கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 15,760 
 

பண்ணைபுரம் என்ற ஊரில் விசாகன் என்ற புத்திசாலி கிழவர் வசித்து வந்தார். ஒருமுறை கிழவரது மனைவி, ஊருக்குச் சென்றிருந்தாள். கிழவர் மட்டும் அப்போது வீட்டில் இருந்ததால், வெளியே செல்லும்போதெல்லாம் வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்வது வழக்கம்.

ஒருமுறை அவர் வெளியே சென்று விட்டு வரும்போது, அவர் வீட்டிலிருந்து ஒரு திருடன் மூட்டையுடன் வெளியே வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே கிழவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டில் ஒரு பொருள் கூட இல்லை. சுத்தமாக காலி செய்து வைக்கப்பட்டிருந்தது.

EnVeeduகிழவர் வேகமாக வெளியே ஓடி வந்து திருடனைப் பின் தொடர்ந்தார்.
திருடன் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்து தான் கொண்டு வந்த மூட்டையை அங்கு வைத்து விட்டுக் கொல்லைப்புறம் சென்றான்.

வீட்டுக்குள் வந்த கிழவர், அங்கு பார்த்த போது வீடு முழுவதும் அவருடைய பொருட்கள் நிறைந்திருக்கக் கண்டார்.

அந்த பலே திருடன் ஒவ்வொரு நாளாக கிழவரின் வீட்டிற்கு வந்து, அவருக்கே தெரியாமல் அவருடைய பொருள்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி வந்திருக்கிறான்.

உடனே கிழவர் அங்கிருந்த பாய் ஒன்றை எடுத்துப் போட்டு அதில் படுத்துக் கொண்டார்.

கொல்லைப் புறம் சென்ற திருடன் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான். அங்கு கிழவர் படுத்திருப்பதைக் கண்டு, “”யார் நீ?” என்று கேட்டான் திருடன்.

“”என்னைத் தெரியவில்லையா? நான்தான் விசாகன்!” என்று கூறினார்.

“”நீ விசாகனாக இருந்தாலும் சரி, குசாகனாக இருந்தாலும் சரி. என் வீட்டில் உனக்கு என்ன வேலை?” என்று திருடன் அதட்டினான்.

“”உன் வீடா? என் வீட்டிற்குள் நீ வந்து என்னையே மிரட்டுகிறாயா?” என்றார் கிழவர்.

“”உனக்கென்ன பைத்தியமா? என்ன உளறுகிறாய்?” என்றான் திருடன்.

“”இதோ பார்! என் வீட்டிலிருந்த பொருள்களை எல்லாம் நீ இங்கே கொண்டு வந்து வைத்து விட்டாய். அப்படியானால் நான் புது வீட்டிற்கு குடியேறி இருக்கிறேன் என்று தானே பொருள்? நானும் நீண்ட நாட்களாக வீடு மாற வேண்டும் என்று நினைத்திருந்தேன். வீடு நன்றாக இருக்கிறது. வாடகை எவ்வளவு?” என்றார் கிழவர்.

தான் கிழவனிடம் வசமாக மாட்டிக் கொண்டதை அறிந்த திருடன் தான் கொண்டு வந்த பொருள்களை எல்லாம் எடுத்துச் சென்று கிழவரின் வீட்டில் திரும்பவைத்து விட்டான்.

– நவம்பர் 05,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *