அப்பர் பர்த் குப்பண்ணா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 5, 2023
பார்வையிட்டோர்: 8,249 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதோ , அப்பர் பர்த்தில் ஆனந்தமாகப் படுத்துக் கொண்டிருக்கிறாரே, அவர்தான் குப்பண்ணா! இப்போது டில்லிக்கு ஒரு காரியமாகப் போய்க் கொண்டிருக்கிறார். அடுத்த வாரம் அங்கிருந்து கல்கத்தா போகவேண்டும். அப்புறம் மெட்ராஸ் . மறுபடியும் மார்ச் முதல் வாரத்தில் மேற்கு ஜெர்மனி! 

ஜெர்மானியர்களின் கூட்டுறவுடன் இந்தியாவில் ஒரு கடிகாரத் தொழிற்சாலை தொடங்குவதற்குத்தான் அவர், இப்படி ஓயாமல் அலைந்து கொண்டிருக்கிறார். புதுமையான மோதிரக் கடிகாரம் ஒன்றைத் தயாரிக்கவே அவர் இப்போது திட்டம் போட்டு வேலை செய்து வருகிறார். அதாவது, மோதிரத்திலேயே வாட்சும் இருக்கும்! இந்தியாவில் ஒரு தொழிற்சாலை தொடங்க வேண்டும். இதற்கு யாராவது முதல் போட வேண்டும்.

குப்பண்ணா பணம் ஏதும் போடாமலே தொழிற்சாலையில் முக்கிய பாகஸ்தர்களில் ஒருவராக இருப்பார். அதாவது, அவல் கொண்டு வருகிறவர் ஒருவர்; உமி கொண்டு வருகிறவர் இன்னொருவர். இரண்டையும் கலந்து ஊதிச்சாப்பிடுகிறவர் குப்பண்ணா! 

தொழிற்சாலைக்குப் பெயர் என்ன தெரியுமா? இண்டோ- குப்-ஜெர்மன் ரிஸ்ட் வாட்செஸ் லிமிடெட்! நடுவிலுள்ள ‘குப்’ என்பது குப்பண்ணாவைக் குறிக்கும். இப்படி ஒரு லெட்டர் ஹெட்டே பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டு பல தொழிலதிபர்களுடன் கடிதப் போக்குவரத்து நடத்தி வருகிறார். 

குப்பண்ணாவிடம் உள்ள முதலெல்லாம் பேச்சுத் திறமை தான். அவர் இங்கிலீஷ் பேசினால் பியானோ வாத்தியம் போல அவ்வளவு இனிமையாயிருக்கும். ஆங்கில மொழியை அழகாகப் பேசுதில் ஸில்வர் டங் சீநிவாச சாஸ்திரியாருக்கு அடுத்த படி தாம்தான் என்பது குப்பண்ணாவின் எண்ணம்! 

“கடிகாரத் தொழிற்சாலை சம்பந்தமான பேப்பர் ஒன்று இண்டஸ்ட்ரீஸ் அண்டு காமர்ஸ் டிபார்ட்மெண்டில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அதை மெல்லக் கிளப்பி , பைனான்ஸ் டிபார்ட்மெண்டுக்குத் தள்ளிவிட்டு வரவேண்டும். அதற்காகத் தான் இப்போது டில்லிப்பயணம். அதை முடித்துவிட்டு அங் கிருந்து கல்கத்தாவுக்குப் போய்ச் சட்டர்ஜியைப் பார்த்து ஷேர் சேர்க்கும் விஷயமாகப் பேசவேண்டும். அகமதாபாத்தில் தொழற்சாலை தொடங்க இடம் தருவதாக ஒரு குஜராத்திக்காரர் சொல்லியிருக்கிறார்.” 

இப்படி வருஷம் முழுவதும் ஓயாமல் ரயில் பிரயாணம் தான். அதுவும் மூன்றாம் வகுப்பு அப்பர் பர்த்துத்தான்! தொழிற்சாலை ஆரம்பித்துவிட்டால் அப்புறம் கவலையில்லை. கம்பெனிச் செலவில் முதல் வகுப்பிலேயே பிரயாணம் செய்யலாம். 

குப்பண்ணா ஊருக்குப் போவதென்றால் ரயில் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரம் முன் கூட்டியே ஸ்டேஷனுக்குப் போய் எப்படியாவது அப்பர் பர்த்தைப் பிடித்துவிடுவார் . உடனே ஹோல்டாலைப் பிரித்துப்போட்டு அந்த இடத்தைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொண்டு விடுவார். சற்று நேரத்தில் அவருடைய செருப்புகளைத்தவிர மற்றச் சாமான்களெல்லாம் மேலே போய்விடும். ரயில் நகர்ந்ததும் அவரும் மேலுக்குத் தாவிவிடுவார். 

அவ்வளவுதான்; வேளா வேளைக்குச் சாப்பாடு, காப்பி எல்லாம் அப்பர் பர்த்திலேயேதான். எதற்கும் கீழே இறங்க மாட்டார். மேலிருந்தபடியே கீழே உட்கார்ந்திருப்பவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கொடுத்துத் தம் காரியங்களைச் சாதித்துக்கொள்ளும் திறமை அவருக்கு உண்டு.

நாலைந்து ஸ்டேஷன்கள் போவதற்குள் கீழே உட்கார்ந் திருப்பவர்கள் யார் யார், அவர்கள் எங்கே போகிறார்கள் என்பது போன்ற எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு விடுவார். 

மேலே இருந்தபடியே அவருக்கு எல்லாம் தெரியும். எப்போதாவது கீழே இறங்க வேண்டுமானால் டக்கென்று லாகவமாகக் காலைக் கீழே வைப்பார். அப்படி வைக்கும் போதே தயாராக இருக்கும் அவருடைய பாதரட்சைகள் இரண்டும் அவர் பாதங்களை ஏந்திக்கொள்ளும். அவ்வளவு அனுபவம் ரயில் பயணத்தில்! 
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் போய் நிற்குமுன்னரே “இதென்ன ஓங்கோலா? இதென்ன நாக்பூரா? இதென்ன குவாலியரா?” என்று கேட்டுக்கொண்டிருப்பார். கீழே இருப்ப வர்கள் வெளியே எட்டிப் பார்த்தால் அவர் சொல்கிறபடியே எல்லா ஸ்டேஷன்களும் டக் டக் என்று வந்து கொண்டிருக்கும். “அடுத்தாற்போல் வார்தா ஸ்டேஷன் வரப்போகிறது; அங்கே ஆரஞ்சு பாலிவு!” என்பார். வார்தாவும் வரும். ஆரஞ்சு வண்டி யும் வரும்; மலிவாகவும் கிடைக்கும்! 

அவர் ஆரஞ்சுப் பழங்களை வாங்கி வைத்துக்கொண்டு அப்பர் பர்த்திலிருந்தபடியே அவற்றைச் சாப்பிடும் அழகே தனி. ஆரஞ்சுத் தோலைக் கிண்ணம் போல் உரித்து வைத்துக்கொண்டு விதைகளை அந்தக் கிண்ணத்தில் துப்பிக்கொள்வார். பிறகு அதை அப்பர் பர்த்திலிருந்தபடியே லாகவமாக யார்மீதும் படாமல் ஜன்னலுக்கு வெளியே வீசிவிடுவார். 

வண்டியில் யாராவது சண்டைக்காரர்கள் வந்துவிட்டால் அவர்களுக்கும் பயப்படமாட்டார், குப்பண்ணா! 

சில சமயம் வடக்கத்திக்காரர்கள் இவர் அப்பர்பர்த் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது பிடிக்காமல் கோபமாகச் சண்டை போடுவார்கள். இவரும் சளைக்க மாட்டார். அவர்கள் இவருக்கு இந்தி தெரியாதென்று நினைத்து கொண்டு இவரை இந்தியில் திட்டுவார்கள். அம்மாதிரி சமயங் களில் குப்பண்ணா சற்று நேரம் இந்தியே புரியாதவர்போல் புன்சிரிப்புடன் மௌனமாக இருப்பார். 

பிறகு வண்டியிலுள்ள தமிழர்களிடம், “இந்த மடையன் கள் எனக்கு இந்தி தெரியாதென்று நினைத்துக்கொண்டு என்னை கண்டபடி திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது பாருங்கள். இந்தியிலே பேசப் போகிறேன். அப்படியே அலறப்போகிறான்கள்!” என்பார். 

இரவு பதினொரு மணிக்கு மேல் அந்தக் கம்பார்ட்மெண்டில் யாராவது சத்தம் போட்டுச் சீட்டாடினால் அவர் சும்மா இருக்க மாட்டார் . 

“கொஞ்சம் சத்தம் போடாமல் இருங்கள், சார்! தூங்க வேண்டும்” என்பார். 

“இது முதல் வகுப்பு இல்லை , மூன்றாம் வகுப்பு” என்பார்கள் அவர்கள். 

“மூன்றாம் வகுப்பென்றாலும் அதற்காகச் சத்தம் போட வேண்டுமென்று கட்டாயமில்லை சார். நீங்க பேசறதை நிறுத்த போறீங்களா? அல்லது, நான் ரயிலை நிறுத்தட்டுமா?” என்று ஒரு போடு போடுவார் அவர். அப்பர் பர்த் குப்பண்ணாவா கொக்கா!

– கேரக்டர், 9வது பதிப்பு-1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *