நூறாவது நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 6, 2024
பார்வையிட்டோர்: 1,317 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அன்றைக்குக் காலை வந்த தினசரியின் கடைசிப் பக்கத்தைப் பார்த்த நடிகை ப்ரீதா பூரித்துப்போனாள். திரும்பத் திரும்பப் பார்வை அதே பக்கத்தின் மீது பரவசத்துடன் ஓடியது.

வெற்றிகரமான 50’வது நாள். புதுமுகம் ப்ரீதாவின் வெற்றிச் சித்திரம் ‘செவத்தப் பொண்ணு செவ்வந்தி 100வது நாளை நோக்கி வெற்றி நடை போடுகிறது’.

”அண்ணா!” உற்சாகக் குரலில் அழைத்தாள் ப்ரீதா. உள்ளறையில் ஷேவிங் செய்து கொள்வதில் ஈடுபட்டிருந்த கதிரேசன் முகத்தில் சோப்பு நுரையுடன் அப்படியே வந்தான்.

“என்ன ப்ரீதா?”

“நான் நடிச்ச படத்துக்கு விளம்பரம் பார்த்தியா அண்ணா? அம்பதாவது நாளுக்கே முழு பக்க விளம்பரம் கொடுத்திருக்காங்களே… நூறாவது நாளுக்கு அமர்க்களம் பண்ணிடுவாங்க போலிருக்கே?” முகத்தில் பெருமிதம் பொங்கச் சொன்னாள் ப்ரீதா.

கதிரேசனின் முகத்திலும் அதே பெருமிதம். “பின்னே என்னோட தங்கச்சி படம்னா சும்மாவா? நீ மட்டும் இந்தப் படத்துல நடிச்சு செவ்வந்தி கேரக்டருக்கு உயிரூட்டாமெ இருந்திருந்தா… படம் ஃபிளாப் ஆகியிருக்கும். இந்தப் படம் நிச்சயமா புரட்சி பண்ணத்தான் போகுது… நியாயப்படி பார்த்தா அம்பதாவது நாள் விளம்பரத்துக்கு ரெண்டு முழு பக்க விளம்பரம் கொடுத்திருக்கணும்.”

“உனக்குப் பேராசைதான்…. ப்ரீதா தவறி விழுந்த கண்ணாடி டம்ளராய்க் கலீரென்று சிரித்தாள், சிரித்ததால் காது மடல்களும், கன்னப் பகுதிகளும் குப்பென்று செம்மையேறின.

கதிரேசன். முகத்தில் சற்றே கவலை தோயத் தங்கையை மெள்ள ஏறிட்டான்.

“ப்ரீதா…நீ நடிச்ச முதல் படத்துக்கு இத்தனை வரவேற்பு இருந்தும் உனக்கு இன்னும் புதுப்படம் ஏதும் புக் ஆகல்லியே… அத நெனைச்சாத்தான் மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருக்கு… இந்நேரத்துக்கு ஒரு பத்துப் படமாவது புக் ஆயிருக்க வேண்டாமா?”

கதிரேசனின் முகத்திலிருந்த கவலை இப்போது ப்ரீதாவுக்கும் தொற்றிக் கொண்டது. ”அண்ணா… இந்தப் படம் நூறு நாள் ஓடி விழாக் கொண்டாடினாத்தான் ப்ரொட்யூஸர்ஸ் எம் பக்கம் திரும்பி வருவாங்க… அது வரைக்கும் காத்திட்டிருக்க வேண்டியதுதான்…”

“இந்தப் படம் நூறு நாள் ஓடுமா ப்ரீதா?” -கதிரேசனின் குரலில் சந்தேகம் தொனித்தது.

அவள் சிரித்தாள். “என்னண்ணா அப்படிக் கேட்டுட்டே…. படம் நிச்சயமா நூறு நாள் ஓடும்”.

அடுத்த வாரமே ப்ரீதாவின் ஆசையில் ‘ஸ்கைலேப்’ விழுந்தது.

முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு அந்தச் செய்தியைக் கொண்டு வந்தான் கதிரேசன். அழுகிற குரலில் சொன்னான். “ப்ரீதா, பதினாறு சென்டர்ல ஓடிகிட்டிருந்த உன்னோட படத்தை வர்ற வெள்ளிக்கிழமை யன்னிக்கு பத்து தியேட்டர்கள்லே எடுத்துடப் போறாங்களாம்… நாலு சென்டர்ல மட்டும்தான் ஓட்டப் போறாங்களாம்… அதுவும் எழுபத்தஞ்சு நாளுதான்… ஒரு சென்டர்ல கூட நூறு நாள் ஓடப் போறதில்லையாம்…”

முகம் கறுத்துப் போய்ப் பீதி தட்ட எழுந்தாள் ப்ரீதா. உடைந்த குரலில் கேட்டாள். ”காரணம் என்னவாம்?”

“கூடடமில்லையாம். அதுவு மில்லாமெ வர்ற வெள்ளிக்கிழமை ஹீரோ ஜெயமோகன் நடிச்ச சினிமாஸ்கோப் படம் வெளி வருதாம்… அதனால உன்னோட படம் கண்டிப்பா விழுந்துடுமாம்.”

ப்ரீதாவின் கண்களில் நீர் கோத்தது.

“அண்ணா, ஒரு நாலு சென்டரிலாவது என்னோட முதல் படம் நூறு நாள் ஓடினாத்தான் எனக்கு எதிர்காலம்… இல்லேன்னா இந்த ஒரு படத்தோட நான் இப்படியே முடங்கிக்க வேண்டியதுதான்…”

கதிரேசன் மோவாயைத் தேய்த்தான். “நம்மலாலே என்ன பண்ண முடியும். ப்ரீதா? டிஸ்ட்ரிபியூட்டர்ஸும் தியேட்டர்காரங்களும் பார்த்து மனசு வெச்சா உன்னோட படம் நூறு நாள் ஓடும். இல்லேன்னா கஷ்டம்தான்…”

ப்ரீதா தலையைக் குனிந்து கொண்டு சற்று நேரம் வரை தரையை வெறித்தாள். பிறகு ஒரு தீர்க்கமான முடிவோடு தன் அண்ணனைப் பார்த்தாள்

“அண்ணா! இப்பிடிச் செஞ்சா என்ன? முக்கியமான இந்த நாலு சென்டர்லேயும் படத்தை நூறு நாள் ஓட்டச் சொல்லி நாம ரெண்டு பேரும் தியேட்டர்காரங்களையும். விநியோகஸ்தர்களையும் சந்திச்சுப் பேசினா என்ன?”

“அவங்க நம்ம பேச்சைக் கேட்பாங்களா ப்ரீதா?” -கதிரேசன். அவளை அனுதாபத்தோடு பார்த்தபடி கேட்டான்.

“கேக்கறாங்களோ… இல்லியோ… முயற்சி செஞ்சு பார்ப்போமே..நாளைக்கே புறப்படலாம்…”

”உன்னோட இஷ்டம் ப்ரீதா…”

தலையாட்டினான் கதிரேசன்.


நெற்றியில் பளிச்சிட்ட வட்டமான சந்தனப் பொட்டும், கழுத்தில் மின்னிய தங்கச் செயினும், மின் விசிறி தூவிய காற்றில் படபடத்த சில்க் சர்ட்டும், தலைக்கு மேல் ஜிகினாத் தோரணங்களோடு தொங்கிய கடவுள் படங்களும் – அவரை ஒரு கண்ணியமானவராக நினைக்கச் செய்தன.

ப்ரீதாவும் கதிரேசனும் வணக்கம் தெரிவித்துவிட்டு அமர்ந்தார்கள். சில்க் ஜிப்பா ப்ரீதாவைப் பார்த்து ஈறுகள் தெரியச் சிரித்தார். கடை வாயில் ஒளிந்திருந்த தங்கம் போட்டோ பிளாஷாய்ப் பளிச்சிட்டது.

“செவத்தப் பொண்ணு செவ்வந்தி’யில ரொம்பப் பிரமாதமா ஆக்ட பண்ணியிருக்கீங்கம்மா… இதுதான் உங்க மொத படம்ன்னு என்னாலே நம்பவே முடியல்ல… பின்னாலே நல்லா முன்னுக்கு வருவீங்கம்மா…”

பரீதாவுக்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது. “ரொம்ப சந்தோஷம் சார்.. படம் நல்லாயிருக்குன்னு எல்லாருமே சொல்றாங்க. ஆனால் படம் நூறு நாள் ஓடினாத்தான் என்னோட திரையுலக வாழ்க்கை பிரகாசமாயிருக்கும் ஸார்… அதுக்கு நீங்கதான் மனசு வைக்கணும்… மெட்ராஸுக்கு நீங்கதான் டிஸ்ட்ரிபியூட்டர்ன்னு கேள்விப்பட்டு உங்களைப் பார்க்க வந்தோம் சார்…”

ப்ரீதா படபடப்பாய்ச் சொல்லி முடித்தாள்.

சில்க் ஜிப்பா இப்போது கோணலாய்ச் சிரித்தார். “ஆரம்பத்ல உங்க படம் நூறு நாளுக்கு மேல ஓடும்ன்னுதான் நானும் நெனைச்சேன்… கூட்டமும் நல்லாயிருந்தது… பத்திரிகைக்காரங்களும் மனசு திறந்து நல்லா பாராட்டி எழுதியிருந்தாங்க… ஆனா இடையில ரெண்டு மூணு ‘ஏ’ மலையாளப் படம் வந்து உங்க படத்தோட கலெக்ஷனை அடிச்சிடுச்சு… வசூல் சரியா இல்லேன்னா படத்தை ஓட்ட முடியுமா? நீங்களே சொல்லுங்க!”

கதிரேசன் குறுக்கிட்டான். “ஸார்! நீங்க மனசு வெச்சாப் படத்தை நூறு நாள் ஓட்ட ௐடியும்னு சொன்னாங்க ஸார்…”

சில்க் ஜிப்பா இப்போதுதான் முதன் முறையாகக் கதிரேசனை ஏறிட்டுப் பார்த்தார். பின்பு ப்ரீதாவைப் பார்த்துக் கொண்டே கேட்டார், “இவரு உங்களுக்கு என்ன ஆகணும்ம?”

”என்னோட அண்ணன் சார்…என்னோட நடிப்புத் திறமையை நல்லாப புரிஞ்சுகிட்டு என்னைச் சினிமாவில நடிக்க வைக்க ஆசைப்பட்டார்… ரெண்டு வருஷமா எனக்காக சான்ஸ் கேட்டு அலைஞ்சார்… ‘செவத்தப் பொண்ணு செவ்வந்தி’யில சான்ஸ் கிடைச்சுது. திறமையைக் காட்டியிருக்கேன்”

“ம்… அப்படியா? அண்ணனுக்கு ஹீரோ ‘பேஸ் கட்’ இருக்கே. அவரும் நடிக்கலாமே.”

கதிரேசன் குறுக்கிடடான். “எனக்கும் நடிப்பில ஆர்வம் இருக்கு சார்… ஆனா சான்ஸ் கிடைக்கணுமே?”

சில்க் ஜிப்பா கதிரேசனை அரைப் பார்வை பார்த்துக் கொண்டே சொன்னார். “நமக்குத் தெரிஞ்ச தயாரிப்பாளர் எஸ்.கே ன்னு ஒருத்தர் புதுசா கலர்ப் படம் ஒண்ணு எடுக்கிறாரு… ஹீரோயின் ரெடி… ஆனா ஹீரோ இன்னமும் கிடைக்கல்ல. . புது முகமா இருந்தா பரவாயில்லைன்னு சொன்னாங்க.. உங்களுக்கு இஷ்டமிருந்தா அந்தப் படத்தில நடிக்கலாமே!”

ப்ரீதா முகமலர்ச்சியோடு கதிரேசனின் பக்கமாய்த் திரும்பினாள். கதிரேசன் பரவசத்தோடு தலையை ஆட்டினான். “காத்திட்டிருக்கேன் சார்…”

“அப்படீன்னா…” சில்க் ஜிப்பா தன் மணிக்கட்டில் இருந்த கடியாரத்தை முறைத்துப் பார்த்துவிட்டு “இப்ப மணி பத்தரை ஆச்சு எஸ்.கே ஸ்டுடியோவுக்கு இன்னமும் போயிருக்க மாட்டார். நான் ஒரு அட்ரஸைத் தர்றேன். இப்பவே போய் நீங்க அந்த அட்ரஸ்ல எஸ்.கே.யைப போய் பாருங்க. நான் அனுப்பினதா சொல்லுங்க.. உங்களை ஸ்பெஷலா கவனிப்பார்…” என்றார். உடனே ஒரு வெள்ளைக் காகிதத்தில் தன் கம்பெனி ரப்பர் ஸ்டாம்பைக் குத்தி அதன் கீழே ஏதோ ஒரு அட்ரஸை எழுதினார். கதிரேசனிடம் நீட்டினார்

“இப்பவே போய்ப் பாருங்க. தங்கச்சி பேசிட்டு வீட்டுக்குப போகட்டும்”. பரீதாவும் அதை ஆமோதிக்கும் பாவனையில், “அண்ணா, இப்பவே போய்ப் பாருங்க. நான் இவரோட பேசிட்டு வீட்டுக்குப் போறேன்” என்றாள்.

கதிரேசன் தலையாட்டியபடி எழுந்தான். சில்க் ஜிப்பாகாரருக்கு மீண்டும் ஒரு கும்பிடைப் போட்டுவிட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான்.

கதிரேசன் வெளியேறிய மறு வினாடியே சில்க் ஜிப்பா பேச்சை ஆரம்பித்தார். “உங்க படம் ஓடணும்ன்னு ஆசைப்பட்டறீங்க.. இன்னிக்கு அந்தப் படம் படம் அறுபதாவது நாளா ஓடிட்டிருக்கு. நாலு சென்டர்ல மட்டும்தான் போய்கிட்டிருக்கு… நாலு சென்டர் டிஸ்ட்ரிபியூட்டர்ஸும் வாரத்துக்கு ஒரு வாட்டி இங்க வந்திட்டுப் போவாங்க. போன வாரம் வந்தப்பவே கலெக்ஷன் டல்லடிக்க ஆரம்பிச்சுடுச்சுன்னு சொன்னாங்க. அதனால் படம் நூறு நாள் ஓடறது ரொம்பவும் கஷ்டமம்மா..”

“அப்படிச் சொல்லாதீங்க சார். நீங்க மனசு வெச்சா எதையும் நடத்திக் காட்டுவீங்கன்னு சினிமா பீல்டுல பேசிக்கறாங்க, அதனாலதான் உங்ககிட்ட வந்தேன் சார்” ப்ரீதா தன் அழகிய கண்களில் துளிக்க ஆரம்பித்த கண்ணீரை வெளிக் காட்டாமல் உள் வாங்கிக் கொண்டாள். சில்க் ஜிப்பா இப்போது நன்றாக பின்னுக்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.

“நான் மனசு வெச்சா மட்டும் போதுமாம்மா… நீங்களும் மனசு வெச்சாத்தான் இந்த பிரசினை. முடியும்.”

“நானென்ன செய்ய முடியும் சார்? இப்பத்தான் இந்தப் பீல்டுக்குப் புதுசா வந்தவ…”

சில்க் ஜிப்பா சிரித்தார். “இந்த சினி பீல்டைப் பத்தி உங்களுக்கு இப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சிருக்குமென்னு நினைக்கிறேன். இங்க காரியம் ஆகணும்ன்னா ஒண்ணு பணம் வேணும்… இல்லேன்னா எல்லாத்துக்கும் துணிஞ்சு நிக்கற மனப்பக்குவம் வேணும்…”

ப்ரீதாவுக்குக் குழப்பமாய் இருந்தது. “நீங்க சொல்றது எனக்குப் புரியல்ல சார்…”

“புரியும்படியா சொல்றதுக்குக்காகத்தான் உங்களோட வந்த உங்கண்ணனை சினிமா சான்ஸூன்னு சொல்லி வெளியே அனுப்பினேன். புரியும்படியாவே சொல்லட்டுமா…”

”ம்., சொல்லுங்க சார்..”

“இந்த சினி ஃபீல்ட் ஆம்பிளையாய் இருந்தா திறமை வேணும். பொம்பளையாய் இருந்தா நல்ல உடல்கட்டு வேணும். உங்க கிட்ட உடம்பு இருக்கு…. அதைப் பயன்படுத்த சொல்றேன். நான் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்..”

“ஸார்..” கோபத்தில் சிவக்க எழுந்தாள் ப்ரீதா.

“உடகாருங்கம்மா… கோபபட்டு எழுந்திரிச்சுப் போறதுல பிரயோசனமும் இல்லே. உங்க படம் நூறு நாள் ஓடறது என் கையிலேயும், மத்த சென்டர் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் கையிலையும்தான் இருக்கு. நாங்க நினைச்சா நாளைக்கே உங்க படத்தை எடுத்து வேற படத்தைப் போட முடியும்…”

ப்ரீதா உடம்பு நடுங்க மறுபக்கம் உட்கார்ந்தாள்

“நல்லா யோசனை பண்ணுகம்மா. மத்த நாலு சென்டர் டிஸ்ரியூட்டர்ஸும் நாளைக்கு இங்க வருவாங்க. அவங்களைக் கொஞ்சம் சந்தோஷப்படுத்துங்க. விருப்பத்துக்குக் கொஞ்சம் வளைந்து குடுங்க… படம் தானா நூறு நாள் ஓடும். என்ன சொல்றீங்க?”

கண்களில் தீப்பொறி பறக்க காதுகள் குப்பென்று உஷ்ணத்தால் அடைக்க உடம்பு பதற எழுந்தாள் ப்ரீதா. “சார்… நான் நடிச்சுப் பிழைக்கத் இந்த பீல்டுக்குள்ளே நுழைஞ்சேன். உங்க மாதிரி ஆசாமிகளுக்கு உடம்பை கொடுத்துப் பிழைக்க வரல்லை. என்னோட முதல் படம் நூறு நாள் ஓடலேன்னாலும் பரவாயில்லை. ரெண்டாவது படமாவது நூறு நாள் ஓடும்.படம் நூறு நாள் ஓடனும் கிறதுக்காக என்னோட உடம்பை பங்கு போட நான் தயாராயில்லே…என்னோட படத்தை நாளைக்கே எல்லா சென்டர்லேயும் எடுத்துடுவாங்க”

நெற்றிப பரப்பில் வியர்வை துளிக்க, முகம் செம்பருத்தியாய் சிவக்க அடித்தொண்டையில் கர்ஜித்துவிட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே நடந்தாள் ப்ரீதா.

வெயிட்டிங்கில் நின்றிருந்த டாக்ஸியின் கதவைத் திறந்து கொண்டு ஏறி அமர்ந்தாள். சற்று எட்டத்தில் நின்று பீடி புகைத்துக் கொண்டிருந்த டாக்ஸி டிரைவர் அவசர அவசரமாய்ப் பீடியை இமுத்துவிட்டு வீசியெறிந்தபடி ஓடி வந்தான்.

“எங்கம்மா போகணும்…?”

கடலலையாய்ப் பொங்கி எழுந்த சினத்துக்குக் கொஞ்சம் அமைதி தேவைப்பட்டது ப்ரீதாவுக்கு.

“டிரைவர்..வடபழனி கோவிலுக்கு விடுங்க…”

“சரிம்மா…” டாக்ஸி சீறிக் கொண்டு கிளம்பியது.

அவளுடைய மனநிலைக்கு ஏற்றாற்போல டாக்ஸி பறந்து கொண்டிருந்தது. எதிரே தென்பட்ட லாரிகளையும், சிவப்பும் பச்சையுமாய் வழியும் சிடி பஸ்களையும் நாசூக்காக ஒதுக்கிக் கொண்டு டாக்ஸி அம்பாய் விரைந்தது…

அந்த மேம்பாலத்தில் ஏறி இடதுபுறமாய்-வேகத்தைக் குறைக்காமல் டாக்ஸி திரும்பிய போதுதான்-செங்கற்களை அம்பாரமாய் ஏற்றிக் கொண்டு முனகியபடி வந்து கொண்டிருந்த அந்த எமகிங்கர லாரி சட்டென்று எதிர்ப்பட்டது.

நான்கு மாதங்களுக்குப் பிறகு-

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்த தினசரியைக் கதிரேசன் பிரித்தபோது-

இளம் வயதிலேயே கருகிவிட்ட புத்தம் புதுமலர் – நடிப்பின் இளவரசி- திரையுலகின் கலையரசி ப்ரீதா நடித்த அமர காவியம் – ‘செவத்தப் பொண்ணு செவ்வந்தி’ இன்றைக்கு வெள்ளிவிழாவைக் கொண்டாடுகிறது. இன்னமும் அரங்கு நிறைந்த காட்சிகளாய் பொன் விழாவை நோக்கித் தமிழகமெங்கும் வெற்றி நடை போடுகிறது. தெய்வமாய் நின்று படத்தின் பெரும் வெற்றிக்கு வழிகாட்டும் அந்த அன்பு மலர்க்கு எங்கள் இதய பூர்வமான அஞ்சலி.

இப்படிக்கு-விநியோகஸ்தர்கள்-தியேட்டர் உரிமையாளர்கள்.

கதிரேசனின் கண்களினின்றும் வழிந்த நீர் அந்த முழுபக்க விளம்பரத்தில் பக்கத்தை அடைத்தபடி, புன்னகைத்துக் கொண்டிருக்கும் ப்ரீதாவின் புகைப்படத்தின் மேல் சிதற ஆரம்பித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *