செல்லாக்காசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 12,454 
 

கோபமும், எரிச்சலுமாய் வீட்டை விட்டு வெளியே வந்தாள் அனு. அவள் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.

‘ச்ச…. காலைலேயே பிரச்சனையை ஆரம்பிச்சாச்சு….. இனி இன்றைய பொழுது நல்லா போன மாதிரிதான். மனதுள் போரிந்தவாறே கதவை இழுத்து பூட்டினாள்.

‘கல்யாணம் ஆகி ஆறு மாசத்துல ஆறாயிரம் சண்டை…ச்ச… பேசாம கல்யாணமே பண்ணிக்காம நிம்மதியா இருந்திருக்கலாம்’ எரிச்சல் மேலும் அதிகரிக்க கைகடிகாரத்தை பார்த்தவள் அதிர்ந்தாள்.

‘போச்சு ….. இன்னைக்கு லேட்தான்… அந்த சிடுமூஞ்சி மேனேஜர் என்ன சொல்ல போகுதோ?’ நடையை எட்டி போட்டாள் அனு.

‘ச்ச பஸ் இன்னும் வரலையே….’ பதட்டமாய் நின்றிருந்தவளின் சிந்தனையை கலைத்தது ஒரு குரல்.

‘அம்மா…. ரெண்டு நாளா பட்டினி … எதாவது தர்மம் பண்ணுங்கம்மா…’ கை இடுக்கில் குழந்தையுடன் வாடிய முகமாய் நின்றிருந்தாள் அவள்.

ஏற்கனவே இருந்த எரிச்சலில் இதுவும் சேர,

‘கை கால் நல்லா தானே இருக்கு… போய் ஏதாவது வேலை செஞ்சு பிழைக்கிறதுக்கு என்ன கேடு…’ என திட்டியவள், அதற்குள் பஸ் வரவே ஓடி சென்று ஏறினாள்.

அலுவலகத்தில் கையெழுத்து போடும்போது அரை மணி நேரம் தாமதம் ஆகி இருந்தது. மேனேஜர் அழைக்கவும் பயத்துடன் அவர் அறையில் நுழைந்தாள் அனு.

‘என்னம்மா இது தான் வேலைக்கு வர லட்சணமா? நீங்க எல்லாம் எதுக்கு வரீங்க?….. நேரத்தை கடைபிடிக்க முடியலைனா உங்களுக்கெல்லாம் எதுக்கு இந்த வேலை.’

இன்னும் கண்டபடி திட்டி தீர்க்க, வாயை இறுக மூடி அனைத்தையும் கேட்டு சகித்து,

‘சாரி சார். இனி இப்படி ஆகாது..’ என மென்குரலில் உரைத்தாள். அதற்கும் ஒரு டோஸ் வாங்கிவிட்டு சீட்டில் வந்து விழுந்த பொது தலை வின் விண்ணென தெறிக்க தொடங்கியது.

காபி வாங்கி குடித்தும், தைலம் தேய்த்தும் வலி அடங்கவில்லை. அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு கிளம்பினாள். சம்பளம் கட் ஆகும். ஆனால் வேறு வழி இல்லை…இருக்கும் நிலையில் டைப் அடிக்க அவளால் முடியாது. பஸ் நின்றதும் இறங்கியவள், ஒரு பெண்ணின் கதறலில் பிரேக் இட்டது போல் நின்றாள்.

அந்த பெண் … காலையில் பிச்சை கேட்டவள் …. ஏன் அழுகிறாள்? ஓடிச்சென்று பார்த்தாள் அனு. குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு ‘ஒ’ வென கதறினாள் அவள்.

‘ஐயோ ….. போயிட்டியாடா …. ஒரு வேலை பால் கூட குடுக்க முடியாத பாவி ஆகிட்டேனே ‘

சிலையாய் சமைந்தாள் அனு. சிறிது நேரத்தில் கூட்டம் கூட…. பலரும் பரிதாபப்பட்டு பிச்சை போட்டனர்.

வெறிப்பிடித்தவள் போல வெகுண்டு எழுந்தாள் அவள்,

‘காசு… இந்த காசு தான் எலாத்துக்கும் காரணம். இதற்காகத்தான் என்னை என் கணவன் விட்டு சென்றான்.. இதே காசுக்காகத்தான் வீட்டு வேலைக்கு சென்றேன்…அங்கேயும் ஒருவன் கை பிடித்து இழுத்தான்…. விபசாரத்திற்கு பிச்சை எடுப்பது மேல் என்று தான் பிச்சைக்காரி ஆனேன்… ஆனால் இந்த காசு என் குழந்தையின் உயிரை மீட்குமா?’

எரிமலையாய் வெடித்தவள், திடீரென சாலையின் குறுக்கே ஓடினாள். விரைந்து வந்த லாரி அவளை தூக்கி அடித்தது. அவள் உயிரும் பிரிந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்தது. ‘ஐயோ…’ என அரற்றினாள் அனு. அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையாய் அடித்தது. விக்கித்து நின்றாள் அனு.

ஒரு உயிரை காக்காத காசு செல்லாக்காசே!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *