இனி நான் மனைவி மட்டுமே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2023
பார்வையிட்டோர்: 10,960 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வாழ்க்கை என்பது இது மட்டுமல்ல. இதற்கப்பாலும் சில பந்தம், பாசம், கடமைகள் இருக்கின்றன. அது கூடவா உங்களுக்கு நினைவில்லாமல் போய்விட்டது? அப்பப்பா! இது என்ன உடம்போ தெரியவில்லை. என்னால் முடியாது. இரண்டு நாட்களாக இடுப்பு வலி உயிர் போகிறது. குழந்தைக்கு வேறு உடம்பு சுகமில்லை. கிளினிக்கிலிருந்து வரும்போதே இந்த ஞாபகத்தோடுதான் வருவீர்கள் போலிருக்கிறது? தயவு செய்து பேசாமல் தூங்குங்கள்,” என்றபடி, தரையில் பர்மா பாயைப் போட்டு, ஆறு மாதமே ஆன இரண்டாவது குழந்தையை அணைத்தபடி திரும்பிப் படுத்துவிட்டாள் பிரேமா.

“இதோ பார், என்ன இப்போது? மனிதனுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்கிறது? கிளினிக்கில் நோயாளிகள் பன்னிரண்டு மணி நேரம் உயிரை வாங்கிவிடுகிறார்கள்! மாதம் ஒரு ஆங்கிலப் படம்கூடப் பார்க்க  முடிவதில்லை. இதிலேயாவது நீ கொஞ்சம் இரக்கம் காட்டக்கூடாதா?” என்றபடி, கட்டிலின் மேற்பகுதியில் சாய்ந்து, அவளைக் கெஞ்சினான் நடன சுந்தரம். 

அவனை சுருக்கமாக ‘நடனம்’ என்று அழைப்பார்கள். 

“இதிலே இரக்கமென்ன இரக்கம்? இதுவென்ன புண்ணியமா, புருஷார்த்தமா? என்னால் முடியவில்லை. இல்லையென்றால் இப்படிச் சொல்வேனா? என் ராஜா அல்லவா…! இன்றைக்கு மட்டும் தூங்குங்கள். நாளை மாலை நன்றாக வெந்நீர் வைத்துக் குளித்தால் உடம்பு வலி தீர்ந்துவிடும். நான் உங்களோடு இருப்பவள்தானே, ஓடியா போகப்போகிறேன்…?” என்று சுதி இறங்கிப் பேசினாள் பிரேமா. 

நடனம், ‘”சரி,” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்தானே தவிர, அவனுக்குத் தூக்கம் வரவில்லை. 

இரவு இரண்டு மணிக்கெல்லாம், “பிரேமா, பிரேமா!” என்றான் அவன். ஒரு ‘ம்’ கூடச் சொல்லாமல் தூங்கிவிட்டாள். நடனமும் ஒரு பெருமூச்சோடு தூங்கிவிட்டான். 

காதல் என்பது உலகம் தோன்றியபோதே தோன்றிவிட்டதாம் ஆனால், நவீன உலகத்தில் அது விசுரூபமெடுத்து நிற்கிறது. பதினாறு வயதைத் தாண்டுவதற்கு முன்பே ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்ச்சி தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. 

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பெண்கள் பதினெட்டு வயதுக்கு மேலேதான் ருதுவானார்கள். அந்நாளில் கல்யாண வயது என்பது, சராசரியாக இருபத்து மூன்று வயதாகத்தான் இருந்தது. ‘பழங்காலம். பழங்காலம்’ என்கிறோமோ அக்காலத்தில், எல்லாமே ஒரு கட்டு கோப்புக்குள் அடங்கி இருந்தன. கணவனும் மனைவியும் ஒரே படுக்கையில் படுத்துத் தூங்குவதை உற்றார் உறவினர்கள் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அந்தக் காலத்து, பிரதிநிதிகளல்லவே நடனமும், பிரேமாவும். 

இருவருமே மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள். நடனம் ஒரு ஜாதி, பிரேமா ஒரு ஜாதிதான். ஏதே கல்லூரிப் படிப்பில் மூழ்கிவிட்டாலே சீர்திருத்தவாதிகளுக்கு இல்லாத வேகம் மாணவ மாணவிகளுக்கு வந்துவிடுகிறது. அவர்களும் உயர்நிலைப்பள்ளி இறுதியாண்டு வரையில் தலைவன் தலைவி இலக்கியங்களைப் படித்தவர்கள்தானே? அதிலும் ஓர் இளைஞனும் இளம் பெண்ணும் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்து விட்டால் ஒரு சுயேச்சையான எண்ணம் உதயமாகிவிடுகிறது. 

கட்டுப்பாடான சமூக அமைப்பை ஓரளவுக்குக் கல்லூரி வாழ்க்கை தகர்த்து விடுகிறது. எல்லாருமே அப்படியல்ல; சிலரைப் பொறுத்தவரை இதுதான் உண்மை. 

பிரேமாவும், நடனமும் மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவனும் மாணவியும் போலத்தான் ஆரம்ப காலங்களில் நடந்து கொண்டார்கள். 

அங்கே மூன்றாவது ஆண்டு படிக்கும்போது, படிப்புக்குத் தேவையான சில பொருட்களை அவர்கள் பரிமாறிக்கொள்ள நேர்ந்தது. அப்படியே அந்தப் பொருட்களுக்குள் காதல் கடிதங்களும் பரிமாறப் பட்டன. 

திருத்தணியைச் சேர்ந்த நடனசுந்தரம், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிரேமாவிடம் உயிரையே வைத்திருந்தான்: ஒரு சில மாணவர்களைப்போல அவன் போதைப் பொருள்கள் எதற்கும் அடிமையானதில்லை. அவனுக்குப் போதையேற்றியது பிரேமாவின் குறுகுறுத்த பார்வையே. 

அப்பா சிங்கப்பூரில் வாங்கி வந்த பறவைகள் படம் போட்ட நான்கு வர்ணப் புடவையும், சிவப்பு உள்ளே பிராவும் ஜாக்கெட்டும், அணிந்துகொண்டு, கழுத்தில் ஒற்றை வடச் சங்கிலி போட்டபடி பிரேமா நடந்து வருவதில் மற்றும் சில மாணவர்களுக்குக்கூட மயக்கம் இருந்தது. அவள் கழுத்துக்கு மட்டும் ஸ்டெதாஸ் கோப் ஏனோ அவ்வளவு அழகாக இருந்தது. இடது கையில் ஒரு சிறு ரிஸ்ட் வாட்ச். அதையும் வெள்ளிச் சங்கிலியில் கட்டியிருப்பாள். நாகரிகப் பெண்களுக்கு இல்லாத பழக்கமாகக் காலில் கொலுசு போட்டிருப்பாள். நடனத்தை உண்மையாகவே காதலித்தாள். நடனத்தின் நடத்தையே அவளைப் பெரிதும் கவர்ந்தது. நடனத்துக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் கூடக் கிடையாது. 

வகை வகையான இருநூற்றைம்பது பெண்கள் உள்ள இடத்தில் அவன் தன்னைக் காதலிக்கிறான் என்பதே அவளுக்குப் பெருமையாக இருந்தது. 

விடுமுறையில் ஊருக்குப் போகும்போதுகூட நடனமே கொண்டு போய் அவளைக் கிருஷ்ணகிரியில் விட்டு விட்டுப் போவான். அப்போதெல்லாம் ஒரு குறும்புத்தனம் சேட்டைகூட இருக்காது. 

பிரேமாவின் பெற்றோருக்கும் அவனை மிகவும் பிடித்திருந்தது. நடனம் தன் அண்ணனின் ஆதரவில் படித்தவன். அவனுக்குப் பெற்றோர் கிடையாது. 

கல்லூரிப் படிப்பு முடியும் வரை அவர்கள் நண்பர்கள் போலவே தான் பழகினார்கள். வேறு வகையான உறவுகள் அவர்களுக்குள் தோன்றவே இல்லை. தொட்டான், துவண்டாள். கட்டிப் பிடித்தான், முத்தமிட்டான் என்ற கதையெல்லாம் கிடையாது. 

ஆனால் இந்தக் கட்டுப்பாட்டைத் திருமணம் தகர்த்தெறிந்தது. 

நடனம் எந்தப் பெண்ணையும் தொட்டறியாதவன். ஆகையால் உடல் உறவில் அவனுக்கு ஆசையும் சபலமும் அதிகமாக இருந்தன.  

அவர்களுடைய திருமணத்திற்கு யாரும் குறுக்கே நிற்கவில்லை. இரண்டு டாக்டர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் ஜாதி மதத்தை யார் பார்க்கிறார்கள்? அங்கே ஜாதகப் பொருத்தம்கூடப் பார்க்கப்படவில்லை. 

பழங்காலங்களில் உடற் பொருத்தம் பார்ப்பார்கள். அதுவும் பார்க்கப்படவில்லை. மனது பொருந்தி விட்டது என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. 

ஆனால் பிரேமா மானசீகமான நட்பையும், காதலுறவையுமே பெரிதாக மதிப்பவளாக இருந்தாள். உடலுறவில் அவளுக்குக் குறைந்தபட்ச ஆசையே இருந்தது. மருத்துவத்தில் பல துறையிலும் முன்னேற வேண்டுமென்ற அக்கறை இருந்தது: 

இரண்டு பேரும் ஹவுஸ் சர்ஜன்களாகப் பணிபுரிய ஆரம்பித்த போதே திருமணத்தை முடித்து கொண்டார்கள். அந்தப் பணி முடியும் போதே ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. பிறகு அவர்கள் அரசாங்க வேலையைத் தேடவில்லை. நியாயமான அளவில் ஒரு கிளினிக் ஆரம்பித்தார்கள். நல்ல வருமானம் வர ஆரம்பித்தது. 

‘டாக்டர் என்றால் இரவு பன்னிரண்டு மணிக்கு எழுப்பினாலும் போயாக வேண்டும்,’ என்பது பிரேமாவின் கொள்கை. 

பத்து மணிக்குக் கிளினிக்கை மூடிவிட்டால், இரவு இரண்டு மணி வரையிலும் காதல் விளையாட்டு விளையாட வேண்டும் என்பது நடனத்தின் கொள்கை. 

ஆரம்ப காலங்களில் அதில் அவள் வெறுப்புக் காட்டவில்லை. காரணம் அவனுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லை என்பதுதான். அப்படியே நான்கு வருடங்கள் நடந்தன. நல்ல இடைவெளியில் ஓர் ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. 

குழந்தை பிறந்த மறு மாதமே பச்சை உடம்பு என்றுகூடப் பாராமல் நடனம் தொல்லை செய்ததை அவளால் தாங்கிக்கொள்ளத்தான் முடியவில்லை.

உலகத்திலுள்ள மருத்துவப் பட்டங்களையெல்லாம் வாங்கிவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்த பிரேமா, ஒரே ஒரு பட்டத்தைத்தான் ஆராய்ச்சியில் பெற முடிந்தது. 

ஆகவே உடல் உறவில் அவளுக்கு ஒரு அவர்ஷன் ஏற்பட்டுவிட்டது ‘இதைவிடத் தன் கணவன் வேறு எவளிடமாவது போய் வந்தால் தேவலை.’ என்றுகூட எண்ணத் தலைப்பட்டாள். 

அவனோ ஒருத்தியிடமே மகிழ்ந்து பழக்கப்பட்டதால், அவளையே சுற்றிக் கொண்டிருந்தான். 

இரவு நேரங்கள், பிரேமாவுக்கு எரிச்சலூட்டும் நேரங்களாக மாறி விட்டன. 

ஏதாவது டெலிபோன் வந்து பிரசவக் கேஸ் என்றால், அவள் நிம்மதியாகச் சென்று காலையில் திரும்ப ஆரம்பித்தாள். 

ஆனால் பெரும்பாலும் மறுத்துப் பேசாமலேயே காலம் கடத்திவந்த பிரேமா, அன்றுதான் மனம் திறந்து பேசிவிட்டாள். 

அவன் ஒரு திடமான முடிவுக்கு வந்தான். “மனைவி, கணவனுக்குக் கட்டுப்பட்டவளே தவிர, இதிலென்ன சமரசம். சமாதானம்?” என்று அவன் நினைத்தான். 

“இதோ பார். என்னுடைய உடம்பு நன்றாக இருக்கிறது. நீ ஒரு நோயாளி என்பதற்காக நான் என் வாழ்க்கையைத் தியாகம் செய்ய முடியாது. ஆமாம். உன்னால் என்னை மகிழ்விக்க முடியவில்லை என்றால் நீ ஒரு நோயாளிதானே…? நாம் பிரிந்தே வாழ்ந்துவிடுவோம்”, என்று சொன்ன நடனம், நேரே கிளினிக்குக்குச் சென்று தன் சாமான்களை யெல்லாம் எடுத்துக் கொண்டு தன் நண்பன் ஒருவனுடைய கிளினிக்குக்குப் போய்விட்டான். 

அங்கே போய் உட்கார்ந்ததிலிருந்து அவன் அழுதுகொண்டே தான் இருந்தான். 

நண்பன் வீட்டு மாடியைக் காலி செய்யச் சொல்லி அங்கேயே தன் கிளினிக்கை வைத்துக் கொண்டான். 

தன்னிடம் வருகிற குடும்பப் பெண்களையெல்லாம் சக்தியுள்ள பெண்களாக மாற்றி, தங்கள் கணவனையே திருப்தி செய்யும் பெண்களாக ஆக்கிக் கொண்டிருந்தான். ஆனால் தனக்கு மட்டும் அப்படி ஒருத்தி வாய்க்கவில்லையே என்ற ஆதங்கம், அவனை வாட்டி எடுத்தது. 

பிரேமா கணவனுக்காக வருந்தினாள் என்றாலும், மேலும் மேலும் பட்டங்கள் பெறுவதிலேயே கருத்தாக இருந்தாள். 

அடிக்கடி மூத்த குழந்தை, “அப்பா எங்கே? அப்பா எங்கே?” என்று கேட்கும். அவள் கொஞ்ச நேரம் அழுதுவிட்டு நோயாளிகளைக் கவனிக்கச் சென்றுவிடுவாள். 

ஒரு நாள். அவன் கிளினிகுக்கே ஒரு நோயாளி வந்தான். அவள் அறையின் பாதிக் கதவைத் திறந்து கொண்டு அந்த நோயாளி உள்ளே நுழைந்தபோதுதான் அவன் யார் என்பது பிரேமாவுக்குத் தெரிந்தது. அவள் அதிர்ச்சியுற்றாள். 

எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நடனம் அங்கே கண்கள் சிவக்க நின்றிருந்தான். பளிச்சென்று அவளைக் கட்டிப்பிடித்தாள். “பிரேமா!” என்று கத்தினான். 

தலை முடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு பள்ளியறைக்கு ஓடினான். அவளை அந்தக் கட்டிலில் தள்ளினான். யாரோ ஒரு காமுகன் கன்னி பெண்ணிடம் நடந்துகொள்வது போல் அவளிடம் நடந்து கொண்டான். 

“அப்பாடா, ஆண்டவனே! இது போதுமடா எனக்கு”, என்று சொல்லிவிட்டு அழுதாள். 

கட்டிலில் ஒரு சலனமும் இல்லாமல் படுத்திருந்த பிரேமா, தன் உடல் வலியையும் மறந்து எழுந்த நின்றாள். தன் முந்தானையால் அவன் வியர்வையைத் துடைத்துவிட்டாள் அவனை உட்காரச் சொன்னாள். உள்ளே போய்ப் பலகாரம் கொண்டுவந்து கொடுத்தாள். குழந்தைகள் இரண்டையும் கொண்டுவந்து அவன் மடியில் ஒன்றையும், அருகில் ஒன்றையும் அமர்த்தினாள். அவன் அவற்றைக் கட்டி பிடித்துக்கொண்டு அழுதான். 

“வெந்நீர் போடட்டுமா?” என்று கேட்டாள். அவன் தலையை ஆட்டினான். 

அவள் வெளியே போய் விறகு எடுத்து வந்தாள். 

“இதோ பாருங்க விறகு!” என்று கணவனுக்குக் காட்டினாள். 

அது ஒரு போர்டு. அதிலே, “டாக்டர் பிரேமா எம்.பி.பி.எஸ்” என்று எழுதியிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *