அட்டிகை எங்கே..?

0
கதையாசிரியர்: ,
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 19, 2023
பார்வையிட்டோர்: 5,419 
 

அக்பருடைய ஆட்சிக்காலத்தில் தலைநகரில் பெயர் பெற்ற நகை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடம் வைர அட்டிகை செய்து தருமாறு அக்பரின் பட்டத்துராணி கேட்டுக் கொண்டிருந்தார்.

அக்பருடைய ஆட்சிக்காலத்தில் தலைநகரில் பெயர் பெற்ற நகை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடம் வைர அட்டிகை செய்து தருமாறு அக்பரின் பட்டத்துராணி கேட்டுக் கொண்டிருந்தார். ராணியின் வேண்டுகோளுக்கிணங்கி, அந்த நகை வியாபாரி திறமை வாய்ந்த நகைத்தொழிலாளிகளை வைத்து அட்டிகை செய்ய ஏற்பாடு செய்தார். வேலை சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அட்டிகைக்கு மெருகு வைக்க வேண்டிய வேலை மட்டும் பாக்கியிருந்தது.

அந்தச் சமயத்தில் திடீரென வைர அட்டிகை காணாமற் போய்விட்டது. விஷயமறிந்த வியாபாரிக்கு பெருத்த அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் ஓரிரு நாள்களில் தந்து விடுவதாக ராணியிடம் கூறியிருக்கிறோம். அரசர் கேட்டால் என்ன பதில் கூறுவது? வைர அட்டிகையை எப்படி கண்டுபிடிப்பது? ராணிக்கு தருவதற்கு என்ன வழி? என்ற கேள்விகள் அந்த நகை வியாபாரியை பெருத்த கவலைக்குள்ளாக்கியது.

வியாபாரி தன்னிடம் வேலை பார்க்கும் நகைத் தொழிலாளிகள் அனைவரையும் அழைத்து, அட்டிகை பற்றி விசாரித்தார். பலன் ஏதுமில்லை. வேறு வழியின்றி பீர்பாலிடம் சென்று வழக்கை ஒப்படைத்தார்.

பீர்பால் அவருக்கு ஆறுதல் கூறி, வழக்கு குறித்த முழு விவரத்தையும் கேட்டறிந்தார். மேலும், வியாபாரியிடம் வேலை பார்த்த ஆறு பேரையும் அழைத்து வருமாறு கூறினார். மறுநாள் அந்த வியாபாரி அந்த ஆறு பொற்கொல்லர்களையும் பீர்பாலிடம் அழைத்து வந்தார்.

பீர்பால் அவர்களிடம், “உங்கள் அறுவரில் யாரோ ஒருவர்தான் நகையைத் திருடியிருக்க வேண்டும். எனவே நான் மந்திரித்துக் கொடுக்கும் இந்த ஆறு பிரம்புகளையும், ஆளுக்கு ஒன்றாகத் தரப் போகிறேன். இதனை உங்கள் தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்க வேண்டும். காலையில் விழிக்கும்போது வைர அட்டிகையை திருடியவனுடைய பிரம்பு மட்டும் ஒரு அங்குலம் வளர்ந்திருக்கும்” என்று கூறி ஒரே அளவான ஆறு பிரம்புகளை ஆளுக்கொன்றாக கொடுத்து, அவர்களை தனித்தனி அறைகளில் வைத்து பூட்டிவிட்டார்.

தனித்தனியே பூட்டப்பட்ட அறைகளில் ஒருவன் மட்டும் தூங்காமல் யோசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு, தான்தான் திருடன் என்று பீர்பால் கண்டுபிடித்து விடுவாரோ என்று பயமாக இருந்தது. பீர்பால் மிகவும் புத்திசாலி. அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை. என்ன செய்வது? எப்படியாவது இதிலிருந்து தப்பித்தான் ஆகவேண்டும் என்று தூங்காமல் சிந்தித்தவன், கடைசியில் தான்தான் திருடன் என்று பிரம்பு காட்டிக் கொடுத்துவிடும் என்று பயந்து, தன்னிடமிருந்து பிரம்பை ஓர் அங்குலம் வெட்டிவிட்டான். இனி தன்னுடைய பிரம்பும், மற்றவர்கள் பிரம்பு போன்று சமநீளத்துடன் இருக்கும் என்று நிம்மதியுடன் உறங்கப் போனான்.

விடிந்ததும் ஆறு பேருடைய பிரம்புகளும் சோதனை இடப்பட்டன. குற்றவாளியின் பிரம்பு மட்டும் ஓர் அங்குலம் குறைவாகக் காணப்பட்டது. திருடன் தம்முடைய தவறை உணர்ந்து, பீர்பாலின் மதிநுட்பத்திற்கு முன் அடிபணிந்தான்.

வைர அட்டிகை நகை வியாபாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் அந்த அட்டிகை ராணியிடம் ஒப்படைக்கப்பட்டது. மறுபடியும் ஒருமுறை பீர்பாலின் மதிநுட்பம் உலகத்தார் முன்பு நிரூபிக்கப்பட்டது.

– நவம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *