குரல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 775 
 

அந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாது.

அது கேள்வி அல்ல. விமர்சனம். ஆனால் கேள்வியின் உருவில்.

‘உன்னால் பேசாமல் இருக்க முடியாதாக்கா…’

வெளிப்பட்ட மறு நிமிடம் எனக்குள் நிகழ்ந்த மறு பரிசீலனையில் விடுப்பட்ட வார்த்தைகளைத் திரும்ப உள்வாங்கிக் கொள்ளும் சமர்த்தின்றி தளர்ந்திருந்தேன்.

அக்காவின் முகம் பார்க்கும் துணிவில்லை. மனசு அமைதி இழந்து விட்டது. கண்ணாடி விரிசலை இனி எதை வைத்து ஒட்டுவது.

அக்கா பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். வாய்தான் ஓயாமல் பேசியது. அதுவும் என் எரிச்சலால் மூடிக் கொண்டது. கைகள் பரபரவென்று இயங்கி ஒரு புறம் நார் மேலெழும்பி பூக்கண்ணிகளால் மறந்து மறுபுறம் சரமாய் இறங்கிக் கொண்டிருந்தது.வாசலில் படி மூன்று ரூபாய் என்று சைக்கிளில் விற்று வருபவரிடம் வாங்கியது.

‘அம்மா.. பூ.. பூவேய்..’

வாசனையற்ற உரத்தகுரல். கூடையை நெருங்க கமழும் மணம் குரலில் எப்படித் தொலையும்?

‘அக்கா.. அவன் பூ விக்கவே லாயக்கில்ல’ என்று அடக்க மாட்டாமல் சொல்லியிருக்கிறேன்.

மடித்துக் கட்டிய கைலி. திணித்த சட்டைப்பை.. படியாத தலை. கழுத்தில் கர்ச்சீப் கட்டி பூ.. பூவேய்..சை. என்ன இரக்கமற்ற குரல்.

மல்லி.. முல்லை.. கனகாம்பரம்.. என்று கூடையில் ஈரத்துணியால் பிரிக்கப்பட்ட பூக்குவியல்.

‘எதுக்கு தெனம் போல உதிரிப்பூ வாங்கணும்’

என் சந்தேகத்திற்கு அக்காதான் பதில் தருவாள்.

‘தொடுத்த பூ விலை பார்த்தியா.. அந்த காசுக்கு மூணு பங்கு வாங்கி தொடுத்தா கிடைச்சுரும்’

ஊஹூம். டூந்தக் கணக்கு மட்டுமில்லை. வேறேதோ.. எதிரில் தாம்பாளத்தில் பூக்குவியல். முன்னே வைத்து அக்கா ஈரப்படுத்திய நாரில் அழகாய் முடிச்சிட்டுக் கொண்டு அரை மணி நேரத்தைக் கழிக்கும் அழகே தனி. தொடுத்து எழுந்து போன பின்பும் வாசம் காட்டும் தரை.

இன்று ஏன் கோபப்பட்டேன்.. கையில் இருந்த புத்தகமா.. அதன் வரிகளில் ஈர்க்கப்பட்டு இடையூறாய் உணர்ந்த அக்காவின் குரலா.. அல்லது என் செவிக்குள் ஒரு வாரமாய் கேட்கிற குரல்களா.. குரல்.. சே..

‘ஸாரிக்கா’

ஒரு வார்த்தை போதும். பார்வையில் வந்துவிட்ட வருத்தம் வார்த்தையில் விழாமல் ஜாலம் காட்டியது.

எதுக்கு சொல்லணும்? அக்காவே ஏன் தன் தப்பை உணரக்கூடாது? என் படிப்புக்கு இடையூறாய் இனி வரமாட்டேன் என்று ஏன் சொல்லக் கூடாது.. வீம்பும் அன்பும் மனசுள் மோதிக் கொண்டிருக்க, புத்தகம் தன் சுவாரசியம் இழந்து மனம் வாசிப்பில் லயிக்கத் தவறியது.

‘விளக்கு ஏத்தலியா”

அம்மாவின் குரல் கேட்டது. மூன்று மாதமாய் படுக்கை. ஒரு கை.. ஒரு கால் சொன்ன பேச்சு கேடகத் தவறி ஒத்துழையாமை. விளக்கு ஏற்றுகிற நேரம் லேசாய்க் கண்ணீர் வடியும். ‘இப்படி படுக்க போட்டுட்டியே’ அக்கா ஓடிப் போய் ஒற்றி எடுப்பாள். விபூதி வைப்பாள்.

“கொஞ்சந்தான் இருக்கு.. போறேன்”

அக்காவின் குரலில் பிசிறு இருந்ததை அம்மா படித்து விட்டாள்.

“ஏண்டி அழுதியா”

“இல்லியே”

“குரல் ஒரு மாதிரி இருக்கு”

“இல்லேங்கிறேனே”

என் சீற்றம் ஏன் அக்காவை இந்த அளவு பாதித்து விட்டது. அல்லது பெண்ணுக்கே உரிய சட்டென்று உணர்ச்சிவசப்படும் இயல்பா.. சொடுக்கினால் கண்ணீரா..என்ன ஆனாலும் சரி.. இன்று நானாக சமாதானம் பேசப் போவதில்லை. என்னுள் வைராக்கியம் பெரிதாய் படர்ந்து கொண்டது.

அக்கா எழுந்து போனாள். தொடுக்க இயலாத பூக்கள் சிதறிக் கிடந்தன. விரல் நீள மிச்ச நாரும்.

பூஜை விளக்கை அக்கா ஏற்றி வைத்து ஊதுபத்தி கொளுத்தியதும் பூ வாசனையுடன் அந்த மணமும் இணைந்தது.

“சாதம் வச்சிரு”

அம்மாவுக்கு மெல்ல மெல்ல உடல் நலம் திரும்புவதை உணர்த்தும் அதிகாரக் குரல். இன்னமும் முழு வீச்சில் வராவிட்டாலும் சொல்லுவது புரிகிற தொனி.

இன்று ஏன் குரல்களைப் பற்றிய ஆராய்ச்சி என்று எனக்குள்ளும் வியப்பு. ஏன் அம்மா அனத்துகிறாள்.. அக்காவே அடுத்த வேலையாய் சமையலில்தான் இறங்கப் போகிறாள்..

எழுந்து வெளியில் வந்தேன்.

கோவில் கோபுரத்தில் ஸ்பீக்கர் பொருத்தி தேவாரப் பாடல் கேட்டது. அந்தி நேர பூஜை. வாகன இரைச்சல்கள் மீறி தெய்வப் பண்.

“இவர் என்ன சொன்னாலும் கேட்கலே.. பின்னால நாம் கஷ்டப் படறப்ப.. யார் உதவிக்கு வருவாங்க”

யாரோ இரு பெண்மணிகள் பேசிக் கொண்டு போனார்கள். மறுபடி குரல்கள். எனக்குள் விபரீதமாய் யோசனை. என் விரல் சொடுக்கில் உலகமே ஸ்தம்பித்துப் போக வேண்டும். பறவைகள், காற்று, கடல் அலை, எந்த சப்தமும் இன்றி.. அமைதி.. பரிபூர்ண அமைதி.. நான் அசைந்தால்.. அசைய.. அகிலம் எல்லாமே..

என்னையும் மீறி விரலைச் சொடுக்கி வினோதமாய் நின்றிருக்க வேண்டும். வேகம் வேகமாய்.. எதுவும் நிகழாமல்.. நான் எதிர்பார்த்த மாதிரி.

அக்காவின் கைகள் என்மேல் படிந்து இறுக்கிக் கட்டிக் கொண்டதும் விழிப்பு வந்து விட்டது.

“கேசவா.. என்னடா”

அக்காவின் குரலில் வசீகரம் இல்லை. சற்றே கீச்சிட்டது. ஆனால் அந்த நிமிஷம் அதில் கலந்திருந்த நூறு சதவீத பாசம் வேறெந்த குரலிலும் கிட்டாதது.அழுதேன்.. அவள் அணைப்பில் சுழன்று.

“அழாதே.. இந்த பரிட்சை போனா என்ன.. அடுத்த தடவை.. தைரியமா இரு.. தளர விட்டுராதே”

பேசப் பேச என்னுள் குரல்கள் பற்றிய அருவருப்பு தொலைந்து நம்பிக்கையின் கனம் கூடிக் கொண்டே போனது.

– மே 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *