அதுவும் ஒரு உதவி தான்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,919 
 

பஸ்சை விட்டு இறங்கினார் பெரியசாமி.
சென்னை, அவரை மிரள வைத்தது.
எதிரில் இருந்த அந்த பிரமாண்ட ஆஸ்பத்திரியை அண்ணாந்து பார்த்தார்.
அதுவும் ஒரு உதவி தான்!ராஜாராமனை இவ்ளோ பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கின்றனர் என்றால், அவனுக்கு ஆபத்தும் பெரியதாகத்தான் இருக்கும்.
“பைக் ஆக்சிடெண்டாம்… உடம்பெல்லாம் பஞ்சு சுத்தி, பொம்மையை போல கிடத்தி இருக்காங்கய்யா…’ பார்த்துவிட்டு வந்தவர்கள் சொன்ன சேதியில், வயிறு கலங்கி போயிருந்தது பெரியசாமிக்கு.
“கல்யாணத்துக்குப் பிறகும், பாவிப் பய நிதானமில்லாம, சின்ன வயசு மாதிரியே வண்டிய வேகமா ஓட்டியிருக்கான். இன்னும் அவனுக்கு பொறுப்பும், நிதானமும் வரலையே, கண்டபடி ஓட்றதுக்கு இது ஒண்ணும் குருவம்பட்டி தெரு இல்லையே… அங்கே நான் இருப்பேன் காவலுக்கு; இந்த சென்னைல கேட்க ஆள் ஏது?’
பெரியசாமிக்கு ஒன்றுவிட்ட சகோதரி மகன்தான் ராஜாராமன்.
சிறு வயதிலிருந்தே ரொம்ப துறுதுறுப்பு.
பசங்களோடு விளையாடப் போறேன் என்று போய், கண்ணு மண்ணு தெரியாமல் ஓடி, எதன் மீதாவது மோதியோ, எதன் மீதாவது ஏறி விழுந்து, முட்டியை பெயர்த்துக் கொண்டோ ரத்தம் வர கதறுவான்.
அவன் அம்மாவோ, அப்பாவோ பார்த்து விட்டால், அடிபட்டுக் கொண்டதற்காக மேலும், ரெண்டு அடி கொடுப்பர் அவனுக்கு.
“போகாதேன்னு சொன்னால் கேட்டியா… கேட்டியா?’ என்று கேட்டு, கேட்டு அடிப்பர்.
ராஜாராமனுக்கு வெளியில் பட்ட அடியை விட, பெற்றவர்கள் அடிக்கும் அடியில் வலியும், வேதனையும் அதிகமாகும்.
அந்த சமயத்தில், பெரியசாமிதான், ஓடோடி வந்து, அவனை அரவணைப்பார்.
“அறிவிருக்கா உங்களுக்கு… பையன் ஏற்கனவே அடிபட்டு, ரத்தக் காயம், ரண காயமா இருக்கான். அவனுக்கு ஆறுதல் சொல்லி, காயத்துக்கு கட்டுப் போடுறதை விட்டுட்டு, மேலும் அடிக்கிறீங்களே…’ என்று, உரிமையோடு கண்டித்து, ராஜாராமனை தன் வீட்டிற்கு அழைத்து வந்து, சமாதானப்படுத்தி, காயத்தை ஆற்றும் பச்சிலை தழைகளை தோட்டத்திலிருந்து பறித்து, கசக்கி, காயத்தின் மீது சாறு விட்டு, கட்டு போட்டு, அவனுக்கு வலி தெரியாமல் இருக்க, கதைகள் சொல்லி கவனத்தை திருப்பி, வலியை மறக்க வைப்பார்.
அதனால், ராஜாராமனுக்கு அவர் மீது ஒட்டுதல்.
நீச்சல் பழகும் போது, சைக்கிள் பழகும் போது, ஸ்கூலில் கேம்ஸ் ஆடும் போதெல்லாம் சகட்டுமேனிக்கு அடிபட்டுக் கொள்வான் அவன்.
அப்போதெல்லாம் அவன், பெரியசாமி மாமாவிடம்தான் முதலில் போவான்.
“அடிபடாம சைக்கிள் பழக முடியாது; நாலு தரம் விழுந்து எழுந்தால்தான், சைக்கிள் பழகும். நாலு வாய் தண்ணி குடிச்சு, மூச்சுத் திணறின பிறகுதான், நீச்சல் வரும். காயத்துக்கு பயந்தால், விளையாட்டில் வீரத்தைக் காட்ட முடியுமா?’
“இது கூட தெரியலையே அப்பா, அம்மாவுக்கு…’
“அதுவா… வேறொண்ணுமில்லை ராமா… உம் மேல் உள்ள அக்கறை, இப்படி அடிபட்டுக்கிட்டியேங்கற வேதனை, இதுபோல, இனி நடக்கக் கூடாதேங்கற பாசக் கவலைதான்… அதை, நிதானமா அவங்களுக்கு சொல்லத் தெரியலை. பாசம் கோபமாகி, அதை அடியாகவும், வசவாகவும் வெளிக்காட்றாங்க. அவ்வளவுதான்! கோபமும் ஒரு குணம்தானே!’ என்றபடி சிறு காயத்துக்கு கை வைத்தியமும், பெரிய காயத்துக்கு ஆஸ்பத்திரி வைத்தியமும் பார்த்து, வீடு வரை துணைக்கு போய், பெற்றவர்களை சமாதானப்படுத்தி, பையனை ஒப்படைத்து விட்டு திரும்புவார்.
அந்த நாளைய பாசம் இன்னமும் அடிநெஞ்சில்.
அவன் அடிபட்ட சேதி கேட்டு, அவனது தாயும், தந்தையும் இன்னும் சிலரும் முதலில் புறப்பட்டு விட்டனர்.
சேதி தாமதமாகத்தான் கிடைத்தது பெரியசாமிக்கு.
துடிதுடித்துப் போனார். சென்னையை முன்ன, பின்ன பார்த்ததில்லை அவர். தவிர, பயணச் செலவுக்கும் காசில்லை. அக்கம் பக்கத்தில் அலைந்து, கைமாத்து வாங்கி, எப்படியோ விசாரித்து வந்து விட்டார்.
சாலையைக் கடந்து எதிர் சாரிக்கு வந்து, ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து, விவரம் சொல்லி, லிப்டில் ஏற பயந்து, படிகளில் ஏறி, ராஜாராமனை தேடி கண்டுபிடித்தார்.
படுக்கையில் அவன் கிடந்த விதம் பார்த்து திடுக்கிட்டார்.
கண்ணீர் முட்டியது; மறைத்துக் கொண்டார்.
தன் கவலையை காட்டிக் கொள்ளாமல், அவன் பக்கத்தில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.
“”ராஜாராமா…”
அவன் கையை மெதுவாக பற்றி, நிதானமாக அழைத்தார்.
கண் திறந்தான் ராஜாராமன்.
பெரியசாமியை பார்த்ததும், அவன் கண்களில் பிரகாசம். வாய் திறக்க முடியாமல், தாடையிலும் கட்டு போடப்பட்டிருந்தது.
“”என்ன ராமா… இங்க வந்து இப்படி அடிபட்டுக்கிட்டியே… கவலைப்படாதே ராஜாராமா. நான் வந்துட்டேன்ல; உனக்கு சீக்கிரம் குணமாயிடும். நாம பார்க்காத விபத்தா, படாத காயமா! அதிலிருந்தெல்லாம் அனாயசமாய் மீண்டு வந்தோம்; இது எம்மாத்திரம்!”
– ராஜாராமன் முறுவலித்தான்.
“”உனக்கு ஞாபகமிருக்கா ராமா… ஒருமுறை ஸ்கூல்ல கபடி விளையாடும் போது, நாலு பேரை அவுட் ஆக்கி, “ஜம்ப்’ பண்ணும் போது, விழுந்து, கை மணிக்கட்டை முறிச்சுக்கிட்டியே… நீ அடிபட்டு, டீமை ஜெயிக்க வச்சியே… அப்போ, “இனிமே கை அவ்வளவுதான்; எலும்பு கூழா போச்சு…’ன்னு உள்ளூர் டாக்டர் பயமுறுத்தி, நீ கூட ரொம்ப பயந்தியே. நாம என்ன செய்தோம்… அப்ப, நேரா புத்தூருக்கு போய் கட்டு போட்டோம்… நாலு தரம் கட்டு பிரிச்சு, கட்டி சரி பண்ணிக்கிட்டு வந்து, டாக்டர்கிட்ட கையை ஆட்டி, ஆட்டி காட்டி, அசர வைக்கல?
“”வசதி குறைவான ஊர்லயே நாம நல்லபடியா தேறி வந்தோம். இங்கே ஏகப்பட்ட மிஷினுங்க, பெரிய, பெரிய டாக்டருங்க, மருந்து எல்லாம் இருக்கு; சரியாகாமலா போயிடும். உனக்கு குணமானதும், நம்ம ஊரு பொன்னியம்மாளுக்கு வேப்பஞ்சேலை செலுத்தறதா வேண்டிக்கிட்டுத்தான் வந்திருக்கேன்,” என்று பேசியபடியே, மடியிலிருந்து சிறு பொட்டலத்தை எடுத்தார்…
“”அம்மன் குங்குமம் வைக்கலாம்னா உன் நெத்தியை காணோம். மூக்குத் துவாரத்தை தவிர, மொத்த இடத்தையும் துணியைச் சுத்தி வச்சிருக்காங்க. இப்படி, தலையணை பக்கத்துல வைக்கிறேன்,” என்றபடி குங்குமப் பொட்டலத்தை வைத்தார்.
ஏதோ நினைவு வந்தவராய், “”உனக்கு மறந்திருக்காதுன்னு நினைக்கிறேன். அப்போ உனக்கு, பத்து வயசு. ஒருமுறை நீ கிணத்துல குதிக்கிறப்ப, படியில மோதி மண்டைய உடைச்சிக்கிட்ட. குணமானால், பொன்னியம்மனுக்கு பொங்கல் வச்சு, வேப்பஞ்சேல செலுத்துறதா வேண்டிகிட்டோம்; உனக்கும் சரியா போச்சு. அந்த வருஷம் திருவிழாவின் போது, உடம்புல வேப்பிலை மாலையையே ஆடையா சுத்திக்கிட்டு ஊர்வலம் வர்றப்ப, வழியில மாலை அவிழ்ந்து போச்சு… நீ அம்மணக் கட்டையா நின்ன… பொம்பள பிள்ளைங்க முன் அசிங்கமா போச்சுன்னு அழுதுகிட்டு ஓடி ஒளிஞ்சவன் திருவிழா முடியற வரை, வீட்டை விட்டு வெளியிலயே வரலையே,” என்று சொல்லி, ஆஸ்பத்திரி என்பதையும் மறந்து கட, கடவென சிரித்தார்.
யாரோ உள்ளே வந்த சப்தம் கேட்டு, திரும்பிப் பார்த்தார்.
ராஜாராமனின் மனைவி கலா உள்ளே வந்தாள். அவளுடன், மேலும் சிலர் உள்ளே வந்தனர். அவர்களை மிக மரியாதையாக வரவேற்றாள் அவள்.
வந்தவர்கள் வசதியானவர்களாய் தெரிந்தனர்.
அவள், அவர்களை, “வாங்க பெரியப்பா… பெரியம்மா…’ என்று வரவேற்றாள்.
பெரியசாமி சேரை விட்டு எழுந்து, ஓரமாக போய் நின்று கொண்டார். வந்தவர்கள் ஆங்கிலத்தில் ஏதோ விசாரித்தனர்.
பழக்கூடை, ஹார்லிக்ஸ், புரோட்டீன் பிஸ்கட்டுகள் என்று நிறைய வாங்கி வந்திருந்தனர்.
இரண்டு நிமிடத்தில் புறப்பட்டனர்.
போகும் போது, ஒரு பணக்கட்டை, “”செலவுக்கு வச்சிக்க…” என்று அவளிடம் கொடுத்தனர்; அவள், “”பரவாயில்லை பெரியப்பா…” என்று தயங்கினாள்.
“”கூச்சப்படாதம்மா… விபத்து பெரிசு, ஆஸ்பத்திரியும் காஸ்ட்லி; சமாளிக்கிறது சிரமம். இந்த தொகை உனக்கு உபயோகமாக இருக்கும்; மறுக்காதே,” என்று வற்புறுத்தி, கையில் திணித்துச் சென்றனர்.
அடுத்தடுத்து ஆட்கள் வந்தனர்.
உறவினர்கள், அலுவலக சகாக்கள், நண்பர்கள் என பலரும், சீக்கிரம் குணமடைய வாழ்த்தி, மலர் கொத்து கொடுத்து ஆறுதல் சொன்னதுடன், பணமும் கொடுத்ததை கவனித்துக் கொண்டுதான் இருந்தார் பெரியசாமி.
“என்ன மடத்தனம் பண்ணிட்டேன்… தலையை அடகு வச்சாவது, பணம் கொண்டு வந்திருக்க வேண்டாமா நான். இந்த மாதிரி நேரத்தில், ஆறுதல் மட்டும் போதுமா? கையில் கிடைத்ததை கொடுத்தால்தானே, சிகிச்சை செலவுக்கு உபயோகமாக இருக்கும்!’
சட்டைப் பையை தடவிப் பார்த்தார். சொற்ப காசுதான் இருந்தது. அதுவும், ஊருக்கு திரும்ப, பஸ் கட்டணத்துக்குதான் உதவும். பசிக்கு ரெண்டு இட்லி சாப்பிட்டால் கூட, பஸ்சார்ஜுக்கு குறையும்.
அவர் சுற்றுமுற்றும் பார்த்தார்.
ராஜாராமனின் அப்பாவோ, அம்மாவோ தட்டுப்படுகின்றனரா என்று.
அவன் மனைவி கலாவிடம், அதிகம் பேசினது கிடையாது. கல்யாணம் ஆன கையோடு, ராஜாராமன் ஊரை விட்டு வேலை பார்க்கும் சென்னைக்கே வந்து விட்டதாலும், எப்போதாவது அவர்கள் ஊர் பக்கம் வரும் போது, அவனிடம்தான் பேச முடிந்திருக்குதே தவிர, கலாவிடம் அவ்வளவாக பழகாததால், நிலைமையை எப்படி சொல்வது என்று புரியாமல் தயங்கினார். அதற்குள், “பார்வையாளர் நேரம் முடிந்தது; விசிட்டர்கள் எல்லாம் வெளியே போங்க…’ என்று கட்டளையிட்டபடி வந்தாள் நர்ஸ்.
பெரியசாமியும் வெளியேற வேண்டியிருந்தது.
“”தைரியமா இரு ராஜாராமா… உனக்கு ஆயுசு கெட்டி, ஒண்ணும் ஆகாது; வரட்டுமா?” என்று சொல்லி, கலாவிடம் வந்து, “”அம்மா… நான் ராஜாராமனுக்கு தாய்மாமன் மாதிரி. இந்நிலையில, மத்த எல்லாரையும் விட, நான்தான் அதிகமா பண உதவி செய்யணும். ஆனால்…” என்றபடி, பாக்கெட்டில் இருந்த பயணச் செலவுக்கு வைத்திருந்த கசங்கிய, நூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.
“”நீங்களே வச்சுக்குங்க,” என்று, அதை, அவர் கையிலேயே திணித்தாள் கலா.
“”புரியுதும்மா… நிறைய பணம் தேவைப்படும். இந்த, நூறு ரூபாய் எந்த மூலைக்கு. இதை கொடுக்கறதும், கொடுக்காததும் ஒண்ணுதான். ஏதோ என் மனத்திருப்திக்காவது இதை நீ வாங்கிக்கம்மா…”
“”யார் சொன்னது, நீங்கள் பெரிய உதவி பண்ணலைன்னு… அவர் உங்களை பத்தி நிறைய சொல்லி இருக்கார். சின்ன வயசிலிருந்தே அவருக்கு நீங்கதான் நல்ல நண்பராக, ஆசானாக இருந்திருக்கீங்க… துன்பம் வரும் போதெல்லாம் நீங்க ஆறுதல் சொல்லி, அனுசரணையாய் இருந்திருக்கீங்க. உங்ககிட்ட இருக்கும் போது, அவர் பாதுகாப்பாய் உணர்வாராம்… “ஊரை விட்டு வந்ததால, மாமாவை, நான் ரொம்ப மிஸ் பண்றேன்…’ன்னு அடிக்கடி சொல்வார். விபத்து நடந்தவுடன், எனக்கு உங்களைத்தான் உடனடியாக வரவழைக்கணும்ன்னு தோணிச்சு. பரபரப்புல மறந்துட்டேன்; நல்லவேளை, நீங்களே வந்துட்டீங்க…
“”நாலு நாளாய் உணர்ச்சியே இல்லாமல், வெறுமையாய் பார்த்துக்கிட்டிருந்தவர், உங்களைப் பார்த்ததும், அவர் கண்கள்ல ஒரு ஒளி தென்பட்டதை கவனிச்சேன். நீங்கள் பேசும் போது, அவர் பார்வையில் எவ்வளவு ஆர்வம். அப்பவே புரிஞ்சுகிட்டேன். ஆயிரம் மருந்துகள் செய்யாத வேலையை, உங்கள் அன்பான ஆறுதல் மொழி செய்துச்சு. அதுவே, கோடி ரூபாய்க்கு சமம். இனி, நீங்கள் எங்கும் போகக் கூடாது. இங்கேயே இருந்து, உங்கள் மருமகனை குணப்படுத்தி, வீட்டுல சேர்த்துட்டு பிறகு ஊருக்கு போறீங்க… சரியா?” என்று கைகளை பிடித்துக் கொண்டாள்.
“”அதைவிட எனக்கு வேறென்ன வேலை…” என்று நெகிழ்ந்தார் பெரியசாமி.
கட்டிலில் ராஜாராமன் புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தான்.

– படுதலம் சுகுமாரன் (ஜூலை 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *