அர்த்தமற்ற ஒரு வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 5,818 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உயிருக்காகத் தானே உணவு! உணவுக்காக வேலை! நாலு பேர் பார்க்குமிடத்திற்கு வேலைக்கு வர வேண்டி இருப்பதற்காய் ஏதோ சில அலங்காரங்கள். அலங்காரம் செய்து கொள்கிறாள் என்பதனால் நயீமாவுக்கு வாழ்க்கை மிகவும் இனிப்பாயிருக்கிறது என்று யாரும் எண்ணிவிட முடியாது. பிடிக்கிறது என்பதனால்தான் எல்லாரும் வாழ் கிறார்களா? ஏதோ வாழ வேண்டுமே என்பதற்காகவும் பலர் வாழத்தான் செய்கிறார்கள்.

ஓடும் குதிரைக்கு முன்னால் “கரட்” கட்டித் தொங்கவிடும் கதை போல வாழ்க்கைப் பாதையின் தொலைவில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருந்தால் தான் வாழலாம் என்றால்… நிச்சயம் அவள் அதற்கு ஒரு சவால்தானே! வாழ்வில் எந்தவிதமான எதிர்பார்ப்புக்களும் இன்றியே பதினைந்து நீண்ட வருடங்களை வாழ்ந்து முடித்திருக்கிறாள் அவள். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு ஆணின் துணையைத், தொடர்பை ஏன் நினைவைக்கூட அகற்றிவிட்டுச் சலனமற்ற தெளிந்த மனதுடன் வாழ்ந்துவிட முடியும் என்பதற்கு அவள் ஓர் அபூர்வ உதாரணம். அப்படி வாழ்வதே ஒரு வகையில் அவளுக்குச் சுலபமாகக்கூட இருந்தது. துயரம் தோய்ந்த நிறைவும், துன்பம் கலந்த தெளிவும், விரக்தி சேர்ந்த மகிழ்வும், மௌனம் செறிந்த அமைதியும் கொண்ட இந்த வாழ்க்கை அவளுக்கு ஓர் ஆசீர்வாதமா? அல்லது தண்டனையா? எப்படியும் இருக்கலாம். அவள் அதை பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. நினைத்துப் பார்ப்பதால் புதிதாக என்ன வந்துவிடப் போகிறது?

பிறந்த நாள் வாழ்த்து முடிந்து ஒலிக்கும் இசை வானொலியில் கேட்கிறது. நேரம் ஏழு பதினைந்து, நிலைக்கண்ணாடியின் முன் நின்று தலையைச் சீவும் போது, பக்கவாட்டில் பிரிக்கப்பட்ட உச்சியின் அருகில் திட்டுத்திட்டாய் தோன்றிய நரைகள்…. அவள் இளமை ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதை நினைவுபடுத்துகின்றன. “பிளவுசின் கீழே மெது வாக எட்டிப் பார்க்கும் வயிற்று மடிப்புத் தசை அவள் உடலின் வனப்பில் முதிர்வு ஏற்படுவதை அறிமுகம் செய்கிறது. முகத்தின் பிரபையில் மட்டும் முப்பத்தேழு வருட அனுபவம் தென்படவில்லை.

பக்கத்து அறையின் சுலைஹாவை மற்றப் பெண்கள் கேலி செய்வதும், சிரிப்பதும், அவள் சிணுங்குவதும் ஹாஸ்டல் பெரிய அமர்க் களப்படுகிறது. இஸ்லாமியப் பண்பைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள் ளாத அந்தச் சுலைஹா அண்மையில் யாரோ ஒருவனுக்குக் “கிச்ட்” ஆகி இருக்கிறாள் போலும். நேற்று பஸ்ஸிலே அவள் பக்கத்தில் அந்த அவன் இருந்து, அவள் தோள்களை மெதுவாக அணைந்தபடி காதுக் குள் ஏதோ சொல்ல, சுலைஹா மலர்ந்து சிரித்ததை நயீமா பார்த்தாள். அது அப்படித்தான்! அவன் அப்படித்தான் அர்த்தமின்றி ஏதாவது சொல் வான். அவள் இப்படித்தான் அர்த்தமின்றிச் சிரிப்பாள். ஹாஸ்டலில் பெண்கள் எல்லாம் அவன் பெயரை கடதாசியில் எழுதிக் கட்டிவிடுவார்கள். காலையில் அவள் எழுந்து பாத்றூம்” போகும் போது,

“பாரடி இவள் ராத்திரி முழுவதும் அவரைக் கழுத்தில் கட்டிப் பிடித்தபடி நித்திரை செய்திருக்கிறாள். பொல்லாத கள்ளியடி…’

என்று சொல்லி ஒருத்தி சிரிக்க, மற்றைய யாவரும் ஓடி வந்து இவள் கழுத்தைப் பார்க்க, ஹாஸ்டல் அமர்க்களப்படும். அவள் சிணுங்குவாள். அதிலும் ஒரு நிறைவும் மலர்வும் இருக்கும்.

பின்னர்… பின்னர்….

பல்கலைக்கழக வாழ்க்கைக் காலம் இப்படியே கனவுகள் நிறைந்த தாய் மறைந்து போக, அவன் நல்ல உத்தியோகம் கிடைத்து அவளைப் பிரிந்து போகும் காலம் தொடர், கல்யாணப் பிரச்சினை வரும் போது, சீதனச் சந்தையிலே பல சரக்குகள் போட்டிக்கு வரும்! அந்த ஏல விற்பனையில், பல லட்சம் ரூபாய்களுடன் வரும் முன்பின் தெரியாத ஒரு பணக்காரி வெற்றி பெற்று விடுவாள்! தன் குடும்பத்தின் தன் தங்கை களின் நல் வாழ்விற்காய், காதல் தியாகம் என்ற போர்வையில் மறைந்து கொண்டு அவன் அந்தப் பணக்காரியுடன் இணைந்து கொள்வான். போகும் போது வேண்டுமானால்.. நீ உனக்குப் பொருத்தமாய் – பொருத் தமாய் என்று குறிப்பிடவது அந்தஸ்துப் பொருத்தம், பணப்பொருத்தம் – போன்றவற்றை – ஒருவரை மணந்து சந்தோஷமாய் வாழ வேண்டும் என்று வாழ்த்தி விட்டுப் போவான். அதன் பின்னர்…. அவள்….

சிந்தனைச் சிறகுகளை மிக வேகமாகத் தட்டிக் கொண்டிருந்த நயீமா.. “நேரம் சரியாக ஏழு மணி முப்பது நிமிடம்” என்ற வானொலி அறிவிப்பாளரின் ஒலியைத் தொடர்ந்து… விரைவாகத்தன் அலுவல்களை முடித்துக் கொண்டு அந்தப் பெண்கள் ஹாஸ்டலை விட்டுப் புறப்படு கிறாள். இனி பஸ் பிடித்து, அதற்குள் நெரிந்து முறிந்து, பல ஆண்கள் வேண்டுமென்றே தேகத்தில் உரசுவதையம் வெளிக்காட்ட முடியாத வெறுப்புடன் சகித்துக் கொண்டு ஜன நெரிசலின் அந்தத் துர்வாடை யையும் தாங்கிக் கொண்டு, தலையில் போட்ட சேலையை இழுத்து மூடிக் கொண்டு கல்லூரி வாசலில் இறங்க எட்டு மணியாகிவிடும்.

மார்கழி, விடுமுறைக்குப் பின் அன்று கல்லூரி திறக்கப்படும் தினம். பழைய அதிபர் ஓய்வு பெற்றுப் போன பின்னர் புதிதாக யார் வந் திருக்கிறார்களோ, புது மனிதர் “ஷாப்” பாக எட்டு மணிக்கு “றெட்லைன்” அடிக்கும் மனிதராகவும் இருக்கலாம் என்று நினைவுகள் ஓட அவள் விரைந்த போது, அங்கே அன்வர் மாற்றலாகி அவளுக்கு அதிகாரியாய் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்புக் கொஞ்சம் கூட அவளுக்கு இருந்தி ருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவளுடைய எதிர் பார்ப்பிற்கு மாறாக ஒன்றுமே நடவாதா என்ன? ஒன்றுமே நடக்கக்கூடாதா என்ன ?

“பிரின்சிப்பல் கூப்பிடுகிறார் மிஸ்”

என்று பியூன் வந்து சொன்னபோது, துடிக்கும் இதயத்தை அழுத் திப் பிடித்துக் கொண்டு தான் அவள் பேசினாள். அங்கே அன்வரை – தன் னுடைய அன்வரை- இருபத்திரண்டு வயது வாலிபனாய் அவள் மனதில் இருந்த அன்வரைச் சற்றே மாறுபட்ட முதிர்ந்த தோற்றத்தில் கண்ட போது, ஒரு விநாடி அவள் இதயம் துடிக்க மறந்துதான் போய்விட்டது.

என அவளுக்கு கவுத்தாருந்தத்தான் அந்த முகம் – சந்திரன் போன்ற பிரகாசமான அந்த முகம் – அவள் பார்த்துக் கொண்டே இருக்க விரும்பிய முகம் தான். ஆனால் இப்போது …. அன்வரை மீண்டும் சந்திக்காமலே இருக்கவிரும்பிய ஒரு கால கட்டத்தில் இங்கே அவளுக்கு முன்னால் நிர்த்தாட்சண்யமாக அவன் அமர்ந்திருக்கிறான்.

“மிஸ்! கொலீஜ் இலை, வழமையாக டைம்ரேபிள் வேலைகள் செய்வதில் நீங்கதான் பழக்கப்பட்ட திறமைசாலின்னு வைஸ்பிரின் சிப்பல் சொல்றார். எனக்குங் கூட உங்கடை உதவி தேவையாயிருக்கு. கான் யூ பிளீஸ் ஹெல்ப் மீ?”

என்று அவன் கேட்கும் போது, அதில் ஒரு அதிபருக்கு இருக்க வேண்டிய கம்பீரம் எல்லாம் ஒடுங்கி அவளிடம் கையேந்திப் பிச்சை கேட்பது போலத் தொனிக்கிறது, அவன் குரல். அவள் நிமிர்ந்து அவனை இப்போது தான் முதல் முறையாகப் பார்க்கிறாள். இரண்டு நிமிடங்கள் அங்கே மௌனம் நிலவுகிறது.

அந்த மௌன விநாடிகளில்……

பதினைந்து வருடங்களுக்கு முன் அன்வரை எண்ணி அவள் உள்ளம் எப்படித் தவித்ததோ, அதே தவிப்பு இதய அடி அரங்கில் தோன்றி விடுமோ என்ற பதைப்பில்.. அவளது சிவந்த கண்களில் நீர் கரைகட்டி நிற்கிறது! மேலே, தான் ஏதாவது பேசினால், எங்கே அவள் குமுறி அழுது விடுவாளோ என்ற ஒரு அச்சத்தில்.. மேலே எதுவும் பேசாமல் அவளை அனுப்பி விடுகிறான் அவன்.

“கான் யூ பிளீஸ் ஹெல்ப் மீ?”

அந்தக் கேள்வி திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப…. அவள் இதயத்தில் கேட்கிறது. அது டைம் டேபிளுக்கு மட்டுந்தானா? அல்லது பணக்கார மனைவியை நோயாளியாகப் படுக்கையில் விட்டுவிட்டுப் பத்து வயது நிரம்பிய பெண் குழந்தையுடன் அன்வர் படுகின்ற பிரச்சினைகள்.. இன்னொரு துணை அவனுக்கு அவசியம் தேவை என்பதை உணர்த் தியிருக்கும் காலகட்டம்! முன்பு அவனால் நேசிக்கப்பட்டவள் இன்னும் தனி மரமாய்த் தன்னைத்தானே பெரிய தண்டனைக்கு ஆளாக்கிக் கொண்டு வாழும் சூழ்நிலை! அதிலும் நாள்தோறும் இருவரும் முகம் பார்த்துப் பேச வேண்டிய சந்தர்ப்பங்கள். எல்லாம் சேர்ந்து.. அவன் எதைத் தன்னிடம் கேட்கக்கூடாது என்று அவள் தினமும் நினைத்துப் பிரார்த்தித்தாளோ அதையே ஒரு நாள் அவன் கேட்டு விடுகிறான்.

“நயீமா! உனக்காக இல்லாவிட்டாலும்… எனக்காக… ஒரு தாயின் உதவியையும், ஒத்தாசையையும் எதிர்பார்க்கும் என் குழந்தைக்காக…கான் யூ…பிளீஸ்…”

அவன் வார்த்தைகளை முடிக்கவில்லை. அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்கிறாள். அந்தப் பார்வையின் தீட்சண்யத்தில் அவன் கண்கள் கூசுகின்றன. முகத்தில் தெளிவும், குரலில் தயக்கமற்ற கம்பீரமும், வார்த்தைகளில் அமைதியான ஆழமும் கொண்டு அவள் சொல்கிறாள்.

“ஒரு காலத்திலே விருப்பமாயிருக்கிறது எப்பவுமே விருப்பமாயிருக்கும்னு நீங்க நம்பியிருந்தா…. உங்களுக்கு என்னோட அநுதாபங்கள். ஒரு பெண்ணின்ரை வாழ்வு உயிரோடை இருக்கிற இரண்டு ஆண் களிட்டை பங்கு போடப்படுறதை எந்த இக்கட்டான நிலையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. அந்த நீதி ஆணுக்கும் உண்டு என்று நினைக்கிறவ நான். ஒரு காலத்திலை, உங்களைப் பாக்கிறது, பேசுகிறது, பழகிறது எல்லாமே, எனக்குப் பிடிச்சதாய் இருந்தது எங்கிறதுக்காக, நீங்க இன்னொரு பொண்ணுக்குச் சொந்தமாயிட்ட பிறகும், அது எனக்குப் பிடிக்கு மெண்டா, நான் நயீமாவா இருக்க முடியாது. எனக்குன்னு ஒரு சுய கௌரவம், ஒரு சுய கட்டுப்பாடு இருக்கிறதே அதை விட்டுட்டுக் கீழே இறங்கிடவும் என்னாலே முடியாது. வாழ்க்கையிலை ஒரு அர்த்தமும் இல்லாமல்… ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்றன் எங்கிறது உண் மையா இருக்கலாம். ஆனா…. வாழ்வு முழுவதும் ஒரு நெறியோடை வாழ்ந்திருக்கிறன் என்பதிலை ஒரு அர்த்தம் இருப்பது புரியேல்லையா…. அந்த நிறைவிலை ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது தெரியேல்லையா?…..”

எங்கோ, எதையோ… அர்த்தமுடன் எதிர் பார்த்துச் செல்வது போல், கம்பீரமாய் எழுந்து தன் வகுப்பை நோக்கிச் செல்லும் நயீமா வைப் புரியாத புதிராய்.. புதிதான புதிராய், விழித்துப் பார்த்து அதிசயித்து நிற்கிறான் அன்வர்.

– 1981 இல் பலாலி ஆசிரிய கலாசாலை வெளியிட்ட யாழ் பிறை சஞ்சிகையில் பிரசுரமானது.

– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *