சிறுகதை இயந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 6, 2024
பார்வையிட்டோர்: 1,080 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நவராத்திரி, தீபாவளி,கார்த்திகை என்று வரிசையாக நம் பண்டிகைகள் வந்துகொண்டே இருக்கின்றனவல்லவா? ஏதாவது ஒரு பத்திரிகை ஒரு விசேஷ மலர் பிரசுரம் செய்ய தீர்மானிக்கிறது.

‘வழக்கம் போவ இந்த வருஷமும்… மலர் பிரசுரம் செய்கிறோம். தாங்கள்… தேதிக்குள் சிறுகதையொன்று எழுதி அனுப்பவேணும்’ என்று ஆசிரியர் கடிதம் எழுதுகிறார். இந்த மாதிரி சேர்ந்தாற் போல் அரை டஜன் அழைப்புகள் வந்தால் என்ன செய்கிறது?

நான் என்ன சிறுகதை தயாரிக்கும் இயந்திரமா? எல்லோரும் சிறுகதை கேட்டால் ஆளுக்குக் கொஞ்சமாக ஒரு சிறுகதையைப் பங்கிட்டு அனுப்ப முடியுமா?

இந்த மாதிரி அழைப்பு எனக்குச் சில சமயங்களில் வருத்தத்தை உண்டாக்குகிறது. ‘உனக்குச் சிறுகதைதான் சுமாராக எழுத வருகிறது. வேறு எதையாவது எழுதி அனுப்பித் தொலைத்து விடாதே. நான் பிறகு சங்கடப்பட வேண்டி இருக்கும். ஜாக்கிரதை!’ என்று ஆசிரியர் சொல்லுவதுபோல் இருக்கிறது.

அந்தச் சிறுகதைதான், சனியன், நினைத்த மாத்திரத்தில் எழுத வருகிறதா? சில சமயங்களில் தானாக வருகிறது: சில சமயங்களில் என்ன முயன்றாலும் வரவேமாட்டேனென்கிறது.

‘மணி சுமார் பனிரெண்டிருக்கும்… வாசலில் குதிரை வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது… யாரோ தடதடவென்று கதவை இடித்தார்கள்… மணி தூக்கிவாரிப்போட்டது போல…’ இந்த மாதிரி எழுதவாவது சக்தி இருக்கிறதா? இல்லை. இருந்தால் இந்த மாதிரி நிறைய எழுதி வைத்துக் கொண்டு சில பக்கங்களைப் பொறுக்கி எடுத்துப் பக்க எண்ணிட்டு கதை என்று அனுப்பிவிடலாம். கதைதான் எங்கே வேண்டுமானாலும் ஆரம்பமாகலாம். முடியலாமல்லவா?

ஸெக்ஸ்டன் பிளேக் தொடர்ச்சி போல இரண்டு மூன்று ஆசாமிகளை நிரந்தரமாக வைத்துக்கொண்டு சம்பவங்கள் என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் எதையாவது முடிபோட்டு சிறிது காதல், சிறிது சண்டை, சிறிது ஹாஸ்யம், சிறிது சாவு, சிறிது துணிகரமான செயல் எல்லாவற்றையும் அவியல்போலக் கலந்து தொடர்கதையாக எழுதி வைத்துக்கொண்டிருந்தால் சமயத்துக்கு உதவும். அதுவும் வருகிறதில்வை.

நான் எழுதுகிற கதையே நான்கு பக்கங்களுக்கு மேல் போகிற தில்லையே, தொடர்கதை எங்கிருந்து வரும் ? ஒன்று இரண்டு எழுதிப் பார்த்தேன். ஆனால் யாருக்கும் ரஸப்படாத மனோதத்துவ ஆராய்ச்சிகளாக முடிந்தன.

இதற்காக, ஆங்கிலத்தில் ‘சிறுகதை எழுதும் முறை’ என்று விளம்பர மாகும் புத்தகங்கள் சிலவற்றை வாங்கிப் படிக்கலாமா என்று கூட யோசித்தேன். ஆனால் அதில் நிரம்பத் தொல்லை இருக்கும் போல் தோன்றுகிறது. அவற்றைப் படிக்கிற நேரத்திலும் அவஸ்தையிலும் நாமே எழுதிவிடலாம் என்று படுகிறது.

இப்படியாக அவஸ்தைப்படுகிறேன். ஆசிரியர்கள் கட்டளைப்படியும் நடந்து கொண்டு வருகிறேன். எவ்வளவு நாள் இப்படி நடக்குமோ? தெரியவில்லை.

சிறுகதை எழுத முடியவில்லை. வேறு எதாவது – உதாரணமாக வசன கவிதை – அனுப்பட்டுமா என்று பதில் எழுதும் காலம் வருமோ என்னவோ! வந்தால் அப்புறம் என் பெயர் பத்திரிக்கைகளில் வரவே வராது. ஆசிரியர்கள் உடனே ‘சிரமப்பட வேண்டாம்’ என்று எழுதி விடுவார்கள்.

சிறுகதை இயந்திரம் ஏதாவதொன்று தயாராகக் கூடாதா? விஞ்ஞான சாஸ்திரிகள் என்னென்னமோ கண்டுபிடிக்கிறார்கள்-இதற்கொரு வழி ஏற்படாதா? டைப்ரைடர் போவ் ஒன்று இருக்க வேண்டும். சிறுகதை வேண்டும்போது அதனடியில் போய் உட்கார்ந்துகொண்டு டைப் அடிக்க வேண்டும். நான்கு பக்கங்கள் அடித்த பிறகு படித்துப் பார்த்தால் ஒரு கதை இருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து மற்றொரு நான்கு பக்கங்கள் அடித்தால் மற்றொரு கதை வர வேண்டும்.

முதலில் ‘ராமு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்’ என்று முதல் கதையில் விழுந்தது அடுத்த கதையில் ‘கிட்டு ஜன்னல் வழியாக வெளியே குதித்தான்’ என்று மாறி விழுந்தால் போதும் வேறு கதை தானே?

ஆனால்-அப்பொழுது பத்திரிகாசிரியர்கள் எனக்கு எழுத மாட்டார்கள். தாங்களே இயந்திரங்களை வரவழைத்துக் கொண்டு சிறுகதை தயார் செய்து கொள்வார்கள்.

என்ன எழவோ போங்கள் – ரொம்ப அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

– நவசக்தி பிப்ரவரி-1943

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *