கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 14, 2023
பார்வையிட்டோர்: 6,383 
 

(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குருத்து 19-21 | குருத்து 22-23

குருத்து இருபத்திரண்டு 

“தங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும். தயவுசெய்து இன்று மாலை இங்கே வந்து போகமுடியுமா?” என்று பார்வதி டெலிபோனில் அழைத்தபோது, சேதுபதி ஒரு கணம் ஒன்றும் புரியாமல் திகைத்தார். ‘எதற்காக அழைக்கிறாள்? அப்படிப்பட்ட முக்கிய விஷயம் என்னவா யிருக்கும்?’ என்ற ஆவலும் பரபரப்பும் அவர் உள்ளத்தில் எழுந்தன. அவரால் இன்னதென்று ஊகிக்க முடியவில்லை. பார்வதியை முதன்முதலாகச் சந்தித்ததிலிருந்து அவர் மன அமைதி இழந்து எந்நேரமும் அவளைப் பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தார். அவளை அடிக்கடி சந்திக்கவும் அவளோடு உரையாடிக் கொண்டிருக்கவும் அவர் அந்தரங்கத்தில் அடங்காத ஆர்வம் இருந்து வந்தது. ஆயினும், தம்முடைய இதயத்தில் பொங்கிக் கொண்டிருந்த அந்த உணர்வை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நீறுபூத்த நெருப்பாக மறைத்து வைத்திருந்தார். 

பார்வதியை நேரில் சந்திக்கும் சமயங்களில் அவருடைய துணிவு, ஆற்றல் அனைத்தும் மறைந்து போய் சின்னஞ் சிறு குழந்தையாகி விடுவார். உள்ளத்தில் பொங்கும் ஆசைகளை யெல்லாம் அடக்கிக் கொண்டு பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டுத் திரும்பி விடுவார். 

பார்வதி அன்று டெலிபோனில் அழைத்தபோது அவர் உள்ளத்தில் மீண்டும் அந்த ஆசை கொழுந்துவிடத்தொடங்கியது. ‘ஒரு வேளை இன்று தன் அந்தரங்கத்தை வெளியிடத்தான் அழைக்கிறாளோ?’என்று பரபரப்படைந்தார். 

‘இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது. சற்றும் தயக்கமின்றி என் இதயத்தை அவள் அறியச் செப்யம் போகிறேன். அவளாகவே சங்கோசமின்றித் தன் எண்ணத்தை எடுத்துக்கூறும் அளவுக்குச் சூழ்நிலையை உண்டாக்கப் போகிறேன்’. இவ்வாறு முடிவு செய்து கொண்டவராய் “ஓ! வருகிறேன். அவசியம் வருகிறேன்” என்று பார்வதிக்குப் பதில் கூறினார். 

அன்று மாலை இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது சேதுபதி ஒவ்வொரு கணமும் பார்வதியிடமிருந்து வரப்போகும் அந்த வார்த்தைகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். 

அவர் எதிர் பார்த்தபடியே அவள் பேச்சைத் தொடங்கினாள். திருமணம்பற்றிய பேச்சுத்தான். 

ஆனால், அது அவர்களுடைய சொந்தத் திருமணம் பற்றியதல்ல. ராஜா-பாரதியைப் பற்றியது! 

சேதுபதி ஏமாற்றத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. உண்மையில் அவருக்கு அது ஏமாற்றமும் இல்லை. பார்வதியின் அழைப்பு எதற்காக இருக்கும் என்று அவர் பலவாறு யோசித்துப் பார்த்த போதிலும் எந்த ஒரு நிச்சயமான முடிவுக்கும் வந்துவிடவில்லை. 

ஆகவேதான், ‘திருமணம் விஷயம்’ என்று பார்வதி கூறியபோது அவர் சிறிதும் பரபரப்படையவில்லை. பார்வதியின் குரலில் உணர்ச்சியோ பரபரப்போ இல்லாமற் போகவே சேதுபதிக்கு உடனேயே விளங்கி விட்டது. மிக அமைதியாகச் சற்று நேரம் மெளனப் புன்னகையில் ஆழ்ந்திருந்தவர், “ராஜா- பாரதியின் சம்மதம்தான் இதில் முக்கியம். திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்கள் அவர்கள் தானே?” என்று வெகு சாவதானமாகப் பேச்சை முடித்தபோது பார்வதிக்கு வியப்புத் தாங்கவில்லை. 

பார்வதி மயக்க முற்றுக் கீழே சாய்ந்து விட்டாள் என்ற செய்தியை ராஜாவின் மூலம் அறிந்த சேதுபதி திடுக்கிட்டு நின்றார். அடுத்த சில நிமிடங்களுக்குள் பார்வதியின் இல்லத்துக்கு வந்துவிட்ட அவர், தமக்குத் தெரிந்த டாக்டர்களை யெல்லாம் டெலிபோனில் அழைத்துப் பார்வதிக்குச் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தார். 

“மறுபடியும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார். இந்த பலவீனமான நிலையில் எந்த ஒரு சிறு கவலைக்கும் மனத்தில் இடம் வரக்கூடாது. ரத்தக் கொதிப்பு அதிகமாயிருப்பதால் ரொம்ப எச்சரிக்கையோடு கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாக முடியும்'” என்று கூறிய டாக்டர்கள், மருந்துகளின் பெயரைச் சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்கள். 

பார்வதி மயக்க நிலை தெளிந்து கண் விழித்துப் பார்த்த போது மணி இரண்டு. சேதுபதி மெளனமாகத் தன் அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டபோது பார்வதிக்குத் துக்கம் நெஞ்சை அடைத்தது. கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்தபடியே “நீங்களா?” என்று ஈனமான குரலில் கேட்டாள். 

அவளுடைய குரலில், பார்வையில் உலகத்துக் காதல் மகா காவியங்களின் சோகமனைத்தும் ஏக்கமனைத்தும் பிரதிபலித்தன. மெலிந்த தன் கரங்களை உயர்த்தி ஏதோ சொல்ல வாயெடுத்தாள்; பேச முடியவில்லை. 

“நீங்கள் பேசக்கூடாது…மனத்தில் எந்தக் கவலை யும் வைத்துக் கொள்ளக்கூடாது…” சேதுபதி அவள் கரங்களைத் தீண்டி அமர்த்தி நிதானமான குரலில் பேசினார். 

“எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இனி நான் நிம்மதியாக வாழ்வேன். ராஜா-பாரதி திருமணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள்”- பார்வதி தட்டுத் தடுமாறிக் கூறி முடித்தாள். 

“அவர்கள் திருமணத்துக்கு இப்போது என்ன அவசரம்? தாங்கள் பூரணமாகக் குணமடைந்து பழையபடி கல்லூரிக்குப் போகத் தொடங்கியதும் வைத்துக் கொள்ளலாமே” என்றார் சேதுபதி. 

“தயவு செய்து எந்தக் காரணத்துக்காகவும் ராஜா- பாரதி திருமணத்தைத் தள்ளிப் போடாதீர்கள். என்னுடைய உடல் நலம் சரியில்லாததாலேயே தான் அவர்கள் திருமணத்தை உடனே நடத்திவிட வேண்டுமென்று துடிக்கிறேன்…” 

இந்தத் திருமணத்தால் தனக்கும் பார்வதிக்கும் ஏற்படக் கூடிய உறவு முறை பற்றிச் சேதுபதி எண்ணிப் பார்க்காமலில்லை, பார்வதியின் மன அமைதிக்காக அவர் தம்முடைய ஆசைகளை யெல்லாம், உள்ளத்தில் நீண்ட காலமாகப் புதைத்து வைத்திருந்த கனவுகளையெல்லாம் தியாகம் செய்துவிடத் தீர்மானித்து விட்டார். 

“தங்கள் விருப்பப்படியே திருமணத்தைக் கூடிய சீக்கிரம் நடத்தி விடுகிறேன். இன்னும் சில தினங்களுக்குள் இந்த வீட்டிலேயே அவர்கள் திருமணம் நடைபெறும்…” சேதுபதியின் உறுதிமொழி பார்வதிக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. 

“தாங்கள் இனி எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. நாளைக் காலையில் நான் மீண்டும் வந்து பார்க்கிறேன். காமாட்சி! நீ பார்த்துக் கொள்கிறாயா? தூங்கிவிடப் போகிறாய்…பாவம்! உனக்குத்தான் சுரமம்” என்று கூறி விட்டுப் புறப்பட்டார் சேதுபதி. 

திரும்பிச் செல்லும்போது அவர் உள்மனம் அவரைக் கேட்டது. 

‘சேதுபதி! அவள் மீண்டும் மயக்கமுற்றுக் கீழே விழுவானேன்? உன்னுடன் ராஜா-பாரதி திருமணம்பற்றிப் பேசியபோது மகிழ்ச்சியோடு தானே காணப்பட்டாள்? அதிர்ச்சிக்கோ, கவலைக்கோ அதில் என்ன இருக்கிறது? உனக்கும் அவளுக்கும் ஏற்பட இருந்த உறவு முறை மாறி விட்டது என்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணமோ? அப்படி யானால், ‘அமைதி நிம்மதி’ என்பதெல்லாம் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் பேச்சுத்தானா?’ 

ஒரு வாரம் கடந்தது. பார்வதியின் உடல்நிலையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. எழுந்து நடக்கவும் சக்தியற்ற வளாய்ப் படுத்த படுக்கையாகவே கிடந்தாள் அவள். 

டாக்டர்கள் மட்டும் வேளை தவறாமல் வந்து போய்க் கொண்டிருந்தனர். ஆனால் அவள் உடல் நிலையில் மட்டும் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. இந்த நிலையில் திருமணத்தை நடத்துவதற்கு வேண்டிய உற்சாகமோ ஊக்கமோ சேதுபதிக்கு எங்கிருந்து வரும்? ‘திருமணத்தைத் தள்ளிப் போடுவதால் நிலைமை மாறலாம். இதற்குள் பார்வதியின் மனமும் மாறலாம்’ என்ற சபலம் அவர் உள்ளத்தில் ஒரு பக்கம் ஒளிந்து கொண்டிருந்தது. 

ஆனாலும் பார்வதிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்று வதில் அவர் சிறிதும் தயக்கம் காட்டவில்லை. திருமண ஏற்பாடுகள் ஜாம் ஜாம் என்று நடந்துகொண்டிருந்தன. 

“காமாட்சி! அடுத்த வெள்ளிக் கிழமை முகூர்த்தம் நிச்சயம் செய்திருக்கிறேன். இன்னும் ஏழே நாட்கள் தான்… கலியாணத்தை இந்த வீட்டிலேயே நடத்திவிடவேண்டியது தான். இப்போதுள்ள நிலையில் பார்வதியால் ஓர் அடியும் அப்பால் நகர முடியாது…” என்றார் சேதுபதி. 

“ஆயிரம் காலத்துப் பயிர்; ஆற அமர யோசித்துக் கொஞ்சம் நிதானமாகச் செய்யலாமே…” என்றாள் காமாட்சி. 

“முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் பார்வதியோ அவசரப்படுகிறாள். இந்த விஷயத்தில் அவள் விருப்பத்திற்கு மாறாக நடந்துகொள்ள எனக்குச் சம்மதமில்லை. எப்படியும் பாரதியும் ராஜாவும் ஒரு நாளைக்குக் கணவன் மனைவியாக வாழ வேண்டியவர்கள் தானே?… சுப காரியங்களைச் சீக்கிரமே முடிப்பது நல்லது தான்” என்றார் சேதுபதி. 

“அதுவும் சரிதான்; நீயே மாடிக்குப் போய் சேதியைச் சொல்லிவிடு…” என்றாள் காமாட்சி. 

சேதுபதி மாடிக்கு ஏறிச் சென்றபோது பார்வதி மிக்க மகிழ்ச்சியுடன் “அடுத்த வெள்ளிக் கிழமையா முகூர்த்தம்? ரொம்ப சந்தோஷம்! முகூர்த்தப் புடவைகளெல்லாம் நானேதான் ‘ஸெலக்ட்’ செய்யப் போகிறேன். பாரதிக்கு நகை நட்டுகளெல்லாம் ரொம்ப வேண்டாம். கலியாணத்தை ஆடம்பரமாகச் செய்ய வேண்டாம். முக்கியமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பினால் போதும். மேளத்தைக் கொட்டித் தாலியைக்கட்டி ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டு விடலாம். அதுவே போதும். பந்தல்கூட ரொம்பப் பெரிதாக வேண்டாம்” என்றாள் பார்வதி. 

“எனக்கும் அதே ஐடியாதான்.கலியாணங்களின்போது ஆடம்பர முறைகளில் பணத்தை விரயம் செய்வது எனக்கும் கட்டோடு பிடிக்காது”. 

“பல விஷயங்களில் நாம் இருவரும் ஒரே மாதிரியான கருத்துகளையே கொண்டிருக்கிருேம்…” என்று பொருளாகக் கூறிக் கண் சிமிட்டினாள் பார்வதி. 

“ஆமாம்; அந்தக் கருத்துகளை ஒருவருக்கொருவர் மனம் விட்டுச் சொல்லிக் கொள்ளச் சந்தர்ப்பம் தான் ஏற்படுவதில்லை…” என்று சூட்சுமமாகவே பதில் கொடுத்தார் சேதுபதி. 

“அண்ணா! ஜவுளிகளை இங்கேயே கொண்டுவர சொல்லு; பார்வதியே பார்த்து முடிவு செய்யட்டும்” என்றாள் காமாட்சி. 

“ஏழெட்டு ஜவுளிக் கடைகளை இங்கு அனுப்பி வைக்கிறேன், போதுமா?” என்று சிரித்துக் கொண்டே புறப்பட்டார் சேதுபதி. 

கலியாண ஏற்பாடுகள் துரித காலத்தில் நடந்துகொண்டிருந்தன. ராஜாவும் பாரதியும் தாங்கள் மணமக்கள் என்பதைக்கூட மறந்து ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்! 

“இன்னும் மூன்றே தினங்கள் தான்! இன்னும் இரண்டே நாட்கள்தான்” என்று ஒவ்வொரு நாளும் கவலையோடு சொல்லிக்கொண்டிருந்தாள் காமாட்சி. 

பார்வதி கட்டிலில் படுத்த வண்ணமே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள். 

ராஜாவும் பாரதியும் கூட்டாகவே ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்ட அவள், “பாரதி! நாளை மறுதினம் ராஜா உனக்குக் கணவனாகப் போகிறான். ஆகையால் நீ அவனிடம் கொஞ்சம் வெட்கப்படுவதுபோல் நடிக்க வேண்டும்” என்று கேலி செய்தாள். 

“போங்க அத்தை! எனக்கு வெட்கமாயிருக்கிறது!” என்றான் ராஜா. 

“இதோ பார்த்தீர்களா, வேஷ்டி சட்டை!” என்று கூறிக் கொண்டே கையில் ஜவுளிகளுடன் வந்து சேர்ந்தார் சேதுபதி. 

“வேட்டி சட்டையா? யாருக்கு? ராஜாவுக்கா?… ரொம்ப சீப்பாக வாங்கி விட்டீர்களே! சிக்கனத்தை மாப்பிள்ளை டிரஸ்ஸிலேயே ஆரம்பித்து விட்டீர்களோ?” என்று கேட்டாள் பார்வதி. 

“இது மாப்பிள்ளை டிரஸ் இல்லை; வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறானே, செவிட்டுப் பெருமாள், அவனுக்கு!” என்றார் சேதுபதி, 

பார்வதி சிரித்து விட்டாள். 

“ஆமாம், திருமணம் நடக்கப்போகிற விஷயம் அவனுக்குத் தெரியுமா?…” 

“மேளம் வாசிக்கிறபோது என்ன சத்தம் என்று கேட்காமலா இருப்பான்? அப்போது தெரிந்துகொள்கிறான்” என்று கூறிச் சிரித்தான் ராஜா. 

“நேற்றுப் பந்தல் போடும்போதே, ‘என்ன விசேஷம்!’ என்று கேட்டான். நான் சங்கதியைச் சொன்னபோது அவனுக்கு ஆனந்தம் தாங்கவில்லை” என்றார் சேதுபதி. 

”பாவம்! ரொம்ப காலமாக நம்ம வீட்டிலேயே கிடக் கிறான்…ஆமாம்; இந்தப் புடவை யாருக்கு? ரொம்ப நன்றாக இருக்கிறதே!” என்று கேட்டாள் பார்வதி. 

“பிடித்திருந்தால் நீங்கள்தான் கட்டிக் கொள்ளுங்களேன். பனாரஸ் பட்டு-நல்ல கலர்…” என்றார் சேதுபதி. அப்போது பார்வதியின் முகம் வெட்கத்தால் சிவந்து மாறியதைச் சேதுபதி கவனிக்கத் தவறவில்லை. 

“இம்மாதிரி ஒரு புடவை வாங்கிக் கொள்ள வேண்டு மென்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை…” என்றாள் பார்வதி. 

“தங்களுக்கு இம்மாதிரி ஒரு புடவை வாங்கித் தர வேண்டுமென்று எனக்கும்தான் ரொம்ப நாளாக ஆசை!” என்று சேதுபதி கூறவில்லை. மனத்தில் எண்ணிக்கொண்டார். ‘இந்தப் புடவை தனக்குப் பிடிக்குமென்று அவருக்கு எப்படித் தெரிந்தது?’ மனத்திற்குள்ளாகவே ஒரு வியப்புக் குறியை எழுப்பிக்கொண்டு யோசிக்கலானாள் பார்வதி. 

ஹாஸ்டல் திறப்பு விழாவன்று பார்வதி இதேமாதிரி புடவை ஒன்றுதான் கட்டியிருந்தாள். அந்தக் கலர் அவள் தேக அமைப்புக்கு மிகவும் பொருத்தமாயிருந்ததைச் சேதுபதி அன்றே குறிப்பாகக் கவனித்து வைத்திருந்தார். இப்போது அதை மறந்துவிட்ட பார்வதிக்குச் சேதுபதி வாங்கி வந்த சேலையைக் கண்டதும் வியப்புத் தாங்கவில்லை. 

வெள்ளிக்கிழமை காலை குறித்த நேரத்தில் கெட்டி மேளம் முழங்க பெரியோர்கள் ஆசீர்வதிக்க ராஜாவுக்கும் பாரதிக்கும் அக்னி சாட்சியாகத் திருமண வைபவம் நடந்தேறியது. 

மாடியில் கட்டிலில் படுத்தபடியே திருமணக் காட்சிகளைத் தன் அகக் கண்ணால் கண்டு களித்துக் கொண்டிருந்தாள் பார்வதி. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத் தோட மானசீகமாக மணமக்களை வாழ்த்திக் கொண்டிருந்தாள் அவள். 

திருமணச் சடங்குகள் யாவும் முடிந்ததும் ராஜாவும் பாரதியும் சேதுதிபதியை வணங்கி எழுந்தனர். 

“முதலில் மாடிக்குச் சென்று அத்தைக்கு நமஸ்காரம் செய்யுங்கள்” என்று கூறி, அவர்களை மேலே அழைத்துச் சென்றார் சேதுபதி. 

தான் வாங்கிக் கொடுத்த அந்த பனாரஸ் பட்டுப் புடவையை அணிந்துகொண்டு பார்வதி கட்டிலில் படுத்திருப்பதைக் கண்ட சேதுபதிக்கு மெய் சிலிர்த்தது. 

“அத்தை! நமஸ்தாரம் பண்ணுகிறோம்” என்றான் ராஜா. 

“தீர்க்காயுசுடன் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வேண்டும்” என்று கூறியபடியே படுக்கையில் சாய்ந்திருந்த பார்வதி எழுந்து உட்கார்ந்து மணமக்களைத் தன் இரு கைகளாலும் தழுவிக் கொண்டாள். “என் ஆசை நிறைவேறி விட்டது; இனி எனக்கு நிம்மதிதான்; இப்படியே கண்களை மூடி விட்டாலும் கவலையில்லை. பாரதி! என் அருகில் வா…” என்று பாரதியின் கரங்களைப்பற்றி அழைத்த பார்வதி, அவள் தலையை அன்போடு வருடி, “நீ இன்று ரொம்ப அழகாக இருக்கிறாய், என் ராஜா ரொம்ப அதிஷ்டக்காரன்” என்றாள். 

பாரதியின் மணக் கோலத்தைக் கண்டபோது சேதுபதிக்குத் தமது மனைவி சரஸ்வதியின் ஞாபகம் தோன்றி விடவே துக்கம் நெஞ்சை அடைத்தது. சரஸ்வதியின் சாயலாகவே காட்சி அளித்த தம் மகளைப் பார்த்தபோது சேதுபதியின் கண்களில் நீர் துளித்தது. அவர் கண்கள் கலங்குகுவதைக் கண்ட பார்வதியின் நெஞ்சம் உணர்ச்சி வசத்தால் நெகிழ்ந்தது. 

குருத்து இருபத்து மூன்று 

வாசலில் காட்டியிருந்த வாழை மரங்களும், மாவிலைத் தோரணங்களும் வாடி வதங்கிச் சருகாகிக் கொண்டிருந்தன. திருமணம் நடந்த வீட்டில் காணக் கூடிய குதூகலம், ஆரவாரம், விருந்து வைபவம், விருந்தாளிகள் நடமாட்டம் எதுவுமே அங்கு இல்லை. 

பார்வதியின் நிலை வரவர மோசமாகிக் கொண்டே போயிற்று. இப்போதெல்லாம் அவள் மாடியை விட்டுக் கீழே இறங்கிச் செல்லவும் சக்தியற்றவளாகிப் படுத்த படுக்கையாகவே கிடந்தாள். ராஜாவும் பாரதியும் எந்நேரமும் அவள் அருகிலேயே இருந்து பணிவிடை புரிந்து கொண்டிருந்தனர். சேதுபதி பெரிய பெரிய டாக்டர்களை அழைத்து வந்து, பார்வதிக்குச் சிகிச்சை அளிக்கச் செய்து, அவளைப் பழைய நிலைக்கு மீட்டு விடுவதில் முனைந்திருந்தார். “பார்வதி குணமடைந்து பழையபடி சந்தோஷமாக வாழவேண்டும்”- இதுதான் அவருடைய லட்சியமாக இருந்தது. அவளுடைய உயிருக்காக, வாழ்வுக்காக அவர் எதையுமே தியாகம் செய்யத் தயாராயிருந்தார். 

கண்களை மூடியபடியே சேதுபதியைப்பற்றி எண்ண மிட்டுக் கொண்டிருந்த பார்வதிக்கு வியப்புத்தான் மேலிட்டது. ‘என்மீது அவர் ஏன் இத்தனை அக்கறை காட்டவேண்டும்? அன்று அவர் எனக்காக ஆசையோடு வாங்கி வந்த மாதுளம் பழங்களை நான் ஏறிட்டுப் பாராமல் அலட்சியம் செய்ததைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை! எவ்வளவு பெருந்தன்மையான குணம்? நான் பண்பற்றவள். அவரோடு ஒப்பிடும்போது மிக மிக அற்பமானவள். அவருடைய பெருந்தன்மையோடு உயர் குணத்தோடு நற்பண்போடு என்னை நான் ஒப்பிட்டுப் பார்க்கவே தகுதியற்றவள்…எனக்காக அவர் எதையும் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறார் என் மகிழ்ச்சிக்காக, மன அமைதிக்காகத் தம் முடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் சித்தமாயிருக்கிறார்’. 

‘ராஜா-பாரதி திருமணத்தை உடனே முடிக்கவேண்டு மென்று நான் கேட்டுக் கொண்டபோது சற்றும் தயங்காமல் யோசிக்காமல், தாமதிக்காமல் ஆகட்டும்; முடித்துவிடுகிறேன்’ என்று பதில் கூறினாரே? தம்முடைய ஒரே மகளின் எதிர்கால வாழ்க்கையைப்பற்றிச் சிறிதேனும் சிந்தித்துப் பாராமல் திருமணம் செய்துவைக்க இசைந்தாரே! இதற்கெல்லாம் என்ன காரணம்?’

அந்த உத்தமரை நான் அலட்சியம் செய்யவில்லை. என் இதயக் கோயிலில் அவரை நிரந்தரத் தெய்வமாக்கிப் போற்றிக் கொண்டிருக்கிறேன். அவரிடம் நான் கொண்டுள்ள மாசற்ற அன்பு காரணமாகவே சில சமயங்களில் தவறு இழைத்து விட்டுப் பின்னர் அதைப்பற்றி எண்ணி எண்ணி வேதனைப்படுகிறேன். ‘தேவி’! என்னை நீதான் மன்னிக்க வேண்டும் என்று அன்னையை வேண்டிக் கொள்கிறேன். அன்று அவர் ஆசையோடு வாங்கி வந்த மாதுளம் பழங்களை நான் அலட்சியம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்தான். ஆயினும் அந்தக் குற்றத்தை அவர் பெருந்தன்மையோடு மறந்து விட்டார். மீண்டும் அம்மாதிரி அவர் ஏதேனும் எனக்காக வாங்கி வரும்போது அதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சந்தர்ப்பம் எனக்கு விரைவிலேயே கிடைத்துவிட்டது. திருமணத்தின்போது அவர் எனக்காக வாங்கி வந்த பனாரஸ் பட்டுப் புடவையை நான் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டேன். அந்தப் புடவையை நான் உடுத்தியிருப்பதை கண்டதும் அவர் கண்களில் வீசிய ஒளி, என்னை மெய் சிலிர்க்கச் செய்தது. என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக் குதூகலப்படுவதற்கு அந்த ஒரு நிகழ்ச்சியே போதும் எனக்கு’. 

“அத்தை! தங்கள் பெயருக்குத் திருமண அழைப்பிதழ் ஒன்று வந்திருக்கிறது…” என்று கூறிக்கொண்டே விரைந்து வந்தான் ராஜா. 

“யாருக்குத் திருமணம்?… படித்துச் சொல்லு?” ஆவலுடன் கேட்டாள் பார்வதி. 

“மீனாட்சிக்கும் – கோபாலனுக்கும் வருகிற ஞாயிற்றுக் கிழமையன்று மதுரையில் திருமணமாம். அது யார் அத்தை மீனாட்சி? மதுரை மீனாட்சி அம்மனுக்குத்தான் ஏற்கெனவே திருமணம் நடந்தாகி விட்டதே?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் ராஜா. 

“எங்கே? அழைப்பிதழை இப்படிக் காட்டு பார்க்கலாம் ” என்று கேட்டாள் பார்வதி. 

“வேண்டாம் அத்தை! உங்களால் படிக்க முடியாது. நானே முழுதும் படிக்கிறேன்” என்று கூறிப் படிக்கத் தொடங்கினான் ராஜா. 

‘மீனா என்கிற மீனாட்சிக்கும்’ என்று அவன் தொடங்கிய போதே “ஓகோ, நம்ம மீனாவுக்கா?” என்றாள் பார்வதி. 

”யார் அத்தை அது மீனா?” 

“என் காலேஜில் வாசித்துக் கொண்டிருந்த பெண். டென்னிஸ் நன்றாக விளையாடுவாள். சரி..சரி… இப்போது எல்லாம் புரிந்துவிட்டது. ரொம்ப சந்தோஷம். வருகிற ஞாயிற்றுக்கிழமையன்றா முகூர்த்தம்..ம்… இந்தக் கலியாணத்துக்கு நான் நேரில் போகவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். உன் கலியாணத்தையே கீழே வந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை எனக்கு…” என்று பெரு மூச்செறிந்தாள். 

”ராஜா? இவர்களுக்கு என் பெயரால் ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பிவிடுகிறாயா?” 

“ஆகட்டும் அத்தை?” ராஜா கீழே போய்விட்டான். பார்வதிக்கு மூச்சுத் திணறியது. ‘ரத்தக்கொதிப்புள்ளவர்கள் உடம்பையோ, மனசையோ அலட்டிக் கொள்ளக் கூடாது. மூச்சு விடாமல் பேசவும் கூடாது’ என்று டாக்டர்கள் கூறிய வார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தன. 

அன்றிரவு சேதுபதி பார்வதியைக் காண வந்தபோது மணி பதினொன்றுக்குமேல் ஆகிவிட்டது. காமாட்சி மாடி வராந்தாவில் தூங்கிக் கொண்டிருந்தாள். உள்ளே எட்டிப் பார்த்தபோது கட்டிலில் பார்வதி அசைவற்றுப் படுத்துக் கொண்டிருப்பது நிழலாகத் தெரிந்தது. சேதுபதி மெதுவாக நடந்து போய், கட்டிலுக்கருகில் நின்று பார்வதியைக் கவனித்தார். மூச்சு லேசாக இழையோடிக்கொண்டிருந்தது. பலவீனமாகத் திராணியற்றுக் கிடந்த அவள் நிலையைக் கண்ட சேதுபதியின் உள்ளம் வேதனைக்குள்ளாயிற்று. மௌனமாகவே, சந்தடியின்றி வராந்தாவுக்குத் திரும்பி வந்தவர், “காமாட்சி!” என்று மெதுவான குரலில் அழைத்தார். 

பகலெல்லாம் உழைத்துக் களைத்துப் போயிருந்த காமாட்சிக்குச் சேதுபதியின் குரல் எங்கோ பாதாளத்திலிருந்து ஒலிப்பது போல் கேட்டது. அவள் திரும்பிப் படுத்துக் கொண்டாள். மீண்டும் “காமாட்சி” என்று சேதுபதி அழைத்த பிறகே, அவள் விழிப்படைந்து எழுந்து உட்கார்ந்தாள். 

“ரொம்ப நேரமாயிற்றா அண்ணா நீ வந்து”. 

“இல்லை, காமாட்சி! இப்போதுதான் வந்தேன்;… பார்வதி ஏதாவது ஆகாரம் சாப்பிட்டாளா? அவளுக்கு இப்போது எப்படி இருக்கிறது?” 

“எதுவுமே சாப்பிடவில்லை. சாயந்திரம் கொஞ்ச பழரசம் பிழிந்து கொடுத்தேன். அதில் பாதியைக் குடித்து விட்டுப் பாதியை அப்படியே வைத்து விட்டாள்…எனக் கென்னவோ அவள் நல்லபடி பிழைத்தெழுந்திருக்க வேண்டுமே என்று ஒரே கவலையாயிருக்கிறது, அண்ணா” 

“நம்மால் முடிந்ததையெல்லாம் செய்து பார்த்து விடலாம் காமாட்சி! எப்படியும் அவள் பிழைத்து விடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

“நீயும் பணத்தைப் பணம் என்று பாராமல்தான் செலவழித்துக் கொண்டிருக்கிறாய்! மூன்று மாதமாக இதே கவலை தான் உனக்கு. நல்லபடியாக அவள் பிழைத்தெழுந்திருக்க வேண்டும்.” பெருமூச்சு விட்டாள் காமாட்சி. 

“நீ உடலால் உழைக்கிறாய். நான் பொருளைத்தானே செலவழிக்கிறேன்? உயிருக்கு விலை கிடையாது. பணம் இன்று வரும். நாளை போகும். பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது. அவள் உயிரைக் காப்பாற்ற நான் எதையுமே இழந்துவிடத் தயாராயிருக்கிறேன். பார்வதியைப் போன்ற ஓர் அறிவாளியை, உத்தமியை, உழைப்பாளியை அபூர்வமாகத்தான் காண முடியும்…” 

கண்களை மூடியபடியே கட்டிலில் சாய்ந்து கிடந்த பார்வதிக்குச் சேதுபதியின் வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. அவள் கண்களில் நீர் மல்கியது. 

“உயிருக்கு விலை கிடையாது. பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது” என்ற வார்த்தைகள், அவள் இதயத்தை நெகிழ வைத்தன. அன்றொரு நாள் தொழிற்சாலை தீப்பற்றி எரிந்துவிட்டதென்ற செய்தியைக் கேட்டபோதுகூட, அவர் பாபரப்புடன் “உயிர்ச்சேதம் உண்டா?” என்று கேட்டது அவள் நினைவுக்கு வந்தது. ‘பணத்தைக் காட்டிலும் உயிரை அவர் எவ்வளவு உயர்வாக மதிக்கிறார்?’ அவருடைய குரல் மீண்டும் கேட்கவே பார்வதி அவர் பேச்சை ஆவலோடு கவனித்தாள். 

“காமாட்சி! இந்தக் கலியாணத்தை முடிப்பதில் நான் அவசரப்பட்டு விட்டதாக உன் நினைப்பு அல்லவா? நான் அப்போது சொன்ன காரணம் உனக்கு அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும். உண்மைக் காரணத்தை இப்போது சொல்கிறேன், கேள். 

நான் சரஸ்வதியை மணக்குமுன் ஒரு நாள் பார்வதியைப் பெண் பார்க்கப் போயிருந்தேன். மாமாவும் மாமியும் என்னோடு வந்திருந்தார்கள். பார்வதி அப்போது சாம்பசிவம் என்ற பெரியவர் ஒருவருடைய ஆதரவில் இருந்து வந்தாள். நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது தூளியில் படுத்திருந்த குழந்தை ஒன்று வீரிட்டு அழத் தொடங்கியது. பார்வதி ஓடிச்சென்று அந்தக் குழந்தையை எடுத்துத் தன் இடுப்பிலே வைத்துக் கொண்டாள். மாமாவுக்கும் மாமிக்கும் இந்தச் சம்பந்தத்தில் அவ்வளவாகத் திருப்தி இல்லை. எனவே, ‘பின்னால் தெரியப்படுத்துகிறோம்’ என்று கூறிவிட்டு வந்து விட்டார்கள். எனக்குப் பார்வதியைப் பிடித்திருந்த போதிலும், அவளையே மணந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் இருந்த போதிலும், மாமாவின் விருப்பத்துக்கு மாறாகப் பேசும் நிலையில் அப்போது நான் இல்லை. எனவே மௌனமாகத் திரும்பி விட்டேன். அப்புறம்தான் சரஸ்வதிக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. பின்னர், சரஸ்வதியின் மூலமாகப் பார்வதியைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டேன், அவளுடைய அன்பிலும் ஆதரவிலும் அப்போது வளர்ந்து கொண்டிருந்த குழந்தை வேறு யாருமல்ல. அவளுடைய அண்ணன் மகன் ராஜாவேதான் என்பதையும் தெரிந்து கொண்டேன். 

அன்று முதல், பார்வதியின் எதிர்கால வாழ்வுக்கு இடையூறு செய்துவிட்ட பெரும் குற்றம் என் உள்ளத்தை அரித்து கொண்டேயிருந்தது. அந்தக் குற்றத்துக்குப் பிராயச் சித்தமாக ஏதேனும் ஒருவகையில், என்றாவது ஒருநாள், ஏதாவது ஒன்றைச் செய்துவிட வேண்டுமெனச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தச் சந்தர்ப் பத்தை ஆண்டவன் எனக்கு இப்போதுதான் ஏற்படுத்திக் கொடுத்தார். பாரதியை ராஜாவுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவள் வெளியிட்ட போது நான் சற்றும் யோசிக்காமல், தயங்காமல், தாமதிக்காமல் சட்டென ‘ஆகட்டும்’ என்று பதில் கூறியதற்கு இதுவே காரணம்”. 

சேதுபதி பேச்சை முடித்தார். இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி, ‘ஓகோ, பெண் பார்க்க வந்த விஷயத்தை இவர் இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறாரா? மறந்துவிட்டார் என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன்?’ என்று தனக்குள் வியந்துகொண்டாள். 

“நான் வருகிறேன் காமாட்சி! நேரமாகிறது…பாரதியை எங்கே காணோம்?” சேதுபதி விசாரித்தபடியே புறப்பட்டார். 

“அவளும் ஞானமும் கீழே படுத்திருக்கிறார்கள் அண்ணா! ராஜா வெளியே போயிருக்கிறான். அவனுடைய நண்பர்களெல்லாம் சேர்ந்துகொண்டு அவனுக்கு ‘டீ பார்ட்டி’ வைத்திருக்கிறார்களாம்..” 

“அப்படியா?” சேதுபதி கீழே இறங்கிப் போய் விட்டார். 

கோடை விடுமுறை தீர இன்னும் ஏழெட்டு நாட்களே இருந்தன. சாரதாமணிக் கல்லூரி அடுத்த திங்களன்று மீண்டும் திறக்கப்பட்டுவிடும். பார்வதிக்குக் கல்லூரியைப் பற்றிய கவலை வந்துவிட்டது. விளையாட்டுப் போல் மூன்று மாதங்கள் ஓடி மறைந்துவிட்டன. இந்த இடைக்காலத்தில் எத்தனை மாறுதல்கள்! 

தான் பூரண குணமடைந்து, மறுபடியும் கல்லூரிக்குச் செல்லும் நாளை அவள் கற்பனை செய்து பார்த்துக்கொண்டாள், அந்த நினைப்பில் அவள் உடலெங்கும் ஓர் இன்பம் பரவியது. மூன்றுமாத இடைவேளை மிகக் குறுகிய காலம் தான். அதிலும் இரண்டு மாதங்கள் விடுமுறையில் கழிந்து விட்டன. ஆனாலும் அதுவே அவளுக்கு மூன்றுயுகங்களாகத் தோன்றி, மீண்டும் கல்லூரியைக் காண்போமா என்ற ஏக்கமே பிறந்துவிட்டது. இதற்கு முன் அவள் கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் தங்கிய நாளே கிடையாது. கல்லூரிக்குப் போய் ஒரு முறை அதைக் கண்ணால் பார்த்துவிட்டு வர வேண்டும் என்னும் பேராவல் அவள் உள்ளத்தை உந்தியது. 

“மணி என்ன இருக்கும்? என்று அவள் யோசித்த போதே, கீழே முன் வாசல் ஹாலில் மாட்டப்பட்டிருந்த பிரெஞ்சு நாட்டுக் கெடியாரம் மணி பத்தரை என்பதைக் குளுமையாக ஒலித்து அறிவித்தது. 

அப்போதே ராஜா ஸ்கூட்டரில் வரும் ஒலியும் கேட்டது. அவன் வந்ததும் வராததும் வேகமாக மாடிக்கு ஏறி வந்து, “அத்தை உடம்பு எப்படி இருக்கிறது?” என்று பரிவோடு விசாரித்தான். 

“நான் அதிக நாள் பிழைத்திருப்பேன் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது ராஜா!” என்று பார்வதி கூறியதும் ராஜா துக்கம் தொண்டையை அடைக்க “அப்படி யெல்லாம் சொல்லாதீங்க அத்தை! நீங்கள் சௌக்கியமாகப் பிழைத்து எழுந்து பழையபடி ‘ஜம்’ மென்று காலேஜுக்குப் போகப் போறீங்க. நான் உங்களைக் காரில் கொண்டுவிடப் போறேன், இது நிச்சயம்” என்றான். 

“ம்… என்னவோ பார்க்கலாம்” எனக் கூறிய பார்வதி சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டு ‘ராஜா’ என்று அழைத்தாள். 

“என்ன அத்தை!” 

“எனக்குக் கல்லூரியைப் பார்க்க வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது. தயவுசெய்து என்னைக் காரில் அழைத்துக்கொண் போகிறாயா?” 

“என்ன அத்தை இது! மணி பதினொன்று அடிக்கப் போகிறது. இராத்திரி வேளை. உங்க உடம்பு இருக்கிற நிலையிலே வெளியிலே போவதா?” 

“தடங்கல் சொல்லாதே ராஜா! நான் இப்போதே போய்ப் பார்க்க வேண்டும் நீதான் உதவி செய்யவேண்டும். உன் தோளைப் பற்றிக்கொண்டு நான் மெதுவாகக் கீழே இறங்கி வந்துவிடுகிறேன் …” 

“அத்தை எனக்குப் பயமாயிருக்கிறது. சேதுபதிக்குத் தெரிந்தால் என்னைக் கோபித்துக் கொள்ளுவார்…நான் வர மாட்டேன்…” 

“நீ வரமாட்டாயா ராஜா? கண்டிப்பாய்க் கேட்கிறேன். ஒரே வார்த்தைதான்; சொல்லி விடு. முடியாதா?” 

ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தயங்கினான், கடைசி யில் அத்தையின் பேச்சைத் தட்ட முடியாமல் “சரி அத்தை புறப்படுங்க…” என்றான். 

அடுத்த கணமே பார்வதி கட்டிலைவிட்டு மெதுவாக எழுந்தாள். ஞானத்தைத் தவிர, வீட்டில் எல்லோருமே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். 

பார்வதி ஞானத்தை அழைத்து, “கல்லூரிக்குப் போய் விட்டு அரை மணியில் திரும்பி வந்து விடுகிறேன். வீட்டைப் பார்த்துக்கொள்” என்று புறப்பட்டாள். 

ஞானம் தடுக்கவில்லை. வெளியில் புறப்படும்போது தடையாக எதுவும் சொல்ல விரும்பாததால் மௌனமாகத் தலையசைப்பதைத் தவிர, அவளால் வேறு ஒன்றும் செய்யமுடிய வில்லை. 

ராஜா அத்தையைத் தாங்கி அணைத்துக் கீழே கொண்டு போய் விட்டான். பார்வதிக்கு மூச்சுத் திணறியது. எப்படியோ காரில் ஏறிப் பின் சீட்டில் சாய்ந்துகொண்டாள். 

வாசல் கேட்டைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கிடப்பது கார் வெளிச்சத்தில் பளிச்செனத் தெரிந்தது. 

“அத்தை! இவனுக்கு உன்னைப் பார்க்க வேண்டுமாம். மாடிக்கு ஏறி வர முடியவில்லையாம். ‘அம்மாவுக்கு உடம்பு ஏப்படி இருக்கிறது?’ என்று என்னைத் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறான்…” 

“நீ என்ன சொன்னாய்?” 

“‘இப்போது பரவாயில்லை’ என்று அவனிடம் சொல்லி விட்டேன். இல்லையென்றால் அவன் இருக்கிற நிலையில் மாடிப் படியேறி வந்து எங்காவது விழுந்து வைப்பானே!” என்றான் ராஜா. 

“பாவம், நன்றியின் சின்னம் இவன்!” என்று இரக்கப்பட்டாள் பார்வதி. 

கார், கல்லூரிக் காம்பவுண்ட் கேட்டை நெருங்கியபோது பார்வதி சுற்றுமுற்றும் பார்த்தாள். மிஸஸ் அகாதா ஒற்றைக் காலை விந்தி விந்தி நடந்து வருவது போலவும் பார்வதியைக் கண்டதும் வலது கையை உயர்த்தி, “ஹல்லோ! குட்மார்னிங்” என்று கூறுவது போலவும் ஒரு பிரமை தோன்றியது அவளுக்கு. “மிஸஸ் அகாதா – பாவம் மிக நல்லவள்; கடமை தவறாதவள்” என்று எண்ணிக் கொண்டாள். 

அடுத்த நிமிஷம் கார் பார்வதியின் ஆபீஸ் அறைக்கு முன்னால் போய் நின்றது. ஓடிவந்து கதவைத் திறப்பதற்கு அங்கே அட்டெண்டர் ரங்கசாமி இல்லை. ஆனாலும் அந்தக் காட்சியைத் தன் கற்பனையால் கண்டு மகிழ்ந்து கொண்டாள் பார்வதி. 

”ராஜா! என்னைக் கொண்டுபோய் என் அறையில் விடு!” 

ராஜா அவளைத் தூக்கிக்கொண்டு போய் மெதுவாக நாற்காலியில் உட்கார வைத்துவிட்டான். 

இழந்ததெல்லாம் திரும்பி வந்துவிட்டது போன்ற ஒரு பெருமிதம் ஏற்பட்டது அவளுக்கு. ஆசையோடு டெலிபோனைத் தொட்டுப் பார்த்தாள். அதைத் தன் கையால் எடுத்துப் பேசி எத்தனை நாளாயிற்று! அதன்மீது புழுதி படிந்து கிடப்பதைக் கண்டு தானே அதைத் துடைக்கப் போனாள். இதற்குள் ராஜா டஸ்ட்டரை எடுத்து வந்து அதைத் துடைத்துவிட்டான். 

பார்வதி மேஜை மீதிருந்த காலிங் பெல்லைத் தட்டி விட்டு அதன் ஒலியைக் கேட்டுச் சிறு குழந்தைபோல் சிரித்துக் கொண்டாள். பின்னர், அறை முழுவதையும் ஒருமுறை கண்ணோட்டமிட்டு அனுபவித்துவிட்டு, “ராஜா! புதிய ஹாஸ்டல் மண்டபத்துக்குப் போகலாம் வா” என்று கூறியவள் அவன் தோளைப் பற்றிக்கொண்டாள். 

ராஜா அத்தையை ஹாலுக்குத் தூக்கிச் சென்றான். பொன் விழாவன்று அந்த ஹாலில் சேதுபதி பேசிய பேச்சு, தன்னுடைய சொற்பொழிவு, அவருக்குப் பக்கத்து ஸீட்டில் தான் அமர்ந்திருந்தது, மூக்குக் கண்ணாடியை அவர் மறந்து சென்றது, அதை விமான கூடத்தில் கொண்டு போய்க் கொடுத்தது எல்லாம் கண்முன் ஒவ்வொன்றாகத் தெரிந்தன. அவள் கண்களை நீர் மறைத்தது. கடைசியாக அந்த இடத்தைவிட்டு எழுந்து கல்லூரியின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று அங்குள்ள ஜடப் பொருள்கள் ஒவ்வொன்றுடனும் மானசீகமாக உரையாடிவிட்டு மனத்திருப்தியோடு மகிழ்ச்சியோடு காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். 

வாசலில் இருந்த வேப்பங்கன்று அவள் பார்வையில் விழுந்தது.”ராஜா! காரைக் கொஞ்சம் நிறுத்து” என்று கூறி அந்தச் செடியைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். . 

‘நான் வைத்த கன்று. இப்போது எவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டது! இதற்கு யாராவது தண்ணிர் ஊற்றுகிறார்களோ. இல்லையோ?’ என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டவள், “ம்…புறப்படு போகலாம்” என்றாள். 

கார் வீட்டை அடைந்தது. ராஜாவுக்கு ஒரே திகில்! அத்தையை நல்லபடி கொண்டு சேர்த்துவிட்டான். மேலே கொண்டுபோய்க் கட்டிலிலும் படுக்க வைத்தாகி விட்டது. அப்புறம்தான் அவனுக்கு மூச்சு வந்தது. 

ஞானத்தை ஹார்லிக்ஸ் கொண்டுவரச் சொல்லி அத்தையின் களைப்புத்தீரக் குடிக்கச் சொன்னான். அவளால் ஒரு வாய்க்குமேல் அருந்த முடியவில்லை. அன்றிரவெல்லாம் அவள் “வேப்பங்கன்று… அகாதா?…” என்று ஏதோதோ வாய் பிதற்றிக்கொண்டிருந்தாள். 

காலையில் பொழுது விடிந்தபோது அவள் பேசக்கூடச் சக்தியற்றவளாய்ப் படுத்துக் கிடந்தாள். 

நல்ல வேளையாக அன்று அகாதாவே அவளைப் பார்க்க வந்துவிட்டாள், விடுமுறையைக் கழிக்க பங்களூருக்குப் போயிருந்தவளுக்குப் பிரின்ஸிபாலைப் பார்க்கவேண்டும் போல் தோன்றவே, ஒரு வாரம் முன்னதாகவே திரும்பி வந்துவிட்டாள். 

“அத்தை! அகாதா வந்திருக்கிறார்” என்று ராஜா கூறுயதும், பார்வதி கண் விழித்துப் பார்த்தாள். அகாதாவைக் கை ஜாடை காட்டி அருகில் அழைத்து அமரச் சொன்னாள். அகாதாவுக்கு உணர்ச்சி பொங்கித் துக்கம் நெஞ்சை அடைத்தது. 

”அகாதா! நேற்றெல்லாம் உன் ஞாபகமாகவே இருந்தேன், நீயே வந்துவிட்டாய்! கல்லூரியை நீதான் கவனித்துக்கொள்ள வேண்டும்.” பார்வதியால் அவ்வளவுத்தான் பேசமுடிந்தது. மூச்சு முட்டித் திணறவே கண்களை மூடிக் கொண்டாள். 

“ரெஸ்ட் எடுத்துக் கொள்ளட்டும்; அவரை யாரும் தொந்தரவு பண்ணவேண்டாம்” என்று கூறிவிட்டு, அகாதா விடை பெற்றுக்கொண்டாள். 

அன்று மாலை சேதுபதி வந்தபோது மணி மூன்று இருக்கும். 

கீழே அவர் ராஜாவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு பார்வதி எழுந்து உட்கார்ந்து கொண்டாள், 

அவளுக்கு அவரைக் காணவேண்டும் போலிருந்தது. மெதுவாகக் கட்டிலை விட்டு இறங்கி அறைக்கு வெளியே வந்து நின்றாள். 

“அத்தை…அத்தை! எதுக்காக எழுந்து வந்தீங்க?” என்று கூவியபடியே ராஜா அவளைத் தாங்கிக்கொள்ள ஓடி வந்தான். 

“ராஜா! என்னைக் கீழே படுக்க வை. எனக்கு ஏதோ மாதிரி இருக்கிறது. நெஞ்சை வலிக்கிறது. அவர் வந்திருக்கிறாரா?”

இவ்வளவுதான் அவளால் பேச முடிந்தது. சேதுபதி அவள் எதிரில் வந்து நின்றபோது பார்வதி அவருடன் ஏதோ பேச முயன்றாள். ஆனால் முடியவில்லை. அவள் கண்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. ‘எனக்கு ஒரு குறையுமில்லை. தங்களுடன் பூரணமாக வாழ்ந்துவிட்ட நம்மதியுடன் நான் போகிறேன்’ அந்தப் பார்வையின் பொருள் இதுவாகத்தான் இருக்கவேண்டும். 

அவ்வளவுதான்; அடுத்த சில மணி நேரத்துக்குள், பார்வதியின் கதை முடிந்து விட்டது. 

“அத்தை!” வீரிட்டு அலறிவிட்டான் ராஜா. 

ஊரே பார்வதியின் இல்லத்தில் கூடித் தலை குனிந்து நின்றது. 

‘பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது. அதற்காக நான் எதையும் இழக்கத் தயார்’ என்று கூறிய சேதுபதி பச்சைக் குழந்தைபோல் ஒரு மூலையில் விசும்பிக் கொண்டிருந்தார். 

கண்ணுக்கு லட்சணமாகக் காட்சி அளிப்பதைத் தவிர, விசிறி வாழையினால் யாருக்கும் எவ்விதப் பயனும் கிடையாது. பார்வதியின் வாழ்வும் அத்தகையதுதான். அவள் கடைசிவரை கன்னியாகவே, கண்ணுக்கு லட்சணமான காட்சிப் பொருளாகவே வாழ்ந்துவிட்டுப் போய் விட்டாள். அவளுடைய சொந்த வாழ்க்கை விசிறி வாழையைப்போல், காட்டில் காய்ந்த நிலவைப்போல், பயனற்ற ஒரு வாழ்க்கையாக முடிந்துவிட்டது. 

சாரதாமணிக் கல்லூரி, விடுமுறை முடிந்து திறக்கப்பட்டதும், மாணவிகளும் ஆசிரியைகளும் பிரார்த்தனை மண்டபத்தில் கூடி நின்றார்கள். பார்வதியின் ஆத்ம சாந்திக் காக அவர்கள் இரண்டு நிமிஷ நேரம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டுக் கலைந்தனர். சில தினங்களுக்கெல்லாம் கஸ்தூரி பிரார்த்தனை மண்டபத்துக் கெதிரில் பார்வதி துளசிச் செடியாக வந்து வளர்ந்து கொண்டிருந்தாள். 

சேதுபதியின் இல்லத்தில் முன் வாசல் கூடத்தில் பார்வதியின் படம் மாட்டப்பட்டிருந்தது. அதன் முன்னால் கைகட்டி நின்று கொண்டிருந்தார் அவர். அந்த இடத்தில் தான் பார்வதி டியூஷன் சொல்லிக் கொடுப்பது வழக்கம். 

ஆம்; அவர் கரத்தால் தீண்டிய சரஸ்வதியின் படம் சேதுபதியின் ஆபீஸ் அறையை அலங்கரித்தது. கருத்தால் தீண்டிய பார்வதியின் படம் முன் வாசல் ஹாலை அலங்கரித்தது. 

முடிவுரை 

”ஒரு கதை சொல்கிறேன், கேட்கிறீர்களா?” உற்சாகமாகப் பேச்சைத் தொடங்கினார் நண்பர். 

“சொல்லுங்கள்” என்று நானும் ஆர்வத்துடன் கதை கேட்கத் தயாரானேன். 

“நான் கூறப்போவது ஒரு புதுமையான காதல் நவீனம். மற்றக் காதல் கதைகளோடு இதை ஒப்பிட முடியாது. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த கதை. இதில் வரும் கதாநாயகிக்குக் கிட்டத்தட்ட நாற்பத்தெட்டு வயதாகிறது. கதாநாயகருக்கு அவளைக் காட்டிலும் ஏழெட்டு வயது கூட இருக்கும். ஒருவரை ஒருவர் அந்தரங்கமாக நேசிக்கிறார்கள். அதன் விளைவாக மனப் போராட்டங்களுக்கும் கொந்தளிப்புகளுக்கும் ஆளாகிறார்கள், இறுதியில் கதாநாயகி இறந்து விடுகிறாள். அவர்களிடையே தோன்றும் உணர்வு, அதைக் காதல் என்றே கூறலாம் – அமரத்துவம் பெற்று விடுகிறது. இதுதான் கதை. எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். 

“மிகச் சிறந்த கதை” என்று பதில் கூறிவிட்டுக் கதையைப்பற்றிய சிந்தனையில் மூழ்கிவிட்டேன் நான். 

கதை சொன்னது யார் தெரியுமா? 

கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு தொடர் கதைகள் எழுதுவதில் வல்லமையும் புகழும் பெற்றுள்ள ‘சேவற்கொடியோன்’தான், காதலுக்குரிய வயதைக் கடந்துவிட்ட கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இவர் கதை எழுத முற்படுவானேன்? சந்தேகம் ஏற்பட்டது. ஆயினும் அதை உடனேயே சொல்லி விட விருப்பமின்றி, “மிக உயர்ந்த கதை! எழுதுவதற்கு மிகுந்த ஆற்றலும் அனுபவமும் வேண்டும்” என்றேன். 

“இந்தக் கதையை நான் எழுதுவதாக உத்தேசமில்லை. அதற்கு வேண்டிய அனுபவமோ ஆற்றலோ என்னிடம் இருப்பதாகவும் நான் எண்ணவில்லை. இக்கதையைத் தாங்களோ அல்லது ஜெயகாந்தனோதான் எழுத வேண்டும்,” என்று மிகவும் தன்னடக்கத்தோடு கூறினார் அவர். 

கதையும், அதன் புதுமையும் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தன. அந்தக் கவர்ச்சி காரணமாக நானே கதையை எழுதுவதாகக் கூறினேன். 

ஆயினும் ”இதை வெற்றிகரமாக எழுதி முடிக்கும் ஆற்றல் எனக்கு உண்டா? என் திறமையில் சேவற்கொடியோன் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற முடியுமா?” என்ற பயம் இருக்கத்தான் செய்தது. 

கதையைக் குட்டிச்சுவராக்கி என் பெயரைக் கெடுத்துக் கொள்வதுடன் அவர் பெயரையும் கெடுத்து விடுவோமோ என்ற அச்சமும் இருந்தது. 

மீண்டும் மீண்டும் அந்தக் கதையை அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறையும் புதுப்புதுக் கருத்துக்களும் கற்பனைகளும் வந்துகொண்டே இருந்தன. முழு உருவம் பெறாமலிருந்த கதை, சொல்லச் சொல்ல, முழுமை பெற்றது. எழுதிவிடலாம் என்ற துணிவும் நம்பிக்கையும் ஏற்பட்டபோதிலும் கூடவே இன்னொரு, சந்தேகமும் தோன்றியது. அப்போதுதான் ‘வாஷிங்டனில் திருமணம்’ என்னும் நகைச்சுவைத் தொடரை எழுதி முடித்திருந்தேன். ஆதலால் இந்தக் கதையும் அம்மாதிரி நகைச்சுவை பொருந்தியதா இருக்கும் என்று வாசகர்கள் எதிர்பார்க்கக் கூடுமல்லவா? எனவேதான் முன்னெச்சரிக்கையோடு முன்னுரையில் “இது ஒரு புதுமையான காதல் நவீனம். இந்தக் கதையைப் படிக்கும் வாசகர்களில் யாராவது ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவார்களானால், அதையே இந்தக் கதையின் வெற்றியாகக் கொள்வேன்” என்று குறிப்பிட்டிருந்தேன். அத்துடன் முடிவுரையில் நேயர்களுக்காக ஒரு முக்கிய விஷயம் காத்திருப்பதாகவும் சொல்லியிருந்தேன். 

இப்போது, இந்த இதழுடன், கதை முற்றுப் பெறுகிறது. இருபத்து மூன்று இதழ்களாக இதைத் தொடர்ந்து படித்து வந்த வாசகர்கள் அனைவருக்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல வாசகர்கள் கதையைப் பாராட்டிக் கடிதங்கள எழுதியிருப்பதுடன், பல இடங்களில் உணர்ச்சி வசமாகிக் கண்ணீர் பெருக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். கதையின் வெற்றிக்கு யாராவது ஒரு வாசகர் ஒரு சொட்டுக் கண்ணீர் பெருக்கினாலே போதும் என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு இப்போது ஒரு குடம் கண்ணீர் கிடைத்துவிட்டது. அதுபோதும்! 

இந்த அருமையான கதையையும் இதில் அடங்கியுள்ள பல உயர்ந்த கருத்துகளையும் எனக்குத் தந்து உதவிய திரு சேவற்கொடியோன் அவர்களுக்கு நன்றி செலுத்துவதுடன், இந்தக் கதையின் மூலமாக எனக்குக் கிடைத்துள்ள புகழையெல்லாம் அவரிடமே சேர்த்து விடுகிறேன். கடைசியாக ஒரு வார்த்தை. இந்தக் கதை எந்தத் தனிப் பட்டவர்களின் வாழ்க்கையையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதல்ல.

வணக்கம். 
சாவி

– விசிறி வாழை, 12வது பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *