வேத இருப்பின் முன்னால், வீழும் நிழல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2022
பார்வையிட்டோர்: 4,176 
 

இரத்தம் தோய்ந்த சுவடுகளுடன், நான் வெகு நேரமாய் அங்கேயே நின்றிருந்தேன். நான் வென்று வாழ ,இது ஒரு வழி,. நின்றேன் என்று சொல்வதை விட, இருக்கிறேன் என்று சொல்வதே பொருந்தும். இருள் கனத்த, ஒரு சூனியப் பொழுது. என் கல்யாணமே, சூனியமாகிப் போன ஒரு வெற்றிடம் தான். இந்த வெற்றிடத்தை நிரப்ப, வெறும் மனிதர்களால் முடியாது. கடவுள் தான் வர வேண்டும். ஏனென்றால் அனேகமான எல்லோரும், கல்லெறிந்து வீழ்த்துகிற கூட்டதைச் சேர்ந்தவர்கள் தான், இதற்கு என் மாமி ஒன்றும் விதி விலக்கல்ல அவள் அப்புவின் தங்கை. அந்தக் காலத்தில் தந்தைமாரை என் போன்ற சிலர் அப்பு என்றே அழைப்பது வழக்கம் இது பாமரதனமாய்க் கூடத் தெரியலாம் ஆனால் அதற்காக எங்கள் அப்பு ஒன்றும் சோடை போனவரல்ல அவரின் கதையை பின்னர் விளக்குகிறேன் இப்போது பொழுது மங்கி வருகிற நேரம். வீட்டிற்கு விளக்கே|ற்ற வேண்டுமென்ற, பிரக்ஞை கூட இல்லாமல் ,கடைசிப் பெண் குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு, நான் செயலிழந்து போயிருந்த ஒரு சமயம். எதற்காக இந்தச் செயலிழப்பு.? எல்லாம் வாழ்க்கை நிழலை துரத்துவதனால் தான். இது நிழல் என்ற தீர்க்கமான முடிவிற்கு வருவதற்கு இது மட்டும் காரணமில்லை, இப்படி எத்தனையோ முறை ,நான் நிழலையே துரத்தி ஏமாந்து போனது மட்டுமில்லை, .எரிந்து கருகி வீழ்ந்தும் இருக்கிறேன். இந்த வீழ்தல் என்[பது, வெறும் மனதளவில் மட்டும் தான்..மனமென்பது நமது உருவாக்கமே, எண்ணங்கள் ஒழிந்து போனால், மனமுமில்லை. நான் இருந்தது, வாழ்ந்தது எல்லாம் உள் இருப்பில் ஒளி கண்டு தான். அதென்ன உள் இருப்பு என்ற, கேள்வி எழும். அதையும் சொல்லி விடுகிறேன். பிரமத்தின் பிரதிபலிப்பாக, உள்ளே ஒரு சாட்சி புருஷன். அது நான் தான். பிரம்மம் ஒன்றைத் தவிர, மற்றவையெல்லாம் வெறும் கற்பனையே. இந்தக் காட்சி மயமான கற்பனை வாழ்க்கையில், சாதிப்பதற்கு ஒன்றுமேயில்லை என்ற புரிதல் ஒன்றே, சமநிலை பேணி நான் வாழக் காரணம் . அது, மட்டும் இல்லாமல் போயிருந்தால், நடந்த கொடுமைகளுக்கும் வீழ்ச்சிக்கும், என்றோ நான் பஸ்பமாகி விட்டிருப்பேன். என் வெறும் துகள் கூட மிஞ்சியிருக்காது .ஆனால் நான் பிரம்மத்தை உணர்ந்த, மிகப் பெரிய தூண். இந்தத் தூணோடு முட்டி மோதி சரித்து விடத் தான், கொடூர மாமியின் இன்றைய வருகை..அதிலும் துல்லியமான இளம் மாலைப் பொழுது, நானோ மயக்கத்தில் இருக்கிறேன். எனக்கென்ன மயக்கம்? என்றோ மயக்கத்தை விட்டொழிந்தவள் நான். திருமணத்தில் விழுந்த முதல் அடியையே, இன்னும் மறக்கவில்லை. நான் தாம்பத்திய உறவுக்கும், வெறும் உடல் இன்பத்துக்கும் ஆகாதவள் எனக் கருதி, திருமணமாகி இரு மாதங்கள் கழியுமுன்பே, என் கணவரின் வெறுப்புக்கும் புறக்கணிப்புக்குமாளாகி நான் அனுபவித்த நரக வேதனையை, கடவுள் ஒருவரே அறிவர். அதைத் தொடர்ந்து வந்த சவால்கள், எதிர் முரணான சிந்தனைப் போக்கு ,எல்லாம் என்னைப் புடம் போட்டே நிமிர வைத்தன. இப்போது நான் முற்றிலும், வைரமாகி விட்ட ஒரு தபஸ்வினி என்பதை, மாமி புறக் கண்ணால் அறியாமல் போனமையே, இன்றைய அவளின் அம்பு விடுகைக்கான, முதற் காரணம். அவள் எதிர்பார்த்து வந்தது, இங்கு ஒரு பட்டுபாவையை. அதென்ன பட்டுப் பாவையென்று கேட்கத் தோன்றும். அதையும் சொல்லி விடுகிறேன். பட்டிலும் பொன்னிலும் குளித்து எழுபவர்களெல்லாம் பட்டுப் பாவையர்களே! ஆன்ம ஞானம் பெற்று சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த உண்மை, ஒரு வேத வாக்காகப் பிடிபடும். மாமிக்கு இது புரியாத மர்மம் தான்

நிசப்தமான மாலைப் பொழுதில், மற்றப் பையன்களையும் காணோம் எனக்கு ஐந்து பிள்ளைகள். மடியிலே கிழிந்த நாராக மயங்கிக் கிடக்கிறது கடைசிப் பெண். குழந்தை. இதை விட, நேரே மூத்த வயதில் இரு பெண் குழந்தைகள். அவர்களுக்கு முறையே மூன்று வயது ஏழு வயது. அவர்களும் இப்போது வீட்டிலில்லை, பக்கத்து வீடு நான் வாழ்ந்த வீடு. அதை எல்லோரும் அப்பு வீடென்றே சொல்வார்கள் ஆனந்த வாத்தியார் என்றால் அவரை எல்லோருக்குக்கும் தெரியும். அவர் இறந்த, பிறகு, அந்த வீடு, என் தங்கையின் சீதன வீடாயிற்று. அவளுக்கு பகீரதி என்று பெயர். அவள் கணவனுக்குக் கொழும்பில் வேலை. மாதமொரு முறை வந்து போவான். என் தங்கைக்குப் பிள்ளை இன்னும் கிடைக்கவில்லை. அதனால் என் பிள்ளைகளோடு நல்ல ஒட்டுதல்.. அதுவும் பெண் குழந்தைகளுக்கு அவள் தாய் மாதிரி. அதனால் தான் இந்த வேளையிலும் அவர்கள் அவள் வீட்டில் நிற்கிறார்கள் .மகன்கள் இருவரும் வெளியே போய் விளையாடிக் கொண்டிருக்கும் போது தான், சடுதியாக மாமியின் இந்த வருகை நிகழ்ந்தது.

வாசற்படிக் கட்டில் நான் இருக்கிறேன். குழந்தை மடியில், ஒன்றரை வயசுப் பெண் குழந்தை. அவளுக்கு ஒரு கிழமை, வாந்தியும் வயிறோட்டமுமாக இருக்கிறது..அதற்கு மருந்து வாங்கவும், நான் தான் போக வேண்டியிருந்தது . என் கணவர் இதற்கெல்லாம் ஆளில்லை. மல்லாகத்திலே தான் இப்போது அவருக்கு, நீதிமன்ற வேலை. டிஸ்ரிக் கோர்ட்டில் முதலியாராக இருக்கிறார். மொழி பெயர்ப்பு வேலை செய்கிறார். அதிலே நல்ல ஒழுங்கு ஆள் .ஆனால் வீட்டு வேலைச் சுமையெல்லாம் என்னோடு தான். குழந்தை அனுவிற்கு ஆயுர் வேத மருந்து கொடுத்தும் வயிற்றோட்டமும் வாந்தியும் நிற்கவில்லை. அவள் அரை மயக்கமாகி இருக்கும் போது தான் ஆ வேசக் காளியாக, கேட்டைத் திறந்து கொண்டு, மாமி உள்ளே வருகிற சத்தம் கேட்டது. மூதேவி கணக்கில் நான். சீதனமாகக் கொண்டு சென்ற நகைகளும் போய் விட்டன. கழுத்தில் தாலியுமில்லாத வெறும் மூளி இப்போது நான். அது மட்டுமல்ல ஒருகிழமையாக, முற்றமும் கூட்டிப் பெருக்க ஆளின்றி, பலாச் சருகுளால் நிரம்பி வழிய, ஒரே குப்பைக் காடாகக் காட்சியளித்ததைக் கண்டு, மாமிக்கு வந்ததே கோபம். இதிலே நான் வேறு உருகக் குலைந்த பொம்மை மாதிரி பட்டுமில்லை. பொன்னுமில்லை. வாடி உலர்ந்த சருகு நான். இதை மாமி மட்டுமல்ல, இந்த உலகமே அறியும். மாமியும் உலகமுமாய் எனக்குச் சலாம் போட்டு வணங்கினால் தான் ,நான் பெரிய மனுஷி. இல்லாவிட்டால் காறித் துப்புவது மட்டுமல்லை, ஏறி மிதிக்கவும் செய்வார்கள்.

என்னைக் கண்டதும் மாமிக்கு வந்ததே கோபம். எனக்கு வேதம் சொல்வதற்குப், பதி,லாக, அவள் வாயிலிருந்து நெருப்பைக் கக்கிக் கொண்டு வெளிப்பட்டு வந்ததே ஒரு கரிய பூதம். நான் கண்ணை மூடிக் கொண்டு நிர்ச்சிந்தையாக இருந்த போதிலும். அவள் குரல் சினம் கொண்டு துரத்தியடித்தது.

அங்கை பார்! இது இருக்கிற லட்சணத்தை. தூ! ஒரு செய்காரியமும் கொம்மா பழக்கி வைக்கேலை உனக்கு. பக்கத்து வீட்டிலை இருக்கிற சுவேதாவைப் பார்! உன்னை விட எத்தனை வயசு சின்னவள். அவள்.அவளைப் பார்த்தாவது நீ பழக வேண்டாமே.? அவள் இதை ஆவேசமாக முழங்கி, உறுதிபடக் கூறிவிட்டு, நிமிர்ந்து பார்க்கிற போது நான் ஒரு தபஸ்வினி மாதிரியே, அசைவின்றி, கண் மூடித் தவம் செய்யும் பாவனையில் ,என்னுள் கனத்த மெளனமே அவளுக்குப் பரியாத பாஷை போல, மீண்டும் அவள் குரல் கேட்டது.

உனக்கு நான் சொன்னது விளங்கேலை போலை, அங்கை பார் சுவேதாவை என்று தான் இன்னும் சொல்லுறன்.

அவள் இதைச் சொன்னதைக் கேட்டு, திடீரென்று நான் விழித்துப் பார்த்தேன் நான் கழுத்து நெரிபட்டுக் கருவறுந்து வீழ்ந்தது இப்படிப் பலமுறை என்ற போதிலும் இன்று வரை எதற்கும் நான் பதிலடி கொடுத்ததில்லை. கோபமே எனக்கு வராது.

சாந்தி இருப்பில், நான் ஒரு சனாதன ஞானி! எனக்குத் தெரிந்த தர்மமெல்லாம் சத்திய உடன்பாடாகவே ஒளி கொண்டு பிரகாசிக்கும் உண்மையில் நான் ஓர் ஒளிப் பிழம்பு1 ஆகர்ஷ தேவதை! என்னை அறிந்தவர்க்கே இது புரியும். மாமிக்குப் புரியவில்லையென்றால், இது ஆர் குற்றம்? இந்த பாழாய்ப் போன சமூகம் அவளை வளர்த்திருக்கும் முறை அப்படி. வெளி வேஷம் மட்டும் தான் வாழ்க்கை என்று நம்புகிறவர்களின் கண்களுக்கு, நான் வெறும் தூசு மட்டுமல்ல, சருகும் கூட. ஆனால் சருகல்ல. சாகாவரம் பெற்ற சத்தியம் ஒன்றே, எனது உண்மையான இருப்பு..இதை மாமிக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய, தார்மீகக் கடமை ஒன்று மட்டுமே திடீரென்று, என் மெளனத்தைக் கலைக்கிறது. விழி மலர்த்தி அவளைப் பார்க்கிறேன். என்னைக் கேளாமலே, சொற்கள் தாமாகவே உதிர்கின்றன. கீழ் தளத்தில் நின்றவாறே, மாமிக்கு இது கேட்டதோ இல்லையோ? ஆனாலும் சொல்கிறேன்.

மாமி! சுவேதாவைப் பார்த்து வேதம் நான் கற்க வேண்டுமென்று நீங்கள் சொல்லுறதைக் கேட்டு, நான் மிக நொந்து போனேன். வெறும் கண்களாலை என்னைப் பார்த்து வேதம் சொல்ல, நீங்கள் என்ன அவ்வளவு பெரிய ஆளா? சுவேதாவை என்னோடு ஒப்பிட்டு, வம்புக்கு இழுத்ததற்காக இப்ப நான் வருந்துறன் அவ என் உயரத்துக்கு ஒரு போதும் வரப் போறதில்லை. இதற்கான காரணங்கள் நிறைய இருக்கு. அவ மாதிரி ஊர் மேய்கிற ஆள் நானில்லை. அது தெரியுமே உங்களுக்கு? ஆரும் அழுதால் அவளுக்குப் பெரிய கொண்டாடம். ஊரெல்லாம் மேளம் தட்டி, இதைக் கொண்டாவும் செய்வா, ஆனால் நான் அப்படியில்லை மாமி. உள்ளுக்குள் வந்து பார்த்தால் தான் என்பிரகாசம் தெரியும் உங்களுக்கு. உங்கடை வெறும் கண்களால் பார்த்து, இதை அளக்க முடியுமோ? பதில் சொல்லுங்கோ, மாமி!

நான் வேதம் சொல்லி ஓய்ந்து போனேன். இதற்கும் பதில் சொல்கிற ஆன்மீக ஞானம் இருந்தாலொழிய, இனி அவளால் பேச முடியாது. பேச்சற்ற மெளனமே அவளைக் கட்டிப் போட்டது. எழுந்த மானத்தில் வாய்க்கு வந்ததை உளறுகிறவர்களுக்கு, முன்னால் என் மெளனம் கூட பாவக் கணக்காகவே முடிந்து போகும். சத்தியமே தலை குனியும் போது, நான் வெறும் சாட்சி புருஷனாகவே இருப்பதில் பலனில்லை. என்று தோன்றியது. மாமி போன்றவர்களுக்கு உண்மையான புரிதல் வரும் வரை, நான் வாய் திறக்காமல் இருப்பது கூடப் பாவமென்று, இப்போது பட்டது. ஒரு சத்தியத்தை வேதமாகவே கூறி நிலை நிறுத்தி விட்ட சந்தோஷத்தோடு நான் முகம் களை கொள்ள நிமிர்ந்து பார்த்த போது மாமி நின்ற இடத்தில், வேதத்தாலும் நிரப்ப முடியாது, ஒரு வெற்றிடம் தான் தெரிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *