கரிசல் காட்டு காதல் கதைகள்! – 5

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 9,294 
 

அலமேலு அதிசயிச்சுப் போய்ட்டா. பொறவு? பத்து வருசத்துக்கு முன்னால, தன்னோட பதினஞ்சு வயசு மவன் பன்னீரை இவ கையில ஒப்படைச்சிட்டு ஊரை விட்டே போயிட்ட அண்ணன் வைராண்டி, இப்ப திரும்பி வந்திருக்கறதைப் பார்த்தா அதிசயமா இருக்காதா?

‘‘என்ன அலமேலு… எப்படி இருக்கே?’’ன்னாரு வைராண்டி.

‘‘நானு நல்லாத்தேண்ணே இருக்கேன். நீ இப்ப உம் மவன் பன்னீரப் பாக்கணும்’’னு சொல்றதுக்கு முன்னயே, ‘‘நானு நம்ம பிஞ்ச வழிதேன் வந்தேன். பன்னீரு உழவடிச்சிக்கிட்டு இருந்தான். பெரிய பயலா போயிட்டான். நானுதேன் அவனப் பார்த்தேன். அவன் என்னப் பாக்கல’’னு வைராண்டி சொல்லிக்கிட்டிருக்கும்போதே, ஓடி வந்தா அலமேலுவோட மக மரகதம்.

‘‘அண்ணே… இந்தா உம் மருமவ…’’னு சொன்னதும், மரகதம் பக்கம் திரும்புன வைராண்டி, அப்பிடியே கெறங்கிப் போனார். முருசவாய்க்கா சோளப்பயிர் மாதிரி மொருமொருனு இருந்த அவ வளத்தியும், ஆவாரம் பூ கலரும், அத்தி மூக்கும் வைராண்டியை அசத்திடுச்சு.

அலமேலு மககிட்ட, ‘‘மரகதம்… இதேன் உன் மாமன்! பன்னீரோட அய்யா. மாமனுக்கு மோரு கொண்டாந்து கொடு’’னு சொன்னதும் தண்டை குலுங்க ஓடுனா மரகதம்.

‘‘சரி அண்ணே, நீ வந்ததும் நல்லதாப் போச்சி. உம் மருமவள எம்புட்டு நாளைக்கு கொமரியாவே வச்சிருப்பேன்! அவளுக்கொரு கல்யாணத்த முடிச்சிட்டாத்தான எம்பாட்டுக்கு சிக்கெடுத்தாப்பல இருப்பேன்’’னு அலமேலு சொல்லவும், ‘‘அதுக்குத்தானாத்தா வந்துருக்கேன். கல்யாணத்த எப்ப வச்சிக்கிடுவோம்’’னு கேட்டாரு வைராண்டி.

‘‘சித்திர மாசம் செல்லக் கல்யாணமின்னு சித்திரயில வச்சிக்கிடுவமா?’’ன்னா அலமேலு.

‘‘அம்புட்டுக்கு எதுக்கு நாளத் தள்ளிப் போடுத? இது தை மாசம். தை பொறந்து பத்து நாத்தான ஆயிருக்கு. இந்தத் தையிலேயே வச்சிக்கிடுவோம்’’னு மாமன் சொன்னதைக் கேட்டுக்கிட்டே, மாமனுக்காக மோர் கொண்டு வந்த மரகதம், பூவா மலர்ந்து போனா. வானத்துல இருக்குற வெள்ளியெல்லாம் அவ மனசுக்குள்ள மினுக்கம் போட, பிஞ்சையில உழவடிச்சுக் கிட்டிருந்த பன்னீரைத் தேடி ஓடினா. ‘‘மச்சான்’’னு தன் எதிரே குழைஞ்சுபோய் நின்னவளை ஆச்சர்யமா பார்த்தான் பன்னீரு.

‘‘என்ன மரகதம்… உச்சி வெயிலு மண்டையப் பொளக்குது. இந்நேரம் வந்துருக்க?’’

‘‘உங்கய்யா வந்துருக்காரு. நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசுதாக’’னு முகம் செவக்க சொன்னவ, திரும்பவும் புழுதி பறக்க வீட்டுக்கு வந்தப்போ கண்ணீரும், கம்பலையுமா குக்க வந்த கோழிபோல மூலையில முடங்கிக் கிடந்த ஆத்தாளைப் பார்த்து திகிலடிச்சுப் போனா.

‘‘என்னாத்தா… செத்த முந்தி வரைக்கும் நல்லா இருந்தவ… இப்பிடி உக்காந்திருக்க. மேலுக்கு சேட்டமில்லயா? (சுகமில்லையா)’’

‘‘தாயீ மரகதம்! உன் மாமன் அவன் மவனுக்கு பொண்ணு கேட்டு வரல. அவனுக்குத்தேன் உன்ன கேட்டு வந்துருக்கான்!’’

கல்லெறி பட்ட புறாவா துடிச்சுப் போனா மரகதம்.

‘‘நீ நெசமாத்தேன் சொல்லுதியா ஆத்தா?’’

‘‘இந்த பூமாதேவி மேல சத்தியமா சொல்லுதேன். பன்னீரு பச்சப் புள்ளயாம். குடிச்ச பாலு கொவட்டுக் (தொண்டை)குள்ள இருக்காம்! அவுகளுக்கு இன்னும் நாலு வருசம் போயி முடிக்கப் போறானாம்.’’

‘‘நீ என்னத்தா சொன்னே?’’

‘‘நானு என்னத்த சொல்ல? உம் மாமன் என்ன வாய தொறக்க விட்டாத்தான? ‘எனக்கென்ன குடி இருக்க வீடு இல்லையா? குத்த வைக்க கொல்ல இல்லயா? இது வைரம் பாஞ்ச கட்ட. நாலு குடும்பத்த வச்சிக் காப்பாத்த மனசுல தெம்பு இருக்கு. உடம்புல பலமிருக்கு. எம்மவன நெனச்சிக்கிட்டு என்னப் பகச்சிக்கிட்டயோ… பெறவு நானு சும்மா இருக்கமாட்டேன். உங் குடும்பத்தவே அவயலு தொவயலா ஆக்கிருவேன்’னு பேசற மனுசன்கிட்ட என்னத்த சொல்றது?’’

‘‘அப்ப…’’

‘‘என்னப் பொறுத்துக்கோ தாயீ. நானே ஒரு அறுதலி(விதவை). உம் மாமன மீறி என்னால எதுவும் செய்ய முடியாது. அவனத் தாண்டி எவனும் உன்ன கட்ட வரவும் மாட்டான். அப்பிடியே வந்தான்னா, அங்கன ஒரு கொலதேன் நடக்கும். ஒரு வயசாளிக்குத்தேன் வாக்கப் படணுமின்னு உன் தலயில எழுதியிருக்கு. அதனால, நீ உன் மாமனுக்கே வாக்கப்பட்டுக்கோ’’ன்னா அலமேலு.

கல்யாணத்துக்கு மொத நாள். இருட்டு மசமசத்த நேரம். குப்புனு பூ வாசத்தோட, தன்னை உரசிக்கிட்டு நிக்குற மரகதத்தைப் பார்த்து திக்குமுக்காடிப் போனார் வைராண்டி. ‘கொதி தண்ணியா வருவானு நினைச்ச மரகதம், இப்பிடி குளுந்துபோய் வந்ததும் இல்லாம உரசிக்கிட்டுல்ல நிக்கா’னு பார்த்தாரு. ‘‘என்ன மாமா அப்படி பாக்கீரு. இப்ப பாக்கதுக்கு நேரமில்ல. பெரிய ஏணியா ஒண்ண தூக்கிட்டு எம் பின்னால வாரும்’’னு அவ சொல்லவும், ஏணி யைத் தூக்கிட்டு பின்னாலயே வந்தாரு வைராண்டி.

ஊருக்கு வெளிய, கூப்பிடுற சத்தம் கேக்காத அளவுக்கு, பொட்டல் காட்டுல தனிச்சு நின்னுக்கிட்டிருந்த முனியாண்டி கோயில்ல போய் நின்னா மரகதம். நெடுநெடுனு கிடந்த கோயில் மெத்தி (மேல் தளம்) சுவரில் ஏணியை சாத்துன வைராண்டி, ‘‘இந்நேரத்துக்கு இங்க எதுக்குத்தா வந்த? இது அத்துவான காடாச்சே…’’னு கேட்க, மரகதம் இப்பவும் அவரை ஒட்டி நின்னுக்கிட்டே, ‘‘மாமா, உம்ம மவன் ஒரு நோஞ்சான்.. அவனுக்கு வாக்கப்பட எனக்குப் பிரியமில்ல. ஆனா, எங்காத்தா நச்சரிப்பு பொறுக்க முடியல. என்னதேன் செய்வோமின்னு யோசிச்சிக்கிட்டு இருக்கையில, புண்ணியத்துக்கு நீரு வந்ததுமில்லாம, என்னக் கட்டிக்கிடுதேன்னு வேற சொல்லிட்டீரு.

‘அவத்தனுக்கு வாக்கப்பட்டு காலம் பூரா அவதிப் படாத; சமத்தனுக்கு வாக்கப்பட்டு சாவக் கொடுத்திர லாம்’னு சொல்லுவாக. இம்புட்டு வயசுக்குப் பெறவும் நீரு ‘பட்டறபலா’ (பலசாலி) கணக்கா இருக்கீரு. உமக்கு வாக்கப்படத்தேன் எனக்கு ஆச. ஆனா, எங்காத்தாளும், உம்ம மவனும் இன்னைக்கு ராவே எங்கழுத்துல தாலிய கட்டிரணுமின்னு சதி வேல பண்ணுதாக.

அதனால, இன்னிக்கு ராப் பொழுது நம்ம இந்த மெத்தி மேல இருந்துக்கிட்டமின்னா ஒரு மனுசருக்கு தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் நம்மள ஒண்ணும் செய்யவும் முடியாது. அதுக்குத்தேன் உம்ம கூட்டியாந்தேன். நீரு, மொத மெத்தில ஏறிக்கிட்டு என்ன கையலயும். நானு வந்துருதேன்’’னு சொல்ல,

‘‘ஆத்தாடி… உன்ன என்னமோனு நெனச்சேன். பொல்லா பொம்பளயாவில்ல இருக்கே’’னு பூரிச்சுப் போன வைராண்டி, மடமடனு ஏணியில ஏறி, நடு மெத்தில போய் நின்னாரு. அவ்ளதேன். ஏணியை சரட்டுனு கீழ தள்ளி விட்ட மரகதம், ஊரைப் பார்த்து ஓடுனா.

மறுநாள், பன்னீரு அவ கழுத்துல தாலி கட்டும்போது, ‘‘இந்நேரத்துக்கு எம் மாமன் இங்கன இல்லாததுதேன் எனக்கு விசாரமா இருக்கு’’னு சொல்லிக்கிட்டே, தம் பொய்யான கண்ணீரைத் துடைச்சுக்கிட்டா மரகதம்.

– மார்ச் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *