ஜேப்படிக்காரன் மகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2022
பார்வையிட்டோர்: 1,610 
 

வண்ண வண்ண உடைகளுடன், அதுவும் ‘மாடர்னாய்’ பட்டாம்பூச்சிகள் போல் அந்த கல்லூரி காம்பவுண்டு வாசலை நோக்கி வந்து கொண்டிருந்த இளம் பெண்கள் கூட்டத்தில் “ஜீன்ஸ் பேண்ட்” கொஞ்சம் “லூசான சட்டை” போட்டிருந்த பெண்ணை அடையாளம் காட்டினான் பக்கிரி

இங்க பாரு இந்த பொண்ணை நல்லா கவனிச்சுகிட்டே போ. அவ பணம் வச்சிருக்கற பர்ஸ் எங்க வச்சிருக்கறான்னு பார்த்துகிட்டே இரு. எங்கயாவது ஒரு இடத்துல அவ பணம் எடுக்க பர்ஸை வெளிய எடுப்பா, அப்ப குறிச்சு வச்சு, அதை அபேஸ் பண்ண பாரு.

மாரி அவன் சொல்வதை கவனமுடன் கேட்டான். அந்த பெண் பார்ப்பதற்கு மாடர்னாய் தெரிந்தாலும், பணம் நிறைய வைத்திருப்பாளா என்பது இவனுக்கு சந்தேகமாய் இருந்தது. காரணம் ‘பணக்காரத்தனம்’ தெரியாத எளிமையாக இருந்தாள்.

வாத்யாரே போயும் போயும் அந்த பொண்ணை காட்டறியே, அவ கிட்டே பணம் இருக்கும்னு நினைக்கறே. பார்த்தா கொஞ்சம் பாவமா தெரியறா.

பக்கிரி அவன் முகத்தை உற்று பார்த்தவன், ‘குரு’ என்ன சொல்றாரோ அதைய செய்யறதுதான் உன் வேலை, இப்படி கேள்வி கேட்டீயின்னா, இதா போயிக்கினே இரு.

கோச்சுக்காதே வாத்யாரே, எங்கப்பன் போன பின்னால உன்னைத்தான் அப்பனா நினைச்சிருக்கேன், எங்கப்பன் இந்த தொழில்ல அடிபட்டே நாசமா போனான். நானாவது வேற தொழில் பார்க்கலாமுன்னா பிக்பாக்கெட்காரன் பையன்னு தெரிஞ்சு எவனும் வேலை தரமாட்டேங்கறான்.

தெரியுதுல்ல, அப்ப நான் சொல்றதை செய், அந்த பொண்ணை பாலோ பண்ணு, அவ எப்படியும் பணத்தை வெளிய எடுப்பா, அப்ப கவனிச்சு அதை எடுத்துடு.

அந்த பெண்ணுக்கு பதினெட்டு வயது இருக்கலாம், எல்லோரும் பக்கத்தில் இருந்த கல்லூரிக்குள் நுழைவதையும், ஆனால் இந்த பெண் கல்லூரி காம்பவுண்டை ஒட்டி ஒதுங்கி நிற்பதையும் கவனித்தான்.

ஏன் ஒதுங்குகிறாள்? கல்லூரிக்குள் போகாமல். மனம் நினைத்தாலும் பக்கிரி சொல்லியிருந்தபடி அவளை கண்கானிக்க ஆரம்பித்தான். பணம் எங்கு வைத்திருப்பாள்?

புத்தகம் நான்கைந்து முதுகுப்பையில் வைத்திருப்பது தெரிகிறது. மற்றபடி பணம் அந்த ஜீன்ஸ் பேண்டுக்குள் பெரிதாக இருப்பது போலவும் தெரியவில்லை. இவளிடம் என்ன இருக்கப் போகிறது? பக்கிரி வேறு இவளிடமே பணத்தை ஜேப்படி செய்து தொழிலை ஆரம்பிக்க சொல்கிறான், புரியாமல் நின்றான் மாரி.

கல்லூரி காம்பவுண்ட் கதவு சாத்தப்பட அங்கு காணப்பட்ட பரபரப்பு குறைய தொடங்கியது. அந்த பாதையில் இருந்த கடைகளில் கூட்டம் குறைந்திருந்தது.

ஆனாலும் அந்த பெண் நகத்தை கடித்தபடியே நின்று கொண்டிருந்தாள். யாரையோ எதிர்பார்க்கிறாளோ?

மாரி நின்ற இடத்தில் இருந்து சற்று தள்ளி மறைவாக நின்று கொண்டிருந்தான் பக்கிரி.

கார் ஒன்று அங்கு வந்து நிற்க அதிலிருந்து ஒரு இளைஞன் இறங்கி அவளை நோக்கி வந்தான்.

அந்த பெண்ணின் முகம் பிரகாசமாக எவ்வளவு நேரமா காத்திருக்கிறது? சிணுங்கியபடி முன்னே நகர பக்கிரி, சட்டென மாரியிடம் நீ போய் அந்த பொண்ணு மேல மோதற மாதிரி சைக்கிளை விட்டு விழு, அந்த நேரத்துல அவ முதுகுல மாட்டியிருக்கற புத்தகப்பை கீழே விழுகற மாதிரி மாட்டியிருக்கற பெல்டை அவுத்து விடு, அதுக்குள்ள பணம் வச்சிருப்பா?

அவன் உன்னை அடிக்க வருவான், எப்படியும் கூட்டம் வரும்.

அந்த நேரத்துல அந்த பையன் சண்டை போடும்போது அவ கிட்டே எப்படி நெருங்கறது.?

நீ கவலைப்படாதே கூட்டத்துல நம்ம பசங்க இரண்டு பேரு இருப்பானுங்க, அந்த பையனை சமாதானப்படுத்தற மாதிரி தனியா தள்ளிகிட்டு போயிடுவாங்க.புரியுதா?

அந்த இளைஞனும், பெண்ணும் எதிரெதிராய் வந்து நிற்கவும், அந்த நேரத்தில் சரியாக, மாரி சைக்கிளை விட்டு கீழே விழுவது போல் அவளது முதுகில் மாட்டியிருந்த நாடா பெல்டை இழுத்து விட்டே விழுந்தான்.

ஒரு பக்கம் புத்தகப்பை, கழண்டு கீழே தொங்க மறு பக்கத்தை என்ன செய்வது என்று தடுமாறினாள். அதற்குள் கீழே விழுந்த மாரி மெல்ல எழ முயற்சிக்க, அந்த இளைஞன் மாரியின் சட்டையை பிடித்து ராஸ்கல், பார்த்து வர முடியாது, என்று அடிக்க கையை ஓங்கினான்.

அதற்குள் அங்கு ஒரு கூட்டம் கூடி விட, காம்பவுண்ட் கேட்டின் உள்புறம் இருந்த காவலர்கள் வெளிப்புறம் வந்து நின்ற அந்த பெண்ணை ஒரு மாதிரியாக பார்த்தனர்.

மேலும் கீழும் நெளிந்த அந்த பெண் அங்கிருந்து மெல்ல நகர்ந்து கேட் அருகே வந்தாள்.

அதற்குள் அந்த இளைஞனை சமாதானப்படுத்துவது போல் தள்ளி சென்ற ஆட்களை சமாளிக்க அவன் வேறு வழியின்றி காரை எடுத்து வேகமாக கிளம்பி விட்டான்.

இந்த பெண்ணின் புத்தகபையை.அந்த நொடியில் புரட்டி பார்த்து பணம் ஒன்றும் இல்லை என்பது உணர்ந்த மாரி அவளிடமே திருப்பி கொடுத்து மன்னிச்சுக்குங்க அக்கா, தெரியாம மோதிட்டேன்.

அவசரமாய் புத்தக பையை வாங்கி காம்பவுண்டுக்குள் வேகமாக் நுழைந்து வகுப்பை நோக்கி ஓடிப்போனாள்.

இவை அனைத்தும் அரைமணி நேரத்துக்குள் நடந்து முடிந்து மீண்டும் அந்த இடம் அமைதியாகிவிட்டது.

வாத்யாரே உண்மைய சொல்லு, நீ சொன்ன மாதிரி அவ புக்குல எந்த பணமும் இல்லை. அப்ப நீ வேணுமுன்னேதான் என்னைய அந்த பொண்ணுகிட்ட இருந்து பணம் அடிக்க சொல்லியிருக்கே.

அவனின் கேள்விக்கு உடனே பதில் சொல்லவில்லை, பக்கிரி. ஐந்து நிமிட அமைதிக்கு பின்னர், ‘ஆமா மாரி’ நான் வேணுமின்னேதான் உன்னைய அந்த பொண்ணை ‘பாலோ’ பண்ண சொன்னேன். ஏன்னா அவ என்னோட பொண்ணு.

உன் பொண்ணா?

இந்த முறை பக்கிரியின் குரல் கரகரத்து இருந்தது. என்னை என்ன பண்ண சொல்றே மாரி? அவ என் பொண்ணுதான், வழி மாறி போறதுக்கு இன்னைக்கு ஐடியா பண்ணி வச்சிருக்கறவ கிட்டே நான் போய் அப்படி பண்ணாதேன்னு எப்படி சொல்ல முடியும்?

என் பொண்டாட்டி நான் பிக்பாக்கெட்டுக்காரன்னு தெரிஞ்ச பின்னால குழந்தைய கூப்பிட்டு தனியா போயிட்டா. கஷ்டப்பட்டு வளர்த்தி இவ்வளவு தூரம் படிக்கவும் வச்சிட்டா.

அந்த ராஸ்கல், அதுதான் காரை ஓட்டிட்டு வந்தானே, அவன் ‘வொர்க்க்ஷாப்ல’ வேலை செய்யறவன், இவ மனசை கலைச்சு இன்னைக்கு அவளை எங்கியோ கூட்டிட்டு போறதுக்குத்தான் அவளை வீட்டுல இருந்து காலேஜூக்கு கிளம்பி வர சொல்லி காம்பவுண்டுகிட்ட வெயிட் பண்ண சொல்லியிருக்கான். நீ மட்டும் இதை கலைக்காம இருந்திருந்தா இந்நேரம்..

வேற யாராவது இதை செஞ்சிருந்தா அவனுக்கு இது தெரிஞ்சிருக்கும், ஏன்னா அவன் அவ்வளவு மோசமானவன். அதுனாலதான் புதுசா உன்னைய போக சொன்னேன். கோபிச்சுக்காதே மாரி, குரு உன்னைய வேணுமின்னே ஏமாத்தலை, என் பொண்ணை காப்பாத்தனுமின்னுதான்.

மாரி பத்து நிமிடம் ஒன்றும் பேசாமல் இருந்தவன் பக்கிரி அண்ணே இனி மேல் நீ எனக்கு அண்ணன், அவ்வளவுதான், “குரு” அப்படீங்கறதெல்லாம் வேண்டாம். ஏன்னா நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், எங்கப்பன் செஞ்ச இந்த ஜேப்படி தொழிலை சத்தியமா செய்யப்போறதில்லை. எனக்கு எங்கியாவது வேலை இருந்தா சொல்லு, அது போதும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *