பொன்னியின் செல்வன்

0
கதையாசிரியர்: ,
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 16, 2023
பார்வையிட்டோர்: 3,042 
 
 

(2012ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

31 – 40 | 41 – 50

41. சுழற்காற்று

சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி பார்த்திபேந்திரனைத் தனியாக அழைத்துச் சென்று சிறிது நேரம் அந்தரங்கமாகப் பேசினார். பின்னர், தம்முடன் வந்த படைவீரர்களுக்குத் தனித்தனியே சில கட்டளைகளைப் பிறப்பித்தார்.

பார்த்திபேந்திரன் இளவரசரிடம் விடைபெற்றுக் கொண்டான். “ஐயா! நான் வந்த காரியம் நிறைவேறாமல் வெறுங்கையோடு திரும்புகிறேன். இதற்காகக் கரிகாலர் என்னை மிகவும் கோபித்துக்கொள்ளபோகிறார். ஆயினும் என்ன செய்வது? தாங்கள் பிடிவாதமாக இருக்கிறீர்கள்; என் பேரில் குற்றமில்லை. இதற்கு இங்குள்ளவர்கள் எல்லாரும் சாட்சி!” என்றான்.

இளவரசர், “அவ்வளவு அவசரமாகப் போகவேண்டுமா? தாங்களும் சேநாதிபதியோடு தொண்டைமானாறு வரை வந்து விட்டுப்போகக்கூடாதா?” என்று கேட்டார்.

“அந்தப்பாதகத்துக்கு நான் உடந்தையாயிருக்க மாட்டேன். நான் வந்த கப்பல் திரிகோணமலையில் நிற்கிறது. அங்கே போய்க் கப்பல் ஏறிக் கூடியசீக்கிரம் நான் காஞ்சிக்குப் போகவேண்டும். கரிகாலரிடம் நடந்ததைச் சொல்ல வேண்டும்!” என்றான் பார்த்திபேந்திரன்.

பின்னர் வந்தியத்தேவனைப் பார்த்து, “வல்லத்தரையனே! என்னுடன் நீ காஞ்சிக்கு வரவில்லையா?” என்று கேட்டான்.

வந்தியத்தேவன் சிறிது திடுக்கிட்டு நின்றுவிட்டு, “இல்லை; இளவரசருடன் போக விரும்புகிறேன்” என்றான்.

பார்த்திபேந்திரன் புறப்பட்டான், சேநாதிபதியின் கட்டளையின்படி அவனுடன் இன்னும் சில வீரர்களும் கிளம்பிச் சென்றார்கள்.

இதற்குள் சேநாதிபதியின் காரியங்கள் முடிந்துவிட்டன. அவருடன் வந்திருந்த படை வீரர்களில் நாலுபேரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் வெவ்வேறு திசையில் புறப்பட்டுச் சென்றார்கள்.

இளவரசரின் கோஷ்டியும் புறப்பட்டது. இளவரசர், சேநாதிபதி, வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் இவர்களுடனே நாலு வீரர்களும் உயர்ந்த சாதிக் குதிரைகள் மீதேறி வடதிசை நோக்கிப் புறப்பட்டார்கள். இவர்களைப் பின்தொடர்ந்து பூங்குழலி ஏறியிருந்த யானை, ஜாம் ஜாம் என்று கம்பீரமாக நடந்து வந்தது.

தொண்டைமான் நதியின் முகத்துவாரத்தில் இளவரசர் அருள்மொழிவர்மர் கப்பலுக்குப் போய்ச்சேரும் வரையில் கரையில் நின்று அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கப்பலில் இளவரசர் ஏறிக்கொண்ட உடனே அவரை ஏற்றிச் சென்ற படகு திரும்பியது. “நாமும் நம் படைகளுடன் தஞ்சையை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான்!” என்று தமக்குத்தாமே சொல்லுகிறவர் போல் கொடும்பாளூர் வேளார் உரத்துச் சொல்லிக் கொண்டார்.

பக்கத்திலிருந்த ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, “வைஷ்ணவனே! நீ என்ன செய்யப் போகிறாய்? மாதோட்டத்துக்கு என்னுடன் வரப் போகிறாயா?” என்று கேட்டார்.

“இல்லை, ஐயா!”

“அந்தப் பெண்ணை இங்கே கூப்பிடு!” ஆழ்வார்க்கடியான் சென்று பூங்குழலியிடம் சேநாதிபதி அழைப்பதைக் கூறினான்.

“இதோ பார், பெண்ணே! நீ வெகு புத்திசாலி! நல்ல சமயத்தில் வந்து, முக்கியமான செய்தி சொன்னாய். சோழகுலத்துக்குப் பெரிய உதவி செய்தாய். இதை நான் என்றும் மறக்க மாட்டேன். தக்க சமயத்தில் தகுந்த பரிசில் கொடுப்பேன்” என்றார்.

பூங்குழலி, “வந்தனம், ஐயா! எனக்குப் பரிசில் எதுவும் தேவையில்லை” என்று பணிவுடன் சொன்னாள்.

“தேவையில்லை என்றால் யார் விடுகிறார்கள்? இந்தக் குழப்பமெல்லாம் கொஞ்சம் அடங்கட்டும். பிறகு…பிறகு சோழ நாட்டுச் சைன்யத்தில் வீராதி வீரனாகப் பார்த்து உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன். உனக்கு வாய்க்கின்ற கணவன் அற்ப சொற்பமானவனாய் இருந்தால் போதாது. பீமசேனனாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவனைக் கண்ணிலே விரலைக் கொடுத்து ஆட்டி வைத்துவிட மாட்டாயா?” என்று சேநாதிபதி கூறிப் புன்னகை புரிந்தார்.

பூங்குழலி தரையைப் பார்த்தபடி நின்றாள். அவள் உள்ளத்தில் கோபம் பொங்கியது. ஆனால் அதை அச்சமயம் காட்டிகொள்ள விரும்பவில்லை. இந்த முரட்டுக் கிழவரிடம் சண்டை பிடிப்பதில் பயன் என்ன? கோபத்தை அடக்கிக் கொள்ள முயன்றாள்.

குனிந்த தலை நிமிராமல் பூங்குழலி திரும்பினாள். கடற்கரைக்கு எதிர்ப்பக்கம் நோக்கி நடந்தாள். நடை மெதுவாக ஆரம்பமாயிற்று. வரவரவேகம் அதிகரித்தது. சிறிது தூரம் காட்டில் புகுந்து சென்ற பிறகு, அவளுடைய படகை விட்டிருந்த இடத்தைக் குறி வைத்து நடந்தாள். படகு விட்டிருந்த இடத்தில் கட்டிப் போட்டபடியே இருந்தது.

பூங்குழலி படகில் ஏறிக்கொண்டாள். கடலை நோக்கிப் படகைச் செலுத்தினாள். நதியின் ஓட்டத்தோடு சென்றபடியால் சீக்கிரத்திலேயே தொண்டைமானாற்றின் முகத்துவாரத்தை அடைந்துவிட்டாள். பின்னர் கடலில் படகைச் செலுத்தினாள். சிறிது நேரத்துக்கெல்லாம் சுழிக்காற்று அடிக்கப் போகிறது என்று அவளுக்குத் தெரிந்து போயிற்று. சுழிக்காற்றின் முன் அறிகுறிகளை அவள் நன்கு அறிந்திருந்தாள். முதல் நாள் இரவு சந்திரனைச் சுற்றிச் சாம்பல் நிற வட்டம் காணப்பட்டது. இன்றைக்குப் பகலெல்லாம் ஒரே புழுக்கமாயிருந்தது. மரங்களில் இலை அசையவில்லை. அதோ தென்மேற்கு மூலையில் கரிய மேகத்திட்டுக்கள் கிளம்பிவிட்டன. சீக்கிரத்தில் சுழிக்காற்று அடிக்கப்போவது நிச்சயம். கடலின் கொந்தளிப்பு அற்புதக் காட்சியிருக்கும். கடலில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. பூதத் தீவுக்குப் போய்த் தங்கியிருப்பது நல்லது. காற்று அடித்துவிட்டுப் போன பிறகு, கடலிலும் கொந்தளிப்புச் சிறிது அடங்கிய பிறகு, படகைக் கடலில் செலுத்திக்கொண்டு கோடிக்கரைக்குப் போகலாம்.

இப்போது என்ன அவசரம்? கோடிக்கரைக்கு இப்போது அந்த மரக்கலங்கள் அநேகமாகப் போயிருக்கும். நல்லவேளை சுழிக்காற்றில் அது அகப்பட்டுக் கொண்டிராது. இளவரசர் இத்தனை நேரம் பத்திரமாகப் போய் அங்கே இறங்கியிருப்பார். சுழிக்காற்றில் அகப்பட்டுக் கொண்டிருக்கமாட்டார்; அந்த வரைக்கும் திருப்தி அடையலாம்.

ஆனால் சுழிக்காற்றுத் தொடங்குவதற்கு முன்னால் அடியோடு காற்று நின்று போயிருந்தபடியால் மரக்கலங்கள் பாய் விரித்திருந்தும் கடலில் போக முடியவில்லை என்பது பூங்குழலிக்குத் தெரியாது. ஆகையால் இத்தனை நேரம் அக்கரை போய்ச் சேர்ந்திருக்கும் என்றே நினைத்தாள். தொண்டைமானாற்றின் முகத்துவாரத்திலிருந்து பூதத்தீவு அதிக தூரத்தில் இல்லை ஆகையால் புறப்பட்ட ஒரு நாழிகை நேரத்துக்குள் அங்கே போய்ச் சேர்ந்துவிட்டாள். பூங்குழலி பூதத்தீவைச் சேர்ந்ததற்கும் சுழிக்காற்று அடிக்கத் தொடங்கியதற்கும் சரியாயிருந்தது.

படகைக் கரையில் ஏற்றிக் குப்புறக் கவிழ்த்துப் பத்திரமாய்க் கட்டிப் போட்டுவிட்டு, பூங்குழலி அத்தீவில் இருந்த ஒரு சிறிய புத்த ஸ்தூபத்தை அடைந்தாள். பூதத்தீவில் ஓங்கி வளர்ந்திருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் தலைவிரி கோலமாக ஆடின. கடல் அலைகள் அத்தென்னை மரங்களின் உயரம் சில சமயம் எழும்பி இமயமலையின் பனிச் சிகரங்களைப்போல் ஒரு வினாடி காட்சி அளித்து, மறு வினாடி நூறு கோடி நுரைத் துளிகளாகச் சிதறி விழுந்தன. சுழன்று சுழன்று அடித்த காற்றின் சப்தமும் அலைகளின் பேரொலியும் இடையிடையே கேட்ட இடி முழக்கமும் சேர்ந்து திக்குத் திகாந்தங்கள் எல்லாம் இடிந்து தகர்ந்து விழுகின்றன என்று எண்ணச் செய்தன. வானத்தை வெட்டிப் பிளப்பதுபோல் அவ்வப்போது தோன்றிக் கப்பும் கிளையும் விட்டுப் படர்ந்து ஓடி மறைந்த மின்னல்கள் ஒரு வினாடி நேரம் கொந்தளித்த அலை கடலையும், பேயாட்டம் ஆடிய மரங்களையும், வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு மறுவினாடி கன்னங்கரிய காரிருளில் ஆழச் செய்தன.

இரவு வெகு நேரம் சுழிக்காற்றின் கோலாகலத்தை அநுபவித்துவிட்டுப் பூங்குழலி ஸ்தூபத்தின் அடிவாரக் குகைக்குச் சென்று கண்ணயர்ந்தாள். பொழுது விடிந்து அவள் நன்றாய் விழித்தெழுந்த போது சுழிக்காற்றின் கோலாகலம் ஒருவாறு அடங்கி விட்டிருந்தது. முன்னாளிரவு சுழிக்காற்று அத்தீவை என்ன பாடுபடுத்திவிட்டது என்பதற்கு அறிகுறியான காட்சிகள் நாலாபக்கமும் காணப்பட்டன. பூங்குழலி அக்காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தபோது கடலில் சற்றுத் தூரத்தில் ஒரு கட்டுமரம் மிதப்பது போல் தெரிந்தது. அது கடற்கரையோரத்து அலைகளினால் பல தடவை அப்படியும் இப்படியும் அலைப்புண்ட பிறகு கடைசியாகக் கரையில் வந்து ஒதுங்கியது. அப்போதுதான் அதிலே ஒரு மனிதன் இருப்பதைப் பூங்குழலி கவனித்தாள். ஓடிப் போய்ப் பார்த்தாள். கட்டுமரத்தில் கட்டப்பட்டிருந்த அந்த மனிதன் குற்றுயிராயிருந்தான். அவனைக் கட்டு அவிழ்த்து விட்டு ஆசுவாசப்படுத்தினாள். அவன் ஈழத்துக் கடற்கரைக் கிராமம் ஒன்றைச் சேர்ந்த வலைஞன். மீன் பிடிக்க போன இடத்தில் சுழிக்காற்றில் அகப்பட்டுக் கொண்டதாகக் கூறினான். தன்னுடன் இருந்த தோழனைக் கடல் இரையாக்கிக் கொண்டதாகவும் தான் பிழைத்தது புனர்ஜன்மம் என்றும் தெரிவித்தான். இன்னும் முக்கியமான ஒரு செய்தியையும் அவன் கூறினான்.

“முன்னிரவு நேரத்தில், கடுமையான சுழிக்காற்று அடித்துக் கொஞ்சம் நின்றது போலிருந்தது. எங்களைச் சுற்றிலும் காரிருள் சூழ்ந்திருந்தது. திடீரென்று ஒரு பேரிடி இடித்தது. அப்போது தோன்றிய மின்னல் வெளிச்சத்தில் இரண்டு மரக்கலங்கள் தெரிந்தன. ஒரு மரக்கலம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அந்தப் பயங்கரமான காட்சியைச் சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் மனிதர்கள் அவசர நடமாட்டமும் தெரிந்தது. பிறகு தீப்பிடித்த கப்பல் கடலில் முழுகிவிட்டது. மற்றொரு மரக்கலம் இருட்டில் மறைந்து விட்டது!” என்று அம்மனிதன் தட்டுத் தடுமாறிக் கூறினான்.

இதைக் கேட்டவுடனே பூங்குழலிக்கு இளவரசரை ஏற்றிச் சென்ற கப்பல் அவற்றில் ஒன்றாயிருக்குமோ என்ற ஐயம் உதித்தது. அப்படி இருக்க முடியாது என்று நிச்சயம் அடைந்தாள். கடலில் எத்தனையோ கப்பல்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும். அதைப்பற்றி நமக்கு என்ன கவலை? ஆனாலும் தீப்பிடித்த கப்பலில் இருந்தவர்களில் சிலர் கடலில் விழுந்திருக்கக் கூடும். இந்தக் கட்டுமரத்து வலைஞனைப் போல் அவர்களில் யாராவது கையில் அகப்பட்டதைப் பிடித்துக்கொண்டு தத்தளிக்கக் கூடும். அவர்களுக்கு ஏன் நாம் உதவி செய்யக்கூடாது? படகில் ஏறிச் சென்று அப்படித் தத்தளிக்கிறவர்களை ஏற்றிக்கொண்டு வந்து ஏன் கரை சேர்க்கக் கூடாது?…

அவ்வளவுதான்; இந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ, பூங்குழலி படகைக் கட்டவிழ்த்து நிமிர்த்திக் கடலில் தள்ளி விட்டாள்; தானும் ஏறிக் கொண்டாள். அவளுடைய இரும்புக் கரங்களின் பலம் முழுவதையும் உபயோகித்துத் துடுப்பை வலித்தாள்.

பாய்மரக் கட்டையைப் பிடித்துக்கொண்ட இளவரசரும், வந்தியத்தேவனும் அலைகடலில் மொத்துண்டு மொத்துண்டு மிதந்து கொண்டிருந்தார்கள். அன்று ஓர் இரவுதான் அவர்கள் அவ்வாறு கடலில் மிதந்தார்கள். ஆனால் வந்தியத்தேவனுக்கு அது எத்தனையோ யுகங்கள் எனத் தோன்றியது.

இளவரசர் அவனை அன்புடன் நோக்கி, “தோழா! சமீபத்தில் எங்கேயோ கரை இருக்கவேண்டும். தென்னை மரம் ஒன்றின் உச்சியைச் சற்று முன் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் பொறுமையாயிரு!” என்று சொன்னார்.

“ஆகா! அது என்ன! யாரோ பாடுகிற குரல்போல் தொனிக்கிறதே!” என்றார் இளவரசர். ஆம்; அப்போது அவர்களுடைய காதில் பூங்குழலி படகிலிருந்து பாடிய பாட்டு அவர்களுடைய காதில் அபய கீதமாகத் தொனித்தது. உடற்சோர்வும் மனச்சோர்வும் உற்று, முக்கால் பிராணனை இழந்திருந்த வந்தியத்தேவனுக்குக்கூட அந்தக் கீதம் புத்துயிர் அளித்து உற்சாகம் ஊட்டியது.

“இளவரசே! பூங்குழலியின் குரல்தான் அது! படகு ஓட்டிக்கொண்டு வருகிறாள். நாம் பிழைத்துப் போனோம்!” என்று சொன்னான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் படகு அவர்கள் கண்ணுக்குத் தென்பட்டது. நெருங்கி நெருங்கி அருகில் வந்தது. பூங்குழலி , “இது உண்மையில் நடப்பதுதானா?” என்று சந்தேகித்துச் செயலிழந்து நின்றாள். இளவரசர், வந்தியத்தேவனைக் கட்டு அவிழ்த்து விட்டார். முதலில் தாம் படகிலே தாவி ஏறிக்கொண்டார். பின்னர் வந்தியத்தேவனையும் ஏற்றி விட்டார். பூங்குழலி கையில் பிடித்த துடுப்புடனே சித்திரபாவையைப் போல் செயலற்று நின்றாள்.


42. கோடிக்கரையில்

சுழிக்காற்று அடித்த இரண்டு நாளைக்குப் பிறகு கோடிக்கரைக்குப் பெரிய பழுவேட்டரையரும் அவருடைய பரிவாரங்களும் வந்து சேர்ந்தார்கள். பல்லக்கும் பின்தொடர்ந்து வந்தது. ஆனால் இம்முறை அந்தப் பல்லக்கில் அமர்ந்து இளையராணி நந்தினிதேவியே பிரயாணம் செய்தாள். சுழிக்காற்றுக்கு முன்னால் அவர்கள் நாகைப்பட்டினத்துக்கு வந்திருந்தார்கள்.

சில நாளைக்கு முன் நாகைப்பட்டினத்தில் புகழ் பெற்றிருந்த சூடாமணி புத்தவிஹாரத்தைச் சேர்ந்த பிக்ஷுக்கள் இருவர் தஞ்சைக்குச் சக்கரவர்த்தியைப் பார்க்க வந்திருந்தார்கள். புத்த சங்கத்தின் சார்பாகச் சுந்தரசோழர் விரைவில் நோய் நீங்கிக் குணம் அடையவேண்டும் என்ற வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். அப்போது அவர்கள் இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கையில் புத்த தர்மத்துக்குச் செய்துவரும் தொண்டுகளைக் குறித்துத் தங்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள். இடிந்து போன புத்த விஹாரங்களைப் புதுப்பித்துக் கொடுக்கும்படியாக இளவரசர் கட்டளையிட்டு நிறைவேற்றியும் வருவது இலங்கையில் உள்ள புத்த பிக்ஷுக்களின் மகா சங்கத்துக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்து வருவதாகவும் அவர்கள் கூறினார்கள். “சக்கரவர்த்திப் பெருமானே! இன்னும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியும் நாங்கள் கேள்விப்படுகிறோம். இலங்கையின் பழமையான சிம்மாசனத்தைத் தங்களுடைய இளைய திருக்குமாரருக்கே அளித்து இலங்கை அரசராக முடி சூட்டி விடலாம் என்று பிக்ஷுக்களில் ஒரு பெரும் பகுதியார் கருதுகிறார்களாம்! அவ்விதம் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்! இதைக் காட்டிலும் நம் இளவரசரின் பெருமைக்கு வேறு என்ன சான்று வேண்டும்!” என்றார்கள்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பெரிய பழுவேட்டரையரின் உள்ளத்தில் ஓர் அபூர்வமான யோசனை உதயமாயிற்று. பிக்ஷுக்கள் சென்ற பிறகு அதைச் சுந்தரசோழச் சக்கரவர்த்தியிடமும் தெரிவித்தார்.

“ஈழ நாட்டிலிருந்து தங்கள் இளம் புதல்வரைத் தருவிக்கும் படியாகத் தாங்கள் பன்முறை சொல்லிவிட்டீர்கள். நானும் ஆள் அனுப்பி அலுத்து விட்டேன். நமது ஆட்கள் இளவரசரைச் சந்திக்காத படியும் நம் ஓலை இளவரசரைச் சேராதபடியும் அந்தக் கொடும்பாளூர்ப் பெரிய வேளான் செய்துகொண்டு வருகிறான். இல்லாவிடில், தங்கள் அருமைப் புதல்வர் தங்கள் விருப்பந் தெரிந்த பிறகும் இத்தனை காலம் வராமல் தாமதிப்பாரா? இலங்கைச் சிம்மாதனத்தைக் கவர்ந்து முடி சூட்டிக்கொள்ளச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டி இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளை பிறப்பித்து அனுப்புவோம். அத்தகைய கட்டளையைப் பூதி விக்கிரமகேசரி தடை செய்ய முடியாது. அன்றியும், இளவரசரிடம் நேரில் எப்படியேனும் கட்டளையைச் சேர்ப்பிக்கச் செய்துவிட்டால் இளவரசர் கட்டாயம் வந்தே தீருவார்!”

இதைக் கேட்ட சுந்தர சோழர் புன்னகை புரிந்தார். விசித்திரமான யோசனைதான்; ஆயினும் ஏன் கையாண்டு பார்க்கக் கூடாது? பொன்னியின் செல்வனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் சக்கரவர்த்தியின் மனதில் பொங்கிக் கொண்டிருந்தது. தம்முடைய அந்திய காலம் நெருங்கிக் கொண்டிருப்பதாக அவர் உணர்ந்தார். ஆகையால் தம் அந்தரங்க அன்புக்குரிய இளங்கோவிடம் இராஜ்யத்தைப் பற்றித் தம் மனோரதத்தை வெளியிட விரும்பினார். மதுராந்தகனுக்கே தஞ்சாவூர் இராஜ்யத்தை அளிக்க வேண்டும் என்ற தம் விருப்பத்தை அறிந்தால் அருள்மொழிவர்மன் மறுவார்த்தையே பேசாமல் அதை ஒப்புக்கொள்வான். பின்னர் அவன் மூலமாக ஆதித்த கரிகாலனுடைய மனத்தை மாற்றுவதும் எளிதாயிருக்கும்.

இவ்வாறு சிந்தித்துத் தனாதிகாரியின் யோசனையைச் சக்கரவர்த்தி ஆமோதித்தார். அதன் பேரில்தான் அருள்மொழிவர்மரைச் சிறைப்படுத்தி வரும்படி கட்டளை அனுப்பப்பட்டது.அருள்மொழிவர்மரைச் சிறைப்படுத்தி வரும்படிகட்டளையுடன் இருமரக்கலங்கள் ஈழநாட்டுக்குச் சென்ற பிறகு, பெரிய பழுவேட்டரையர் சிறிது மனக்கவலை கொண்டார். இளவரசருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் தனக்குப் பெரும் பழி ஏற்படும் என்பதை உணர்ந்தார். ஆகையால் தாமே நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு நேரே சென்றிருந்து, இளவரசரைத் தக்கபடி வரவேற்றுத் தமது சொந்தப் பொறுப்பில் அவரைத் தஞ்சாவூருக்கு அழைத்துக் கொண்டு வர விரும்பினார்.

இப்படியெல்லாம் யோசித்துப் பெரிய பழுவேட்டரையர் நாகைப்பட்டினத்துக்குப் போய்க் காத்திருக்கத் தீர்மானித்தார். அவருக்கு இருந்த காரணங்களைக் காட்டிலும் அதிகமாகவே நந்தினிதேவிக்கு இருந்தன. மந்திரவாதி ரவிதாஸன் போன காரியம் எவ்வளவு தூரம் வெற்றியடைந்தது என்று அறியவும் ஆர்வம் கொண்டிருந்தாள். ஆகையால் நாகைப்பட்டினத்துக்குத் தானும் வருவதாகக் கூறினாள். பழுவேட்டரையரும், நந்தினியும் நாகைப்பட்டினத்திலிருந்தபோதுதான் சுழற் காற்று அடித்தது.

சுழிக்காற்று அல்லோலகல்லோலப்படுத்தி விட்டுப்போன பிறகு, கடலிலே கப்பல்களுக்கும் படகுகளுக்கும் சேதம் உண்டா என்பதைப் பற்றிப் பழுவேட்டரையர் விசாரித்து அறிந்தார். கரையோரத்தில் அனைவரும் சுழிக்காற்று வரப்போவதை அறிந்து ஜாக்கிரதையாயிருந்த படியால் அதிகச் சேதம் ஏற்படவில்லையென்று தெரிந்தது. ஆனால் நடுக்கடலில், ஈழத்துக்கும் கோடிக்கரைக்கும் நடுவில், இரு கப்பல்கள் தத்தளித்ததாகவும், அவற்றில் ஒன்று தீப்பற்றி எரிந்து முழுகியதாகவும் கட்டு மரங்களில் மீன் பிடிக்கச் சென்றிருந்த வலைஞர்கள் சிலர் கூறினார்கள். இது பழுவேட்டரையருக்கு மிக்க கவலையை உண்டாக்கிற்று. அந்த இரண்டு மரக்கலங்களும் இளவரசரைச் சிறைப்பிடித்து வந்த கப்பல்களாயிருக்கலாம் அல்லவா? அப்படியானால் இளவரசரின் கதி யாதாகியிருக்குமோ? இளவரசருக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் தனக்குப் பெரும் பழி ஏற்படுமே? சோழ நாட்டு மக்களின் எல்லையற்ற அன்பைக் கவர்ந்தவராயிற்றே, அருள்மொழிவர்மர். மக்களுக்கு அவரைப் பற்றி என்ன சொல்வது? சக்கரவர்த்திக்குத்தான் என்ன சமாதானத்தைக் சொல்வது? நிச்சயமான செய்தி தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் பேராவல் அவருக்கு உண்டாயிற்று. கோடிக்கரைக்குப் போனால் ஒருவேளை விவரம் தெரியலாம். மூழ்கிய கப்பலை நன்றாய்ப் பார்த்தவர்கள் அங்கே இருக்கக்கூடும். மூழ்கிய கப்பலிலிருந்து தப்பியவர்கள் யாரேனும் கரை சேர்ந்திருக்கவும் கூடும். ஆம்; உடனே கோடிக்கரைக்குப் போக வேண்டியதுதான்.

நாகைப்பட்டினத்திலிருந்து கோடிக்கரைக்கு இரண்டு வழிகள் உண்டு. கடற்கரையோரமாகச் சென்ற கால்வாய் வழியாகப் படகில் ஏறிப் போகலாம். அல்லது சாலை வழியாகவும் போகலாம். பழுவேட்டரையரின் பரிவாரங்கள் அதிகமாயிருந்தபடியால் சாலை வழியாகவே போனார்கள். மேலும் சாலை வழியாகச் சென்றால் கடற்கரையோரத்தில் வந்து ஒதுங்கும் கட்டுமரக்காரர்களையும் படகோட்டிகளையும் விசாரித்துக்கொண்டு போகலாம் அல்லவா?

கோடிக்கரைக் கடற்கரை நெடுகிலும் ஒரு காத தூரத்துக்குத் தம் ஆட்களைப் பரவலாக நிறுத்தி வைத்தார். பழுவேட்டரையரும் அமைதியின்றிக் கடற்கரை ஓரமாக அலைந்து திரிந்தார்.


43. குளிர் காய்ச்சல்

நடுக்கடலில் படகு தொட்டில் ஆடுவது போல் உல்லாசமாக ஆடிக்கொண்டு சென்றது. இரண்டு நாளைக்கு முன்னால் அங்கே தென்னைமர உயரம் அலைகள் எழும்பி விழுந்தன என்று கற்பனை செய்வதே கடினமான காரியம். படகில் இளவரசர் பொன்னியின் செல்வரும், வந்தியத்தேவனும், பூங்குழலியும் இருந்தனர். பூங்குழலியின் கையில் துடுப்பு இருந்தது. ஆனால் அதை அவள் விசையாகப் போடவில்லை. வந்தியத்தேவனுக்கும் இளவரசருக்கும் நடந்த சம்பாஷணையை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

படகு, கோடிக்கரை சேர்ந்த பிறகு என்ன செய்யவேண்டும் என்பது பற்றித்தான் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். இளவரசர் தஞ்சாவூருக்குப் போகக்கூடாது என்றும், பழையாறைக்கு வரவேண்டும் என்றும் வந்தியத்தேவன் வாதிட்டுக் கொண்டிருந்தான்.

“தங்கள் சகோதரி தங்களை மிக அவசர காரியமாகப் பார்க்க விரும்புகிறார். தங்களைக் கையோடு அழைத்துக் கொண்டு வருவதாக வாக்களித்து வந்திருக்கிறேன். அதை நிறைவேற்றி வைக்க வேண்டும்” என்று மன்றாடினான்.

“உன் வாக்கை நிறைவேற்றுவதற்காக என் தந்தையின் கட்டளையை மீறச் சொல்கிறாயா?” என்று இளவரசர் கோபமாகக் கேட்டார்.

“அது தங்கள் தந்தையின் கட்டளையில்லை; பழுவேட்டரையரின் கட்டளையல்லவா?” என்றான் வந்தியத்தேவன்.

அதோடு இன்னொன்றும் சொன்னான். “சக்கரவர்த்தியைத் தாங்கள் பார்க்கப் போவதாயிருந்தாலும் சுதந்திரமாகப் பார்க்கப் போவது நல்லதா, பழுவேட்டரையர்களின் சிறையாளியாகப் பார்க்கப் போவது நல்லதா? நான் சொல்கிறேன், கேளுங்கள். தங்களைப் பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி பரவ வேண்டியதுதான். சோழ நாட்டு மக்கள் எல்லோரும் திரண்டு எழுந்து வந்துவிடுவார்கள். தங்களுடைய அருமைத் தாய்நாடு ஒரு பயங்கர ரணகளமாகி விடும். அது நல்லதா என்று எண்ணிப் பாருங்கள்! அப்படிப்பட்ட கேடு சோழ நாட்டுக்கு ஏற்படக் கூடாது என்று தான் கடவுளே அந்தச் சுழற்காற்றை ஏவி விட்டிருக்க வேண்டும். கடவுளின் விருப்பத்துக்கு விரோதமாகத் தாங்கள் சோழ நாட்டில் கலவரத்தை உண்டாக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டான் வந்தியத்தேவன்.

அவ்வளவு நேரமும் அவன் சொல்லி வந்த வாதங்களுக்குள் இது இளவரசரின் மனத்தை ஓரளவு மாற்றியது. தம்மைப் பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்தால், சோழநாட்டில் கலவரம் உண்டாவது சாத்தியந்தான். மக்களுக்குத் தம்மிடம் உள்ள அபிமானம் எவ்வளவு மகத்தானது என்பது அவருக்கு ஒருவாறு தெரிந்துதானிருந்தது. ஆகையால் இளவரசர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, “அப்படியே உன் விருப்பத்தை நிறைவேற்ற நான் முடிவு செய்தாலும் அது எப்படிச் சாத்தியம்? கோடிக்கரையில் பழுவேட்டரையர்களின் ஆட்கள் எனக்காகக் காத்துக் கொண்டிருக்க மாட்டார்களா?” என்று கேட்டார்.

“அதற்கு உதவி செய்ய இந்த ஓடக்காரப் பெண் இருக்கிறாள். கரையில் எத்தனை பேர் காத்திருந்தாலும் அவர்கள் கண்களில் படாமல் கோடிக்கரைக் காட்டுக்குள் நம்மைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவாள். பூங்குழலி! நான் கூறியது காதில் விழுந்ததா? அவ்விதம் செய்ய முடியுமா?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.

“கோடிக்கரைக்குக் கொஞ்சம் மேற்கே தள்ளிப் படகைக் கொண்டுபோனால் இருபுறமும் காடு அடர்ந்த கால்வாய் ஒன்று இருக்கிறது. அதன் வழியாகப் படகைவிட்டுக் கொண்டு போகலாம். இருபுறமும் அங்கே சதுப்புநிலம். சுலபமாக யாரும் வரமுடியாது!” என்று பூங்குழலி சொன்னாள்.

“எங்களை அங்கே விட்டுவிட்டு நீ கோடிக்கரை போய்த் தகவல் விசாரித்துக் கொண்டு வர முடியும் அல்லவா?”

“முடியும்; படகை ஒருவரும் பார்க்கமுடியாதபடி நிறுத்துவதற்கு எத்தனையோ இடம் இருக்கிறது.”

“இளவரசே! கேட்டீர்களா!” என்றான் வந்தியத்தேவன்.

“கேட்டேன்! என்னுடைய தாய் நாட்டில் என்னைத் திருடனைப் போல் பிரவேசிக்கச் சொல்லுகிறாய். திருடனைப்போல் ஒளிந்திருக்கச் சொல்லுகிறாய்.” என்றார்.

படகில் சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. “நண்பனே! உன்னுடைய சூழ்ச்சிகள் எல்லாம் வீண்தான். நான் பழையாறைக்கும் போகப் போகிறதில்லை. தஞ்சாவூரையும் பார்க்கப் போகிறதில்லை. கடவுள் என்னைக் கைலாசத்துக்கே அழைத்துக் கொண்டு போய் விடுவார் போலிருக்கிறது!” என்றார்.

வந்தியத்தேவனும் பூங்குழலியும் பீதியடைந்து இளவரசரை உற்றுப் பார்த்தார்கள். அவர் உடம்பு நடுங்கத் தொடங்கியிருப்பதைக் கண்டார்கள்.

வந்தியத்தேவன் அவர் அருகில் சென்று, “ஐயா! இது என்ன? தங்கள் உடம்பு ஏன் நடுங்குகிறது?” என்று கேட்டான்.

“இது குளிர் காய்ச்சல், அப்பனே! இலங்கையில் இந்தக் காய்ச்சல் அதிகம் பரவியிருக்கிறது. இந்தச் சுரம் வந்தவர்கள் பிழைப்பது அரிது!” என்று சொன்னார் இளவரசர்.

இளவரசரின் உடல் நடுக்கம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் தூக்கித் தூக்கிப்போட ஆரம்பித்தது.

“ஐயா! நான் என்ன செய்யட்டும்? சொல்லுங்கள்! ஒன்றும் புரியவில்லையே? படகை எங்கே கொண்டு போகட்டும்? பூங்குழலி! கோடிக்கரையில் வைத்தியர் இருக்கிறார் அல்லவா?” என்று வந்தியத்தேவன் பதறினான்.

இளவரசர் திடீரென்று குதித்து எழுந்தார். நடுங்கிக் கொண்டிருந்த அவர் உடம்பு இப்பொழுது நிற்க முடியாமல் தள்ளாடியது.

“என்னை என் தமக்கையிடம் கொண்டு போங்கள்! என்னை உடனே இளைய பிராட்டியிடம் கொண்டு போங்கள்!” என்ற வார்த்தைகள் அவருடைய வாயிலிருந்து குளறலாக வெளிவந்தன.

நடுக்கத்துடன் ஆடிக்கொண்டு நின்ற இளவரசர் அடுத்த கணத்தில், “அக்கா! இதோ வருகிறேன்! உன்னைப் பார்க்க இதோ வருகிறேன்! யார் தடுத்தாலும் இனிமேல் கேட்கமாட்டேன்” என்று சொல்லிக் கொண்டே படகிலிருந்து கடலில் பாயப் போனார்.

நல்லவேளையாக வந்தியத்தேவன் அப்போது நிலைமை இன்னதென்பதை உணர்ந்தான். இளவரசர் சுரத்தின் வேகத்தினால் சுய உணர்வு இழந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டான். கடலில் பாயப் போனவரைச் சட்டென்று பிடித்து நிறுத்தினான்.

ஏற்கெனவே மிக்க பலசாலியான இளவரசர், இப்போது சுரத்தின் வேகத்தினால் பன்மடங்கு அதிக பலம் பெற்றிருந்தார். வந்தியத்தேவனுடைய பிடியிலிருந்து திமிறிக் கொள்ள முயன்றார். தன்னால் மட்டும் அவரைத் தடுக்க முடியாது என்பதை வந்தியத்தேவன் கண்டு, “பூங்குழலி! பூங்குழலி! சீக்கிரம் ஓடி வா!” என்று அலறினான்.

வந்தியத்தேவனும், பூங்குழலியும் இளவரசரை மெதுவாகப் படகில் படுக்க வைத்தார்கள்.

அதன் பிறகு பொன்னியின் செல்வர் சும்மா படுத்திருந்தார். அவருடைய கண்கள் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அவருடைய வாயிலிருந்து ஏதேதோ வார்த்தைகள் குழறிக் குழறி வந்து கொண்டிருந்தன. சிலவற்றுக்குப் பொருள் விளங்கின. பெரும்பாலும் சம்பந்தமற்ற வார்த்தைகளாகத் தோன்றின.

“பூங்குழலி! படகை இனிமேல் வேகமாகச் செலுத்திக் கொண்டு போக வேண்டியதுதானே?” என்றான் வந்தியத்தேவன். படகு துரிதமாகச் சென்றது.

வந்தியத்தேவன் இளவரசரின் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். மறுபடியும் அவர் சுர வேகத்தில் கடலில் குதித்து விட்டால் என்ன செய்வது என்பதனை நினைத்தபோதே அவன் கதி கலங்கியது. ஆகையால் சர்வ ஜாக்கிரதையாக அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அதே சமயத்தில் மேலே செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றியும் அவன் உள்ளம் தீவிரமாகச் சிந்தனை செய்தது.

“நீ முன்னம் சொன்னாயே, “கோடிக்கரைக்கு மேற்கே கால்வாய் ஒன்று இருக்கிறதென்று? அங்கேயே படகை விடலாமா?”

“அப்படித்தான் செய்ய வேண்டும். இருட்டுகிற சமயத்துக்கு அங்கே போய்ச் சேரலாம். ஐயா! நீங்கள் ஒரு நாள் இருண்ட மண்டபத்தில் ஒளிந்திருந்தீர்களே? அதற்கு வெகு சமீபம் வரையில் அந்தக் கால்வாய் வருகிறது. இளவரசருடன் தாங்கள் சற்று நேரம் அங்கே தாமதித்தால் நான் போய் எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டு விரைவில் வந்து சேருகிறேன்.”

“கால்வாய் அங்கேயே நின்று விடுகிறதா, பூங்குழலி! மேலும் எங்கேயாவது போகிறதா?”

“கோடிக்கரையிலிருந்து நாகைப்பட்டினம் வரையில் அந்தக் கால்வாய் போகிறது” என்றாள் பூங்குழலி.

இப்போது படகு திசை திரும்பித் தென் மேற்குப் பக்கமாகச் சென்று கொண்டிருந்தது. இருட்டுகிற நேரத்தில் கடலிலிருந்து பூமிக்குள் குடைந்து சென்ற கால்வாயின் உள்ளே பிரவேசித்தது. பூங்குழலி கூறியது போலவே அங்கே இருபுறமும் கரைகள் உயர்ந்த மேடாக இருந்தன. அந்த மேட்டுக் கரைகளில் மரங்கள் அடர்த்தியாகவும், உயரமாகவும் வளர்ந்திருந்தன.

படகைக் கரையோரமாக நிறுத்திவிட்டுப் பூங்குழலி மெல்லிய குரலில், “ஐயா சற்றுப் படகைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுக் கரையில் இறங்கினாள். கரையில் வளர்ந்திருந்த உயரமான ஒரு மரத்தின் மேல் ஏறிச் சுற்றுமுற்றும் பார்த்தாள். பிறகு அவசரமாக இறங்கி வந்தாள். “நல்லவேளை! இங்கே வந்தோம். கடற்கரையோரமாகச் சுமார் ஒரு காத தூரத்துக்கு ஆட்கள் நின்று காவல் புரிகிறார்கள். கலங்கரை விளக்கின் அருகில் ஒரே கூட்டமும் கோஷமுமாக இருக்கிறது!” என்றாள்.

“யாராயிருக்கும் என்று ஏதாவது தெரிகிறதா?” என்று வந்தியத்தேவன் ஆவலுடன் கேட்டான்.

“நன்றாய்த் தெரியவில்லை, ஆனால் பழுவேட்டரையரின் ஆட்களாய்த்தான் இருக்கவேண்டும். வேறு யாராயிருக்க முடியும்? எப்படியிருந்தாலும், நான் சொன்ன இடத்துக்கு முதலில் போய்ச் சேருவோம். இரவு இரண்டாம் ஜாமத்துக்குள் நான் என் வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் நிச்சயமாய்த் தெரிந்து கொண்டு வருகிறேன்” என்றாள்.

படகு கால்வாய்க்குள் மெள்ள மெள்ளச் சென்றது. சப்தம் சிறிதும் வெளியில் கேளாதபடி மிக மெதுவாகப் பூங்குழலி துடுப்பு வலித்தாள். கால்வாயின் இருபுறமும் இருள் சூழ்ந்திருந்தது கரை ஓரமாக உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் கரிய நிழல்கள் கால்வாயில் விழுந்து அதன் கரிய நீரை மேலும் கரியதாக்கின.


44. சூடாமணி விஹாரம்

ஒரு நாழிகை நேரம் படகு கால்வாயில் சென்ற பிறகு, பூங்குழலி படகைக் கரையோரமாக நிறுத்தினாள். கால்வாயின் கரைமீதேறிக் காட்டு வழியில் புகுந்து சென்றாள்.

அது என்ன? ஐயோ! ஏதோ காலடிச் சத்தம் போலிருக்கிறதே? யாரோ நம்மைத் தொடர்ந்து வருவது போலிருக்கிறதே? யாராயிருக்கும்? எதற்காக இருக்கும்?

பூங்குழலி கோபத்துடன் திரும்பி நின்ற அதே சமயத்தில், கலகலவென்று சிரித்தாள்.

“அத்தான்! நீதானா?”

“ஆமாம்! பூங்குழலி!”

“இப்படி வா!”

“இதோ வந்துவிட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே சேந்தன் அமுதன் அவள் முன்னால் வந்தான்.

“நன்றாய் என்னைப் பயமுறுத்தி விட்டாய்! எதற்காக இப்படி என்னைத் தொடர்ந்து வந்தாய்?”

“பூங்குழலி! உன்னைப் பார்ப்பதற்காக தஞ்சையிலிருந்து பலநாள் பிரயாணம் செய்து வந்தேன். இங்கே வந்த பிறகும் உன்னைக் காணாமல் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன்! தற்செயலாக உன்னைப் பார்த்து விட்டுத் தொடர்ந்து ஓடிவந்தேன்.”

“அமுதா! நான் வந்தது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள்.

“பூங்குழலி! கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து படகு வருவதைப் பார்த்தேன். நீயாக இருக்கலாம் என்று உத்தேசமாக எண்ணி இங்கே உன்னைத் தேடி வந்தேன். அதே சமயத்தில் பழுவூர் ஆட்கள் சிலரும் இந்தப் பக்கம் வந்தார்கள். படகில் உன்னைக் காணவில்லை. ஆனால் என் நண்பன் வல்லவரையனையும் இளவரசரையும் பார்த்தேன். வல்லவரையனிடம் பழுவூர் ஆட்கள் வருவது பற்றிக் கூறினேன். பிறகு இளவரசரை நாங்கள் இருவருமாகத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த மண்டபத்தில் சேர்த்தோம்.”

“ஐயோ! படகு என்ன ஆயிற்று!”

“படகை யாராவது பார்த்தால் சந்தேகம் ஏற்படும் என்று ஓடை நீரில் கவிழ்த்து விட்டோம்!”கூறினான் சேந்தன் அமுதன்.

“அத்தான்; நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தாய்! நீ எப்படி இங்கு வந்தாய்? எதற்காக?” என்று பூங்குழலி கேட்டாள்.

“தஞ்சாவூரில் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை. அடிக்கடி பழுவூர் வீரர்களும், ஒற்றர்களும் வந்து தொல்லை கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆகையால் பழையாறைக்குப் போனேன். குந்தவை தேவி என்னை இவ்விடம் அனுப்பினார். இளவரசருக்கு அபாயம் அதிகமாயிருப்பதாகவும், ஆகையால் அவரை நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் கொண்டு சேர்த்து விட்டு வரும்படியும் வந்தியத்தேவனிடம் சொல்லும்படி கூறினார்….”

“இளையபிராட்டி கூறியது உண்மைதான். இளவரசருக்கு ஏற்பட்டிருக்கும் கண்டங்கள் இப்படி அப்படியல்ல. பகைவர்களின் சூழ்ச்சிகளோடு குளிர் காய்ச்சல் வந்து விட்டது.”

“ஆமாம், நானுந்தான் பார்த்தேன். நாங்கள் இரண்டு பேருமாக அவரைத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த மண்டபத்தில் சேர்த்தோம். பூங்குழலி! நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் புத்த பிக்ஷுக்கள் வைத்திய சாஸ்திரம் நன்கு அறிந்தவர்கள். இளவரசரைக் குணப்படுத்தி விடுவார்கள்.”

“நாகைப்பட்டினத்துக்கு எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது?”

“கால்வாய் வழியாகத்தான்!”

“அந்தச் சிறிய படகில் நாம் எல்லோரும் போக முடியாதே!”

“வேண்டியதில்லை, பூங்குழலி! அதெல்லாம் நாங்கள் பேசி முடிவு செய்துவிட்டோம். வல்லவரையன் இங்கிருந்து நேரே பழையாறைக்குப் போவான். நானும் நீயும் இளவரசரைப் படகில் ஏற்றி நாகைப்பட்டினம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது.”

இருவரும் மறைந்த மண்டபத்தை அடைந்தார்கள். வந்தியத்தேவனும் சேந்தன் அமுதனும் இளவரசரின் தூக்கம் கலையாமல் தூக்கிக் கொண்டார்கள். பூங்குழலி பின் தொடர்ந்து சென்றாள்.

கால்வாயின் கரையை அவர்கள் அடைந்தபோது சந்திரன் உதயமாகியிருந்தது. கரையில் இளவரசரை ஒரு மரத்தின் பேரில் சாய்த்து படுக்க வைத்தார்கள். பூங்குழலியை அவர் பக்கத்தில் இருக்கச் செய்து விட்டு வந்தியத்தேவனும், சேந்தன் அமுதனும் தண்ணீரில் இறங்கினார்கள். முழுகிப் போயிருந்த படகை மிகப் பிரயாசையுடன் மேலே எடுத்துக் கரையோரமாகக் கொண்டு வந்தார்கள்.

இளவரசர் கண் விழித்தார்.

“உடனே நான் பழையாறைக்குப் புறப்பட வேண்டுமே” என்றார் இளவரசர்.

“இல்லை, தங்களை நாகைப்பட்டினத்துக்கு அழைத்துச் செல்லும்படி செய்தி வந்திருக்கிறது.”

“யாரிடமிருந்து?”

“இளைய பிராட்டியிடமிருந்துதான்!”

“அது யார் அங்கே, இன்னொருவன்? வந்தியத்தேவனுடன் படகை இழுத்து வருகிறவன்?”

“என் அத்தான் சேந்தன் அமுதன். இளையபிராட்டி அவனிடந்தான் செய்தி அனுப்பியிருக்கிறார். தங்களை நாகைப்பட்டினத்தில் உள்ள சூடாமணி விஹாரத்திற்கு அழைத்துச் செல்லும்படி.”

“பூங்குழலி! வா, போகலாம்!” என்று கூறி இளவரசர் எழுந்து நின்றார்.

அந்த முயற்சியில் திடீரென்று கீழே விழுந்தார். பூங்குழலி அவரைத் தாங்கிக் கொண்டாள்.

படகைக் கரை சேர்ந்தவர்கள் இருவரும் ஓடி வந்தார்கள். மீண்டும் உணர்ச்சியை இழந்துவிட்ட இளவரசரை அவர்கள் மெதுவாகத் தூக்கிக் கொண்டு போய்ப் படகில் பத்திரமாய்ச் சேர்த்துப் படுக்க வைத்தார்கள்.

கால்வாயில் படகு போக ஆரம்பித்தது. இளவரசரைத் தவிர்த்து, மற்ற மூவரும் இட நெருக்கடியுடன் அதில் உட்கார்ந்திருந்தார்கள்.

வந்தியத்தேவன், “பூங்குழலி! நாலுபேரை இந்தப் படகு தாங்குவது கடினம். எப்படியும் நான் உங்களிடம் விடை பெற்றுக் கொள்ள வேண்டியவன். இங்கேயே இறங்கிக் கொள்கிறேன். இளவரசரைப் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்ப்பது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு அதிகம் நான் சொல்ல வேண்டியதில்லை!” என்று சொன்னான்.

“கோடிக்கரைக் காடு தாண்டிய பிறகு இறங்கிச் செல்லலாமே? என் குதிரையையும் அங்கேதான் நிறுத்தி வைத்திருக்கிறேன். அடையாளம் நினைவிருக்கிறதல்லவா?” என்றான் சேந்தன் அமுதன்.

” ஆகட்டும், இளவரசர் மறுபடி விழித்தால் நான் பழையாறைக்குப் போகிறேன் என்று சொல்லுங்கள். அங்கிருந்து விரைவில் செய்தி அனுப்புவதாகவும் சொல்லுங்கள். அப்போதுதான் நிம்மதியாக இருப்பார்.”

மறுநாள் சூரியோதய நேரத்தில் உலகமே பொன்னிறமாக ஜொலித்த வேளையில், படகு நாகைப்பட்டினத்தை அடைந்தது. நாகைப்பட்டினத்தின் அருகில் அந்த ஓடையிலிருந்து ஒரு கிளை பிரிந்து சூடாமணி விஹாரத்திற்கே நேராகச் சென்றது. அந்தக் கிளை வழியில் படகைக் கொண்டு போனார்கள். புத்த விஹாரத்தின் பின்புறத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

சேந்தன் அமுதன் தட்டுத்தடுமாறி வழி தேடிக்கொண்டு, விஹாரத்தின் வாசற்பக்கம் போய்ச் சேர்ந்தான். அங்கேதான் பொதுமக்கள் வந்து வழிபடுவதற்குரிய புத்தர் பெருமானின் சைத்யம் என்னும் கோயில் இருந்தது. பக்தர்கள் பலர் அந்தக் காலை நேரத்தில் தாமரை மலர்களும் செண்பகப் பூக்களும், மற்ற பூஜைத் திரவியங்களும் நிறைந்த தட்டுக்களை ஏந்திக் கொண்டு வந்திருந்தார்கள். சேந்தன் அமுதன் புத்த பிக்ஷுக்களிடையே புகுந்து ஆச்சாரியரை அணுக யத்தனித்தான்.

உடனே அவனைப் பலர் தடுத்தார்கள். “இவன் யார்? இங்கே எப்படி வந்தான்?” என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டார்கள்.

“ஐயா அடியேன் பெயர் சேந்தன் அமுதன்! தஞ்சையைச் சேர்ந்தவன். உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்! நோயாளி ஒருவரை அழைத்து வந்திருக்கிறேன்!”

ஆச்சாரிய பிக்ஷு “வா! அப்பனே” என்று அமுதனை அழைத்துக் கொண்டு சென்றார்.

அருகில் போய் அந்த இளைஞர் யார் என்பதை உற்றுப் பார்த்ததும், பிக்ஷு திகைத்துப் போனார். சந்தேக நிவர்த்திக்காக, “இளவரசர் அருள்மொழிவர்மர் தானா?” என்று சேந்தன் அமுதனைக் கேட்டார்.

மற்ற பிக்ஷுக்களைப் பார்த்து அவர், “இந்தப் பிள்ளைக்கு விஷ சுரம்தான் வந்திருக்கிறது. இவனை வெளியில் அனுப்பினால் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வந்துவிடும். ஆகையால் இந்த இளைஞனை என் அறைக்கு அழைத்துப் போய், நானே பணிவிடையும் செய்யப்போகிறேன், இடையில் சுர வேகத்தினால் இவன் ஏதாவது பிதற்றினால் அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்!” என்றார்.

உடனே தலைமைப் பிக்ஷு இளவரசர் அருகிலே நெருங்கி ஒரு கையினால் அவரை அணைத்துத் தூக்கினார். சேந்தன் அமுதன் இன்னொரு பக்கத்தில் இளவரசரைப் பிடித்துக் கொண்டு உதவினான். எல்லாரும் படிகளில் ஏறிச் சென்றார்கள்.


45. மதுராந்தகத் தேவர்

வந்தியத்தேவன் குதிரையைத் தட்டி விட்டான். பழையாறையைக் குறியாக வைத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தான்.

இளவரசி குந்தவையிடம், “தாங்கள் கூறிய பணியை நிறைவேற்றிவிட்டேன்” என்று சொல்லும்போது தனக்கு ஏற்படக் கூடிய மகிழ்ச்சியை அவன் எண்ணிப் பார்த்தான். தேவியின் முகம் அதைக்கேட்டு எவ்வண்ணம் மலர்ந்து பொலியும் என்பதையும் நினைத்தான்.

கடைசியாகப் பிற்பகலில் சூரியன் அஸ்தமிப்பதற்கு இரண்டு நாழிகை இருந்தபோதுதான் பழையாறைக் கோட்டையின் பெரிய சுவர் அவனுக்குப் புலப்பட்டது. குதிரையின் வேகத்தை அவன் குறைத்துக்கொண்டு கோட்டை வாசலை நெருங்கியபோது மற்றொரு திசையிலிருந்து ஒரு கூட்டம் வருவதைக் கண்டான். வேல் பிடித்த வீரர்கள், விருதுகளைச் சுமந்தவர்கள், குதிரைகள் ஏறி வந்தவர்கள் – இவ்வளவு பேருக்கும் நடுவில் தாமரைப் பூ வடிவமாக அமைந்த ஒரு தங்க ரதம். ஆஹா! அந்த ரதத்தில் வீற்றிருப்பது யார்? இளவரசர் மதுராந்தகத் தேவர் அல்லவா?

சற்று நேரத்துக்கெல்லாம் பழையாறைக் கோட்டைக் கதவு திறந்தது. மதுராந்தகத்தேவரும் அவருடைய பரிவாரங்களும் வந்தியத்தேவனும் கோட்டைக்குள் பிரவேசித்தார்கள்.

சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு முன்னால் சோழ நாட்டில் அரசு செலுத்தியவர் அவருடைய பெரிய தந்தை கண்டராதித்த சோழர். அவரும், அவருடைய தர்மபத்தினியான மழவரையர் மகள் செம்பியன்மாதேவியும் சிவபக்த சிகாமணிகள். சிவாலயத் திருப்பணிகளிலேயே தங்கள் வாழ்க்கையை அவர்கள் முழுவதும் ஈடுபடுத்தியவர்கள். தமிழ்நாடெங்கும் சிதறிக்கிடந்த தேவாரத் திருப்பதிகங்களைத் தொகுத்துச் சேர்க்கக் கண்டராதித்தர் ஆசை கொண்டிருந்தார். அந்த ஆசை அவர் ஆயுள் காலத்தில் நிறைவேறவில்லை.

கண்டராதித்தருக்குப் போர் செய்து இராஜ்யத்தை விஸ்தரிப்பதில் நம்பிக்கை இருக்கவில்லை போர்களினால் மனிதர்கள் அடையும் துன்பங்களைக் கண்டு வருந்தியவரான படியால் கூடிய வரையில் சண்டைகளை விலக்க முயன்றார்; சமாதானத்தையே நாடினார். இதன் காரணமாக இவர் ஆட்சிக் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் மிகச் சுருங்கலாயிற்று. கண்டராதித்தர் தம் முதிர்ந்த வயதில் மழவரையர் மகளை மணந்து கொண்டார். அவர்களுடைய புதல்வன் மதுராந்தகன், கண்டராதித்தரின் அந்திம காலத்தில் சின்னஞ்சிறு குழந்தை. இராஜ்யத்தைச் சுற்றிலும் எதிரிகள் தலையெடுத்துக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயன் போரில் காயம்பட்டு மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். அரிஞ்சயனுடைய குமாரன் சுந்தரசோழன் அதற்குள் காளைப் பருவத்தைக் கடந்து, பல போர்களிலே வெற்றிமுரசு கொட்டி, மகா வீரன் என்று பெயர் பெற்றிருந்தான். ஆதலின் கண்டராதித்தர் தமக்குப் பின்னர் சுந்தரசோழனே பட்டத்துக்கு உரியவன் என்று முடிவுகட்டிக் குடிமக்களுக்கும் அறிவித்து விட்டார். தன்னால் சிம்மாதனம் சம்பந்தமான குடும்பச் சண்டைகள் உண்டாகாதிருக்கும் பொருட்டுச் சுந்தர சோழருடைய சந்ததிகளே பட்டத்துக்கு உரியவர்கள் என்றும் சொல்லி விட்டார்.

தமது குமாரன் மதுராந்தகனைச் சிவ பக்தனாக வளர்த்துச் சிவ கைங்கரியத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று தம் மனைவியிடமும் அவர் சொல்லியிருந்தார். இவையெல்லாம் அந்நாளில் நாடறிந்த விஷயங்களாயிருந்தன. செம்பியன் மாதேவி தன் கணவருக்கு அளித்த வாக்கை நிறைவேற்றி வந்தாள். மதுராந்தகனுடைய சிறு பிராயத்திலேயே அவன் உள்ளத்தில் சிவபக்தியையும் உலக வாழ்வில் வைராக்கியத்தையும் உண்டாக்கி வளர்த்து வந்தாள்.

ஏறக்குறைய இருபது பிராயம் வரையில் மதுராந்தகன் அன்னையின் வாக்கையே வேத வாக்காகக் கொண்டு நடந்து வந்தான். இராஜ்ய விவகாரங்களில் அவனுக்குச் சிறிதும் பற்று ஏற்படவில்லை; சோழ சிங்காதனம் தனக்கு உரியது என்ற எண்ணமே அவன் உள்ளத்தில் உதயமாகாமல் இருந்தது. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் சின்னப் பழுவேட்டரையரின் மகளை மணந்ததிலிருந்து அவன் மனம் மாறத் தொடங்கியது. ஆரம்பத்தில் இலேசாகத் தலைகாட்டிய ஆசைக்குப் பழுவூர் இளைய ராணி நந்தினி தூபம் போட்டுப் பெரிதாக்கி வந்தாள். சிறிய தீப்பொறி அதிவிரைவில் பெரிய காட்டுத் தீ ஆகிவிட்டது. பல்வேறு காரணங்களினால் சோழநாட்டுச் சிற்றரசர்கள் பலரும் பெருந்தர அதிகாரிகளும் மதுராந்தகனை ஆதரித்துச் சிம்மாசனத்தில் ஏற்றுவதற்குச் சுந்தர சோழர் கண் மூடும் சந்தர்ப்பத்தை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். ஆனால் மதுராந்தகனோ அவ்வளவு காலம் காத்திருப்பதற்கே விரும்பவில்லை. சுந்தரசோழருக்குச் சிம்மாசனத்தில் பாத்தியதை இல்லையென்றும், தனக்கே சோழ சாம்ராஜ்யம் வந்திருக்க வேண்டும் என்றும் அவன் எண்ணத் தொடங்கினான்.

இவ்விதம் மதுராந்தகனுக்கு ஏற்பட்டிருந்த அரசுரிமை வெறியைக் கட்டுக்குள் அடக்கி வைப்பது இப்போது பழுவேட்டரையர்களின் பொறுப்பாயிருந்தது. அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட அவர்கள் விரும்பவில்லை. சுந்தர சோழரின் இரு புதல்வர்களும் வீராதிவீரர்கள். அவர்களுடைய வீரச் செயல்களினாலும் பிற குணாதிசயங்களினாலும் குடி மக்களின் உள்ளங்களில் அவர்கள் இடம் பெற்றிருந்தனர். கொடும்பாளூர் வேளார், திருக்கோவலூர் மலையமான் என்னும் இரு பெரும் தலைவர்கள் சுந்தர சோழரின் புதல்வர்களை ஆதரித்து நின்றார்கள். சைன்யத்திலேயும் ஒரு பெரும் பகுதி வீரர்கள் சுந்தர சோழரின் புத்திரர்களையே விரும்பினார்கள். ஆகையால் சக்கரவர்த்தி உயிரோடிருக்கும் வரையில் பழுவேட்டரையர்கள் பொறுமையுடனிருக்கத் தீர்மானித்தார்கள். இதற்கிடையில், சக்கரவர்த்தியின் மனமும் சிறிதளவு மாறிருந்ததை அவர்கள் அறிந்து கொண்டார்கள். தமக்குப் பிறகு இளவரசர் மதுராந்தகருக்குத்தான் பட்டம் என்று சுந்தர சோழரே சொல்லிவிட்டால், ஒரு தொல்லையும் இல்லை. இதற்குக் குறுக்கே நின்று தடை செய்யக்கூடியவர்கள் இளைய பிராட்டியும், செம்பியன் மாதேவியுந்தான். இளைய பிராட்டியின் சூழ்ச்சிகளை மாற்றுச் சூழ்ச்சிகளினால் வென்றுவிடலாம். ஆனால் தமிழ் நாடெங்கும் தெய்வாம்சம் பெற்றவராகப் போற்றப்பட்டு வரும் செம்பியன் மாதேவி தடுத்து நின்றால், அந்தத் தடையைக் கடப்பது எளிதன்று. அந்தப் பெருமாட்டி தாம்பெற்ற புதல்வன் சிம்மாசனம் ஏறுவதை விரும்பவில்லை என்பது எங்கும் பரவியிருந்தது. அன்னையின் வார்த்தையை மீறி மகன் சிங்காதனம் ஏறுவதைக் குடிமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? ஒன்று, அந்த அம்மாளும் தமது கணவரைப் பின்பற்றிக் கைலாச பதவிக்குச் செல்லவேண்டும். அல்லது அவருடைய மனம் மாறச் செய்யவேண்டும். தாயின் மனத்தை மாற்றக்கூடிய சக்தி, பெற்ற பிள்ளையைத் தவிர வேறு யாருக்கு இருக்கக்கூடும்?

ஆதலின் அன்னையிடம் சொல்லி அவர் மனத்தை மாற்றும்படி மதுராந்தகத் தேவரை அடிக்கடி பழுவேட்டரையர்கள் தூண்டிக் கொண்டிருந்தார்கள். மதுராந்தகர் இந்தக் காரியத்தில் மட்டும் உற்சாகம் காட்டவில்லை. இராஜ்யம் ஆளும் ஆசை அவர் உள்ளத்தில் வெறியாக மூண்டிருந்தது. ஆனால், அன்னையிடம் அதைப் பற்றிப் பேச மட்டும் அவர் தயங்கினார். ஏன் அந்த மூதாட்டியைச் சந்தித்துப் பேசுவதற்கே அவர் அவ்வளவாக விரும்பவில்லை.

இப்போது, செம்பியன் மாதேவியே தஞ்சைக்குச் செய்தி சொல்லி அனுப்பியிருந்தார். தமது கணவருடைய விருப்பங்களில் முக்கியமானதொரு விருப்பத்தை நிறைவேற்றத் திட்டமிட்டிருப்பதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் தம் குமாரன் தம்முடன் இருக்கவேண்டும் என்றும் தெரியப்படுத்தியிருந்தார். அதன்படியே சின்னப் பழுவேட்டரையர் மதுராந்தகரைப் பழையாறைக்குப் போய்வரும்படி கூறினார். இச்சந்தர்ப்பத்தில் தஞ்சைச் சிங்காதனத்துக்குத் தமக்குள்ள உரிமைபற்றித் தாயிடம் வாதாடி அவருடைய மனத்தை மாற்ற முயலும் படியும் சொல்லி அனுப்பினார்.

மதுராந்தகத் தேவர் தமது பரிவாரங்களுடன் பழையாறை நகருக்குள் பிரவேசித்தார். அவருடைய பரிவாரங்களும் அரண்மனை வீதியை அடைந்து, செம்பியன் மாதேவியின் மாளிகையை அடைந்தார்கள். அரண்மனை வாசலிலேயே பெரிய பிராட்டி நின்று கொண்டிருந்தார்.

மதுராந்தகர் ரதத்திலிருந்து இறங்கி அன்னையின் அருகில் சென்று வணங்கினார். வணங்கிய மதுராந்தகரை உச்சி முகந்து அன்னை ஆசி கூறினார். “மகனே! சற்றுச் சிரம பரிகாரம் செய்து கொண்டு விரைவில் சபாமண்டபத்துக்கு வந்து சேர்!” என்று கூறினார்.


46. செம்பியன் மாதேவி

அன்னை அழைத்துவரச் சொன்னதாகச் சேவகன் வந்து கூறியதன் பேரில் மதுராந்தகன் செம்பியன் மாதேவியைப் பார்க்கச் சென்றான் சிவபக்தியிற் சிறந்த அந்த மூதாட்டியின் புகழ் நாடெங்கும் பரவியிருந்தது. ஒரு காலத்தில் மதுராந்தகனும் அன்னையிடம் அளவிலாத பக்தி கொண்டிருந்தான். இப்போது அந்தப் பக்தி, கோப வெறியாக மாறிப் போயிருந்தது. பெற்ற மகனுக்குத் துரோகம் செய்து, தாயாதிகளின் கட்சி பேசிய தாயைப்பற்றிக் கதைகளிலே கூடக் கேட்டதில்லையே! தனக்கு இப்படிப்பட்ட அன்னையா வந்து வாய்க்கவேண்டும்?… இதை நினைக்க நினைக்க அவன் உள்ளத்திலிருந்த அன்பு அத்தனையும் துவேஷமாகவே மாறி நாளடைவில் கொழுந்துவிட்டு வளர்ந்திருந்தது.

அபூர்வமான சாந்தம் குடிகொண்ட அன்னையின் முகத்தைப் பார்த்ததும் கொஞ்சம் அவனுடைய கோபம் தணிந்தது. பழைய வழக்கத்தை அனுசரித்து நமஸ்கரித்து எழுந்து நின்றான். “சிவபக்திச் செல்வம் பெருகி வளரட்டும்!” என்று மகாராணி ஆசி கூறி, அவனை ஆசனத்தில் உட்காரச் செய்தார். அந்த ஆசீர்வாதம் மதுராந்தகனுடைய மனத்தில் அம்பைப் போல் தைத்தது.

“மதுராந்தகா! என் மருமகள் சுகமா? உன் மாமனார் வீட்டிலும், தனாதிகாரியின் வீட்டிலும் எல்லோரும் சௌக்கியமா?” என்று அன்னை கேட்டார்.

“எல்லாரும் சௌக்கியமாகவே இருக்கிறார்கள். அதைப் பற்றித் தங்களுக்கு என்ன கவலை?” என்று குமாரன் முணுமுணுத்தான்.

“தஞ்சையிலிருந்து புறப்படுவதற்கு முன்னால் நீ சக்கரவர்த்தியைப் பார்த்தாயா? அவருடைய உடல் நலம் தற்சமயம் எப்படியிருக்கிறது?” என்று மகாராணி கேட்டார்.

“பார்த்து விடை பெற்றுக்கொண்டுதான் புறப்பட்டேன். சக்கரவர்த்தியின் உடம்பு நாளுக்கு நாள் நலிந்துதான் வருகிறது. உடல் வேதனையைக் காட்டிலும் மனவேதனை அவருக்கு அதிகமாயிருக்கிறது” என்றான் மதுராந்தகன்.

“அது என்ன, குழந்தாய்? சக்கரவர்த்தி மன வேதனைப்படும்படியாக என்ன நேர்ந்தது?”

“குற்றம் செய்தவர்கள், அநீதி செய்தவர்கள்… பிறர் உடைமையைப் பறித்து அனுபவிக்கிறவர்கள் – மனவேதனை கொள்வது இயல்புதானே?”

“இது என்ன சொல்கிறாய்? சக்கரவர்த்தி அவ்வாறு என்ன குற்றம் – அநீதி – செய்துவிட்டார்?”

“வேறு என்ன செய்யவேண்டும்? நான் இருக்க வேண்டிய சிம்மாசனத்தில் அவர் இத்தனை வருஷங்களாக அமர்ந்திருப்பது போதாதா? அது குற்றம் இல்லையா? அநீதி இல்லையா?”

“குழந்தாய்! பால்போலத் தூய்மையாக இருந்த உன் உள்ளத்தில் இந்த விஷம் எப்படி வந்தது? யார் உனக்குத் துர்ப்போதனை செய்து கெடுத்துவிட்டார்கள்?” என்று இரக்கமான குரலில் அன்னை கேட்டார்.

“தாயே! என்னை, எதற்காக அழைத்தீர்கள். அதைச் சொல்லுங்கள்!”

செம்பியன் மாதேவி ஒரு நெடிய பெருமூச்சு விட்டார். பிறகு கூறினார்:- “உன்னுடைய குணத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுதல் எனக்குப் பிரமிப்பை உண்டாக்குகிறது. பழுவேட்டரையர் மாளிகையில் இரண்டு வருஷ வாசம் இப்படி உன்னை மாற்றிவிடும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. போனால் போகட்டும், என்னுடைய கடமையை நான் செய்ய வேண்டும். உன் தந்தைக்கு நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற என்னாலியன்ற வரையில் முயலவேண்டும் மகனே! உன்னை அழைத்த காரியத்தைச் சொல்வதற்கு முன்னால், என்னுடைய கதையை, நான் உன் தந்தையை மணந்த வரலாற்றைக் கூறவேண்டும். சற்றுப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிரு!”

மதுராந்தகன் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருக்கப் போவதற்கு அறிகுறியாகக் கால்களை மண்டி போட்டுக் கொண்டு, கைகளைப் பீடத்தில் நன்றாய் ஊன்றிக் கொண்டு உட்கார்ந்தான்.

“உன் தந்தை சோழநாட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். அதுமுதல் பற்பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஆலய தரிசனம் செய்து வந்தார். அவருக்குப் பிராயம் அப்போது நாற்பதாகியிருந்தது. இளம் வயதில் அவர் மணந்து கொண்டிருந்த மாதரசி காலமாகி விட்டார். மறுபடி கலியாணம் செய்துகொள்ளும் எண்ணமே அவருக்கு இருக்கவில்லை. மீண்டும் மணம்புரிந்து கொள்வதில்லையென்று விரதம் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய புனித உள்ளம் இந்தப் பேதையைக் கண்டதினால் சலனமடைந்தது. என் தந்தையின் முன்னிலையில் என் விருப்பத்தை அவர் கேட்டார். அவரை மணந்துகொள்ளப் பூரண சம்மதம் என்பதைத் தெரிவித்தேன். எங்களுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அதன் பயனாக உன் பாட்டனார் இழந்திருந்த செல்வாக்கை மீண்டும் அடைந்து ‘மழவரையர்’ என்ற பட்டப் பெயரையும் பெற்றார்…”

“மகனே! எனக்கும், உன் தந்தைக்கும் திருமணம் நடந்த பிறகு நாங்கள் இருவரும் மனம்விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். சிவபெருமானுடைய திருப்பணிக்கே எங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்வது என்றும், இருவரும் மகப்பேற்றை விரும்புவதில்லை என்றும் தீர்மானித்திருந்தோம். அதற்கு ஓர் முக்கியம் காரணம் இருந்தது. குழந்தாய்! இதையெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டிய அவசியம் ஏற்படும் என்று நான் கனவிலும் கருதவில்லை. ஆயினும், அத்தகைய அவசியம் நேர்ந்து விட்டதனால் சொல்லுகிறேன். கொஞ்சம் செவி கொடுத்துக் கவனமாகக் கேள்!” இவ்விதம் செம்பியன்மாதேவி கூறி மீண்டும் ஒரு நெடுமூச்சு விட்டார். மதுராந்தகனும் முன்னைக்காட்டிலும் அதிகச் சிரத்தையுடன் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினான்.

சிவபக்தியே உருவெடுத்தாற்போல் விளங்கிய மாதரசி செம்பியன் தேவி தொடர்ந்து கூறினார்:

“மகனே! உன் தந்தை கண்டராதித்த தேவர் சிம்மாசனம் ஏறியபொழுது, சோழ ராஜ்யத்தில் ஒரு சங்கடமான நிலைமை ஏற்பட்டிருந்தது. உன் பாட்டனார் பராந்தகச் சக்கரவர்த்தியின் பெருமையை நீ அறிந்திருக்கிறாய். அவருடைய ஆட்சிக்காலத்தில் சோழ ராஜ்யம் தெற்கே ஈழ நாடு வரையிலும், வடக்கே கிருஷ்ணை நதி வரையிலும் பரவியது. ஆனால், அவருடைய அந்திம காலத்தில் இராஜ்யத்துக்கும், இராஜ குலத்துக்கும் பல விபத்துக்கள் ஏற்பட்டன. இரட்டை மண்டலத்துப் படைகள் படை எடுத்து வந்தன. பராந்தகச் சக்கரவர்த்தியின் மூத்த புதல்வரும், ஒப்புவமையில்லாத வீராதி வீரரும், உன் பெரிய தகப்பனாருமான இராஜாதித்த தேவர் இரட்டை மண்டலத்து மாபெரும் சைன்யத்தை எதிர்க்கப் புறப்பட்டார். வடக்கே தக்கோலம் என்னுமிடத்தில் மாபெரும் போர் நடந்தது, லட்சக்கணக்கான வீரர்கள் மாண்டனர். இரத்த வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இரட்டை மண்டலத்தாரின் சைன்யம் சிதறி ஓடியது ஆனால் அந்தப் போரில் இராஜாதித்த தேவர் பலியாகிவிட்டார். உன்னுடைய சித்தப்பா அரிஞ்சயத் தேவரும் அந்தப் போரில் ஈடுபட்டுப் படுகாயம் அடைந்தார். ஆனால் அவரைப் பற்றி யாதொரு விவரமும் அப்போது தெரியவில்லை. அரிஞ்சய தேவரின் மூத்த புதல்வர் சுந்தர சோழர், – சின்னஞ்சிறு பிராயத்துப் பிள்ளை – ஈழத்துப் போருக்குச் சென்றிருந்தார். அவரைப் பற்றியும் செய்தி கிட்டவில்லை. இராஜ குலத்தில் பிறந்து அச்சமயம் தஞ்சை அரண்மனையில் பராந்தகச் சக்கரவர்த்தியின் அருகில் இருந்தவர் உன் தந்தைதான்.

ஆனால் உன் தந்தையோ இளம் பிராயத்திலேயே இராஜ்ய விவகாரங்களை வெறுத்துச் சிவபெருமானிடம் மனத்தைச் செலுத்தி வந்தவர். அவருக்கு யுத்தம் என்றால் பிடிப்பதில்லை. மன்னர்களின் மண்ணாசை காரணமாக மக்கள் போரிட்டு மடிவானேன் என்று அவர் வருந்தினார். தந்தையிடமும் சகோதரர்களிடமும் அதைக் குறித்து வாதித்தார். சிவஞானச் செல்வர்களான பெரியோர்களின் சகவாசத்திலும், புண்ணிய ஸ்தல யாத்திரையிலும், ஆலய வழிபாட்டிலும் காலத்தைச் செலவிட்டார். வாள், வேல் முதலிய ஆயுதங்களைக் கையினால் தொடவும் அவர் விரும்பவில்லை. யுத்த தந்திரங்களிலும் போர் முறைகளிலும் அவர் பயிற்சி பெறவில்லை. பொய்யும் புனை சுருட்டும், வஞ்சகமும், வேஷமும் சூழ்ச்சிகளும் மறு சூழ்ச்சிகளும், கொலை முதலிய பாவங்களும் நிறைந்தது இராஜரீகம் என்று அவர் நம்பினார்.

மகனே! விதிவசத்தால் அப்படிப்பட்ட கொள்கையுடைய உன் தந்தை இந்தச் சோழ நாட்டின் பாரத்தை வகிக்கும்படியாக நேர்ந்துவிட்டது. பராந்தகச்சக்கரவர்த்தி, இராஜ்யத்துக்கு நேர்ந்த பல விபத்துக்களினாலும், இராஜாதித்தரின் மரணத்தினாலும் மனம் நொந்து மரணத்தை எதிர்பார்த்திருக்கும் வேளையில் உன் தந்தையை அழைத்து, ‘இராஜ்ய பாரத்தை நீ தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார். உன் தந்தை மரணத்தறுவாயிலிருந்த உன் பாட்டனாரின் மனத்தை மேலும் புண்படுத்த விரும்பாமல் ஒப்புக்கொண்டார். உன் தந்தையை எனக்கு முன்னால் மணந்திருந்த பாக்கியவதியான வீரநாராயணி தேவி அதற்கு முன்னரே சிவபதம் அடைந்து விட்டார். நானோ அப்போது உன் தந்தையைப் பார்த்ததே இல்லை. ஆகையால் உன் தந்தையின் காலத்துக்குப் பிற்பாடு சோழ மகாராஜ்யம் என்ன ஆவது என்ற கவலை உன் பாட்டனாருக்கு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அச்சமயத்தில் உன் சிறிய தந்தையின் குமாரரைத் தேடுவதற்காக ஈழத்திற்குப் போனவர்கள், அங்கே ஒரு தீவிலிருந்த சுந்தர சோழரைக் கண்டுபிடித்து, அவரை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

பராந்தகச் சக்கரவர்த்தி சுந்தர சோழரிடம் அளவிலாத பிரியம் வைத்திருந்தார். குழந்தையாயிருந்த நாளிலிருந்து, மடியில் வைத்துத் தாலாட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார். பெரியோர்கள் பலர், சுந்தரசோழரின் மூலமாய்ச் சோழகுலம் மகோன்னதம் அடையப் போகிறது என்று சொல்லியிருந்தார்கள்.

இத்தகைய காரணங்களினால் உன் பாட்டனாருக்குச் சுந்தர சோழர் மீது அபாரமான பிரேமை. ஆகையால், உன் தந்தை சிம்மாசனம் ஏறும்போது, சுந்தர சோழருக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிடவேண்டும் என்றும், அவருடைய சந்ததியர்கள் தான் சோழ நாட்டை ஆண்டு வரவேண்டும் என்றும் சொல்லி விட்டுச் சிவபதம் அடைந்தார். இந்த விவரங்களையெல்லாம் உன் தந்தை என்னிடம் கூறினார். பராந்தகச் சக்கரவர்த்தி மரணத் தறுவாயில் வெளியிட்ட விருப்பத்தை நிறைவேற்ற அவர் உறுதிகொண்டிருந்தார். சுந்தர சோழரும் அவருடைய சந்ததியாரும் பட்டத்துக்கு வருவதில் எவ்வித இடையூறும் நேரிடக் கூடாதென்று எண்ணினார். உன் தந்தைக்கு இராஜ்யம் ஆளும் ஆசை இல்லை; இராஜரீக காரியங்களில் பற்றுதலும் இல்லை. அவருடைய உள்ளம் சதாசர்வ காலமும் நடராஜப் பெருமானின் இணையடித் தாமரைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஆகவே, தமது தம்பியாகிய அரிஞ்சயரிடமும், அவருடைய புதல்வர் சுந்தர சோழரிடமும் இராஜ்ய காரியங்கள் முழுவதையும் ஒப்படைத்திருந்தார். தாம் சிவபெருமானுடைய கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு மறுபடியும் மணம் செய்துகொள்ளும் எண்ணமே இருக்கவில்லை. ஆனால் அவருடைய மன உறுதியைக் கலைக்க நான் ஒருத்தி வந்து சேர்ந்தேன். நானும் சிவபக்தியில் ஈடுபட்ட ‘பிச்சி’ என்று அறிந்ததனாலேயே அவர் என்மீது பிரியங் கொண்டு என்னைத் திருமணம் புரிந்தார். அவரைப் பதியாக அடைந்த நான் பாக்கியசாலி. எத்தனையோ ஜன்மங்களில் அவரை அடைய நான் தவம் செய்திருக்க வேண்டும். அவரைத் தந்தையாகப் பெற்ற நீயும் பாக்கியசாலி. அப்படிப்பட்ட புண்ணிய புருஷருடைய விருப்பத்தை நிறைவேற்ற நானும் நீயும் கடமைப்பட்டவர்கள்…!”

அன்னை இவ்விதம் கூறி நிறுத்தியபோது, கேட்டுக் கொண்டிருந்த மகனுடைய உடல் பதறிக்கொண்டிருந்தது. அவனுடைய உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது.

“அது எப்படி, தாயே! என் தந்தை என்னிடம் ஒன்றும் தெரிவிக்கவில்லையே? நான் என்ன கடமைப்பட்டிருக்கிறேன்? எந்த விதத்தில் கடமைப்பட்டிருக்கிறேன்?” என்றான் மதுராந்தகன்.

“மகனே! கேள்! உன் தந்தை சிவபெருமானுடைய பாத மலர்களை அடைந்தபோது நீ சின்னஞ்சிறு பிள்ளை. ஆகையால், உன்னிடம் அவர் ஒன்றும் தெரியப்படுத்த முடியவில்லை. ஆனால் என்னிடம் சொல்லிவிட்டுப் போனார்; அவருடைய வாக்கை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை என்மீது சுமத்திவிட்டுப் போனார். மகனே! உன்னை இந்த மண்ணுலக வாழ்க்கையில் பற்றுதல் கொள்ளாமல், சிவபக்த சிகாமணியாகும்படி வளர்ப்பேன் என்று உன் தந்தைக்கு வாக்குக் கொடுத்தேன். அதை நிறைவேற்றி விட்டதாகவே சில காலத்துக்கு முன்பு வரையில் எண்ணி இறுமாந்திருந்தேன். ஆனால், சில நாளாக நான் ஏதேதோ கேள்விப்படுகிறேன். அப்படிப்பட்ட பேச்சைக் கேட்கும் போதெல்லாம் என் நெஞ்சு புண்ணாகிறது. நான் கேள்விப்படுவதெல்லாம் பொய்யென்று நீ உறுதி சொல்லி, என் நெஞ்சில் உள்ள புண்ணை ஆற்றமாட்டாயா?” என்று அன்னை செம்பியன்மாதேவி கெஞ்சினாள்.

“தாயே! தங்களுடைய மர்மமான வார்த்தைகள் என்னுடைய நெஞ்சையும் புண்ணாக்குகின்றன. தாங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள், என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்; என்னிடம் என்ன உறுதி கேட்கிறீர்கள்?” என்று மதுராந்தகன் சீறினான்.


47. “நீயும் ஒரு தாயா?”

“குழந்தாய்! சோழ குலத்துச் சிம்மாசனத்தில் ஏற, நீ ஆசை கொண்டிருக்கிறாய் என்று கேள்விப்படுகிறேன். உன் உள்ளத்தை நம் விரோதிகள் அவ்விதம் கெடுத்துவிட்டார்கள் என்று அறிகிறேன். நான் இவ்வாறு கேள்விப்பட்டது உண்மையல்ல என்று நீ கூறினால், என் மனம் நிம்மதி அடையும்!” என்றாள் மூதாட்டி.

மதுராந்தகன் இதுவரை உட்கார்ந்திருந்த பீடத்திலிருந்து எழுந்து நின்றான். அவனுடைய படபடப்பை பார்த்துத் தாயும் எழுந்தாள்.

“என்னுடைய மனத்தை விரோதிகள் யாரும் கெடுக்கவில்லை. என்னைச் சிம்மாசனம் ஏற்ற விரும்புகிறவர்கள் என் விரோதிகளா? எனக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்க முன் வந்திருப்பவர்கள் என் விரோதிகளா? ஒரு நாளும் இல்லை. உண்மையில் என் ஜன்ம விரோதி யார்? என்னைப் பெற்றவளாகிய நீதான்!…” என்று மதுராந்தகன் கூவினான்.

ஆத்திர மிகுதியால் அச்சமயம் அவன் மரியாதையை மறந்தான்; சின்னப் பழுவேட்டரையர் நல்ல வார்த்தைகளினால் அன்னையின் மனத்தை மாற்றும்படி சொல்லியிருந்ததை மறந்து வசைமாரி பொழிந்தான்.

“ஆம்; நீதான் என்ஜன்ம சத்துரு; வேறு யாரும் இல்லை. நீயும் ஒரு தாயா? உலகத்தில் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் உரிமைக்காகப் படாதபாடு படுவார்கள். நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்? நீ எதற்காக இந்தப் பெரும் துரோகத்தை எனக்குச் செய்கிறாய்? எல்லாவித நியாயங்களினாலும் எனக்குச் சேர வேண்டிய இராஜ்யத்தைப் பிடுங்கி இன்னொருவனுக்குக் கொடுப்பதில் உனக்கு என்ன சிரத்தை! என் தந்தையின் விருப்பம் என்று சொல்லுகிறாய். அவருக்கு நீ வாக்குக் கொடுத்ததாகச் சொல்லுகிறாய். அதற்கெல்லாம் அத்தாட்சி என்ன? நான் நம்பவில்லை. எனக்கு யாரோ துர்ப்போதனை செய்துவிட்டதாகச் சொல்கிறாய். இல்லவே இல்லை, உனக்குத்தான் யாரோ துர்ப்போதனை செய்து, உன் மனத்தைத்தான் கெடுத்து விட்டிருக்கிறார்கள். தாயை மகனுக்கு விரோதியாக்கியிருக்கிறார்கள். நியாயமாக எனக்கு உரிய சோழ சிங்காசனத்தை நான் ஒருநாளும் கை விடமாட்டேன். நீ சொன்னாலும் விடமாட்டேன். சிவபதம் அடைந்த என் தந்தையே திரும்பி வந்து சொன்னாலும் கேட்க மாட்டேன். இந்தச் சோழ சாம்ராஜ்யம் என்னுடையது; இந்தப் பழமையான சிங்காசனம் எனக்குரியது; அவற்றை நான் அடைந்தே தீருவேன்.”

செம்பியன் மாதேவி குரலின் சாந்தத்தில் சிறிதும் மாறுதல் இல்லாமல், “மகனே! சற்று அமைதியாயிரு. நான் வஞ்சக அரக்கியாகவே இருந்தாலும், என் வார்த்தைகளைச் சற்றுச் செவிசாய்த்துக் கேள்!” என்றாள்.

“சோழநாட்டு மக்கள் சுந்தர சோழரின் புதல்வர்களிடம் எவ்வளவு அபிமானம் கொண்டவர்கள் என்பது உனக்குத் தெரியாதா!”

“தாயே! மக்களின் அபிமானத்தைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. மக்களின் அபிமானம் என்னத்துக்கு ஆகும்? மக்கள் ஆளப்படவேண்டியவர்கள், சிம்மாசனத்தில் யார் வீற்றிருந்து அரசு செலுத்துகிறார்களோ, அவர்களிடம் மக்கள் பக்தி செலுத்த வேண்டியவர்கள்!”

“மகனே! உனக்குப் போதனை செய்திருப்பவர்கள் அரசியல் நீதியின் ஆரம்பத் தத்துவத்தைக்கூட உனக்கு உணர்த்தவில்லை. மக்களின் அபிமானம் இல்லாமல் எந்த அரசனும் நீடித்து அரசு செலுத்த முடியாது. அப்படி அரசு புரிவதில் புண்ணியமும் இல்லை!…”

இவ்வாறு அந்தப் பெருமூதாட்டி சொல்லிக் கொண்டிருந்தபோது, அரண்மனை வாசலில் ஒரு பெரும் ஆரவாரம் கேட்டது. ஓலக்குரலும், சாபக்குரலும், கோபக் குரலும், கேள்விக் குரலும் ஆயிரக்கணக்கான மனித கண்டங்களிலிருந்து எழுந்து, பெருங்காற்று அடிக்கும்போது சமுத்திரத்தில் உண்டாகும் பயங்கரப் பேரொலியாகக் கேட்டது.

“மகனே! சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏதோ பெரும் விபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதன் முதல் அறிகுறிதான் இது. நான் அரண்மனைக்கு வெளியே சென்று, என்ன விஷயம் என்றும் தெரிந்து வருகிறேன். அதுவரையில் நீ இங்கேயே இரு!” என்றாள் அன்னை.

பழையாறை நகரின் வீதிகள் அன்று வரை என்றும் கண்டிராதபடி அல்லோலகல்லோலமாயிருந்தன. அத்தென்னகரில் இராஜ மாளிகைகள் இருந்த பகுதியை நோக்கி ஜனங்கள் திரள் திரளாகப் போய்க்கொண்டிருந்தார்கள். மக்களில் அநேகர் அழுது புலம்பிக் கொண்டு சென்றார்கள். பலர் பழுவேட்டரையர்களை வாயாரச் சபித்துக் கொண்டு சென்றார்கள்.

இப்படி ஏற்பட்ட ஆரவாரத்தைத்தான் செம்பியன் மாதேவி மதுராந்தகனோடு பேசிக் கொண்டிருக்கையில் கேட்டார். குமாரனுடன் வாதாடுவதை அத்துடன் நிறுத்தி விட்டு அரண்மனை மேல் மாடத்தில் முன் முகப்புக்கு வந்து சேர்ந்தார். தெய்வீகக்களை பொருந்திய அப்பெரு மூதாட்டியின் திருமுகத்தையும், கூப்பிய கைகளுடன் அவர் நின்ற சாந்தமான தோற்றத்தையும் பார்த்ததும் அந்த ஜனசமுத்திரத்தின் ஆரவாரம் அடங்கியது.

இச்சமயத்தில் தஞ்சாவூர் தூதர்கள் இடித்துப் பிடித்து ஜனங்களைத் தள்ளிக்கொண்டு முன்னால் வந்து சேர்ந்தார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு வந்த சேவகர்களில் ஒருவன், “பெருமாட்டி! இவர்கள் தஞ்சாவூரிலிருந்து முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறார்கள்!” என்றான்.

செம்பியன் மாதேவி ஜனக் கூட்டத்தைப் பார்த்துக் கை அமர்த்திவிட்டுத் தூதர்களை நோக்கி, “என்ன செய்தி கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டார்.

“தாயே! மிகத் துயரமான செய்தி கொண்டு வந்திருக்கும் அபாக்கியசாலிகள் நாங்கள். சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரில் இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கையிலிருந்து கோடிக்கரைக்குக் கப்பலில் வந்து கொண்டிருந்தார்; வரும் வழியில் சுழிக்காற்றில் கப்பல் அகப்பட்டுக் கொண்டுவிட்டது. துணையாக வந்த கப்பல் உடைந்து முழுகிவிட்டது. அதிலிருந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக இளவரசர் கடலில் குதித்தார். பிறகு அகப்படவில்லை. கடலிலும் கடற்கரையெங்கும் தேடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. சக்கரவர்த்தியும், மலையமான் மகளாரும் இச்செய்தியைக் கேட்டுப் பெருந்துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள். தங்களையும் மதுராந்தகத் தேவரையும், இளைய பிராட்டியையும் உடனே புறப்பட்டு தஞ்சைக்கு வரும்படி சக்கரவர்த்தி எங்கள் மூலம் செய்தி அனுப்பி இருக்கிறார்!”

இவ்வாறு தூதர்கள் கூறியது செம்பியன் மாதேவியின் காதிலும் விழுந்தது. அதே சமயத்தில் ஜனக் கூட்டத்தின் செவிகளிலும் விழுந்தது. செம்பியன் மாதேவியின் கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகியது. அதைப் பார்த்த ஜனங்கள் மேலும் ‘ஓ’ என்று கதறினார்கள்.


48. காஞ்சிக்கு ஓலை

ஓடையில் வந்த படகில் வீற்றிருந்தது அரசிளங்குமரி குந்தவைதான் என்பதை வந்தியத்தேவன் நன்கு தெரிந்து கொண்டான். ஓடத்திலிருந்த இளவரசியின் முகத்தைப் பார்த்தான். தான் போய்வந்த காரியத்தை மறந்தான். உலகத்தை மறந்தான் தன்னையுமே மறந்தான். சுய நினைவு இல்லாமலே வந்தியத்தேவன் தண்ணீரில் சில அடிகள் இறங்கிச் சென்று, ஓடத்தில் ஏறிக்கொண்டான். இளவரசி ஓடக்காரனைப் பார்த்துச் சமிக்ஞை செய்தாள், ஓடம் நகரத் தொடங்கியது. வந்தியத்தேவனுடைய உள்ளமும் ஊஞ்சலாடத் தொடங்கியது.

“தாங்கள் போன காரியம் என்ன ஆயிற்று; இளவரசரை அழைத்து வந்தீரா, சௌக்கியமா இருக்கிறாரா. எங்கே விட்டு வந்தீர், யாரிடம் விட்டு வந்தீர் என்று முதலில் தெரியப்படுத்தும், பிறகு, இங்கிருந்து புறப்பட்டு முதல் நடந்தவை எல்லாவற்றையும் சொல்லும்!” என்று இளவரசி கூறினாள்.

அதற்கு வந்தியத்தேவன், “தேவி! தங்களிடம் ஒப்புக் கொண்டு போன காரியத்தை வெற்றிகரமாக முடித்திரா விட்டால், தங்களிடம் திரும்பி வந்து என் முகத்தைக் காட்டியிருப்பேனா? இளவரசரை இலங்கையிலிருந்து அழைத்துக் கொண்டு வந்தேன். அதற்கேற்பட்ட ஆயிரம் இடையூறுகளையும் வெற்றிகொண்டு அழைத்து வந்தேன். இளவரசர் சுகமாயிருக்கிறார் என்று நான் சொல்லமுடியாது. நான் அவரை விட்டுப் பிரியும்போது அவருக்குக் கடுமையான சுரம். ஆனால் பத்திரமான கைகளில் அவரை ஒப்படைத்து வந்திருக்கிறேன். ஓடக்காரப் பெண் பூங்குழலியிடமும், பூக்காரச் சேந்தன் அமுதனிடமும் இளவரசரை விட்டு வந்திருக்கிறேன்” என்றான்.

“தேவி தங்களுடைய கருணையினால் ஒளிந்து மறைந்தும், தந்திர மந்திரம் செய்தும், இல்லாதது பொல்லாததைச் சொல்லியும் பகைவர்களிடமிருந்து தப்பிவரவேண்டியதாயிற்று. அரசிளங்குமரி! இந்த வேலை இனிச் செய்ய என்னால் முடியாது! விடை கொடுங்கள்…”

“ஐயோ! நீருமா என்னைக் கைவிட்டுப் போய்விட எண்ணுகிறீர்?”

“நான் எப்படித் தங்களைக் கைவிட முடியும்? இராஜாதிராஜாக்கள் தங்களுடைய மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றேவல் செய்ய வந்தவன்…”

இளையபிராட்டி அப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா என்ற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அவனுடைய உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன.

“வாணர் குலத்து வீரரே! உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது…”

வல்லவரையன் சொல்லிழந்து செயலிழந்து குந்தவையின் கண்ணீர் ததும்பிய கண்களைப் பார்த்த வண்ணம் மதியும் இழந்து நின்றான்.

“ஐயா! உம்முடைய பதட்டமான காரியங்களினால் உமது உயிருக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்தால், என்னுடைய கதி என்ன ஆகும் என்பதைச் சிறிது எண்ணிப் பாரும்.”

“தேவி! தங்களுடைய இதய சிங்காசனத்தில் இடம் பெற்ற இந்தப் பாக்கியசாலி உயிருக்குப் பயந்த கோழையாயிருக்க முடியுமா?”

“கோழைத்தனம் வேறு, ஜாக்கிரதை வேறு, ஐயா! முதன் மந்திரி அநிருத்தருக்குக்கூடத் தங்கள் வீரத்தைப் பற்றி ஐயம் கிடையாது. முதன் மந்திரி, காஞ்சிக்கு மிகவும் நம்பிக்கையான ஒருவரை அனுப்ப விரும்புகிறார். உம்மை அனுப்பலாம், நம்பி அனுப்பலாம் என்று நான் உறுதி அளித்திருக்கிறேன்.”

“என்னைக் காஞ்சிக்கு அனுப்பாதீர்கள், தேவி!”

“ஏன்?”

“அங்கே என் எஜமானர் இருக்கிறார். அவர் கேட்டால் நான் எல்லா விவரங்களையும் சொல்லித்தான் ஆகவேண்டும். பழுவேட்டரையர்களும், மற்றச் சிற்றரசர்களும் செய்யும் சதியைப்பற்றி அறிந்தால் உடனே வெகுண்டு எழுவார். சக்கரவர்த்தியைச் சிறைவைப்பது போல் வைத்திருக்கிறார்கள் என்று அறிந்தால் உடனே படை எடுத்துக் கிளம்புவார். பொன்னியின் செல்வரைப் பற்றிய செய்தி அவர் காதில் எட்டியிருந்தால் இதற்குள்ளேயே ஒருவேளை புறப்பட்டிருந்தாலும் புறப்பட்டிருப்பார்…”

“அதற்காகவேதான் – உம்மை அனுப்ப விரும்புகிறேன். அவர் காஞ்சியைவிட்டுப் புறப்படாமல் எப்படியாவது தடுத்து விடவேண்டும்.”

“நான் காஞ்சியை அடைவதற்குள் அவர் புறப்பட்டிருந்தால்?”

“வழியில் அவர் எங்கே இருந்தாலும் அங்கே போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் விட முக்கியமாக நீர் அவசியம் செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது…”

“சொல்லுங்கள்!”

“பெரிய பழுவேட்டரையர் இளையராணியுடன் கடம்பூர் மாளிகைக்குப் புறப்பட்டுவிட்டார் என்ற செய்தி கிடைத்திருக்கிறது…”

“உண்மையில் இளைய ராணிதான் போகிறாளா! அல்லது இளைய ராணியின் பல்லக்கில்…”

“இல்லை; இளைய ராணிதான் போகிறாள். என் சித்தப்பாதான் இன்னும் இங்கே இருக்கிறாரே!”

“எதற்காகப் போகிறார்களாம்?”

“ஆதித்த கரிகாலனையும் கடம்பூருக்கு வரும்படி அழைத்திருக்கிறார்கள். கல்யாணப் பேச்சு என்பது வெளிப்படையான காரணம். இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்துக் கொடுத்துச் சமாதானம் செய்து வைக்கப் போவதாகவும் ஒரு பேச்சு நடந்து வருகிறது.”


“என் எஜமானர் அதற்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டார்.”

“அதைப் பற்றியெல்லாம் இப்போது எனக்குக் கவலை இல்லை.”

“பின்னே என்ன கவலை தேவி!”

“ஐயா! என்னுடைய பயம் என் தமையனைப் பற்றியது; பழுவூர் ராணியைப் பற்றியது. அவர்கள் சந்தித்தால் என்ன நேரிடுமோ என்று எண்ணி என் உள்ளம் கலங்குகிறது. அவர்கள் தனியாகச் சந்திக்க முடியாதபடி நீர் தடை செய்ய வேண்டும்…”

“தேவி! அவர் ஒன்றும் செய்வதற்கு நினைத்தால் அதை யார் தடுக்க முடியும்?”

“ஐயா! என் தமையனைக் காப்பாற்றும் இரும்புக் கவசம் போல் நீர் உதவவேண்டும். எப்படிச் செய்வீர் என்று எனக்குத் தெரியாது. அவர்களை எப்படியேனும் சந்திக்க முடியாதபடி செய்தால் மிக்க நலமாயிருக்கும்.”

“தேவி! என்னாலியன்ற முயற்சிகளைச் செய்து பார்க்கிறேன். தோல்வி அடைந்தால் என்னைக் குற்றம் சொல்ல வேண்டாம்” என்றான் வந்தியத்தேவன்.

“ஐயா! தாங்கள் தோல்வி அடைந்தாலும், வெற்றி அடைந்தாலும் என் இதயச் சிறையிலிருந்து இந்த ஜன்மத்தில் தங்களுக்கு விடுதலை கிடையாது!” என்றாள் அரசிளங்குமரி.

மறுநாள் காலையில் வந்தியத்தேவன் முதல் மந்திரி அநிருத்தரின் ஓலையுடன் அரிசிலாற்றங்கரையோடு குடந்தை நகரை நோக்கிப் போய் கொண்டிருந்தான். குதிரையை விரட்டாமல் மெள்ளச் செலுத்திக் கொண்டு இருபுறமும் தோன்றிய இனிய காட்சிகளைப் பார்த்துக்கொண்டு போனான். ஐப்பசி மாதத்தின் ஆரம்பத்தில் சோழவளநாடு பூரணப் பொலிவுடன் விளங்கிற்று.  வழியில் ஆழ்வார்க்கடியான் கொள்ளிடக்கரையில் அவனுடன் வந்து சேர்ந்து கொள்வான் என்று சொன்னார்கள்!


49. கொலை வாள்

சிறுவன் பல்லக்கில் ஏறிக்கொண்டான், பல்லக்கு நகர்ந்தது. அதைச் சுற்றிலும் தீப்பந்தங்களைப் பிடித்துக்கொண்டு பல வித கோஷங்களை எழுப்பிக் கொண்டும் ரவிதாஸனுடைய கோஷ்டியார் சென்றார்கள். அந்த அதிசய ஊர்வலம் போய்க் கொண்டேயிருந்தது. வயல்கள், வாய்க்கால்கள், வரப்புகள், காடுமேடுகளைத் தாண்டி ஒரு கணமும் நிற்காமல் போய்க் கொண்டு இருந்தது. கடைசியாக வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய மண்ணி நதியையும் தாண்டி அப்பால் திருப்புறம்பயம் எல்லையை அடைந்தது. பள்ளிப் படையைச் சுற்றிலும் மண்டியிருந்த காட்டுக்குள்ளும் பிரவேசித்தது.

நூறு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டு இப்போது பாழடைந்த காடு அடர்ந்திருந்த பள்ளிப்படைக்கு உள்ளேயிருந்து ஒருவன் பழைய சிம்மாசனம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில், ‘சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்பட்ட சிறுவனை உட்காரச் செய்தார்கள். தீவர்த்திகளில் இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அணைத்து விட்டார்கள். அவ்விதம் தீவர்த்திகளை அணைத்த போது எழுந்த புகை நாலாபுறமும் சூழ்ந்தது.

“ராணி இன்னும் வரவில்லையே?” என்றான் ஒருவன்.

“சமயம் பார்த்துத் தானே வரவேண்டும்? இரண்டாவது ஜாமத்திலேதான் நானும் வரச் சொல்லியிருக்கிறேன். அதுவரையில் வழுதி குலத்துப் புகழ்மாலையை யாராவது பாடுங்கள்!” என்றான் சோமன் சாம்பவன்.

இடும்பன்காரி உடுக்கு ஒன்றை எடுத்து இலேசாக அதைத் தட்டினான். தேவராளன் பாட்டுப் பாடத் தொடங்கினான்.

அது அந்த இடத்தில் நூறு வருஷங்களுக்கு முன்னால் நடந்த மாபெரும் போரைப் பற்றிய வரலாறு; அங்கேதான் வரகுண பாண்டியனுக்கும், அபராஜித பல்லவனுக்கும் மூன்று நாட்கள் கொடிய யுத்தம் நடந்தது. பல்லவனுக்குத் துணையாகக் கங்க மன்னன் பிருதிவீபதி வந்தான். அப்போரில் மாண்ட லட்சக்கணக்கான வீரர்களைப் போல் அம்மகாவீரனும் இறந்து விழுந்தான். அவனுடைய ஞாபகமாகக் கட்டிய பள்ளிப்படைக் கோவில்தான் இப்போது சதிகாரர்கள் கூடும் இடமாக அமைந்திருக்கிறது.

கங்க மன்னன் இறந்ததும், பல்லவர் படைகள் சிதறி ஓடத் தொடங்கின. பாண்டிய சைன்யத்தின் வெற்றி நிச்சயம் என்று தோன்றியது. இச்சமயத்தில் சோழர் படைகள் பல்லவர்களின் உதவிக்கு வந்தன. அப்படைக்கு தலைமை வகித்துத் திருமேனியில் தொண்ணூற்றாறு புண் சுமந்த விஜயாலய சோழன் வந்தான். இரண்டு கால்களையும் முன்னமே இழந்திருந்த அவ்வீரப் பெருங்கிழவனை நாலு பேர் தூக்கிக் கொண்டு வந்தார்கள். இரண்டு கைகளிலும் இரண்டு நெடிய வாள்களை ஏந்திக் கொண்டு அவன் பாண்டியர் சைன்யத்தில் புகுந்தான். இரண்டு வாள்களையும் சக்கராகாரமாகச் சுழற்றிக் கொண்டே போனான். அவன் சென்ற இடங்களிலெல்லாம் இருபுறமும் பாண்டிய வீரர்களின் உயிரற்ற உடல்கள் மலைமலையாகக் குவிந்தன. சிதறி ஓடிய பல்லவ சேனா வீரர்கள் திரும்பி வரத் தொடங்கினார்கள். வாள்களும் வேல்களும் மோதின! ஆயிரம் பதினாயிரம் தலைகள் நாலாபுறமும் உருண்டன. ஆயிரம் பதினாயிரம் உயிரற்ற உடல்கள் விழுந்தன!

அச்சமயம் தேவராளன் பாண்டியர் படைக்கு முன்னால் பல்லவரும், கங்கரும் தோற்று ஓடியதைப் பற்றிப் பாடிக் கொண்டிருந்தான். உடுக்கு முழக்கம் திடீர் என்று நின்றது. தேவராளனும் பாட்டை உடனே நிறுத்தினான்.

சற்றுத் தூரத்தில் ஒரு தீவர்த்தி வெளிச்சம் தெரிந்தது. அது நெருங்கி நெருங்கி வந்தது. தீவர்த்தி வெளிச்சத்தைத் தொடர்ந்து ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்கைச் சுமந்து வந்தவர்கள் அதைக் கீழே இறக்கி வைத்தார்கள். பல்லக்கின் திரைகள் விலகின. நந்தினி பல்லக்கிலிருந்து இறங்கியதும் சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிறுவனைப் பார்த்தாள். அவனையே பார்த்த வண்ணம் நடந்து வந்தாள். சிறுவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நந்தினி அவனைத் தன் இரு கரங்களாலும் அணைத்துக் கொண்டாள், உச்சி முகந்தாள். சிறுவனும் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கட்டிக் கொண்டான்.

நந்தினி சிறுவனைச் சிம்மாசனத்தில் உட்கார வைத்தாள். மீண்டும் பல்லக்கின் அருகில் சென்றாள். அதனுள்ளிருந்து வாளை எடுத்துக் கொண்டாள். பல்லக்குத் தூக்கி வந்தவர்களைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தாள். அவர்கள் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு சற்றுத் தூரத்தில் போய் மறைவாக உட்கார்ந்து கொண்டார்கள்.

நந்தினி மீண்டும் சிம்மாசனத்தின் அருகில் வந்தாள். கத்தியை அச்சிம்மாசனத்தின் மீது குறுக்காக வைத்தாள். சிறுவன் அதை அடங்கா ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே, “நான் இதைக் கையில் எடுக்கலாமா?” என்று கேட்டான்.

“சற்றுப் பொறு, என் கண்மணி!” என்றாள் நந்தினி. பிறகு, ரவிதாஸன் முதலியவர்களையும் வரிசைக் கிரமமாக உற்றுப் பார்த்தாள். “சபதம் எடுத்துக் கொண்டவர்களைத் தவிர இங்கு வேறு யாரும் இல்லையே?” என்று கேட்டாள்.

“இல்லை, தேவி!” என்றான் சோமன் சாம்பவன்.

ரவிதாஸனைப் பார்த்து நந்தினி “சேநாதிபதி!…” என்று ஆரம்பித்தாள். ரவிதாஸன் சிரித்தான்.

“இன்றைக்கு உமக்குச் சிரிப்பாயிருக்கிறது. அடுத்தமாதம் இந்த நாளில் எப்படியிருக்குமோ, யார் கண்டது!”

“தேவி! அந்த நல்ல நாள் எப்போது வரப்போகிறது என்று எத்தனையோ காலமாக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.”

“ஐயா! நாமோ ஒரு சிலர். நம் சக்கரவர்த்தி சின்னஞ்சிறு குழந்தை. சோழ ராஜ்யம் மகத்தானது, சோழர்களின் சேனாபலம் அளவற்றது. நாம் அவசரப் பட்டிருந்தோமானால் அடியோடு காரியம் கெட்டுப் போயிருக்கும். பொறுமையாக இருந்ததினால் இப்போது காரிய சித்தி அடையும் வேளை நெருங்கியிருக்கிறது.”

“தேவி! சபதம் நிறைவேறும் வேளை நெருங்கி விட்டது என்றீர்கள். எங்கே, எப்படி, யார் மூலமாக நிறைவேறப் போகிறது என்று சொல்லி அருள வேண்டும்” என்றான்.

“ஆகட்டும்; அதைச் சொல்வதற்காகவே இங்கு வந்தேன். அதற்காகவே உங்கள் எல்லாரையும் இங்கே தவறாமல் வரச் சொன்னேன். நம்முடைய சக்கரவர்த்தியையும் அழைத்து வரச் செய்தேன்” என்றாள் நந்தினி.

சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிறுவன் உள்பட அனைவரும் நந்தினியின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவள் மேலும் கூறினாள்:

“உங்களில் சிலர் அவசரப்பட்டீர்கள். நாம் எடுத்துக் கொண்ட சபதத்தை மறந்துவிட்டேனோ என்றும் சிலர் சந்தேகப் பட்டீர்கள். அந்தச் சந்தேகம் அடாதது. மறவாமல் நினைவு வைத்துக் கொள்ள, உங்கள் எல்லோரைக் காட்டிலும் எனக்குத் தான் காரணம் அதிகம் உண்டு. சென்ற மூன்று ஆண்டுகளாக அல்லும் பகலும் நான் வேறு எதைப் பற்றியும் சிந்தித்ததில்லை. நாம் எடுத்துக்கொண்ட சபதத்தின்படி பழி வாங்குவதற்குச் சமய சந்தர்ப்பங்களையும், தந்திர உபாயங்களையும் தவிர வேறு எதையும் பற்றி நான் எண்ணியதில்லை. எங்கே சென்றாலும், என்ன காரியம் செய்தாலும், யாரிடம் பேசினாலும் நமது நோக்கம் நிறைவேறுவதற்கு அதனால் உபயோகம் உண்டா என்பதைத் தவிர வேறு நினைவு எனக்கில்லை. சமய சந்தர்ப்பங்கள் இப்போது கூடியிருக்கின்றன. சோழ நாட்டுச் சிற்றரசர்களும் பெருந்தர அதிகாரிகளும் இரு பிரிவாகப் பிரிந்திருக்கிறார்கள். பழுவேட்டரையர், சம்புவரையர் முதலானோர் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட முடிவு செய்து விட்டார்கள். கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரியும், திருக்கோவலூர் மலையமானும் அதற்கு விரோதமாயிருக்கிறார்கள். பூதி விக்கிரமகேசரி தென் திசைச் சைன்யத்துடன் தஞ்சை நோக்கி வருவதாகக் கேள்விப்படுகிறேன். திருக்கோவலூர் மலையமான் படை திரட்டி வருவதாகவும் அறிகிறேன். இருதரப்பாருக்கும் எந்த நிமிஷமும் யுத்தம் மூளலாம்.

“தேவி! அப்படி யுத்தம் மூளாதிருப்பதற்குத் தாங்கள் பெரு முயற்சி செய்து வருவதாகக் கேள்வியுறுகிறோம். கடம்பூர் சம்புவரையன் மாளிகையில் சமரசப் பேச்சு நடக்கப் போவதாக அறிகிறோம்.”

“ஆமாம்; அந்த ஏற்பாடு செய்திருப்பது நானேதான். ஆனால் என்ன காரணத்திற்காக வென்று உங்களால் ஊகிக்க முடியவில்லையா?”

“முடியவில்லை. ராணி!”

“அது உங்களால் முடியாத காரியந்தான். நான் சொல்கிறேன், தெரிந்து கொள்ளுங்கள். நம்முடைய சபதம் நிறைவேறுவதற்கு முன்னால் சோழ ராஜ்யத்தில் இந்த உள்நாட்டுச் சண்டை மூண்டால், அதன் விளைவு என்ன ஆகும் என்று சொல்ல முடியாது சுந்தர சோழன் இன்னும் உயிரோடிருக்கிறான்; அன்பில் பிரம்மராயன் ஒருவனும் இருக்கிறான்; இவர்கள் தலையிட்டு இருகட்சிக்காரர்களையும் அடக்கி விடுவார்கள். அல்லது ஒரு கட்சி தோற்று, இன்னொரு கட்சி வலுத்துவிட்டாலும் நமது நோக்கம் நிறைவேறுவது அசாத்தியமாகிவிடும். அதற்காகவே இந்தச் சமாதானப் பேச்சை இப்போது தொடங்கியிருக்கிறேன். சண்டை உண்மையாக மூளுவதற்குள்ளே நம் நோக்கத்தை நிறைவேற்றிவிட வேண்டும். அப்படி நிறைவேற்றிய பிறகு சோழ ராஜ்யத்துச் சிற்றரசர்களுக்குள் மூளும் சண்டைக்கு முடிவேயிராது. ஒரு கட்சியாரும் சர்வநாசம் அடையும் வரையில் சண்டை நடந்து கொண்டேயிருக்கும். இப்போது தெரிகிறதா…சமாதானப் பேச்சு தொடங்கியதன் காரணம்?”

இதைக் கேட்டதும் அங்கே சூழ்ந்து நின்றவர்கள் எல்லாருடைய முகங்களிலும் வியப்புக்கும், உற்சாகத்துக்கும் அறிகுறிகள் காணப்பட்டன. பழுவூர் இளைய ராணியின் மதிநுட்பத்தை வியந்து அவர்கள் ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசிக் கொண்டார்கள். ரவிதாஸனுக்கும் ஆச்சரியப்படாமலிருக்க முடியவில்லை.

“தேவி! தங்களுடைய அபூர்வமான முன் யோசனைத் திறனை வியக்கிறோம். சமாதானப் பேச்சின் கருத்தை அறிந்து கொண்டோம். ஆனால் சபதம் நிறைவேறும் நாள் நெருங்கி விட்டது என்கிறீர்கள். அதை நடத்துவது யார்? எப்படி? எப்போது?” என்றான்.

“அதற்கும் சேர்த்துத்தான் இந்த யுக்தி செய்திருக்கிறேன். சமாதானப் பேச்சு என்ற வியாஜத்தின் பேரில் நமது முதற் பகைவனைக் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரும்படி அழைப்பு அனுப்பியிருக்கிறது; அவன் அங்கே கட்டாயம் வந்து சேருவான். நம்முடைய சபதத்தை அங்கேதான் நிறைவேற்றியாக வேண்டும். வீரபாண்டிய சக்கரவர்த்தியின் ஆபத்துதவிகளே! உங்களுடைய பழி தீரும் வேளை நெருங்கி விட்டது. இன்றைக்கு சனிக்கிழமையல்லவா? அடுத்த சனிக் கிழமைக்குள் நம்முடைய சபதம் நிறைவேறிவிடும்!…”

அங்கே இருந்த இருபது பேர்களும் ஏக காலத்தில் ‘ஆஹா’ காரம் செய்தார்கள். சிலர் துள்ளிக் குதித்தார்கள். உடுக்கு வைத்திருந்தவன் உற்சாக மிகுதியினால் அதை இரண்டு தடவை தட்டினான். மரக்கிளைகளில் தூங்கிக்கொண்டிருந்த ஆந்தைகள் விழித்து உறுமிக்கொண்டு வேறு கிளைகளுக்குத் தாவின. வௌவால்கள் சடசடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டு ஓடின.

ரவிதாஸன் மற்றவர்களுடைய உற்சாகத்தைக் கையமர்த்தி அடக்கினான்.

“தேவி! தங்களுடைய கடைசி வார்த்தை எங்களுக்கு அளவிலாத குதூகலத்தை அளித்திருக்கிறது. நமது முதற்பகைவனைக் கொன்று பழி முடிக்கும் காலம் இவ்வளவு அண்மையில் வந்திருப்பதை எண்ணிக் களிக்கிறோம்! ஆனால், பழிமுடிக்கும் பாக்கியம் யாருக்கு?” என்று கேட்டான்.

“அதற்கு நமக்குள் போட்டி ஏற்படுவது இயற்கைதான். அதை யாருக்கும் மனத்தாங்கல் இல்லாத முறையில் முடிவு செய்வதற்காகவே வீரபாண்டியரின் திருக்குமாரச் சக்கரவர்த்தியை இங்கு அழைத்து வரச் செய்தேன். வீரபாண்டியரின் கத்தியும் இதோ இருக்கிறது. இந்தச் சின்னஞ்சிறு குழந்தை தந்தையின் கத்தியைத் தொட்டு நம்மில் எவர் கையில் கொடுக்கிறதோ, அவர் பழி முடிக்க வேண்டும். மற்றவர்கள் அக்கம் பக்கத்தில் உதவிக்குச் சித்தமாக நிற்க வேண்டும். ஏற்றுக்கொண்டவர் தவறிவிட்டால் மற்றவர்கள் முன் வந்து முடிக்கவேண்டும். கடம்பூர் மாளிகைக்குள்ளேயே நான் இருப்பேன். இடும்பன்காரி கோட்டைக் காவலர்களில் ஒருவனாக இருப்பான். பழிமுடிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர் மாளிகைக்குள் பிரவேசிப்பதற்கு நாங்கள் உதவி செய்வோம். இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் சம்மதந்தானே?”

ஆபத்துதவிகள் ஒருவரையொருவர் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டார்கள். எல்லோருக்கும் அந்த ஏற்பாடு சம்மதமாகவே தோன்றியது.

ரவிதாஸன் கூறினான்:”தாங்கள் சொன்னது சரியான ஏற்பாடுதான். அதற்கு நாங்கள் எல்லோரும் சம்மதிக்கிறோம்.”

பின்னர், இந்தப் பேச்சுக்களையெல்லாம் புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த சிறுவனை நந்தினி தேவி பார்த்து “என் கண்மணி! இந்த வீரவாள் உன் தந்தையினுடையது. இதை உன் பிஞ்சுக் கையினால் எடுத்து இங்கே உள்ளவர்களில் உனக்கு யாரை அதிகமாய்ப் பிடித்திருக்கிறதோ, அவர்களிடம் கொடு!” என்றாள்.

ரவிதாஸன் சற்று அருகில் வந்து “சக்கரவர்த்தி, எங்களையெல்லாம் நன்றாய்ப் பாருங்கள்! எங்களில் யார் வீரன் என்றும் தைரியசாலி என்றும் தங்களுக்குத் தோன்றுகிறதோ, அவனிடம் இந்தப் பாண்டிய குலத்து வீரவாளைத் தொட்டுக் கொடுங்கள்!” என்றான்.

சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிசு சக்கரவர்த்தி சுற்று முற்றும் பார்த்தார். எல்லாரும் அடங்காத ஆவலுடனும் பரபரப்புடனும் சக்கரவர்த்தியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய கண்களும் “என்னிடம் கொடுங்கள்! என்னிடம் கொடுங்கள்!” என்று கெஞ்சும் பாவத்தைக் காட்டின.

ரவிதாஸனுடைய முகமும் கண்களும் மட்டும் “என்னிடம் கொடுங்கள்!” என்று அதிகாரபூர்வமாகப் பயமுறுத்திக் கட்டளையிட்டன.

சிறுவன் இரண்டு மூன்று தடவை எல்லாரையும் திருப்பித் திருப்பிப் பார்த்த பின்னர், கத்தியைக் கையில் எடுத்தான். அதைத் தூக்க முடியாமல் தூக்கினான்.

அனைவருடைய பரபரப்பும் சிகரத்தை அடைந்தது. சிறுவன் பளிச்சென்றும் நந்தினி நின்ற பக்கம் திரும்பினான். “எனக்கு உன்னைத்தான் எல்லாரைக் காட்டிலும் அதிகமாகப் பிடித்திருக்கிறது. நான் பெரியவனாகும் வரையில் நீதான் எனக்காக இராஜ்யத்தை ஆளவேண்டும்” என்று சொல்லிக் கொண்டே வாளை அவளிடம் கொடுத்தான்.

சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட சிறுவன் கொடுத்த வாளை நந்தினி வாங்கிக் கொண்டாள். அதை மார்போடு அணைத்துத் தழுவிக் கொண்டாள். பின்னர் அச்சிறுவனையும் தூக்கி எடுத்து அவனையும் சேர்த்து மார்புடன் அணைத்துத் தழுவிக் கொண்டாள். அவளுடைய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பொழிந்தது.

மற்றவர்கள் சற்று நேரம் வரை இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு திகைத்து நின்றார்கள். ரவிதாஸன் முதலில் திகைப்பு நீங்கப்பெற்றுக் கூறினான்.

“தேவி! சக்கரவர்த்தி நம்முடைய கோரிக்கையை நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளாமல் தங்களிடம் வாளைக் கொடுத்து விட்டார். மறுபடியும் விளக்கமாகச் சொல்லி…” நந்தினி அவனைத் தடுத்து நிறுத்தினாள்; தழுதழுத்த குரலில் கூறினாள். “இல்லை, ஐயா இல்லை! சக்கரவர்த்தி நன்றாய்ப் புரிந்து கொண்டுதான் வாளை என்னிடம் கொடுத்தார். என் கண்ணீரைப் பார்த்து நீங்கள் கலங்க வேண்டாம். வீரபாண்டிய சக்கரவர்த்தியின் படுகொலைக்குப் பழி வாங்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததை நினைத்துக் களிப்பு மிகுதியினால் கண்ணீர் விடுகிறேன்!”

“தேவி! யோசித்துப் பாருங்கள்! நாங்கள், இத்தனை பேர் ஆபத்துதவிப் படையினர் உயிரோடிருக்கும்போது…” என்று சோமன் சாம்பவன் தொடங்கியதை நந்தினி தடுத்து நிறுத்தினாள்.

“யோசிக்க வேண்டியதே இல்லை, அந்தப் பொறுப்பு என்னுடையதுதான். உங்களுக்கும் வேலையில்லாமற் போகவில்லை. உங்களில் பாதி பேர் சக்கரவர்த்தியைப் பத்திரமாகப் பஞ்ச பாண்டவர் மலைக்குக் கொண்டு போய்ச் சேருங்கள். மற்றவர்கள் கடம்பூருக்கு வாருங்கள். சம்புவரையன் மாளிகைக்குள் வரக்கூடியவர்கள் வாருங்கள் மற்றவர்கள் வெளியில் சித்தமாகக் காத்திருங்கள். வேகமாகச் செல்லக்கூடிய குதிரைகளுடன் காத்திருங்கள். காரியம் வெற்றிகரமாக முடிந்த பின் கூடுமானால் எல்லாரும் உயிருடன் தப்பித்துச் செல்ல வேண்டும் அல்லவா?” என்றாள் நந்தினி.

ரவிதாஸன் முன் வந்து, “அம்மணி! ஒரு விஷயம் சொல்ல மறந்து போய்விட்டது; அதைச் சொல்ல அனுமதிக்க வேண்டும்” என்றான்.

“சொல்லுங்கள், ஐயா! சீக்கிரம் சொல்லுங்கள்! பழுவேட்டரையர் கொள்ளிடக்கரையில் நடக்கும் காலாமுகர்களின் மகா சங்கத்துக்குப் போயிருக்கிறார். அவர் திரும்பி வந்து விடுவதற்குள்ளே நான் அரண்மனை போய்ச் சேரவேண்டும்!” என்றாள் நந்தினி.

“நமது முதற் பகைவன் ஆதித்த கரிகாலன் கடம்பூர் சம்புவரையன் மாளிகைக்கு வந்து சேருவான் என்று சொன்னீர்கள் அல்லவா? அது அவ்வளவு நிச்சயமில்லை” என்றான்.

“எந்தக் காரணத்தைக் கொண்டு அவ்விதம் சொல்கிறீர்?”

“தகுந்த காரணத்தைக் கொண்டுதான் சொல்கிறேன் கடம்பூர் மாளிகைக்கு எக்காரணத்தைக் கொண்டும் வரவேண்டாம் என்று ஆதித்த கரிகாலனுக்கு ஓலை போகிறது. பழையாறை இளைய பிராட்டியும், முதன் மந்திரி அநிருத்தரும் அவ்விதம் செய்தி அனுப்பியிருக்கிறார்கள்…”

“அந்த விவரம் எனக்குத் தெரியாது என்றா நினைத்தீர்?”

“தெரிந்திருந்தும் அவன் கடம்பூருக்கு வருவான் என்று எதிர்பார்க்கிறீர்களா?”

“ஆம்; அவசியம் எதிர்பார்க்கிறேன். ஆதித்த கரிகாலருடைய இயல்பு அந்தப் பழையாறைப் பெண் பாம்புக்குத் தெரியாது; அன்பில் பிரம்மராட்சதனுக்கும் தெரியாது; மாய மந்திர வித்தைகளில் தேர்ந்த உமக்குங்கூடத் தெரியவில்லை. எந்தக் காரியத்தையாவது செய்யவேண்டாம் என்று யாரேனும் தடுத்தால், அதைத்தான் ஆதித்த கரிகாலர் கட்டாயமாகச் செய்வார். அது எனக்குத் தெரியும்; நிச்சயமாகத் தெரியும். ஆதித்த கரிகாலர் அருள்மொழிவர்மனைப் போன்ற எடுப்பார் கைப்பிள்ளை அல்ல. மதுராந்தகனைப் போன்ற பயங்கொள்ளிப் பேதை அல்ல. கடம்பூருக்கு வரவேண்டாமென்று தமக்கையும் முதன் மந்திரியும் செய்தி அனுப்பியிருப்பதனாலேயே கட்டாயம் ஆதித்த கரிகாலர் கடம்பூருக்கு வந்து சேருவார்!” என்றாள் நந்தினி.


50. சுரம் தெளிந்தது

நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் ஆச்சாரிய பிக்ஷுவின் அறைக்குப் பக்கத்து அறையில் பொன்னியின் செல்வன் மரக்கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான். மூன்று நாள் அவனுக்குக் கடும் சுரம் அடித்துக் கொண்டிருந்தது; பெரும்பாலும் சுயப் பிரக்ஞையே இல்லாமலிருந்தது. இந்த நாட்களில் பிக்ஷுக்கள் அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டு வந்தார்கள். வேளைக்கு வேளை மருந்து கொடுத்து வந்தார்கள். அடிக்கடி வாயில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு ஜாக்கிரதையாகப் பார்த்து வந்தார்கள்.

நாலாம் நாள் காலையில் தூக்கத்திலிருந்து விழித்தெழுவது போல எழுந்து, பூரண சுய நினைவு பெற்றான். உடம்பு பலவீனமாய்த் தானிருந்தது; ஆனால் உள்ளம் தெளிவாக இருந்தது. அச்சமயம் புத்த பிக்ஷு ஒருவர் அந்த அறைக்குள் வந்தார். வழக்கம்போல் கையில் கிண்ணத்துடன் வந்தார்! இளவரசன் அருகில் வந்ததும் பிக்ஷு அவனை உற்றுப் பார்த்தார்! இளவரசன் கையை நீட்டிக் கிண்ணத்தை வாங்கி அதில் இருப்பது என்னவென்று பார்த்தான். அது மருந்து அல்லது மருந்து கலந்த பால் என்று தெரிந்து கொண்டான். பிக்ஷுவை நோக்கி, “சுவாமி! இது என்ன இடம்? தாங்கள் யார்? எத்தனை நாளாக நான் இங்கே இப்படிப் படுத்திருக்கிறேன்?” என்று கேட்டான்.

பிக்ஷு அதற்கு ஒன்றும் மறுமொழி சொல்லாமல் திரும்பிச் சென்றார். அடுத்த அறைக்கு அவர் சென்று, “ஆச்சாரியாரே! சுரம் நன்றாய்த் தெளிந்துவிட்டது. நினைவு பூரணமாக வந்து விட்டது!” என்று கூறியது இளவரசன் காதில் விழுந்தது.

சிறிது நேரத்துக்கெல்லாம் வயது முதிர்ந்த பிக்ஷு ஒருவர் பொன்னியின் செல்வன் இருந்த அறைக்குள் வந்தார். கட்டிலின் அருகில் வந்து அவரும் இளவரசனை உற்றுப் பார்த்தார். பிறகு மலர்ந்த முகத்துடன், “பொன்னியின் செல்வ! தாங்கள் இருக்குமிடம் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரம். கடுமையான ஜுரத்துடன் தாங்கள் இங்கே வந்து மூன்று தினங்கள் ஆயின. தங்களுக்கு இந்தச் சேவை செய்வதற்குக் கொடுத்து வைத்திருந்தோம். நாங்கள் பாக்கியசாலிகள்!” என்றார்.

இளவரசன் மருந்தைச் சாப்பிட்டு விட்டு, “ஐயா! என் விஷயத்தில் தாங்கள் எவ்வளவோ சிரத்தை எடுத்துச் சிகிச்சை செய்வித்திருக்கிறீர்கள். ஆனால் இதற்காகத் தங்களுக்கு நான் நன்றி செலுத்தப் போவதில்லை” என்றான்.

ஆச்சாரிய பிக்ஷு புன்னகை புரிந்து, “இளவரசே தாங்கள் நன்றி செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வது பரமோத்தம தர்மம் என்று புத்த பகவான் அருளியிருக்கிறார். நோய்ப்பட்ட பிராணிகளுக்குக் கூடச் சிகிச்சை செய்யும்படி புத்த தர்மம் கட்டளையிடுகிறது. தங்களுக்குச் சிகிச்சை செய்ததில் அதிக விசேஷம் ஒன்றுமில்லை. சோழகுலத்துக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள். தங்கள் தந்தையார் சுந்தர சோழ சக்கரவர்த்தியும், தங்கள் திருத்தமக்கையார் இளைய பிராட்டியும் புத்த தர்மத்துக்கு எவ்வளவோ ஆதரவு அளித்திருக்கிறார்கள். இலங்கை அநுராதபுரத்தில் புத்த விஹாரங்களைப் புதுப்பித்துக் கட்ட நீங்கள் ஏற்பாடு செய்ததும் எங்களுக்குத் தெரிந்ததே. அப்படியிருக்கும் போது, நாங்கள் செய்த இந்தச் சிறிய உதவிக்காகத் தங்களிடம் நன்றி எதிர்பார்க்கவில்லை….”

“ஆச்சாரியரே! நன்றி செலுத்துவது பற்றி அந்த முறையில் நான் கூறவில்லை. எனக்கு எப்பேர்ப்பட்ட கடும் ஜுரம் வந்திருக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இலங்கையில் இந்த ஜுரத்தினால் பீடிக்கப்பட்டவர்களின் கதியை நான் பார்த்திருக்கிறேன். நியாயமாக இதற்குள் நான் வானவர் உலகத்துக்குப் போயிருக்க வேண்டும். அதைத் தாங்கள் கெடுத்து விட்டீர்கள்! வானுலகத்தில் வாசல் வரையில் சென்ற என்னைத் திரும்ப இந்தத் துன்பம் நிறைந்த மண்ணுலகத்துக்குக் கொண்டு வந்து விட்டீர்கள். ஆதலின் எனக்குத் தாங்கள் நன்மை செய்ததாகவே நான் எண்ணவில்லை. ஆகையால்தான் தங்களுக்கு நன்றி செலுத்தப் போவதில்லை என்று கூறினேன்!”

“பொன்னியின் செல்வ! தாங்கள் வானுலகத்துக்குப் போக வேண்டிய காலம் வரும். ஆனால் அந்தக் காலம் இன்னும் நெடுந் தூரத்தில் இருக்கிறது. இந்த மண்ணுலகில் தாங்கள் செய்ய வேண்டிய அரும்பெரும் காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன! அவற்றை முடித்து விட்டல்லவா வானுலகம் செல்வது பற்றி யோசிக்க வேண்டும்?” என்றார்.

இதுகாறும் சாய்ந்து படுத்திருந்த பொன்னியின் செல்வன் நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனுடைய திருமுகத்தில் அபூர்வமான களை பொலிந்தது. “ஆச்சாரியரே! தாங்கள் கூறுவது உண்மை. இந்த மண்ணுலகில் நான் சில காரியங்களைச் சாதிக்க விரும்புகிறேன். அரும்பெரும் பணிகள் பல செய்து முடிக்க விரும்புகிறேன். இந்தச் சூடாமணி விஹாரத்தை ஒரு சமயம் வெளியிலிருந்து பார்த்தேன். அநுராதபுரத்திலுள்ள ஸ்தூபங்களையும் விஹாரங்களையும் பார்த்தேன். அங்கேயுள்ள அபயங்கிரி விஹாரத்தைப் போலப் பெரிதாக இந்தச் சூடாமணி விஹாரத்தைப் புனர் நிர்மாணம் செய்யப் போகிறேன். அநுராதபுரத்தில் உள்ள பெரிய பெரிய புத்தர் சிலைகளைப் போன்ற சிலைகளை இந்த விஹாரத்திலும் அமைத்துப் பார்க்கப் போகிறேன், இன்னும் இந்தச் சோழ நாட்டிலுள்ள சிவாலயங்களை அம்மாதிரி புதுப்பித்துக் கட்டப் போகிறேன். இலங்கையிலுள்ள ஸ்தூபங்களையும் விஹாரங்களையும் பார்த்து விட்டு இச்சோழ நாட்டிலுள்ள ஆலயங்களையும் நினைத்துப் பார்த்தால் எனக்கு உடலும் உள்ளமும் குன்றுகின்றன. வானளாவும் கோபுரத்தை உடைய மாபெரும் ஆலயத்தைத் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப் போகிறேன். அதற்குத் தகுந்த அளவில் மகாதேவருடைய சிலையைச் செய்து நிர்மாணிக்கப் போகிறேன். ஆச்சாரியரே! இந்தச் சோழ நன்னாட்டில் புத்த ஸ்தூபங்களும், சிவாலயங்களின் கோபுரங்களும் ஒன்றோடொன்று போட்டியிட்டு மேக மண்டலத்தை எட்டப் போகின்றன. ஆயிரமாயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் தெய்வத் தமிழ் நாட்டில் பிறக்கும் சந்ததிகள் அவற்றைக் கண்டு பிரமித்து நிற்கப் போகிறார்கள்….”

இவ்வாறு ஆவேசம் கொண்டவன்போல் பேசி வந்த இளவரசன் உடலில் போதிய பலமில்லாமையால் கட்டிலில் சாய்ந்தான். உடனே ஆச்சாரிய பிக்ஷு அவனுடைய தோள்களைப் பிடித்துக் கொண்டு, கட்டிலில் தலை அடிபடாமல் மெள்ள மெள்ள அவனைப் படுக்க வைத்தார். நெற்றியில் கையினால் தடவிக் கொடுத்து, “இளவரசே! தாங்கள் உத்தேசித்த அரும்பெரும் காரியங்களையெல்லாம் காலா காலத்தில் செய்து முடிப்பீர்கள். முதலில், உடம்பு பூரணமாய்க் குணமடைய வேண்டும். சற்று அமைதியாயிருங்கள்!” என்றார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *