கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 36,459 
 

வெட்டி முறிக்கும் வேலை எதுவும் இல்லாத தருணங்களில், வீட்டில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து மோட்டு வளையத்தை உற்றுப்பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவன் நான். அந்த நேரங்களில், ஏதேதோ சிந்தனைகள் எனக்குள் வட்டமடிக்கும்; கற்பனைகள் சிறகடித்துப் பறக்கும்.

அப்படி ஒருநாள், மோட்டு வளையத்தை அதன் மீது படிந்திருந்த ஒட்டடையின் ஊடே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பகல் வேளையில் தோன்றிய கற்பனையில் நான் மரணித்தேன். அது அநாயாச மரணம். காபி குடித்துக் கொண்டிருந்தேன். அப்படியே நாற்காலியில் சரிந்தேன். தலை தொங்கிப்போயிற்று. சுவாசம் அடங்கியது. அவசரமாக ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். உயிர் பிரிந்து அரை மணி நேரம் ஆகிவிட்டதாக டாக்டர் அறிவித்துவிட, என் உடல் வீட்டுக்கு எடுத்துவரப்பட்டது.

நான் இறந்தது ஞாயிற்றுக்கிழமை என்பதால் மகன், மருமகள், கல்லூரியில் விஸ்காம் படிக்கும் பேத்தி அனைவரும் வீட்டில் இருந்தார்கள். கவலை தோய்ந்த முகத்துடன் மனைவி, ‘ரெண்டு மணிக்கு காபி கலந்து கொடுத்தேன். நாலு வாய் குடிச்சார். அப்படியே பிராணன் போயிடுத்து…’ என்று அங்கலாய்க்க ஆரம்பித்தாள்.

டெலிபோனில் தகவல்கள் பறந்தன. லோக்கல், நேஷனல், இன்டர்நேஷனல் என்று எல்லாத் திக்குகளிலும்… ஃபேஸ்புக்கில் பேத்தி ஸ்டேட்டஸ் அப்டேட் செய்தாள். ‘RIP’ என்று வருந்தினாள். ‘தாத்தா என்னுடைய ரோல்மாடல்’ என்று எழுதி என்னைப் பெருமைப்படுத்தினாள். ‘இப்பதான் கேள்விப்பட்டேன். அப்பாவுக்கு என்ன ஆச்சு?’ என்று என் மகனுக்கு அலைபேசி விசாரிப்புகள் வரத் தொடங்கின.

‘உடலை தரையில் கிடத்த வேண்டும்’. ‘தலையை எந்தத் திசையில் வைக்க வேண்டும்’ என்ற வழக்கமான சந்தேகம் என் விஷயத்தில் அங்கே எழும்பியது. மினி பட்டிமன்றம் ஒன்று நடந்து, வடக்குத் திசை என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும், ஹாலில் எது வடக்கு என்பது இரண்டாவது சந்தேகம். அதுவும் ஒரு மாதிரி தீர்மானிக்கப்படுவதற்குள் ஹாலில் சோஃபாக்கள் அப்புறப்படுத்தப்பட்டன. சுவர் ஓரத்தில் பிளாஸ்டிக் நாற்காலிகள் இரண்டு இருந்தன. வயதானவர்கள் அல்லது சமீபத்தில் முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டவர்கள் உட்காருவதற்கு!

தகவல் அறிந்து ஓடோடி வந்தான் என் மைத்துனன். ‘அத்திம்பேர் என்னை இப்படி அநாதையா விட்டுட்டுப் போயிட்டாரேடா…’ கதறினாள் மனைவி.

‘வருத்தப்படாதே அக்கா… தானும் கஷ்டப்படாம, மத்தவாளுக்கும் கஷ்டம் கொடுக்காமப் போனதுக்கு சந்தோஷப்படு. இப்படி ஒரு சாவு எத்தனைப் பேருக்குக் கிடைக்கும் சொல்லு?’ என்றான் மைத்துனன். தன் அப்பாவில் தொடங்கி, இப்படி அநாயாச மரணம் கிடைக்கப் பெற்றவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு சகோதரியை ஆறுதல்படுத்தினான். ‘இப்படி ஒரு சாவு எத்தனைப் பேருக்குக் கிடைக்கும்?’ என்ற கேள்விக்கு அங்கே விடை கிடைத்துக்கொண்டிருந்தது. ஆக, என்னுடைய திடீர் இறப்பு அப்படி ஒன்றும் பிரத்யேகமானதல்ல என்பதை உணர முடிந்தது.

பக்கத்து வீட்டு பரமேஸ்வரன் வந்தார். அழுக்கான எட்டு முழ வேஷ்டி. அதைவிட அழுக்காக மேல்துண்டு. இந்த மாதிரி ‘விசிட்’களுக்குப் பயன்படும் என்பதற்காகவே, நான்கைந்து வேஷ்டிகளை அழுக்காகவே ஸ்டாக் வைத்திருப்பவர்களில் ஒருவர். என் வயதுக்காரர்.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேகூட பெட்டிக் கடைல பார்த்தேன். கிங் சைஸ் சிகரெட்டை கடைசி வரைக்கும் இழுத்து, கீழே போட்டுவிட்டு காலால் மிதிச்சு அணைச்சானே’ என்றான் பரமேஸ்வரன் என் மனைவியிடம்.

‘இந்தப் பாழாப்போற பழக்கத்தை விட்டுத்தொலைங்கோனு அடிச்சுண்டேன். இப்ப அதுவே எமனா வந்துடுத்துப் பார்த்தேளா. நீங்களாவது பெட்டிக்கடைக்குப் போறதை இனிமே நிறுத்திடுங்கோ’ என்றாள் என் மனைவி.

‘மாஸிவ் ஹார்ட் அட்டாக் ஏற்பட கெட்டப் பழக்கம் எதுவும் இருக்கணும்னு அவசியம் இல்லே. ம்… இதையெல்லாம் எப்படி இவங்களுக்குப் புரியவைக்கிறது?’ என்று முணுமுணுத்துக்கொண்டு நகர்ந்தார் பரமேஸ்வரன்.

ஹாலில் ஃப்ரீஸர் பாக்ஸ் வந்து இறங்கியது. அதில் என்னை வைத்தார்கள். மேல் மூடியைக் கவிழ்த்தார்கள். த்ரீ வே பின் பாயின்ட் தேடி ப்ளக்கைச் செருகி இணைப்புக் கொடுத்தார்கள். பரமேஸ்வரன் புருவம் உயர்த்தினார். ‘இதெல்லாம் எதுக்கு?’ என்று கேட்காமல் கேட்டார்.

‘அங்கிள்… மும்பைலேர்ந்து என் சிஸ்டர் வரணும். அதனால நாளைக்குத்தான் ‘எடுக்க’ முடியும்’ என்று மகன் விளக்கினான். என் மருமகளுக்கு, இதில் ஒப்புதல் இல்லை. ‘இப்பதானே பத்து நாளைக்கு முன்னாடி வந்து பார்த்துட்டுப் போனா. இப்ப விழுந்து அடிச்சுட்டு வருவானேன்? ‘பத்து’க்கு வந்தா போதாதா?’ என்ற தினுசில் அவள் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும்.

அவள் கவலையே வேறு. நாளை மதியம் வரை ஐஸ் பெட்டி ஓட வேண்டும். கரன்ட் விழுங்கும்; பில் எகிறும். கொஞ்சம் நாட்களாக மின்வெட்டும் கிடையாது. நான் உயிருடன் இருந்தவரை, எங்கள் அறையில் ஏ.சி. ஓடினாலே, மருமகளுக்குப் பிடிக்காது. ‘தினமும் இரண்டு மணி நேரம் ஓடினாலே போதுமே. பிறந்ததிலிருந்து இவர் ஏ.சி-லதான் தூங்கிப் பழக்கமோ?’ என்று என் காது படவே இடித்துப் பேசியிருக்கிறாள். இப்போது என்னுடைய பூத உடலும் சுகம் அனுபவிப்பதை அவளால் நிச்சயம் பொறுத்துக்கொள்ள முடியாது.

சொல்ல மறந்துவிட்டேனே… மருத்துவமனையிலிருந்து எடுத்து வரப்பட்ட உடலை தரையில் கிடத்தியதும், பரமேஸ்வரனின் யோசனையின் பேரில் புத்தம் புதிய வேஷ்டி ஒன்றை பீரோவிலிருந்து எடுத்துவந்து போர்த்தினான் என் மகன். மகராசி மருமகள் இதையும் ரசிக்கவில்லை.

‘ஏம்மா… இதுக்கு புது வேஷ்டிதான் யூஸ் பண்ணணுமா?’ என்று அவளுடைய அம்மாவிடம் ரகசியக் குரலில் கேட்டாள். அந்த அம்மாள் வந்து அரை மணி ஆகிறது. காந்தி நகரில் வீடு. தகவல் சொல்லப்பட்டதும் ஆட்டோ பிடித்து வந்துவிட்டாள்.

‘ஏண்டி… உனக்கு என்ன வந்தது? அது உன் மாமனாரோட வேஷ்டிதானே?’

‘உனக்கு ஒரு எழவும் புரியாது. புது வேஷ்டி கைவசம் இருந்தா விசேஷ நாட்கள்லே அவர் கட்டிக்கலாம் இல்லியா?’ மருமகளின் அம்மா, தலையில் அடித்துக்கொண்டு சரவணபவனில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த காபியை எடுத்துக் குடித்தாள்.

‘எடுப்பது’ நாளைக்கு என்று முடிவாகிவிட்டதால் எல்லாமே மந்தமாக நடந்தன. மிகவும் நெருங்கிய உறவுகளில் ஒருசிலர் வந்தார்கள். இப்போது தலையைக் காட்டிவிட்டுப் போய்விட்டு மறுபடியும் நாளைக்கும் வருவார்கள். ‘செலவுக்கு எல்லாம் பணம் இருக்கு இல்லியா?’ என்று ஒரு பெரிசு கேட்டது. இப்படி ஏதாவது கேட்டு என் மகனைச் சங்கடப்படுத்துவார்கள் என்று எனக்குத் தெரியும். கோத்ரெஜ் பீரோவில் எப்போதும் ரொக்கமாக 5,000 ரூபாய் வரை வைத்திருப்பேன். வீட்டில் எல்லோருக்கும் இது தெரியும்.

‘வாத்தியாருக்குச் சொல்லியாச்சா?’

‘கிரிமேஷன் கிரவுண்ட் புக் பண்ணியாச்சா?’

‘டாக்டர்கிட்டே சர்ட்டிஃபிகேட் வாங்கியாச்சா? அதைக் காட்டினாத்தான் ‘பாடி’யை உள்ளே விடுவா!’

‘இப்ப எல்லாம் ஆன்லைன்லேயே டெத் சர்ட்டிஃபிகேட் கிடைச்சுடும். ரொம்ப அலைய வேண்டாம்.’

‘பெசன்ட் நகர்தானே. எலெக்ட்ரிக்ல ஒரு சௌகரியம். ஒன்றரை மணி நேரத்துல சாம்பலைக் கைல கொடுத்துடுவா. பக்கத்திலேயே பீச் இருக்கு. அஸ்தியைக் கரைச்சுட்டு வந்துடலாம்.’

‘கரெக்ட். இன்னிக்குச் செத்தா நாளைக்கு பால்லாம் இப்போ கிடையாது. செத்த அன்னிக்கே சாம்பல்; அன்றே பால்!’

‘இருபது பேருக்கு வெளில சாப்பாடு சொல்லிடு. காலைல வேணும்னா ஹோட்டல்ல இட்லி கிட்லி சொல்லிடலாம். எப்படியும் ‘எடுக்க’ பன்னிரண்டு மணி ஆயிடும். எல்லாம் முடிச்சுட்டு வீடு திரும்ப மூணு ஆயிடும்.’

இப்படி இலவச ஆலோசனைகள் குவிந்தன. அழுகுரல் அதிகமாகக் கேட்கவில்லை. அரை மணிக்கு ஒரு தடவை யாராவது பெண்மணி உள்ளே நுழைந்தால், லேசான விசும்பல் மட்டும் கேட்கிறது. எனில், என்னுடைய மரணம் காரணமாக யாருக்கும் வருத்தம் இல்லையா? அப்படிக் கிடையாது. பொதுவாகவே இப்போது எல்லாம் நெருங்கிய சொந்தபந்தம் யாராவது செத்துப்போனால்கூட யாரும் பெரிதாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து அலட்டிக்கொள்வதில்லை. நிறைய வீடுகளில் நானே கவனித்திருக்கிறேன். ஆக வேண்டியதைப் பார்ப்பதில்தான் எல்லோரும் குறியாக இருக்கிறார்கள். உடலை அப்புறப்படுத்திவிட்டு வீட்டைக் கழுவிவிடுவதில்தான் அனைவரின் கவனமும். இங்கே என் மைத்துனரும் பக்கத்து வீட்டு பரமேஸ்வரனும் அதை முன்நின்று செய்துகொண்டிருந்தார்கள்.

‘ஏண்டா… பேப்பர்ல கொடுக்கணுமே!’ என்று என் மகனிடம் மைத்துனன் கேட்டு அடுத்த விவாதத்துக்குக் களம் அமைத்துக் கொடுத்தான்.

‘பின்னே வேண்டாமா?’ என்றார் பரமேஸ்வரன்.

‘சிட்டி எடிஷன் போதுமா? இல்லே ஆல் இண்டியாவுல வரணுமா?’

இடையில் புகுந்தாள் மருமகள்.

‘சென்னை எடிஷனே அதிகம். தாம்பரம் தாண்டினா, எத்தனை பேரை உங்க அப்பாவுக்குத் தெரியும்?’ என்றாள்.

‘அப்படிச் சொல்ல முடியாது. மும்பை, சண்டிகர்னு நார்த்ல நிறைய ஊர்கள்ல அவர் சர்வீஸ்ல இருந்திருக்கார்.’

‘மே பி. பட், அங்கே எல்லாம் யார் இவரை ஞாபகம் வெச்சுட்டு இருக்கப்போறாங்க?’

என்னை மாதிரி பிரபலம் அற்றவர்களுக்கு இதுதான் சங்கடம். இதுவே நான் வி.ஐ.பி-யாக இருந்து இறந்திருந்தால், இலவசமாக எல்லா பேப்பர்களிலும் செய்தி போட்டிருப்பார்கள். டி.வி. சேனல்களிலும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருப்பார்கள். டி.வி. கேமராவும் மைக்கும் வீடு தேடி வந்திருக்கும். எனக்குக் கொடுப்பினை இல்லை.

விவாதம் தொடர்ந்தது.

‘போட்டோ வேணுமானு பார்த்துக்குங்க. ரொம்பச் செலவாகும். ஸ்போர்ட்ஸ் பேஜ்ல சின்னதா வந்தா போதும்’ என்று என் மருமகள் தன் கருத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறாள். மௌன சாட்சியாக என் மனைவி.

‘தாத்தா போட்டோவைப் போட்டு பேப்பர்ல இன்சர்ஷன் கொடுக்கலாம் அப்பா’ என்றாள் என் பேத்தி. ‘தாத்தாவுக்கு போட்டோ எடுத்துக்கறது ரொம்பப் பிடிக்கும்’ – தன் செல்ல மகளின் வேண்டுகோளை என் மகனால் நிராகரிக்க இயலவில்லை. போட்டோ ஓ.கே. ஆனது.

லேப்டாப் திறந்து, பிகாஸா ஆல்பங்களில் என் புகைப்படம் தேட ஆரம்பித்தாள் பேத்தி. சொந்தங்கள் வீட்டுக் கல்யாணங்களில் எடுத்தவை, குடும்பத்துடன் ஊட்டி சென்றபோது க்ளிக் செய்தவை, பாஸ்போர்ட்டுக்காக நான் எடுத்துக் கொண்டவை… இப்படி எல்லாவற்றையும் ஆராய்ந்துவிட்டு ஒரு போட்டோவைத் தேர்வு செய்தாள். அதில் நான் சிரித்துக்கொண்டிருந்தேன். 15 வயது குறைவாகத் தெரிந்தேன். அந்தப் படத்தை அவள் ‘க்ராப்’ செய்துகொண்டிருக்க, ஆபிச்சுவரியின் வாசகத்தை எழுதிப்பார்த் தார்கள். யார் பெயரைச் சேர்ப்பது, யாருடையதை விடுவது என்று விவாதித்தார்கள். விளம்பரத்தில் என் மருமகனின் பெயரும் ‘வருந்துபவர்களின்’ பட்டியலில் இணைக்கப்பட்டது.

என்னுடைய மும்பை மகளின் பெயரும், மருமகனின் பெயரும் சேர்க்கப்பட வேண்டுமா என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு, வேண்டாம் என்று இறுதியில் நிராகரிக்கபட்டது. திருமண அழைப்பிதழ்களில், ‘பெஸ்ட் காம்ப்ளிமென்ட்ஸ்’ போடும்போதுதான் இப்படி விவாதம் நடக்கும். இப்போதெல்லாம் துக்க விஷயத்துக்குள்ளும் அது நுழைந்துவிட்டது.

ஃப்ரான்சைஸுக்கு, என் மகன் டெலிபோனில் சொல்ல, வீடு தேடிவந்து விளம்பரத்தையும் ‘செக்’கையும் வாங்கிச் சென்றார்கள். வீட்டைவிட்டு என் ‘பாடி செல்வதற்கு முன், போட்டோ முந்திக்கொண்டு நாளை காலையில் பேப்பரில் வந்துவிடும். என்னைத் தெரிந்த பலர் ‘அடப் பாவமே… சிவராமன் போயிட்டானே!’ என்று லேசாக அதிர்ந்துவிட்டு, பக்கத்தில் வேறு யாராவது தெரிந்த முகம் மண்டையைப் போட்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு அடுத்த பக்கத்துக்குத் திருப்பிவிடுவார்கள். சிலர், போனில் விசாரிப்பார்கள். வேறு சிலர், ‘அந்தப் பக்கம் போறப்ப போய் துக்கம் விசாரிக்கலாம்’ என்று சொல்லிவிட்டு, வேறு வேலை பார்க்கப் போய்விடுவார்கள்.

அன்று இரவு வீட்டில் யாரும் தூங்கவில்லை. பரமேஸ்வரன், காலையில் வருவதாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான். மற்றவர்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘அப்பாவுக்கு கோபமும் கண்டிப்பும் அதிகம். இருந்தாலும் நம்ப மேல கொள்ளைப் பிரியம் அவருக்கு’ என்று மும்பையிலிருந்து வந்துவிட்டிருந்த தன் சகோதரியிடம் சொல்லிக்கொண்டிருந்தான் என் மகன்.

‘ஆமாண்டா, போன வருஷம் அப்பாவுக்கு ஆபரேஷன் ஆன சமயம், ஒரு வாரம் நான் கூடவே இருந்தேன். அப்போ உன்னைப் பத்தியும் மன்னியைப் பத்தியும் ரொம்ப உயர்வாப் பேசினார்.’

எதிர்காலம் பற்றிக் கவலைப்பட்டுவிட்டு, என் மனைவி லேசாகக் கண் அயர்ந்தாள்.

‘அவருக்கு ஒரே குறை. நான் ஒரு டேப்ளட் வாங்கிக் கொடுக்கலேங்கிறதுதான். ‘ஏண்டா டாக்டர் கொடுக்கிற மாத்திரைகள் மட்டுமே எனக்குப் போதும்னு வெச்சுட்டியா?’னு ஜோக் அடிப்பார்.

‘ஆமாம்… நான்கூட அடுத்த பிறந்த நாளைக்கு அப்பாவுக்கு ஒரு ஐ-பேட் வாங்கிக் கொடுக்கலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்’ என்று என் மகள் சொன்னது, எந்த அளவுக்கு உண்மை என்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.

‘திடீர்னு இப்படிப் போயிடுவோம்னு அப்பா கொஞ்சம்கூட நினைச்சிருக்க மாட்டார். 100 வயசு வரை வாழணும்னு அவருக்கு ஆசை. எல்லாத்தையும் அனுபவிக்க ஆசைப்பட்டவர் அப்பா’ – என்னைப் பற்றி என்னைவிட என் மகளுக்கு அதிகம் தெரிந்திருக்கிறது.

விடியலுக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள். சோர்வையும் மீறி அனைவரும் சுறுசுறுப்பாகிவிடுவார்கள்.

காலை நாளிதழ் வந்ததும் என் மகனும் மற்றவர்களும் பாய்ந்துவந்து என்னுடைய இறப்புத் தகவல் சரியாகப் பதிவாகி இருக்கிறதா என்று பார்த்தனர். தான் தேர்வு செய்த போட்டோ சரியாக அச்சாகியுள்ளதா என்று பேத்தி பார்த்துக்கொண்டாள். என்னுடன் இறுதிப் பயணத்துக்கு எத்தனை பேர் செல்லப்போகிறார்கள் என்பதற்கு என் மைத்துனன் கணக்கு எடுத்துக்கொண்டான். பரமேஸ்வரனும் வந்து சேர்ந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் சேர்ந்தது. வந்திருந்தவர்களின் தலைகளை எண்ணிப் பார்த்தபோது கொஞ்சம் ஆச்சர்யமாகக்கூட இருந்தது. பரவாயில்லையே… எனக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு இத்தனை பேரா?

‘ரெண்டு மணிக்கு நாலு வாய் காபி குடிச்சார். அப்படியே சுவாசம் நின்னுடுச்சு’ என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. ‘அப்படியே தூங்கற மாதிரிதான் இருக்கு’ என்றும் மறுபடியும் மறுபடியும் சொல்லப்பட்டது. இவர்கள் யாருமே என்னைத் தூங்கும் கோலத்தில் பார்த்தது இல்லை. எப்போதும் நான் பக்கவாட்டில் படுத்துதான் உறங்குவேன் என்பதும் யாரும் அறியாத ஒன்று.

வாசலில் ஷாமியானாவெல்லாம் போட்டு காசு விரயம் பண்ணவில்லை என் மகன். வாடகைக்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் எடுக்கவில்லை. வீட்டில் டைனிங்டேபிளுடன் இருந்த நாற்காலிகளைப் பயன்படுத்திக்கொண்டான். கால் உடைந்த நாற்காலிகள் இரண்டு கொடுத்து உதவினார் பரமேஸ்வரன்.

ஐஸ் பாக்ஸ் மீது முதல் மாலை வைக்கப்பட்டது. இறந்த உடல் மீது வைக்கப்படும் பூமாலைகளுக்கு எப்போதும் தனி வாசம் உண்டு. இஸ்திரிக்காரர் செல்வராஜ் தன் குடும்பத்துடன் வந்து மரியாதை செலுத்தினார். வீட்டில் வேலைசெய்யும் சின்னம்ம£வின் புருஷன் ரங்கன் குடித்துவிட்டு வந்து, எனது முகம் பார்த்துக் கும்பிடு போட்டான். லேசாக அழுதான். ‘அவசர ஆபத்துக்கு பத்து, இருபது வேணும்னா யார்கிட்டே கேட்பேன்? ஐயாவை விட்டா எனக்கு யாரையும் தெரியாதே’ என்றான். ரங்கனை, செல்வராஜ்தான் கைபிடித்து வெளியே அழைத்துப் போனார்.

நான் சர்வீஸில் இருந்த காலத்தில் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிந்த, என்னுடன் ஆத்மார்த்தமாகப் பழகிய 13 பேர் பெர்மிஷன் போட்டுவிட்டு வந்திருந்தார்கள். வரிசையாக வந்து எனக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, என் மகனிடம் ‘என்ன ஹெல்ப் வேணும்னாலும் தயங்காமக் கேளுங்க. உங்க அப்பாவுக்கு நாங்க ரொம்பக் கடன் பட்டிருக்கோம்’ என்று சொல்லிவிட்டு வெளியே நாற்காலிகளில் சிலர் உட்கார, நின்றுகொண்டிருந்தார்கள் மற்றவர்கள்.

இவர்கள் என்னைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு ஊர் உலகத்தைப் பற்றி நிறைய வம்படித்தார்கள்.

வாத்தியார் வந்துவிட்டார். கூடவே மூங்கில், ஓலை, கயிறு மாதிரியான அத்தியாவசிய சாமான்களும். உதவிக்கு ஒடிசலாக ஓர் ஆள். அவரின் கன்னத்தில் டொக்கு விழுந்திருந்தது. சட்டையைக் கழற்றிச் சுருட்டி தன் மஞ்சள் பைக்குள் வைத்தபோது அவரது மார்புப் பகுதி எலும்புகளை எண்ணிவிட முடிந்தது. அசாத்திய சுறுசுறுப்புடன் புரோகிதருக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் மடமடவெனச் செய்தார்.

‘ரகுராமா, நீ போய் ஸ்நானம் பண்ணிட்டு ஈர வேஷ்டியோட வா’ என்று என் மகனிடம் வாத்தியார் சொல்லிக்கொண்டிருந்தபோதே, இடுப்பில் இருந்த அவரது செல் அலறியது.

‘ஆமாம்… ராமகிருஷ்ணன்தான் பேசறேன். முகூர்த்தம் பதினொன்றரை மணிக்குத்தானே? அதுக்குள்ள நான் வந்துடுவேன்’ என்று போனில் சுபகாரியம் பற்றி பேசிவிட்டு, ‘நேத்திக்கு எத்தனை மணிக்கு உயிர் நின்னுது?’ என்று இங்கே மைத்துனனிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதுவும் நிறைய சாவு வீடுகளில் நடப்பதுதான். இதுமாதிரி சந்தர்ப்பம் தெரியாமல் பேசுபவர்களிடமிருந்து செல்போனைப் பிடுங்கி, வங்காள விரிகுடாவில் வீசி எறிய வேண்டும் என்று எனக்குத் தோன்றும். இதைவிட மோசம், கல்யாண மேடையில் மந்திரம் சொல்லிக்கொண்டே மொபைல் போனில் ‘பாடியை எப்போ எடுக்கறாளாம்?’ என்று கேட்கும் பிரகிருதிகள்.

ஐஸ் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து வெறும் தரையில் கிடத்தப்பட்ட உடலைக் குளிப்பாட்டிவிட்டார்கள். புரோகிதர் மந்திரம் சொல்ல, அர்த்தம் தெரியாமல் மகன் அதைத் திருப்பிச் சொல்ல மகளும் மனைவியும் குரல் உயர்த்தி அழுதார்கள். பார்த்த வேறு சிலருக்கும் அது தொற்றிக்கொண்டது.

‘லேடீஸ் எல்லாம் வாய்க்கரிசி போட்டுடலாம். ஜென்ட்ஸ்ல காட்டுக்கு வராதவா இங்கே போட்டுடலாம். அப்பா, அம்மா இருக்கறவங்க போடக் கூடாது’ என்று வாத்தியார் சாஸ்திரம் சொன்னார்.

‘பாடி’ வேனில் ஏற்றப்பட்டது. குமுறி அழுத மனைவியின் முகம் பார்க்கப் பரிதாபமாக இருந்தது எனக்கு. மாமியாரின் தோள் அணைத்து மருமகள் ஆறுதல் சொன்னபோது பெருமையாக இருந்தது. மருமகள் அப்படி ஒன்றும் மோசமானவள் கிடையாது!

சட்டென்று என்னுடைய கற்பனை கலைந்தபோது, பாத்ரூம் சென்று தலைமுழுக வேண்டும் போலிருந்தது. பசி வயிற்றைப் பிசைந்தது. நான் கற்பனையில் கண்டது எல்லாம் எங்கும் நடப்பதுதான். நாளைக்கு என் விஷயத்திலும் அது நடக்கவே செய்யும். அனைத்தும் இப்போது இயந் திரத்தனமாகிவிட்டது. இனி, யாரும் யாருக்காகவும் வருத்தப்படப்போவது இல்லை. அடுத்தடுத்த வேலைகள் அவரவருக்குக் காத்துக்கிடக்கின்றன.

உடல் சாம்பலாகிவிட்டது. நல்லது. எனில், பிரிந்து சென்ற உயிர் என்ன ஆயிற்று?

அடுத்த முறை மோட்டுவளையம் பார்த்து உட்காரும்போது கற்பனை செய்துபார்க்க வேண்டும். அதற்கு முன்னர், நிறைய நூல்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

‘பஜ கோவிந்தம்… பஜ கோவிந்தம்… பஜ கோவிந்தம்… மூடமதே..!’

– செப்டம்பர் 2013

Print Friendly, PDF & Email

3 thoughts on “ஒத்திகை

  1. நல்ல சிறுகதை , நிச்சயம் அனைவரும் ஒரு நாள் இதனை கடந்தே ஆக வேண்டும்

  2. மிக நன்று. எல்லா சமயங்களிலும் எது எப்படி நடக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்து திருப்தியடையும் மனிதர்களை நன்றாகக் கேலி செய்திருக்கிறார் கதாசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *