தகரப்பெட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 1,553 
 
 

“அம்மா, உன் சாமானெல்லாம் எடுத்து பாக் பண்ணி வெச்சுக்கோ. நாளைக்கு கார்த்தால ஆட்கள் வந்துடுவா… அப்பறம் ஆராய நேரம் இருக்காது. அப்போ உட்கார்ந்து வேணும் வேண்டாம்னு குடஞ்சிண்டு இருக்காதே என்ன… அவா ரொம்பவே அவசரப்படுத்துவா” என்றான் மகன் கொஞ்சம் மிரட்டும் தொனியில்.

“சரி பா, நான் இப்பவே பண்ணிடறேன்” என்றாள் காமு எனும் காமாட்சி.

அருண் அவள் மகன். இது நாள் வரையிலும் இந்த ஓட்டு வீட்டில் தான் தாமசம். அவள் மணமாகி வந்ததே இந்த வீட்டிற்கு தான். அவளும் அவள் கணவனுமாக புழங்கிய வீடு. மாமனார் மாமியார் நாத்தனார் கொழுந்தன்கள் இருவர், பிள்ளைகள் என ஆல மரமாக இந்தச் சிறிய வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது நினைவு வந்தது. ரூம் என்று பார்த்தால் ரெண்டே ரெண்டுதான். மத்தபடி எல்லோரும் எல்லா இடத்திலும் எனதான் புழங்குவது வழக்கம்.

அவள் அலமாரி மேலே இருந்து எட்டி மெல்ல தன் பெட்டியை இறக்கினாள்.

இவள் மணமான அன்று இவளது இந்தப் பெட்டி அதோ அந்த அறையில் வைக்கப்பட்டது. இப்போது அங்கே மகன் அருண் தன் மனைவியுடன் தங்கி இருக்கிறான்.

“காமு மன்னி, தோ ஒம்பெட்டி தேடாதே என்ன…” என காண்பித்தாள் அவள் நாத்தி மஞ்சு. சரி என மண்டையை ஆட்டினாள். அப்பா புதுசாக அவளுக்காக வாங்கின பெட்டி. நல்ல அழுத்தமான தகரத்தில் செய்தது. வான நீலத்தில் புதிய பெயிண்டுடன் அவளைப் போலவே புதுப் பெண்ணாக மினுமினுத்தது அவள் பெட்டியும்.

பின்னே புழக்கடையும் மித்தமும் முன்னே சிறிய தோட்டம் மரம் பூ காய்கள் கோலம் என அழகிய மிதிலா விலாசாக ஜொலித்தது. குஞ்சலம் போல சிறியதாக இருந்தாலும் மங்களகரமாகத் தோன்றியது. வீடு பிடித்துப் போனது காமுவிற்கு. அங்கேயுள்ள மனிதர்களையும்தான்.

விகல்பில்லாமல் யதார்த்தமாக இருந்தனர்… பேசிப் பழகினர். உள்ளது உள்ளபடி நன்னா இருக்கு இல்லை எனக் கூறினர்.

“என்ன காமு, நோக்கு இந்த ஆம் பிடிச்சிருக்கா… சின்னதா இருக்கு இல்ல…”? என்றார் ஈஸ்வரன்.

“இல்லை நா, நேக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கைக்கடக்கமா இருக்கு. அப்படி இருக்கும்போதுதான் அங்கே வாழும் மனுஷாளோட நெருக்கம் அதிகமா இருக்கும்னு எங்கம்மா சொல்லுவா” என்றாள் மெல்லிய குரலில்.

“பலே பேஷ்! நன்னா பேசறியே…” என சிரித்தார்.

‘மன்னி மன்னி’ என சூழ்ந்து கொண்ட மச்சின நாத்திகள். எல்லாம் அடுக்குப்படி போல இவளை ஓத்த வயது… ரெண்டோ மூணோ மேலே கீழே வயசு என இருந்தனர்.

இவள் தங்கி இருந்த அறை, அது நாள் வரையிலும் பொது படுக்கை அறையாக இருந்தது போலும்… இப்போது இவளுக்கும் ஈஸ்வரனுக்குமாக கொடுத்திருந்தனர்.

“நான் இங்கேதான் படிப்பேன் தெரியுமா மன்னி நோக்கு” என்பாள் மஞ்சு.

“ஆமா, நான் அந்தக் கடைசியில படுத்துப்பேன். பாட்டி ஊர்லேர்ந்து வந்தா இந்த வயசிலேயும் நல்ல நல்ல கதையெல்லாம் சொல்லுவா… ரொம்ப இன்டரஸ்டிங்கா இருக்கும் தெரியுமோ மன்னி” என்றான் மச்சினன் வாசு.

அவள் அப்படியா என்பது போல எல்லாம் கேட்டுக் கொண்டாள். சிரித்த முகமாக எல்லோருக்கும் வேண்டியதை செய்தாள்.

மன்னி என எப்போதுமே இவளையே சுற்றி வந்தனர்.

இரவில் ஈஸ்வரன் வந்த பின்னும், படுக்கும்போதும் கூட சில சமயம் ஏதோ ஒரு வாண்டு அங்கேயே உறங்கி இருக்கும்.

“சரியாபோச்சு போ” என சிரிப்பான் ஈஸ்வரன். அவள் வெட்கத்துடன் சிரிப்பாள்.

இந்த அமர்களத்திலேயே அவள் பிள்ளையாண்டாள். அருணை பெற்றெடுத்தாள். பிள்ளையோடும் அதே அறையில் தான் வந்திருந்தாள்.

“மன்னி, குட்டி பாப்பாவ நான் வெச்சுக்கறேன்” என மாற்றி மாற்றி முறை போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டனர். இவள் வீட்டுக் காரியங்களை சமையலை பார்க்க இது உதவியது எனலாம்.

அருண் அவளை பசி நேரத்தில் மட்டுமே தேடுவான். பசி ஆற்றிவிட்டால் எங்கே யார் இடுப்பிலோ, மடியிலோ என தவழ்ந்தான். தவழ்ந்து நடை பழகி விளையாடி சிரித்து அழுது வீட்டை சுற்றிச் சுற்றி வந்து வளர்ந்தான் குழந்தை

ஆங்காங்கே மாக்கோல மிச்சங்களுடன் ரெட் ஆக்சைட் டைல்ஸ் பதித்த அந்த காலத்து வீடு. எப்போதுமே தண் என இருக்கும்.

நாத்தி மச்சினர் என ஒவ்வொருவரும் படித்து திருமணமாகியதும் இதே வீட்டில்தான். இதே கூடம்தான் எத்தனை சர்ச்சைகள் பார்த்துள்ளது. எத்தனை பெண் பார்த்தல், நிச்சயம் பார்த்துள்ளது. ஆண்டு நிறைவுகள் சஷ்டியப்த பூர்த்தி வரை கூட கண்ட கூடம் இது… என தன் அறையை விட்டு எட்டி பார்வையை படரவிட்டு பெருமூச்சுவிட்டாள் காமு.

‘எப்படித்தான் இந்த வீட்டை விட்டு போகப்போறேனோ. இங்கேன்னா எங்கே பார்த்தாலும் அவர் இருக்காப்போல தோணும்… நான் தைர்யமா இருந்தேன். அக்கடான்னு தூங்கினேன்.

அங்கே எங்கேயோ பெரிய ப்ளாட்சாம், அடுக்குமாடி. லிப்ட்ல 36வது மாடிக்கு போகணும். பெரிய வீடு. ஊரே தெரியுமாம் சமுத்திரம் தெரியுமாம் சொன்னார்கள். பாதியும் பேத்தியும் பேரனும் சொன்னதுதான்.

க்ரகப்ரவேசம் அன்று அழைத்துப் போனார்கள். பால் காய்ச்சி கணபதி ஹோமம் ஒன்று செய்து ராத் தங்கினர். வீடு அழகாக பளிச்சென இருந்தது. மரவேலைபாடு இழைத்திருந்தனர். அழகிய வெளேர் என்ற சுவர்கள் பளீரென மின்னின. அதை போட்டிக்கு அழைக்கவென வெண்ணையில் செய்தது போல மென்மையாக வெளிர் நிற தரை டைல்ஸ்.

அவளுகென சிறிய ஒரு அறை. “தோ பாத்தியா பாட்டி, இதுல வெந்நீர் பச்சைத் தண்ணி ரெண்டுமே வரும்” என குழாயை திருகி காட்டினாள். அவள் அதிசயித்து பார்த்தாள்.

அந்த வீட்டில் இப்போதுதான் கீசர் பொருத்தினர் சில வருடம் முன். அதுவரை அன்றாடம் தீபாவளி அமளிதான் தான் அனைவருக்கும் வெந்நீர் வேண்டும். பாய்லர் புகைந்து கொண்டே தான் இருக்கும் பத்து மணி வரை.

கொஞ்சம் கலக்கமாக இருந்தது. ஆனால் போய்தானே ஆக வேண்டும். இந்த வீட்டை அருண் விற்கப் போகிறான். அதை நம்பி லோன் எடுத்து அந்த வீட்டை வாங்கியுள்ளான்.

வேலைய பாப்போம் மீண்டும் அருணோ சுஜாதாவோ வந்து ஏதனும் சொல்வார்கள் என பெட்டியை மெல்லத் திறந்தாள்.

நிறைய துரு ஏறி இருந்தது. கை ஸ்ராய்காமல் திறந்தாள். ஸ்ரமபட்டுதான் திறந்தது. உள்ளேயும் துரு நிறைய. பேப்பர் போட்டு துணிமணிகள் வைத்திருந்தாள். ஒவ்வொன்றாக தன் புடவைகளை எடுத்து வெளியே வைத்தாள். கொஞ்சம் பழையது என்பதை எடுத்து தனியே வைத்தாள். ‘இவை எல்லாம் பழங்காலம் புடவை. வேலைக்காரி கூட எடுத்துகொள்ளுவாளோ என்னமோ…’ என எண்ணினாள்.

அடியில் ஈஸ்வரனின் சந்தன கலர் சட்டை. மெல்ல எடுத்து தடவி பார்த்தாள். அவர் வாசனை அதில் நுகர்ந்தாள். தன் நெஞ்சோடு வைத்துக்கொண்டு மீண்டும் நினைவலைகளில் மூழ்கினாள்.

“ஆமா, நானும் கேட்கணும்னு… அதென்ன, நான் இந்த சட்டைய போட்டுண்டா மட்டும் கழட்டவே விட மாட்டேங்கறியே காமு?” என்றார் ஈஸ்வரன் குறும்பாக.

“இந்த சட்டையில நீங்க ரொம்ப அழகா இருப்பேள்” என்பாள் நாணியபடி.

“ம்ம் அப்படியா” என இடுப்பை வளைத்து நெருக்குவான்.

“போறுமே, குழந்தேள் யாரானும் வரப்போறா” என சிணுங்குவாள்.

“நீதானேடீ கிளப்பினே… நான் சிவனேனு தான் இருந்தேன்” என்பார் குறும்பு கொப்பளிக்க. “போங்கோன்னா” என நகர்ந்துவிடுவாள்.

அவரது கண்ணாடி, வாட்ச், பர்ஸ் என அனைத்தையும் பத்திரபடுத்தி வைத்திருந்தாள்.

தொட்டுத் தடவி பார்த்தாள். பெருமூச்சு வந்தது.

மீண்டும் வேண்டிய வற்றை அடுக்கலாம் என வேறே பேப்பர் எடுக்க அறையை விட்டு வெளியே சென்றாள்.

“பேப்பரா, அதோ இருக்குமே பழசு” என்றாள் சுஜாதா. “எதுக்கு மா?”” என்றாள்.

“பெட்டியில அடியில போட்ட பேப்பர் பழசாயிடுத்து புது ஆத்துக்கு போறோமே அதான் புதுசா பேப்பர் மாத்தலாம்னு…” என இழுத்தாள்.

“எந்தப் பெட்டி?” என்றான் அருண்.

“என்னோடதுதான் டா. இருக்கறது அது ஒண்ணுதானே” என்றாள். “என் கல்யாணப் பெட்டி” என்றாள் சற்றே நெகிழ்ந்து.

சுஜாதா உடனே அருணை பார்க்க அவனும் அவளை பார்த்தான்

“எது, அந்த நீல கலர் சவரபெட்டியா… பெயின்ட் எல்லாம் போய்?” என்றான் எரிச்சலாக

“என்னடா இப்படி சொல்லிட்டே?” என்றாள் பாவமாக

“பின்னே என்னமா நீ… நாம எப்படிபட்ட இடத்துக்கு குடி போறோம்… அங்கே பெயின்ட் போய் துரு ஏறி காண சகிக்காம இருக்கற அந்த தகர பெட்டிய கொண்டு வரேங்கறே.”

“டேய் அசோக்” என அழைத்தான். “என்னப்பா?” என அவனது பத்தாவது படிக்கும் மகன் வந்தான்

“டேய், பாட்டிக்கு நல்லதா ஒரு சூட்கேஸ் இல்லேனா ஏர்பாக் குடு. தன் சாமான அதில வெச்சுக்கட்டும்”

“அம்மா, அந்த ஷவரபெட்டி சாரி சாரி… தகர பெட்டிய இங்கேயே தல முழுகீட்டு வா” என்றான் கண்டிஷனாக. “ஆமாம்மா” என்றாள் சுஜாதாவும் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.

காமு ஒன்றும் பேசாமல் தன் அறைக்கு வந்தாள்.

பின்னோடு அசோக் வேறொரு சாம்சொனைட் பெட்டியை கொண்டு வைத்தான்

“இது போறும்தானே பாட்டி?” என்றான்

அவள் ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்டான். நடந்தவற்றை ஊகித்தான்

காமு தன் பெட்டியை மனசில்லாமல் தடவி கொடுத்துக்கொண்டு அமைதியாக ஆனால் விசனமாக அமர்ந்திருப்பதைக் கண்டான்.

பேசாமல் நகர்ந்து விட்டான்.

காமு தன் துணிமணி சாமான்களை தன் பொக்கிஷங்களை புதிய பெட்டியில் அடுக்கினாள்.

நிம்மதின்றி படுத்தாள். அவ்வப்போது இருட்டிலும் கூட தன் பெட்டியை கண் பார்த்தாள்.

“அப்படி என்னடி பொக்கிஷம் வெச்சிருக்கே அந்தப் பெட்டியில, யாரையும் தொடவே விட மாட்டேங்கறியாம்?” என வம்புக்கு இழுப்பார் ஈஸ்வரன்.

“போறுமே, வேணும்னே வம்பு… எம் பொட்டியில என்ன வெச்சு கெடக்கு பொக்கிஷம். கல்யாண புடவைகள் என் SSLC புக், எங்காத்து மனுஷா போட்டோ இதெல்லாம்தான்” என்பாள் யதார்த்தமாக

ஆனால் மனதின் உள்ளே மத்தாப்போ பூக்கும். அவர் பெண்பார்க்க வரப்போகிறான் எனும்போது தனக்கு காண்பிக்கப்பட்ட அவரது போட்டோ அதில் இருந்தது.

திருமணத்திற்கு முன் நாலே நாலுவரி – அவர் அவளை தனியே கண்டு பேச விழைகிறான் என எழுதிய சிறிய காகிதத் துண்டு லெட்டர் (ரகசியமாக ஜாக்கெட்டில் வைத்து நாத்தனார் மஞ்சு கொண்டு தந்தது) அதில் உள்ளது.

மணமானபின் அவர் பூனாவிற்கு வேலை விஷயமாக ஒரு மாதம் போன போது, வாரத்திற்கு ஒன்றாக அவர் போட்ட கடிதங்கள் அதில் இருந்தன. அப்போது அவள் பிள்ளையாண்டு இருந்தாள். அதை ரொம்பவே மெனக்கெட்டு கேட்டு அங்கலாய்த்து ஆசையாக எழுதி இருப்பார் ஈஸ்வரன்.

இதெல்லாவற்றையும் அவரிடம்தான் சொல்ல முடியுமா இல்லை அருண் குடும்பத்தாருடன் தான் சொல்ல முடியுமா…

பெட்டிக்கு மட்டும் என்ன மவுசு கொறைச்சலா என்ன!. அப்பா தன் மகளிற்கு கல்யாண சீர் என்ற முறையில் தஞ்சைக்குச் சென்று அங்கே இந்தப் பெட்டியை தேர்ந்தெடுத்து அழகிய பூக்கள் டிசைன் செய்யச் சொல்லி நெகு நெகுவென புது பெயிண்டுடன் ஜொலிக்க கொண்டு வந்தாராக்கும் பெருமிதமாக.

உறக்கமின்றி விடிந்தது. சொன்னபடி திமு திமுவென பாக்கர்ஸ் ஆட்கள் வந்து ஆளுக்கொரு பக்கமாக சாமான்களை எடுத்துச் சென்ற வண்ணம் இருந்தனர்.

“இந்தப் பெட்டி வேஸ்ட் தானே… எடுத்து போக வேண்டாம்தானே?” என்றான் ஒரு ஆள். அவள் சந்தேகமாக இல்லை என தலையை மட்டும் அசைத்தாள்.

“இத எடுக்க வேண்டாம்” என சொல்லிவிட்டு போனாள் சுஜாதா.

எல்லாம் சென்றுவிட்டன. அந்தப் பெட்டியையும் வீட்டையும் விட்டுச் செல்ல மனமில்லாமல் வெளியே நடந்தாள் காமு. காரில் ஏறி புது வீடு சென்றனர். அங்கே சாமான்கள் பின்னோடு வந்து இறக்கி வைக்கப்பட்டன

அவளது அந்தச் சிறிய அறை பிடித்து தான் இருந்தது. எதிரே உள்ள பூங்காவை பார்தாற்போன்ற சின்னதொரு பால்கனி. ‘ஒரு துளசி கூட வைத்துக்கொள்ளலாம். அங்கிருந்து கொண்டு வந்தார்களோ என்னமோ’ என நினைத்துக்கொண்டாள்.

கேட்க பயம். தன் பேரன் தந்த பெட்டியை திறந்து அதனுள்ளிருந்து வேண்டிய சாமான்களை எடுத்து தனக்குண்டான அலமாரியில் அடுக்கினாள். கால் மணி நேரத்தில் சாமான் ஒதுக்கியானது. ஈஸ்வரனின் படத்தை இப்போதைக்கு அலமாரியிலேயே ஒரு பிறையில் வைத்தாள். அங்கே இருந்த dresser மீது சுவாமி படத்தை வைத்தாள். தன் சீப்பு, ஒட்டு பொட்டு அட்டை, தேங்கா எண்ணெய் பாட்டில், பாண்ட்ஸ் ஸ்னோ என வைத்து டிராவை மூடினாள்.

அசோக் வந்தான்

“எல்லா சாமானம் எடுத்து வந்தாச்சா டா கண்ணா?” என மெல்ல கேட்டாள்.

“ஆமா பாட்டி, அந்த வீட்டை காலி பண்ணியாச்சு. நாளைக்கு ஒப்பு குடுக்கணுமாமே…” என்றான்.

“ஒ அப்படியா, என்னோட அந்த பெட்டி?” என வாய் திறந்து உடனே மூடிக் கொண்டாள்.

“என்னாச்சு பாட்டி?” என்றான். கேட்டிருப்பானோ என அவனை சந்தேகமாக பார்த்தாள். ஒண்ணுமில்லை என தலையை ஆட்டினாள்.

அவன் போய்விட்டான்

:நான் ஏதானும் செய்யட்டுமா மா சுஜா?” என சமையல் அறைக்குச் சென்றாள் உதவ.

“ம்ம் பண்ணுங்கோ மா. இதோ பாத்திரங்கள… அந்த வீட்டில நாம் வெச்சிண்டிருந்தாப் போலவே இங்கேயும் அடுக்கிடலாம்னு… ஸ்ரமபடுத்திக்காம பண்ணுங்கோ போறும்” என தானும் அடுக்கினாள். காமுவும் பக்குவமாக ஒண்ணுக்குள் ஒன்று என பாத்திரங்களை பதவிசாக அடுக்கினாள்.

“பேஷ், எல்லாம் உக்கார்ந்துடுத்தே மா…. நீங்க அழகா செட் பண்ணிட்டேளே?” என்றாள் இன் முகமாக. “என்ன இருந்தாலும் அனுபவம் உண்டே” என்றாள்.

காமு புன்னகைத்தாள். “ஏதானும் சமைக்கட்டுமா?” என்றாள்.

“இன்னிக்கி வேண்டாம் மா. மத்தியானம் பால் காய்ச்சி காபி போட்டுக்கலாம். நாளைல இருந்து சமைக்கத் துவங்கலாம் போறும் இல்லையா. இன்னும் பாக்கி வீட்டை சரி பண்ணணுமே” என்றாள். ஆமா என்றாள் காமுவும்

புதிய வீடு கொஞ்சம் கொஞ்சமாக செட் ஆனது. அனைவர்க்கும் புதிய இடம் என்ற உற்சாகம். புதிய இடம் என்ற லேசான அசவ்கரியம்… பழக வேண்டும் என்ற மன நிலை. டிபின் வர வழைத்து உண்டனர். அனைவரும் செய்த வேலைக்கு களைத்து அவரவர் அறையில் முடங்கினர்.

காமுவிற்கு உறக்கமே வரவில்லை. புரண்டு லேசாக தூக்கத்தில் ஆழ்ந்தாள்… நான்கு மணிக்கே கலைந்தும் போனது. பேசாமல் ஐந்து வரை கிடந்தாள். பின், காலை கடன்களை முடித்து காபிக்கு பால் வைத்து டிகாக்ஷன் போட்டாள். சூடாக கலந்து தனக்கு எடுத்துக்கொண்டு ஹால் பால்கனிக்கு வந்தாள். கிழக்கு பார்த்த பால்கனி. பளீரென மின்னும் சூரிய ஒளியுடன் அழகான விடியலாக இருந்தது. ரம்மியமாக ரசித்தாள். தூரே கடல் தெரிந்தது. அலைகள் கரை தொட்டு விளையாடின.. புன்னகைத்துக்கொண்டாள். பழையன கழிதலும் புதியன புகுதலும் இதுதானோ… வாழ்கை நியதி இதுதானோ.

‘பரிச்சு நட்ட செடியாக தானும்தானே புக்ககத்தில் துளிர்விட்டு பூத்து காயத்து பழுத்தது நடந்ததுதானே. இங்கேயும் கப்பும் கிளையுமாக இந்த மரம் வேர்விடும்’ என நினைத்துக்கொண்டாள்.

“என்னம்மா, ஆர் யு என்ஜாயிங்?” என பின்னிருந்து வந்து அவளை அணைத்துக்கொண்டான் அருண். ஆம் என புன்னகைத்தபடி தலை அசைத்தாள்.

“காபி கலக்கட்டுமா அருண்?” என்றாள். “இல்லைமா. யு என்ஜாய். சுஜாவும் எழுந்துட்டா. நாங்க பண்ணிக்கறோம்” என உள்ளே சென்றான்.

துளசி, மணி பிளான்ட், மந்தாரை மட்டும் வந்திருந்ததைக் கண்டாள்.

“அம்மா” என்றபடி வந்தாள் சுஜா. “இங்கே ஹால் பால்கனில இது வேண்டாமேனு பார்க்கறேன். உங்க பால்கனில வைக்கட்டுமா… உங்களுக்கு தொந்தரவு இல்லையே?” என்றாள்.

காமுவிருக்கு சந்தோஷம். “தாராளமா வை டா மா” என்றார் சிரித்தபடி.

குளித்து வந்து அவற்றுக்கு நீர் வார்த்து ஸ்லோகம் சொன்னாள். இங்கே தனியாக பூஜை அறை இருந்தது. நாலுக்கு ஐந்துதான் என்றாலும். அதில் அங்கிருந்து வந்த பூஜை சாமான்களை அடுக்கினாள். அழகாக அலங்கரித்தாள். விளக்கில் நெய் விட்டு திரி போட்டு சுஜாதாவை அழைத்து ஏற்றச் சொன்னாள்.

“அம்மா, நீங்கதான் இங்கே பெரியவா, உங்க கையால ஏத்துங்கோ மா ப்ளீஸ். நான் கூட இருக்கேன்” என்றாள். மனசு நெகிழ்ந்து பகவானை எண்ணி தீபத்தை ஏற்றினாள். மனம் நிறைவானது.

“சந்தோஷமா இருக்கு டா அருண்” என்றாள்.

“நீ சந்தோஷப்பட்டா போறும் மா” என்றான் அருண்.

அடுத்து வந்த நாட்களில் புது வீடு பழகியது.

கீழேயே நடக்க பாதை. முழுவதும் அழகிய பூங்காவனமாக இருந்தது.

அங்கேயே சிறிய அங்காடி ஒன்று. காமுவே கீழே இறங்கிச் சென்று அன்றைய காய்கறி பழம் பூ என வாங்கி வந்தாள்.

வாசலில் காய்கறி வண்டிக்காரன், கீரை கூடைக்காரி என சந்தித்து கதை அடித்து பேரம் பேசி வாங்க முடியவில்லை. அந்த சுவாரஸ்யம் போனதுதான் என்றாலும் இதுவும் ஒரு மாற்றமாக நன்றாகவே பிடித்துப்போனது. ஒவ்வொரு நாளுக்கும் புதியதாக வாங்கிக்கொள்ள முடிந்தது பிரெஷாக சமைக்கவென. திருப்தி.

பின்னோடு அவளது பிறந்த நாள் வந்தது.

“அருண், அம்மாக்கு எழுபது” என்றாள் சுஜா அறிவித்தபடி. “ஒ அப்படியா?” என்றான். “ஏதானும் ஹோமம்…?” என்று இழுத்தாள். “சரி வாத்யார்ட பேசு” என்றான்.

காமு காதில் செய்தி விழ, “இப்போதான் புது ஆம்னு க்ரகப்ரவேசம் ஹோமம் பூஜை எல்லாம் ஆச்சே அருண் சுஜா… போறும்மா…. புது வீடெல்லாம் அழுக்காயிடும். செலவு வேற ஆகும்.

இப்போதைக்கு இதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீங்க நெனச்சதே போறும் டா அருண்” என்று தடுத்துவிட்டாள்

“அப்போ நோக்கு என்ன கிப்ட் வாங்கட்டும் நாங்க?” என்றான்

“இந்த வயசுல என்னடா பிறந்த நாளும் கிப்டும் எல்லாம்…. தோ, புது ஆத்துக்கு வந்திருக்கோம். அழகா குஞ்சலமா இருக்கு வீடு. இதுவே எனக்கும் சேர்த்து கிப்ட் தானே டா கண்ணா” என்றாள் நிறைந்து சிரித்தபடி.

அடுத்த நாள்… “அப்போ இந்த கிப்டும் வேண்டாமா பாட்டி?” என்றபடி வந்தனர் அசோக்கும் சின்னவள் அஞ்சனாவும். “அஞ்சு அசோக் என்னது இது?” என்றாள் ஆவலுடன்.

பேப்பரை உரித்தான் பேரன்

உள்ளே நெகுநெகுவென புதிய பெண்ணாக அவளது தகரப்பெட்டி புதியது போல ஒளிர்ந்தது. “இது இது…” என சந்தோஷத்தில் திணறினாள் காமு

“ஒன் சொத்துதான் பாட்டி” “அத அங்கேயே…?” என திக்கினாள்

“ஆமா, அங்கேயே விட்டுட்டு வந்துட்டோம்னு சும்மா சொன்னேன். அத எடுத்துண்டு போய் பெயின்ட் ஷாப்ல குடுத்து துரு எல்லாம் நீக்கி சுத்தம் செஞ்சு எமரி போட்டு. பின்னோட பூட்டு தாழ்பாள் எல்லாம் சரி பண்ணி பெயின்ட் அடிக்கச் சொன்னேன் இருந்த அதே ப்ளூ கலர். எப்படி|?” என காலரை தூக்கிவிட்டான். அவன் முகம் வழித்தாள்.

“செஞ்சது நான். ஐடியா நம்ம அஞ்சுவோடது” என்று அவளை பார்த்து hi 5 கொடுத்தான்

மன நெகிழ்ந்து கண்ணில் வழிந்தது. இருவரையும் அணைத்துகொண்டாள் காமு.

தடவி தடவி பார்த்தாள். சாம்சொனைட் பெட்டியைத் திறந்து தன் பொக்கிஷங்களை தகரபெட்டியில் வைத்தாள். மேல் பிறையில் வைத்தாள்.

இப்போது ஈஸ்வரன் போட்டோவில் மன நிறைவுடன் சிரித்தார்ப் போலத் தோன்றியது. “நீங்களும் இங்கே இந்த ஆத்துக்கே வந்துட்டேளா?” என்றாள் அவரை பார்த்தபடி தன் முந்தானையால் அவர் போட்டோ துடைத்தபடி.

அவர் கண் கொட்டினார்ப் போலத் தோன்றியது.

– செப்டம்பர் 26 2023

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *