எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 3, 2023
பார்வையிட்டோர்: 4,194 
 

(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

அத்தியாயம்-11

அதே நேரம் கரிகாலனும் ராஜா அண்ணா மலை புரத்தில் நிம்மதிக் குறைவுடன் அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். திட்டமிட்டுத்தான் இந்த நாடகமாடத் தீர்மானம் செய்திருந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் முள்ளின்மேல் நிற்பது போலிருந்தது. நாடக நடிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்த முடியவில்லை. நான்கு அல்லது ஐந்து நாட்கள் இங்கு தங்கியிருப்பது முடியாது போலிருந்தது. எவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து வேலையை முடித்துக் கொண்டு கிளம்புகிறோமோ அவ்வளவு நல்லதென்று தோன்றியது. நடந்திருக்கும் எதிர் பாராத திருப்பத்தை செல்வத்திடம் தெரிவிப்பதா வேண்டாமாயென்றும் தெரியவில்லை. தெரிவிப்பதென் றால் எப்படித் தெரியப்படுத்துவது? கரிகாலனுக்கு எதுவுமே புலப்படவில்லை. ஹாலில் டெலிபோன் மணி ஒலித்தாலே மனத்துள் பரபரப்படைந்தான். 

மூன்று மணி அளவில் போனில் கிருஷ்ணகுமாரின் அம்மா பேசுவதைக் கவனித்துக் கேட்டான். அவளின் பேச்சில் இருந்து மறுமுனையில் சிவசிதம்பரம் பேசுகிறார் என்பதை ஊகிக்க முடிந்தது. 

“ஆமாமா… உங்கமேல அவனுக்குக் கோபம் கொஞ்சங்கூடக் குறையலை…”

“ஆனாலும் குமார் வந்து சேர்ந்ததே நமக்குப் பெரிசில்லையா?” 

“அவன் இஷ்டப்படி இருந்திட்டுப் போகட்டும்… ஒண்ணையும் கண்டுக்காதீங்க…” 

“கொஞ்சம் என்னவோ மாதிரிதான் இருக்கான்…” இந்தச் சமயத்தில கரிகாலன் மடமடவென்று படிகளில் இறங்கிவந்தான். 

“யாரும்மா – அப்பாவா?” 

“நீங்க அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பி வந்திருங்க…” 

ரிசீவரை வைத்துவிட்டு அவள் “ஆமாப்பா… அப்பா கூடத்தான் பேசிட்டிருந்தேன்.” என்றாள். 

“என்னவாம்?” 

“என்ன பண்ணிட்டு இருக்கான்னு கேட்டார்.”

“அதை என்னைக்கூப்பிட்டே கேட்கலாமே!”

”நீ தூங்கிட்டு இருப்பியோன்னு சந்தேகம் அவருக்கு” 

கரிகாலன் சிவசிதம்பரத்தின் மனைவி காதுகளிலும் கழுத்திலும் கைகளிலும் அணிந்திருந்த நகைகளை ஏற இறங்கப் பார்த்துவிட்டுக் கேட்டான். 

“எதுக்குமா இவ்வளவு நகைகளைப் போட்டுட்டு இருங்கீங்க?” 

“எப்பவும்தானே போட்டிட்டு இருக்கேன்.” 

“இனிமே போடாதீங்க,” 

“ஏன்?” 

“பேப்பர்ல சமீபத்ல பார்த்திருப்பீங்களே – மயிலாப்பூர்லேயே முகமூடிக் கொள்ளைக்காரங்க ஒரு வீட்ல புகுந்து கொள்ளை அடிச்சிட்டுப் போயிட்டானுங்க… அதுக்குத்தான் சொல்றேன். பேசாமே நகைகளையெல்லாம் பேங்க் லாக்கர்ல கொண்டு போய் வச்சிடுங்க… என்னத்துக்கு ரிஸ்க்?” 

“உனக்குக் கல்யாணம் பண்ற சமயத்ல வர்றவளுக்கு போடறதுக்காகச் செய்து வச்சிருக்கிற அத்தினி நகைகளும் பேங்க் லாக்கர்லதான் இருக்கு…” 

“உங்களோடதையும் கொண்டு போய் வச்சிருங்க…” 

“வரிசையா ரெண்டு மூணு கல்யாணத்துக்குப் போகணும் இந்தமாசம்…அப்புறமா பார்ப்போம்”. 

“உங்களுக்கு மொத்தம் எவ்வளவு நகைகள் இருக்கும்மா?”

சிவசிதம்பரத்தின் மனைவிக்கு ஆச்சர்யமாக இருந்தது. கிருஷ்ணகுமார் இப்படியெல்லாம் அவளை ஒரு நாளும் கேட்டதே கிடையாது. 

”என்னம்மா அப்படிப் பாக்கறீங்க?” கரிகாலன் அறியாத பிள்ளை போலக் கேட்டான். 

“ரொம்ப மாறிட்டே நீ இப்ப?” 

“நல்லதுதானே மாறினா…”

“குமார், அம்மா கேக்கறேனேன்னு நெனைக்காதே. ஊட்டிக்கு உன்னோடு வந்த அந்தப் பெண் யார்?” 

“சொல்லிட்டானா அந்த டிடெக்ட்டிவ் கம்பெனிகாரன்…” 

 “கேக்காதீங்கன்னு சொன்னா கேட்கமாட்டேன்.” 

“என்னோட ஃப்ரண்ட்…” 

“அந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறியா?” 

“நோ” கரிகாலன் அலட்சியமாகச் சொன்னான். 

“ஆமான்னு சொல்லப் போறேன்னு எதிர் பார்த்தேன்..” 

கரிகாலன் சற்றே திடுக்கிட்டான், அப்படித்தான் பதில் சொல்லியிருக்க வேண்டுமோ? சிவசிதம்பரத்தின் மனைவி மெளனமாகக் கரிகாலணையே பார்த்தாள். 

“ஸாரிம்மா; அந்தப் பெண் விஷயத்ல இதுக்கு மேல எதுவும் கேக்காதீங்க…” 

“கல்யாணம் செய்துக்கிற ஐடியா இல்லாமே ஒரு பெண்ணை ஊட்டிக்கு அழைச்சிட்டுப் போகணுமா?” 

“அந்தப் பெண்ணோட தகுதி அவ்வளவுதானம்மா.”

“நமக்கு அது தகுதி இல்லையே குமார்…!” 

கரிகாலன் மீண்டும் மனத்துள் திடுக்குற்றான். சிவசிதம்பரத்தின் மனைவியைத் தொடர்ந்து எதிர் நோக்கிக் கொண்டிருப்பதுகூட கடனமாக இருக்கும் போலிருந்தது. 

“உன்னைப்பத்தி அந்தப் பையன் ஆனந்த் என்ன நெனைச்சிருப்பான்…” 

”அவன் என்ன நெனைச்சா எனக்கென்னம்மா… அவன் நெனைக்கிறதுக்கு தக்கபடியாவா நான் வாழ முடியும்?” 

“முன்னெல்லாம் நீ என்கிட்டே இப்படிப் பேசமாட்டே.” 

கரிகாலன் மறுபடியும் திடுக்கிட்டான்; பேச்சை நிறுத்திவிட்டுச் சிறிது நேரம் வெளியில் போய்விட்டு வரலாம் போலிருந்தது. 

”சரிம்மா; கொஞ்ச நேரம் நான் வெளியில் போயிட்டு வரேன்…” என்றான். 

“சீக்கிரமா வந்திடு.”

“சரி.” 

அவன் பின்னாலேயே வந்த சிவசிதம்பரத்தின் மனைவி போர்டிகோவைத் தாண்டி கரிகாலன் நடந்தபோது அவன் எதிர்பாராத கேள்வியைக் கேட்டாள். 

“ஏன் குமார், உன் பைக்கை எடுத்துக்கலை…?” 

இதைக் கரிகாலன் எதிர்பார்க்கவே இல்லை. இருந்தாலும் ஒரு நொடியில் சமயோசிதத்துடன் பதில் சொன்னான்: “இருபது நாளா எடுக்கவே இல்லையே. பெட்ரோல் ஒரு சொட்டுக்கூட இருக்காதுன்னு நெனைச்சேன்.” 

”மாரிமுத்து”- அந்த அம்மாள் உரக்க குரல் கொடுத்தாள்… 

”இதோ வரேன்மா” என்றபடி ஒரு கிழவன் ஓடிவந்தான். 

“கார் ஷெட் சாவியை எடுத்து ஷெட்டைப் போய்த்திற… தம்பி அவனோட வண்டியை எடுத்திட்டுப் போகப் போறான்…” 

“இதோ திறக்கறேன்” கிழவன் மறுபடியும் ஓடினான். கரிகாலன் அவனின் பின்னால் போனான். கிழவன் ஷெட்டின் கதவைத் திறந்து விட்டான். உள்ளே பழைய பியட்கார் ஒன்றுடன் புத்தம் புதிய ஹோண்டா பளிச்சென்று துடைத்து வைக்கப்பட்டு நின்றது. கரிகாலன் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். உடனே என்ஜின் உயிர்பெற்றது. மெதுவாக போர்டிகே வந்தான். 

“நீ வரேன்னுதான் நேத்து ஃபுல்லா பெட்ரோல் போட்டு வைக்கச் சொன்னார் அப்பா.” அந்த அம்மாள் சொன்னாள். 

“தேங்ஸ்…” 

”சீக்கிரமா வந்திடு.”

“வந்திடறேன். அப்பாகிட்டே சொல்லுங்க. ரொம்ப முக்கியமான ஒரு ஃப்ரண்டை மட்டும்தான் பாக்கறதுக்குப் போறேன்… பார்த்ததும் வந்திடுவேன்…” 

விருட்டென வேகம் பிடித்து வெளியேறிய ஹோண்டா செம்பியம் நோக்கிப் பறந்தது. 

அத்தியாயம்-12

கரிகாலனைப் பார்த்ததும் செல்வத்திற்கு கடவுளைப் பார்த்தது போலிருந்தது. 

”நானே உன்னை எங்கே எப்படிப் பாக்கிறதுன்னு நெனைச்சி குழம்பிப் போய்க் கெடந்தேன். நீயே வந்துட்டே…” 

“எதிலே வந்திருக்கேன்னு வெளியிலே போய் எட்டிப்பாரு” – கரிகாலன் சொன்னான். பெருமிதம் வழியும் கரிகாலனின் முகத்தைப் பார்த்துக்கொண்டே செல்வம் நடந்துபோய் வெளியில் எட்டிப் பார்த்தான். 

“அட – ஹோண்டா! யாரோடது கரிகாலா?” 

“கிருஷ்ணகுமாரோடது.” 

“என்னது என்னது – கிருஷ்ண குமாரோடதா?” 

“யெஸ்.” 

“வெளையாடாதே கரிகாலா. நானே நொந்துபோய்க் கெடக்கேன்.” 

“சத்தியமா செல்வம். ஹோண்டா கிருஷ்ணகுமாரோட வண்டிதான்… நான்தான் இன்னிக்கிக் கார்த்தாலேயே ராஜா அண்ணாமலைபுரம் போய்ச் சேர்ந்தாச்சே…” 

“அப்ப நான் போன் பண்ணிக் கேட்டப்ப: ஊட்டியில கிருஷ்ணகுமாரைக் கண்டுபிடிச்சி அந்த மார்னிங் ஸ்டார்காரனுங்க கூட்டிட்டு வந்திட்டதா சிவசிதம்பரம் சொன்னது?” 

“ஊட்டியில் மாட்டினது சாட்சாத் நானேதான்..” 

செல்வம் பிரமித்துப் போனான். அவனால் நம்பவே முடியவில்லை. ஏதோ சினிமா பார்ப்பது போலிருந்தது. நினைக்க நினைக்க உடம்பெல்லாம் சிலிர்த்தது அவனுக்கு. 

“கடவுள் கண்டிப்பா நம்ம பக்கம்தான் இருக்கார் கரிகாலா… பார்; சந்தோஷத்ல எனக்குக் கண்ல கண்ணீரே வந்திருச்சி…” 

உணர்வுப்பெருக்குடன் செல்வம் கரிகாலனின் கைகளைப் பிடித்துக் கொண்டான். கரிகாலன் சரஸ்வதி நீங்கலாக ஊட்டியில் கண்டுபிடிக்கப் பட்டதில் இருந்து ஹோண்டாவில் கிளம்பி வந்த வரைக்கும் கதைபோல சொல்லி முடித்தான்… 

“ஆனா செல்வம், நாம் நெனைச்ச மாதிரி கிருஷ்ண குமாரா நடிக்கிறது சாதாரண விஷயம் இல்லை… முள்மேல இருக்கற மாதிரி இருக்கு எனக்கு. ஓடி வந்திரலாம் போல இருக்கு எனக்கு. இன்னும் நாலைஞ்சி நாள் அங்கே இருக்கிறதெல்லாம் ஆபத்தான சமாச்சாரம்… ரொம்ப டிப்ளமாடிக்கா சமாளிச்சிருக்கேன்…” 

“அப்ப ரெண்டு நாள்ல கிளம்பி வந்திரு – எவ்வளவு கெடைக்குதோ அதைமட்டும் அடிச்சிட்டு…” 

“ஹௌரால நீ டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டியா?”

“பண்ணிட்டேன்…” 

“முதல்லே என்னோட டிக்கெட்டை என்கிட்டே குடுத்திரு…”

“இந்தா – இதான் உனக்கு – மாம்பலம் ஸ்டேஷன்ல புக் பண்ணினது.” 

”உன் டிக்கெட் சென்ட்ரலா?” 

“ஆமா…” 

“அதாவது செல்வம், நாள் கணக்கெல்லாம் வேண்டாம். எப்ப அடிச்சிக்கிட்டு வந்திரமுடியுமோ அப்ப வெளியேறி வந்திடறேன்… நாம கல்கத்தாவுக்கு ட்ரயின் ஏர்ற சமயத்ல சென்ட்ரல்ல மீட் பண்ணிப்போம். உட்லண்ட்ஸ்ல ரூம் புக் பண்ணி தங்கறதெல்லாம் வேண்டாம்…” 

“ஒரு வேளை நாளையே வேலை முடிஞ்சிட்டா?” 

“இங்கே வந்திடறேன். இல்லை – என் வசதிப்படி பார்த்துக்கிறேன்… உட்லண்ட்ஸ் வேணாம். என் மனசுக்கு ஏனோ வேணாம்னு படுது…” 

“உன் வசதிப்படியே பண்ணிக்கலாம்”. 

“நாம இங்கே வந்து போறதை யாரும் தப்பா பாக்கமாட்டாங்க.” 

”நகை பணம் எல்லாம் நெறய இருக்குதா?” 

“நகை அந்த அம்மாவோடது பூராவும் வீட்லதான் இருக்காம். பேசிப் பாத்திட்டேன். பணம் விசயம் தெரியலை…இன்னிக்கு அல்லது நாளைக்கி அந்த ஆள்கிட்டே பேசிடுவேன். அதுவும் தெரிஞ்சி போச்சின்னா நைட்டோட நைட்டா விஷயத்தை முடிச்சிரலாம்…” 

”யாருக்கும் உன்கிட்டே கொஞ்சம்கூட சந்தேகமே வரலையா?” 

“அந்த அம்மா கொஞ்சம் வித்தியாசமா ஃபீல் பண்ணுது. அதுக்காகச் சந்தேகப்பட்டுட முடியுமா? நாலைஞ்சி நாளைக்கு யாரும் என்னை எதுவும் கேட்டுத் தொந்தரவு பண்ணாதீங்கன்னு ஸ்ட்ராங்கா சொல்லி ஒரு மாதிரி ஒதுங்கி நின்னுகிட்டேன்… ரொம்பப் பேசினா ஆபத்து…” 

“கிருஷ்ண குமாரை மார்னிங் ஸ்டார் காரனுங்க கண்டுபிடிச்சி கூட்டிட்டு வந்துட்டானுங்கன்னு சிவ சிதம்பரம் போன்ல சொன்னதும் எனக்கு வயித்தைப் பத்திக்கிட்டு எரிஞ்சது கரிகாலா…” 

“நான்கூட முதல்ல ஆடிப்போயிட்டேன் செல்வம்… இது என்னடா வம்பாயிருக்குன்னு… அப்புறம்தான் லேசா சுதாரிச்சேன் – வாங்கடா வாங்க; உங்க வழியிலேயே வரேன்னு சொல்லி கெளம்பினேன்…” 

“பணத்தை அடிச்சிட்டு நைட்ல கிளம்பாதே…”

”இல்லை இல்லை… சும்மா வெளியே கிளம்பற மாதிரி ஹோண்டாவில்தான் கிளம்புவேன்…”

“அப்ப ஒண்ணு செய்… ஹோண்டாவை ஏதாவது எலெக்ட்ரிக் ட்ரெயின் ஸ்டேஷன்ல நிறுத்திட்டு வந்திரு…” 

“அப்படிப் பண்ணிரலாம் இல்லே?” 

“‘ஏதோ மனசு மாறி வீடு திரும்பினேன். ஆனா எனக்கு சரிப்பட்டு வரலை; அதனால மறுபடியும் வீட்டை விட்டுப் போறேன்’னு ஒரு சின்ன பேப்பர்ல எழுதி வச்சிட்டு கையெழுத்துப் போடமே விட்டுட்டு வந்திரு” 

“எழுதக்கூட வேணாம் செல்வம். அவனுங்க வீட்லேயே டைப்ரைட்டர் இருக்கு. அதில் டைப் அடிச்சிடறேன் நீ இப்ப சொன்னதை…”

“அது இன்னும் பெட்டர்…” 

“அப்ப நான் கிளம்பட்டுமா?” 

“ரொம்ப ஜாக்கிரதை கரிகாலா. கடைசி கட்டத்துக்கு வந்திட்டோம்… விட்டுடாதே… நகையும் பணமுமா பத்து லட்சம் கெடைச்சா போதும்… செட்டில் ஆயிடலாம்…”

“எல்லாத்தையும் பேக் பண்ணிட்டுத் தயாரா இரு. முடிஞ்சா இங்கேயே மீட் பண்ணுவோம். இல்லேன்னா நேரா சென்ட்ரல்ல பார்ப்போம்…” 

“இனி நம்முடைய சாலை கல்கத்தா நோக்கி…”

“ஒரு விஷயம் சொன்னா அடிக்க மாட்டியே?” கரிகாலன் கேட்டான். 

“என்ன?”. 

“அந்த அம்மா ரொம்ப ஜோராயிருக்கு.” 

“எந்த அம்மா?” 

“கிருஷ்ணகுமாரோட அம்மா!” 

“சீ! உன் புத்தியை காட்ட ஆரமிச்சிட்டே பாத்தியா”.

“வெனிலா ஐஸ்க்ரீமாகவே சாப்பிட்டு வளர்ந்த மாதிரியிருக்கு – அந்த அம்மாவுக்கு உடம்பு… ஒரு தர்மத்துக்குக் கட்டுப்பட்டுப் பேசாம இருக்கேன்…”

“எமோஷனலா ஆகிறே பார்த்தியா…” 

”இல்லை. சும்மா வேடிக்கைக்கு சொன்னேன்… உடனே பயந்திடாதே. பணக்காரனுங்க வீட்ல ஐம்பது வயசுக்காரிகள் கூட டக்கரா இருக்காளுங்க… நான் சொல்ல வந்த பாயிண்ட் அதான்… ஓகே செல்வம் ஸி யூ…” கரிகாலன் வேகமாக படிகளி இறங்கினான். கிருஷ்ணகுமாரின் ஹோண்டா ராஜா அண்ணாமலைபுரம் நோக்கிப் பயங்கர வேகத்தில் விரைந்தது.

– தொடரும்…

– எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி (நாவல்), முதற் பதிப்பு: 1998, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *