைவுகளை,கூடவே சிலதுளி அவனது நினைவுகளையும் சுமந்த அந்த வீடு இனி,என் பார்வையில் விழப் போவதில்லை.

எனது மனதில் பல வருடங்களாக வட்டமிட்ட அவளது முகம் ,இப்போது என்னை அலைக்கழிக்கத் தொடங்குகிறது.

- காற்றுவெளி – மே 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
சோவென மழை கொட்டக் கூடாது. மெல்லிய சிணுங்கலாய் விழும் மழை. நோகாமல் இலைகளையும், பூக்களையும் வருடினாற் போல மழை. இது அவளுக்குப் பிடிக்கும். உள்ளத்துத் துயரங்களை வாரியடித்துக் கழுவுகின்ற, ஊற்றாய்ச் சொரிகின்ற மழை யென்றாலும் அதிலும் ஒரு தாளலயம் இருக்கத்தான் செய்கிறது. ...
மேலும் கதையை படிக்க...
பிள்ளையாருக்குச் சலிப்பாக இருந்தது. கலகலவென்று என்ன மாதிரி இருந்த இடம். ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து அவர் முன் மன்றாடிச் சென்றிருப்பார்கள். அவர்களில் ஒருவரைக் கூட இன்று அயலில் காண முடியவில்லை. ஓ...வென்று வானம் பார்த்த வெறுவெளி. மனிதர்கால் படாமற் போனதால் குத்துச்செடிகள் ஆங்காங்கு ...
மேலும் கதையை படிக்க...
சந்தியா காத்திருந்தாள். நேரம் ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கால்மணி நேரத்துக்கும் கூடுதலாகக் காத்திருந்தாள். இவளோடு நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராய்க் கரைந்திருந்தனர். ஒவ்வொரு பஸ்ஸும் ஒவ்வொருவரை ஏற்றிப் போயிற்று. இவள் ஏறவில்லை. சனங்கள் அதிக மென்றில்லை. ஏறியிருக்கலாம். ஏறவில்லை. அடிக்கடி மணி பார்த்துக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
“நான் இண்டைக்கு பதினைஞ்சு குரும்பட்டி சேர்த்துப் போட்டான்...” வேணு கத்திக் கொண்டு வாறான். நானும் சேர்ப்பன் தானை, வழக்கமா நானும் நிறையச் சேர்க்கிறனான் தானை. இண்டைக்கு எனக்குக் குரும்பட்டி கிடைக்கேல்லை என்டவுடனே என்னைப் பழிக்கிறதே... “ம்... நான் தரமாட்டன்...” வேணு எனக்குப் பழிப்புக் காட்டுறான். ...
மேலும் கதையை படிக்க...
அன்பான உங்களுக்கு இதுவரை எழுதாமல் தவித்து உள்ளுக்குள் பூட்டிப் பூட்டி ஒழித்து வைத்து தாங்க முடியாமல் போன ஒரு கணத்தில் கொட்டிவிடுகின்றேன் எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே….. உங்கள் முகவரி குறிக்கப்படாமையால் பல பேரின் பார்வையில் சிக்கி இந்தக் கடிதம் படாத பாடுபடப் போகிறதெனத் தெரிந்தும்கூட… எப்படியிருக்கின்றீர்கள்….? ...
மேலும் கதையை படிக்க...
மழை
ஒரு பிள்ளையாரின் கதை
விடுபடல்
வெளியில் வாழ்தல்
காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)