மீன லோசனி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2022
பார்வையிட்டோர்: 1,791 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நமஸ்காரம். சித்திக்குத் தாங்கள் ஒழுங்காக அனுப்பி வந்த பணத்தைத் திடீரென்று நிறுத்தி விட்டீர்கள். இரண்டு மாதங்களாக உங்கள் சித்தி மிகவும் சிரமப்படுகிறாள். ஞாபகப்படுத்தி எழுதிய கடிதத்துக்கும் பதில் இல்லை. உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது நேர்ந்துவிட்டதோ என்று சித்தி வருத்தப்படுகிறாள். இந்தக் கடிதத் துக்கும் பதில் இல்லை யென்றால் உங்கள் சித்தி புறப்பட்டு அங்கே வந்துவிடுவாள்.

உங்கள் சித்தி சொல்படி,
மீனலோசனி.”

இந்தக் கடிதத்தைப் படித்ததும் கேசவனுக்குக் கோபம்தான் பொத்துக்கொண்டு வந்தது. ஆனால் அந்தக் கடிதம் முத்து முத்தாக எழுதப்பட்டிருந்ததாகையால் உடனே கிழித்தெறிய மனம் வரவில்லை. அதை எழுதியவள் ஒரு இளம் பெண் என்று அவனது உள் மனம் அவனுக்கு ஏனோ சொல்லிற்று. அந்தக் கையெழுத்தின் அழகைப் பார்க்கும் போதே அந்தக் கடிதத்தை எழுதியவளின் அழகை மானசீகமாக அவனால் காண முடிந்தது.

சித்தி அவளை நினைக்கும் போதே அவனுக்குக் கோபமாக வந்தது. அவன் தகப்பனார் மட்டும் இரண்டாந்தாரமாக அவளை மணக் காதிருந்தால் அவன் மனம் இத்தனை தூரம் சஞ்சல அடைய நேர்ந்திராது. இத்தனைக்கும் அவன் இன்னும் சித்தியைக் கண்ணால் கூடப் பார்த்ததில்லை.

கேசவனுக்கு மூன்று வயதாயிருக்கும் போதே அவன் தாயார் இறந்துவிட்டாள். குழந்தைப் பிராயமாதலால் தாயைப் பிரிந்து துயரம் அவனை அதிகமாக வாட்டவில்லை. ஆனால் அவன் தகப்பனார் மனைவியைப் பிரிந்த துக்கத்தில் பாதி உடம்பாகிவிட்டார். குழந்தை கேசவன் மட்டும் இல்லை என்றால் அவர் தம் உயிரையே மாய்த்துக் கொண்டிருப்பார். கேசவனை வளர்ப்பதற்காக அவர் துக்கத்தை ஒருவாறு மறந்து இருந்தார் . அவர் ஒரு மிராசுதாராகையால் அவருக்கு வாழ்க்கையில் வேறு கஷ்டம் இல்லை. ஆகவே அளவுக்கு மீறி மிகவும் செல்வமாகக் கேசவனை வளர்த்தார். கேசவன் எதை. விரும்பினாலும் அது மறுகணம் அவன் கைக்கு வந்துவிடும். வயது வளருவது போலவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கேசவனிடம் முரட்டுப் பிடிவாதமும் வளர்ந்து கொண்டே வந்தது.

கேசவன் நாலாம் பாரம் வரையில் உடள்ளூரிலேயே படித்தான். அவன் வகுப்பு மாணவர்கள் சென்னைக்குப் போய்ப் படிப்பதை அறிந்து அவனும் சென்னைக்குப் போக விரும்பினான். கேசவன் ஒரு காரியத்தைச் செய்ய விரும்பினான் என்றால் அதை மாற்றத் திரி நேத்திரனான பரமசிவனாலேயே முடியாது. குழந்தைப் பிராயத்தில் வளர்ந்த பிடிவாதம் இப்பொழுது வலுப்பட்டு வைரம் பாய்ந்து அசைக்க முடியாதபடி ஆகிவிட்டது. சென்னையில் ஒரு வீடு பார்த்து அங்கு ஒரு சமையற்காரனையும் அமர்த்தி, கேசவனைச் சென்னையில் ஓர் உயர் நிலைப் பள்ளியில் சேர்ப்பதைத் தவிர அவன் தகப்பனாருக்கு வேறு வழியில்லை என்றாகிவிட்டது. கேசவன் எஸ். எஸ். எல்.ஸி. யில் தேறிக் கல்லூரியில் மேல் படிப்புக்குச் சேர்ந்தான். வசதியாக ஹாஸ்டலிலேயே தங்கினான். அவன் போக்கை மாற்ற முடியவில்லை யா தலால் அவன் தகப்பனார் அவன் வழியே செல்ல வேண்டிய தாயிற்று.

ஒருவாறு இண்டர்மீடியட் பரீட்சை முடிந்தது. கேசவனுக்குத் தான் பரீட்சையில் எப்படியும் தேறிவிடுவோம் என்று பரிபூரண தம்பிக்கையிருந்தது. பரீட்சை முடிந்ததும் ஊருக்குக் கடிதம் எழுதிப் போட்டுவிட்டுச் சில நாட்கள் நிம்மதியாக இருந்தான் கேசவன். நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டும் சினிமா, நாடகம் பார்த்துக்கொண்டும் குஷியாகக் காலம் கழித்துக் கொண்டிருந்தான்.

இந்தச் சமயத்தில்தான் அவன் மன நிம்மதியை இழக்கச் செய்த அந்தக் கடிதம் வந்தது. அவன் அந்தக் கடிதத்தைக் கொஞ்சம் மும் எதிர்பார்க்கவில்லை. அவன் தாயார் இறந்து வெகு நாட்களுக் குப் பிறகு தகப்பனார் இப்படி அடியோடு மாறிவிடுவார் என்று கன விலும் நினைக்கவில்லை. தன் தாயார் ஸ்தானத்தில் இன்னொருத்தி இருப்பதை அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அப்பா எப்படி இவ்வித முடிவுக்கு வந்தார்? இவ்வளவு விரைவில் அம்மா இறந்த துக்கத்தை எப்படி மறந்தார் என்பதுதான் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அப்பா இரண்டாந்தாரம் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறார் என்று நினைத்தாலே அவனுக்கு, துக்கம் துக்கமாக வந்தது. ஐம்பது வயதான தன் அப்பாவுக்கு இப்படி ஒரு மனத் தளர்ச்சி ஏற்படுவானேன் என்று நினைத்துக் கேசவன் மனம் புழுங்கினான்.

அப்பாவின் கடிதம் சுருக்கமாக, ஆனால் அழுத்தமாக அவருடைய தீர்மானத்தை அவனுக்குத் தெரிவித்தது.

“அன்புள்ள கேசவனுக்கு.

அநேக ஆசீர்வாதம். இந்தக் கடிதத்தை மிகவும் அவசரத்தில் எழுதுகிறேன். விவரம் எல்லாம் நேரில் பேசிக் கொள்ளலாம்.

நான் பல காரணங்களை உத்தேசித்து, முக்கியமாக உன் நன் மைக்காக, சுந்தரியை இரண்டாந்தாரமாக மணந்துகொள்ள நிச்ச பித்துவிட்டேன். உனக்கும் பரீட்சை முடிந்துவிட்டபடியினால் எப்படியும் நீ இங்கு வரவேண்டியதுதான். நீ இன்றே புறப்பட்டுவிடு.. மற்றவை நேரில்

அன்புள்ள,
அப்பா .”

இந்தக் கடிதத்தைப் படித்ததும் கேசவன் தமிழ் சினிமாக்களில் வரும் கதா நாயகன் மாதிரி தலையை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு, அப்பா! அப்பா! அப்பா!” என்று மூன்று முறை அலறினான். பிறகு, ‘ஹஹ் ஹஹ் ஹா!” என்று சினிமாச் சிரிப்பு ஒன்று: சிரித்தான்.

‘ஐயோ! அன்புள்ள அப்பா! என்ன அன்பு வேண்டிக் கிடக் கிறது! என்னுடைய நன்மையை உத்தேசித்துத்தான் இவர் மலும் விவாகம் செய்துகொள்ளுகிறாராமே! இப்படி எழுதினால் இவருடைய சுய நலம் ஒருவருக்கும் தெரியாது என்று எண்ணமா…?’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் கேசவன். அவன் உள்ளம் பொருமியது.

குழந்தைப் பருவத்திலிருந்து படிந்துவிட்ட அவனது முரட்டுப் பிடிவாத குணம் என்னும் பாம்பு தகப்பனாரின் கடிதத்தைக் கண்டதும் சீறிப் படமெடுத்து ஆடியது. அப்பாவின் கடிதத்தில் கண்ட விஷயத்தைப் பற்றிச் சிறிதும் அவன் யோசித்துப் பார்க்க நினைக்க வில்லை. ஊருக்குப் போய் அப்பாவின் முகத்தில் விழிக்கவே அவனுக்கு விருப்பமில்லை. உடனே யாருடனும் சொல்லிக்கொள்ளாமல் எங்கேனும் ஒரு கண்காணாத தேசத்துக்குப் போய்விட வேண்டும் என்று அவன் மனம் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியது.

நல்ல வேளையாக அவனது திட்டத்தை ஒழுங்காக. நடத்துவதற்குச் சாதகமாகப் பரீட்சையும் முடிந்துவிட்டது. அவன் அப்பொழுது இருந்த உள்ளக் குமுறலின் வேகத்தில், பரீட்சை முடிவைப் பற்றியோ தனது வருங்கால வாழ்வைப் பற்றியோ கொஞ்சங்கூடப் பொருட்படுத்தவில்லை.

கேசவன் ஒரு துண்டுக் கடிதத்தை எடுத்து அதில் பின்வருமாறு எழுதினான்:

“அப்பா அவர்களுக்கு,
என் நன்மையை உத்தேசித்து, நீங்கள் செய்ய உத்தேசித்திருக்கும் அக்கிரமமான காரியத்துக்கு ஒரு நாளும் நான் சம்மதிக்க மாட்டேன். நேரில் அங்கு வந்து உங்களோடு இதுபற்றி வாதம் செய்து கசப்பை வளர்த்துக்கொள்ளவும் நான் தயாராய் இல்லை. நான் எங்கேயோ போகிறேன். என்னைத் தேட முயல்வது உங்களுக்கு வீண் சிரமம்.
கேசவன்.”

இந்தக் கடிதத்தைத் தன் தகப்பனாருக்கு அனுப்பிவிட்டு, கேக வன் அன்றைக்கே தன் அறையைக் காலி செய்து கொண்டு பம்பாய்க் குச் சென்றுவிட்டான். அங்கு அவனது நண்பன் ஒருவனின் உதவியால் ராணுவத்தில் சேர்ந்துவிட்டான்.

நாலைந்து வருஷங்கள் சென்றுவிட்டன. கேசவன் இப்பொழுது ராணுவ இலாகாவில் ஒரு அதிகாரி. அவனுடைய முரட்டுப் பிடிவாத குணம் அந்த இலாகாவில் படிப்படியாக விரைவில் முன்னுக்கு வரப் பெரிதும் உதவியாயிருந்தது. முன்பு எந்தக் குணம் அவனுக்கு ஒரு பெரிய குறையாயிருந்ததோ, அந்தக் குணமே இப்பொழுது அவன் இலாகாவில் அவனுக்கு மிகவும் நல்ல பெயரைக் கொடுத்தது; கண்டிப்பும், கறாருமாக இருந்து மேலதிகாரியின் தயவை அவன் வெகு விரைவிலேயே பெற்றுவிட்டான்.

இந்திய ராணுவத்தில் சேர்ந்து திறமையாகச் சேவை புரிந்து நல்ல பெயருடன் தாய் நாடு திரும்பினான். ஜபல்பூருக்கு வந்து சேர்ந்ததுந்தான் அவனுக்குத் தாய் நாட்டின் நினைவு, மீண்டும் பிறந்த நாட்டைப் பார்க்க வேண்டும் என்னும் ஓர் ஆர்வம் எல்லாம் திரும்பின. அதற்கு ஏற்றாற்போல், அவன் தங்கியிருந்த தென்னிந்தியப் பிரமுகர் வீட்டுக்கு வந்த பத்திரிகையில் காணப்பட்ட விளம்பரம் அவனைத் தென்னிந்தியாவுக்கே தூக்கிச் சென்றுவிட்டது.

முக்கிய அறிவிப்பு
திருச்சி ஜில்லா, முசிரி தாலுக்காவில் பெரிய மிராசுதாராயிருந்த வேதராமன் மூன்று மாதங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். அவரது ஏகபுத்திரனாகிய கேசவன் குடும்பத்தை விட்டுப் பல வருஷங்களுக்கு முன்பே வெளியேறிவிட்டார். அவர் இந்த விளம்பரத்தைக் கண்டதும் தம்மைத் தகுந்த முறையில் ருசுப்படுத்திக்கொண்டு தந்தையின் சொத்துக்கு உரியவராகலாம்.
இப்படிக்கு,.
ஜம்புநாதன்,
வக்கீல்.

இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் கேசவனுக்குத் தன் பழைய நினைவுகளெல்லாம் மனக்கண் முன் தோன்றின.

‘அப்பா இறந்துவிட்டாரா? அவர் மறு விவாகம் என்ன வாயிற்று….? நிச்சயம் அது நடந்திருக்கும். பின்பு அவள் என்னவானாள்? சரி, என்னவாயிருந்தாலும் ஊருக்குப் போய்ப் பார்த்தால் தெரிந்துவிடுகிறது!’ என்று மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு கேசவன் அன்றைய தினமே ஊருக்குப் புறப்பட்டுவிட்டான்.

ஊருக்கு வந்து சேர்ந்து தன்னை ருசுப்படுத்திக்கொண்டு சொத்துரிமையைப் பெறுவதில் கேசவனுக்குச் சிரமம் சிறிதும் இருக்கவில்லை. வக்கீல் ஜம்புநாதனுக்குக் கேசவனைச் சிறு பிராயம் முதல் நன்றாய்த் தெரியுமாதலால், அவனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் அவனுக்கு உரிய சொத்துக்களை அவனது உடைமையாக்கினார்;

இந்த விவகாரங்களெல்லாம் ஒருவாறு மடிக்ககம். கேசவன் தன் பூர்வீக வீட்டில் புகுந்து ஆராய்ச்சி செய்தான். விலை உயர்த்த கட்டில், மேஜை, பீரோக்களெல்லாம் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தன. . கேசவன் வியப்புடன் யாவற்றையும் ஆராய்ந்தான். அச்சமயம் வக்கீல் உள்ளே வந்து, “மிஸ்டர். கேசவன், இதோ உங்கள் தகப்பனாரின் உயில். அதை ஒரு முறை கவனமாகப் பார்த்துக்ககாள்ளுங்கள்” என்று கூறி அவனிடம் உயிலைக் கொடுத்தார்.

கேசவன் அதை வாங்கிக் கவனமாகப் பார்த்தான். அதில் சொத்து முழுவதற்கும் அவனையே உரிமையாக்கியிருந்தது. உயிலின் ஷரத்துக்களைப் படித்தபோது அவன் துள்ளிக் குதித்தான், மாதம் ஐம்பது ரூபாய் அவன் சித்திக்கு அனுப்பி வைக்கும்படி அதில் அவன் தகப்பனார் எழுதியிருந்தார். கன்னியா குமரியிலிருந்த அவன் சித்தியின் விலாசமும் கொடுக்கப்பட்டிருந்தது.

அவனுக்குச் சிறிதும் விருப்பம் இல்லாவிட்டாலும் உயிலின் வாசகப்படி கேசவன் ஒவ்வொரு மாதமும் சித்திக்குப் பணம் அனுப்பி வந்தான். நாலைந்து மாதங்களுக்கெல்லாம் அது அவன் மனத்தை உறுத்துவதற்கு ஆரம்பித்தது. உடனே பணம் அனுப்புவதை அவன் நிறுத்திவிட்டான்.

***

அன்று வந்த கடிதம் அவனை மிகவும் சலனப்படுத்தி விட்டது.

கேசவன் இதுவரையில் தன் கல்யாணத்தைப் பற்றியோ, குடும்ப வாழ்க்கையைப் பற்றியோ நினைத்துப் பார்த்ததேயில்லை. அதைப்பற்றி யெல்லாம் நினைத்துப் பார்க்க அவனுக்குக் சந்தர்ப்பமே கிடைத்ததில்லை. இப்பொழுது அவனையும் அறியாமல் அவன் உள்ளத்தில் மணவாழ்க்கையைப் பற்றிய இன்ப நினைவுகள் இலேசாக இழையோடின. அதைத் தகர்த்தெறிய அவன் எவ்வளவோ முயன்றும் அவனால் இயலவில்லை.

முத்தான கையெழுத்தில் அன்று வந்த கடிதம் அவன் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சியை எழுப்பியது. ‘அதை யார் எழுதியிருப்பார்கள்? நிச்சயம் ஒரு பெண்மணிதான் எழுதியிருக்கவேண்டும். கையெழுத்தில் பெண்மையின் பூரண எழிலும் ததும்பி நிற்கிறதே’ என்று கேசவன் சிந்திக்கலானான். அவன் சிந்தனையின் நடுவே ஓவிய எழில் கொண்ட ஒரு பெண்மணியின் உருவம் நிழலாடியது. ஆனாலும் அவன் மனம் மட்டும் உறுதியாயிருந்தது. சித்தியின் விஷயத்தில் அவன் தன் அபிப்பிராயத்தைச் சிறிதும் மாற்றிக்கொள்ளத் தயாராயில்லை.

ஒரு வாரம் சென்றது. அன்று காலையில் அவன் வீட்டு வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது, அதிலிருந்து சுமார் தாற்பது வயது. மதிக்கக்கூடிய ஒரு மாது இறங்கினாள். அவளைக் கண்டதும் கேசவனுக்கு அவனையும் அறியாமல் ஒரு மரியாதை ஏற்பட்டது. ”வாருங்கள் ” என்று கைகூப்பி அவளை வரவேற்றான்.

“என்னை…. உனக்குத் தெரிந்திருக்காது. நான்தான் உன் சித்து சுந்தரி!” என்று அந்தப் பெண்மணி சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள்.

கேசவன் முகம் அந்த வார்த்தைகளைக் கேட்டதும் கோபத்தினால் சிவந்தது. ஆனால் ஏனோ அவளைப் பார்த்து அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவளை நேரில் காணாதபோது என்னவெல்லாம் ஏசிப் பேசவேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தான்

“கேசவா, உனக்கு விருப்பமில்லை யென்றால் நான் இப்போதே ஊருக்குப் போய்விடுகிறேன். உன்னை நேரில் ஒரு முறை கண்டு விட வேண்டும் என்று ஆவலாயிருந்தது……..” என்று கூறிச் சுந்தரி அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.

கேசவனுக்கு என்ன சொல்லுவதென்றே தோன்றவில்லை. “போ வெளியே” என்று அவளைப் பார்த்துச் சொல்ல முடியாமல் ஏதோ ஒன்று. அவன் தொண்டையை அடைத்தது. விறு விறு என்று அவனே போய், சுந்தரியின் மூட்டை, பெட்டிகளை உள்ளே கொண்டு போய் வைத்தான். சுந்தரியும் மலர்ந்த முகத்துடன் உள்ளே போனாள்.

கேசவன் பல் துலக்கி ஸ்நானம் செய்துவிட்டு வருவதற்கும் சுந்தரி காப்பி தயார் செய்து கூடத்துப் பெஞ்சியின் மேல் கொண்டு வந்து வைப்பதற்கும் சரியாயிருந்தது. கூடம் முழுவதும் காப்பியின் நறுமணம் கம்மென்று கமழ்ந்தது. கேசவன் அதையெடுத்து ஆற்றி ரஸித்துச் சாப்பிட்டான்.

காப்பியைச் சாப்பிட்டுக்கொண்டே கூடத்தையும், சமையலறையையும் ஒரு முறை பார்த்தான்.

அடாடா! சமையலறைதான் என்ன சுத்தமாயிருந்தது? அதற்குள் பெருக்கி, அடுப்பு மெழுகிக் கோலம் போட்டு எவ்வளவு அழக யிருக்கிறது சமையலறை! முன்பு சமையலறையை எவ்வளவு மோசமாக வைத்திருந்தான்! போட்டது போட்டபடியே கிடக்குமே அங்கே !

கேசவனுக்கு ஒரே வியப்பாயிருந்தது. அவனையும் அறியாமல் சித்தியிடம் அவனுக்கு ஒருவித மரியாதை ஏற்பட்டது.

‘அப்பா செய்த பிழைக்குச் சித்தி என்ன செய்வாள்!’ என்று அவனை அவன் உள் மனம் கேள்வி கேட்டது.

தினசரி சித்தி அறுசுவை உண்டி தயாரித்துக் கேசவனுக்கு அன் போடு பரிமாறினாள். கொஞ்சமும் அலுத்துக்கொள்ளாமல், சித்தி தனக்காகச் சமைத்துச் சமைத்துப் போடுவதைக் கண்டு கேசவன் அயர்ந்து போனான்.

‘இந்த உத்தமியை வீணாகத் தவறாக நினைத்துப் பணம் அனுப்பாமல் மனசைப் புண்படுத்தி விட்டோமே!’ என்று அவன் மனம் மிகவும் பச்சாத்தாபப்பட்டது.

பத்து நாட்கள் ஆனந்தமாக ஓடின.

அன்று காலையிலே சித்தி பரபரப்பாக மூட்டை கட்டுவதில் முனைந்திருப்பதைப் பார்த்த கேசவனுக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை.

“சித்தி, என்ன மூட்டை முடிச்சுகள் பலமாகயிருக்கிறதே! நீங்கள்…” என்று மென்று விழுங்கி உளறிக் கொட்டினான்.

“…ஆமாம். நான் ஊருக்குப் போகலாம் என்றிருக்கிறேன். நான் இங்கே வந்து பத்து நாட்கள் ஆகிவிட்டன. பாவம். குழந்தை மீனலோசனி தனியாக அவதிப்படுவாள். தானே சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு வேலைக்குப் போக வேண்டுமென்றால் சிரமம் தானே!” என்றாள் சித்தி.

“சித்தி! முத்துக் கோத்தாற்போல் எனக்குக் கடிதம் எழுதியிருந்தாளே, அவளைத்தானே சொல்லுகிறீர்கள்?” என்று தன்னை மீறிய உற்சாகத்துடன் பலமாகக் கேட்டுவிட்டான். அப்புறம் அவனுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது.

சித்தி அவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். அதில் எல்லையற்ற குதூகலத்தையும் நாணங் கலந்த அசட்டுக் களையையும் கண்டாள்.

கேசவன் பரபரவென்று உள்ளே போய்க் கையில் காதிதமும் பேனாவுமாகத் திரும்பி வந்தான்.

“சித்தி! மீனலோசனியை இங்கேயே வரவழைத்து விடலாம். அவள் மட்டும் தனியே அங்கே இருப்பானேன்? நீங்கள் சொல்லுங்கள், நான் எழுதுகிறேன்…” என்றான் கேசவன்.

சித்தி அடக்க முடியாத வியப்புடன் வாக்கியம், வாக்கியமாகச் சொல்ல, கேசவன் எழுதலானான்.

***

கேசவனது கடிதம் கிடைத்த இரண்டாம் நாள் மீன் லோசனி புறப்பட்டு முசிரிக்கு வந்து சேர்ந்தாள். மீனலோசனியின் விஜயத் தால் அந்த வீடு மூழுவதும் புதிய ஒளி வீசியது. கேசவனின் உள்ளமும் இனம் தெரியாத இன்பத்தில் விம்மியது.

‘மீனலோசனி என்று இவ்வளவு அழகாக இவளுக்கு யார் பெயர் வைத்தது? என்ன விசாலமான கண்கள் அவற்றில்தான் என்ன கவர்ச்சி தாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறதே!’ என்று கேசவனின் மனம் மீனலோசனியின் கரிய பெரிய விழிகளைப் பார்த்துக் கவி பாடத் தொடங்கியது.

“சித்தி, மீனலோசனி உங்களுக்கு என்ன உறவு? அதைப் பற்றி நானும் உங்களைக் கேட்கவில்லை; நீங்களும் சொல்லவில்லையோ” என்றான் கேசவன்.

”மீன லோசனி என் தம்பியின் மகள். தாய், தந்தையரை இளமையிலேயே இழந்துவிட்ட அநாதைப் பெண். அவளை எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையில் படிக்க வைத்தேன். பொறுப்புத் தொந்தவளாதலால், ஆறாம் படிவத்துடன் படிப்பை நிறுத்திக்கொண்டு உபாத்தியாயினிப் பயிற்சியில் தேறி அங்கேயே ஒருபள்ளிக்கூடத்தில் வேலையும் தேடிக்கொண்டாள். அவளை ஒருவனிடம் ஒப்படைத்து விட்டால்…..” என்று சித்தி கூறிக்கொண்டிருக்கும் போதே கேசவன் இடைமறித்து, ”சித்தி, நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். இது உங்கள் வீடு, நான் உங்கள் மகன், நீங்கள் என் தாய்…” என்றான் உணர்ச்சி பரவசத்துடன்.

“இப்பொழுது தான் உன்னைப்பற்றி உன் தகப்பனார் சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘சுந்தரி ! கேசவன் அருமையான பிள்ளை கொஞ்சம் முரட்டுத்தனம் உண்டு. சின்ன வயசிலேயே தாயாரை இழந்து விட்டபடியினால் தாயன்பைப் பெறாதவன். உடன் பிறப்பிலும், சகோதரர்களோ, சகோதரிகளோ இல்லையாகையினால் அவனுக்கு யாருடனும் அன்பாகப் பழகத் தெரியாது. எப்படியும் ஒரு நாள் அவனை நீ சந்திப்பாய். அவனைப் பொறுப்புள்ள மனிதனாக்க வேண்டியது உன் பொறுப்பு. என்னுடைய இந்த வயதில் உன் கரம் பற்றுவதே இந்தக் காரணம் பற்றித்தான். இருபத்தெட்டு வயதான ஏழைப் பெண்ணாகிய உனக்கு வாழ்வளிப்பது மட்டும் என் நோக்கமல்ல. கேசவனுக்கு ஒரு தாயாரும் கிடைப்பதனால்தான் உன்னை மணக்க இசைந்தேன். உன் அன்பினால் தான் அவன் வழிப்படுத்த முடியும். மீனலோசனியையும் அவனிடம் ஒப்படைத்துவிடு…’ என்றார் உன் அப்பா!”

“…சித்தி, நான் மகா பாதகன், அப்பாவின் அருமை தெரியாமல் அவர் மனத்தைப் புண்படுத்திவிட்டு, ஊரைவிட்டே ஓடிவிட்டேன்…” என்று கேசவன் கூறிவிட்டு மேலே பேச முடியாமல் விம்மினான்.

அஜந்தா சித்திரம் போல் சித்தியின் அருகில் நின்றுகொண்டிருந்த மீனலோசனியின் விசாலமான நயனங்கள் இதைக் கேட்டு ஏனோ நீரைப் பெருக்கின.

“கேசவா! இப்பொழுதாவது உனக்கு அப்பாவின் அருமை தெரிந்ததோ என்னிடம் உனக்கு அநாவசியமாக ஏற்பட்டிருந்த கோபமும் இப்போது தணிந்திருக்கும். உன் மனத்தில் இருப்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்றுதான் நான் ஊரைவிட்டுப் போனது. இப்பொழுது என்னை விடப் பாக்கியசாலி யாரும் இல்லை…..” என்றாள் சித்தி.

“சித்தி, என்னை மன்னித்து விடுங்கள். இப்பொழுதுதான் நான் மனிதனானேன். பழைய நிகழ்ச்சிகளை மறந்து விடுங்கள்!” என்றான் கேசவன்,

“சரி, இரண்டு பேரும் வாருங்கள், இலை போடுகிறேன். சாப்பிட்டுவிட்டுப் பேசலாம்” என்று கூறியபடி சித்தி அங்கிருந்து எழுந்து உள்ளே சென்றாள்.

“மீனலோசனி, உன் எழுத்தைக் கண்டே உன் அழகை மதிப்பிட்டுவிட்டேன்!”

“…அது ரொம்பத் தவறு. நீங்கள் என் கடிதத்தைக் கொண்டு என்னை மதிப்பிட்டது போல் நீங்கள் முன்பு உங்கள் தகப்பனாருக்கு எழுதிய கடிதத்தைக் கொண்டு உங்களை நான் மதிப்பிட்டிருந்தால்…என்ன ஆகும்?”

தங்கச் சிலை வாய் திறந்து பேசியது போல் இருந்தது. கேசவனுக்கு மீனலோசனியின் பேச்சு. விசாலமான அவளது கண்களின் குறும்புப் பார்வை அவனைக் கந்தர்வலோகத்துக்குத் தூக்கிச் சென்றது.

“மீனலோசனி, அந்தப் பழைய கேசவன் அல்ல. இப்பொழுது நான் உன் பார்வையின் சக்தியினால் மனிதனாகிவிட்டேன். வந்து…என்னை…மணந்து கொள்ள உனக்கு இஷ்டந்தானே?”

“அந்தக் கேள்வியை…நானல்லவா உங்களைக் கேட்க வேண்டும்?” என்று சிரமப்பட்டுக் கூறிவிட்டு நாணத்தோடு முகத்தைக் கவிழ்ந்துகொண்டாள் மீனலோசனி

கேசவன் அளவற்ற மகிழ்ச்சியோடு அவள் மென்கரங்களைப் பரிவோடு பற்றினான்.

– பாற்கடல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 1960

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *