சூரப்புலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 5,319 
 

திங்கட்கிழமை. காலை ஐந்து மணி.

மயிலாப்பூர், சென்னை.

ஜனனி தன் தூக்கத்திலிருந்து எழுந்தாள்.

பால் பாக்கெட்டை உடைத்து பாலைக் காய்ச்சி, சுவாமிக்கு நைவேத்தியம் செய்தாள். புதிதாக பில்டரில் இறக்கிய ஸ்ட்ராங் டிகாஷனையும் சுகர் ப்ரீயையும் கலந்து ஆவிபறக்க, மணக்க மணக்க காபியை மாமனார் எதிரே இருக்கும் டீபாயின் மேல் வைத்தாள்.

ஆவி பறக்கும் அந்தக் காபியை ரசித்துக் குடித்தபடியே அன்றைய செய்தித் தாளில் மூழ்கிவிட்டார் எழுபத்தைந்து வயது மாமனார் சடகோபன். பிறகு பெட்ரூம் சென்று தூங்கிக் கொண்டிருந்த பத்துவயதுக் குழந்தை கமலியை எழுப்பி அவளை பள்ளிக்குத் தயார் செய்தாள்.

அவளை குளிப்பாட்டிவிட்டு, தலையை வாரி, யூனிபார்ம், ஷூ போட்டுவிட்டு, ப்ரேக்பாஸ்ட் சாப்பிடச் செய்து, ப்ரைவேட் ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு; அதன்பிறகு தானும் குளித்துவிட்டு, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக்கொண்டே, மாமனாருக்கு சாதம், சாம்பார், ரசம், பொரியல் செய்து அதை ஹாட்-பேக்கில் எடுத்துவைத்து அவரிடம் கொடுத்துவிட்டு; அதையே அடுத்த தெருவில் வசிக்கும் எழுபது வயதான தன் அம்மாவிற்கும் எடுத்துவைத்து; தான் இரண்டு பிரட்-டோஸ்ட் செய்து சாப்பிட்டு விட்டு; அலுவலகம் செல்ல மாமனாரிடம் சொல்லிக்கொண்டு ஸ்கூட்டரில் விடைபெற்று, போகிற வழியில் அம்மாவுக்கும் ஹாட்பேக்கை கொடுத்துவிட்டு, ஒன்பதரைமணிக்கு அலுவலகம் சென்றாள்.

சாயங்காலம் திரும்பி வரும்போது அம்மா வீட்டில் பள்ளிவிட்டு காத்திருக்கும் கமலியை பிக்-அப் செய்து, காலியான ஹாட்-பேக்கையும் எடுத்துக்கொண்டு வீடுவந்து; மாமனாருக்கு சுடச்சுட காபிபோட்டுக் கொடுத்துவிட்டு, தன்னை நைட்டிக்கு மாற்றிக்கொண்டு; கமலியின் யூனிபார்மைக் களைந்து, வேறு உடை அணிவித்து, அவளை ஹோம்-ஒர்க் செய்யவைத்து, புரியாததை சொல்லிக்கொடுத்து; இரவு சுடச்சுட ஒரு ரசம்வைத்து சாப்பிட்டுவிட்டு அனைவரும் பத்து மணிக்கு படுத்து விடுவார்கள்.

இது தினசரி வாடிக்கை.

ஒவ்வொரு நாளும் இதையே நேரம் தவறாமல் செய்து, செய்து ஜானகிக்கு பலசமயங்களில் சலிப்பும், ஆயாசாமும்தான் ஏற்பட்டது.

மனைவியை இழந்த வயதான சடகோபன் ஒருபுறம்; கணவனை இழந்த வயதான தன் தாயார் ஒருபுறம்; அமெரிக்காவில் வேலை பார்க்கும் கணவன் வாசுதேவன் ஒருபுறம்; ஒரே அன்புமகள் கமலி ஒருபுறம் – இவர்களுக்கு மத்தியில் ஜனனியின் தினசரி போரட்டங்கள் மறுபுறம் என்று வாழ்க்கையே அலுத்து விட்டது.

கணவன் வாசுதேவன் அமெரிக்காவில் ஹெச்.பி கூப்பர்டினோவில் கடந்த எட்டு வருடங்களாக டைரக்டராக இருக்கிறான். டாலரில் எக்கச்சக்கமாக கொழிக்கிறான். ஜனனியை குழந்தையுடன் அமெரிக்கா வந்துவிடுமாறு எவ்வளவு வற்புறுத்தினாலும் அவள் மறுத்துவிட்டாள்.

அன்று சடகோபனுக்கு, மகன் வாசுதேவனிடமிருந்து ஒரு ஈ-மெயில் வந்தது. அதில் –

அன்புள்ள அப்பாவுக்கு;

நான் ஜனனியிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கமாட்டேன் என்கிறாள். நான் கூப்பர்டினோ வந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. நான் இங்கேயே க்ரீன்-கார்டு வாங்கி; பங்களாவீடு, கார் என்று நன்றாக செட்டில் ஆகிவிட்டேன்.

அடுத்த ஆறு மாதத்திற்குள் ஒன்று அவள் கமலியுடன் இங்கு வந்து என்னுடன் வாழவேண்டும், அல்லது அவள் என்னை விவாகரத்து செய்துவிட வேண்டும். இரண்டில் ஒன்று அடுத்த ஆறு மாதத்திற்குள் நடந்தே ஆகவேண்டும். அவள் சென்னையிலேயே இருக்கும் பட்சத்தில் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. குழந்தையை அவள் இஷ்டப்படி அவளே வைத்துக்கொண்டாலும் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

தங்களையும், அவள் அம்மாவையும் இந்தியாவிலேயே மிகச்சிறந்த தனி குடியிருப்புடன் கூடிய முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறேன். அதுவும் அடுத்தடுத்த குடியிருப்பில்… எனவே சம்பந்திகள் ஒருவருக்கொருவர் உதவியாகவும் இருந்து கொள்ளலாம். அவ்வப்போது நாங்கள் அமரிக்காவிலிருந்து உங்கள் இருவரையும் ஸ்கைப்பில் தொடர்பு கொள்வோம். ஒருவேளை உங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் இருவரும் ஒரே வீட்டில்கூட சேர்ந்து வாழலாம். அதனால் செலவும் குறையும்.

தாங்கள்தான் ஜனனியிடம் இதை எடுத்துச்சொல்லி அவளை மாற்ற வேண்டும்.

ஜனனியிடம் நான் பேசுவதை குறைத்துக் கொண்டுவிட்டேன்….நீங்கள்தான் எங்களுக்கு ஒரு பாலமாக இருந்து செயல்படவேண்டும்.

அன்பு மகன் வாசு

மகன் அனுப்பிய மெயிலைப் படித்ததும் சடகோபன் ஆடிப்போனார்.

அன்று இரவு தன் பேத்தி கமலி தூங்கியதும், ஜனனியிடம் அந்த மெயிலை படிக்கச் சொன்னார்.

ஜனனி படித்து முடித்ததும் அவளிடம் அழுது புலம்பினார்.

“நான் அகிலாண்டேஸ்வரியிடம் வேண்டிக் கொண்டதெல்லாம், என் மகனுக்கு நல்ல படிப்பும், நல்ல உத்தியோகமும், நல்ல சம்பாத்தியமும், நல்ல குடும்ப வாழ்க்கையும், நல்ல புத்தியையும்தான்; எல்லாம் கொடுத்த அவள் என் ஒரேமகனுக்கு நல்ல புத்தியை மட்டும் கொடுக்கவில்லைம்மா. நான் என்ன பாவம் செய்தேன்?”

“நீங்க அழாதீங்கப்பா, இவரோட பிடிவாதத்துக்கு நான் ஒரு நல்ல முடிவு கட்டுகிறேன். நீங்க நிம்மதியா போய்த் தூங்குங்க…”

கொதித்துப்போன ஜனனி தான் மட்டும் தூங்காமல் கணவனுக்கு உடனே ஒரு மெயில் அனுப்பினாள்.

“அன்புள்ள வாசு,

இப்படி ஒரு கீழ்த்தரமான மெயிலை வயதான அப்பாவுக்கு அனுப்ப எப்படித்தான் உங்களுக்கு மனசு வந்ததோ? குரூர மனசு உங்களுக்கு. தவிர என் அம்மாவைப் பற்றி எழுதியும் தாங்கள் மனத்தால் மிகவும் கேவலமானவர் என்பதையும் பறை சாற்றியுள்ளீர்கள்.

என் விவாகரத்துக்குபின் நான் ஒருத்தரையோ அல்லது மூன்று பேரையோ கல்யாணம் செய்து கொண்டாலும் அதைக் கேட்க நீங்கள் யார்?

உத்தியோகம் புருஷ லக்ஷணம் என்பது உண்மைதான். அதற்காக கடல்தாண்டி குடும்பத்தை பிரிந்து சென்று சம்பாதிக்க வேண்டும் என்பது அல்ல அதன் அர்த்தம்.

கூப்பர்டினோவில் உங்கள் டாலர்களையும், சொந்தவீட்டையும், காரையும் கம்பெனியையும் கட்டிக்கொண்டு நிரந்தரமாக அழுங்கள், எனக்கு அதுபற்றி கவலையில்லை. நம்முடைய பதினோறு வருட திருமண வாழ்க்கையில், நீங்கள் அமெரிக்கா சென்று எட்டு வருடங்கள் ஓடிவிட்டன. உங்களுடன் குடித்தனம் நடத்தி அதிலும் நான் சந்தோஷமாக இருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். நடுவில் போனவருடம் ஒருமாதம் கமலியுடன் நான் அமரிக்கா வந்தபோது, அந்த நாட்டின் இயந்திரத் தனமான வாழ்க்கை எனக்கு சுத்தமாக ரசிக்கவில்லை.

நீங்கள் என்ன எனக்கு ஆறுமாதங்கள் டைம் தருவது? ஆண் என்கிற திமிரா? நான் ஒரு அடிபட்ட பெண்புலி. நான் தருகிறேன் உங்களுக்கு ஒரு அல்டிமாட்டம். இன்று ஆகஸ்ட் 26, 2017. அடுத்த ஆறுமாதத்தில் உங்கள் அமெரிக்க வாழ்க்கையை முற்றிலும் துறந்துவிட்டு, மார்ச் 31, 2018 க்குள் இங்கு வந்து எங்களுடன் சேர்ந்து வாழ்கிறீர்கள். அதன்பிறகு சென்னையிலேயே ஒரு நல்லவேலையை தேடிக்கொண்டு செட்டில் ஆகிவிடுங்கள். வேறுவேலை கிடைக்காவிடில் ஒருநல்ல கன்சல்டன்சி ஆரம்பியுங்கள் அதுவும் திகையாவிடில், பத்து வருடங்கள் ஆனாலும் நான் உங்களை வீட்டில் உட்காரவைத்து சோறு போடுகிறேன. நீங்கள் டாலரில் அனுப்பிவைத்த பணம், என்னுடைய மயிலாப்பூர் அக்கவுண்டில் கோடி கோடியாக மண்டிக் கிடக்கிறது. நீங்கள் அப்பாவுக்கு நல்ல மகனாகவும்; கமலிக்கு ஒரு அன்பான அப்பாவாகவும் இருங்கள். அதுபோதும் எங்களுக்கு. ஞாபகம் வையுங்கள் மார்ச் 31, 2018. இதுதான் என்னுடைய இறுதியான கட்டளை.

இல்லாவிடில் அப்பாவையும், கமலியையும் மறந்துவிடுங்கள். நான் எதற்கும் துணிந்துவிட்டேன்.

ஜனனி.

அடுத்த நாளே வாசுதேவனிடம் இருந்து ஒருமெயில் வந்தது.

அதில், ‘ஐ யாம் வெரி பிஸி. ஹெச்பி வேலையை விட்டுவிட்டேன். அமேசானில் சீனியர் டைரக்டராக புதிய வேலையை ஒப்புக்கொள்ள சியாட்டில் செல்கிறேன். வாசு’ என்று மட்டுமே இருந்தது.

ஜனனி கடுப்பாகிப் போனாள். எனினும் மார்ச் இறுதிவரை பொறுமை காப்பது என்று முடிவு செய்தாள்.

அதன்பிறகு வாசுதேவனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை.

மாதங்கள் ஓடின…

2018 புதுவருடமும் பிறந்து, மார்ச் மாதமும் வந்துவிட்டது.

ஜனனி இயல்பாகவும், தைரியமாகவும் இருந்தாள்.

மார்ச் 28, 29 என நாட்கள் கடந்துவிட்டன.

மார்ச் 30. இரவு பன்னிரண்டரை மணிக்கு வீட்டு வாசலில் ஒரு இன்னோவா வந்து நின்றது. தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த ஜனனி, கார் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.

வாசுதேவன் இன்னோவாவிலிருந்து இறங்கி ஏகப்பட்ட லக்கேஜ்களை இறக்கிக் கொண்டிருந்தான்.

ஜனனியின் உடம்பு புல்லரித்தது.

விருட்டென உற்சாகத்துடன் துள்ளி எழுந்து வாசல் லைட்டைப் போட்டுவிட்டு, “அப்பா அவர் வந்துட்டார்ப்பா” என்று மாமனாரை எழுப்பியபடியே ஓடிச்சென்று வாசல் கதவைத்திறந்து வெளியே நின்றிருந்த வாசுதேவனை கட்டிப்பிடித்து அழுதாள்.

சடகோபனும் சந்தோஷம் கரைபுரள வாய்விட்டு அழுதார்.

கமலியும் எழுந்துகொள்ள அந்தவீடே சந்தோஷப் புத்துயிர் பெற்றது.

இரவு வாசுதேவனும் ஜனனியும் தூங்கவில்லை.

“நான் நிரந்தரமாக அமெரிக்காவை விட்டு வந்துவிட்டேன் ஜனா. என்னுடைய போதாத நேரம், அமரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், அமேசான் கம்பெனி ஓனர் ஜெவ் பிஜோஸ்க்கும் ஏற்பட்ட நிர்வாக ரீதியான சில பிரச்சனைகளால், அமேசானில் கடைசி நான்குமாதங்களில் ஹை ப்ராக்கெட் சாலரியில் சேர்ந்த என்னை கழட்டி விட்டுவிட்டார்கள். ஹெச்பியிலும் என்னை மறுபடியும் சேர்த்துக் கொள்ளவில்லை.

நான் மனம் தளராது நான் படித்த க்ளவுட் கம்ப்யூட்டிங் இந்தியாவில் பெரிய அளவில் அறிமுகப் படுத்தப்பட வேண்டும் என்பதற்காக அதை ஒரு பெரிய ப்ராஜக்ட்டாக தயாரித்து நம் பாரதப் பிரதமருக்கு அனுப்பிவைத்தேன்.

அவர் என்னை உடனே பார்க்க விரும்புவதாகவும், பல ஐடி பிரபலங்களுக்கு தன் முன்னிலையில் ஒருமுறை விளக்கம் தரவேண்டும் எனவும் மார்ச் ஒன்றாம் தேதி நேரம் ஒதுக்கியிருந்தார்.

நான் அன்று புதுடெல்லியில் நம் பிரதமரை சந்தித்து ப்ராஜெக்டை விளக்கி இதன்மூலம் மூவாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் எனவும் சொன்னேன். ஒருவாரத்தில் எனக்கு இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைத்துவிட்டது. முப்பதாயிரம் கோடியை ஒதுக்கி என்னை தற்போது இதற்கு நிர்வாக டைரக்டராகவும் போட்டுவிட்டார் நம் பிரதமர். ஆர்டரை பெருமையுடன் காண்பித்தான். சென்னையில் நிலம் பார்க்க அடுத்தவாரமே மத்திய அரசாங்கத்திலிருந்து வருகிறார்கள். இனி எனக்கு எல்லாமே சென்னைதான்.”

சந்தோஷத்துடன் ஜனனியை அணைத்தான்.

“இந்த ஆர்டர் கிடைக்கவில்லை என்றால் சென்னை வந்திருப்பீர்களா?”

“கண்டிப்பாக வருவேன்…. நீதான் என்னை பத்து வருடங்கள் உட்காரவைத்து சோறு போடுவதாக எழுதினாயே?” சிரித்தான்.

“ஆமா…. அது என்ன க்ளவுட் கம்ப்யூட்டிங்?”

“தமிழில் இதை மேகக் கணிமை எனலாம். சமீப காலங்களாக கணினிகளின் ஆற்றல் முழுவதும் மேகக் கணிமையை நோக்கிப் பயணப் படுகின்றன. அடுத்த பத்து ஆண்டுகளில் மேகக் கணிமை வழியாகத்தான் அனைத்து சேவைகளையும் பல நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும், மருத்துவ விடுதிகளும், தனியார்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அளவில் அது வேகமாக வளர்ந்து வருகிறது.

தனித் தனியாக வீடுகளில் கணினிகள் வைத்துக்கொண்டு, வருடத்திற்கு ஒரு முறை மாறி வரும் மென் பொருள்களை வாங்கிப்போட்டு வைரஸ் தாக்குதல்களிலிருந்து தப்பித்து பொதுமக்கள் எல்லோரும் கணினிகளைப் பயன் படுத்துவது என்பது இந்தியாவில் இயலாத காரியம். பெரும் பணச் செலவு. இதற்கு ஒரு தீர்வாக இணையத்தின் ஊடாகக் கணினிச் சேவைகளை வழங்கபோவது மேகக் கணிமைதான்.

நகராட்சி வீடுகளுக்குத் தண்ணீர் வழங்குவதும், மின்சாரத்தை கம்பெனிகள் வழங்குவதும் போன்று, கணினித் தேவைகளை வேண்டிய அளவில் பெற்றுக்கொண்டு அதற்கான விலையை ஒவ்வொரு மாதமும் கட்டி விடலாம். மேகக் கணிமைக்கு நம்மிடம் எந்த ஹார்ட்வேரும், சாப்ட்வேரும் இருக்கத் தேவையில்லை. வெறும் கணித் திரையும் அதைத் தட்டுவதற்கு ஒரு விசைப்பலகையும் மட்டுமே போதுமானது. நம் கணினிக் கணக்கில் நுழைந்தால் மேகக் கணிமையைப் பயன் படுத்தலாம். நாம் பயன் படுத்தும் அளவிற்கு ஏற்ப கட்டணம் வரும்.

தனித் தனியாக கம்ப்யூட்டர், அதன் சாப்ட்வேர், அதனை அடிக்கடி மேம்படுத்த மாற்றுதல், வைரஸ் தாக்குதல், பராமரிப்புச் செலவினங்கள் போன்றவைகள் இனிமேல் இருக்காது. மேகத்தில் எல்லாக் கணிவளங்களும் இருப்பதால், எந்த இடத்திலிருந்தும் நம் கணக்கை உபயோகிக்கலாம். வேண்டியது ஒரு கணித்திரை மட்டுமே.

ஜனனி அவனை அதிசயமாகப் பார்த்தாள்.

“என்ன நான் இப்ப பெரிய புலிதானே?”

“ஆமாம் புலியேதான், ஆனால் சாதாரண புலி அல்ல. நீங்க ஒரு சூரப்புலி.”

அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள் ஜனனி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *