கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 5, 2024
பார்வையிட்டோர்: 311 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

நீலகிரி எக்ஸ்பிரசில் மூன்றாம் வகுப்பு டிக்கட் வாங்கும் பேர்வழிகள் மூச்சுத் திணறிச் சாவதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பதை அறிந்திருந்தும், பேராசிரியர் ஞானமணி ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலில் கோயம்புத்தூருக்கு மூன்றாம் வகுப்பிலேயே போவது என்று முடிவு செய்துவிட்டார். எப்போதும் அவர் இரண்டாம் வகுப்பிலோ அதற்குமேல் உள்ள ‘அமரர்’ வகுப்பிலோதான் போவது வழக்கம்…….. 

இப்போது சிறிது நாட்களாக அவர் மூளையிலே முளை கிளப்பிச் சிந்தனையைக் குழப்பி வந்தது ஒரு கேள்வி. உலகத்தை இயக்குவது எது–அறிவா? உணர்ச்சியா? 

தத்துவப் பேராசிரியராகிய ஞானமணிக்கு இந்தக் கேள்வி எழுந்திருக்கவேண்டியதில்லை தான். அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத் வைதம்……..என்று சில சொற்களை வைத்துச் சொற்சிலம்பம் ஆடிக்கொண்டிருந்தால், அதுவே அவர் வாழ்க்கைக்குப் போதுமானது தான். அவருடைய ‘டானா’ வேலைக்கு இதற்கு மேல் வேண்டியதில்லை; சொற்சிலம்பத்திலே நம் பேராசிரியர் சளைத்தவருமல்ல. அவருடைய பேச்சுக்களைக் கேட்டால், இவர் கவிஞரா? அல்லது தத்துவப் பேராசிரியரா?” என்ற ஐயம் எழுவது இயற்கை. வயிற்றுப் பிழைப்பால் தத்துவப் பேராசிரியன் ; வாழ்க்கை அமைப்பால் கவிதை உள்ளத்தவன் ” என்று அவர் தமக்குத் தாமே அடிக்கடி சொல்வதுண்டு. இயற்கையி லேயே கவிதை மனம் படைத்த அவருக்கு ஆதியிலே தத்துவப் பாடம் படிப்பது சங்கட மாகத்தான் இருந்தது. உலக பந்தங்களுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருப்பதை அவர் விரும்பவில்லை. இருந்தாலும் அவருடைய தகப்பனார் சந்திரசேகர சாஸ்திரியார் கடுமையான பேர்வழி; கண்டிப்பும் கடுகடுப்பும் நிறைந்த குரலில் “டேய்! நீ என்ன பெரிய ஷெல்லி என்று நினைத்துக்கொண்டாயோ! போடா மடையா! ஒழுங்காய்ப் படிச்சு நாலு காசு சம்பாதிக்கத் தெரிஞ்சுக்கோ, அதுபோதும் ” என்று சொல்லிவிட்டார். இன்று வாழ்க்கைச் சாலையிலே வசதியாகப் பிரயாணம் செய்துகொண்டிருக்கும் இந்த நாளில்கூட அந்தக் குரலை நினைத்துக் கொண்டால் பேராசிரியரின் உள்ளத்துக் குள்ளே ஒரு நடுக்கம் ஏற்படத்தான் செய்யும். 

சந்திரசேகர சாஸ்திரியார் தெரிந்து சொன்னாரோ, தெரியாமல் சொன்னாரோ ஒன்றுமட்டும் நிச்சயம். அவர் கண்டிப்பாய் நடந்துகொண்டிராவிட்டால் உலகம் மற்றொரு ஷெல்லியின் துயர வரலாற்றை உருவாக்கித் தான் இருக்கும். உணர்ச்சியின் துடிப்பு ஒவ்வொன்றையும் ஞானமணியின் உடம்பும் உள்ளமும் தெளிவாய்ப் புரிந்து கவ்விக் கொள்ளும். உணர்ச்சியின் துடிப்பைவிட அவருடைய துடிப்புச் சற்று மிதமிஞ்சி இருக்குமே தவிரக் கீழிறங்கி விடாது. 

கல்லூரியில் தத்துவம் படித்தார் ; கல்லூரிப் பேராசிரியராகித் தத்துவம் கற்பிப்பதையே தொழிலாகவும் கொள்ள நேர்ந்தது. கிட்டத் தட்டப் பத்து ஆண்டுகள் வறண்ட தத்துவ நூல்களிலேயே சிக்கித் திணறிய பிறகும்கூட அந்தப் பிறவி மனம் கவிதை வெறியிலே களிக் கூத்திட்டுத் தன்னையே விழுங்கிவிடும் அந்த மனம் – தன் சக்தியை இழந்துவிட வில்லை. தத்துவப் புதருக்குள்ளே திக்குமுக்காடியும் அந்தக் கலைமான் தன் வெறியோட்டத்தை நிறுத்தவில்லை யென்றால்-தன் இயல்பிலே வளரவிட்டிருந்தால்-! தமிழ்ப் புலவர்கள் வரிசையிலே கடலுள் தன்னை முழுக்கடித்துச் செத்த சுயம் பாகமான ஒரு கவிஞனுக்காகத் தமிழன்னை கண்ணீர் சொரிய நேர்ந்திருக்கும் வேறென்ன? 

அவருக்குக் கருவிலேயே இருந்த இந்த ஷெல்லித்தனம்தான் ஒரு கேள்வியை எழுப்பி விட்டது; உலகத்தை இயக்குவது எது-அறிவா? உணர்ச்சியா? 

கவிதைமனம் “சந்தேகம் என்ன, உணர்ச்சி தான் என்றது. அறிவையே அலசுகின்ற தத்துவ மூளையோ, “உணர்ச்சியாவது, மண்ணா வது! அறிவான ஒழுங்குதான் உலகத்தை இயக்குகிறது. இந்த உலகம் மட்டுமா, எல்லா அண்டங்களுமே அறிவுக்குக் கட்டுப்பட்டே இயங்குகின்றன” என்றது. 

கவிதை சளைக்குமா? தத்துவம்தான் இளைத்ததா? இரண்டுக்கும் நடந்த போராட்டத் திலே-பாவம்பேராசிரியர் பாடு திண்டாட்ட மாக இருந்தது. எங்கே போனாலும், எவரோடு பேசினாலும் இதே விசாரம்தான். முதல் வகுப் பிலே பிரயாணம் செய்தால் ‘கொள்முதல் எப்படி? சரக்கின் விலையை ஏற்ற வழி என்ன? அரைகுறைப் பிரமுகர் ஒருவர் அமைச்சருக்கு நடத்திய தேநீர் விருந்தின் அந்தரங்க நோக்கம் என்ன ‘இதுபோன்ற விவரங்கள் தாம் தெரிய முடிந்தது. இரண்டாம் வகுப்பிலோ இரண்டுங் கெட்ட பேர்வழிகளே போனார்கள். உச்ச நிலையில் இருக்கும் உலகியலும், ஓய்ந்து கிடக்கும் தத்துவ விசாரணையும் கலந்த கலப்படமான பேச்சுத்தான் இடைத்தர இரண்டாம் வகுப் பிலே அவர் கேட்டது. ‘சரி, இந்தத் தடவை மூன்றாம் வகுப்பிலே பிரயாணம் செய்து பார்ப்போம் ‘ என்று எண்ணி மூன்றாம் வகுப்பு டிக்கட்டே வாங்கச் சொல்லிவிட்டார். 

“என்ன, அத்திம்பேரே! கோயம்புத் தூரிலே இறங்கும்போது சட்டினியாய் இறங்கி விட யோசனையோ! உலகம் அவ்வளவுக்கா புளித்துப் போய்விட்டது ? ” என்று கேட்டும் பார்த்தான் ஆத்மநாதன். பேராசிரியருக்கு அவன் சொல்வது நியாயமென்று ஒரு கணம் பட்டாலும், அவருடைய மனமும் மூளையும் செய்துவிட்ட சூழ்ச்சியால் மூன்றாம் வகுப்புப் பிரயாணம் உறுதியாயிற்று. 

ஆத்மநாதன் உலகம் அறிந்த ஆசாமி. பேராசிரியரின் குணம் அவனுக்குத் தெரியும். நெருக்கடியிலும் சிலர் வசதியாகக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டு போவதுண்டல்லவா? அந்த ரகசியம் அவனுக்குத் தெரியும். எவனோ ஒரு கூலியாளிடம் ஒரு முழு ரூபாயைத் தூக்கி எறிந்தான். அவ்வளவுதான். சாமான்களை வைப்பதற்குரிய இடம் பேராசிரியரின் ‘பர்த்’ ஆகிவிட்டது. 

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பேரா சிரியரை எவ்வளவோ எச்சரிக்கை செய்துதான் அனுப்பினான் ஆத்மநாதன். “அத்திம்பேரே! தூக்கம் வரதோ இல்லையோ, தேமேன்னு மேலே ஏறிப் படுத்துக்கணும். அப்புறம் இப்புறம் அசைந்தீரோ, கெட்டது காரியம்!” என்று உபதேசம் செய்து, அவரை மேலே ஏற்றியும் விட்டான். 

தூக்கத்தை வரவழைப்பதற்கு நமக்கெல் லாம் தத்துவ நூல் ஒன்றைத் தொட்டால் போதும். ஆனால், தத்துவப் பேராசிரியரை அதெல்லாம் என்ன செய்துவிட முடியும்! ஒரு பத்திரிகையின் ஆண்டு மலரைக் கையிலே எடுத்துக்கொண்டுதான் மேலே தொற்றி ஏறினார். ரயில் புறப்படுமுன் அவர் மனம் படாதபாடு பட்டுவிட்டது. கீழே மனிதர்கள் நிற்கக்கூட முடியாமல் திணறிக்கொண் டிருக்க, தாம்மட்டும் மேலே சுகமாக – கிடந்த திருக் கோலத்தில் – நீட்டி நிமிர்ந்து படுப்பதா என்று எண்ணி இரங்கும் அவர் மனம். அதே மனம், நாம் இறங்கிவிட்டால், இத்தனை பாடுபட்டு இடம் தேடித் தந்த ஆத்மநாதன் மனம் வருத்தப் படாதா’ என்னும் கேள்வியைக் கிளப்பி விடும். இப்படித் திணறிக்கொண் டிருப்பதிலேயே அவர் மனம் காலத்தை விழுங்கிக்கொண் டிருந் தது. ‘சரி, ரயில் புறப்படட்டுமே, அப்புறம் கீழே இறங்கினால் போச்சு’ என்று அவர் மூளை இரண்டு கட்சிகளையும் சமாதானப்படுத்திற்று. 

ஒரு வழியாக, ரயில் புறப்பட்டது. ‘அப்பாடா’ என்ற பெருமூச்சு எல்லாப் பிரயாணிகளுக்குமே ஏற்பட்டது. ஏதோ விடுமுறை போலிருக்கிறது. கல்லூரி மாணவர் களின் கூட்டம் ஒன்று அந்த மூன்றாம் வகுப்பு வண்டியை ஆக்கிரமித்துக்கொண் டிருந்தது. அவர்கள் போட்ட கூச்சல் அடடா! வாத்தி யாரால் தாங்க முடியவில்லை. ‘ஷட் அப்’ என்று வாயெடுத்தவர் தாம் ரயிலில் இருப்பதை நினைத்து மூடிக்கொண்டார். 

ரயில் கொஞ்ச தூரம் போனதும் இறங்கலாம் என்று பார்த்தார். என்ன வியப்பு ! கூட்டமே இல்லை! இருந்த கூட்டமெல்லாம் ரயில் புறப்பட்டதும் இறங்கிவிட்ட அதிசயம் புரியவே இல்லை. தாம் இறங்க வேண்டிய தில்லை என்ற மகிழ்ச்சி இருந்தாலும், தம் ஆராய்ச்சிக்கு வழி இல்லாமல் போய்விட்டதே என்று ஒரே வருத்தம்! ‘இந்தக் கல்லூரிப் பையன்களிடத்திலே யிருந்து என்னத்தைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்’ என்று எண்ணிய வாத்தியாரின் மனம், அலுப்புத் தட்ட ஒரு ‘உச்’சுக்கொட்டி ஓய்வெடுக்க ஆரம்பித்து விட்டது. 

தலைமாட்டிலே நசுங்கிக்கொண்டிருந்த ஆண்டு மலரை அவர் கரம் எடுத்துப் புரட்டத் தொடங்கிற்று. கண் நெட்டோட்டம் விட்டது. நோட்டம் பார்ப்பதிலே அவ்வளவாக அவர் அறிவு அக்கறை காட்டவில்லை. ‘சரி, இப்படியே தூங்கவேண்டியதுதான்’ என்று எண்ணிக் கொண்டே பேராசிரியர் ஞானமணி கிடத்திய தம் உடம்பைத் திருப்பிக் கொண்டார். 

பத்திரிகையின் ஆண்டு மலரில் ஒரு பக்கத்திலே இருந்த ஒரு படம் திடீரென்று ஏனோ அவர் கருத்தைக் கவர்ந்தது. அது ஒரு அரசியல் தலைவரின் படம். அதன் கீழே இருந்த சில வரிகளைப் படித்தார். இலக்கண வரம்புகளை யெல்லாம் கேலி செய்துகொண் டிருந்த அந்த வரிகள் அவர் மனத்தையும் மூளையையும் வேலை வாங்க ஆரம்பித்துவிட்டன. அந்த வரிகளிலே, 

ஊ எழிச் சிவன்கண்டீர் 
உருகாத நெஞ்சுரத்தான்
நெஞ்சுரமும் வெஞ்சரத்தை 
வெல்கின்ற வெவ்வுரையும்
வெவ்வுரையைச் செயலாக்கும் 
வினைத்திறத்தின் வித்தகமும் 
வித்தகத்தை வியனுலகம் 
விழிபிதுங்கிக் கண்ணோக்கக் 
கொள்ளையதி காரக் 
கொடுமுடியின் வீற்றிருப்பும்
கொண்டிங்கே பேரழிவுக் 
கூத்தாடு கின்றான்யார் ? 

என்ற ஒரு கேள்வி உருவெடுத்திருந்தது. ‘ இதென்ன, நாம் உலகத்தை இயக்குவது எது என்ற நினைவிலே ஈடுபட்டிருக்க, எவனோ ஒருவன் உலக அழிவிலே v சிந்தனையைச் செலுத்தி யிருக்கிறானே!’ என்று குறுக் கோட்டமாக ஒரு வியப்புக்குறி எழுந்து அந்த வினாவை நோக்கிப் பாய்ந்தது. ‘சரி, இந்தக் கேள்வியில்தான் நம் விடை இருக்கிறதோ என்று பார்க்கலாமே !’ என்று அவருடைய தத்துவம் தன்னுடைய கருத்து வலையும் கையுமாக ஆழமாக இறங்கிவிட்டது. 

என்னதான் ஆழ்ந்த ஆராய்ச்சியாக இருந் தாலும், மூன்றாம் வகுப்பு வண்டி ஆடுகிற ஆட்டத்திலும் கல்லூரி மாணவர்கள் விவாதம் என்ற பேரால் போடுகின்ற கூச்சலிலும் ஆராய்ச்சியாவது, தூக்கமாவது! 

ஆண்டு மலரில் ஒரு கணம்; மாணவர் பேச்சிலே ஒரு கணம் ; வசதிக் குறைவான படுக்கையிலே உடம்பைச் சமனப்படுத்தி நிறுத்த முயலுவதிலே ஒரு நிமிஷம்- இப்படி யாகப் பேராசிரியரின் பயணம் நடந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம், எழுந்து உட்கார்ந்து செலுத்திய கண்ணோட்டத்தில் எப்படியோ ஒரு குடும்பத்தவரும் அந்த மாணவர் களின் தயவால் உள்ளே இடம் பெற்றிருப் பதைக் கண்டார். மாணவர்கள் பேசிக் கொண் டிருந்த பேச்சிலும் கவனம் போகாமல் இல்லை. அங்கே ஒண்டியிருந்த குடும்பத்துப் பெரியவர் கொஞ்சம் தடபுடலாக அலட்டிக்கொண் டிருந்த வாலிபனைப் பார்த்துக் கேட்டார் : 

“ஏனப்பா! நீங்களெல்லாம் படித்த பிள்ளைகளாய் இருக்கிறீர்களே-இந்த மாதிரி அக்கிரமம் செய்யலாமா? அடுத்த வணடியிலே மனிதர்களெல்லாம் புளிச் சிப்பம்போல அடைந்து கிடக்கிறார்களே…..”

அந்த வருங்காலத் தலைவருக்கு இது பொறுக்கவில்லை. என்ன’ங்க! அதெல்லாம் புத்தர் காலத்து நியாயம். நம்ம காலத்துக்கு ஈவு இரக்கம் இதெல்லாம் இருந்தால் வாழ முடியுமா?” 

மாணவமணிகள் இங்கிருந்து ஆரம்பித்தன, தங்கள் கருத்து நிறைந்த விவாதத்தை. பேராசிரியருக்குத் தம்மை ஆசிரியர் என்று எண்ணிக்கொள்வது வெட்கமாக இருந்தது; படுத்துவிட்டார். ஆண்டு மலர்தான் இருக்கிறதே! ஆனால், மாணவர்களின் கூச்சல் அவருக்கு முழு விடுதலை அளித்துவிட்டதாகச் சொல்ல முடியாது. ஒவ்வொரு தொடரும் வாக்கியமுமாக அவருடைய அனுமதிக்காகக் காத்திராமலே மூளையை எட்டிப் பிடித்தன. 

“ஏன்டா, நீதான் கலிகால அரிச்சந்திரனோ ?” 

“அவ்வளவு இரக்கப்பட்டால் அடுத்த ஸ்டேஷன்லே இறங்கி அவாளோட நீயும் ஏறிக்கோ.” 

“அவரு காந்திக்கு அடுத்த சோட்டா காந்தி ‘டா! சத்திய நெறியாம், மண்ணாங்கட்டி யாம்…….” 

“ஆமா, பின்னே அதுக்குக் குறையலாமா…” 

-வண்டியிலே மற்றவர்களை ஏறவிடாமல் செய்தது தப்பு என்று ஏதோ ஒரு அப்பாவி சொன்னதால் பிறந்த மதிப்புரைகள் தாம் இவை என்று பேராசிரியரின் மூளை தீர்ப் பளித்தது. அப்புறம் பேச்சை விட்டுவிட்டுச் சுயமாகவே பின்ன ஆரம்பித்து விட்டது தத்துவ மூளை. 

“ஆமா, எதிர்காலப் பொறுப்பு இதோ, இந்த வாலிபர்களிடம்தானே இருக்கிறது ! துளி கூட இரக்கமே காணோமே! சூழ்ச்சித் திறத் தாலே வையத்தைப் பாலிப்பது தானே இவர்கள் எண்ணம்! படித்த படிப்பும் வளர்த்த அறிவும் ஈர நெஞ்சை உலர்த்திவிடத்தானா !…. அடடே, இதென்ன இந்த மலரில் எவனோ சாக்ரடீசைப் பற்றி எழுதியிருக்கிறான் போல இருக்கிறதே…. ….என்ன எழுதியிருக்கப் போகிறான் மடையன் என்று சிந்தனை கூடு விட்டுக் கூடு பாய்ந்தது. 

கட்டுரையைப் படிக்கவில்லை ; புரட்டினார். எங்கோ நடுவிலே சில வரிகள் பாட்டைப்போலக் காணப்பட்டன. 

அறிவின் சுடர்கண்டீர் 
அனைத்துலகும் முன்னேறச் 
சுடரேற்றி இருளகற்றி 
ஒளிபரப்பும் பெரும்பணியைத் 
தொன்மையாம் காலத்தே 
தொடங்கிவைத்த தூயவனாம்
அன்னவனை-அருமணியை— 
அறிவொளியைப் பாதகர்கள்…..

அதற்குமேல் படிக்கவில்லை பேராசிரியர். தத்து வத்தின் வரலாற்று முறையான வளர்ச்சியைப் படித்திருந்த நினைப்புகளின் ஒத்துழைப்பைப் பெற்று எண்ணம் வளர்ந்தது. 

சாக்ரடீசைக் கொன்றது யார் ? யாராக இருந்தால் என்ன? அவர்கள் முக்கியமான வர்கள் அல்ல. அவர்களை இயக்கிய சக்தி எது ?…. எதோ ஒரு வெறி-தன்னலம் போன்ற ஒரு சக்தி. …..சக்தி …… சக்தி அப்படி யென்றால்…….. சக்தி : வெறி-வெறி: சக்தி…. சரிதான் அறிவுருவமான சாக்ரடீசை உணர்ச்சியின் முருகி எழுந்த நிலையான ஒரு வெறி கொன்றுவிட்டதா……..ஆக, அறிவை உணர்ச்சி அழிக்கிறது என்று ஆகுமோ………” 

எண்ணம் தடைப்பட்டது. வண்டி ஏதோ ஒரு நிலையத்தில் நின்றது. மாணவர்கள் தங்கள் ‘பணி’யை ஆரம்பித்தார்கள். யாரும் தங்கள் வண்டியில் ஏறாமல் பார்த்துக்கொள்வதற்காக, அந்த வண்டிக்குப் போங்கள்,’ ‘கடைசி வண்டி காலி,’ ‘இந்த வண்டி ரிசர்வ் செய்தது’-என்று சொல்லிப் போலீஸ்காரர்களைப்போல் திசை காட்டிக்கொண் டிருந்தார்கள். ‘அறிவு வளர் வதன் விளைவு இதுதான்’ என்று எடை போட்டுக்கொண் டிருந்தது ஞானமணியின் உணர்வு. அறிவு முனைந்து எழுமானால் ஆதிக்க ஆசையாய்- தன்னல வெறியாய் – சூழ்ச்சித் திறமாய் அமையும் என்று சூத்திரம் வகுத்தது அவர் இதயம். சூத்திரம் கண்ட மனத்தில் ‘அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன்நோய்போல் போற்றாக் கடை ‘ என்ற குறள் மின் வெட்டிற்று. 

பேராசிரியருக்குக் கொஞ்சம் விளக்கம் ஏற்பட்டதுபோல் இருந்தது. “ஆம். அறிவு இதயத்தோடு ஒட்டினால்தான்….” 

வண்டி புறப்பட்டுவிட்டது. மாணவர்கள் பேச்சையே கேட்கலாம் என்று ஆண்டு மலரை ஒதுக்கிவிட்டார்; கண்ணை மூடித் தூங்குவது போல் இருந்தார். 

மாணவர்கள் பேச்சு ஒரு பெருங் கதம்பப் பாதையிலே திரும்பியது. அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள், கல்லூரி யிலே காதல், தமிழ்ப் படங்கள், இங்கிலீஷ் டான்ஸ், இந்திப் பாட்டு……… வரையறையே கிடையாது. 

ஒன்றுமட்டும் பேராசிரியருக்குப் புரிந்தது. அறிவைப் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றித் தாங்கள் மட்டும் சுகமாகப் பிரயாணம் செய்யும் மாணவர்கள் உணர்ச்சியிலும் இமயச் சிகரத் தையே பிடிப்பவர்களாகத்தான் இருந்தார்கள். ஆண் பெண் தொடர்பு பற்றிய விஷயங்களைப் பேசுவதில் கூட ஒளிவு மறைவு இல்லாமல்தான் பேசினார்கள். அவர்களுடைய பேச்சுக்களில் ஒன்றிரண்டு மாத்திரம் பேராசிரியரின் மூளை யைத் தாக்கி, நெஞ்சையும் கவர்ந்தன. 

“சக்தியாம் சிவமாம்…… சக்தி இல்லாமல் சிவனில்லையாம் என்று அந்த வாத்தியார் சொன்னாரே, அதென்னடா கோபு?” 

“சக்தி சிவம் என்பதெல்லாம் வெறும் புராணமடா. பெண் ஆண் என்று சொல் வதற்குத்தானடா அப்படிச் சொல்கிறார்கள்….” 

“சக்தி என்றால் எனர்ஜி என்றுதானேடா அர்த்தம்? பெண்ணைப்போய் எனர்ஜி என்று சொல்வானேன்…..” 

“ அது கிடக்கட்டுமப்பா-புராணங்களிலே சக்தி என்றால் பார்வதி என்கிறார்களே – அது ஏன்__” 

“பார்வதியும் பரமசிவனுமாக இருப்பது எதற்காக….” 

இதற்குமேல் அவர்கள் பேசிய பேச் சுக்கள் மேலே படுத்திருந்த திருவாளர் தத்து வத்துக்குப் பிடிக்கவில்லை. ஒவ்வொரு சிவ பெருமானும் தன் தனக்குரிய பார்வதி எப்படி யிருப்பாள் என்று பேசத் தொடங்கிவிட்டான். 

ஒரு குடும்பம் அந்த வண்டியிலே இருக்கிறது, இளம் பெண்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள் என்றெல்லாம்கூட அந்த இளைஞர்கள் எண்ணியதாகத் தெரியவில்லை. உணர்ச்சியின் உச்ச நிலையிலே கிடந்து துள்ளிக் கொண் டிருந்த இரண்டொரு வாலிபர்கள் அந்தப் பெண்களை ஒரு மாதிரியாகப் பார்த்ததைப் பேராசிரியர் நல்ல வேளையாகப் பார்க்கவில்லை. அவர் அறிவு சொல்லிற்று: “பார்த்தாயா, உணர்ச்சியைக் கட்டில்லாமல் விட்டுவிட்டால் இதுதான் நிலைமை. மட்டு மரியாதை ஒன்றுமே கிடையாது. இதில் மட்டுமா? அன்பு அன்பு என்று சொல்லுகிறார் களே அதுவும் இதுபோலத்தான். அன்பு என்ன வேண்டு மானாலும் செய்யும். தன்னையே கூட அழித்துக்கொள்ளும். வள்ளுவர்கூடச் சொல்லவில்லையா-அன்பிற்கும் தாழ் உண்டா -அதனால்தான் உலகமே அழிகிறது. ஒரே மாதிரியான ஒழுங்கு இல்லாமல் போவதே இந்த உணர்ச்சி- சக்தி……. இதனால்தான். ஆண் டவனின் வடிவம் அறிவு. ஞானமூர்த்தி என்று சொல்வார்க எல்லவா?….. .. காந்தியைக் கொன்றது எது? வெறி-உணர்ச்சி இல்லையா? வேறென்ன வேண்டும்……..” 

இதயமும் என்னவோ பதில் சொல்லிப் பார்த்தது; எடுப்பாக இல்லை. பேராசிரியர் ஞானமணிக்கு எப்போதுமே ஒரு அநுபவம். இந்த விவாதம் வளர வளர அறிவு வெல் வதையும் உணர்வு தோற்றுப்போவதையுமே கண்டிருக்கிறார். இந்த அனுபவம் அவரோடு நின்றிருந்தால் அறிவே எல்லாம் ‘ என்று முடிவு செய்திருப்பார். அவருடைய மனைவி கருணாம்பிகையின் அனுபவம் இதற்கு நேர் மாறானதாக இருந்தது. கருணாம்பிகை பேராசிரியரிடம் தத்துவம் பயின்ற மாணவி. மாணவி மனைவியானாள். ஷெல்லித்தனம்தான் இந்த முடிச்சுக்குக் காரணம். அவளிடம் தம் தத்துவ விசாரத்தைப்பற்றி அடிக்கடி அளவளாவிப் பேசுவார். அவள் சொல்வாள் : “என் அனு பவம் வேறு மாதிரி இருக்கிறது. இதைப்பற்றி நினைக்க நினைக்க உணர்வு ஓங்குகிறது; அறிவு மங்குகிறது.” இந்த இரண்டு அனுபவங்களையும் கொண்டு அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். “எவரிடத்தில் எது குறைவோ அதை அவர்கள் மனம் நாடுகிறது.” 

பேராசிரியருக்கு உள்ளூர அறிவிலே வேட்கை; அம்மையாருக்கு உணர்விலே ஒரு தேட்டம்….. 

தூக்கம் வந்துவிட்டது ; என்னதான் வசதிக் குறைவாக இருந்தாலும் தூக்கம் விடு கிறதா? கொட்டாவி விட்டுப் புரண்டு கொடுத் தார். அவர் வாய் எப்படியோ ‘ஊழிச் சிவன் கண்டீர்’ என்று புலம்பிற்று.ஆண்டு மலரைப் புரட்டி அந்தப் பாட்டை மறுமுறை படிக்க முனைந்தார்….ஊழிச் சிவன்…. நெஞ்சு உரம்…. அறிவு- சூழ்ச்சி-கல்லூரி மாணவர் ரயில்…. ….ஒரே சுழற்சி…… 


எங்கேயோ ஒரு நாடகம் நடக்கிறது. தக்க னுடைய வேள்வியை நாடகமாக நடிக்கிறார்கள். 

தாக்ஷாயணியிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்க்கிறார் சிவபிரான். தந்தை வீட்டு யாகத்துக்குப் போய்த்தான் தீர வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறாள் பார்வதி. 

சிவன் : பாரி, உணர்ச்சி உன் இயல்பு. உன் இயக்கமே அண்டங்களின் இயக்கம். இருந்தாலும் நான் கூறும் அறிவுரையைப் புறக்கணிக்காதே. அறிவை விட்ட உணர்வு தானும் அழியும்; மற்றவர்களையும் அழித்து விடும். 

பார்வதி: என் தந்தை-என்னை உரு வாக்கி உமக்கு உறுதுணையாக்கிய தந்தையின் வேள்வி விழாவை நாம் காண வேண்டாமா ? 

சிவன் : நான் சொல்வதைக் கேள். அழைப்பில்லாமல் போகலாமா? அறிவுக்குப் பொருந்தாத செய்கை அவமானத்தை யல்லவா தரும் ? 

பார்வதி: அறிவுக்குப் பொருந்தாது பொருந்தாது என்று அன்பை ஏன் புறக்கணிக் கிறீர்கள்? என் தந்தை இல்லை என்று ஆகி விடுமா ? மகள்’ என்ற பாசம் இல்லாமல் போய் விடுமா ? 

சிவன்: பார்வதி, உயிர்களின் இயக்க மான சக்தியாகவே நீ இருந்தும் பயனில்லை. உன்னைப் பெற்றெடுத்த தக்கனே உன்னைப் போலவே அறிவைப் புறக்கணித்து-என்னை அவமதித்து வெறி பிடித்து அலைகிறான்…….. நீயும் உணர்ச்சியே வடிவாய்……… 

பார்வதி: போதும்; அறிவைச் சுடுகாட் டில் விடுங்கள். நான் போகிறேன். தாய் என்ற நிலையில் நானே உணர்ச்சியாய்ச் சக்தியாய் இயங்குவதை………. 

சிவன்: வெறியாட்டம் காணத் துணிந்து விட்டாய். போ, பேதையே! போ. நீ போ போ. அங்கே போனபின் அறிவை நினைந்து ஏங்கு….. அறிவின்றி அழிவு உணர்ச்சியின் முனைப் பிலே அதுவும் அதன் வடிவாகிய நீயும் அழிய வேண்டியதுதான். 

பார்வதி : இது உணர்ச்சியின் முனைப்பா? உங்கள் அறிவின் தடிப்பா? நீங்கள் உணர்ச் சிக்கு மதிப்பளித்து என்னுடன் வந்தால்…. 

சிவன்: அவமதிப்புப் போதும் போ-நீ. உணர்ச்சிக்கும் உனக்கும் இன்று ஓர் ஊழிக் கூத்து ஆடித் தீர்க்கிறேன். 


பார்வதி வெறிகொண்ட வேகத்தில் தக்கனோடு வாதிக்கிறாள். பயன், அவமதிப்பு. அறிவை எண்ணி ஏங்குகிறாள் ; ஐயன் வரவுக் குத் துடியாய்த் துடிக்கிறாள். அவன்-அறிவுரு வான சிவன்ஞானமூர்த்தி-வரவில்லை. அழு கிறாள். உணர்ச்சி வீறிட்டெழுகிறது; அந்த எழுச்சியிலேயே தன் அழிவையும் காணுகிறது. 

பார்வதி பிணமாகிறாள். சக்தி ஒடுங்கிற்று; உயிர்கள் ஒடுங்கின. உணர்ச்சி அற்ற அறிவுக்கும் வெறி பிடிக்கிறது. பார்வதியின் பிணம் சிவன் தோளிலே துவண்டு கிடக்கிறது. அண்டச் சுடுகாட்டிலே -அத்தனையும் சூனிய மான அந்தப் பாழிலே அவன்-அறிவுருவான ஆண்டவன்-ஆடிக்கொண் டிருக்கிறான். திசை கள் நடுங்க-ஒவ்வொரு எட்டிலும் இடிமுழக்கும் மின்னொளியும் கிளம்ப ஆடிக்கொண் டிருக்கிறான் சிவபிரான். அழிவு- அழிவு. உணர்ச்சி அழிந் தது. ஊழி ஊழி….. …..எங்கிருந்தோ ஒரு குரல் கேட்கிறது: “ஊழிச் சிவன் கண்டீர்.” 


பேராசிரியர் விழித்துக்கொண்டார். ‘ஊழிச் சிவன் கண்டீர்….. என்று அவர் வாய் முணு முணுத்தது. கீழே பார்த்தார். இளஞ்சிங் கங்கள் ஒடுங்கித் தூக்கத்திலே நிலையும் கிடையும் மாறித் தடுமாறிக் கிடந்தன. அவர் தூக்கம் தொலைந்தது. மூளைக்கு முன் இல்லாத சுறு சுறுப்பு வந்துவிட்டது; இதயத்துக்கு அதை விட…. 

சிவபிரான் ஊழிக்கூத்தா ஆடினார் ?……. எட்டுவகைத் தாண்டவங்கள் என்று சொல்வார் களே……..’லய சிவன்’ என்றுகூட ஒரு தொடர் உண்டல்லவா? உலகெல்லாம் ஒடுக்கி அறிவு வடிவாய் நின்று ஆடுகின்றவன் தானே சிவன்……… 

விவேகாநந்தரின் ‘அன்னை காளி’ என்ற பாட்டு அவர் நினைவில் எழுந்தது. பாரதியார் அவர் மன அரங்கிலே தோன்றி ‘அன்னை! அன்னை! அன்னை ! அவள் ஆடுங்கூத்தை நாடச் செய்தாள் என்னை’ என்று முழக்கம் கொடுத்தார். 

வெடிபடும் அண்டத்து இடி பல தாளம் போடும்படியாக அன்னை ஆடும் ஆட்டமும் உண்டு என்று நினைந்தார் பேராசிரியர். தக்ஷி ணேசுவரம் ஆலயத்துக்கு முன் ஒரு முறை போனபோது காளியின் உருவம் அவருக்குப் பெரு வியப்பை அளித்தது. சிவபிரான் தலை மீது அன்னை காளியின் நடனம்! வங்காளத் திலே பெரு வழக்காயுள்ள ஒரு படத்தை மயி லாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலும் பார்த் திருக்கிறார். செத்துக் கிடக்கும் சிவபெருமானின் சடலத்தின்மீது அன்னை காளி வெறியாட்டம் கொண்டு ஆடுவதாக அந்தப் படம் காட்சியளித் தது. அப்போது புரியாதது இப்போது விளங்கிற்று. 

அறிவின் வீக்கத்திலே உணர்வு பிணமாகி றது; இது லயசிவனின் தாண்டவம்-தக்க யாகத்திலே ஆடியது. உணர்ச்சி பாரித்துப் பெருகிய நிலையிலே அறிவை விழுங்கி ஆடுகிறது. இங்கும் ஊழிதான். 

“உணர்வு எல்லை மீறி வளர்கிறது; அறிவை அழிக்கிறது. அறிவு அழிந்தபின் அதை நாடி அலைந்து அலமந்து அழிவுக் கூத் தாடுகிறது உணர்வு. 

அறிவு வரைகடந்து வளர்கிறது; உணர்வை அழிவுத் திசையிலே திருப்புகிறது. உணர்வு அழிந்தபின் அதை நாடி அலைந்து அலமந்து அழிவுக் கூத்தாடுகிறது அறிவு. 

அறிவின்றி உணர்ச்சி ஊழிக் கூத்து இயற்றுகிறது. 

உணர்ச்சி இல்லாத நிலையில் அறிவு ஊழிக் கூத்து இயற்றுகிறது. 

ஒன்றை விட்டு மற்றொன்று எல்லை மீறி வளர்கிறது. அப்போது ஊழி பிறக்கிறது. 

ஊழியின் தத்துவம் இதுதான். 

ஒன்றை ஒன்று வெல்லப் பார்த்து, ஒன்று வென்று, மற்றது தோற்றால் எல்லாம் அழிய வேண்டியதுதான். 

உணர்வின்றி அறிவில்லை ; அறிவின்றி உணர்வில்லை. 

சக்தி – சிவம் இரண்டும் அமைதி பெற- ஒருங்கே வீற்றிருக்கும் கோலமே உயிர்களின் வளமும் வாழ்வும். 

உணர்ச்சி மீறினால் வெறி-அங்கே காளி யின் கூத்து. 

அறிவு மீறினால் வெறி- அங்கே சிவனின் கூத்து. 

உலக அழிவுக்குக் கற்பனை சுட்டிக் காட் டிய எல்லைதான் இந்த இரண்டு நடனத் திருக் கோலங்கள். 

இப்படியாகப் பேராசிரியர் குறிப் பெழுதி வைத்துக்கொண்டு, மீண்டும் படுத்து விட்டார். பெரிய உண்மையைக் கண்டுவிட்ட எக்களிப்பிலே தூக்கம் எங்கே வருகிறது! 

“இதோ பார். மகிழ்ச்சி எல்லை மீறிவிட் டதால் தூக்கம் வரவில்லை. உணர்ச்சியால் ஏற் படுகிற சிறு தொல்லை இது இப்படியே ஒவ் வொரு நிகழ்ச்சியையும் அலசிப் பார். சக்தியும் சிவமும் தாண்டவம் ஆடுவது தெரியும். அறிவும் உணர்வும்தான் உலகத்தை இயக்குகின்றன. ஒன்றை விட்டு ஒன்று பிரியாது; பிரிந்தால் ஊழி ……” – என்று முன் வழக்கமில்லாத புதுப் பாடம் படிக்க ஆரம்பித்தது பேராசிரியரிடம் உதயமான புதுவிளக்கம். 

உண்மையைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியிலே மனம் மகிழ்ந்து கிடக்க, அந்த உண்மைக்கு உருவம் கொடுப்பதிலே மீண்டும் மீண்டும் அறிவு ஈடுபட – பொழுது புலர்ந்தது; கோவை நெருங் கிற்று. பேராசிரியர் கருத்துக் கோவையோடு கீழே இறங்கி நடந்தார்.

– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *