கல்யாண வேள்வியும் கறைபட்ட காலடியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 10,143 
 

தனது கல்யாண வாழ்க்கை மீது, சுபா கொண்டிருக்கிற அதீத நம்பிக்கையின் உச்சக் கட்ட விளைவாகவே அம்மாவுடன் கடைசியாக நேர்ந்த அந்தச் சாதகப் பரிமாற்றம், தன்னிச்சையாக அவள் எடுத்த இந்த முடிவு அம்மாவுக்கு உடன்பாடற்ற ஒன்றாகவே மனதை வதைத்தது . இது அவள் கொஞ்சமும் எதிர்பாராமல் நடந்தேறிவிட்ட ஒரு நிகழ்ச்சி. சராசரிப் பெண்களைப் போலச் சுபா, நல்ல நிலைமையில் இருந்திருந்தால், அவள் வாய் விட்டுக் கேட்காமலே அம்மா மனப்பூர்வமாகத் தானே முன்னின்று இதை நடத்தியிருப்பாள் இப்பொழுதோ அவள் இருக்கின்ற நிலைமையில் மனம் தெளிவான அறிவு நிலையின்றி ஒரேயடியாகத் தடம் புரண்டு போன பின், வாழ வேண்டிய வயதில் பொங்கிச் சரியும் உணர்ச்சிகளுக்கு வடிகால் ஏதுமின்றி அவள் படும் பூரண அவஸ்தையின் சோகம் தீர்க்கின்ற ஒரு பரிகார நிகழ்வாகவே அம்மா முன்னிலையில் அந்தச் சாதக அரங்கேற்றம் உணர்வுபூர்வமாக நடந்தேறியது சுயத்தோன்றுதலான, அறிவுப் பிரக்ஞை மங்கிப் போன நிலையிலேயே அம்மா அதைக் கை நீட்டி வாங்க நேர்ந்தது இந்த உணர்வு நிலைக்கு அப்பாற்பட்டுச் சுபா எதிர்மறை நிழலாக நின்று கொண்டிருந்தாள். களையிழந்த முகமும் வெறிச்சோடிச் சோகம் அப்பிய கண்களுமாய் அவளை நெர் கொண்டு பார்க்கவே மனம் கூசியது.முற்று முழுதாகச் சோகம் கனத்த இருண்ட யுகத்தின் ஒரு நித்திய சிறைக் கைதி போலாகி விட்ட அவளுக்கு இப்படியொரு விபரீத ஆசை வந்திருக்கக் கூடாது தான். என்ன செய்வது?வாழ்கிற தகுதி இல்லாமற் போனாலும் அவள் எடுத்திருக்கிற இந்த முடிவு அவளின் தார்மீக உரிமை

அதற்கான பலன் பூஜ்யமாகவே இருந்து விட்டுப் போகட்டும் மனம் அடி சறுக்கிய அந்த நிலையில் அவளை மனப்பூர்வமாக ஏற்று மணமுடிக்க ஒரு தியாக புருஷன் முன் வராமல் போனாலும் அவளின் ஆசைக்காகக் கொடுத்துப் பார்க்க வேண்டியது தான்

அனுவின் கல்யாணம் முடிந்து சிறிது காலமேயாகியிருந்தது, அனு சுபாவுக்கு நேரே மூத்தவள். சுபா இருக்கிற நிலைமையில் அவள் கல்யாணம் கூடக் கேள்விக் குறி தான் .சுபாவின் இருப்பை அறிந்தால் அனுவின் கல்யாணம் கூடத் தடைப்பட்டு விடு,ம் என்ற நிலைமை தான் அனு செய்த புண்ணியம் தானாகவே அவள் போட்டோ பார்த்து ஒரு நண்பி வழியாக விரும்[பி வந்த சம்பந்தம். கனடா மாப்பிள்ளை நிரந்தர பிரஜா உரிமை கிடைக்காதலால் சிங்கப்பூரில் தான் அனுவின் கல்யாணம் அம்மாவின் துணையோடு எளிமையாக நடந்தேறியது.அனுவோடு அம்மா மட்டும் தான் தனியாகச் சிங்கப்பூர் போய் வந்திருந்தாள் அப்பா எதிலும் ஒட்டாத ஒரு புறம் போக்கு மனிதர்.சிறு பிரச்சைனைகளையும் பூதாகாரமாக்கிச் சண்டை போடுவதொன்றையே குறியாகக் கொண்ட குணக் கோளாறான நடத்தைகளையே கொண்டிருப்பவர்.. அவரின் ஒட்டு மொத்தப் பாவங்களின் விழுக்காடு கண்ட ஈனப் பிறவியாகவே சுபாவின் நிலைமை.

அரச பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பத்திரிகை வாசிப்பதிலேயே அவரின் பொழுது சுகமாகக் கழியும். வீட்டில் என்ன பிரளயம் நேர்ந்தாலும் அவர் கண்டு கொள்வதில்லை, அனுவிற்கு நேரே தலை மகனாக ஒரு பையன் அவன் வெளிநாடு போய் அனுப்புகிற பணத்திலேதான் அவர்களின் குடும்பத் தேர் ஓடுகிறது/ அனுவின் கல்யாணத்தை ஓப்பேற்ற முடிந்ததும் அவனால் தான். சாதகத்தோடு சுபா தன் போட்டோவையும் எடுத்து வந்திருந்தாள் புரோக்கரிடம் கொடுப்பதற்காக. போட்டோவிலே பார்த்து அவளை யாரும் மனநோயாளி என்று சொல்ல மாட்டார்கள்

குறை சொல்ல முடியாத அழகு அவளுடையது. இருந்தாலும் தான் வ.டிவில்லையென்று தாழ்வுணர்ச்சி கொண்டதனால்tதான் அவளுக்கு இந்தப் பாரிய மன முறிவு புத்தி நேர் வழியில் சிந்திக்கத் தெரிந்திருந்தால், இப்ப்படியொரு சரிவு அவளுக்கு ஏன் வரப் போகிறது? நிலைமையை எடுத்துச் சொன்னால் அவளுக்குப் புரிந்து கொள்கிற மன நிலையில்லை. அம்மா அவளைக் கழுவாய் சுமக்கிற மாதிரி, அவளை தோள் மீது வைத்துத் தாங்க தன் உணர்ச்சிகளைத் தியாகம் செய்து விட்டு ஒரு யோகபுருஷன் கிடைக்க வேண்டுமே. சமூகத்தில் சல்லடை போட்டுத் தேடினாலும் அப்படியொருவன் கிடைப்பானா ?மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மணமுடிக்க எந்த ஆண்மகனுக்குத் துணிச்சல் வரும்?

அம்மாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது மனதைத்திடப்படுத்திக் கொண்டு சுபாவின் ஆசையைத் தட்டிக் கழிப்பதற்காக அவள் கூறினாள்

“சுபா! அனுவக்காவின் கல்யாணம் இப்ப தானே முடிஞ்சிருக்கு அதை நடத்தி முடிச்ச களைப்பே இன்னும் போகேலை கொஞ்ச நாள் போகட்டுமே பிறகு பார்க்கலாம் “

“என்னம்மா! குழப்பிறியள்? நான் இவ்வளவு நாளும் பொறுத்ததே போதும். அனுவக்காவின் கல்யாணம் முடியவேண்டுமென்றல்லோ நான் காத்திருந்தனான். அவவுக்குச் சீதனமும் குறைவு.. இனியென்ன சுணக்கம்? எனக்குப் பார்க்க வேண்டியது தானே”

மனம் குழம்பிப் போனாலும் புத்தி பூர்வமாகப் பேச அவள் நிறையவே கற்றுக் கொண்டிருந்தாள்.. உணர்ச்சி சிதறும்போதுதான் பிரளயம் வெடிக்கும் அவளுக்கு முரண்படாத மறுமொழி சொல்லி நிலைமையைச் சமாளிப்பது கஷ்டம். வேறு வழியில்லை. அவளின் சாதகத்தோடு புரோக்கரின் கல்யாணச் சந்தைக்குப் புறப்பட வேண்டியது தான். அம்மா துணிந்து விட்டாள்,. அவள் சாதகமும் கையுமாகப் புறப்படும் போது காலை மணி ஒன்பதிருக்கும். .நல்ல வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. மனதிலும் ஒரே உஷ்ணம்

அவள் படியிறங்கும் போது பின்னாலிருந்து குரல் கேட்டது.. திரும்பிப் பார்த்தால் அனு உணர்ச்சிப் பிழம்பாக நின்று கொண்டிருப்பது தெரிந்தது.. விசா இன்னும் வராததால் அவள் கனடா போகச் சுணங்கிக் கொண்டிருந்தது. .இந்த ஏக்கத்துடனேயே இது ஒரு பொறி தட்டுகிற விடயமாய் மனதை எரித்தது.`சுபா விடயமாக அம்மா எடுத்திருக்கிற முடிவு சரியில்லையென்று பட்டது சட்டெனக் குரலை உயர்த்தி உணர்ச்சிவசப்பட்டு அவள் கேட்டாள்

“அம்மா! இது விஷப்பரீட்சையல்லே..அவள் தான் விபரமறியாமல் சொல்கிறாளேயென்றால் நீங்களுமா இதற்குத் துணை போக வேணும்?”

‘ என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?சரி வாராதென்று சொன்னால் அவள் நம்பவா போகிறாள்?நடப்பது நடக்கட்ட்டும். அவள் ஆசைக்குக் கொடுத்துத் தான் பார்ப்போமே”

“நான் மறுக்கேலை. நல்லாய்க் கொண்டு போய்க் கொடுங்கோ ஆனால் ஒன்று சொல்லுறன் உண்மையை மூடி மறைச்சுத் தானே இதைச் செய்ய வேணும்”

அம்மா யோசனையுடன் தலை ஆட்டினாள் .பொதுவாகக் கல்யாணம் ஒப்பேற்றுவதென்றாலே படு சிரமம். அதிலும் இப்படியொரு மகளுக்குக் கல்யாணம் பேசுவதென்றால் கத்தி மேல் நடக்கிற மாதிரித் தான்

வெள்ளவத்தைக்கு அவள் வரும் போது கல்யாணச் சந்தை களை கட்டியிருந்தது. புரோக்கருக்கு முன்னால் கூட்டம் அலை மோதியது..அதன் நடுவே தீக்குளிக்கிற மாதிரி அவள் நிலைமை. பெண் புரோக்கர் பைல் குவியல்களுடன் யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தாள். அவளுடன் நீண்ட காலப் பரிச்சயம் அம்மாவுக்கு. அனுவின் கல்யாண் விடயமாக ஒரு யுகம் போலாகிறது அவளுடன் கொண்ட தொடர்பு நாட்கள். அவள் ஒரு முதிர் கன்னி கல்யாணமே வேண்டாமென்று இருப்பதாகக் கேள்வி

அம்மாவைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்து சிரித்தவாறே கேட்டாள்

“ஆருக்கம்மா பார்க்க வந்திருக்கிறியள்?”

“என் இரண்டாவது மகளுக்குத் தான்”

“எப்படியான மாப்பிள்ளை வேணும்?”

“ வெளிநாடென்றாலும் பரவாயில்லை

“இந்தாங்கோ போம். சாதகத்தையும் இணைத்து உங்கடை விருப்பத் தெரிவுகளை இதில் பதிவு செய்யுங்கோ போட்டோவும் வேணும்”

மனட்சாட்சியை மூடி வைத்து விட்டு அம்மா அவள் கூறியவாறே ஒவ்வொன்றையும் பதிவு செய்து அதைக் கையளிக்கும் பொது முகட்டிலிருந்து பல்லி சொன்னது. வேறு என்ன சொல்லப் போகிறது? இது நடக்காதென்றே சொல்லியிருக்கும். அம்மாவைக் கவலை பிடித்துக் கொண்டது. இது நடக்க வேண்டுமே. யார் தலையில் மண் விழுத்த இந்த விபரீத நாடகம்? பொய் பித்தலாட்டம். வெளிவேடம்.. இதிலே எடுபட்டு ஒன்று வலையில் சிக்கினால் பிறகு என்ன செய்வது?உண்மையை மூடி மறைத்து அதற்குத் துணை போனால் நானும் பழிகாரியாகி வி.டுவேனே. இந்தப் பாவத்தை எங்கே கொண்டு போய்த் தலை முழுகுவது?

கண் முன்னாலேயே பெருக்கெடுத்தோடும் புண்ணிய நதி போலச் சமூகத்தின் இருப்பு நிலை. அதிலொன்று போலாக முடியாமல் அவர்களின் கறை படிந்த இருண்ட யுகம். அதிலகப்பட்டுக் கழுவாய் சுமக்கிற பெருந் துயரம் அம்மாவுக்கு மட்டும். தான் இனி என்ன நடக்கப் போகிறது?கல்யாணச் சந்தைக்குப் போய் வந்த கையோடுஅம்மாவுக்குக் குளிர் விட்டுப் போயிற்று.. நாளடைவில் அதை அவள் மறந்தே போனாள் அந்தக் கல்யாண விடயமாக ஒருவர் வீடு தேடி வந்த போது தான் அம்மாவின் நிலை ஆட்டம் கண்டது. பொருத்தம் பார்த்த குறிப்பையும் அவர் கையோடு எடுத்து வந்திருந்தார். சுபாவின் சாதகம் அவர் மகனின் சாதகத்தோடு நன்கு பொருந்தி வந்திருப்பதாக அவர் கூறியதைக் கேட்டு அவள் நிலை குழம்பினாள்

அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவள் அசடு வழியச் சிரித்துக் கொண்டே,சீதன விபரத்தைக்கூறிய பின் பெண்ணை நேரில் பார்க்கவிருப்புவதாக

அவர் சொன்னதைக் கேட்டு அவளுக்குப் பாதி உயிர் போய் விட்டது. முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்ற நிலைமை தான்.. வேறு வழியில்லை. திரை விலகிச் சுபாவும் வந்து சேர்ந்தாள். அவர் கண்களுக்கு ஒன்றும் தட்டுப்படவில்லை. இருள் அப்பிக் கிடக்கிற அவளின் நிரந்தர சோகம் அவருக்குப் பிடிபடவில்லை. ஜெர்மனியிலுள்ள அவர் பையனின் போட்டோவைக் கூட எடுத்து வந்திருந்தார்

நல்ல வேளை. சுபா அதனைக் காணவில்லை. மன்மதக் களை வடிய அந்தப் பையன் வாட்டசாட்டமான அழகோடு ஒளிர்ந்தான்.. அவனை அடையச் சுபா கொடுத்து வைத்திருக்க வேண்டுமே. அவர்களைப் பற்றி விசாரிப்பதாக அவர் விபரம் அறிந்து கொண்டு போனவர் தான்

அப்படி அவர் வந்து போய் ஒரு யுகத்திற்கு மேலாகிறது. மீண்டும் அவர் திரும்பி வரவேயில்லை. என்ன நடந்திருக்கும்? யாரைக் கேட்டு அறிவது?ஊரிலிருந்துஒரு சமயம் உறவினளொருத்தி வந்திருந்தாள். சரியான வாயாடி. கனத்த குரலில் தொண்டைத் தண்ணீர் வற்றும் வரை ஓயாது பேசிக் கொண்டேயிருப்பாள். ஊர்ப்புதினம் எல்லாம் அத்துபடி. அம்மா கேட்காமலே கதையைத் துவக்கினாள். அம்மா அதைக் கனவிலே கேட்டுக் கொண்டிருந்தாள்..அவள் வாய் நிறையச் சிரிப்போடு கேட்டாள்,

“சரசு! உனக்கு ஒரு புதினம் சொல்லட்டே>”

என்னவாயிருக்கும்?பெரும்பாலும் ஊர்ப்புதினங்களில் ஒன்றாகவே அது இருந்து விட்டுப் போகட்டும். எனக்கொன்றுமில்லையென்பது போல அம்மாவின் நிலைமை. .பெரிய சாபக்கேடு நேர்ந்திருக்கிறது .ஒன்றையும் காட்டிக் கொள்ளாத மாதிரி இருந்த போது தான் அந்தப் பெண் எதிர்பாராத விதமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்,

“சுபாவுக்கு நீ மாப்பிள்ளை பார்த்ததாக ஊருக்குள்ளை கதை அடிபடுகுது உண்மையே”என்று அவள் கேட்ட போது அம்மா ஒன்றும் பேசத் தோன்றாமல் மெளனமாக இருந்தாள். உண்மையை சொல்லத் தொடங்கினால் அதன் வலியை இவள் புரிந்து கொள்வாளா?எந்த மேலான உணர்வுப் போக்குமின்றிப் பிறர் படும் துன்பங்களை எட்டி நின்று ரசித்து, மகிழ்ச்சி கொண்டாடி வேடிக்கை பார்த்தே பழக்கப்பட்டவள்அவள் அவளை முன்னிறுத்திச் சுபா பக்கமுள்ள நியாயங்களை எடுத்துக் கூறினால், எந்தளவுக்கு அதை அவளால் புரிந்து கொள்ள முடியும்,? சுபாவால் அம்மா சுமக்கிற கழுவாயைஅறிவுப் பிரக்ஞை கொண்டு அவளால் புரிந்து கொள்ளத் தான் முடியுமா? நிலைமை இவ்வாறிருக்க ஒன்றையும் வெளிக் காட்டாத பேச்சற்ற மெளனமே சிறந்ததென்று அவளுக்குப்பட்டது.

அந்த மெளனத்தைக் கிழித்துக் கொண்டு கனதியான ஒரு சத்தியப் பிரகடனம் போல உச்சஸ்தாயியில் குரலை ஏற்றி மீண்டும் அவளே பேசினாள்

“சரசு! நீ சொல்லாவிட்டாலென்ன எனக்கு விளங்குது ஊரெல்லாம் உன்ரை மகளைப் பற்றிய கதை தான் சங்கானையிலிருந்து ஒருவர் வந்து உங்களைப் பற்றிக் கேட்டவராம். .சுபாவின் படத்தைக் காட்டி விசாரித்தவராம். சாந்தன் கடையிலை கதைச்சவையெண்டு மருமகன் வந்து சொன்னவர் .பிறகு என்ன நடந்திருக்குமென்று நான் சொல்லியே உனக்குத் தெரிய வேணும்”

அதைச் சொல்ல நேர்ந்ததற்காக மன வருத்தம் கொண்டு நிற்க வேண்டியவள் ,மாறாக பிறர் துன்பம் கண்டு குளிர் காய்கிற சுய புத்தி மாறாமல் பொங்கிச் சரியும் மகிழ்ச்சிப் பிரவாகத்துடன் அம்மாவை நோக்கி, அவள் கூறிய அந்த வார்த்தை எறிகணைகள் வந்த போது அதை எதிர் கொள்ளத் திராணியற்று அம்மா நிலை சரிந்து துடித்துப் போனாள். அதிலிருந்து மீளவே அவளுக்கு வெகு நேரம் பிடித்தத சுபாவை மையமாகவைத்து, அவர்கள் வாழ்க்கையில் வீசிச்சுழன்றடிக்கிற சூறாவளியில் அகப்பட்டு உருக்குலைந்து போன, ஜடம் மரத்த வெறும் நடைப் பிணம் போல அம்மாவின் நிலைமை.. வாழ்க்கையின் அதி பாரதூரமான இந்தப்பாவச்சரிவின் கருந்தீட்டுப் படிந்த நிழல் கூறுகளின்சுவடு கூட எட்டாத வெகு தொலைவில், மலையுச்சியில் ஏறி நின்று எக்காளமிட்டுச் சிரித்து நையாண்டி பண்ணுவது போல, ஊரில் நடந்த புதினத்தைச்சொல்லி விட்டு ஓய்ந்த அவளின் குரல் விண்முட்டித் திரும்பத் திரும்ப எதிரொலிப்பது போல அம்மாவின் செவிகளில் நாராசமாய் வந்து விழுந்தது. இந்தப் பாவப் பிரகடனத்தின் உச்ச சலசலப்பைக் கிரகித்து ஏற்றவாறே அது ஜீரணமாக முடியாமல் போன வெறுமையோடு அம்மா வெகு நேரமாய் நிலை குத்தி அமர்ந்திருந்தாள் ஊரில் என்ன ந்டந்திருக்குமென்று அவளால் ஊகிக்க முடிந்தது சுபா பற்றிய உண்மையைச் சொல்ல நேர்ந்ததற்காக அப்படிச் சொல்லி விட்ட அவர்கள் மீதுகோபம் சாதித்துக் கறபூச நினைப்பதே பாவமென்று பட்டது அவர்கள் தான் என்ன செய்வார்கள்? உண்மை வழி அவர்களுக்கு அந்த உண்மையின் சூட்டை வாங்கியவாறே கருகி அழிந்து போகத் தான் தன்னை விழுங்கி நிற்கும் இருட்டு யுகமும் அதன் சரிவுகளும் என்ற நினைவே ஒரு சரித்திர பாடமாக மனதில் உறைத்தது அம்மாவுக்கு.

– மல்லிகை (நவம்பர் 2011 )

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *