எங்கேயோ இப்ப மூன்று மணி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 723 
 
 

நான் வரிசையில் மூன்றாவது ஆளாக நின்றேன். என் வாழ்க்கையை மாற்றப் போகும் தருணத்துக்கு இன்னும் சரியாக நாலு நிமிடங்கள் இருந்தன. சந்திரசேகரம் உள்ளே நுழைந்துவிட்டதால் ஆபத்து இல்லை என்று பட்டது. கட்டுநாயக்கா விமான நிலையம் பரபரப்பாக இயங்கியது. எனக்கு முன் நிற்பவனின் பெயர் பத்மநாதன். எனக்கு பின்னால் நிற்பவனின் பெயர் சுதாகரன். குடிவரவு அதிகாரியின் முகம் சிநேகமானதாகத்தான் தென்பட்டது. அடிவயிற்று நடுக்கத்தை குறைத்து சாவகாசமாக நிற்க எத்தனித்தேன். எங்களைக் காட்டிக் கொடுப்பதென்றால் அது சுதாகரனால்தான் நடக்கும். அவனுடைய கைவிரல்கள் நடுங்குவதை என் கடைக்கண்ணால் பார்க்க முடிந்தது.

2005ல் நான் போன முதல் பயணத்தில் இப்படியான பிரச்சினைகள் இல்லை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் இப்போது பயணம். அனுராதபுரம் எல்லாளன் படை நடவடிக்கைக்கு பின்னர் விமான நிலையத்தில் கெடுபிடிகள் அதிகமாக்கப்பட்டிருந்தன. வழக்கமான கேள்விகள்தான். பிரேசில் நாட்டுக்குச் சென்று கப்பலில் சேரப் போவதாக ஏஜண்ட் சொல்லித் தந்தமாதிரியே சொன்னேன். அதிகாரி நம்பிவிட்டார். என் கடவுச் சீட்டில் எட்டாம் பக்கத்தில் கையில் வைத்திருந்த ஸ்டாம்பால் ஓங்கிக் குத்திவிட்டு கடவுச் சீட்டை என் பக்கம் தள்ளினார். நான் கடவுச்சீட்டை கையில் எடுத்த பின்னர் நன்றி என்று மெதுவாகச் சொல்லிவிட்டு நகர்ந்தேன். மூன்று பேர் இப்போ உள்ளுக்கு நுழைந்துவிட்டோம். சுதாகரன் ஒருவன்தான் மிச்சம். அவனும் தப்பிவிட்டால் கனடா நாடு என் வரவால் சிறப்படையும்.

அதிகாரி முன் நின்றபோது சுதாகரனுடைய முழு உடம்பும் தனித் தனி அங்கங்களாக மாறி நடுங்கின. அவனுடைய நெற்றிகூட நடுங்கியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கடவுச் சீட்டை கொடுத்தபோது அது தவறிக் கீழே விழுந்துவிட்டது. குனிந்து அதை எடுத்து உடம்பை நிமிர்த்தாமல் அப்படியே நீட்டினான். அதிகாரி கடவுச்சீட்டு ஒற்றைகளை முன்னும் பின்னும் திருப்பியபடி எதிரில் நிற்பவனை நிமிர்ந்து பார்க்காமல் அசுவாரஸ்யமாக கேள்விகள் கேட்பதுபோல கேட்டார். சுதாகரன் அவர் கேட்காத கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான். ’கப்பலில் சேருவதற்கு நீ என்ன கொண்டுபோகிறாய்?’ என்றார் அதிகாரி. சுதாகரன் அதற்கு மாலுமி பயிற்சி சான்றிதழை எடுத்துக் காட்டியிருக்கவேண்டும். இவன் மாறாக ‘6000 டொலர்கள்’ என்று கூறினான். ’நீ யாருடன் போகிறாய்?’ என்று கேட்டபோது எங்கள் மூவரின் பெயர்களையும் சரியான உச்சரிப்புடன் கூறினான். எங்களை திருப்பி அழைத்து சோதனை செய்து மொத்தமாக 24,000 டொலர்களையும் கைப்பற்றினார்கள்.

தனி அறைக்கு அழைத்துச் சென்று எங்கள் ஆடைகளை நீக்கி சோதித்தார்கள். பின்பு பயணப்பெட்டிகளை பல பாகங்களாகப் பிரித்து பரிசோதனை செய்தார்கள். முடிவில் நாங்கள் புலிகள் என்றும், கப்பல் வாங்குவதற்காக 24,000 டொலர்கள் எடுத்துக்கொண்டு வெளிநாடு போகிறோம் என்றும் முடிவுக்கு வந்தார்கள். எந்த நாட்டில் 24,000 டொலர்களுக்கு ஒரு முழுக்கப்பல் வாங்கலாம் என்ற தகவலை அவர்கள் எங்களுக்குச் சொல்லவில்லை. கைகளில் விலங்கு மாட்டி எங்களை ஜீப்பில் அழைத்துச் சென்றார்கள். எங்களுக்கு மேலால் நாங்கள் போகவேண்டிய விமானம் பறந்து போனது.

எங்கே அழைத்துப் போகிறார்கள் என்று கேட்டேன். மற்றவர்கள் மூன்று பேருக்கும் சிங்களம் தெரியாது. நான் வங்கியில் வேலை செய்தபடியால் என்னால் ஓர் அளவுக்கு சிங்களம் பேசமுடியும். காவலன் என்னுடைய கேள்விக்கு ‘மூன்றாம் மாடிக்கு ‘ என்றான். எங்கள் நாடி ஒடுங்கியது. அது சித்திரவதைக் கூடம். ’பிறகு என்ன நடக்கும்?’ என்றேன். ‘உங்களை தீரவிசாரித்துவிட்டு பூசா சிறைக்கு அனுப்புவார்கள்’ என்றான். அது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழ் போராளிகளை அங்கேதான் அடைத்து வைப்பார்கள். அங்கே போய் திரும்பி வந்தவர்களை ஒருவரும் பார்த்ததில்லை. ‘அதற்கு பின்னர் என்ன நடக்கும்?’ என்று கேட்டேன். காவலனின் கறுத்த மேல் உதடு ஒரு பக்கமாக மேலே போனது. பின்னர் சிரித்தான். ‘உடலை புதைப்பதா, எரிப்பதா என்று யோசிப்பார்கள்’ என்றான். பிறகு நான் ஒன்றுமே பேசவில்லை.

***

இது எல்லாம் நடந்ததற்கு காரணம் ஒரு தொலைபேசி அழைப்புத்தான். நான் ஏ.எல் சோதனை முடித்த பிறகு என் பாட்டுக்கு ஒரு வங்கியில் வேலை செய்துகொண்டிருந்தேன். என்னுடன் படித்தவர்கள் இயக்கத்தில் சேர்ந்தார்கள். அல்லது ஆட்டை விற்று, மாட்டை விற்று, நகைகளை விற்று வெளிநாடு போனார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் யோசிக்க முடியாது. அப்பாவுக்கு உடல் நலமில்லை. அம்மாவுக்கு கண்பார்வை மங்கிக்கொண்டு வந்தது. பெற்றோருக்கு ஒரே மகன். எப்படி அவர்களை விட்டு வெளியேற முடியும்? ஒவ்வொரு மாலையும் நான் வீடு வந்த பிறகு வேலைக்காரி சமைத்து வைத்த உணவை அவர்களுக்கு பரிமாறுவேன். ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். அப்படி எங்கள் வாழ்க்கை நேற்றையப்போல இன்றும், இன்றையப் போல நாளையும் ஓடியது.

வங்கியில் எனக்கு நல்ல பேர். வாடிக்கையாளர்களுடன் நட்பாகப் பேசி அவர்கள் அன்பை இலகுவாக சம்பாதித்துவிடுவேன். வீடியோக்கடை வைத்திருந்த ஒருத்தர் அடிக்கடி வங்கிக்கு வருவார். அவருக்கு என்னை பிடித்துக்கொண்டது. என் குடும்ப விவரங்களை தெரிந்துகொண்டு எனக்கு கல்யாணம் பேசினார். அவருடைய சொந்தக்காரப் பெண் ஒருத்தி தம்பலகாமத்தில் இருந்தார். நான் இருந்தது திருகோணமலை. ஒரு மணி நேரத்தில் பஸ்சில் போகக்கூடிய தூரம். பார்த்த உடனேயே எனக்குப் பெண்ணைப் பிடித்தது. ரத்தத்தில் தண்ணீர் கலந்த நிறம். தேகம் கொஞ்சம் காற்று நிரப்பியதுபோல இருந்தாலும் ஓர் இடத்திலும் நிற்காமல் விளையாடும் கண்கள். அவர் நகர்ந்தபோது அழகு இரண்டு மடங்காகிவிடும். என் பெற்றோரும் சம்மதித்ததால் கல்யாணம் சீக்கிரத்தில் நடந்தது. மணமுடித்த பின்னர் ஒரேயொரு சங்கடம்தான். என் மனைவி மாலதி தினமும் காலை ஏழு மணிக்குப் புறப்பட்டு பஸ்சில் வேலைக்கு தம்பலகாமம் போகவேண்டும். மாலையில் வேலை முடித்து களைத்துப்போய் வருவார். எனக்கு பார்க்க பாவமாக இருக்கும்.

இந்தப் பிரச்சினையை ஒருநாள் இரவு ஏழு மணிக்கு வந்த தொலைபேசி அழைப்பு தீர்த்து வைத்தது. என் அம்மாதான் தொலைபேசியை எடுத்தார். அழைத்தவர் முரட்டுக்குரலில் ’கனகராசனுடன் பேசவேண்டும்’ என்றார். ’அவர் இன்னும் அலுவலகத்திலிருந்து வரவில்லை. வந்ததும் சொல்கிறேன். நீங்கள் ஆர்? என்ன விசயம்?’ என்று கேட்டார். அவன் திட்டிவிட்டு ஒரு நம்பரைத் தந்து ’உன் மகன் வந்ததும் அவனை என்னிடம் பேசச்சொல்லு’ என்றான். இது பெரிய வில்லங்கம் என்று அம்மாவுக்கு உடனேயே புரிந்துவிட்டது.

நான் அலுவலகத்திலிருந்து வந்ததும் அம்மாவும் மாலதியும் விசயத்தை சொன்னார்கள். அந்த இலக்கத்தை அழைத்தேன். ‘கனகராசா, நான் இயக்கத்திலிருந்துபேசுறன். நாளைக்கு காலை பத்து லட்சம் தேவை. அதை எடுத்துக் கொண்டு நான் சொல்லும் இடத்துக்கு வா.’ நான் மயங்கி விழுந்திருப்பேன் ஆனால் எனக்குப் பக்கத்தில் அம்மாவும் மாலதியும் நின்றார்கள். ‘பத்து லட்சமா? நான் சாதாரண வங்கி கிளார்க். வயதான பெற்றோரை வைத்து பராமரிக்கிறேன். இப்பொழுதுதான் கல்யாணமும் முடிந்தது. நீங்கள் வேறு யாரோ என்று நினைத்து என்னை அழைத்துவிட்டீர்கள்.’

’அது எல்லாம் எனக்குத் தெரியும். இரண்டு வருசமாக நீ உன் மனேஜரிடம் புரமோஷனுக்கு கெஞ்சிக்கொண்டு இருக்கிறாய். அவன் ஒன்றும் தரமாட்டான். நீ பத்து லட்சம் உன் வங்கியில் எடுத்துக் கொடு’ என்றது குரல். ’திருடுவதா? எனக்கு வேலை போய்விடும்.’ ’பெரிய வேலை. உன் உயிர் ஒருவேளை போகக்கூடும். உனக்கு ஒரு நாள் டைம் தருவேன். போலீசிடம் போனால் நீ வீடு திரும்புவாய். உன் மனைவி தம்பலகாமத்திலிருந்து வீடு திரும்பமாட்டார். நாளைக்கு விவரம் சொல்வேன்.’ நான் மன்றாடத் தொடங்க முன்னர் டெலிபோன் பட்டென்று வைக்கப்பட்டது.

எனக்கு கை நடுங்கியது. மாலதி தைரியமானவர். தம்பலகாமத்தில் இதைப்போல பல சம்பவங்களை சந்தித்தவர். இயக்கத்துடன் அவருக்கு ஆரம்பத்தில் தொடர்பும் இருந்தது. அவருடைய சிநேகிதிகள் பலர் வீரச்சாவு அடைந்திருக்கிறார்கள். ’இதுக்கு ஏன் பயப்பிடுகிறீர்கள். நான் எதுக்கு இருக்கிறன்.’ என்றார். இயக்கத்துக்கு அவரே டெலிபோன் பண்ணி விசாரித்தபோது அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இப்படியெல்லாம் நாங்கள் பொதுமக்களிடம் பணம் கேட்பதில்லை. இது ஒரு கள்ளக் கூட்டத்தின் பணம் பறிக்கும் வேலை. அவர்களை எப்படியும் மடக்கவேண்டும் என்று சொல்லியபின்னர் அவர் விரிவான ஒரு திட்டத்தை சொன்னார். மாலதி சரி சரி என்று தலையாட்டினார்.

அடுத்தநாள் இரவு தொலைபேசி வந்தது. ’பத்து லட்சம் காசை கடத்தமுடியாது. எப்படியும் ஐந்து லட்சம் கொண்டு வருவேன். அதன் பின்னர் என்னை தொந்தரவு செய்யக்கூடாது’ என்று நயமாக வேண்டினேன். அவர்கள் சம்மதித்தார்கள். மறுநாள் காலை கடதாசி நிரப்பிய பையுடன் நான் புறப்பட்டபோது மாலதி தானும் வரவேண்டும் என அடம்பிடித்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. பத்து மணிக்கு அவர்கள் சொன்ன இடத்தில் நான் நிற்கவேண்டும். என்னைப் பேசவிடாமல் அவரும் ஆட்டோவில் ஏறினார். அவர்கள் சொன்ன டொக்யார்ட் டெலிபோன் மையத்துக்கு போனபோது அங்கே ஒருவரும் இல்லை. நான் கூண்டுக்குள் நுழைந்து அவர்கள் எண்ணை அழைத்து பணத்துடன் வந்துவிட்டதை சொன்னேன். ‘சரி, காத்திரு. ஒருவன் ஆட்டோவில் வருவான். அவனிடம் பணத்தைக் கொடு’ என்றான். திட்டம் என்ன வென்றால் நான் பணத்தை கொடுக்கும்போது இயக்கக்காரர்கள் ஒளித்திருந்து அவனை பிடித்துவிடுவார்கள். என் வேலை முடிந்தது. ஆனால் ஆட்டோவை காணவில்லை. இயக்கக்காரர்களையும் காணவில்லை.

செல்பேசியில் பேசியபடி சாவதானமாக ஒருவன் ஆட்டோவில் வந்து இறங்கினான். மெலிந்து கரும்புபோல முன்பக்கம் வளைந்திருந்த 18 வயது இளைஞன். வெள்ளை வெளேர் என்று சோகை பிடித்தவன்போல இருந்தான். தள்ளிவிட்டால் விழுந்துவிடுவான். புருவத்தில் ஓர் இடத்தில் மயிர் முளைக்கவில்லை. நாலு நாள் பட்டினி கிடந்த ஒரு சோம்பேறி அப்பொழுதுதான் நித்திரையிலிருந்து எழும்பி வந்திருக்கிறான். செல்பேசியை காதில் பிடித்தவாறே வந்து பையை கேட்டான். இயக்கக்காரர்களைக் காணவில்லை. பையை கொடுத்தால் அவன் போய்விடுவான். நேரத்தை கடத்துவதற்காக ’செல்பேசியை கொடு. நான் உன் மேலாளரிடம் பேசவேண்டும்’ என்றேன். அவன் தயங்கியபடியே செல்பேசியை தந்தான். பேசியவன் ’அவன்தான் ஆள். பையை கொடு. பையை கொடு’ என்று அவசரப்படுத்தினான். நல்லகாலமாக இயக்கத்திலிருந்து இரண்டுபேர் துப்பாக்கிகளுடன் ஆட்டோவில் வந்து பட்பட்டென்று குதித்தனர். பாதி புருவக்காரனை அப்படியே தூக்கி உள்ளே போட்டுக்கொண்டு எங்களை தொடரச் சொல்லிவிட்டு புறப்பட்டனர். இத்தனையும் ஒரு தீக்குச்சி கிழிக்கும் நேரத்துக்கிடையில் நடந்து முடிந்துவிட்டது.

எனக்கு என் வேலை முடிந்தது, வீடு திரும்பவேண்டும் என்ற அவசரம். என் மனைவியின் முகத்தில் இந்த சாகசம் பெரிய சந்தோசத்தை கொண்டுவந்தது. கண்கள் விரிந்து, வாய் அகன்றுபோய் கிடந்தது. இன்னும் நூறு மைல்கள் அவர்கள் பின்னால் அவர் தொடரவும் தயார். கஸ்டம்ஸ் வீதி திரும்பியவுடன் காவல் கோபுரத்தில் போராளி துப்பாக்கியுடன் நிற்பது தெரிந்தது. இயக்க வாசலில் சிவப்பு மஞ்சள் நிறத்தில் பெரிய பெயர்ப் பலகை தொங்கியது. பெடியனை இறக்கி பின்னுக்கு கொண்டுபோய் சாக்கில் தூசி தட்டுவதுபோல பலமாக அடித்தார்கள். அவன் அலறத்தொடங்கினான். அந்த நோஞ்சான் இறந்துவிடுவான் என்று நாங்கள் பயந்தோம். தலைவர் போல தோன்றிய ஒருவர் வேகமாக தடித்த கயிறு கொண்டுவந்தார்.

’உன்ரை பேர் என்னடா?’ ‘சேந்தன் அமுதன்.’ ‘உன்ரை அப்பருக்கு வேற பேர் கிடைக்கோல்லையோ? வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், சுந்தரசோழன் எல்லாம் முடிந்து உனக்கு சேந்தன் அமுதன் என்று வைத்தாரோ.’ ’அடிக்காதையுங்கோ ஐயா. பசிக்கொடுமையில் செய்தேன்.’ ‘பூ விக்கிறதுக்குப் பதிலா ஆட்களைப் பிடித்து விக்கிறாயோ?’ ‘ஐயா என்னை நம்புங்கோ. எனக்கு ஒன்றும் தெரியாது’ என்று கதறினான்.

அவன் சொன்னதன் சாராம்சம் இதுதான். அவன் சாப்பிட்டு இரண்டு நாளாகிறது. அவன் தாயும் மூன்று தங்கச்சிகளும்தான் குடும்பம். பசி தாங்க முடியாமல் இந்த வேலையை ஒப்புக்கொண்டுவிட்டான். யாரோ அவனிடம் ஒரு பை கொடுப்பார்கள். அதைக் கொண்டுபோய் சேர்த்தால் 5000 ரூபாய் தருவார்கள். அவனுக்கு அவர்கள் பெயரோ முகவரியோ தெரியாது. செல்பேசி எண் மட்டும் இருந்தது. ’என்னைக் கொல்லவேண்டாம். நான் சொல்வது உண்மை’ என்று கதறினான். அவனை நம்பலாம் என்றே எங்களுக்குப் பட்டது.

பிரச்சினை அதன் பின்னர்தான் ஆரம்பமாகியது. கள்ளக் கூட்டக்காரன் என் அம்மாவை தினம் தொலைபேசியில் அழைத்து திட்டத் தொடங்கினான். ‘ஏ, குருடி. உன் மகனைத் தப்ப வைத்துவிட்டாய் என்று நினைக்காதே. எங்களைப் பிடித்துக் கொடுத்த அவனுக்கு என் கையால்தான் சாவு.’ இப்படி தினமும் வெருட்டினான். ’வீட்டுக்கு நெருப்பு வைப்பேன்’ என்று பயமுறுத்தியபோது யோசிக்கவேண்டி வந்தது. மீண்டும் இயக்கத்திடம் போய் பிரயோசனமில்லை. நான் வெளிநாடு போய் தப்பிக்கவேண்டும். என் மனைவி பின்னால் வருவார். இதுதான் நாங்கள் எடுத்த முடிவு.

ஏஜண்ட் இருபது லட்சம் உடனே கொடுக்கவேண்டும் என்றார்; மீதி கனடா போய் அனுப்பலாம். மாலதியின் அப்பா கொஞ்சம் பணம் தந்தார். என் மனைவியின் நகைகளை அடகுவைத்து எப்படியோ 20 லட்சம் புரட்டி ஏஜண்டுக்கு கொடுத்தேன். எங்கள் குழுவில் இரண்டு பேர் இருந்தோம். முதலில் ரஸ்யா போய் அங்கிருந்து உருகுவே நாட்டுக்கு போகவேண்டும். அந்த நாட்டு ஏஜண்ட் எங்களை பொறுப்பேற்று கனடாவுக்கு கொண்டுபோய்ச் சேர்ப்பார். ஸ்பானிஷ் மொழியும் பாதி ஆங்கிலமும் பேசும் அவர் எங்களை ஒரு ஹொட்டலில் தங்க வைத்தார். வெள்ளைத் துணியில் நீலக் கோடுகள் போட்ட கொடி பறந்தது. ஆகாயம் வித்தியாசமாக இருந்தது. சரியாக அடுத்த நாள் காலை பத்து மணிக்கு வந்து கூட்டிப் போவதாகச் சொன்ன ஏஜண்ட், அறையை விட்டு வெளியே எங்கும் போகவேண்டாம் என்று இரண்டு தடவை எச்சரிக்கையும் செய்தார்.

என்னுடன் அறையில் தங்கிய பெடியனின் பெயர் பிரகதீஸ். கடந்த மூன்று நாட்கள்தான் இவன் எனக்கு பழக்கம். என்னை ’அண்ணை, அண்ணை’ என்று அழைத்தான். இன்னும் தோள்மூட்டு வெளியே வரவில்லை. முகத்தில் எங்கே எங்கே தாடி வரவேண்டுமோ அங்கேயெல்லாம் அதற்கான அறிகுறி தென்பட்டது. நல்ல நாளாக விடியும் ஒரு நாளை அது முடிவதற்கிடையில் மோசமான நாளாக மாற்றும் திறமை கொண்டவன் அவன். சேர்ட்டைக் கழற்றி உடை மாற்றித் தயாரானான். உடம்பு முழுக்க தழும்புகள். என்னவென்று கேட்டேன். ’17 காயங்கள் என்றால் 17 தடவைகள் உயிர் தப்பியதாக அர்த்தம், அண்ணை. இவைதான் என்னுடைய டைரி குறிப்புகள்’ என்றான்.

நன்றாகத் தூங்கி ரெடியாக இருக்கவேண்டும் என்பது ஏஜண்டின் கட்டளை. ‘அண்ணை வெளியே போய்ப் பார்ப்பம். இப்படி ஒரு சான்ஸ் வாழ்க்கையில் ஒருதரம்தான் கிடைக்கும், வாங்கோ’ என்று வற்புறுத்தினான். நான் மறுத்துவிட்டேன். ’எல்லா நகரங்களும் ஒன்றுதான், படு’ என்றேன். ‘உருகுவே நாட்டு உதைபந்தாட்ட டீம் திறம், அண்ணை. இந்த நாட்டு மக்களை பார்க்கவேண்டும். இதிலென்ன பயம்? ஒரு ரவுண்ட் அடிப்போம்.’ கண்ணாடி முன் நின்று தலையை பத்து விதமாக வாரினான். ஏதோ காதலியை பார்க்க புறப்படுவதுபோல ஒப்பனை செய்தான். ‘உலகிலேயே சுற்றுச்சூழலை கெடுக்காமல் மின்சாரம் உண்டாக்கும் நாடு இது ஒன்றுதான். ஆனால், தெரு விளக்குகளைப் பார். கல்லால் எறிந்து உடைத்திருக்கிறார்கள். மோசமான இடம் இது. போகாதே’ என்றேன். நாக்கினால் மேல்பற்களை தடவிக்கொண்டு ’அண்ணை, 17 தரம் உயிர் தப்பியிருக்கிறேன்’ என்றான். கடைசியில் ‘சரி, நீ அறையை பூட்டிவிட்டு சாவியை கொண்டு போ. நான் உனக்காகக் காத்திருக்க மாட்டேன்’ என்று சொல்லிப் படுத்துவிட்டேன். அவன் எப்பொழுது புறப்பட்டுப் போனான் என்பது தெரியாது.

அடுத்த நாள் காலை விடிந்தது. கதவு பூட்டியிருந்தது. பிரகதீஸ் கையிலே சாவியை பிடித்தபடி நிலத்தில் விழுந்து கிடந்தான். கழற்றிவிட்ட ஒரு சப்பாத்தின் மேல் தலை கிடந்தது. இன்னொரு சப்பாத்து அவன் காலில் இருந்தது. தொட்டுப் பார்த்தேன். உடல் குளிர்ந்து இறந்துபோன சடலம். வெளியே போகமுன்னர் விழுந்து இறந்தானா அல்லது போய்வந்தபின்னர் இறந்தானா? ஒன்றுமே தெரியவில்லை. ஹொட்டல் மனேஜர் அம்புலன்ஸை அழைத்தார். நான் நடுங்கியபடி நின்றேன். ஏஜண்ட் டெலிபோனில் கூப்பிட்டதும் விசயத்தை சொன்னேன். அவர் ’புறப்படு, புறப்படு. நான் மாட்டிவிடுவேன்’ என்று கத்தினார். என்னால் எப்படி புறப்படமுடியும்?

ஒருவாரம் போலீஸ் என்னை விசாரித்தது. ஏஜண்ட் மறைந்துவிட்டார். அவரை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிரகதீஸுக்கு மாரடைப்பு வந்தது உறுதி செய்யப்பட்டது. யார் பெற்ற பிள்ளையோ? 16 வயதுகூடத் தாண்டவில்லை. உலகம் முழுவதையும் பார்த்துவிடத் துடித்தான். பத்து விதமாகத் தலையை வாரினான். அவன் இறந்தபோது நான் வெறும் இரண்டு அடி தள்ளி தூங்கிக்கொண்டு கிடந்தேன். 17 தடவை உயிர் தப்பியவனை அடக்கம் செய்தபோது அங்கே நானும் இருந்தேன். ஒரு தேவாரம் அவனுக்காகச் சொன்னேன். ஒருவருக்கும் அவன் அன்று வெளியே போனானா என்பது தெரியவில்லை. என்னிடம் கடவுச்சீட்டும் திரும்பி போவதற்கு டிக்கெட்டும் இருந்ததால் என்னை திருப்பி அனுப்பினார்கள்.

கொழும்பில் ஏஜண்டைப் போய் பார்த்தபோது அவர் என் மேல் படுகோபமாக இருந்தார். என் பாட்டுக்கு உருகுவேயில் முடிவெடுத்தது அவருக்கு பிடிக்கவில்லை. காலில் விழாத குறையாக கெஞ்சிக் கேட்டபிறகு மறுபடியும் என்னை வெளிநாடு அனுப்புவதற்கு முயற்சி எடுத்தார். அப்படித்தான் பிரேசில் பயணம் திட்டமிடப்பட்டது. மொக்கன் சுதாகரன் செய்த தவறால் எல்லோரையும் பிடித்து சிறைக்குள் அடைத்துவிட்டார்கள்.

பூசா சிறையில் என்னுடைய சங்கிலி, வாட்ச், மோதிரம், கைப்பை ஆகியவற்றை வாங்கி குறித்துவைத்துக் கொண்டார்கள். சாமிக்கு நேர்ந்து அம்மா கையில் கட்டிய நூலை அவர்கள் வெட்டியபோது என் முடிவு நெருங்கியதை சூசகமாக உணர்ந்தேன். சிறை முழுக்க தமிழ் கைதிகள். எல்லோரும் போராளிகள்தான். ஒன்றிரண்டு சிங்களவர்களும் இருந்தார்கள். காவலர்கள் சிங்களத்தில் ஆணையிடுவது ஒருவருக்கும் புரியாது. ஒருவரை ஒருவர் பார்த்து சமாளித்தார்கள். எங்கள் அறையில் மட்டும் 75 பேரை அடைத்திருந்தார்கள். எனக்கு இரண்டு அவஸ்தைகள்தான். ஒன்று கொசுக்கடி. மற்றது பசி. காலை, மதியம், மாலை, இரவு எந்த நேரமும் பசி பற்றிய நினைப்புத்தான். தூக்கம் இல்லை. தூங்கினால் கனவில் விதம் விதமான உணவுவகைகள் வந்தன.

ஒருநாள் நான் பசியைப் பற்றி தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது ஒரு சிங்களக் கைதி சமபோஷா உணவை எனக்கு நீட்டினான். அவன் பெயர் கோபெக்கடுவ என்று பின்னால் தெரிந்துகொண்டேன். போருக்கு எதிராக கவிதை எழுதியபடியால் அவனைப் பிடித்து உள்ளே போட்டுவிட்டார்கள். அவன் சொன்னான். ‘போரினால் ஒன்றும் சாதிக்க முடியாது. மனிதனின் உண்மையான எதிரி பசி. அதற்கு எதிராகத்தான் போராடவேண்டும்.’ அவன் நீட்டிய தட்டில் இருந்த உருண்டை என்னைப் பார்த்தது. ‘ஸ்வாஹிலி மொழியில் ’பசிக்கிறது’ என்று சொல்வதில்லை. ’பசி கேட்கிறது’ என்றுதான் சொல்வார்கள்’ என்றான். என்ன ஆச்சரியம்! கடந்த ஆறு மாதங்களாக பசி என் காதுகளுக்குள் 24 மணிநேரமும் கேட்டபடியேதான் இருந்தது.

வெளியே ஏஜண்ட் சும்மா இருக்கவில்லை. ஒரு சட்டவாளரைப் பிடித்து எங்களை விடுவித்தார். அம்மாவுக்கு கண்பார்வை முற்றிலும் போய்விட்டது. ’இரு தடவையும் பயணம் தோல்வி. இனிமேல் வெளிநாடு போகும் எண்ணத்தை விடுங்கோ’ என்றார் மாலதி. இருந்த காணியை ஈடுவைத்து நகல் எடுக்கும் கடை ஒன்றை ஆரம்பித்தேன். ஒரு வருடத்தில் இரண்டு மெசின் தேவைப்பட்டது. போர் நின்ற பிறகு செல்பேசி ஏஜன்சியும் கிடைத்தது. கடந்த பத்து வருடங்களில் வியாபாரம் பெருகியது. என்னிடம் பன்னிரெண்டு பேர் வேலை பார்த்தனர். காலை எட்டு மணிக்கு கடை திறந்தால் இரவு 10 மணிக்குத்தான் பூட்டுவோம்.

ஒரு முறை வேலைக்கு புது ஆள் தேவைப்பட்டது. விளம்பரம் செய்தபோது 150 விண்ணப்பங்கள் வந்தன. ஒன்றிரண்டு பட்டதாரிகள் கூட விண்ணப்பித்திருந்தனர். மனேஜர் ஒவ்வொருவராக அழைத்து நேர்காணல் செய்து, இறுதி தேர்வுக்காக சிறந்த பத்துப் பேரை என்னிடம் பின்மதியம் மூன்று மணிக்கு அனுப்பி வைப்பதாகச் சொன்னார். ஒருவன் நாலு மணிக்கு வந்தான். மெலிந்த உள்வளைந்த உடம்பு. விண்ணப்பத்தில் ’சேந்தன் அமுதன்’ என்று எழுதியிருந்தது. பத்து வருடத்துக்கு முன்னர் பணப்பெட்டியை வாங்கிப் போக ஆட்டோவில் வந்தவன்தான். அதே பாதிப் புருவம். அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நான் உற்றுப் பார்த்தபோது ஓர் அடி பின்னால் வைத்தான்.

’எப்பொழுது வரச் சொன்னவர்?’ ’ஏறக்குறைய இன்றைக்குத்தான்.’ ’மூன்றுமணி என்று சொல்லவில்லையா?’ ‘ஐயா, எங்கேயோ இப்ப மூன்று மணி நடக்கிறது’ என்றுவிட்டு தலையை குனிந்தான். ’இந்த வேலைக்கு வேண்டிய தகுதி உங்களிடம் இருக்கிறதா?’ என்று கேட்டேன். நிமிர்ந்து என் கண்களைப் பார்த்து ’பசி’ என்று முனகிவிட்டு மறுபடியும் நிலத்தைப் பார்த்தான். பசியிலும் பார்க்க கூடிய தகுதி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

-அக்டோபர் 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *