அமிர்த விசம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 8, 2024
பார்வையிட்டோர்: 5,024 
 

மதுவின் போதையைப்போல் மாலைப்பொழுது தந்த மயக்கமும், கவிச்சக்ரவர்த்தி கம்பனின் கவிதை வரிகளை பாடலாகப் பாடியதில் ஏற்பட்ட மயக்கமும் தன்னிலை மறக்கச்செய்திருந்தது சோழ தேசத்து இளவரசி அமராவதிக்கு.

பணிப்பெண்கள் இளவரசியின் சிந்தனையோட்டத்துக்கு இடையூறு செய்யாமல் சற்று தள்ளி உள்ள நந்தவனத்தில் நாளை அரண்மனையில் நடக்கவிருக்கும் மன்னரின் பிறந்த நாள் விழாவுக்காக மலர்களைப்பறித்துக்கொண்டிருந்தனர்.

கம்பனின் கவிதைகளின் மீது உள்ள காதலைப்போலவே அவரின் வாரிசான அம்பிகாபதியின் மீதும் காதல் கொண்டிருந்தாள். 

தந்தையின் கவிதைகளைப்படிக்கும் போது ஏற்படும் மன மகிழ்ச்சி தனயனின் கவிதைகளிலும் ஏற்பட்டதோடு அவனைக்காதலிப்பதிலும் இருப்பதையெண்ணி பூரித்தாள்.

கவிதைகளை ரசிக்கும் பழக்கத்தோடு எழுதவும், பாடவும் விருப்பம் கொண்டிருந்த அம்பிகாபதியை அமராவதிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனது முகத்தில் இருந்த வசீகரமான ஈர்ப்பை தன் வாழ்நாளில் இதுவரை யாரிடமும் பார்த்ததில்லை. அவன் முன் அரண்மனையோ, இந்த ராஜ்ஜியமோ அவளுக்குப்பெரிதாகத்தெரியவில்லை.

கம்பர் எப்பொழுதும் சோழ சக்ரவர்த்தியின் மகள் இளவரசி எனும் மனநிலையில் தான் உரையாடுவார். சந்தேகங்களுக்குப்பதில் கூறுவார். அவரது மகனோ இளவரசி தனக்கு சமமானவர் எனும் மனநிலையில் ஏற்றதாழ்வு பற்றி யோசிக்காமல் சாதாரண பிரஜைகளுடன் உரையாடுவது போல் செயல்பட்டது இளவரசிக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் மனிதர்கள் தானே….? இன்பம், துன்பம், இறப்பு, பிறப்பு, இரவு,பகல் அனைவருக்கும் ஒன்றுதானே…? என்பது போல் எண்ணிய படி கவிதைகளில் ஏற்பட்ட சந்தேகங்களைத்தீர்த்து வைத்தான்.

நேற்றைய அவனது உரையாடல்களை நினைவு படுத்திப்பார்த்துக்கொண்டாள். தினம் தோறும் எத்தனையோ மனிதர்களைச்சந்தித்தாலும் ஒரு சிலரைத்தான், அவர்களது செயல்பாடுகளைத்தான் மனதுக்குப்பிடித்துப்போகிறது. அவ்வகையில் அம்பிகாபதியின் பேச்சும், செயலும் அவளை வெகுவாகக்கவர்ந்திருந்தது.

“அமராவதி நீங்கள் தானே…? நேராக அந்தப்புரத்துக்கே வந்து தைரியமாகக்கேட்டான் வாலிபன் ஒருவன்.

“அவனது இளம் பருவத்தின் தோற்றமும், பணிப்பெண்களிடம் கேட்காமல் நேராக தன்னிடமே வந்து தைரியமாகக்கேட்ட விதமும் பிடித்திருந்ததால்” ஆம்” என்றதும், “நான் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் புதல்வன். எனது பெயர் அம்பிகாபதி…தங்கள் தந்தையான மன்னரின் பிறந்த நாளில் வாசிக்க புதிய கவிதைகளை எழுதச்சொல்லி என்னிடம் எனது தந்தை கூறியிருந்தார். முதலில் தங்களிடம் கவிதை சொல்லி அனுமதி வாங்க வேண்டுமாம். இங்கேயே படிக்கட்டுமா?” எனக்கேட்ட தருணம் காவலர் ஒருவர் வந்து அவனை வெளியே கட்டாயமாக இழுத்தபடி அழைத்துச்சென்று ஓர் அறையில் அமர வைத்தது இளவரசிக்கே பிடிக்கவில்லை.

“ஆண்களுக்கு இளவரசியின் அறைக்குள் நுழைய அனுமதியில்லை. இங்கே அமருங்கள் . பணிப்பெண்கள் இளவரசியை அழைத்து வருவார்கள்” எனக்கூறிய போதுதான் அரண்மனைக்கட்டுப்பாடுகளைப்புரிந்து கொண்டான். 

சபை போன்று இருக்கைகள் கொண்ட அறையில் திரைத்துணி கட்டப்பட்டிருந்தது. திரைக்கு மறு பக்கம் இளவரசியின் அமர்ந்திருந்த உருவம் தெரிந்தது. “பேசலாமா?”என பேசிய தேனினும் இனிய குரலைக்கேட்டதும் “பேசலாம்” என்றான்.

அம்பிகாபதி பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனிக்க காவலர் ஒருவர் அவனருகிலேயே நின்று கொண்டிருந்தார். இளவரசி யாரையும் காதலித்து விடக்கூடாது என்பதில் மன்னர் கவனமாக இருந்தார். வாழ்த்துக்கவிதையைத்தவிர வேறு எதுவும் பேசி விடக்கூடாது என்பதை தன் மகனுக்கு கம்பர் அறிவுரை கூறி அனுப்பியிருந்தார்.

அம்பிகாபதி கவிதை வாசித்த விதமும், அவனது குரலும் பிடித்துப்போக ‘நாளை உனது வாழ்த்துக்கவிதையை நீயே மன்னர் முன் வாசிக்க வர வேண்டும்’ என கட்டளையிட்டு சில பொற்காசுகளை பணிப்பெண்கள் மூலமாகக்கொடுத்து அனுப்பி வைத்ததில் பூரித்துப்போயிருந்தான் அம்பிகாபதி.

அமராவதியைப்போலவே அம்பிகாபதிக்கும் இரவு உறக்கம் வர மறுத்தது. ஒருவரையொருவர் நினைப்பதை, நினைப்பதால் ஏற்படும் மகிழ்வை தடை செய்ய இயலவில்லை என்பதை விட தடை செய்ய விரும்பவில்லை. கற்பனைக்கடலில் மூழ்கி காதலெனும் முத்தை எடுத்திருந்தனர். அவரவர் மனம் அவரவரிடத்தில் இல்லை. 

இளவரசி சொன்ன செய்தியை அம்பிகாபதி சொல்லக்கேட்டு கம்பர் அதிர்ச்சியடைந்தார். 

எது நடந்து விடக்கூடாது என நினைத்திருந்தாரோ அது நடந்து விட்டதை எண்ணி வருந்தினார். தனக்கு உடல் நிலை சரியில்லாததால் தான் மகனை கவிதை சொல்ல அனுப்பியிருந்தார். திரை மறைவில் சொல்வது தானே… அதுவும் தன் தந்தையின் பிறந்த நாளுக்காக சிறந்த கவிதையை தான் சொல்லவே இளவரசி எழுதித்தர வேண்டுமெனக்கேட்டிருந்ததாலேயே தனது கவிதையென்றால் யார் எழுதியது என்பதை மன்னர் கண்டு பிடித்து விடுவார். மகன் எழுதியதைக்கண்டுபிடிக்க முடியாது. இளவரசி எழுதியதாகவே நம்புவார் என நினைத்ததால் மகனை அனுப்பியிருந்தார். இளவரசியோ கவிதை எழுதி வந்த அம்பிகாபதியே படிக்க வேண்டுமென்றும், அவரது கவிதை அரங்கேற்றமாகவும் நிகழ்ச்சி இருக்க வேண்டும் எனவும் கூறியிருப்பதைப்பார்க்கும் போது அம்பிகாபதி மீது இளவரசி காதல் கொண்டு விட்டார் என்பதை புரிந்து கொண்ட கம்பர் அடுத்த நாள் மகனுடன் தானும் சென்றார்.

மன்னர் மகாராணியுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். புதிதாக ஒரு மேடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது மன்னருக்கு ஐயத்தை வரவழைத்திருந்தது. நம் அனுமதியில்லாமல் எப்படி வந்தது? அருகிலிருந்த மகாராணியைத்திரும்பிப்பார்த்தார். இல்லையென பதில் வந்தது. மகளைப்பார்த்தார் ஆம் என முகஸ்துதியால் சொன்ன போது ஐயம் மன்னருக்கு அச்சமாக மாறியது. மன்னருக்கு மந்திரிகளும், குறு நில மன்னர்களும் பிறந்த நாள் வாழ்த்துச்சொல்லிக்கொண்டிருந்தனர்.

அம்பிகாபதி மேடையேறும் போது இளவரசி கை தட்டி வரவேற்றது மன்னருக்குப்பிடிக்கவில்லை. மந்திரியை அழைத்துக்கேட்ட போது பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை என்றதும் சாந்தமானார். கம்பரின் புதல்வன் எனத்தெரிந்ததும் மகிழ்ந்து வரவேற்றார். கவிதையை ரசித்து கைதட்டி பாராட்டியதோடு பரிசுகளை வழங்கி அனுப்பிய மன்னர் கம்பனைத்தனியாக அழைத்துப்பேசினார்.

“நமது தேசத்தில் தங்களுக்கு நிகரான புலவர்கள் யாருமில்லை. தங்கள் மகனும் புலவனாகியிருப்பது மகிழ்ச்சி. இது வரை நீங்களும் நமது அரண்மனையைச்சேர்ந்தவர்களும் பழகிய விதம் வேறு. நாங்கள் உங்களுடன் நடந்து கொண்ட விதமும் வேறு. ஆனால் இன்று எனது அருமை மகள் இளவரசி அமராவதி உங்கள் மகனின் செயல்பாடுகளை கைதட்டி வரவேற்றதும், மகிழ்ந்ததும் ஆபத்தை வரவழைக்கும் நிகழ்வாகும். ஆபத்தென்பது அமராவதிக்கு அல்ல, உங்களது அருமைப்புதல்வன் அம்பிகாபதிக்கு” என மன்னர் கூறியதும் அதிர்ச்சியில் உறைந்து போனார் கம்பர்.

நா தழுதழுக்க ” மன்னா என்னையும், எனது மகனையும் மன்னித்து விடுங்கள். உடனே அவனை கண்காணாத தேசத்துக்கு அனுப்பிவைத்து விடுகிறேன்” என கைகூப்பி வணங்கிய படி கண்களில் நீர் வடியப்பேசினார் கம்பர்.

அந்த நேரத்தில் அங்கே வந்த இளவரசி”அற்புதம், அற்புதம். உங்கள் கவிதைகளை விட அம்பிகாபதியின் கவிதைகள் அற்புதம். அவரது கவிதையைக்கேட்டதிலிருந்து எனது உடல் வலி முற்றிலும் காணாமல் போய் விட்டது. மன வலியும் தான். அடுத்த மந்திரி சபை கூடும்போது அவரை அரசவைக்கவிஞராக அறிவித்து விட வேண்டும்” எனப்பேசியது மன்னரைவிட கம்பரைத்தூக்கி வாரிப்போட்டது போல இருந்தது. மன்னர் முகத்தில் கோபக்கணல் பற்றி எரிந்தது.மன்னர் எதுவும் பேசாமல் தனது அறைக்கு சென்றதைக்கண்டபோது ‘அடுத்து என்ன நடக்கப்போகிறதோ?’ என மன பயம் கொண்டார் கம்பர்.

அரண்மனையருகிலேயே கட்டப்பட்டிருந்த தனது வீட்டிற்குச்சென்ற போது அம்பிகாபதி காதல் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தான். அருகில் அமராவதி அமர்ந்திருந்தாள். அவளது விருப்பப்படி சொற்களைப்போட்டு எழுதவைத்துக்கொண்டிருந்தாள் என்பது தான் உண்மை.

அமராவதி மிகவும் பிடிவாதமான பெண். தனக்குப்பிடித்ததை பெறாமல் விடமாட்டாள். அதனால் ஏற்படும் விளைவுகளைப்பற்றிக்கவலைப்படவும் மாட்டாள் என்பது சிறு வயது முதலே கம்பருக்கு நன்றாகத்தெரியும்.அதன் காரணமாகவே தனது மகனை அரண்மனையிலிருப்பவர்கள் யாரும் பார்த்துப்பழகாதவாறு தூரத்திலிருந்த தனது மனைவியின் தாய் வீட்டில் வளர்த்ததோடு அங்கேயே படிக்கவும் வைத்தார்.

காதல் என்பது மூடி மறைக்க வேண்டிய விசயம் இல்லை. மனதை ஒருநிலைப்படுத்தும் வல்லமை காதலில் இருப்பதாகக்கருதினாள் இளவரசி. அம்பிகாபதியைப்பார்த்தது முதல் தன் வாழ்க்கை முறையே மாறி விட்டதாகவும், ஆனந்தமான மனநிலையில் தான் இருப்பதாகவும் கூறினாள்.

தன் மகனுக்கு கிடைத்திருக்கும் காதல், அமிர்தம் என்றாலும் அதிகார போதை கொண்டோரால் அது விசமாகும். மழை நீரைத்தேக்க அணைகட்டலாம். அணையை உடைக்கும் பெரு வெள்ளத்தைத்தடுக்க முடியாது. சிறு குடிசையை பெருவெள்ளம் அடித்துச்செல்லுமே தவிர அரவணைத்து நிற்காது. தனது மகனின் வாழ்வு நிஜத்தில் நீடித்து நிலைப்பதை விட வரலாற்றில் நிலைத்திருக்கும் என்பது மட்டும் கம்பருக்குப்புரிந்ததால் நடப்பது விதி என நினைத்துச்சாந்தமானார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *