நன்றியின் உருவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 2,697  Author:  
 

முன்னொரு காலத்தில் தேவநாதன் என்று ஒரு வணிகன் இருந்தான். அவன் ஒரு நாயை வளர்த்து வந்தான். அந்த நாய்க்கு அவன் வேளை தவறாமல் உணவு வைப்பான் ; நாள்தோறும் குளிப்பாட்டுவான், ஓய்வு நேரத்தில் அதனுடன் விளையாடுவான்; இவ்வாறு அன்புடன் அதை வளர்த்து வந்தான், அந்த நாயும் அவனிடம் மிகுந்த அன்பு வைத்திருந் தது. அவன் செல்லும் இடமெல்லாம் கூடவே சென்றது. அவனுக்குப் பல சிறு வேலைகள் செய்து உதவிபுரிந்து வந்தது.

ஒரு நாள் தேவநாதன் வாணிக வேலையாக வெளியூர் ஒன்றுக்குப் புறப்பட்டுச் சென்றான். வழக்கம் போல அவன் நாயும் கூடவே சென்றது.

போகும் வழியில் களைப்பாறுவதற்காக நன்றாகப் புல் வளர்ந்திருந்த ஓர் இடத்தில் தேவநாதன் படுத் தான். படுத்தவன் அப்படியே தூங்கிப் போய்விட் டான். அந்த நாயும் அவன் பக்கத்திலேயே படுத்துக் கிடந்தது.

திடீரென்று புகைநாற்றம் மூக்கைத் துளைத்தது. நாய் கண்விழித்துப் பார்த்தது. மிக அருகாமையில் காட்டு மரங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன.

நாய் தேவநாதன் ஆடையைப் பற்றி இழுத்தது. நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தேவநாதன் கண் விழிக்கவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் நாய் திகைத்தது. சிறிது தூரத்தில் ஒரு குளம் இருப்பது தெரிந்தது. அதைக் கண்டவுடன் நாய் பாய்ந்தோடிச் சென்றது. அந்தக் குளத்திற்குள் இறங்கியது. உடல் முழுவதும் நனையும்படி தண்ணீ ரில் மூழ்கியது. பிறகு எழுந்து தேவநாதன் படுத்திருக்குமிடத்திற்கு ஓடி வந்தது. அவன் அருகில் இருந்த புல் தரையில் புரண்டது. இவ்வாறு குளத்தில் மூழ்கி மூழ்கி எழுந்து வந்து அவன் படுத்திருந்த இடத்தைச் சுற்றிலும் இருந்த புல் தரை முழுவதையும் ஈரமாக்கிக் கொண்டேயிருந்தது.

நேரம் ஆக ஆக அது குளத்திற்குப் போகும் வழியில் இருந்த மரங்களிலும் தீப்பற்றிக் கொண்டது.

அப்போதும் நாய் நெருப்பினூடே புகுந்து பாய்ந் தோடியது. தண்ணீரைத் தன் உடலில் நனைத்துக் கொண்டு ஓடிவந்து, புல்தரையை ஈரமாக்கியது. இடைவிடாமல் அது தன் வேலையைச் செய்து கொண்டே இருந்தது.

காட்டில் எரியும் நெருப்பு. தன் தலைவனை நெருங்கவிடாமல் செய்வதில் அது கண்ணும் கருத்து மாக இருந்தது. தன் உடலில் உயிருள்ள வரையில் அது தன் கடமையை விடாமல் செய்தது.

நெடுநேரம் கழித்துத் தேவநாதன் தூக்கம் கலைந்து கண்விழித்துப் பார்த்தான்.

தன்னைச் சுற்றிலும் இருந்த காடு முழுவதும் எரிந்து சாம்பலாய்ப் போயிருந்த காட்சியைக் கண்டான். அதே சமயம் தான் தீயில் வெந்து சாகாமல் இருப்பதைக் கண்டு வியந்தான். தன்னைச் சுற்றிலும் இருந்த இடம் முழுவதும் ஈரம் மாறாமல்

இருப்பதையும், புற்கள் பசுமையாகத் தளதளவென்று தலை நிமிர்ந்து நிற்பதையும் கண்டு பெரு வியப்படைந்தான். பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனுக்குத் தன் நாயின் நினைப்பு வந்தது.

சுற்று முற்றும் அவன் தன் நாயைத் தேடிக் கொண்டு சென்றான். நெருப்புச் சாம்பலின் ஊடே அதன் காலடித் தடம் கண்டு பின்பற்றிச் சென்றான். குளத்தின் கரையில் தன் அருமை நாய் சுருண்டு கிடப்பதைக் கண்டான். நெருங்கிச் சென்று பார்த்த போது, அதன் உடல் முழுவதும் நனைந்திருப்பதை யும். ஆங்காங்கே தீச்சுட்டுப் புண்கள் நிறைந்திருப்ப தையும் கண்டான்.

அவனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது. தன்னைக் காப்பாற்றுவதற்காக அந்த நாய் தன்னுயிரைக் கொடுத்திருக்கிற தென்ற உண்மையை அவன் புரிந்து கொண்டபோது. அவன் உள்ளத்தில் எழுந்த வேதனை இவ்வளவென்று சொல்ல முடியாது. உயிரைக் கொடுத்துத் தன்னைக் காத்த அந்த நாயின் நன்றியைத் தேவநாதனால் மறக்க முடிய வில்லை.

– ஒரு ஈயின் ஆசை, சிறுவர்களுக்கான எட்டுக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *