சில்லறைக் கடன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 26, 2021
பார்வையிட்டோர்: 1,800 
 

கொஞ்ச நாளைக்கு முன், பெங்களூருக்குப் போகும் நண்பர் ஒருவரை வழியனுப்ப ஸ்டேஷனுக்குப் போயிருந் தேன். அப்போது என் நண்பருக்குத் தெரிந்த இன்னொருவரும் அங்கே வந்திருந்தார். அவரும் வழி யனுப்பத்தான் வந்தார் போலிருக்கிறது. வண்டி நகர்ந் தது. நான் அவசரமாக வீட்டுக்கு வந்துகொண்டிருந் தேன்.

அச்சமயம், அந்தப் புதிய மனிதர் என்னைப் பார்த்து, “சார், உங்கள் பெயர் …?” என்று இழுத்தார். பெயரைத் தெரிவித்தேன்.

“உத்தியோகம்…..?” என்றார். அதையும் சொன் னேன். பிறகு, அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

மறுநாள், நான் ஆபீஸில் வேலை பார்த்துக்கொண் டிருந்தபோது, அதே மனிதர் அங்கே வந்துவிட்டார். பெங்களூர் சென்ற நண்பரைப் பற்றியும், சிறிது உலக விஷயங்களைப்பற்றியும் பேசிக்கொண்டே வந்தார். பின்பு , “போய் வருகிறேன்” என்று புறப்பட்டார். வந்த காரியத்தைச் சொல்லாமல் போகிறாரே என்று நினைத்து “என்ன காரியமாக வந்தார்’ எனக் கேட்டேன்.

“ஒன்றுமில்லை. தங்களையும் இந்த ஆபீஸையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணம் தான்!” என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டார். சிறிது தூரம் போனதும் திரும்பி வந்து, “மிஸ்டர்.. ஒரு விஷய மல்லவா? எனக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ஒரு மணியார்டர் வரும். வந்ததும் தந்துவிடுகிறேன்… ஐந்து ரூபாய் இருந்தால் தயவு செய்து கொடுங்கள்” என்றார்.

இந்த மாதிரி கடன் வாங்க வருபவர், பேச்சிலே கடன் வாங்க வந்ததை மறந்தது போலவும், விடை பெற்றுச் சென்ற பிறகே அந்த ஞாபகம் வந்தது போலவும், பாவனை செய்து பேசுவது நல்ல சாமர்த்திய மல்லவா? இதுதான் கடன் வாங்கும் கலை’ என நினைக்க வேண்டி யிருக்கிறது.

கையில் பணமில்லை என்று நான் எவ்வளவோ சொல்லியும், அந்த நண்பர் என்னை விட்டபாடில்லை. பெங்களூர் சென்ற நண்பர் தம்மிடம் எவ்வளவு சரசமா யிருந்தார் என்பதையும், எப்படி நாணயமாக ஒருவருக் கொருவர் தாங்கள் இருவரும் நூறு, ஐம்பது கைமாற்று வாங்கிக் கொடுத்துக்கொண்டார்கள் என்பதைப்பற்றி யெல்லாம் அளந்து கொண்டே யிருந்தார். தப்ப வழி மில்லாததால், ஐந்து ரூபாய் இல்லையென்றும், மூன்று ரூபாய் வேண்டுமானால் தரமுடியும் என்றும் அவரிடம் சொன்னேன். கிடைத்த வரையில் சரி என்று, அதை அவர் வாங்கிச் சென்றார். நாலைந்து நாட்களுக்குள் திருப் பித் தருவதாகவே, அவர் மிக்க உறுதியாகச் சொன்னார். வருஷம் இரண்டாகிவிட்டது. பணம் வந்தபாடில்லை.

இன்னொரு மனிதர் , ஒருநாள் என்னைப் பார்க்க வந்தார். அவர் என் இளமைப் பருவ சிநேகிதர். சிறு வயதில் நடந்த சம்பவங்களைப்பற்றி நான் அவரிடம் பேசலாமென நினைத்தேன். ஆனால், அவர் எனது எண் ணத்தில் மண்ணைப் போட்டுவிட்டார்!

தம் சொந்த ஊருக்கு அவசரமாக மறுநாளே போக வேண்டுமென்றும், ரூபாய் இருபது வேண்டு மென்றும் சொன்னார். எல்லோரிடமும் சொல்வது போலவே தற்சமயம் பணமில்லையே!’ என்ற பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்தேன். ஆனால், அவர் தமக் குப் பட்டணத்தில் யாரையும் தெரியாதென்றும், மறு மாதம் சம்பளம் வாங்கியவுடன் தருவதாகவும், ‘நீர் இரங் கீர் எனில் புகலேது?’ என்று ஆரம்பித்துவிட்டார். எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில், ஒரு வாறாக மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, வழக்கப்படி தொகையில் பேரம் செய்யத் தொடங்கினேன். பத்து ரூபாய் தருவதாகச் சொன்னேன். வட்டி மிச்சம் பார்க்க வேண்டாமென்றும், வட்டி வேண்டுமானாலும் சேர்த்துத் தருவதாகவும் அவர் சொன்னார். ஒரு மணி நேரம் பேசி னோம். முடிவில் பதினைந்து ரூபாய்க்கு இணங்கினார். அதைக் கொடுத்தனுப்பினேன். மாதம் ஒன்றல்ல; மூன்று போய்விட்டன. ஆளையோ, பணத்தையோ பார்க்க முடியவில்லை .

ஒருநாள் இதற்கென்றே புறப்பட்டு மாம்பலத் துக்குச் சென்றேன். அங்கேதான் அவர் வசிக்கிறார். ஆளைக் கண்டுபிடித்துவிட்டேன், அவருடைய வீட்டு வாசலில்.

உடனே பணத்தைப்பற்றி கேட்கத் தைரிய மில்லை. அவரும் என்னுடன் வெகு கலகலப்பாகப் பல விஷயங்களைப்பற்றிப் (பணவிஷயம் தவிர) பேசிக் கொண்டே வந்தார். சிறிது தூரம் நடந்தோம். பக்கத்தி விருந்த கிளப்பில் பலகாரம் சாப்பிடத்தான் அவர் அழைத்து வந்திருக்கிறார். இது எனக்குத் தெரி யாது.

ஹோட்டலுக்குப் பக்கத்தில் வந்தவுடன், சாப்பிடக் கூப்பிட்டார். நான் “எனக்குப் பசிக்கவில்லை” என்று சொன்னேன். பலகாரத்தைக் கொடுத்து, பணத்துக்கு நாமம் போட்டுவிடுவாரோ என்று எனக்குப் பயம். அவர் என்னைப் பிடித்து இழுக்க, நான் வரமாட்டேன் என்று மறுக்க, இப்படியே ஐந்து நிமிஷ நேரம் மல்லுக் கட்டு நடந்து கொண் டிருந்தது.

‘ஓஹோ, இவர் காபி சாப்பிட்டுவிட்டுப் பணம் கொடுக்காது வந்துவிட்டார் போலிருக்கு, அதுதான் கிளப்பிலுள்ள ஆள் வந்து இவரைப் பிடித்து இழுக் கிறான்,’ என்று பார்ப்பவர்கள் நினைத்துவிடுவார்களோ என்று எண்ணியே, கடைசியாக உள்ளே போய்ச் சேர்ந் தேன். சாப்பிடும் பொழுதெல்லாம் என் மனம் சரியான நிலைமையில் இல்லை; ‘பதினைந்து ரூபாய்! பதினைந்து ரூபாய்!’ என்ற ஜபத்திலேயே ஈடுபட்டிருந்தது.

பில்லுக்குப் பணம் கொடுக்கும் போது கூட, நான் முந்திக்கொள்ளப் பார்த்தேன். ஆனால், அவர் விட்ட பாடில்லை.

பிறகு, இருவரும் பக்கத்திலிருந்த பார்க் கில் புகுந் தோம். யுத்த விமரிசனம் செய்துகொண்டே வந்தார், நண்பர். எனக்கு ஒன்றும் ஏறவில்லை. நேரம் ஆகிக் கொண்டே யிருந்தது. வீடு திரும்ப வேண்டுமென்று தோன்றியது. ஆனால், வந்த காரியம்? கேட்டுவிடு வோம் என்ற எண்ணம்.

ஆனால், முன்பின் அறியாத ஒரு பெண்மணியைப் பார்த்து, ஒரு வாலிபன், கரும்பே, உன்னை …. உன்னை நான் ….. காதலிக்கிறேன் ……….” என்று தைரியமாகச் சொன்னாலும் சொல்லிவிடுவான் போலிருக்கிறது; பண விஷயமாக அவரிடம் கேட்க என்னால் முடியவில்லை. எப்படியிருந்தாலும் கேட்டுத்தானே ஆகவேண்டும்? தொண்டையைக் கனைத்துக் கொண்டு, கடைசியில் கேட்டேவிட்டேன்.

அவரோ துளியும் பதருமல், ”ஆமாம். அது விஷய மாகத்தான் சொல்லலா மென்றிருந்தேன். கையிலிருந்த பணமெல்லாம் ஒரு வழியாகச் செலவழிந்துவிட்டது. அடுத்த மாசம் நானே கொண்டுவந்து தருகிறேன். உங்களுக்குக் கவலையே வேண்டாம்” என்று பஞ்சப் பாட்டுப் பாடினார். என்ன செய்வது? கடன் கொடுத் தோம், பொறுத்திருப்போம், கட்டாயம் வரும்’ என்று எண்ணிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். எத்த னையோ மாதங்கள் ஆயின. தவணைகள் சென்றன.

வேறொரு நண்பர், கடன் வாங்கிவிட்டு, ஆறு மாடி கள் உள்ள ஒரு கட்டடத்தில், ஆறாவது மாடியில் ரூம்’ எடுத்துக்கொண்டு இருந்துவிட்டார். அந்த வீதி வழி யாகப் போக நேரும்போதெல்லாம், அவரைப் பார்த்துக் கொடுத்த பணத்தைக் கேட்க வேண்டும் என்று என் மனம் தூண்டும்.

ஆனால், எப்படி இந்த ஆறு மாடிகளையும் தாண்டிச் செல்வது? அப்படிப் போனாலும் அவர் இருப்பாரோ, இருக்க மாட்டாரோ? இருந்தாலும் பணம் தருவாரோ, தவணை கூறுவாரோ? என்றெல்லாம் சந்தேகங்கள் எழும்பும். நேராக நடந்துவிடுவேன்.

ஆனாலும், அவரை ஒருநாள் தற்செயலாக வீதியில் பார்த்துப் பிடித்துவிட்டேன். என்னைக் கண்டதும் அவர் ஒருவாறு சமாளிக்க எண்ணி , ”என்ன சார், சௌக்கியமா?” என்றார்.

“சௌக்கிய மென்ன? எல்லாம் கிராக்கிதான்.”

“இல்லை, ரொம்ப உடைந்து போனீர்களே என்று தான் கேட்டேன்.”

“என்ன, கண்ணாடியா உடைந்து போவதற்கு?’

“அடடா, இளைத்துப் போனீர்களே என்றல்லவா கேட்கிறேன்.”

‘என்ன, மரமா இழைப்பதற்கு?” என்று கூறி விட்டு, உம்மைப் போல் நாலு பேரிடம் கடன் கொடுத் தால் இளைத்தும் போவேன்; உடைந்து கூடப் போக வேண்டியதுதான்,” என்று சொல்ல எண்ணினேன். ஆனால், என்னவோ நேரே சொல்ல மனம் வரவில்லை.

இந்தச் சில்லறைக் கடன் விஷயமே இப்படித்தான். யாராரையோ சொல்வானேன்? என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். வாங்கின பணத்தைக் கொடுப்ப தென்றால், மிக்க கஷ்டமாகத்தானிருக்கிறது. வாங்கின பணமாவது அவர்கள் கொடுத்த பணம்தான் அன்றே செலவழிந்துவிட்டதே . இன்று நம் கையிலுள்ள பணம் நாம் உழைத்துச் சம்பாதித்ததல்லவா? இதை எப்படிக் கொடுப்பது?

மாம்பலத்து நண்பரைப்பற்றிச் சொன்னேனே, அவர் பணம் இன்னமும் எனக்குத் திரும்பி வரவில்லை. நேற்று, மறுபடியும் அவரைப் பணம் கேட்கச் சென்றிருந் தேன். அவரோடு பேசிக்கொண்டே யிருக்கையில், இரு வருக்கும் தெரிந்த மூன்றாவது நண்பர் ஒருவர் அங்கே வந்து கொண்டிருந்தார். அவர் தலையைக் கண்டதும், நண்பரைப் பணம் கேட்காமலே, நான் திரும்பி வந்து விட்டேன். காரணம், வேறு ஒன்றுமில்லை. அந்த மூன்றாவது நபர் எனக்கு ஒரு முப்பது ரூபாய் கைமாற் றுக்கொடுத்து இரண்டு வருஷங்கள் தாம் ஆகின்றன. அதை எங்கே கேட்டுவிடப்போகிறாரோ என்ற பயம்

தான்.

மொத்தத்தில், இந்தச் சில்லறைக் கடனே வாங்கப் படாது; வாங்கினாலும் திருப்பிக் கொடுக்கப்படாது. என் னைக் கேட்டால், சில்லறைக் கடன் வாங்குபவனைவிட , கொடுப்பவன் பாடுதான் நிரம்பத் திண்டாட்டமாகும்.

“கடன் கொண்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று இராமாயணத்தில் இருக் கிறதே, அதில் கொண்டான்’ என்பது இடைச் செருக லாயிருக்கும்; ‘கொடுத்தான்’ என்பதுதான் சரி’ என் றாலோ, ”அந்தப் பாட்டே இடைச் செருகல்தான், ஐயா” என்று மண்டையிலே அடிக்கிறார்கள். எது எப்படி யிருந்தால் என்ன; அந்தப் புலவர் மட்டும் இந்த அற்புத நாகரிக உலகில் இருந்தால் ……… இருந்தால் என்ன? அவருடன் நான் சண்டைக்குப் போய்விடுவேன் என்று நினையாதீர்கள். இருந்தாரானால், கட்டாயம், ‘கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்றுதான் அவர் பாடியிருப்பார், அவர் பாடாவிட்டால், அவரிடம் ஓர் ஐந்து ரூபாய், நான் கடன் வாங்கியிருப்பேன். பிறகுமா அப்படிப் பாடாமல் போய்விடுவார்?

– வாழ்க்கை விநோதம்(நகைச்சுவைக் கட்டுரைகள்), நான்காம் பதிப்பு : நவம்பர், 1965., பழனியப்பா பிரதர்ஸ் சென்னை -14

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)