தன்மானத்தின் பலிகடா – சாரா

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 9,261 
 

செம்மேகங்கள் சூழ்ந்த மாலைப்பொழுதில், கோவை நகரின் பிரதானச் பூங்கா ஒன்றில், மனிதர்கள் யாரும் இல்லாது வனம் போன்று சூழ்ந்திருக்கும் புங்கை மரத்தின் நிழலில், தத்தம் முதுகுகளை இணைத்தவாறு எதிர் எதிரே அமர்ந்திருந்தது அந்த இளம் ஜோடி.

கல்யானத்துக்குப் பின்னாடி நாம எங்கேயாதும் போயிடலாம். ஒரே ஒரு குழந்தை போதும், நமக்கினு சின்னதா ஒரு வீடு, நல்ல ஒரு ஜாப்ல ஜாயின் பண்ணிடு சீக்கிரம், அமைதியா, அன்பா நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும் சரியா, என்ன சொல்ற குமார், என்றாள் ஜில்ஃபிகா.

எல்லாவற்றிற்கும் தலையை அசைத்தவாறே பதில் கூறிய குமார். தன் மனதிற்க்குள் இப்படியும் நினைத்துக் கொண்டான், ‘எத்தனை பேரத்தான் சமாளிக்கறது, உம்ம்ம்ம் ஓடிப் போலாம்ங்கறா, கல்யாணம்ங்கறா, குழைந்தங்கறா, சரி சரி கேட்டதெல்லாம் கொடுப்போம், ஆடு தானா வந்து தலைய நீட்டுது’ என்றபடி

*****************************************

கூட்டாக பன்னிரண்டு புறாக்கள் இரையை மேய்ந்து கொண்டிருக்க, அவைகளுக்கு தானியங்களை தூவிக் கொண்டிருந்தாள் சாரா. ‘யூ கேவ் ஏ டெக்ஸ்ட் மெஸேஜ்’ என்றபடி ஒரு பெண்ணின் குரல் கேட்ட சாரா, தன்னுடைய கைப்பேசியை எடுத்து பார்த்தாள். அதில் ‘சேஃப்டியா வீட்டுக்கு போயிட்டயா’ என்று ஷாஜன் அனுப்பியிருந்த குறுந்தகவல் பளிச்சிட்டது.

உம் யெஸ், ஆர் யூ? என்றூ சார பதில் அனுப்பினாள்.

மீ டூ என்று வந்தது ஷாஜனின் பக்கமிருந்து.

ஷாஜன், சாரா இருவரும் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் நபர்களாவர். ஒரு வருடமாக இருவருக்கிடையில் காதல் மலர்ந்துள்ளது. வீட்டாரும் சரி சொல்லியாகிவிட்டது, அவரவர் பிள்ளைகளிடம் மட்டும். இரு வீட்டாரின் கலந்து கொள்ளல் இன்னும் நடந்தேறவில்லை. இரண்டு மாதங்களில் சார வீட்டாரிடம் பேசுவதாக ஷாஜனுடைய வாபா, ரஹீம் கூறி வைத்துள்ளார்.

இருவரின் காதலுக்கும் பெரிய எதிர்ப்புகள் இல்லை. தனது சமுதாயத்தில் கல்லூரி பயின்று, பணியில் சேர்வது சாராவே முதல் தலைமுறை. ஆரம்பத்தில் சாராவின் அம்மா ஆமினாள் தனது ஆளுமை குணத்தால், சாராவை கட்டுப்படுத்தியே வந்தாளும், பிற்பாடு அவர் அனைத்தையும் விலக்கிக் கொண்டு சம்மதம் கூறிவிட்டார், சாரவின் காதலுக்கு.

புறாக்கள் கூண்டுக்குள் சென்று கதவுகளை மூடிக் கொண்டன. சாரா மஃரிபுடைய தொழுகைக்கு பாங்கின் ஒலி கேட்டதும், ஷாஜனுக்கு காதல் வசத்தால் அழுத்தமான முத்தத்தை குறுந்தகவல் வழியாகவே அனுப்பி விட்டு, கை, கால்களை சுத்தம் செய்ய உலூ செய்து விட்டு, தொழுகையில் ஈடுபட்டால்.

இருவரும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தாலும், அவர்களால் சரிவர பேசிக் கொள்வது இயலாத ஒன்றே. ஆகவே, சாரா இப்படி மாலை நேரத்தில், அசர் தொழுகைக்கும், மஃரீப் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரத்தில் பறவைகளை மேய்த்துக் கொண்டும், பூச் செடிகளை பராமரித்துக் கொண்டும், ஷாஜனுடன் பேசிக் கொண்டிருப்பாள், வரம்புகளுக்குட்பட்ட வார்த்தகளை மட்டும்.

***************************

முடியாதும்மா… நீங்க சொல்றது எல்லாத்துக்கும் என்னால தலையாட்ட முடியாது. நான் படிச்சவ.., என் டேஸ்ட் வேற. எனக்கும் நல்லது, கெட்டது எதுன்னு நல்லாவே தெரியும் சரியா? குமாரத்தான் எனக்குப் புடிச்சுருக்கு நான் அவனைத்தான் கல்யானம் பண்ணிப்பேன்…! என்றாள் ஜில்ஃபிகா.

ருக்கையா அதைவிட ஆவேசமாக, ‘உன்னை பெத்தவ நான், நீ எனக்கு கட்டுப்பட்டுத்தாண்டி இருக்கணும், என்ன படிச்சு என்னடி? இப்புடி கண்டவங்கூட சுத்ற மூதேவி…மூதேவி. இங்க பாருடி, இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு, ஒழுங்கா உன் மனச மாத்திக்கிட்டு, கல்யாணப் பொண்ணு மாதிரி நடந்துக்கோ. சொந்தக்காரங்களா வரப் போக இருப்பாங்க, எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது ஆமா’ என்று கூறி ஜில்பிகாவை ஒரு பார்வை பார்த்தாள்.

அதெல்லாம் முடியாதும்மா, இப்படி கம்பெல் பண்ணனீங்கனா நான் அவன்கூட ஓடிப் போயிடுவேன் சொல்லிட்டேன்….!

ப்பளார்…..ப்பளார் என ஜில்ஃபியாவின் கண்ணம் சிவந்தத்து, ருக்கையாவின் கை பலத்தால்.

இன்னும் நல்லா அடி, ஆனா நான் ஒத்துக்க மாட்டேன் என்று தேம்பியவளாக, அகங்காரத்தோடு முனு முனுத்தாள் ஜில்ஃபிகா.

*******************************

என்னம்மா ரெண்டு நாளுல கல்யாணம், இவ ஏன் இப்படி இருக்கா என்றால் ஆமினா தன் தங்கை ருக்கையாவிடம்.

உம்ம்ம்ம்ம் என்னத்த சொல்ல, எருமை அந்த நினைப்புலயே இருக்கறா, எங்க போற சைத்தானோ என் வயித்துல வந்து பொறந்திருச்சு. வர்ர்ர்ர ஆத்திரத்துக்கு, இவள அப்படியே கழுத்த நெரிச்சு சாகடிக்கலாம் போல இருக்குதுக்கா எனக்கு, என்றாள் ருக்கையா.

விடு, விடு அதெல்லாம் புரிஞ்சுப்பா என் புள்ள, நீ போயி உன் வேலைய பாரு ருக்கையா சரியா.. போ…போ.

என்னம்மா ஜீல்ஃபி, நம்ம குடும்பம் என்ன? அவிங்க குடும்பம் என்ன? ஒரு தராதரம் வேணாமா சொல்லுடா? நீ படிச்சவ இப்படி பண்றது சரியாடாமா சொல்லு?

என் மவ சாராவும்தான் மனசுக்கு புடிச்சிருக்கு ஷாஜன் கூட நிக்காஹ் பண்ணித் தருவீங்களானு கேட்டா, நாங்களும் சரினு சொன்னோம். எதனால? அந்தப் பையன் நல்லவன், குடும்பம் அந்தஸ்த்துள்ள குடும்பம், முக்கியமா நம்ம ஆளுக அதனாலதான்.

ஆனா நீ லவ் பண்றவன், குடிச்சுட்டு ரோட்டுல பொறுக்கித்தனம் பண்றவன். அவன் எப்படி நம்ம குடும்பத்துக்கு லாயிக்காவான்?

இங்க பாருமா ஜீல்ஃபி, அனீஸ் நல்ல பையன், நிறைய சம்பாதிக்கிற இன்ஜினியர், அவன் குடும்பம் கெளவரவமானது. இதெல்லாம் வேணாம்னு ஒதுக்கிட்டு, உன் தலைல நீயே மண்ணை வாரி போட்டுக்காதடா, உம் புரிஞ்சதா…என்றபடி கூறிய ஆமினா, ஜீல்ஃபிகாவின் தலையை நிமிர்த்தினாள்.

ஜீல்ஃபியின் கண்களில் ஒருவித ஏக்கமும், தேக்கமும் தென்பட கண்னீர் வழிந்தோடியது.

அவளது கண்ணீரை துடைத்துவிட்டு, மெல்ல சாய்த்து படுக்க வைத்து, போர்வையை போர்த்திவிட்டு, அங்கிருந்து விலகி வெளியேறினாள் ஆமினா.

**********************************

அன்று ஞாயிற்றுக் கிழமை….

ஃபஜ்ர் அதிகாலை தொழுகையில் சந்தித்துக் கொண்ட ஷாஜனும், அனீஸும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி முஸாபா செய்து கொண்டனர். பின் அனீஸுடைய கைகளை இறுகப்பற்றி, தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தான் ஷாஜன். பின்னர் சற்று நிமிடங்களுக்கு அப்பால், அனீஸ் பள்ளிவாசல் ஹஜ்ரத்திடம் வாழ்த்தும், ஆசியும் வாங்கிக் கொண்டு மசூதியை விட்டு வெளியேறினான்.

வீட்டில் அவனுக்காக அரைமணி நேரம் பார்பர் காத்துக் கொண்டிருந்தார், அனீஸிற்கு களை முடிகளை களைய.

*************************

இப்படி நடந்திருச்சே…! எங்க வாப்பா மொகைதீன் இராவுத்தருனா எவ்வளவு மதிப்பு, மரியாத. இப்போ எல்லாம் போச்சே, இந்த சிறுக்கியால….என்று குமுறினார் முஜிபுல்லா.

அவ செத்துத் தொலைஞ்சிருந்தாலும் நிம்மதியா இருக்கும், இப்படி ஊதாரிப் பயலோட ஓடிட்டாளே சனியேன், சனியேன்! நல்ல இடம். ஐயோ, வி.கே.வகையறான்னா சும்மாவா? நம்ம குடும்பத்தோட உறவு வச்சுக்கணும்னு ஆசைப்பட்டு சம்பந்தம் கேட்டவங்கள்ட்ட இப்ப என்னனு சொல்ல. பாவி மவ இத ஆரம்பத்திலயே செஞ்சிருந்தா, கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்திருக்க மாட்டோமே, குடும்ப கெளரவமே குழி தோண்டி புதைச்சுட்டாளே பாவி, பாவி… என்றாள் ருக்கையா ஒப்பாரி வைத்து……..!

முஜீபுல்லா, ருக்கையா வீடு முழுக்க, கல்யாண வாசம் வீச, இவர்கள் இருவர் மட்டும் கருமாரி வீட்டினராய் மாறிவிட்டனர்.

************************************

விசயம் மெல்ல பரவியது, நேரம் சென்றது…..!

முஜிபுல்லாவும், சதக்கத்துல்லாவும் கூடி பேசிக்கொண்டு விட்டு, அவசர, அவசரமாக வீட்டிலிருந்தும் வெளியேறுகின்றனர்.

காரில் இருவரும் உட்கார்ந்த வன்ணம், அவரது மனைவிமார்களான, ருக்கையாவையும், ஆமினாவையும் கூப்பிட்டு, சன்னக் குரலில் ஏதோ கூறிவிட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும், வீட்டிற்க்குள் வேக வேகமாகச் சென்றனர்.

அனீஸுடைய வீட்டில், சதகத்துல்லாவும், முஜீபுல்லாவும் உட்கார்ந்திருக்க, அவர்களுக்கு எதிராக ஷம்சுதீனும், அனீஸின் தாய் மாமன் ஹபீபும் இருந்தனர்.

எங்க நிலைம இதுதானுங்க, தப்பு எங்க மேலதான். இருந்தாலும் இவ்வளவு கூடி வந்ததுக்கப்புறம், சம்மந்தம் விட்டுப் போச்சுனா குடும்ப கெளரவம் என்னாகுறதுங்க? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க என்றார் முஜீபுல்லா.

எல்லாம் சரிதாங்க, உங்க வகையறாவும், எங்க வகையறாவும் சம்மந்தம் வச்சுக்கணும்ங்கரது எங்க அத்தாவோட ஆசை. அதான் நாங்க உங்க வீட்ல பொண்ணு கேட்டோம், ஆனா இப்போ இப்படியான நிலைமைல என்ன சொல்றதுன்னு தெரியலைங்க…. என்றார் அனீஸின் அத்தா ஷம்சுதீன்.

நால்வரும் மாற்றி, மாற்றி பேசினர். இடையில் அனீஸும் அழைக்கப்பட்டான். அவனோ, அவர்களின் சம்மதம் எனக் கூறி நகர்ந்தான்.

*************************

காலை மணி, பதினொன்றை, மசூதியில் மணகனாக அனீஸ், மதகுருமார் ஹஜ்ரத்டின் எதிரே அமர்ந்திருக்க, இவர்களைச் சுற்றிலும் சுற்றங்கள் சூழ்ந்திருந்தது.

‘அவ்வல் கலிமா, இலாயிலாஹா இல்லல்லாஹீ’ என்று ஹஜ்ரத் சொல்ல, சொல்ல அனீஸ் சொல்லிக் கொண்டே வந்தான். பிறகு, சதக்கத்துல்லாவிடமும், ஷம்சுதீனிடமும், எதையோ கேட்ட ஹஜ்ரத், அதனியே அனீஸிடமும் கேட்க, மாப்பிள்ளை உம்ம்ம் என தலையசைத்தார்.

ஒரு பெரிய புத்தகத்தில் ஹஜ்ரத் அனீஸிடம் கையெழுத்து வாங்கிடவே, பின் அந்தப் புத்தகம் அருகிலுள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சிரிப்பொலிகளும், கீச்கிச்சென்ற குரல்களுக்கும் மத்தியில், பல பெண்கள் சூழ தங்க ஜரிகைத் துப்பட்டா போர்த்தி, முகத்தை கீழே சாய்த்து, மனதுற்க்குள் வெந்நீர் பாய்ச்சியவளாக அமர்ந்திருந்த சாராவிடம் அந்த புத்தகம் கொடுக்கப்பட்டது.

அதில், ஷம்சுதீன் மன் அனீஸ் தன்னை மணமுடிக்க விருப்பம் தெரிவித்து, தகுந்த சாட்சிகளின் முன்னிலையிலும், ஜமாத்தார்கள் முன்னிலையிலும் கையொப்பம் இடப்பட்டிருந்தது. சாரா இவைகளையெல்லாம் படிக்கவில்லை, அவளது சித்தி ருக்கையா காட்டிய இடத்தில், வேகமாக கையெழுத்திட்டாள்.

திருமண மண்டபத்தில் மதிய உணவு விருந்து நடந்து கொண்டிருந்தது. மணமகன் அனீஸ் தனது சக நண்பர்களுடன் அமர்ந்திருந்தான். ஷாஜன் மட்டும் காணவில்லை. அனீஸ், ஷாஜன் இருவரும் தோழர்கள். ஆனாலும், அனிஸிற்கு தெரியாது அவனது மனைவி சாரா, ஷாஜனுடைய காதலி என்பது.

***********************************

எப்படியோ சம்பந்தி எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. உங்க தம்பி பொண்ணா இருந்தா என்ன/ உங்க பொண்னா இருந்தா என்ன? எனக்கு உங்க வகையறால சம்பந்தம் உண்டாயிருச்சு, அதுவே போதும் என்றார் ஷம்சுதீன்.

ஒருவித மனக்கலக்கத்தோடு, அலட்டுச் சிரிப்பை உதிர்த்து, தலையை ஆட்டினார் சதக்கத்துல்லா.

எம் மக, நா சொன்னா கேட்பானு தெரியும். அவளுக்கு சொர்க்கம், நரகம்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்கேன், அதான் இப்போ நம்ம மானத்த காப்பாத்திருக்கா என்றாள் ஆமினா ருக்கையாவிடம்.

பாவம், எவ்வளோ துடிக்குதோ என் மவ மனசு. நம்ம குடும்ப கெளரவம் அது இதுனு, ஏதேதோ சொல்லி அவள இப்புடி, வற்புறுத்தி உட்கார வச்சுட்டீயேக்கா? சாராவோட வேதனைக்கு நாமெல்லாமே பதில் சொல்லியே ஆகணும். அந்த சண்டாளி முண்டையால, எம் புள்ள சாரா வேகறாலே, ஐய்யோ என குமுறி, குமுறி அழுதாள் ருக்கையா.

சாராவின் கண்களில் இருந்து விழுந்த ஒரு துளி கண்ணீர், அவளது கைகளில் கொடுக்கப்பட்டுள்ள, பூச்செண்டின் ரோஜா மலர் மீது வழிந்தோடியது.

மேகங்கள் யாவும் ஒன்றிணைந்து நடத்திய இரங்கல் கூட்டத்தால், திருமண மண்டபம் சுற்றி வைக்கப்பட்டிருந்த வாழ்த்துத் தட்டிகள் யாவும் துவண்டு போயின. இந்த தட்டிகளே ஷாஜனை மண்டபத்தின் உள்நுழையாமல் வெளியேற வைத்தது.

நண்பகல் பொழுது, இருள் சூழ்ந்து காட்சியளித்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “தன்மானத்தின் பலிகடா – சாரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *