நடை முறை சிக்கல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 28, 2022
பார்வையிட்டோர்: 3,136 
 

இன்று “ஒன்றரை ஷிப்ட்” வேலை பார்த்து விட்டு கிளம்பியதால் மணி பத்துக்கு மேல் ஆகி விட்டது.

இருளில் இரு பக்கமும் புதர்களாய் இருந்த பாதையில் சைக்கிளை அழுத்தி வந்து கொண்டிருந்த ‘ஸ்டீபன்’ சல சல வென சத்தம் வரவும், பயந்து போய் திரும்பி பார்த்தான்.

புதரின் ஒரு பக்கத்திலிருந்து அடுத்த புதருக்கு ஒரு உருவம் நடந்து போவது இவனது அறிவுக்கு அந்த இருளிலும் புலப்பட்டது.

யாரு? குரலில் பயம் இருந்தாலும் வீராய்ப்பாய் சைக்கிள் பெடலின் மேல் ஒரு காலும் தரையில் ஒரு காலையும் வைத்தவாறு கேட்டான்.

அப்படி ஏதாவது என்றாலும் சட்டென சைக்கிளை அழுத்தி பறந்து விடலாம்.

யாரு? யாரு? இரண்டு மூன்று முறை கூப்பிட்டும் பதிலில்லாததால், இப்ப வெளியே வர போறியா இல்லை நான் அங்க வந்தா அப்புறம் என்ன நடக்கும் தெரியுமா?

கேட்டாலும் இவன் கண்டிப்பாய் போய் பார்க்க போவதில்லை, குருட்டு தைரியத்தில் இந்த வார்த்தைகளை வீசினான்.

ஐந்து நிமிடத்தில் வெளியே வந்த உருவத்தை கண்டவுடன் மிரண்டு விட்டான், மேரி நீயா? இந்த நேரத்துல இங்க என்ன பண்ணறே?

அருகில் நடந்து வர வர அவள் அந்த இருளில் பயமாக தெரிந்தாள்.

என்னை மன்னிச்சிடுங்க, நான் ..நான்..விக்கி விக்கி அழுதாள்.

அழுகாதே, என்னாச்சு, இந்த நேரத்துல இப்படி புதரில இருந்து வந்தா என்ன நினைப்பாங்க, அக்கம் பக்கம் இருக்கறவங்க..

மத்தவங்க என்ன நினைச்சா என்ன? யாரு வருவாங்க எனக்கு உதவ?

ஏன் இப்படி பேசறே, என்னாச்சு உனக்கு, சரி பின்னாடி உட்காரு. வீடு பக்கந்தானே, கொண்டு போய் விட்டுடறேன்.

அதெல்லாம் வேண்டாம், இந்நேரம் உங்க சைக்கிள் பின்னாடி உக்காந்து வந்தா உங்களுக்குத்தான் பேர் கெடும்.

அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், முதல்ல ஒரு வயசுப்பொண்ணு இப்படி தனியா வந்து நிக்கறதே தப்பு, அப்புறம் உன்னைய பார்த்துட்டு தனியா எப்படி போறது, நீ என் பின்னாடி உட்காரு.

கொஞ்சம் ‘பிகு’ செய்தவள் என்ன நினைத்தாலோ, பின்புற கேரியரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். பெடலை அழுத்தினான்.

ஆனால், அவன் மனம் மேரி ஏன் இந்த இருளில் அதுவும் தனியாக புதருக்குள் இருந்து வருகிறாள்? உண்மையில் வேறு யாராவது உடன் இருந்திருப்பார்களோ, என்னை கண்டவுடன் அவர்கள் பதுங்கி கொண்டு எங்கே இவன் அங்கு வந்தால் காரியம் கெட்டு விடும் என்று இவளை அனுப்பி விட்டார்களோ?

அந்த குடியிருப்பில் ஒன்றிரண்டு வீடுகள் மட்டும் விளக்குகள் எரிந்து எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

மேரி இவன் சைக்கிளில் இருந்து இறங்குவதை மேரியின் வீட்டிலிருந்து பார்த்து கொண்டிருந்த அவள் அம்மா வேகமாக் ஓடி வந்து எங்கே போனேடி? உன்னை ரொம்ப நேரமா தேடிகிட்டிருக்கோம், நீ என்னடான்னா.. ஸ்டீபனை முறைத்தவாறு அவளை அழைத்து போனாள்.

ஸ்டீபனுக்கு அப்பொழுதுதான் உறைத்தது, தான் அவசரப்பட்டு இவளை சைக்கிளில் கூட்டி வந்து விட்டோமோ?

ஸ்டீபனின் அம்மா இவன் அம்மா உள்ளே வந்தவுடன் “அறிவு கெட்டவனே” இவளை எங்கிருந்து கூட்டிட்டு வர்றே?

இல்லம்மா வர்றபோது அங்க நின்னுகிட்டிருந்தா, சரி தனியா ஏன் நடந்து வரணும்னு..இழுத்தான்.

ஆமா, நீ இதை நாளைக்கு வெளிய சொல்லு உன்னைய நம்புவானுங்க..

அம்மா புரியாம பேசாதே, மனிதாபிமானமா ஒரு உதவி அதுவும் மணி பத்து மணிக்குமேல ஆயிடுச்சு, கண்ணுல பாத்துட்டு சும்மா வர முடியுமா?

அவன் சொன்னதை அவள் காது கொடுத்து கேட்டதாக தெரியவில்லை, முணு முணுவென்று இரவு முழுக்க அவனை ‘வைது’ கொண்டிருந்தாள்.

இருந்ததை போட்டு சாப்பிட்டு படுத்த ஸ்டீபனுக்கு அம்மாவின் கோபம் புரிந்தது. உண்மைதானே, இந்த இரவு நேரத்தில் குடியிருப்பில் அவளை சைக்கிளில் கூட்டி வந்தது தவறோ?

அந்த இருளில் புதர்பக்கம் அவளுக்கு என்ன வேலை.? தான் அவ்வளவு நேரம் கூப்பிட்ட பின்னால்தானே வெளியில் வந்தாள்.. அப்படியானால். தெரியாமல் தான் சிக்கலில் மாட்டிக்கொண்டோமோ..

காலையில் எழுந்து வெளியில் நின்றபடி பல் விளக்கி கொண்டிருக்கும் போதே வீட்டு முன்பாக சென்று கொண்டிருந்த பாலன் என்ன “ஸ்டீபா” நேத்து ரொம்ப லேட்டா வந்த போலிருக்கு.

ஆமாண்ணே நேத்து ஒன்றரை ஷிப்ட் பார்த்துட்டு வந்தேன்.

நிசமாவா….! இந்த கொரானோ காலத்துல “எக்ஸ்ட்ரா டியூட்டி” கொடுக்கறாங்களா?

கேள்வியில் நக்கல் இருந்தது போல் அப்பொழுது உறைக்கவில்லை, அவர் போன பின்புதான் உறைத்தது.

இரவு நாம் கண்டு கொள்ளாமல் வந்திருக்கலாமோ.. தன்னை இரவு பார்த்திருப்பார், அல்லது யாராவது இதை பற்றி பேசியிருக்கலாம்.

சே..அம்மா கோபித்துக்கொண்டது சரிதான், நாம்தான் முட்டாள்தனம் பண்ணிவிட்டோம்.

இவர்கள் குடியிருப்பில் நூறு குடும்பங்கள் இருக்கும். முக்கால்வாசி பேர் பக்கத்தில் இருக்கும் சின்ன சின்ன கம்பெனிகளுக்கு வேலைக்கு போய்க் கொண்டிருப்பவர்கள். நகரை விட்டு தள்ளி இருக்கிறது. இதுவரை காடாய் இருந்த இந்த பகுதி சிறு சிறு குடியிருப்புக்கள் முளைக்க தொடங்கி அங்காங்கே நூறு நூறு குடும்பங்கள் இது போல இருந்தன.

ஸ்டீபனும் அம்மாவுடன் தன் ஊரை விட்டு இங்கு குடி வந்து இரண்டு மூன்று வருடங்கள் ஓடி விட்டது. மேரி குடும்பம் கூட அந்தளவுக்குத் தான் இருக்கும் இங்கு குடி வந்து.

இந்த நிகழ்ச்சி எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக மறைய இரண்டு மூன்று மாதங்கள் ஒடியிருந்தது.

அன்று காலை எழுந்த போது ‘மேரியின்’ வீட்டில் ஒரே சத்தமாக இருந்தது. என்ன பிரச்சினை என்று அம்மாவிடம் கேட்கலாம் என்று நினைத்து அவளை பார்த்தான்.

அவள் முகம் சிவந்திருந்தது. கோபத்தில் இருப்பது போல் தெரிய, வேண்டாம் நாமே போய் பார்க்கலாம் முடிவு செய்து எழுந்து முகம் கை கால் கழுவி சட்டையை மாட்டினான்.

எங்கே போறே? அம்மாவின் குரலில் கர்ண கடூரம்?

இல்லே வெளியில சத்தம் கேட்டுச்சு, என்னன்னு பார்த்துட்டு வந்துடலாமுன்னு..

நீ எங்கியும் போக வேண்டாம், பேசாம வாயை மூடிட்டு கிட..அம்மாவின் குரலில் எரிச்சல்..

என்னாச்சு, ஏன் அம்மா எரிந்து விழுகிறாள்.

புரியாமல் அங்கேயே கீழே உட்கார்ந்து விட்டான். இன்று மதியம் ஷிப்ட்டுக்குத் தான் போகவேண்டும். அது வரை என்ன செய்வது, அம்மா வெளியே போக வேண்டாமென்கிறாள்.

மதியம் வேலைக்கு கிளம்பியவனிடம் சைக்கிளில் கூட வந்த அந்தோணி எல்லாவற்றையும் சொல்லி விட்டான். மேரி வீட்டில் ஏதோ பிரச்சினை. மேரி சொல்ல மாட்டேனெங்கிறாள், அவ அப்பா அம்மாவுக்கு உன் மேல்தான் சந்தேகம், நீ தான் அன்னைக்கு இராத்திரி அவளை கூட்டிட்டு வந்தியாமா? .

‘ஏசுவே’ இதென்ன சிக்கல், அதனால்தான் அம்மா காலையில் இருந்து கோபமாக இருந்திருக்கிறாள்:. எவ்வளவு பெரிய மடத்தனம் பண்ணியிருக்கிறேன்.

அப்படியானால் மேரியுடன் அன்று யாரோ இருந்திருக்க வேண்டும். சந்தர்ப்பம் தெரியாமல் தான் போய் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.

அன்று கம்பெனியில் அவனுக்கு வேலையே ஓடவில்லை. எப்பொழுது வேண்டுமானால் அவனை தேடி ஆள் வரலாம். அதுவும் கட்டி இழுத்து கொண்டு போய் அதற்கு மேல் நினைத்து பார்க்க இவனுக்கு ‘ஈரல் குலை’ எல்லாம் நடுங்கியது.

தான் எந்த தவறும் செய்யவில்லை, என்றாலும் அந்த பெண்ணை அன்று எல்லோரும் பார்க்க கூட்டி போய் இருக்கிறேன். அந்த பெண்ணோ வேண்டுமென்றே தன் பெயரை சொல்லி விட்டால், அப்புறம் தான் எவ்வளவு சொன்னாலும்..யார் நம்புவார்கள் ?

வேலை முடிந்து வீட்டுக்கு போலாம் என்று தெரிந்தும் இவனுக்கு வீட்டுக்கு போவதற்கே பயமாக இருந்தது. எங்கே எல்லாவற்றிற்கும் காரணம் “இவன்தான்” என்று சொல்லி விட்டால்..!

இருக்காது, இருந்திருந்தால் அம்மாவிடமிருந்து அழைப்பு வந்திருக்கும். இல்லை அக்கம் பக்கம் யாராவது வந்து இவனை அழைத்து போக வந்திருக்கலாம். இப்படி மனம் சமாதானமாய் சொன்னாலும் பயந்து பயந்துதான் சைக்கிளை வீட்டை நோக்கி மிதித்தான்.

குடியிருப்பு அமைதியாக இருந்தது. இவனை எதிர்பார்த்து நின்ற அம்மாவின் முகத்திலும் கோபம் சற்று குறைந்திருப்பது போல் தெரிந்தது.

வேண்டாம், எதுவும் கேட்க வேண்டாம் அவளாக சொல்லட்டும்.

முகம் கை கால் கழுவிவிட்டு அம்மா அவனை சாப்பிட கூப்பிட்டு சாப்பாடு போட்டாள். அவளுக்கு இவன் மேல் இருந்த கோபம் போய் விட்டது என்பதை உணர்ந்த ஸ்டீபன் அவளாக சொல்லட்டும் என்று மெளனமாய் சாப்பிட்டான்.

சாப்பிட்டு முடித்த பின்னால் மெளனமாய் கை கழுவ எழுந்தவனிடம், ‘நல்ல வேளை இங்க உன் பேருதான் எல்லார் வாயிலயும் உருண்டுகிட்டிருந்துச்சு. அந்த பொண்ணு மகராசி உண்மைய சொல்லிபுட்டா, அந்த பையன் வீட்டுக்கு போய் எல்லாம் நல்லபடியா முடிச்சுட்டு வந்துட்டாங்க. இனி மேலயாவது, எங்க எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சு நடந்துக்க..’

அம்மா தன்னிடம் சொன்னது அறிவுரையா, நடைமுறை சிக்கலையா?

இருந்தாலும் மேரியை வாழ்த்தத்தான் செய்தான்.

‘நல்லவேலையம்மா என்னை காப்பாத்திட்டே’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *