பொன்னியின் செல்வன்

0
கதையாசிரியர்: ,
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 14, 2023
பார்வையிட்டோர்: 2,339 
 
 

(2012ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

21 – 30 | 31 – 40 | 41 – 50

31. அநிருத்தப் பிரமராயர்

வந்தியத்தேவன் பூங்குழலியின் படகில் சென்று இலங்கைத் தீவில் இறங்கிய அதே நாள் மாலையில் ஆழ்வார்க்கடியான் நம்பி இராமேசுவரம் வந்து சேர்ந்துவிட்டான்.

இராமேசுவரக் கோயில் மதிலின் ஓரமான ஒரு முடுக்குத் திரும்பியதும் எதிரே விரிந்து பரந்தகடல். அக்கடலின் காட்சியோ கண்கொள்ளாத அற்புதக் காட்சியாயிருந்தது. பெரிய பெரிய மரக்கலங்கள், நாவாய்கள், சிறிய கப்பல்கள், படகுகள், கட்டுமரங்கள் ஆகியவை நெடுகிலும் வரிசை வரிசையாகக் கண்ணுக்கெட்டிய தூரம் காணப்பட்டன.

காவல் வீரர்கள் முன்னும் பின்னும் தொடர, சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற முதன் மந்திரி அன்பில் அநிருத்தப் பிரமராயர் ராஜ கம்பீரத்துடன் ஒரு படகில் வந்து கொண்டிருந்தார். பிரமராயர் கரையில் கோயில் மதில் ஓரமாக கூட்டத்தின் நடுவில் கக்கத்தில் தடியுடன் பரம சாதுவைப்போல் நின்ற ஆழ்வார்க்கடியானைக் கையினால் சமிக்ஞை செய்து அருகில் அழைத்தார். ஆழ்வார்க்கடியான் பயபக்தியுடன் கையைக் கட்டிக்கொண்டு கடற்கரையோரம் சென்று நின்றான்.

“நான் தங்கும் இடத்துக்கு வந்து சேர்! அதோ! கடலில் ஒரு சிறிய தீவு தெரிகிறது பார்த்தாயா? அங்கேயுள்ள மண்டபத்துக்கு வா.”

இராமேசுவரப் பெருந் தீவையடுத்த சிறிய தீவுகளில் ஒன்றில், ஒரு பழமையான மண்டபத்தில், அநிருத்தப் பிரம்மாதிராயர் கொலுவீற்றிருந்தார். அவருடைய அமைச்சர் வேலையை நடத்துவதற்குரிய சாதனங்கள் அவரைச் சூழ்ந்திருந்தன. கணக்கர்கள், ஓலை எழுதும் திருமந்திர நாயகர்கள், அகப்பரிவாரக் காவலர்கள் முதலியோர் அவரவர்களுடைய இடத்தில் ஆயத்தமாக இருந்தார்கள். அநிருத்தர் வந்து அம்மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் ஆனதும், தம்மைப் பார்க்க வந்திருந்தவர்களை அழைக்குமாறு கட்டளையிட்டார்.

பிறகு, உரத்த குரலில், “எங்கே? அந்த முரட்டு வைஷ்ணவனை இங்கே வரச் சொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டார்.

முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் வீற்றிருந்த மண்டபத்துக்குள் ஆழ்வார்க்கடியான் பிரவேசித்தான். அவரை மூன்று தடவை சுற்றி வந்தான்! சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து எழுந்தான்!

“குருதேவராகிய தாங்களே சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருந்தால், சீடனாகிய நான் என்ன செய்யக் கிடக்கின்றது?”

“நீயும் நானும் இராஜ்ய சேவையை நமது ஸ்வதர்மமாகக் கொண்டவர்கள். சோழ சக்கரவர்த்தியின் சேவையில் உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்வதாக நாம் சபதம் செய்திருப்பதை மறந்தனையோ?..”

“மறக்கவில்லை, குருவே! ஆனால் அது உசிதமா என்ற சந்தேகம் தோன்றி என் உள்ளத்தை அரித்து வருகிறது. முக்கியமாக, தங்களைப் பற்றிச் சில இடங்களில் பேசிக் கொள்வதைக் கேட்டால்…”

“என்ன பேசிக் கொள்கிறார்கள்?”

“தங்களுக்குச் சக்கரவர்த்தி பத்து வேலி நிலம் மானியம் விட்டு அதைச் செப்பேட்டிலும் எழுதிக் கொடுத்திருப்பதால் தாங்கள் வைஷ்ணவ சம்பிரதாயத்தை விட்டுவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். ஜாதி தர்மத்தைப் புறக்கணித்துக் கப்பல் பிரயாணம் செய்ததாகவும் கூறுகிறார்கள்…”

“அந்தப் பொறாமைக்காரர்கள் சொல்வதை நீ பொருட்படுத்த வேண்டாம்.  சக்கரவர்த்தி எனக்குப் பத்து வேலி நிலம் மானியம் கொடுத்திருப்பது உண்மைதான். அதைச் செப்பேட்டிலும் எழுதிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அதற்கு நாலு வருஷங்களுக்கு முன்பே சக்கரவர்த்திக்கு நான் மந்திரியானேன் என்பது உனக்குத் தெரியும் அல்லவா?”

ஆழ்வார்க்கடியான் மௌனமாயிருந்தான்.

“சக்கரவர்த்திக்கும் எனக்கும் எப்போது நட்பு ஏற்பட்டது என்றாவது உனக்குத் தெரியுமா? நாங்கள் இருவரும் இளம்பிராயத்தில் ஒரே ஆசிரியரிடம் பாடங்கற்றோம். அப்போதெல்லாம் சுந்தர சோழர் சிம்மாசனம் ஏறப் போகிறார் என்று யாரும் கனவிலும் எண்ணியதில்லை. அவராவது, நானாவது அதைப் பற்றிச் சிந்தித்ததே கிடையாது. இராஜாதித்தரும் கண்டராதித்தரும் காலமாகி அரிஞ்சய சோழர் பட்டத்துக்கு வருவார் என்று யார் நினைத்தது? அரிஞ்சயருக்கும் அவ்வளவு விரைவில் துர்மரணம் சம்பவித்துச் சுந்தர சோழர் பட்டத்துக்கு வரும்படியிருக்கும் என்று தான் யார் நினைத்தார்கள்? சுந்தர சோழர் சிம்மாசனம் ஏறியபோது அதனால் பல சிக்கல்கள் விளையும் என்று எதிர்பார்த்தார். இராஜ்ய நிர்வாகத்தில் அவருக்கு உதவுவதாக அப்போது வாக்களித்தேன். அந்த வாக்குறுதியை இன்றளவும் நிறைவேற்றி வருகிறேன். இதெல்லாம் உனக்குத் தெரியாதா, திருமலை?”

“எனக்குத் தெரியும், குருதேவா! என் ஒருவனுக்கு மட்டும் தெரிந்து என்ன பயன்? ஜனங்களுக்குத் தெரியாது தானே? நாட்டிலும் நகரத்திலும் வம்பு பேசுகிறவர்களுக்குத் தெரியாதுதானே”

“வம்பு பேசுகிறவர்களைப் பற்றி நீ சிறிதும் கவலைப்படவேண்டாம். பரம்பரையான ஆச்சாரியத் தொழிலை விட்டுவிட்டு நான் இராஜ சேவையில் இறங்கியது பற்றி இதற்கு முன்னால் நானே சில சமயம் குழப்பமடைந்ததுண்டு. ஆனால் சென்ற இரண்டு நாட்களாக அத்தகைய குழப்பம் எனக்குச் சிறிதும் இல்லை. திருமலை! நான் இராமேசுவர ஆலயத்தில் சுவாமி தரிசனத்துக்காக இங்கு வரவில்லை என்பதும் மாதோட்டம் போவதற்காகவே இங்கு வந்தேன் என்பதும் உனக்குத் தெரியும் அல்லவா?”

“அப்படித்தான் ஊகித்தேன், குருதேவரே!”

“நீ ஊகித்தது சரியே, நான் சென்றது இளவரசர் அருள்மொழிவர்மரைப் பார்ப்பதற்காக…”

“இளவரசரைப் பார்த்தீர்களா, குருதேவரே?” என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான். அவனுடைய பேச்சில் இப்போதுதான் சிறிது ஆர்வமும் பரபரப்பும் தொனித்தன.

“ஆகா! உனக்குக்கூட ஆவல் உண்டாகிவிட்டதல்லவா, இளவரசரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு? ஆம், திருமலை! இளவரசரைப் பார்த்தேன்; பேசினேன். இலங்கையிலிருந்து வந்து கொண்டிருந்த அதிசயமான செய்திகள் எவ்வளவு தூரம் உண்மை என்பதை நேரில் தெரிந்து கொண்டேன். கேள், அப்பனே! இலங்கை அரசன் மகிந்தனிடம் ஒரு மாபெரும் சைன்யம் இருந்தது. அது என்ன ஆயிற்று தெரியுமா? சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்து போய்விட்டது! மகிந்தனுடைய சைன்யத்திலே பாண்டிய நாட்டிலிருந்தும், சேர நாட்டிலிருந்தும் சென்ற வீரர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நம் இளவரசர் படைத்தலைமை வகித்து வருகிறார் என்று அறிந்ததும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள். ஒருவரைப் போல் அனைவரும் நம்முடைய கட்சிக்கே வந்து சேர்ந்து விட்டார்கள்! மகிந்தன் எப்படிப் போர் புரிவான்? போயே போய் விட்டான். மலைகள் சூழ்ந்த ரோஹண நாட்டிற்குச் சென்று ஒளிந்து கொண்டிருக்கிறான். ஆக, நமது சைன்யம் போர் செய்வதற்கு அங்கு இப்போது எதிரிகளே இல்லை!”

“அப்படியானால், குருதேவரே! இளவரசர் நம் சைனியத்துடன் திரும்பிவிட வேண்டியதுதானே? மேலும் அங்கே இருப்பானேன்?”

“எதிரிகள் இல்லையென்று சொல்லி திரும்பிவந்து விடலாம். ஆனால் இளவரசருக்கு அதில் இஷ்டமில்லை. எனக்கும் அதில் சம்மதமில்லை. இளவரசரும், சைனியமும் இப்பால் வந்ததும், மகிந்தன் மலை நாட்டிலிருந்து வெளி வருவான். மறுபடியும் பழையபடி போர் தொடங்கும் அதில் என்ன பயன்? இலங்கை மன்னரும், மக்களும் ஒன்று நமக்குச் சிநேகிதர்களாக வேண்டும். அல்லது புலிக்கொடியின் ஆட்சியை அங்கே நிரந்தரமாக நிறுவுதல் வேண்டும். இந்த இரண்டு வகை முயற்சியிலும் இளவரசர் ஈடுபட்டிருக்கிறார். நமது போர் வீரர்கள் இப்போது இலங்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? பழைய போர்களில் அநுராதபுர நகரமே நாசமாகிவிட்டது. அங்கிருந்த பழமையான புத்த விஹாரங்கள், கோயில்கள், தாது கர்ப்ப கோபுரங்கள் எல்லாம் இடிந்து பாழாய்க் கிடக்கின்றன. இளவரசரின் கட்டளையின் பேரில் இப்போது நம்வீரர்கள் இடிந்த அக்கட்டிடங்களை யெல்லாம் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.!”

“அழகாய்த்தானிருக்கிறது சைவம், வைஷ்ணவம் இரண்டையும் கைவிட்டு இளவரசர் சாக்கிய மதத்திலேயே ஒருவேளை சேர்ந்து விடுவாரோ, என்னமோ? அதையும் தாங்கள் ஆமோதிப்பீர்களோ?”

“நானும் நீயும் ஆமோதித்தாலும் ஒன்றுதான்! ஆமோதிக்காவிட்டாலும் ஒன்றுதான். நம்மைப் போன்றவர்கள் நம்முடைய மதமே பெரிது என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு நாட்டை ஆளும் அரசர் தம்முடைய பிரஜைகள் அனுசரிக்கும் சமயங்கள் எல்லாவற்றையும் ஆதரித்துப் பராமரிக்கவேண்டும். இந்த உண்மையை யாருடைய தூண்டுதலுமில்லாமல் இளவரசர் தாமே உணர்ந்திருக்கிறார். சந்தர்ப்பம் கிடைத்ததும் காரியத்திலும் செய்து காட்டுகிறார்.”

“திருமலை, இதைக் கேள்! நம் இளவரசர் அருள்மொழிவர்மருடைய கரங்களில் சங்கு சக்கர ரேகை இருப்பதாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன், அவர் கையில் சங்கு சக்கர ரேகை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஒன்று நிச்சயமாக சொல்கிறேன். இந்தப் பூமண்டலத்தை ஏக சக்ராதிபதியாக ஆளத்தகுந்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர் இளவரசர் அருள்மொழிவர்மர் தாம்.”

“சுவாமி! தாங்கள் ஏதேதோ ஆகாசக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அங்கே இராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்தெறியப் பார்க்கிறார்கள் குருதேவரே! நான் பார்த்ததையெல்லாம் தாங்கள் பார்த்து, நான் கேட்டதையெல்லாம் தாங்களும் கேட்டிருந்தால் இவ்வளவு குதூகலமாயிருக்க மாட்டீர்கள். இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏற்படப்போகும் அபாயத்தை நினைத்துக் கதிகலங்குவீர்கள்…”

“திருமலை, ஆம், நான் மறந்துவிட்டேன். அதிக உற்சாகம் என் அறிவை மூடிவிட்டது. நீ உன் பிரயாணத்தில் தெரிந்து வந்த செய்திகளை இன்னும் நான் கேட்கவே இல்லை. சொல், கேட்கிறேன். எவ்வளவு பயங்கரமான செய்திகளாயிருந்தாலும் தயங்காமல் சொல்!”


32. “பொன்னியின் செல்வன்”

வந்தியத்தேவன் மாதோட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த அதே சமயத்தில் – அநிருத்தப் பிரமராயரும் ஆழ்வார்க்கடியானும் சாம்ராஜ்ய நிலைமையைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் – குந்தவை தேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும், அம்பாரி வைத்த ஆனைமீது ஏறித் தஞ்சை நகரை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

இளைய பிராட்டி சில காலமாகத் தஞ்சைக்குப் போவதில்லை என்று வைத்துக் கொண்டிருந்தாள். இதற்குப் பல காரணங்கள் இருந்தன. தஞ்சையில் அரண்மனைப் பெண்டிர் தனித்தனியாக வசிக்கும்படியாகப் போதிய அரண்மனைகள் இன்னும் உண்டாகவில்லை. சக்கரவர்த்தியின் பிரதான அரண்மனையிலேயே எல்லாப் பெண்டிரும் இருந்தாக வேண்டும். மற்ற அரண்மனைகளையெல்லாம் பழுவேட்டரையர்களும் மற்றும் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளும் ஆக்ரமித்துக் கொண்டிருந்தார்கள். பழையாறையில் அரண்மனைப் பெண்டிர் சுயேச்சையாக இருக்க முடிந்தது. விருப்பம் போல் வெளியில் போகலாம்; வரலாம். ஆனால் தஞ்சையில் வசித்தால் பழுவேட்டரையர்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தீரவேண்டும். கோட்டைக்குள்ளும், அரண்மனைக்குள்ளும் இஷ்டம்போல் வருவதும் போவதும் இயலாத காரியம். அம்மாதிரி கட்டுப்பாடுகளும், நிர்ப்பந்தங்களும் இளைய பிராட்டிக்குப் பிடிப்பதில்லை. இந்தக் காரணங்களினால் குந்தவைப் பிராட்டி பழையாறையிலேயே வசித்து வந்தாள். உடம்பு குணமில்லாத தன் அருமைத் தந்தையைப் பார்க்கவேண்டும், அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

ஆனால் வந்தியத்தேவன் வந்துவிட்டுப் போனதிலிருந்து இளைய பிராட்டியின் மனத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது. இராஜரீகத்தில் பயங்கரமான சூழ்ச்சிகளும், சதிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நாம் பழையாறையில் உல்லாசமாக நதிகளில் ஓடம் விட்டுக்கொண்டும், பூங்காவனங்களில் ஆடிப்பாடிக் கொண்டும் காலங் கழிப்பது சரியா? தமையன் தொண்டை நாட்டில் இருக்கிறான்; தம்பியோ ஈழநாட்டில் இருக்கிறான்; அவர்கள் இருவரும் இல்லாத சமயத்தில் இராஜ்யத்தில் நடக்கும் விவகாரங்களை நாம் கவனித்தாக வேண்டும் அல்லவா? தலைநகரில் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளை அந்தரங்கத் தூதர்கள் மூலம் அறிவிக்க வேண்டும் என்று தமையன் ஆதித்த கரிகாலன் கேட்டுக் கொண்டிருக்கிறானே? பழையாறையில் வசித்தால் தஞ்சையில் நடக்கும் காரியங்கள் எப்படித் தெரியவரும்?

வந்தியத்தேவன் அறிவித்த செய்திகளோ மிகப் பயங்கரமாயிருந்தன. பழுவேட்டரையர்கள் தங்கள் அந்தஸ்துக்கு மீறி அதிகாரம் செலுத்தி வந்தது மட்டுமே இதுவரையில் இளைய பிராட்டிக்குப் பிடிக்காமலிருந்தது. இப்போதோ சிம்மாசனத்தைப் பற்றியே சூழ்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பாவம்! அந்தப் பரமசாது மதுராந்தகனையும் தங்கள் வலையில் போட்டுக் கொண்டார்கள். சோழ நாட்டுச் சிற்றரசர்களையும், பெருந்தரத்து அதிகாரிகள் பலரையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டார்கள். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ, தெரியாது. இவர்களுடைய சூழ்ச்சியும், வஞ்சனையும், துராசையும் எந்த வரையில் போகும் என்று யார் கண்டது? சுந்தர சோழரின் உயிருக்கு உலை வைத்தாலும் வைத்துவிடுவார்கள்! சக்கரவர்த்தியின் புதல்வர்கள் இருவரும் இல்லாத சமயத்தில் அவருக்கு எதாவது நேர்ந்துவிட்டால், மதுராந்தகனைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்துவிடுவது எளிதாயிருக்கும் அல்லவா? இதற்காக என்ன செய்தாலும் செய்வார்கள்! ஆகையால் தஞ்சாவூரில் நம் தந்தையின் அருகில் நாம் இனி இருப்பதே நல்லது. சாதுவாகிய மதுராந்தகனை ஏன் இவர்கள் சிம்மாசனத்தில் ஏற்றப் பார்க்கிறார்கள்? தர்ம நியாய முறைக்காகவா? இல்லவே இல்லை. மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டினால் அவனைப் பொம்மையாக வைத்துக்கொண்டு தங்கள் இஷ்டம் போல் எல்லாக் காரியங்களையும் நடத்திக் கொள்ளலாம் என்பதற்காகத்தான்.

இவ்வளவையும் தவிர, வேறொரு, முக்கிய காரணமும் இருந்தது. அது வந்தியத்தேவனைப் பற்றி ஏதேனும் செய்தி உண்டா என்று தெரிந்துகொள்ளும் ஆசைதான். வந்தியத்தேவன் கோடிக்கரைப் பக்கம் போயிருக்கிறான் என்று தெரிந்து அவனைப் பிடித்து வரப் பழுவேட்டரையர்கள் ஆட்கள் அனுப்பியிருப்பதைப்பற்றி இளைய பிராட்டி கேள்விப்பட்டாள். புத்தி யுத்திகளில் தேர்ந்த அந்த இளைஞன் இவர்களிடம் அகப்பட்டுக் கொள்வானா? ஒருவேளை அகப்பட்டால் தஞ்சாவூருக்குத்தான் கொண்டு வருவார்கள். அச்சமயம் நாம் அங்கே இருப்பது மிகவும் அவசியமல்லவா? ஆதித்த கரிகாலன் அனுப்பிய தூதனை அவர்கள் அவ்வளவு எளிதில் ஒன்றும் செய்து விடமுடியாது. ஏதாவது குற்றம் சாட்டித்தான் தண்டிக்க வேண்டும்.

இவ்விதமெல்லாம் குந்தவையின் உள்ளம் பெரிய பெரிய சூழ்ச்சிகளிலும் சிக்கலான விவகாரங்களிலும் சஞ்சரித்துக் குழம்பிக் கொண்டிருக்கையில், அவளுடன் யானைமீது வந்த அவள் தோழி வானதியின் உள்ளம், பால் போன்ற தூய்மையுடனும், பளிங்கு போன்ற தெளிவுடனும் ஒரே விஷயத்தைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது. அந்த ஒரு விஷயம் இளவரசர் அருள்மொழிவர்மர் எப்போது இலங்கையிலிருந்து திரும்பி வருவார் என்பது பற்றித்தான்.

“அக்கா! அவரை உடனே புறப்பட்டு வரும்படி ஓலை அனுப்பியிருப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா? வந்தால், எவ்விடம் வருவார்? பழையாறைக்கா? தஞ்சாவூருக்கா?” என்று வானதி கேட்டாள்.

தஞ்சாவூருக்கு இவர்கள் போயிருக்கும்போது இளவரசர் பழையாறைக்கு வந்து விட்டால் என்ன செய்கிறது என்பது வானதியின் கவலை.

வேறு யோசனைகளில் ஆழ்ந்திருந்த குந்தவைப் பிராட்டி வானதியைத் திரும்பிப் பார்த்து, “யாரைப்பற்றியடி கேட்கிறாய்? பொன்னியின் செல்வனைப் பற்றியோ?” என்றாள்.

“ஆமாம், அக்கா! ‘பொன்னியின் செல்வன்’ என்னும் பெயர் எப்படி வந்தது என்று சொல்லுங்கள்!”

“சொல்கிறேன், கேள்!” என்று குந்தவைப் பிராட்டி சொல்லத் தொடங்கினாள்.

சுந்தர சோழ சக்கரவர்த்தி பட்டதுக்கு வந்த புதிதில் அவருடைய குடும்ப வாழ்க்கை ஆனந்த மயமாக இருந்தது. அரண்மனைப் படகில் குடும்பத்துடன் அமர்ந்து சக்கரவர்த்தி பொன்னி நதியில் உல்லாசமாக உலாவி வருவார். அத்தகைய சமயங்களில் படகில் ஒரே குதூகலமாயிருக்கும். வீணா கானமும் பாணர்களில் கீதமும் கலந்து காவேரி வெள்ளத்தோடு போட்டியிட்டுக் கொண்டு பெருகும். படகில் ஒரு பக்கத்தில் குழந்தைகள் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பார்கள். சில சமயம் எல்லோருமாகச் சேர்ந்து வேடிக்கை விநோதங்களில் ஈடுபட்டுத் தங்களை மறந்து களிப்பார்கள்.

ஒருநாள் அரண்மனைப் படகில் சக்கரவர்த்தியும் ராணிகளும் குழந்தைகளும் உட்கார்ந்து காவேரியில் உல்லாசப் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது, திடீரென்று, “குழந்தை எங்கே? குழந்தை அருள்மொழி எங்கே?” என்று ஒரு குரல் எழுந்தது. இந்தக் குரல் குந்தவையின் குரல் தான். அருள்மொழிக்கு அப்போது வயது ஐந்து. குந்தவைக்கு வயது ஏழு. அரண்மனையில் அனைவருக்கும் கண்ணினும் இனிய செல்லக் குழந்தை அருள்மொழி. ஆனால் எல்லாரிலும் மேலாக அவனிடம் வாஞ்சை உடையவள் அவன் தமக்கை குந்தவை. படகில் குழந்தையைக் காணோம் என்பதைக் குந்தவைதான் முதலில் கவனித்தாள். உடனே மேற்கண்டவாறு கூச்சலிட்டாள். எல்லாரும் கதிகலங்கிப் போனார்கள். படகில் அங்குமிங்கும் தேடினார்கள். சுற்றிச் சுற்றித் தேடியும் குழந்தையைக் காணவில்லை.

படகோட்டிகளில் சிலர் காவேரி வெள்ளத்தில் குதித்துத் தேடினார்கள். சுந்தர சோழரும் அவ்வாறே குதித்துத் தேடலுற்றார். ஆனால் எங்கே என்று தேடுவது? ஆற்று வெள்ளம் குழந்தையை எவ்வளவு தூரம் அடித்துக்கொண்டு போயிருக்கும் என்று யார் கண்டது? குழந்தை எப்போது வெள்ளத்தில் விழுந்தது என்பதுதான் யாருக்குத் தெரியும்? நோக்கம், குறி என்பது ஒன்றுமில்லாமல் காவேரியில் குதித்தவர்கள் நாலாபுறமும் பாய்ந்து துழாவினார்கள். குழந்தை அகப்படவில்லை.

சட்டென்று ஓர் அற்புதக் காட்சி தென்பட்டது. படகுக்குச் சற்றுத் தூரத்தில் ஆற்று வெள்ளத்தின் மத்தியில் அது தெரிந்தது. பெண் உருவம் ஒன்று இரண்டு கைகளிலும் குழந்தையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நின்றது. அந்த மங்கையின் வடிவம் இடுப்புவரையில் தண்ணீரில் மறைந்திருந்தது. அப்பெண்ணின் பொன் முகமும், மார்பகமும், தூக்கிய கரங்களும் மட்டுமே மேலே தெரிந்தன. அவற்றிலும் பெரும் பகுதியைக் குழந்தை மறைத்துக் கொண்டிருந்தது. எல்லாரையும் போல் சுந்தர சோழரும் அந்தக் காட்சியைப் பார்த்தார். உடனே பாய்ந்து நீந்தி அந்தத் திசையை நோக்கிச் சென்றார். கைகளை நீட்டிக் குழந்தையை வாங்கிக் கொண்டார். இதற்குள் படகும் அவர் அருகில் சென்றுவிட்டது. படகிலிருந்தவர்கள் குழந்தையைச் சுந்தர சோழரிடமிருந்து வாங்கிக் கொண்டார்கள். சக்கரவர்த்தியையும் கையைப் பிடித்து ஏற்றி விட்டார்கள். சக்கரவர்த்தி படகில் ஏறியதும் நினைவற்று விழுந்துவிட்டார். அவரையும், குழந்தையையும் கவனிப்பதில் அனைவரும் ஈடுபட்டார்கள். குழந்தையைக் காப்பாற்றிக் கொடுத்த மாதரசி என்னவானாள்? என்று யாரும் கவனிக்கவில்லை. அவளுடைய உருவம் எப்படியிருந்தது? என்று அடையாளம் சொல்லும்படி யாரும் கவனித்துப் பார்க்கவும் இல்லை. “குழந்தையைக் காப்பாற்றியவள் நான்!” என்று பரிசு கேட்பதற்கு அவள் வரவும் இல்லை. ஆகவே காவேரி நதியாகிய தெய்வந்தான் இளவரசர் அருள்மொழிவர்மரைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கவேண்டும் என்று அனைவரும் ஒரு முகமாக முடிவு கட்டினார்கள். அதுவரை அரண்மனைச் செல்வனாயிருந்த அருள்மொழிவர்மன் அன்று முதல் ‘பொன்னியின் செல்வன்’ ஆனான்.


33. கரையர் குலப் பெண்

மறுநாள் காலையில் சுந்தர சோழ சக்கரவர்த்தி தம் அருமைக் குமாரியை அழைத்துவரச் செய்தார். குந்தவையைத் தம் அருகில் உட்கார வைத்துக்கொண்டு அன்புடன் முதுகைத் தடவிக் கொடுத்தார். அவர் சொல்ல விரும்பியதைச் சொல்ல முடியாமல் தத்தளிக்கிறார் என்பதைக் குந்தவை தெரிந்து கொண்டாள்.

“அப்பா! என்பேரில் கோபமா?” என்று கேட்டாள்.

சுந்தர சோழரின் கண்களில் கண்ணீர் துளித்தது.

“உன் பேரில் எதற்கு அம்மா, கோபம்?” என்றார்.

“தங்கள் கட்டளையை மீறித் தஞ்சாவூருக்கு வந்ததற்காகத் தான்!”

“ஆமாம்; என் கட்டளையை மீறி நீ வந்திருக்கக்கூடாது; என் கட்டளையையும் மீறி நீ இங்கு வந்தாயே, அம்மா! அதற்காக உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நாள் என் மனத்தைத் திறந்து உன்னிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்தது. சொல்கிறேன், கேள்! உடம்பைப் பற்றிய வியாதியிருந்தால் மூலிகை மருந்துகளினால் தீரும். என்னுடைய நோய் உடம்பைப் பற்றியதல்ல; மனக் கவலைக்கு மருந்து ஏது?”

“தந்தையே, சக்கரவர்த்தியாகிய தங்களுக்கு அப்படி என்ன தீராத மனக்கவலை இருக்க முடியும்?”

“சில சமயம் எனக்குப் பூர்வஜன்ம நினைவுகள் வருகின்றன மகளே! அவற்றைக் குறித்து இதுவரையில் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் யாரும் நம்பவும் மாட்டார்கள்; புரிந்து கொள்ளவும் மாட்டார்கள். எனக்கு உடல் நோயுடன் சித்தப் பிரமையும் பிடித்திருப்பதாகச் சொல்வார்கள். வைத்தியர்களை அழைத்து வந்து தொந்தரவு கொடுப்பது போதாது என்று மாந்திரீகர்களையும் அழைத்துவரத் தொடங்குவார்கள்…”

“ஆம்; தந்தையே! இப்போதே சிலர் அப்படிச் சொல்கிறார்கள். தங்கள் நோய், மருத்துவத்தினால் தீராது; மாந்திரீகர்களை அழைக்க வேண்டும் என்கிறார்கள்…”

“பார்த்தாயா? நீ அப்படியெல்லாம் நினைக்க மாட்டாயே? நான் சொல்வதைக் கேட்டுவிட்டுச் சிரிக்க மாட்டாயே?” என்றார் சக்கரவர்த்தி.

“கேட்கவேண்டுமா, அப்பா! உங்களுடைய மனம் எவ்வளவு நொந்திருக்கிறது என்று எனக்குத் தெரியாதா? தங்களைப் பார்த்து நான் சிரிப்பேனா?” என்று குந்தவை கூறினாள். அவளுடைய கண்ணில் நீர் மல்கிற்று.

“எனக்குத் தெரியும், மகளே! அதனாலேதான் மற்ற யாரிடமும் சொல்லாததை உன்னிடம் சொல்கிறேன். என்னுடைய பூர்வ ஜன்ம நினைவுகளில் சிலவற்றை சொல்லுகிறேன் கேள்!” என்றார் சுந்தர சோழர்.

நாலுபுறமும் கடல் சூழ்ந்த ஓர் அழகிய தீவு. அத்தீவில் எங்கெங்கும் பச்சை மரங்கள் மண்டி வளர்ந்திருந்தன. மரங்கள் இல்லாத இடங்களில் நெருங்கிய புதர்களாயிருந்தன. கடற்கரையோரத்தில் ஒரு புதரில் வாலிபன் ஒருவன் ஒளிந்து கொண்டிருந்தான். சற்றுத் தூரத்தில் கடலில் பாய்மரம் விரித்துச் சென்ற கப்பல் ஒன்றை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அது மறையும் வரையில் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு “அப்பா! பிழைத்தோம்!” என்று பெருமூச்சு விட்டான்.

அந்த வாலிபன் இராஜ குலத்தில் பிறந்தவன். ஆனால் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவன் அல்ல; இராஜ்யம் ஆளும் ஆசையும் அவனுக்குக் கிடையாது. அவனுடைய தகப்பனாருக்கு முன்னால் பிறந்த மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். ஆகையால் இராஜ்யம் ஆளுவதைப் பற்றி அவன் கனவிலும் நினைக்கவில்லை; ஆசை கொள்ளவும் இல்லை. கடல் கடந்த நாட்டுக்குப் போருக்குச் சென்ற சைன்யத்தோடு அவனும் போனான். ஒரு சிறிய படையின் தலைமை அவனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. போரில் அவனுடைய சைன்யம் தோல்வியுற்றது. கணக்கற்றவர்கள் மாண்டார்கள். வாலிபன் தலைமை வகித்த படையிலும் எல்லாரும் மாண்டார்கள். அந்த வாலிபனும் போரில் உயிரைவிடத் துணிந்து எவ்வளவோ சாஹஸச் செயல்கள் புரிந்தான். ஆனாலும் அவனுக்குச் சாவு நேரவில்லை. தோற்று ஓடிய சைன்யத்தில் உயிரோடு தப்பிப் பிழைத்தவர்கள் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். திரும்பித் தாய்நாடு செல்லுவதற்கு அவர்கள் ஆயத்தமானார்கள்.

திரும்பிப் போவதற்கு அந்த வாலிபன் மட்டும் விரும்பவில்லை. தன் கீழிருந்த படை வீரர்கள் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு அவன் தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. அவனுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் மகாவீரர்கள் எனப் புகழ் பெற்றவர்கள். அந்தப் புகழுக்குத் தன்னால் அபகீர்த்தி நேருவதை அவன் விரும்பவில்லை. ஆகையால், கப்பல் போய்க்கொண்டிருந்தபோது, சற்றுத் தூரத்தில் அழகிய தீவு ஒன்று தெரிந்தபோது, வாலிபன் மற்ற யாரும் அறியாமல் கடலில் மெள்ளக் குதித்தான். நீந்திக் கொண்டே போய்த் தீவில் கரை ஏறினான். கப்பல் கண்ணுக்கு மறையும் வரையில் காத்திருந்தான். பிறகு ஒரு மரத்தின்மேல் ஏறி அதன் அடிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். அந்தத் தீவின் அழகு அவன் மனத்தைக் கவர்ந்தது. ஆனால் அத்தீவில் மனித சஞ்சாரமே இல்லை என்று தோன்றியது. அச்சமயம் அது ஒரு குறையென்று அவனுக்குத் தோன்றவில்லை. மரக்கிளையில் சாய்ந்து உட்கார்ந்தபடி வருங்காலத்தைப் பற்றிப் பகற்கனவுகள் கண்டு கொண்டிருந்தான்.

திடீரென்று மனிதக் குரலில், அதுவும் பெண் குரலில், ஒரு கூச்சல் கேட்டது திரும்பிப் பார்த்தான். இளம் பெண் ஒருத்தி கூச்சலிட்ட வண்ணம் ஓடிக் கொண்டிருந்தாள். அவளைத் தொடர்ந்து பயங்கரமான கரடி ஒன்று ஓடியது. அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கரடி மேலும் மேலும் அந்தப் பெண்ணை நெருங்கிக் கொண்டிருந்தது. இருவருக்கும் இடையேயிருந்த தூரம் குறுகிக் கொண்டிருந்திருந்தன. வேறு யோசனை ஒன்றும் செய்வதற்கு அப்போது நேரம் இருக்கவில்லை. வாலிபன் மரக்கிளையிலிருந்து பொத்தென்று கீழே குதித்தான். மரத்தில்தான் சாத்தியிருந்த வேலை எடுத்துக் கொண்டு ஓடினான். கரடி அந்தப் பெண்ணை நெருங்கி அதன் பயங்கரமான கால் நகங்களை அவள் கழுத்தில் வைப்பதற்கு இருந்தது. அச்சமயத்தில் குறி பார்த்து வேலை எறிந்தான். வேல் கரடியைத் தாக்கியது. கரடி வீல் என்று ஒரு சத்தம் போட்டு விட்டுத் திரும்பியது. பெண் பிழைத்தாள், ஆனால் வாலிபன் அபாயத்துக்குள்ளானான். காயம்பட்ட கரடி அவனை நோக்கிப் பாய்ந்தது. வாலிபனுக்கும் கரடிக்கும் துவந்த யுத்தம் நடந்தது. கடைசியில் அந்த வாலிபனே வெற்றி பெற்றான்.

வெற்றியடைந்த வாலிபனுடைய கண்கள் உடனே நாலாபுறமும் தேடின. அவன் கண்கள் தேடிய பெண், சாய்ந்து வளைந்து குறுக்கே வளர்ந்திருந்த ஒரு தென்னை மரத்தின் பின்னால் அதன் பேரில் சாய்ந்து கொண்டு நின்றாள். அவள் கண்களில் வியப்பும், முகத்தில் மகிழ்ச்சியும் குடிகொண்டிருந்தன. அவள் காட்டில் வாழும் பெண். உலகத்து நாகரிக வாழ்க்கையை அறியாதவள் என்று அவளுடைய தோற்றமும் உடையும் தெரிவித்தன. ஆனால் அவளுடைய அழகுக்கு உவமை சொல்ல இந்த உலகத்தில் யாரும் இல்லையென்று சொல்லும்படியிருந்தாள். அருகில் நெருங்கினான். எதிர்பாராத விதமாக அவள் ஓட்டம் பிடித்து ஓடினாள். சற்று அவளைப் பின் தொடர்ந்து ஓடிப் பார்த்தான். பிறகு நின்று விட்டான். அவன் மிகக் களைப்புற்றிருந்த படியால் மானின் வேகத்துடன் ஓடிய அந்தப் பெண்ணைத் தொடர்ந்து அவனால் ஓடவும் முடியவில்லை. மேலும், ஒரு பெண்ணை தொடர்ந்து ஓடுவது அநாகரிகம் என்றும் அவன் எண்ணினான்.

“இந்தச் சிறிய தீவிலேதானே இவள் இருக்க வேண்டும்? மறுபடியும் பார்க்காமலா போகிறோம்!” என்று கருதி நின்றுவிட்டான். கடற்கரையோரமாகச் சென்று தெள்ளிய மணலில் படுத்துக் கொண்டு களைப்பாறினான். அவன் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் அந்தப் பெண் திரும்பி வந்தாள். தன்னுடன் ஒரு வயோதிகனான மனிதனையும் அழைத்து வந்தாள். வந்தவன் இலங்கைத் தீவில் கடற்கரையோரத்தில் வாழ்ந்து மீன் பிடித்துப் பிழைக்கும் ‘கரையர்’ என்னும் வகுப்பைச் சேர்ந்தவன் என்று தெரிந்தது. அவன் மூலமாக அவ்வாலிபன் ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொண்டான். அதாவது அந்தப் பெண் தக்க சமயத்தில் அவனுடைய உயிரைக் காப்பாற்றினாள் என்று அறிந்தான். அவன் மரக்கிளையின் மேல் உட்கார்ந்து கடலையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோது கரடி ஒன்று அவன் பின் பக்கமாக வந்து அவனை உற்றுப் பார்த்தது. பிறகு மரத்தின் மேல் ஏறத் தொடங்கியது. இதையெல்லாம் அந்தப் பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். கரடியை வேறு திசையில் இழுப்பதற்கும் அந்த வாலிபனை எச்சரிக்கை செய்வதற்கும் அவள் அவ்விதம் கூச்சலிட்டாள். கரடி மரத்தின் மேலே ஏறுவதை விட்டு அவளைத் தொடர்ந்து ஓடத் தொடங்கியது.

இதைக் கேட்டதும் தன்னைக் காப்பாற்றிய பெண்ணுக்கு அவன் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான். ஆனால் அவளோ ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லவில்லை. அவளிடம் வாலிபன் கூறியதற்கெல்லாம் அவளுடன் வந்த மனிதனே மறுமொழி கூறினான். இது வாலிபனுக்கு முதலில் வியப்பாயிருந்தது. உண்மை இன்னதென்று அறிந்ததும், வியப்பு மறைந்தது. அந்தப் பெண் பேசத் தெரியாத ஊமை. அவளுக்குக் காதும் கேளாது என்று அறிந்து கொண்டதும், அவ்வாலிபனுடைய பாசம் பன்மடங்காகியது. பாசம் வளர்ந்து தழைப்பதற்குச் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் துணை செய்தன. காது கேளாததும், பேசத் தெரியாததும் ஒரு குறையாகவே அவ்வாலிபனுக்குத் தோன்றவில்லை. வாயினால் சொல்ல முடியாத அற்புதமான உண்மைகளையும், அந்தரங்க இரகசியங்களையும் அவளுடைய கண்களே தெரியப்படுத்தின. இருதயங்கள் இரண்டு ஒன்று சேர்ந்து விட்டால், மற்றப் புலன்களைப் பற்றி என்ன கவலை? அந்த வாலிபனுக்கு அத்தீவு சொர்க்க பூமியாகவே தோன்றியது. நாட்கள், மாதங்கள், வருஷங்கள், இவ்விதம் சென்றன. எத்தனை நாள் அல்லது வருஷம் ஆயிற்று என்பதைக் கணக்குப் பார்க்கவே அவன் மறந்துவிட்டான்.

வாலிபனுடைய இந்த சொர்க்க வாழ்வுக்குத் திடீரென்று ஒருநாள் முடிவு நேர்ந்தது. கப்பல் ஒன்று அந்தத் தீவின் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து படகிலும் கட்டு மரங்களிலும் பலர் இறங்கி வந்தார்கள். அவர்கள் யார் என்று பார்க்க வாலிபன் அருகில் சென்றான். தன்னைத் தேடிக் கொண்டுதான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று அறிந்தான். அவனுடைய நாட்டில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நடந்து விட்டன. அவனுடைய தந்தைக்கு மூத்த சகோதரர்கள் இருவர் இறந்து போய்விட்டார்கள். இன்னொருவருக்குப் புத்திர சந்தானம் இல்லை. ஆகையால் ஒரு பெரிய சாம்ராஜ்யம் அவனுக்காகக் காத்திருக்கிறது என்று தெரிந்து கொண்டான். அவனுடைய உள்ளத்தில் ஒரு பெரிய பூசல் ஏற்பட்டது. அந்த அழகிய தீவையும் அதைச் சொர்க்க பூமியாக்கிய ஊமைப் பெண்ணையும் விட்டுப்போக அவனுக்கு மனமில்லை. அதே சமயத்தில் ஊரையும் உற்றார் உறவினரையும் பார்க்கும் ஆசை ஒரு பக்கத்தில் அவனைக் கவர்ந்து இழுத்தது. அவன் பிறந்த நாட்டை நாலாபுறமும் அபாயம் சூழ்ந்திருக்கிறதென்றும் அறிந்தான். இது அவன் முடிவு செய்வதற்குத் துணை செய்தது.

“திரும்பி வருகிறேன்; என் கடமையை நிறைவேற்றிவிட்டு வருகிறேன்” என்று அப்பெண்ணிடம் ஆயிரம் முறை உறுதி மொழி கூறிவிட்டுப் புறப்பட்டான். காட்டில் பிறந்து வளர்ந்த அந்த ஊமைப் பெண் நாட்டிலிருந்து வந்திருந்த மனிதர்களுக்கு மத்தியில் வருவதற்கே விரும்பவில்லை. வாலிபன் படகில் ஏறியபோது அவள் சற்றுத் தூரத்தில் அந்தப் பழைய வளைந்த தென்னை மரத்தின் மேல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இரு கண்களும் அப்போது இரண்டு கண்ணீர்க் கடல்களாக வாலிபனுக்குத் தோன்றின. ஆயினும் அவன் தன் மனத்தைக் கல்லாகச் செய்து கொண்டு படகில் ஏறிச் சென்று கப்பலை அடைந்தான்…

“குந்தவை! அந்த வலைஞர் குலப் பெண் அப்படி நின்று பார்த்துக் கொண்டிருந்தாளே, அந்தக் காட்சியின் நினைவு அடிக்கடி என் மனக் கண் முன் தோன்றிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு முயன்றாலும் மறக்கமுடியவில்லை. அதைக் காட்டிலும் சோகமான இன்னும் ஒரு காட்சி, நினைத்தாலும் குலை நடுங்கும் காட்சி அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கிறது. இரவிலும் பகலிலும் உறங்கும்போது விழித்திருக்கையிலும் என்னை வருத்தி வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதையும் சொல்லட்டுமா?” என்று சுந்தர சோழர் தம் அருமை மகளைப் பார்த்துக் கேட்டார்.

உருக்கத்தினால் தொண்டை அடைத்துக் தழதழத்தக் குரலில், சுந்தர சோழரின் அருமைக் குமாரி “சொல்லுங்கள், அப்பா” என்றாள்.


34. கரையர்மகள் மறைந்தாள்

இதுவரைக்கும் சுந்தர சோழர் வேறு யாரோ ஒரு மூன்றாம் மனிதனைப் பற்றிச் சொல்வது போலச் சொல்லிக் கொண்டுவந்தார். இப்போது தம்முடைய வாழ்க்கையில் நடந்த வரலாறாகவே சொல்லத் தொடங்கினார்:-

“என் அருமை மகளே! சாதாரணமாக ஒரு தகப்பன் தன் மகளிடம் சொல்லக் கூடாத விஷயத்தை இன்று நான் உனக்குச் சொல்கிறேன். இதுவரை யாரிடமும் மனதைத் திறந்து சொல்லாத செய்தியை உன்னிடம் சொல்கிறேன். இந்த உலகத்திலேயே என் நண்பன் அநிருத்தன் ஒருவனுக்குதான் இது தெரியும்; அவனுக்கும் முழுவதும் தெரியாது. இப்போது என் மனத்தில் நடக்கும் போராட்டம் அவனுக்குத் தெரியாது. ஆனால் உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன். நம்முடைய குடும்பத்தில் யாராவது ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். உன் தாயாரிடம் சொல்ல முடியாது. உன்னிடந்தான் சொல்ல வேண்டுமென்று சில காலமாகவே எண்ணியிருந்தேன். அதற்குச் சந்தர்ப்பம் இன்றைக்கு வந்தது. நீ என் நிலையைக் கண்டு சிரிக்கமாட்டாய்; என் மனத்திலுள்ள புண்ணை ஆற்றுவதற்கு முயல்வாய்; என்னுடைய விருப்பம் நிறைவேறவும் உதவி செய்வாய்! – இந்த நம்பிக்கையுடன் உன்னிடம் சொல்கிறேன்…

“அந்தத் தீவிலிருந்து மரக்கலத்தில் ஏறிப் புறப்பட்டேன் கோடிக்கரை சேர்ந்தேன். என் பாட்டனார் பராந்தக சக்கரவர்த்தி இந்தத் தஞ்சை அரண்மனையில் அப்போது தங்கியிருக்கிறார் என்று அறிந்து நேராக இங்கே வந்தேன்.”

“நான் தஞ்சை வந்து சேர்ந்தபோது பராந்தக சக்கரவர்த்தி மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார். அவர் உள்ளம் நொந்து போயிருந்தது. நாற்பது ஆண்டு காலத்தில் அவர் நிர்மாணித்த மகாராஜ்யம் சின்னா பின்னம் அடைந்து கொண்டிருந்தது. அவருக்குப் பிறகு பட்டத்தை அடைய வேண்டியவரான இராஜாதித்தர் தக்கோலப் போரில் மாண்டார். அதே போர்க்களத்தில் படுகாயம் அடைந்த என் தந்தை அரிஞ்சயர் பிழைப்பாரோ, மாட்டாரோ என்ற நிலையில் இருந்தார். கன்னர தேவனுடைய படைகள் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி முன்னேறிக் கொண்டு வந்தன. தெற்கே பாண்டியர்கள் தலையெடுத்து வந்தார்கள். இலங்கையில் சோழ சைன்யம் தோல்வியுற்றுத் திரும்பி விட்டது. பல போர்க்களங்களிலும் சோழ நாட்டு வீராதி வீரர் பலர் உயிர் துறந்து விட்டார்கள். இந்தச் செய்திகள் எல்லாம் ஒருமிக்க வந்து முதிய பிராயத்துப் பராந்தக சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் புண்படுத்தித் துயரக் கடலில் ஆழ்த்தியிருந்தன. இந்த நிலையில் என்னைக் கண்டதும் அவருடைய முகம் மலர்ச்சி அடைந்தது. என் பாட்டனாருக்கு நான் குழந்தையாயிருந்த நாளிலிருந்து என் பேரில் மிக்க பிரியம். என்னை எங்கேயும் அனுப்பாமல் அரண்மனையில் தம்முடனேயே வெகுகாலம் வைத்திருந்தார். பிடிவாதம் பிடித்து அவரிடம் விடை பெற்றுக் கொண்டு நான் ஈழ நாட்டுக்குப் போனேன். அங்கிருந்து திரும்பி வந்தவர்களிலே நான் இல்லை என்று அறிந்ததும் என் பாட்டனாரின் மனம் உடைந்து போயிருந்தது. நான் இறந்து விட்டதாகவும் தெரியவில்லையாதலால் என்னைத் தேடிவரக் கூட்டங் கூட்டமாக ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தார்.

“கடைசியில் ஒரு கூட்டம் என்னைக் கண்டுபிடித்தது. நான் தஞ்சை வந்து சேர்ந்ததும், புண்பட்ட அவர் மனத்துக்குச் சிறிது சாந்தி ஏற்பட்டது. அவருடைய அந்தியகாலத்தில் வீழ்ச்சியடைந்து வந்த சோழ சாம்ராஜ்யம் மறுபடியும் என்னால் மேன்மையடையும் என்பதாக எப்படியோ அவர் மனத்தில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அதற்குத் தகுந்தாற்போல், அவருக்குப் புதல்வர்கள் நாலு பேர் இருந்தும், அவருடைய அந்திய காலத்தில் பேரன் நான் ஒருவனே இருந்தேன். சக்கரவர்த்தி இறக்கும் தறுவாயில் என்னை அருகில் அழைத்து உச்சி முகர்ந்து கண்ணீர் பெருக்கினார். ‘அப்பனே! எனக்குப் பிறகு உன் பெரியப்பன் கண்டராதித்தன் சிம்மாசனம் ஏறுவான். அவனுக்குப் பிறகு இந்தச் சோழ ராஜ்யம் உன்னை அடையும். உன்னுடைய காலத்திலேதான் மறுபடி இந்தச் சோழ குலம் மேன்மையடையப் போகிறது’ என்று பலமுறை அவர் கூறினார். சோழ நாட்டின் மேன்மையை நிலை நாட்டுவதே என் வாழ்க்கையின் இலட்சியமாயிருக்க வேண்டுமென்று சொல்லி, அவ்வாறு என்னிடம் வாக்குறுதியும் பெற்றுக்கொண்டார்…”

“என் பாட்டனார் என்னிடம் எவ்வளவு பிரியம் வைத்திருந்தாரோ, அவ்வளவு நான் அவரிடம் பக்தி வைத்திருந்தேன். ஆதலின் அவருடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு நடப்பதென்று உறுதி கொண்டேன். ஆனாலும் என் உள்ளத்தில் அமைதி இல்லை. கடல் சூழ்ந்த தீவில் கரடிக்கு இரையாகாமல் என்னைக் காப்பாற்றிய கரையர் குலமகளின் கதி என்ன? என் பெரிய தகப்பனார் கண்டராதித்தர் சில காலத்திற்கு முன்புதான் இரண்டாவது கலியாணம் செய்து கொண்டிருந்தார். அவரை மணந்த பாக்கியசாலி மழவரையர் குலமகள் என்பதை நீ அறிவாய். முதல் மனைவிக்குக் குழந்தை இல்லையென்றால், இரண்டாவது மனைவிக்கும் குழந்தை பிறவாது என்பது என்ன நிச்சயம். பெரியப்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்தால், இராஜ்யம் எனக்கு எப்படி வரும்? இதைப் பற்றி ராஜ்யத்தில் சிலர் அப்போதே பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. ஆனால் அத்தகைய சந்தேகம் யாருக்கும் உண்டாகக்கூடாது என்று மகாத்மாவாகிய என் பெரிய தகப்பனார் விரும்பினார் போலும். பராந்தக சக்கரவர்த்தி காலமான பிறகு கண்டராதித்தருக்கு இராஜ்ய பட்டாபிஷேகம் நடந்தது. அதே சமயத்தில் எனக்கும் யுவராஜ்ய பட்டாபிஷேகம் நடக்க வேண்டும் என்று என் பெரியப்பா – புதிய சக்கரவர்த்தி – ஏற்பாடு செய்துவிட்டார்…

“என் பிரிய மகளே! இன்றைக்கு உன் தம்பி அருள் மொழியின் பேரில் இந்நாட்டு மக்கள் எப்படிப் பிரியமாயிருக்கிறார்களோ, அப்படி அந்த நாளில் என்பேரில் அபிமானமாயிருந்தார்கள். அரண்மனைக்குள்ளே பட்டாபிஷேகம் நடந்து கொண்டிருந்தபோது வெளியிலே ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். புதிதாக முடிசூடிய சக்கரவர்த்தியும், யுவராஜாவும் சேர்ந்தாற்போல் ஜனங்களுக்குக் காட்சி தரவேண்டும் என்று அனைவரும் விரும்பினார்கள். அவ்விதமே பெரியப்பாவும், நானும் இந்த அரண்மனை மேன்மாடத்தின் முன்றிலுக்கு வந்து நின்றோம். கீழே ஒரே ஜன சமுத்திரமாக இருந்தது. அவ்வளவு பேருடைய முகங்களும் மலர்ந்து விளங்கின. எங்களைக் கண்டதும் அவ்வளவு பேரும் குதூகலமடைந்து ஆரவாரித்தார்கள்.”

“எங்களை அண்ணாந்து பார்த்தபடி நின்ற மலர்ந்த முகங்களை ஒவ்வொன்றாகக் கவனித்து கொண்டு வந்தேன். அந்த ஜனங்களிலே எல்லோரும் ஒரே களிப்புடன் காணப்பட்டார்கள். ஆனால் திடீரென்று ஒரு முகம், ஒரு பெண்ணின் முகம், சோகம் ததும்பிய முகம், கண்ணீர் நிறைந்த கண்களினால் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்த முகம், தெரிந்தது. அத்தனைக் கூட்டத்துக்கு நடுவில், எப்படி அந்த ஒரு முகம், என் கண்ணையும் கவனத்தையும் கவர்ந்ததென்பதை நான் அறியேன். பிறகு அங்கிருந்து என் கண்களும் நகரவில்லை; கவனமும் பெயரவில்லை. என் தலை சுழன்றது; கால்கள் பலமிழந்தன; நினைவு தவறியது…அப்படியே நான் மயங்கி விழுந்து விட்டதாகவும் பக்கத்திலிருந்தவர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டதாகவும் பிற்பாடு அறிந்தேன்.”

“பிறகு எனக்கு நல்ல நினைவு வந்ததும் என் நண்பன் அநிருத்தனைத் தனியாக அழைத்து, அந்த ஊமைப் பெண்ணின் அடையாளம் கூறி எப்படியாவது அவளைக் கண்டுபிடித்து அழைத்து வரவேண்டும் என்று கட்டளையிட்டேன். தஞ்சை நகரின் மூலை முடுக்கெல்லாம் தேடியும் அத்தகைய ஊமைப் பெண் யாரும் இல்லையென்று அநிருத்தன் வந்து சொன்னான். என்னுடைய உள்ளத்தின் பிரமையாக இருக்குமென்றும் கூறினான். தஞ்சைக் கோட்டைக்கு வெளியே கடற்கரையை நோக்கிச் செல்லும் பாதைகளில் ஆள் அனுப்பித் தேடும்படி சொன்னேன். அப்படியே பல வழிகளிலும் ஆட்கள் சென்றார்கள். கடற்கரை வரையில் போய்த் தேடினார்கள். கோடிக்கரைக்குப் போனவர்கள் அங்கேயுள்ள கலங்கரை விளக்கக் காவலன் வீட்டில் ஓர் ஊமைப் பெண் இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள். அவள் பித்துப் பிடித்தவள் போலத் தோன்றினாளாம். எவ்வளவோ ஜாடைமாடைகளினால் அவளுக்கு விஷயத்தை தெரிவிக்க முயன்றது பயன்படவில்லையாம். அவர்களுடன் தஞ்சைக்கு வருவதற்கு அடியோடு மறுத்து விட்டாளாம். இந்தச் செய்தியை அவர்கள் கொண்டுவந்தவுடன், அநிருத்தனையும் அழைத்துக் கொண்டு கோடிக்கரைக்குப் புறப்பட்டேன்.

குதிரைகளை எவ்வளவு வேகமாகச் செலுத்தலாமோ அவ்வளவு வேகமாகச் செலுத்திக் கொண்டு கோடிக்கரை சேர்ந்தேன். அங்கே நான் அறிந்த செய்தி என்னை அப்படியே ஸ்தம்பித்துப் போகும்படி செய்துவிட்டது. நாங்கள் அனுப்பிய ஆள்கள் திரும்பிச் சென்ற மறுநாள் அந்தப் பெண் கலங்கரை விளக்கின் உச்சியில் ஏறினாளாம். அன்று அமாவாசை; காற்று பலமாக அடித்தது. கடல் பொங்கிக் கொந்தளித்து வந்து கலங்கரை விளக்கைச் சூழ்ந்து கொண்டது. அந்தப் பெண் சிறிது நேரம் கொந்தளித்த அலை கடலைப் பார்த்துக்கொண்டே நின்றாளாம். அப்படி அவள் அடிக்கடி நிற்பது வழக்கமாததால் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லையாம்! திடீரென்று ‘வீல்’ என ஒரு சத்தம் அலைகடலின் முழக்கத்தையும் மீறிக்கொண்டு கேட்டதாம். பிறகு அவளைக் காணோம்! பெண் உருவம் ஒன்று விளக்கின் ஊச்சியிலிருந்து கடலில் தலைகீழாக விழுந்ததை இரண்டொருவர் பார்த்தார்களாம். படகுகளைக் கொண்டு வந்து ஆனமட்டும் தேடிப்பார்த்தும் பயன்படவில்லை. கொந்தளித்துப் பொங்கிய கடல் அந்தப் பெண்ணை விழுங்கிவிட்டது என்றே தீர்மானிக்க வேண்டியிருந்ததாம். இந்தச் செய்தியைக் கேட்டதும் என் நெஞ்சில் ஈட்டியினால் குத்துவது போன்ற வலியும், வேதனையும் உண்டாயின.”

“வேதனையுடன் தஞ்சைக்குத் திரும்பினேன். இராஜ்ய காரியங்களில் மனத்தைச் செலுத்தினேன். போர்க்களங்களுக்குச் சென்றேன். உன் தாயை மணந்து கொண்டேன். வீரப் புதல்வர்களைப் பெற்றேன். உன்னை என் மகளாக அடையும் பாக்கியத்தையும் பெற்றேன்… ஆனாலும், மகளே! செத்துப்போன அந்தப் பாவியை என்னால் அடியோடு மறக்க முடியவில்லை. சிற்சில சமயம் என் கனவிலே அந்தப் பயங்கரகாட்சி, – நான் கண்ணால் பாராத அந்தக் காட்சி, – தோன்றி என்னை வருத்திக் கொண்டிருந்தது. கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து ஒரு பெண் உருவம் தலைகீழாகப் பாய்ந்து அலை கடலில் விழும் காட்சி என் கனவிலும் கற்பனையிலும் தோன்றிக் கொண்டிருந்தது.

கனவில் அந்தப் பயங்கரக் காட்சியைக் காணும் போதெல்லாம் நான் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருப்பேன். பக்கத்தில் படுத்திருப்பவர்கள் ‘என்ன? என்ன?’ என்று கேட்பார்கள். உன் தாயார் எத்தனையோ தடவை கேட்டதுண்டு. ஆனால் நான் உண்மையைக் கூறியதில்லை. ‘ஒன்றுமில்லை’ என்று சொல்வேன். நாளடைவில் காலதேவனின் கருணையினால் அந்தப் பயங்கரக் காட்சி என் மனத்தை விட்டு அகன்றது; அவளும் என் நினைவிலிருந்து அகன்றாள்; அகன்று விட்டதாகத் தான் சமீப காலம் வரையில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உயிரோடிருப்பவர்களைக் காட்டிலும் செத்துப் போனவர்கள் அதிகக் கொடுமைக்காரர்கள் என்று தோன்றுகிறது. மகளே! ஊமைச்சியின் ஆவி என்னைவிட்டுவிடவில்லை. சில காலமாக அது மீண்டும் தோன்றி என்னை வதைக்க ஆரம்பித்திருக்கிறது!”

இவ்விதம் சொல்லிவிட்டுச் சுந்தரசோழர் தம் பார்வையை எங்கேயோ தூரத்தில் செலுத்தி வெறித்துப் பார்த்தார். எல்லையற்ற இரக்கம் அவர் பேரில் குந்தவைக்கு உண்டாயிற்று. கண்களில் நீர் ததும்பியது. தந்தையின் மார்பில் தன் முகத்தைப் பதித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். பிறகு தந்தையை நிமிர்ந்து நோக்கி, “அப்பா! இந்தப் பயங்கரமான வேதனையைப் பல வருஷகாலம் தாங்கள் மனத்திலேயே வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். அதனாலேதான் தங்கள் உடம்பும் சீர்குலைந்து விட்டது. இப்போது என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா? இனிமேல் தங்கள் உடம்பு சரியாகப் போய்விடும்” என்றாள். சுந்தரசோழர் அதைக் கேட்டுச் சிரித்த சிரிப்பின் ஒலியில் வேதனையுடன் கூட அவநம்பிக்கையும் கலந்திருந்ததேன்?

தந்தையிடம் விடைபெற்றுக் கொண்டு குந்தவை தன் இருப்பிடத்துக்குச் சென்றாள். வழியில் அன்னை வானமாதேவியைச் சந்தித்தாள். “அம்மா! இனிமேல் என் தந்தையை ஒரு கண நேரம்கூட விட்டுப் பிரியாதீர்கள்!” என்றாள்.


35. நந்தினியின் ஓலை

பழுவேட்டரையர் அரண்மனையிலிருந்து லதா மண்டபத்துக்கு வரும் பாதையில் விரைந்து வந்து கொண்டிருந்தார்.

பழுவேட்டரையர் அருகில் நெருங்கியதும் நந்தினி முகமலர்ந்து அவரைத் தன் கரிய விழிகளால் பார்த்து, “நாதா! எங்கே தாங்கள் திரும்பி வருவதற்கு அதிக நாள் ஆகிவிடுமோ என்று பார்த்தேன். நல்லவேளையாக வந்துவிட்டீர்கள்!” என்றாள்.

“ஆமாம்; போன காரியம் முடிந்து விட்டது; திரும்பி விட்டேன்” என்றார்.

“இது கிடக்கட்டும். நந்தினி! ஒரு முக்கியமான விஷயம் சொல்வதற்காக இப்போது வந்தேன். இலங்கை மாதோட்டத்தில் ஒருவனை ஒற்றன் என்று சந்தேகித்துப் பிடித்திருக்கிறார்களாம். அவனிடம் இளவரசன் அருள்மொழிவர்மனுக்கு ஓலை ஒன்றிருக்கிறதாம். அவன் பெரிய கைகாரனாய்த் தானிருக்க வேண்டும். நம் ஆட்களிடம் அகப்படாமல் தப்பி இலங்கைக்குச் சென்று விட்டான் பார்!” என்றார் பழுவேட்டரையர்.

“நாதா! அவன் தப்பிச் சென்றது எனக்கு ஒன்றும் அதிசயமாய்த் தோன்றவில்லை. தங்கள் சகோதரர் இந்தக் கோட்டைக் காவலுக்குத் தகுதியற்றவர் என்றுதான் எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறேனே! அவர் அனுப்பிய ஆட்களும் அப்படித்தானே இருப்பார்கள்?” என்றாள் நந்தினி.

“முன்னெல்லாம் நீ அப்படிச் சொன்னபோது எனக்கு அது சரியாகப் படவில்லை. இப்போது எனக்குக்கூட அப்படித்தான் தோன்றுகிறது. இன்னும் ஒரு விந்தையைக் கேள்! மாதோட்டத்தில் அகப்பட்ட ஒற்றனிடம் நமது பழுவூர் இலச்சினை ஒன்று இருந்ததாம். அது அவனிடம் எப்படிக் கிடைத்தது என்று அவன் சொல்லவில்லையாம்!…”

நந்தினி இலேசாக ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, “இது என்ன வேடிக்கை? பனை இலச்சினை அவனிடம் எப்படிக் கிடைத்ததாம்? தங்கள் சகோதரர் இதற்கு என்ன சொல்கிறார்?” என்றாள்.

“அவனா? அவன் சொல்லுவதைக் கேட்டால் உனக்குச் சிரிப்பு வரும்! அந்தப் பனை இலச்சினை உன்னிடமிருந்துதான் அவனிடம் போயிருக்க வேண்டுமென்கிறான் காலாந்தகன்!” என்று சொல்லிவிட்டுப் பழுவேட்டரையர் இடிஇடியென்று சிரித்தார்.

நந்தினியும் அவருடன் சேர்ந்து சிரித்துக்கொண்டே, “என் மைத்துனர் இருக்கிறாரே, அவருக்கு இணையான புத்திக் கூர்மை படைத்தவர் இந்த ஈரேழு பதினாலு உலகத்திலும் கிடையாது!” என்றாள்.

“இன்னும் உன் மைத்துனன் என்ன சொல்கிறான் தெரியுமா? நல்ல வேடிக்கை! அதை நினைக்க நினைக்க எனக்குச் சிரிப்பு வருகிறது! தஞ்சைக் கோட்டை வாசலில் நீ பல்லக்கில் வந்து கொண்டிருந்தபோது உன்னை அவன் சந்தித்துப் பேசினானாம். பிறகு இந்த அரண்மனைக்குள்ளும் அந்த மாயாவி வந்திருந்தானாம். ஆகையால் நீயே அவனிடம் பழுவூர் இலச்சினையைக் கொடுத்திருக்கவேணுமாம்! அப்படியில்லாவிட்டால், உன்னிடம் யாரோ ஒரு மந்திரவாதி அடிக்கடி வருகிறானே, அவன் மூலமாக போயிருக்க வேண்டுமாம்! தன்னுடைய முட்டாள் தனத்தை மறைப்பதற்காக அவன் இப்படியெல்லாம் கற்பனை செய்து உளறுகிறான்!” என்று கூறிப் பழுவேட்டரையர் தமது நீண்ட பற்கள் எல்லாம் தெரியும்படியாக மறுபடியும் ‘ஹஹ்ஹஹ்ஹா’ என்று சிரித்தார்.

“என் மைத்துனருடைய அறிவுக் கூர்மையைப் பற்றி நான் சந்தேகித்தது ரொம்பத் தவறு. அவருடைய அறிவு உலக்கைக் கொழுந்துதான்! சந்தேகமில்லை! ஆனால் இதையெல்லாம் நீங்கள் கேட்டுக் கொண்டு சும்மா இருந்ததை நினைத்தால்தான் எனக்கு வியப்பாயிருக்கிறது!” என்றாள் நந்தினி. அவளுடைய முகபாவம் மறுபடியும் மாறி, அதில் இப்போது எள்ளும் கொள்ளும் வெடித்தது. கண்ணில் தீப்பொறி பறந்தது.

வீராதி வீரரும் போர்க்களத்தில் எத்தனையோ வேல் வீச்சுக்களை இறுமாந்து தாங்கியவருமான பெரிய பழுவேட்டரையர் நந்தினியின் சிறு கோபத்தைத் தாங்க முடியாமல் தடுமாறினார். அவருடைய தோற்றத்திலும் பேச்சிலும் திடீரென்று ஒரு தளர்ச்சி காணப்பட்டது.

“தேவி! நான் அதையெல்லாம் சும்மா கேட்டுக் கொண்டிருந்தேன் என்றா நினைக்கிறாய்? அவனுடைய கையாலாகாத் தனத்தைப் பற்றி மிகக் கடுமையாகப் பேசி அவனை அழவைத்து விட்டேன். நீ பார்த்திருந்தால் அவன் பேரில் இரக்கம் அடைந்திருப்பாய்!” என்றார்.

“நாதா! நான் தங்களுக்கு எச்சரித்ததை எண்ணிப் பாருங்கள். இந்த இராஜ்யத்தில் உள்ள அவ்வளவு பேரும் சேர்ந்து தங்களை வஞ்சிக்கப் பார்க்கிறார்கள் என்று நான் சொல்லவில்லையா? இது உண்மை என்பது இப்போதாவது தங்களுக்குத் தெரிகிறதா?”

பழுவேட்டரையர் மீது தன் காந்தக் கண்களைச் செலுத்தி, கொஞ்சம் கிளியின் குரலில், “நாதா; என்னிடம் தங்களுடைய நம்பிக்கை குன்றிவிட்டதாகத் தோன்றுகிறது! என் மைத்துனருடைய துர்ப்போதனை ஜயித்துவிட்டதுபோல் காண்கிறது!” என்றாள்.

“ஒருநாளுமில்லை நந்தினி! என் கையில் பிடித்த வேலிலும், அரையில் சொருகிய வாளிலும் எனக்கு நம்பிக்கை குறைந்தாலும் உன்னிடம் நம்பிக்கை குறையாது. ஆயினும் உன்னுடைய காரியங்கள் சில எனக்கு அர்த்தமாகவில்லை. ஆதித்த கரிகாலனுக்கு நீ எதற்காக ஓலை கொடுத்து அனுப்புகிறாய்? கடம்பூர் மாளிகைக்கு எதற்காக அவனை அழைக்கச் சொல்கிறாய்? அவன் அல்லவா நம்முடைய யோசனை நிறைவேறுவதற்கு முதல் விரோதி?” என்றார் பழுவேட்டரையர்.

“இல்லை, இல்லை! ஆதித்த கரிகாலர் நம் முதல் விரோதி இல்லை. அந்தப் பழையாறைப் பெண் பாம்புதான் நம் முதல் விரோதி. நாதா! நான் அடிக்கடி சொல்லி வந்திருப்பதை இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இளைய பிராட்டி குந்தவை தன் மனத்திற்குள் ஏதோ ஒரு தனி யோசனை வைத்திருக்கிறாள் என்று சொல்லி வந்தேன் அல்லவா? அது என்னவென்று இப்போது கண்டுபிடித்து விட்டேன். மற்ற எல்லாரையும் விலக்கிவிட்டு, அவளுடைய இளைய சகோதரன் அருள்மொழிவர்மனைத் தஞ்சாவூர்ச் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்க அவள் தீர்மானித்திருக்கிறாள். அவளுடைய சூழ்ச்சிக்கு எதிர் சூழ்ச்சி செய்து அவளுடைய நோக்கம் நிறைவேறாமல் செய்ய வேண்டும். காஞ்சிக்கு நான் ஓலை அனுப்பியதன் காரணம் இப்போது தெரிகிறதல்லவா?” என்று நந்தினி கேட்டு விட்டுப் பழுவேட்டரையரைப் பார்த்த பார்வை அவருடைய நெஞ்சை ஊடுருவி, அவர் அறிவை நிலை குலையச் செய்தது.

ஒன்றும் தெரியாவிட்டாலும், “ஆம் தெரிகிறது!” என்று குழறினார் அந்த வீரக்கிழவர்.

“நாதா! தாங்களும் தங்கள் முன்னோர்களும் புரிந்த அரும்பெரும் வீரச் செயல்களினாலேயே இன்று இந்தச் சோழ சாம்ராஜ்யம் இவ்வளவு பல்கிப் பரவியிருக்கிறது. எந்த விதத்திலாவது தங்களுக்கு என் பேரில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் தங்கள் உடைவாளினால் என்னை ஒரே வெட்டாக வெட்டிக் கொன்று விடுங்கள்!” என்றாள் நந்தினி.

“என் கண்ணே! இத்தகைய கர்ண கடூரமான மொழிகளைச் சொல்லி என்னைச் சித்திரவதை செய்யாதே!” என்றார் பெரிய பழுவேட்டரையர்.


36. கொடும்பாளூர்ப் பெரிய வேளார்

வந்தியத்தேவன் ஈழத்துக் கடற்கரையோடு நடந்து சென்று பாலாவி நதிக்கரையில் இருந்த மாதோட்ட மாநகரை அடைந்திருந்தான். இராமேசுவரக் கடலுக்கு அப்புறத்தில் ஈழ நாட்டுக் கடற்கரையில் இருந்த அம்மாநகரம் பசுமையான மரங்கள் அடர்ந்த சோலைகளினால் சூழப்பட்டுக் கண்ணுக்கு இனிய காட்சி அளித்தது. மாவும், பலாவும், தென்னையும் அந்தக் கரையைச் சுற்றிலும் செழித்து வளர்ந்திருந்தன. தமிழ்நாட்டிலிருந்து ஈழத்துப் போருக்கு வந்த படைகள் பெரும்பாலும் அங்கேதான் இறங்கின. திரும்பிச் சென்ற படைகளும் அங்கேதான் கப்பல் ஏறின. நகரம் பல தடவை கைமாறிவிட்டது. சில சமயம் இலங்கை மன்னர்களிடமும், சில சமயம் பாண்டிய அரசர்களிடமும் அது இருந்தது. பராந்தக சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது.

அத்தகைய நகரத்தின் கோட்டை மதில் வாசலில் ஒரு நாள் வந்தியத்தேவன் வந்து நின்றான். சோழ சேநாதிபதியைப் பார்க்க வேண்டும் என்றான். காவலர்கள் அவனை உள்ளே விட மறுத்தார்கள். அதன் பேரில், காவலர்களைப் பலவந்தமாகத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழையப் பிரயத்தனம் செய்தான். காவலர்கள் அவனைச் சிறைப் பிடித்துக் கோட்டைத் தலைவனிடம் கொண்டு போனார்கள். வந்தியத்தேவன் கோட்டைத் தலைவனிடம் இளவரசர் அருள்மொழிவர்மருக்கு முக்கியமான ஓலை கொண்டு வந்திருப்பதாகவும், அதைப்பற்றி சோழ சேநாதிபதியிடந்தான் விவரம் சொல்ல முடியும் என்று கூறினான். அவனைப் பரிசோதித்துப் பார்த்தார்கள். ‘பொன்னியின் செல்வ’னுக்கு ஓர் ஓலையும், பழுவூர் பனை இலச்சினையும் அவனிடம் இருக்கக் கண்டார்கள்.

கொடும்பாளூர்ப் பெரிய வேளார் பூதி விக்கிரம கேசரி அச்சமயம் இலங்கைப் படையின் சேநாதிபதியாக இருந்தார். அவரிடம் போய்ச் சொன்னார்கள்.

கொடும்பாளூர்ப் பெரிய வேளார் வயது முதிர்ந்த அநுபவசாலி; பல போர்க்களங்களில் பழந்தின்று கொட்டையும் போட்டவர். சோழ குலத்தாருடன் நெருங்கிய நட்பும் உறவும் பூண்டவர். அவருடைய சகோதரராகிய கொடும்பாளூர்ச் சிறிய வேளார் சில ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கைப் போர்க்களத்தில் வீர சொர்க்கம் அடைந்தார். அவருடன் சென்ற சைன்யமும் தோல்வியடைந்து திரும்ப நேர்ந்தது. அந்தப் பழியைத் துடைத்துக் கொடும்பாளூரின் வீரப் பிரதாபத்தை மீண்டும் நிலைநாட்டுவதில் அவர் பெரிதும் ஆத்திரம் கொண்டிருந்தார். ஆகையாலேயே சற்று வயதானவராயிருந்தும் இலங்கைப் படைக்குத் தலைமை வகித்து அங்கு வந்திருந்தார்.

இலங்கைப் போரை நன்கு நடத்த முடியாமல் பழுவேட்டரையர்களால் விளைந்த இடையூறுகளைப் பற்றி அந்த இரண்டு சிற்றரசர் குலத்துக்கும் ஏற்பட்டிருந்த போட்டியும் பகைமையும் இப்போது அதிகமாய் வளர்ந்திருந்தன. எனவே, பழுவூர் முத்திரையிட்ட இலச்சினையுடன் அகப்பட்டுக் கொண்ட வந்தியத் தேவன் பாடு சேநாதிபதி பெரிய வேளாரிடம் கஷ்டமாகத்தான் போயிருக்கும். வந்தியத்தேவனைப் பற்றிய உண்மையை ஆழ்வார்க்கடியானிடமிருந்து தெரிந்து கொண்ட அநிருத்தர் அவனையே சேநாதிபதி பூதி விக்கிரம கேசரியிடம் சென்று உண்மையைத் தெரியப்படுத்தும்படி அவசரமாக அனுப்பி வைத்திருந்தார்.

வாணர் குலத்து வீரகுமாரனை மேலும் கீழும் உற்றுப் பார்த்த சேநாதிபதி பூதி விக்கிரம கேசரிக்கு அவனிடம் நல்ல அபிப்பிராயம் உண்டாகியிருக்கவேண்டும்.

“தம்பி! பழையாறையில் எங்கள் குலவிளக்கை நீ பார்த்தாயா?”

“பார்த்தேன், ஐயா! இளைய பிராட்டியுடன் இணை பிரியாமல் இருந்து வருகிறவரை எப்படிப் பார்க்காமல் இருக்கமுடியும்?”

“தம்பி! எங்கள் வீட்டுப் பெண்ணைப்பற்றி, வானதியைப் பற்றி, இளைய பிராட்டி எனக்குச் செய்தி ஒன்றும் அனுப்பவில்லையா?”

“தங்களுக்குச் செய்தி அனுப்பவில்லை. ஆனால்…”

“ஆனால், என்ன?”

“யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு அனுப்பியிருக்கிறார்கள். வானதி தேவியைப் பற்றி இளவரசரிடம் நேரில் சில செய்திகளைச் சொல்லும்படி பணித்திருக்கிறார்கள்…”

“உன்னைப் போன்ற புத்திசாலிப் பிள்ளையை நான் பார்த்ததேயில்லை!” என்று கூறிச் சேநாதிபதி பெரிய வேளார் வந்தியத்தேவனை மார்போடு அணைத்துக்கொண்டார். பின்னர், “சரி; இனி வீண் பொழுது போக்க வேண்டாம்; புறப்படுங்கள்!” என்று சொன்னார்.

“ஐயா! இந்த வீர வைஷ்ணவர் என்னோடு அவசியம் வரத்தான் வேணுமா? இவர் இல்லாமல் நான் தனியே போகக் கூடாதா?”

“இவர் வருவதில் உனக்கு என்ன ஆட்சேபம்?” திருமலை உன்னோடு வராவிட்டால் நீ இளவரசரைக் கண்டுபிடிக்க முடியாது. அவர் இருக்குமிடமே யாருக்கும் தெரியாது. மேலும் இளவரசரிடம் கொடுப்பதற்கு இவனும் ஒரு முக்கியமான ஓலை கொண்டு வருகிறான். ஆகையால் இரண்டு பேருமாகச் சேர்ந்து போவதே நல்லது! வழியில் ஒருவரோடொருவர் சண்டை பிடித்துக் கொண்டு காரியத்தைக் கெடுத்து விடாதீர்கள்!”

இவ்விதம் சொல்லிவிட்டுப் பெரிய வேளார் மறுபடியும் வந்தியத்தேவனை அருகில் அழைத்து அவன் காதோடு இரகசியமாகச் சொன்னார்.

“தம்பி! இவனால் உன் காரியத்துக்கு இடைஞ்சல் ஒன்றும் நேராது. ஆனாலும் ஜாக்கிரதையாகவே இரு! இளவரசரிடம் இவன் என்ன செய்தி சொல்லுகிறான் என்பதைத் தெரிந்து வந்து என்னிடம் சொல்லு!”

ஆழ்வார்க்கடியானைத் தனக்கு ஒற்றனாகப் பின்னோடு அனுப்புகிறார்கள் என்று முதலில் வந்தியத்தேவன் எண்ணியிருந்தான். இப்போது அவனுக்குத் தான் ஒற்றன் என்று ஏற்பட்டது. இந்த நிலைமை வந்தியத்தேவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் அன்றிரவே புறப்பட்டார்கள். பிரயாணம் தொடங்கி இரண்டு நாள் கிழக்கு நோக்கிச் சென்றார்கள். முதலில் கொஞ்சதூரம் ஊர்ப்புறங்களாக இருந்தன. ஓரளவு ஜன நடமாட்டமும் இருந்தது. வர வரக் காட்டுப் பிரதேசமாக மாறி வந்தது. முதலில் குட்டை மரங்கள் நிறைந்த காடாயிருந்தது. பின்னர் வானை அளாவிய பெரிய மரங்கள் அடர்ந்த அரண்யங்களாக மாறின. இடையிடையே ஏரிகள் தென்பட்டன. ஆனால் அவற்றின் கரைகள் பல இடங்களில் இடிந்து கிடந்தன. தண்ணீர் நாலாபுறமும் ஓடிப்போய் ஏரிகள் வறண்டு கிடந்தன. கழனியில் பயிர் செய்யப்படாமல் கிடந்தன. இன்னும் ஓரிடத்தில் விசாலமான பிரதேசத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. பாலாவி நதியின் கரை வெட்டப் பட்டபடியால் அதன் தண்ணீர் நதியோடு போகாமல் வெளியில் கண்டபடி சிதறிச் சென்று அப்படித் தண்ணீர்த் தேக்கம் உண்டானதாகத் தெரிந்தது.

இரண்டு தினங்களுக்குப் பிறகு பிரயாணத்திசை மாறியது. கிழக்குத் திசையில் சென்றவர்கள் இப்போது தெற்கு நோக்கித் திரும்பினார்கள். வர வரப் பிரதேசங்கள் அடர்த்தியாகிக் கொண்டு வந்தன. சமவெளிப் பிரதேசம் மாறிப் பாறைகளும் சிறிய குன்றுகளும் எதிர்ப்பட்டன. இன்னும் தூரத்தில் பெரிய மலைத் தொடர்கள் வானை அளாவிய சிகரங்களுடன் தென்பட்டன. காடுகளின் தோற்றம் பயங்கரமாகிக் கொண்டு வந்தது. காட்டுவழியில் எவ்வளவு துரிதமாகப் போக முடியுமோ அவ்வளவு துரிதமாகச் சென்றார்கள். அஸ்தமிக்கும் சமயத்துக்கு இராஜபாட்டையை அடைந்தார்கள்.


37. யானைப் பாகன்

இராஜபாட்டையில் வருவோரும் போவோரும், வண்டிகளும் வாகனங்களுமாக ஒரே கலகலப்பாக இருந்தது. “இந்த இராஜபாட்டை எங்கிருந்து எங்கே போகிறது? நாம் எங்கே வந்திருக்கிறோம்? எங்கே போகிறோம்?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.

“அநுராதபுரத்திலிருந்து சிம்மகிரிக்குப் போகும் இராஜபாட்டையில் வந்து சேர்ந்திருக்கிறோம்.” என்றான் ஆழ்வார்க்கடியான்.

“இராஜபாட்டை வழியாகச் சுகமாய் வந்திருக்கலாமே? எதற்காகக் காட்டு வழியாக வந்தோம்?”

“இராஜபாட்டையில் நாம் நெடுகிலும் வந்திருந்தால் நூறு இடத்தில் நம்மை நிறுத்திச் சோதனை செய்திருப்பார்கள். அநுராதபுரத்தில் அடியோடு நிறுத்திப் போட்டிருப்பார்கள். நாம் யாரைத் தேடி வந்திருக்கிறோமோ அவர் சிம்மகிரிக்குப் பக்கம் சென்றிருப்பதாக அறிந்தேன். அதனால்தான் குறுக்குவழியில் வந்தேன். இன்னமும் அவரை நாம் கண்டுபிடிக்கத்தான் போகிறோமோ, இல்லையோ? வேறு எங்கேயாவது போகாதிருக்க வேண்டும்!” என்றான் ஆழ்வார்க்கடியான்.

இராஜபாட்டையின் இரு பக்கத்திலும் ஏராளமான வீடுகளும், கிராமங்களும், கடைவீதிகளும், கொல்லர், தச்சர் பட்டறைகளும் இருந்தன. அவற்றில் வசித்தவர்களும் தொழில் செய்தவர்களும் பெரும்பாலும் சிங்களவர்களாகத் தோன்றினார்கள். இராஜபாட்டையில் தமிழ்நாட்டுப் போர் வீரர்கள் குறுக்கும் நெடுக்கும் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் இரு புறமும் வசித்த சிங்களவர்கள் எவ்வித தடையுமின்றி நிர்ப்பயமாய்த் தங்கள் தொழில்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.

“இந்தப் பகுதியெல்லாம் இப்போது யாருடைய வசத்தில் இருக்கிறது?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.

“சோழ சைன்யம் தம்பள்ளை வரையில் கைப்பற்றியிருக்கிறது. அப்பால் சிம்மகிரிக் குன்றும், கோட்டையும் மகிந்தன் வசம் இருக்கின்றன.”

“இந்தப் பக்கங்களில் வசிக்கும் ஜனங்கள்?”

“பெரும்பாலும் சிங்களத்தார்கள். ‘பொன்னியின் செல்வர்’ இங்கே வந்தபிறகு யுத்தத்தின் போக்கே மாறிவிட்டது. சோழ வீரர்களுக்கும் மகிந்தனுடைய வீரர்களுக்குத்தான் சண்டை. அதாவது போர்க்களத்தில் எதிர்ப்படும்போது. மற்றப்படி குடிகள் நிர்ப்பயமாய் வாழலாம். புத்த குருமார்களுக்கு ஒரே கொண்டாட்டாம். அநுராதபுரத்தில் இடிந்துபோன புத்த விஹாரங்களையெல்லாம் நம் இளவரசர் திரும்பப் புதுப்பித்துக் கட்டும்படி கட்டளையிட்டிருக்கிறாராம்!”

சிறிது தூரம் மௌனமாக நடந்தார்கள். அந்த மோனத்தைக் கலைத்துச் சில குதிரைகளின் குளம்புச் சத்தம் கேட்டது. அவர்களுக்கு எதிர்ப்பக்கத்திலிருந்து அச்சப்தம் வந்தது. சில நிமிஷத்துக்கெல்லாம் நாலு குதிரைகள் வெகுவேகமாக நாலுகால் பாய்ச்சலில் வந்தன. சூறாவளிக் காற்றைப் போல் புழுதியைக் கிளப்பிவிட்டுக் கொண்டு வந்த அக்குதிரைகள் மின்னல் மின்னும் நேரத்தில் நம் கால் நடைப் பிரயாணிகளைத் தாண்டிச் சென்றன. ஆயினும் அந்தச் சிறிய நேரத்திலேயே அக்குதிரைகளின் மேலிருந்தவர்களில் ஒருவருடைய முகத்தை வந்தியத்தேவன் பார்த்துத் தெரிந்து கொள்ள முடிந்தது! ஆகா! பார்த்திபேந்திர வர்மன் அல்லவா இவன்? காஞ்சியிலுள்ள இளவரசர் ஆதித்தரின் அந்தரங்க நண்பன் அல்லவா? இவன் எங்கே வந்துவிட்டு, எங்கே போகிறான்? எதற்காக இவன் இலங்கைக்கு வந்தான்? எப்போது வந்தான்?…

ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம், “தம்பி! அந்த மற்ற மூன்று ஆட்களையும் பார்த்தாயா? அவர்களில் யாரையாவது உனக்கு முன்னம் தெரியுமா?” என்று ஆவலோடு கேட்டான்.

“இல்லை, நான் பார்த்ததேயில்லை!” என்றான் வந்தியத்தேவன்.

“ஆம், நீ பார்த்திருக்க முடியாதுதான். அவர்களில் இரண்டு பேரை நான் பார்த்திருக்கிறேன். திருப்புறம்பயம் பள்ளிப்படையில் நள்ளிரவில் பார்த்தேன்! அப்பா! என்ன பயங்கரமான சபதம் எடுத்துக் கொண்டார்கள்!” என்று கூறிய போது ஆழ்வார்க்கடியானுடைய உடம்பு முழுவதும் நடுங்கிற்று.

“அப்படி என்ன பயங்கரமான சபதம் எடுத்துக் கொண்டார்கள்?”

“சோழர் குலப் பூண்டே இந்த உலகில் இல்லாமல் அழித்து விடுவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார்கள்!”

“ஐயையோ!”

“இவர்கள் எப்படி நமக்கு முன்னால் இங்கு வந்து சேர்ந்தார்களோ தெரியவில்லை! கெட்டிக்காரர்கள்! இந்த முரட்டுப் பல்லவனை எப்படியோ பிடித்துக் கொண்டார்கள், பார்!” என்று சொல்லிவிட்டு ஆழ்வார்க்கடியான் மௌனமானான்.

வந்தியத்தேவனுக்குக் கோடிக்கரையில் அவன் அறிந்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அவன் கோடிக்கரை வந்ததற்கு முதல்நாள்தான் இரண்டு பேர் அவசரமாக இலங்கைக்குப் போனார்கள் என்றும், பூங்குழலியின் தமையன் அவர்களைப் படகில் ஏற்றிச் சென்றான் என்றும் கேள்விப்பட்டான் அல்லவா. இவர்களில் அந்த இரண்டு பேரும் இருப்பார்களோ? அப்படியானால் பார்த்திபேந்திரனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்?

“அதோ பார்!”

ஆழ்வார்க்கடியான் சுட்டிக்காட்டிய இடத்தில் அலங்கரித்த பெரிய யானை ஒன்று வந்துகொண்டிருந்தது. அதன் அம்பாரியில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடைய தோற்றமும், உடையும் அவர்கள் சீன யாத்திரிகர்கள் என்று புலப்படுத்தின. யானைப்பாகன் ஒருவன் கையில் அங்குசத்துடன் யானையின் கழுத்தின் மீது வீற்றிருந்தான். யானையைச் சுற்றிச் சூழ்ந்து வந்த ஜனங்கள் பலவித ஆரவார கோஷங்களைக் கிளப்பினார்கள். யானையையும், யானையைச் சூழ்ந்து நின்ற கூட்டத்துக்கும் பின்னால் சற்றுத் தூரத்தில் இவர்களும் தொடர்ந்து போனார்கள்.

ஒரு புத்த விஹாரத்தின் வாசலில் வந்ததும் யானை நின்றது. பிறகு யானைப் பாகன் ஏதோ சொல்லவும் யானை மண்டியிட்டுப்படுத்தது. யாத்திரீகர்கள் இறங்கினார்கள். புத்த விஹாரத்தின் வாசலில் கும்பலாக நின்ற புத்த பிக்ஷுக்கள் சீன யாத்திரீகர்களை வரவேற்றார்கள். சங்கங்கள் முழங்கின; விஹாரத்தின் மேன் மாடத்திலிருந்து மலர் மாரி பொழிந்தது. “புத்தம் சரணம் கச்சாமி” என்ற கோஷம் வானளாவியது. சீன யாத்திரீகர்கள் இருவரும் விஹாரத்துக்குள் சென்றார்கள். கூட வந்தவர்களிலும் பெரும்பாலோர் அவர்களைத் தொடர்ந்து விஹாரத்துக்குள்ளே சென்றார்கள்.

யாத்திரீகர்கள் இறங்குவதற்கு முன்பே யானையின் கழுத்திலிருந்து இறங்கிவிட்ட யானைப் பாகன் யானையை எழுப்பி நடத்திக்கொண்டு சென்றான். சற்றுத் தூரத்தில் நின்றிருந்த நாலு பேரில் ஒருவனிடம் யானையை ஒப்புவித்தான். இன்னும் ஒருவனிடம் ஆழ்வார்க்கடியானைச் சுட்டிக் காட்டி ஏதோ சொன்னான். மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு சிறிது நேரத்தில் வீதியின் ஒரு திருப்பத்தில் திரும்பி மறைந்தான்.

யானைப் பாகன் எந்த ஆளுக்கு ஆழ்வார்க்கடியானைச் சுட்டிக் காட்டினானோ அவன் இவர்கள் நின்ற இடத்தை நோக்கி வந்தான். ஆழ்வார்க்கடியானிடம் மெல்லிய குரலில், “ஐயா! என்னுடன் வருவதற்குச் சம்மதமா?” என்று கேட்டான்.

“அதற்காகவே காத்திருக்கிறோம்” என்றான் ஆழ்வார்க்கடியான்.

“அடையாளம் ஏதாவது உண்டா?”

சேநாதிபதி கொடுத்திருந்த கொடும்பாளூர் முத்திரை மோதிரத்தை ஆழ்வார்க்கடியான் காட்டினான்.

“சரி, என் பின்னால் வாருங்கள்” என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் செல்ல, இவர்கள் பின்தொடர்ந்து சென்றார்கள். ஊரைத்தாண்டி அப்பால் சென்றதும் குறுகிய காட்டுப் பாதை ஒன்று தென்பட்டது. அதன் வழியே சிறிது தூரம் சென்றதும் பாதையிலிருந்து சற்று விலகியிருந்த ஒரு பாழும் மண்டபத்தை அடைந்தார்கள். அதில் சிறிது நேரம் காத்திருக்கவேண்டும் என்று அவர்களை அழைத்து வந்தவன் தெரிவித்தான். பிறகு அவன் ஒரு மரத்தின் மேலேறி அவர்கள் வந்த வழியைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.

அந்தப் பாழும் மண்டபத்தில் பின்னால் இரண்டு குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. குதிரைகள் இரண்டுதான் என்பது வந்தியத்தேவனுக்குக் கொஞ்சம் கவலையை உண்டாக்கியது.

“வைஷ்ணவரே! அந்த யானைப் பாகன் யார்?”

“யாராயிருக்கும்? நீயே ஊகித்துப் பார், தம்பி!”

“யானைப் பாகன்தான் பொன்னியின் செல்வரா?”

“அவருடைய கண்களில் ஒரு கணம் ஜொலித்த பிரகாசத்திலிருந்து அப்படித்தான் தோன்றியது.”

திடீரென்று குதிரைகளின் குளம்புச் சத்தம் கேட்டது. அவர்கள் இருந்த இடத்தை நோக்கிச் சப்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. மரத்தின் மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவன் அவசரமாகக் கீழே இறங்கினான். இரண்டு குதிரைகளையும் பிடித்துக்கொண்டு வந்தான். ஒன்றில் தான் ஏறிக் கொண்டான். ஆழ்வார்க்கடியானை இன்னொன்றின் மேல் ஏறிக் கொள்ளச் சொன்னான். “சற்று நேரத்தில் இந்தப் பாதையுடன் சில குதிரைகள் போகும். அவற்றின் பின்னோடு நாமும், தொடர்ந்து போகவேண்டும்” என்றான்.

வந்தியத்தேவன் “எனக்குக் குதிரை?” என்று கேட்டான்.

“இவரை மட்டுந்தான் அழைத்து வரும்படி எனக்குக் கட்டளை!”

“இளவரசரை நான் உடனே பார்த்தாக வேண்டும். மிக முக்கியமான செய்தி கொண்டுவந்திருக்கிறேன்.”

“அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, ஐயா!”

ஆழ்வார்க்கடியான், “தம்பி! கொஞ்சம் பொறுமையாயிரு! நான் போய் இளவரசரிடம் சொல்லி உன்னையும் அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்கிறேன்” என்றான்.

“வைஷ்ணவரே! நான் கொண்டு வந்திருக்கும் செய்தி மிக முக்கியமானது, மிக அவசரமானது என்று உமக்குத் தெரியாதா?”

“அந்த ஓலையை என்னிடம் கொடு; நான் கொடுத்து விடுகிறேன்.”

“அது முடியாது.”

“அப்படியானால் கொஞ்சம் பொறுத்திரு, வேறு வழி இல்லை!”

“வேறு வழி இல்லையா?”

“இல்லவே இல்லை!”

வந்தியத்தேவனுடைய உள்ளம் குமுறியது. ஆழ்வார்க்கடியானை இளவரசரிடந்தான் அழைத்துப் போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ‘ஆழ்வார்க்கடியான் அவரிடம் என்ன சொல்கிறான்’ என்பதைச் சேநாதிபதி கவனிக்கச் சொல்லியிருக்கிறார். அது முடியாமற் போய்விடுமே? குதிரைகள் நெருங்கி வந்தன; அவர்கள் இருக்கும் இடத்தைக் கடந்து சென்றன; மின்னல் மின்னும் வேகத்தில் பறந்து சென்றன.

மண்டபத்தில் குதிரைகள் மீது ஆயத்தமாயிருந்த இருவரும் குதிரையின் முகக் கயிற்றை இழுத்துக் குலுக்கிப் புறப்படத் தூண்டினார்கள். அச்சமயத்தில் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. குதிரை மேலிருந்த மனிதனுடைய ஒரு காலை வந்தியத்தேவன் பிடித்து ஒரு எத்து எத்தித் தள்ளினான். அந்த மனிதன் தடால் என்று விழுந்தான். வந்தியத்தேவன் குதிரை மீது தாவி ஏறினான்; குதிரை பறந்தது. தொடர்ந்து ஆழ்வார்க்கடியானுடைய குதிரையும் பறந்தது. கீழே விழுந்த வீரன் கூச்சலிட்டு விட்டு உறையிலிருந்த கத்தியை எடுத்து எறிந்தான். வந்தியத்தேவன் தலை குனிந்து குதிரையின் முதுகோடு ஒட்டிப் படுத்துக் கொண்டான். வீரன் எறிந்த கத்தி வேகமாகச் சென்று ஒரு மரத்தில் ஆழமாய்ப் பாய்ந்தது. குதிரைகள் இரண்டும் காற்றாய்ப் பறந்து சென்றன.

முன்னால் சென்ற மூன்று குதிரைகளையும் பின்தொடர்ந்து ரொம்பவும் நெருங்காமலும், ரொம்பவும் பின் தங்காமலும் இந்த இரண்டு குதிரைகளும் சென்றன. “நல்ல வேலை செய்தாய், தம்பி!” என்று ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனை உற்சாகப்படுத்தினான். ஆனால் வந்தியத்தேவன் மறுமொழி ஒன்றும் கூறவில்லை. இதன் முடிவு என்ன ஆகப் போகிறதோ என்று அவன் உள்ளம் கவலையில் ஆழ்ந்திருந்தது. குதிரைகள் வாயு வேக, மனோ வேகமாய்க் குறுகிய காட்டுப் பாதையில் போய்க்கொண்டிருந்தன.


38. அருள்மொழித்தேவர்

முடிவில்லாத வழியில் குதிரைகள் போய்க் கொண்டிருப்பதாக வந்தியத்தேவனுக்குத் தோன்றியது. இருபுறமும் காடுகள் அடர்ந்திருந்தன. அவற்றுக்குள் பார்த்தால் கன்னங்கரிய பயங்கரமான இருள். எதிரே மூன்று குதிரைகள் போவது சில சமயம் கண்ணுக்கு நிழல் உருவங்களாகத் தெரிந்தது. ஆனால் குதிரைகளின் குளம்புச் சத்தம் மட்டும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.

திடீரென்று வேறு சில சப்தங்கள் கேட்டன. காட்டின் நடுவில் எதிர்பார்க்க முடியாத சப்தங்கள். பல மனிதக் குரல்களின் கோலாகல சப்தம். குதூகலமாக ஆடிப்பாடும் சப்தம். ஆ! அதோ மரங்களுக்கிடையில் வெளிச்சம் தென்படுகிறது. சுளுந்துகளின் வெளிச்சத்தோடு பெரிய காளவாய் போன்ற அடுப்புகள் எரியும் வெளிச்சமும் தெரிகிறது. ஆகா! இந்தக் காட்டின் நடுவே தாவடி போட்டுக் கொண்டு குதூகலமாயிருக்கும் வீரர்கள் யார்? சோழ நாட்டு வீரர்களா? அல்லது பகைவர் படையைச் சேர்ந்த வீரர்களா?

இதைப் பற்றி வந்தியத்தேவன் மிகச் சொற்ப நேரந்தான் சிந்தித்திருப்பான். அந்தச் சிறிய நேரத்தில் முன்னால் போன குதிரைகள் சட்டென்று நின்றதையும் ஒரு குதிரை பளீர் என்று திரும்பியதையும் வந்தியத்தேவன் கவனிக்கவில்லை. திரும்பிய குதிரை முன்னோக்கி வந்து வந்தியத்தேவன் குதிரையை அணுகியது. அதன்மேலிருந்தவன் வந்தியத்தேவன் பக்கம் சட்டென்று சாய்ந்து ஓங்கி ஒரு குத்து விட்டான். அந்தக் குத்தின் அதிர்ச்சியினால் வந்தியத்தேவன் கதி கலங்கித் தடுமாறியபோது அவனுடைய ஒரு முழங்காலைப் பிடித்து ஓங்கித் தள்ளினான். வந்தியத்தேவன் தடால் என்று தரையில் விழுந்தான்.

இதற்குள் அவனைத் தள்ளிய வீரன் குதிரையிலிருந்து கீழே குதித்து வந்தியத்தேவன் அருகில் வந்தான். திக்பிரமை கொண்டவனாய்த் தள்ளாடி எழுந்திருக்க முயன்ற வந்தியத்தேவனுடைய இடையிலிருந்த கத்தியைப் பறித்துத் தூர வீசி எறிந்தான். உடனே வந்தியத்தேவனுக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. ஒரு குதி குதித்து எழுந்து நின்றான். இரண்டு கையையும் இறுக மூடிக் கொண்டு வஜ்ரம் போன்ற முஷ்டியினால் தன்னைத் தள்ளிய ஆளைக் குத்தினான். குத்து வாங்கிக் கொண்டவன் சும்மா இருப்பானா? அவனும் தன் கைவரிசையைக் காட்டினான். இருவருக்குள்ளும் பிரமாதமான துவந்த யுத்தம் நடந்தது.

வந்தியத்தேவனுடன் வந்த ஆழ்வார்க்கடியானும், அவர்களுக்கு முன்னால் வந்த வீரர்களும் அந்த அதிசயமான சண்டையைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சீக்கிரத்தில் காலடிச் சத்தங்கள் கேட்டன. கையில் கொளுத்தப்பட்ட சுளுந்துகளுடன் வீரர்கள் சிலர் மரக்கிளைகளை விலக்கிக்கொண்டு அவ்விடத்திற்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களும் அதிசயத்துடன் அந்தத் துவந்த யுத்தத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கலானார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் சுற்றிலும் ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது.

கடைசியாக வந்தியத்தேவன் கீழே தள்ளப்பட்டான். அவனைத் தள்ளியவீரன் அவன் மார்பின்பேரில் ஏறி உட்கார்ந்து கொண்டு இடையில் சுற்றியிருந்த துணிச் சுருளை அவிழ்த்தான். அதற்குள்ளிருந்த ஓலையைக் கைப்பற்றினான். அதைத் தடுப்பதற்கு வந்தியத்தேவன் ஆனமட்டும் முயன்றும் அவன் முயற்சி பலிக்கவில்லை.

ஓலை அவ்வீரனுடைய கையில் சிக்கியதும் துள்ளிப் பாய்ந்து சுற்றிலும் நின்றவர்கள் பிடித்திருந்த சுளுந்து வெளிச்சத் தண்டை சென்றான். அவன் ஒரு சமிக்ஞை செய்யவும் மற்றும் இரு வீரர்கள் ஓடிவந்து வந்தியத்தேவன் தரையிலிருந்து எழுந்திருக்க முடியாமல் பிடித்துக் கொண்டார்கள்.

வந்தியத்தேவன் சொல்ல முடியாத ஆத்திரத்துடனும் தாபத்துடனும், “பாவி வைஷ்ணவனே! அவனிடமிருந்து அந்த ஓலையைப் பிடுங்கு!” என்று கத்தினான்.

ஆழ்வார்க்கடியான் குதிரையிலிருந்து சாவதானமாக இறங்கி வந்தியத்தேவன் அருகில் சென்று, “அடே அசடே! ஓலை நீ யாருக்குக் கொண்டுவந்தாயோ, அவரிடந்தான் போயிருக்கிறது! ஏன் வீணாகப் புலம்புகிறாய்?” என்றான்.

சுளுந்து வெளிச்சத்தில் ஓலையைப் படித்துக் கொண்டிருந்த வீரனுடைய முகத்தை மற்ற வீரர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே ஒரு மகத்தான குதூகல ஆரவாரம் அவர்களிடமிருந்து எழுந்தது.

“பொன்னியின் செல்வர் வாழ்க! வாழ்க!” “சோழ குலத் தோன்றல் வாழ்க!” என்பன போன்ற கோஷங்கள் எழுந்து அந்த வனப்பிரதேசமெல்லாம் பரவின.

நன்றாகக் குத்தும் அடியும் பட்ட வந்தியத்தேவன் தரையில் உட்கார்ந்தபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘ஆகா! இவர்தானா இளவரசர் அருள்மொழிவர்மர்! இவர் கையிலே தான் எவ்வளவு வலிவு! என்ன விரைவு! குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படவேண்டும் என்பார்களே! குத்துப் பட்டால் இவர் கையினால் அல்லவா குத்துப்பட வேண்டும்.” என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.

அருள்மொழித்தேவர் வந்தியத்தேவனை நோக்கிச் சமீபத்தில் வந்தார்.

“அன்பரே! வருக! வருக! அழகிய இலங்கைத் தீவுக்கு வருக! சோழ நாட்டு வீராதி வீரர்களுடனே சேர்வதற்கு இத்தனை தூரம் கடல் கடந்து வந்தீர் அல்லவா? அப்படி வந்த உமக்கு நான் அளித்த வீர வரவேற்பு திருப்தி அளித்திருக்கிறதா?” என்று இளவரசர் கூறிப் புன்னகை பூத்தார்.


39. வீரத்தோழன்

வனத்தின் மத்தியில் உலர்ந்த குளத்தைச் சுற்றி மரங்கள் வளைவு வரிசையாக வளர்ந்து அதனால் இடைவெளி ஏற்பட்டிருந்த இடத்தில் சுமார் ஆயிரம் சோழ வீரர்கள் தாவடி போட்டிருந்தார்கள். அவர்களுடைய சாப்பாட்டுக்காகப் பெரிய பெரிய கல்லடுப்புகளில் ஜுவாலை வீசிய நெருப்பின் பேரில் பிரம்மாண்டமான தவலைகளில் கூட்டாஞ்சோறு பொங்கிக் கொண்டிருந்தது. சோறு பொங்கி முடியும் வரையில் பொழுது போவதற்காக அவர்கள் ஆடல் பாடல் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள்.

“இளவரசே! எங்களுக்கு முன்னாலேயே இங்கு வந்த பார்த்திபேந்திர பல்லவனை நாங்கள் பார்த்தோம்” என்றான் ஆழ்வார்க்கடியான்.

“ஆம்; அவர் எதற்காக வந்திருப்பார் என்று உன்னால் ஊகித்துச் சொல்ல முடியுமா?”

“நிச்சயமாகவே சொல்ல முடியும். தங்களைக் காஞ்சிக்கு அழைத்து வரும்படியாக ஆதித்த கரிகாலர் அவரை அனுப்பி வைத்திருக்கிறார்.”

“அடடே! உனக்குத் தெரிந்திருக்கிறதே! இதோ உன் சிநேகிதன் இவ்வளவு பத்திரமாக கொண்டுவந்து ஒப்புவித்தானே, இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறதென்றும் உனக்குத் தெரியும் போலிருக்கிறது?”

“தங்களை உடனே பழையாறைக்கு வந்து சேரும்படி தங்கள் தமக்கையார் எழுதியிருக்கிறார்கள். இளவரசே!” இவனை வழியிலெங்கும் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளாதபடி காப்பாற்றிக் கொண்டு வருவதற்கு நான் பட்ட பாட்டைப் புத்தபகவானே அறிவார். அநுராதபுரத்தின் வழியாக வந்திருந்தால் இவன் நிச்சயமாக இங்கு வந்து சேர்ந்திருக்க மாட்டான். வழியில் யாருடனாவது சண்டை பிடித்துச் செத்திருப்பான். அதனாலே காட்டு வழியாக இவனைத் தங்களிடம் பத்திரமாய்க் கொண்டு வந்தேன்!” என்றான்.

“ஓஹோ! அப்படியானால் இவனைப் பத்திரமாகக் கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பதற்காகவே நீ இலங்கைக்கு வந்தாயா, என்ன?”

“இல்லை, ஐயா! என் பங்குக்கு நானும் தங்களுக்கு ஒரு செய்திகொண்டு வந்திருக்கிறேன். முதன் மந்திரி அநிருத்தர் தாங்கள் இலங்கையிலேயே இன்னும் சிறிது காலம் இருப்பது உசிதம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.”

“இப்படி மூன்று மூத்தவர்கள் மூன்று விதமாகச் செய்தி அனுப்பினால் நான் எதையென்று கேட்பது?” என்றார் அருள்மொழிவர்மர்.

இச்சமயத்தில் வந்தியத்தேவன் குறுக்கிட்டு, “இளவரசே! மன்னிக்கவேண்டும்! தாங்கள் கேட்க வேண்டியது தங்கள் தமக்கையாரின் வார்த்தையைத்தான்!” என்றான்.

“ஏன் அவ்விதம் சொல்லுகிறீர்?”

“ஏனெனில், தங்கள் தமக்கையின் வார்த்தைக்கே மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று தங்கள் இருதயம் தங்களுக்குச் சொல்கிறது. அப்படித் தாங்கள் அவர் வார்த்தையைக் கேட்காவிட்டாலும், நான் கேட்டே தீர வேண்டும். தங்களை எப்படியும் அழைத்துக் கொண்டு வரும்படியாக இளைய பிராட்டி எனக்குப் பணித்திருக்கிறார்!” என்றான் வந்தியத்தேவன்.

இளவரசர் வந்தியத்தேவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “இத்தகைய ஒரு வீரத்தோழன் கிடைக்க வேண்டுமேயென்று எத்தனையோ நாளாக நான் தவம் செய்துகொண்டிருந்தேன்!” என்றார்.

மறுநாள் காலையில் சூரியன் உதயமாவதற்குள் அருள்மொழிவர்மர், ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் ஆகிய மூவரும் அநுராதபுரத்துக்குப் புறப்பட்டார்கள். சிறிது தூரம் காட்டுப் பாதையில் வந்த பிறகு இராஜபாட்டையை அடைந்தார்கள். வேறு வீரர்கள் யாரையும் இளவரசர் தம்முடன் மெய்க்காவலுக்கு அழைத்து வராதது வந்தியத்தேவனுக்கு வியப்பை அளித்தது. ஆனால் அன்றைய பிரயாணத்தில் அவனுக்கிருந்த உற்சாகத்தைப் போல் அதற்குமுன் என்றுமிருந்ததில்லை.

இச்சமயத்தில் சாலையில் அவர்களுக்கு எதிர்ப்பக்கத்தில் ஒரு புழுதிப் படலம் தெரிந்தது. பல குதிரைகள் நாலு கால் பாய்ச்சலில் வரும் சத்தமும் கேட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் சிறிய குதிரைப் படை ஒன்று கண்ணுக்குத் தெரிந்தது. குதிரை வீரர்கள் கையில் பிடித்திருந்த வேல் முனைகள் காலை வெய்யிலில் பளபளவென்று ஜொலித்தன. அவர்களுக்கு மத்தியில் புலிக் கொடி பறந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் ஆழ்வார்க்கடியானுடைய கவலை நீங்கியது. அவர்களில் முன்னால் வந்த கட்டியக்காரர்கள் பறையறைந்து அறிவித்தார்கள்.

“ஈழத்துப் போரில் மகிந்தனைப் புறங்கண்ட இலங்கைப் படைகளின் சேநாதிபதி கொடும்பாளூர்ப் பெரிய வேளார்பூதி மகாராஜா விஜயமாகிறார்! பராக்!” என்று ஒரு இடி முழக்கக் குரல் ஒலித்தது.

“பல்லவ குலத் தோன்றல் – வைகைப் போரில் வீர பாண்டியன் தலை கொண்ட வீராதி வீரர் – வடபெண்ணைப் போரில் வேங்கிப் படையை முறியடித்த பராக்கிரம பூபதி – பார்த்திபேந்திர வர்மர் விஜயமாகிறார்! பராக்” என்ற இன்னொரு இடி முழக்கக் குரல் ஒலித்தது.

இப்படிக் கட்டியம் கூறியவர்களுக்குப் பின்னால் சுமார் முப்பது குதிரை வீரர்கள் வந்தார்கள். அவர்களுள் நடுநாயகமாகக் கம்பீரமான வெள்ளைப் புரவிகளின் மீது சேநாதிபதி பெரிய வேளாரும், பார்த்திபேந்திரனும் வீற்றிருந்தார்கள். குதிரை வீரர்களைத் தொடர்ந்து அம்பாரியுடன் ஒரு பெரிய யானை வந்தது. யானை மேல் அம்பாரியிலிருந்து பூங்குழலி கீழே இறங்கினாள்.

இளவரசர் பார்த்திபேந்திர பல்லவரின் சமீபமாகச் சென்று “முக்கியக் காரியமாக இல்லாவிட்டால் தாங்களே புறப்பட்டு வருவீர்களா? இப்போதே செய்தியைத் தெரிவிக்க வேணும்!” என்றார்.

சேனாதிபதி பெரிய வேளார், “நடுச்சாலையில் இத்தனை பேருக்கு நடுவிலே ஒன்றும் பேசமுடியாது. அதோ ஒரு பாழும் மண்டபம் தெரிகிறதே! அங்கே போகலாம்!” என்றார்.

சாலைக்கு அப்பால் கொஞ்ச தூரத்திலிருந்து பாழும் மண்டபத்தை நோக்கி அனைவரும் போனார்கள்.

மேற்கூரையில்லாமல் வேலைப்பாடான கருங்கல் தூண்கள் மட்டும் நின்ற மண்டபத்தை அவர்கள் அடைந்தார்கள். மண்டபத்தின் மத்தியில் ஒரு மேடான பீடமும் இருந்தது. அங்கே சென்று இளவரசரும் சேநாதிபதியும், பார்த்திபேந்திரனும் அமர்ந்தார்கள். வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் சற்றுத் தள்ளி நின்றார்கள். இன்னொரு பக்கத்தில் பூங்குழலி நின்று கொண்டிருந்தாள்.

“தளபதி! தங்களுடைய யோசனை என்ன? சில நாளைக்கு முன்பு முதன் மந்திரி அநிருத்தப் பிரமராயர் வந்திருந்தார். அவர் என் தந்தையின் மதிப்புக்கும் அபிமானத்துக்கும் உரியவர். அவர் என்னை இலங்கையிலேயே சில காலம் இருக்கும்படி யோசனை சொன்னார். தாங்களும் அதை ஆமோதித்தீர்கள். முதன் மந்திரி இதோ நிற்கும் வைஷ்ணவரிடம் அதே யோசனையைத் திரும்பச் சொல்லி அனுப்பியிருக்கிறார். என் தமக்கை இளைய பிராட்டியிடம் எனக்கு எவ்வளவு மதிப்பு உண்டு என்பது தங்களுக்குத் தெரியும். அவர் இட்ட கோட்டை நான் தாண்ட மாட்டேன். இலங்கைக்கு அவர் வரச் சொல்லித்தான் வந்தேன். இளைய பிராட்டி இதோ இந்த வாணர்குலத்து வீரனிடம் ஓலை அனுப்பியிருக்கிறார். ஒரு விதத்தில் என் தமக்கையின் செய்தியும் பார்த்திபேந்திரர் கூறியதை ஒட்டியிருந்தது. ஆனால் உடனே புறப்பட்டுப் பழையாறைக்கு வரும்படி எழுதி அனுப்பியிருக்கிறார். என் தமையனாரோ காஞ்சிக்கு வரும்படி இவரிடம் கூறி அனுப்பியுள்ளார். சேநாதிபதி! தங்களுடைய கருத்து என்ன?” என்றார் இளவரசர்.

“இளவரசே! இன்று காலை வரையில் தாங்கள் இந்த இலங்கைத் தீவிலேயே இருக்கவேண்டும் என்ற கருத்துடனேயே நான் இருந்தேன். ஆனால், இன்று அதிகாலையில், அதோ நிற்கிறாளே, அந்தப் பெண் வந்து ஒரு செய்தி சொன்னாள். அதைக் கேட்டது என் கருத்தை மாற்றிக் கொண்டேன். தாங்கள் உடனே காஞ்சிக்குப் போகவேண்டியது அவசியம் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது!” என்றார் இலங்கைச் சேநாதிபதி.

தூணருகில் நின்று தன்னைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலியின் மீது இளவரசர் தம் பார்வையைச் செலுத்தினார்.

“அந்தப் பெண் என்னதான் செய்தி கொண்டு வந்திருக்கிறாள்?” என்றார்.

“இளவரசே! தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டுவருவதற்காகப் பழுவேட்டரையர்கள் இரண்டு பெரிய மரக்கலங்களையும் அவை நிறையப் போர் வீரர்களையும் அனுப்பியிருக்கிறார்கள். மரக்கலங்கள் தொண்டைமான் ஆற்றுக் கால்வாயில் புகுந்து மறைவான இடத்திலே வந்து நிற்கின்றன!” என்ற சேநாதிபதி தொடர்ந்து பூங்குழலி கூறியதை மேலும் விரிவாகச் சொன்னார்.

சேநாபதி பூதி விக்கரமகேசரி கூறிய செய்தியைக் கேட்டதும் இளவரசரின் முகத்தில் புன்னகை அரும்பியது.

பார்த்திபேந்திரன் கொதித்தெழுந்தான். “சேநாதிபதி! என்ன சொன்னீர்? இது உண்மைதானா? என்னிடம் ஏன் இது வரையில் சொல்லவில்லை? இந்தப் பெண்ணை நீர் நம்முடன் கட்டி இழுத்து வந்ததற்குக் காரணம் இப்போதல்லவா தெரிகிறது? மறுபடியும் கேட்கிறேன்; பழுவேட்டரையர்கள் இளவரசரைச் சிறைப்படுத்தி வரக் கப்பல்களை அனுப்பியிருப்பது உண்மையா?” என்று கேட்டான்.

“ஆம், ஐயா! இந்தப் பெண் கண்ணால் பார்த்ததாகவும், காதால் கேட்டதாகவும் கூறுவதை நம்புவதாயிருந்தால் அது உண்மைதான்!”

“ஆகா! அந்தக் கிழவர், திருக்கோவலூர் மிலாடுடையார், கூறியது உண்மையாயிற்று. பழுவேட்டரையர்களை உள்ளபடி உணர்ந்தவர் அவர்தான்! சேநாதிபதி! இத்தகைய செய்தியை அறிந்த பிறகும் ஏன் சும்மா இருக்கிறீர்? பராந்தக சக்கரவர்த்தியின் குலத்தோன்றலை, சுந்தர சோழரின் செல்வப் புதல்வரை, நாடு நகரமெல்லாம் போற்றும் இளவரசரை இந்த அற்பர்களாகிய பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்தி வர ஆட்களை அனுப்பும்படி ஆகிவிட்டதா? இனியும் என்ன யோசனை? உடனே படைகளுடன் புறப்பட்டுச் சென்று இளவரசரைச் சிறைப்படுத்த வந்தவர்களை அழித்து இந்த இலங்கைத் தீவிலேயே அவர்களுக்குச் சமாதியை எழுப்புவோம்!… பிறகு நாம் போட்ட திட்டத்தின்படி காரியத்தை நடத்துவோம்! கிளம்புங்கள்! இன்னும் ஏன் தயக்கம்?” என்று பார்த்திபேந்திரன் பொரி பொரித்துக் கொட்டினான்.

சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி அவனைப் பார்த்து “பார்த்திபேந்திரா! நீ இப்படித் துடிப்பாய் என்று எண்ணித்தான் நான் முன்னமே இந்தப் பெண் கொண்டு வந்த சேதியை உன்னிடம் சொல்லவில்லை. நன்றாக யோசித்துச் செய்ய வேண்டிய காரியம். அவசரப்படுவதில் பயனில்லை!” என்றார்.

அப்போது இளவரசர், “சேநாதிபதியின் மனத்தில் உள்ளதையும் தெரிந்து கொள்ளலாமே? ஐயா! தாங்கள் எதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்கிறீர்கள்?” என்று எவ்விதப் படபடப்புமின்றி நிதானமாகக் கேட்டார்.

“தங்களைச் சிறைப்படுத்துவதற்கு… இந்த வார்த்தைகளைச் சொல்லவும் என் வாய் கூசுகிறது… ஆனாலும் சொல்ல வேண்டியிருக்கிறது. தங்களைச் சிறைப்படுத்த வந்திருப்பவர்களின் சக்கரவர்த்தியின் கட்டளையோடு வந்திருந்தால் நாம் என்ன செய்வது? அப்போதும் அவர்களை எதிர்த்துப் போரிடுவதா?”

இதைக் கேட்ட பார்த்திபேந்திரன் கடகடவென்று சிரித்து விட்டு, “அழகாயிருக்கிறது, தங்கள் வார்த்தை! சக்கரவர்த்தி சொந்தமாகக் கட்டளை போடும் நிலையில் இருக்கிறாரா? அவரையேதான் பழுவேட்டரையர்கள் சிறையில் வைத்திருக்கிறார்களே!” என்றான்

“பூங்குழலி! நம் சேநாபதியிடம் நீ சில விஷயங்களைச் சொன்னாயாம். தொண்டைமான் நதியில் இரண்டு பெரிய மரக்கலங்கள் வந்து மறைவான இடத்தில் ஒதுங்கியிருப்பதாயும் அவை நிறையப் போர்வீரர்கள் வந்திருப்பதாயும் சொன்னாயாம். அது உண்மைதானே? மரக்கலங்களைப் பார்த்ததும் நீ உன் படகை ஒரு குறுகிய கால்வாயில் விட்டுக் கொண்டு போனாய். கப்பல்கள் போகும் வரையில் காத்திருப்பதற்காக அடர்ந்த காட்டினுள் புகுந்து மறைவான இடத்தில் படுத்துக் கொண்டிருந்தாய். அச்சமயம் கப்பல்களிலிருந்து இறங்கிய வீரர்கள் சிலர் அங்கே வந்தார்கள். நீ படுத்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் அவர்கள் நின்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்க வேண்டும் என்று நீ விரும்பவில்லை. உன் விருப்பமில்லாமலே அவர்கள் பேச்சு உன் காதில் விழுந்தது. நீ கேட்கும்படி நேர்ந்தது. அவர்களுடைய பேச்சைக் கேட்டது அதைப்பற்றி உடனே சேநாதிபதியிடம் எச்சரிக்கை செய்யவேண்டும் என்று உனக்குத் தோன்றியது. வீரர்கள் அப்பால் போன உடனே நீ புறப்பட்டாய். சேநாதிபதி இருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு விரைந்து வந்தாய்! தடைகளைப் பொருட்படுத்தாமல் நீ பிடிவாதம் பிடித்துச் சேநாதிபதியைப் பார்த்துச் சொன்னதே நல்லதாய்ப் போயிற்றுப் பூங்குழலி! சேநாதிபதியிடம் கூறியதை என்னிடமும் ஒருதடவை கூறுவாயா? மரத்தின் மறைவிலிருந்து நீ கேட்டாயே அப்போது அந்த வீரர்கள் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினார்கள்?” என்றார் இளவரசர்.

“அரசே! அதைச் சொல்வதற்கு என் நாகூசுகிறது. தங்களை சிறைப்படுத்திக்கொண்டு போவதற்காக அவர்கள் வந்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். சக்கரவர்த்தியின் கட்டளை என்று பேசிக்கொண்டார்கள். தாங்கள் இந்த நாட்டிலுள்ள புத்தகுருக்களுடன் சேர்ந்து கொண்டு இலங்கை ராஜ்யத்துக்கு மன்னராக முடிசூட்டிக் கொள்ளச் சூழ்ச்சி செய்தீர்களாம்… இவ்விதம் சொன்ன அந்தப் பாவிகளை அங்கேயே கொன்றுவிடவேண்டும் என்று எனக்குக் கோபமாக வந்தது.”

“நல்ல காரியம் செய்ய எத்தனித்தாய்! சக்கரவர்த்தியின் தூதர்களை எந்த விதத்திலும் தடை செய்யக் கூடாது என்று உனக்குத் தெரியாதா…? நல்லது; இன்னும் அவர்கள் முக்கியமான விஷயம் ஏதேனும் சொன்னதாக உனக்கு ஞாபகம் இருக்கிறதா?”

“சேநாதிபதிக்கு அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்கிற விஷயம் தெரியக் கூடாது என்றும், தெரிந்தால் தங்களைத் தப்புவிக்க அவர் பிரயத்தனம் செய்யலாம் என்றும் சொன்னார்கள். ஆகையால் தாங்கள் இருக்குமிடம் தெரிந்து கொண்டு நேரில் தங்களிடம் கட்டளையைக் கொடுத்துக் கையோடு அழைத்துப் போக வேண்டும் என்றும் சொன்னார்கள்…”

“ஆகையால் நீ உடனே சேநாதிபதியைத் தேடிக்கொண்டு புறப்பட்டாயாக்கும். எனக்குப் பெரிய உதவி செய்தாய்.”


40. மந்திராலோசனை

இளவரசர் சேநாதிபதி பூதி விக்கரம கேசரியைப் பார்த்து “ஐயா! பரம்பரையாக எங்கள் குடும்பத்துக்குச் சிநேகிதமான குலத்தின் தலைவர் தாங்கள். என் தந்தையின் உற்ற நண்பர். தங்களை நான் என் தந்தைக்கு இணையாகவே மதித்து வந்திருக்கிறேன். தாங்களும் என்னைத் தங்கள் சொந்தப் புதல்வனாகவே கருதிப் பாராட்டி வந்திருக்கிறீர்கள். ஆகையால் இச்சமயம் என்னுடைய கடமையைச் செய்வதற்குத் தாங்கள் உதவி செய்ய வேண்டும். அதற்குக் குறுக்கே நிற்கக் கூடாது!” என்றார்.

சேநாதிபதி மறுமொழி சொல்வதற்குள் பார்த்திபேந்திரனையும் திரும்பிப் பார்த்து, “ஐயா! தங்களையும் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் என் அருமைத் தமையனாரின் உற்ற நண்பர். என் தமையனாரின் வாக்கைத் தெய்வத்தின் வாக்காக மதித்து நான் போற்றுகிறவன். ஆகையால் தங்களுடைய வார்த்தையையும் மதித்துப் போற்றக் கடமைப்பட்டவன். தங்களைப் பெரிதும் வேண்டிக் கொள்கிறேன். என் கடமையை நான் நிறைவேற்றுவதற்குத் தடை எதுவும் சொல்லக்கூடாது!” என்றார்.

சேநாதிபதியும், பார்த்திபேந்திரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தப் பார்வையின் மூலம் ஒருவருடைய பயத்தை இன்னொருவருக்குத் தெரிவித்துக் கொண்டார்கள்.

சேநாதிபதி இளவரசரைப் பார்த்து, “இளவரசே! தாங்கள் கூறுவது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. தங்களுடைய கடமையைச் செய்யப்போவதாகச் சொல்கிறீர்கள். அப்படியென்றால் என்ன? எந்தக் கடமையை, என்ன மாதிரி செய்யப் போவதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“இச்சமயம் என்னுடைய கடமை ஒன்றே ஒன்றுதான். என் தந்தையின் கட்டளையை நிறைவேற்றி வைக்க வேண்டியதுதான். என்னைச் சிறைப்படுத்திக்கொண்டு வரும்படியான கட்டளையுடன் என் தந்தை ஆட்களை அனுப்பி வைத்திருக்கிறார். என்னை அவர்கள் தேடி அலையும்படியாக ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்? நானே அவர்கள் இருக்குமிடம் சென்று என்னை ஒப்புக் கொடுத்துவிடுவேன். அதுவே இப்போது நான் செய்ய வேண்டிய கடமை…”

“முடியவே முடியாத காரியம் என் உடம்பில் உயிருள்ள வரையில் அதை நான் அநுமதிக்க மாட்டேன் தடுத்தே தீருவேன்!” என்றான் பார்த்திபேந்திரன்.

சேநாதிபதி அவனைப் பார்த்து, “பதறவேண்டாம்; பொறுங்கள்!” என்றார். பின்னர் இளவரசரை நோக்கிக் கூறினார்.

“ஐயா! தங்களுடைய கடமையைப் பற்றிச் சொன்னீர்கள். எனக்கும் ஒரு கடமை இருக்கிறது. அருள் புரிந்து அதைக் கேட்கவேண்டும்.அரண்மனை மாடங்களில் அருமையாக வளர்க்கப்பட்டு வந்த தங்களைச் சென்ற ஆண்டில் தென்திசைப் படைகளின் மாதண்ட நாயகராகச் சக்கரவர்த்தி நியமித்தார். அப்போது என்னைத் தனியாக அழைத்துச் சொன்னார்: ‘இளவரசன் என்னை விட்டுப்பிரிவது என் உயிரே உடலிலிருந்து பிரிவது போலிருக்கிறது. ஆயினும் என்னுடைய ஆசைக்காக அவனை நான் அரண்மனைக்குள்ளேயே வைத்து வளர்க்கக் கூடாது. அவன் வெளியேறிப் போக வேண்டியதுதான்; அண்ணனைப்போல் வீரன் என்று பெயர் எடுக்கவேண்டியதுதான். ஆனால் அவன் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அதே கணத்தில் என் உயிரும் போய்விடும். அவனுக்கு எவ்வித அபாயமும் நேராமல் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு…’ இவ்வாறு சக்கரவர்த்தி எனக்குக் கட்டளையிட்டார். சென்ற ஆண்டில் அவ்வாறு கூறிய சக்கரவர்த்தி இப்போது தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிடுவாரா? அவ்வாறு கட்டளையிடும்படியாகத் தாங்கள் என்ன செய்துவிட்டீர்கள்? இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்றுவதற்குத் தாங்கள் சூழ்ச்சி செய்ததாகச் சொல்வது எவ்வளவு அபத்தம்? இந்த அபவாதத்தை யாராவது நம்ப முடியுமா?…

“சேநாதிபதி! அப்படியானால் என் தந்தையிடம் போவதற்கு நான் ஏன் தயங்கவேண்டும்? அவரிடம் நடந்தது நடந்தபடி சொல்கிறேன். பிறகு சக்கரவர்த்தி என்ன கட்டளை இடுகிறாரோ, அதன்படி நடந்துகொள்வது என் கடமை…”

பார்த்திபேந்திரன் இப்போது அனல் கக்கும் குரலில் கூறினான்: “சேநாதிபதி ஏதேதோ வெறும் பேச்சுப் பேசிக்கொண்டிருக்கிறோம். இனியும் மூடி மறைப்பதில் பயன் ஒன்றுமில்லை. இளவரசரிடம் உண்மையைச் சொல்லியே தீரவேண்டும். தாங்கள் சொல்கிறீர்களா அல்லது நான் சொல்லட்டுமா!”

“நானே சொல்கிறேன்; பொறுங்கள்!” என்றார் சேநாதிபதி. அக்கம் பக்கம் பார்த்துவிட்டுக் கூறினார்: “இளவரசே! தங்களுடைய களங்கமற்ற உள்ளத்தை மாசுபடுத்த வேண்டாம் என்று எண்ணியது பயன்படவில்லை. ஒரு விரஸமான விஷயத்தைப் பற்றித் தங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. பெரிய பழுவேட்டரையர் இந்த முதிய பிராயத்தில் நந்தினி என்னும் பெண்ணை மணம் புரிந்து கொண்டிருப்பது தங்களுக்குத் தெரிந்த விஷயமே. அவள் பெரிய பழுவேட்டரையரை அவள் தன் காலடியில் போட்டு வைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் தன் காலால் இட்ட பணியை இவர் தலையில் ஏந்தி நிறைவேற்றி வைக்கிறார். பழங்குடியில் பிறந்து, பல வீரச் செயல்கள் புரிந்த அந்தப் பெரியவருக்கு விதி வசத்தால் இந்த மாதிரி துர்க்கதி சம்பவித்து விட்டது.”

“சேநாதிபதி! இது நான் கேள்விப்படாதது அல்லவே? சோழ தேசத்தில் நாடு நகரமெல்லாம் பேசிக்கொள்ளும் விஷயந்தானே?” என்றார் இளவரசர்.

“இளவரசே! சக்கரவர்த்தியின் சுதந்திரத்துக்கு மட்டுமின்றி அவருடைய உயிருக்கே அபாயம் வந்துவிடுமோ என்றுதான் அஞ்சுகிறோம். நந்தினியைப் பற்றிய முழு உண்மையை நேற்றுவரை நானே அறிந்து கொள்ளவில்லை. நேற்றிரவுதான் பார்த்திபேந்திரன் மூலமாகத் தெரிந்து கொண்டேன். அந்தப் பயங்கரமான விஷயத்தைத் தாங்களும் தெரிந்து கொள்வது அவசியம்.”

“மூன்று வருஷத்துக்கு முன்னால் மதுரைக்கு அருகில் வீர பாண்டியனோடு இறுதி யுத்தம் நடந்தது அல்லவா? அப்போது தங்கள் தமையனார் கரிகாலரும் இதோ உள்ள பார்த்திபேந்திரரும் நானும் கலந்தாலோசித்து ஒவ்வொரு காரியத்தையும் செய்து வந்தோம். பாண்டியனுடைய சைனியங்கள் அடியோடு நிர்மூலமாயின. வீரபாண்டியன் முன்னொரு தடவை பாலைவனத்தில் ஓடி ஒளிந்ததுபோல் இப்போதும் ஓடித் தப்பிக்க முயன்றான். அதற்கு இடம் கொடுக்கக் கூடாதென்று நாங்கள் மூவரும் அவனை எப்படியாவது கைப்பற்றத் தீர்மானித்துப் பெரு முயற்சி செய்தோம். இந்தத் தடவை வீர பாண்டியனுடைய தலையைக் கொண்டு போகாமல் தஞ்சாவூருக்குத் திரும்புவதில்லை என்று நாங்கள் மூவரும் சபதம் செய்திருந்தோம். ஆகையால் வேறு யாரையும் நம்புவதில்லையென்று நாங்களே அவனைத் தொடர்ந்து சென்றோம். கடைசியாக ஒரு கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த குடிசையில் அவன் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்தோம். குடிசைக்கு வெளியில் எங்களைக் காவலுக்கு நிறுத்தி வைத்து விட்டுத் தங்கள் அண்ணன் கரிகாலர்தான் உள்ளே நுழைந்தார். வீர பாண்டியனைக் கொன்று அவன் தலையை எடுத்து வந்தார். நாங்களும் எங்கள் காரியம் முடிந்துவிட்டதென்று குதூகலமாகத் திரும்பிச் சென்றோம்.”

“ஆனால் அந்தக் குடிசைக்குள்ளே ஒரு சிறிய நாடகம் நடந்ததென்பது எங்களுக்குத் தெரியாது. வீர பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த பெண் ஒருத்தி குறுக்கே நின்று தடுத்து உயிர்ப்பிச்சை கேட்டாள். கரிகாலர் அவளை உதைத்துத் தள்ளிவிட்டு வீரபாண்டியனுடைய தலையைக் கொய்து வெளியே எடுத்து வந்தார். இளவரசே! அவ்விதம் சோழ குலத்தின் ஜன்ம சத்துருவான வீர பாண்டியனைக் காப்பாற்ற முயன்றவள்தான் நந்தினி! அவள்தான் பிற்பாடு எழுபது வயதுக் கிழவரை மணந்து தஞ்சாவூருக்கு வந்து, ‘பழுவூர் இளையராணி’ யாக விளங்குகிறாள்! அவள் எதற்காக, என்ன நோக்கத்துடன் வந்திருப்பாள் என்பதை நாம் ஊகிக்கலாம் அல்லவா? வீர பாண்டியனுக்காகப் பழிக்குப் பழி வாங்கத்தான் வந்திருக்கிறாள். சோழ குலத்தை அடியோடு நிர்மூலமாக்கி விடுவதற்காக வந்திருக்கிறாள். சோழ குலத்தைப் பூண்டோடு அழித்துவிடப் பயங்கர சபதம் எடுத்திருக்கும் கூட்டத்தைப்பற்றி அதோ நிற்கும் வைஷ்ணவன் சாட்சி சொல்வான். அவர்களுக்கு அவசியமான பணத்தையெல்லாம் நந்தினி தான் கொடுக்கிறாள். இளவரசே! துரதிஷ்ட வசமாக நம் சக்கரவர்த்திப் பெருமானும் அந்தப் பாதகியின் வலையில் விழுந்து விட்டதாகக் காண்கிறது. மதுராந்தகத் தேவனுக்குப் பட்டம் கட்டுவது பற்றிச் சக்கரவர்த்தியே யோசித்து வருவதாகத் தெரிகிறது. ஆகையால் சக்கரவர்த்தியின் கட்டளையென்று கருதித் தாங்கள் தஞ்சைக்குப் போவதற்கு இது தருணமல்ல…”

“சேநாதிபதி! தாங்கள் கூறிய செய்திகள் எனக்கு மிக்க வியப்பை உண்டு பண்ணியிருக்கின்றன. ஆயினும் அச்செய்திகளில் நான் செய்த முடிவுதான் உறுதிப்படுகிறது. என் தந்தையை அவ்வளவு பயங்கரமான அபாயங்கள் சூழ்ந்திருக்கும்போது நான் இருக்க வேண்டிய இடம் அவர் அருகிலேதான். இலங்கை அரசு எனக்கு என்னத்திற்கு? அல்லது இந்த உயிர்தான் என்னத்திற்கு? இனி யோசனை ஒன்றுமே தேவையில்லை. என்னைத் தடை செய்வதற்கு யாரும் முயலவேண்டாம்!” என்று இளவரசர் கம்பீரமாகக் கூறினார். பிறகு, சற்றுத் தூரத்தில் தூணில் சாய்ந்து கொண்டு தம்மைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த பூங்குழலியின் மீது அவர் கண்கள் சென்றன.

“பெண்ணே! சற்று இப்படி அருகில் வா!” என்றார்.

பூங்குழலி நெருங்கி வந்தாள்.

“பெண்ணே! நீ கொண்டுவந்த செய்தியின் மூலம் எனக்குப் பெரிய உதவி செய்தாய். இன்னும் ஓர் உபகாரம் எனக்கு நீ செய்ய வேண்டும். செய்வாயா?” என்று கேட்டார்.

“இளவரசே! தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றக் காத்திருக்கிறேன்!” என்றாள் பூங்குழலி.

“பெண்ணே! என்னைத் தேடிக் கொண்டு இரண்டு மரக்கலங்கள் தொண்டைமான் ஆற்று முகத்துவாரத்தின் அருகில் காத்திருக்கின்றன என்று சொன்னாய் அல்லவா? அந்த இடத்துக்கு நான் அதி சீக்கிரமாகப் போய்ச் சேரவேண்டும். எனக்கு வழிகாட்டி அழைத்துக்கொண்டு போவாயா?”

எந்த அபாயத்திலிருந்து இளவரசரைத் தப்புவிக்கலாம் என்ற ஆசையுடன் பூங்குழலி அவசர அவசரமாக ஓடி வந்தாளோ, அந்த அபாயத்தின் வாயிலிலேயே கொண்டு சேர்க்கும்படி இளவரசர் இப்போது கேட்டுக்கொள்கிறார்!

“பூங்குழலி! ஏன் தயங்குகிறாய்? எனக்கு இந்த உதவி நீ செய்ய மாட்டாயா? நானே வழி கண்டுபிடித்துக் கொண்டு போக வேண்டியதுதானா?” என்று இளவரசர் கூறியது அவளுடைய மனம் திடமடையக் காரணமாயிற்று.

“இளவரசே! வழிகாட்ட நான் வருகிறேன்!” என்றாள்.

சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி அப்போது தம் தொண்டையைக் கனைத்துக் கொண்ட சப்தம் பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னால் பூமியின் கர்ப்பத்திலிருந்து எழுகின்ற பயங்கரத் தொனியை நிகர்த்திருந்தது. அவர் ஓர் அடி முன்னால் வந்து கூறினார்:-

“இளவரசே! தங்கள் விருப்பத்துக்குக் குறுக்கே நான் நிற்கமாட்டேன். ஆனாலும் என் வேண்டுகோள் ஒன்றுக்குச் செவி சாய்க்க வேணும். தங்களைச் சிறைப்படுத்த வந்திருப்பவர்களிடம் தங்களை ஒப்படைக்கும் வரையில் தங்களைப் பாதுகாப்பது என் பொறுப்பு. என் மனத்தில் உள்ளதைச் சொல்வதற்காக மன்னியுங்கள். இந்தப் பெண்ணின் பேரிலேயே எனக்குக் கொஞ்சம் சந்தேகமுண்டு. கொலைகாரர்களுக்கு இவளும் ஒருவேளை உடந்தையாயிருக்கலாம் அல்லவா? மரக்கலங்களில் தங்களைச் சிறைப்படுத்தி அழைத்துப்போக வந்திருக்கிறார்கள் என்பதே இவளுடைய கற்பனையாயிருக்கலாம் அல்லவா? ஏன் இருக்கக் கூடாது? இந்தப் பெண் தாராளமாக வழி காட்டிக் கொண்டு வரட்டும். நம்முடைய யானை மேல் ஏறிக்கொண்டு முன்னால் செல்லட்டும். ஆனால் தங்களுடன் நானும் தொண்டைமான் ஆற்றில் உள்ள கப்பல்களைக் காணும் வரையில் வந்தே தீருவேன்! அது என்னுடைய கடமை!”

சேநாதிபதி இந்தப் பேச்சைப் புன்னகை பூத்த முகத்துடன் கேட்டுக்கொண்டு நின்ற இளவரசர், “அப்படியேயாகட்டும்! தங்களுடைய கடமையை நிறைவேற்றுவதற்கு நானும் குறுக்கே நிற்கவில்லை!” என்றார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *