வெண்புறா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2023
பார்வையிட்டோர்: 701 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அண்ணா! நான் போட்டு வாறன். “

“அண்ணா” என்ற அந்த ஜீவ நாதம் அவனது ஆத்மாவையே ஆகர்ஷித்து, அவனை ஆனந்த பரவசமாக்குகின்றது.

“அண்ணா” என்ற அவளது அழைப்பில் பொங்கிப் பிரவகிக்கின்றன பாசம், கணீரென்ற கனிவான மதுரக் குரலோசை, துடுக்குத்தனம் நிறைந்த ஜீவன் ததும்பும் விழிகள், எடுப்பான கூரிய மூக்கு, பேதைமை கலையாத குழந்தைத் தனமான முகத்தின் தேஜஸ், பார்த்தோரையும் பக்தி பரவசமாக்கும் அவளது எழில் தோற்றம் அவனுக்கு ஒருவித ஆத்மார்த்த லயிப்புணர்வை யூட்டுகின்றன.

தன்னை மறந்த மோன நிலையில் நிற்கின்றான் அவன். அவனுடைய தீட்சண்யம் மிக்க விழிகள் அவளுடைய குழந்தைத் தனமான முகத்தில் எதையோ தேடுகின்றன.

தனது அன்புச் சகோதரியைத் தேடுகின்றானா அவன்? பெயரளவிற்கேனும் சுயநலமேயற்ற, ஜென்ம ஜென்மங்களாய்த் தொடர்ந்து கொண்டிருக்கின்ற மனிதநேய உறவின் வெளிப்பாட்டை அவளுடைய ஜீவன் ததும்பும் விழிகளில் அவன் காண்கின்றான்.

அவளுடைய தரிசனத்திற்காக அவனுடைய இதயம் எந்த நேரமும் ஏங்கித் தவித்துக் கொண்டேயிருக்கின்றது.

“அண்ணா!” அதே மதுரக்குரல், அதே ஜீவன் ததும்பும் விழிகள், அதே பால் மணம் மாறாத குழந்தைத்தனமான முகம், தூய்மை கலையாத வெள்ளை யூனிபோம், பிறை நெற்றியில் கறுத்தப் பொட்டு, இரண்டாகப் பிளந்து பின்னப்பட்டு அடர்ந்த சுருண்ட கருங்கூந்தலின் தொங்கலில் வண்ணாத்துப் பூச்சி போன்று படபடத்துத் துடிக்கின்ற சிவப்பு ரிபன்கள். பூரணத்துவ எழிலுடன் நிற்கின்றாள் அவள்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவர்களை விட்டுப் பிரிந்த அவனது செல்லத் தங்கை தன்முன் நிற்பதான உணர்வு அவனுக்கு.

நிலத்தில் ஆழ அகலமாக வேரூன்றி, பொருமிப் பருத்து, வான்முகட்டைப் பார்த்து ஓங்கரிப்பதாய் உயர்ந்தோங்கி கிளைத்துச் சடைத்து, குளிர் நிழல் பரப்பி, விஸ்வரூபமாய் நிற்கின்றது அந்த மரம்.

எண்ணற்ற பறவையினங்கள் அந்த மரத்தின் கிளைகளி லிருந்து பலவகையான ஆனந்த இன்னிசை ஒலிகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

வேகமாய் வந்து கொண்டிருக்கின்ற அந்த ‘சைக்கிள்’ சந்திக்கருகாமையிலுள்ள அந்த மரத்தடிக்குச் சமீபமாக உள்ள கடையடியில் வேகம் தணிகின்றது.

‘மோட்டார் சைக்கிள்’ ஒன்றைப் பழுது பார்த்துக் கொண்டி ருக்கின்றான் அவன்.

“அண்ணா!” என்ற மதுரக் குரலோசை கேட்டு அவன் தலை நிமிர்கின்றது.

கரும்பச்சையாய் கிளைத்துச் சடைத்து விஸ்வரூபமாய் நிற்கின்ற அந்த மரத்தைப் பின்னணியாகக் கொண்டு தூய வெள்ளை “யூனிபோம்” அணிந்த அவனுடைய தங்கை ஒரு காலை நிலத்தில் ஊன்றியபடியே பைசிக்கிளில் ஒய்யாரமாய் நிற்கின்றாள்.

“அண்ணா ! நான் போட்டு வாறன்.

அவன் பெருமிதப் புன்னகையுடன் சரியெனத் தலையசைக்கின்றான்.

என்றுமேயில்லாதவாறு அவள் சிறிது நேரம் தயங்கி நிற்கின்றாள். அவளது விழிகளில் ஒருவித பிரிவுத் துயரின் சோக நிழல் படர்கின்றது. இதை அவன் அவதானிக்கவில்லை.

அவளுக்கு ஏன் இந்த தயக்கம்?

அவள் பிரிய மனமின்றிப் பிரிந்து செல்கின்றாள்.

இதுதான் அவளது இறுதிச் சந்திப்பு என்பது அவனுக்கு எப்படித் தெரியும்?

அவளது பைசிக்கிள் மெதுவாக நகர்ந்து செல்கின்றது.

சிறிது தூரம் சென்றதும் அவள் தன்னுடைய தலையைத் திருப்பி பக்கவாட்டாய் சரிந்து துயரத்துடன் அவனைப் பார்த்துவிட்டு வானத்துத் தேவதையாய்ச் சென்று விட்டாள்.

அவள் போனவள் போனவளேதான். திரும்பி வரவேயில்லை.

அவளுடைய புத்தகப் பை தேடுவாரற்று அவளது பாடசாலை வகுப்பறையில் கிடக்கின்றது. பைசிக்கிள் அவள் விட்ட இடத்திலேயே தன்னந்தனியாய் நிற்கின்றது.

அவனும் அவனது பெற்றோரும் அவளைத் தேடாத இடமேயில்லை!

அவனுக்கு வாழ்வே இருண்டு விட்டது. ஏக்கம், எதிர் பார்ப்பு, சோகம், அனைத்தையுமே அவன் தனக்குள் புதைத்து வைத்துக் கொண்டு நடைப்பிணமாய்த் திரிகின்றான். ஏகாந்தமான அவனுடைய மனதில் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும், தன்மேல் கோபமும் பொதிந்து அழுத்துகின்ற பாரத்தோடு வாழ்கின்றான் அவன்.

என்றாவது ஒருநாள் அவள் தம்மிடம் திரும்பி வருவாள் என்ற எதிர்பார்ப்புடன்தான் அவனும் அவனது பெற்றோரும் இருக்கின்றார்கள்.

அவளுடைய வருகைக்காக அவர்கள் ஏங்கித் தவித்துக் கொண்டேயிருக்கின்றார்கள்.

கால ஓட்டத்தினால் எத்தனை மாற்றங்கள்.

நேரம் நத்தையாக நகர்ந்து கொண்டேயிருக்கின்றது.

அவளுடைய தரிசனத்துக்காக அவனுடைய இதயம் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது.

அவள் இன்னும் வந்த பாடில்லை.

நேற்றுக் காலையிலிருந்து அவளுக்காக அவனுடைய உள்ளம் ஏங்கித் துடித்துக் கொண்டேயிருக்கின்றது.

அவள் ஏன் வரவில்லை?

மதம் கொண்ட யானையாய் மனித உயிர்களின் மதிப்பையும் மகத்துவத்தையும் உணர்ந்தறியாத ஆயிர மாயிரம் மானுட உயிர்களைப் பலியெடுத்துக் கொண்டிருக் கின்ற அதிஉத்தமருடைய தார்மிக அரசின் இரும்புக் கழுகுகள் அவளுடைய கிராமத்திற்கு நேற்று அதிகாலை விஜயம் செய்திருப்பதாய் அவன் அறிந்திருந்தான்.

“ஒருவேளை பயம் காரணமாக அவளது பெற்றோர்கள் அவளைப் பாடசாலைக்கு விடவில்லையோ? அல்லது அவளுக்கு ஏதாவது…

‘சீ என்ன துக்குறியான எண்ணம், இல்லை! அவளுக்கு ஒன்றுமே நடந்திருக்காது.’

தனது மனதிற்கு தானே சமாதானம் கூறுகின்றான் அவன்.

‘அவள் ஏன் நேற்று வரவில்லை?

‘அவள் இண்டைக்கு நிச்சயம் வருவாள்.’

நேரத்தைப்பார்க்கின்றான்.

‘நேரமும் எட்டு மணிக்கு மேலாகி விட்டதே. அவளை இன்னும் காணவில்லையே? ஒருவேளை அவள் இண்டைக்கும் வரமாட்டாளோ? இல்லை. இண்டைக்கு அவள் நிச்சயம் வருவாள். இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்பம்.’

அவன் அவளுக்காக காத்திருக்கின்றான்.

அவனால் எதுவித வேலையும் செய்ய முடியவில்லை. நேற்றையிலிருந்து அவனுக்கு ஏராளம் வேலைகள் குவிந்து கிடக்கின்றன. அவனுக்குக் கையுமோடவில்லை, காலு மோடவில்லை.

மனதில் நிம்மதியேயில்லை.

அவளது தரிசனத்திற்காக அவன் தவமிருக்கின்றான் போலும்.

இன்று நேற்றல்ல, நீண்ட நெடுநாள்களாகவே அவன் அவளைத் தினசரி காலையும் மாலையும் தரிசித்துக் கொண்டே யிருக்கின்றான். அவளது கணீரென்ற மதுரக் குரலைக் கேட்டனுபவித்துக் கொண்டேயிருக்கின்றான்.

இரண்டு வருடங்களுக்கு முன்.

அன்று காலை ஏழரை மணியிருக்கும்.

அவளுடைய சைக்கிள் அவனுடைய கடைக்கு அருகிலுள்ள பைசிக்கிள் திருத்தும் கடைக்கு முன்னால் நிற்கின்றது.

“ஏதோ சத்தம் கேக்குது; சைக்கிள் ஓடேலாமைக்கிடக்கு. சரியான இறுக்கமாய்க் கிடக்கு. இதை ஒருக்கா திருத்தித் தாருங்கோ”

அவள் பதட்டத்துடன் கேக்கின்றாள்.

சைக்கிள் திருத்துபவன் அதை உருட்டிப் பார்க்கின்றான். “அச்சு இறுகிப் போச்சு, கோப்பையும் உடைஞ்சு போச்சு. எல்லாம் மாத்தி வேலை செய்யிறதென்டால் ஐம்பது ரூபாவுக்கு மேலை பிடிக்கும். என்ன கழட்டிறதோ?”

“என்னட்டை இப்ப பத்துப் ரூபாதான் கிடக்கு”.

அவள் இழுத்துக்கூறுகின்றாள்.

“அப்ப என்னாலை ஒண்டும் செய்யேலாது”.

அவள் என்ன செய்வதென்றறியாது சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்படுகின்றாள்.

தனது கடை வாசலில் நின்று கொண்டிருந்த அவன் இதை அவதானிக்கின்றான்.

“என்ன மோனை நடந்தது? ஏன் சைக்கிள் திருத் தேல்லை?”

“திருத்துறதுக்கு ஐம்பது ரூபாவுக்கு மேலே கேக்கிறார். என்னட்டை பத்து ரூபா மட்டும் தான் கிடக்குது. நான் என்ன செய்ய?”

ஏக்கத்துடன் கூறுகின்றாள் அவள்.

அவன் ஒருவாறு அந்த பைசிக்களை ஓடக்கூடிய வகையில் சரி பண்ணிக் கொடுக்கின்றான்.

“இப்ப ஒரு மாதிரி ஓடேலும் ஆனால் இரண்டு மூன்று நாளைக்குள்ளை திருத்திப் போடவேணும். இல்லாட்டி அச்சும் முறிஞ்சு ஆளுக்கும் ஆபத்து வரக்கூடும்.”

அவன் எச்சரிக்கின்றான்.

“எவ்வளவு காசு?”

“நூறு ரூபா”.

அவன் கூறுகின்றான்.

அவள் திகைக்கின்றாள்.

“என்னட்டை இதுதான் கிடக்கு. மிச்சத்தை நாளைக்குக் கொண்டு வந்து தாறன்.”

தன்னிடமுள்ள பத்து ரூபாவை நீட்டுகின்றாள்.

“எனக்கு முழுக்காசும் வேணும். இப்பவே தரவேணும். இல்லாட்டி சைக்கிளை விட்டிட்டுப் போ. காசை கொண்டு வந்து தந்திட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு போகலாம்.”

அவளுக்குத் திகைப்பு. என்ன செய்வதன்றே தெரியவில்லை.

கண்கள் நீர்த்திரை கட்டுகின்றன.

“எனக்கு ஒரு சதமும் தரவேண்டாம். நீ சைக்கிளை எடுத்துக் கொண்டு போ மோனை.”

அவன் சிரித்த படியே கூறுகின்றான்.

அவள் அதிர்ந்து போய் அசையாது நிற்கின்றாள்.

“ஏன் பிள்ளை நிற்கின்றாய்? உனக்கு பள்ளிக்கூடத்திற்கு நேரம் போட்டுது. நீ போட்டு வா.”

மீண்டும் அவன் கூறுகின்றான்.

அவள் தயங்கியபடியே பைசிக்களை எடுத்து ஏறி, ஒரு காலை நிலத்தில் ஊன்றி நின்றபடியே அவனை நன்றியுணர்வுடன் பார்க்கின்றாள்.

“நீ போட்டு வா மோனை”.

அவன் நேசமாகக் கூறுகின்றான்.

“அண்ணா! நான் போட்டு வாறன்.”

“அண்ணா” என்ற அவளது அழைப்பிலுள்ள பாசம் அவனது இதயத்தை ஆகர்ஷிக்கின்றது.

அவனுடைய தங்கையே அவன் முன்னால் நிற்பது போன்ற உணர்வு அவனுக்கு. அவன் திக்குமுக்காடுகின்றான்.

அவள் மெதுவாக சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்து, பக்கவாட்டாகத் தலையயைச் சாய்த்து ஒரு செல்லச் சிரிப்பை வீசிவிட்டு வேகமாகச் செல்கின்றாள்.

அவளது உருவம் பொட்டாகிப், புள்ளியாய் மறையும் மட்டும் அவன் அசந்துபோய் அவள் சென்று கொண்டிருக்கின்ற திசையையே பார்த்தபடியே நிற்கின்றான்.

இப்படித்தான் அவனுடைய தங்கையும் அன்றொரு நாள் சென்றாள்.

அன்றிலிருந்து அவன் அவளுடைய தரிசனத்துக்காகக் காலையும் மாலையும் ஆவலுடன் காத்துக் கொண்டேயிருக்கின்றான்.

சைக்கிள் மணிச்சத்தம்.

அதைத் தொடர்ந்து “அண்ணா நான் போட்டுவாறன் என்ற பாசக்குரலோசையும் அவளுடைய செல்லச்சிரிப்பின் ஒளி வீச்சும்.

அவனுடைய தங்கையும் இதே மாதிரித்தான் “அண்ணா நான் போட்டுவாறன்” என்று பாசமாகக் கூறிவிட்டுச் சென்றாள். அன்று, அவள் திரும்பி வராமலே வானத்துத் தேவதையாகி விட்டாளா?

இன்று, ‘இவளுடைய பெயரென்ன? இவள் எங்கிருந்து வருகின்றாள்?’ என்று அவன் கேட்டறியவில்லை. இவளைப் பற்றிய விபரங்களை அறிய வேண்டுமென்ற அக்கறையோ ஆவலோ அவனுக்கில்லை. அது அவனுக்கு அவசியமாகப் படவில்லை. அவனுக்கு வேண்டியது அவளுடைய பாசம் பொங்கிப் பிரவகிக்கும் அண்ணா என்ற அழைப்பும் அந்தப் பக்கவாட்டுப் பார்வையும், செல்லச்சிரிப்பும் ஒளி வீச்சும்தான்.

அவள் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவள். அவளுக்கு மூன்று அண்ணன்மார். தகப்பன் ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரி. அவருக்கு ஏராளமான நிலபுலம். பெரிய வசதியான வீடு. பணமும் தாராளமாயுண்டு. ஊரிலும் அவருக்குப் பெரும் செல்வாக்கு, அவரை எதிலும் ஒருவரும் மிஞ்சிவிட முடியாது. எல்லா விஷயங்களுக்கும் அவர் முன்னணியில்தான்.

அவளோ விருப்பு வெறுப்பற்ற ஒருதுறவியாய் வாழ்க்கை யில் பட்டும் படமாலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். அவள் தனக்கு அது வேண்டும். இது வேண்டும் என்று ஒருநாளும் தன் பெற்றோரைக் கேட்டதில்லை. ஆடம்பரமற்ற எளிய, பற்றற்ற ஒரு வாழ்க்கையையே அவள் கைக்கொண்டிருந்தாள்.

அவளுடைய இதயத்தில் சோகத்தின் நிழல் படர்ந்திருக்கின்றது.

சில வேளைகளில் அவள் தன்னிடையே தோன்றும் தர்மாவேச உணர்ச்சிகளுக்கு ஆளாகித் தன்னையே இழந்து விடுகின்றாள்.

“அப்பா, நேற்று நீங்கள் கூட்டத்திலை விளாசித் தள்ளினி யளாமே?”

அப்பொழுதுதான் வெளியேயிருந்து வந்த தந்தையைக் கேட்கின்றாள்.

“ஆர் சொன்னது மோனை? எப்படியிருந்ததாம் என்ர பேச்சு?” ஆவலுடன் கேட்கின்றார்.

“பேச்சு மிச்சம் உச்சமாய் தானிருந்தாம் ஆனால்…”

“என்ன? என்ன ஆனால்………”

“நாட்டைக் காக்கிறதுக்கு வீட்டுக்கு ஒரு பிள்ளையை விடும்படி கேட்டியளாமே?”

“ஓ, அதிலை என்ன தப்பு?”

“என்னப்பா உங்கட மூண்டு பிள்ளையளையும் வெளி நாட்டுக்கு அனுப்பிப் போட்டமெண்ட துணிவிலைதானே மற்றவையின்ரை பிள்ளையளை விடச் சொல்லி உசாராய்க் கேக்கிறியள், இது நியாயமே?”

“இதிலை நியாயம் அநியாயம் எண்ட பேச்சுக்கே இடமில்லை. இது போர்க்கலச் சூழ்நிலை. வைச்சிருக்கிறவை தங்கடை பிள்ளையளிலை ஒண்டைத் தரட்டன்.”

“அப்ப நான் போகட்டே அப்பா?” கேலியாகக் கேட்கிறாள்.

“என்ன? நீ போகப் போறியோ? என்ன விசர்க்கதை பேசிறாய்? உன்ரை நிலையென்ன, தராதரமென்ன? உன்னை நான் லண்டனுக்கு அனுப்பி டொக்டருக்குப் படிப்பிக்கிறதுக்குத் திட்டம் போட்டிருக்கிறன். நீ என்னடாவெண்டால்…”

“அப்பா, உங்கடை பிள்ளையள் வெளிநாட்டுக்குப் போய் பாதுகாப்பாய் இருக்கலாம். டொக்கடருக்குப் படிச்சுப் பெரியாளாகலாம். மற்றவையின்ரை பிள்ளையள்தான் படிப்பையும் விட்டுட்டு நாட்டைக் காக்கிறதுக்குப் போக வேண்டும். அவை செத்தாலும் பாதகமில்லலை. அப்படித்தானே? இதுதான் உங்கடை நியாயமோ?”

“உன்ரை அப்பன் என்ன ஒண்டுமேயில்லாத ஏக்கி போக்கியே? என்ரை சொத்தென்ன? சுதந்திரமென்ன? தராதரமென்ன? என்ரை மகள்தானே நீ? மற்றப் பிள்ளையளைப் போலை ஒண்டுமில்லாத எடுபிடியே நீ? உந்த விசர்க் கதையளைக் காதிலை போடாமல் நீ கவனமாய்ப் படி. அப்படியெண்டால்தான் டொக்டராய் வரலாம்”.

அவர் கண்டிப்புடன் கூறுகின்றார்.

“அப்பா நான் டொக்டருக்குப் படிக்கேல்லை. இஞ்சினியராய் வரவும் படிக்கேல்லை. ஒரு சாதாரண ரீச்சராய் வந்தால் போதும். அதுதான் என்ரை விருப்பம். இருந்து பாருங்கோவன் நீங்கள் வீணாய் மனக்கோட்டை கட்டிறியள், கட்சியிலை ஏமாறத்தான் போறியள்.”

அவள் உறுதியாகக் கூறுகின்றாள்.

அவர் அவளைப் பார்த்து திகைத்தபடியே வாயடைத்து நிற்கின்றார்.

“அது மாத்திரமில்லை அப்பா, உங்கடை சொத்தெல்லாம் பழிச் சொத்துக்கள். வட்டிக்கு வட்டி வாங்கிப் பெருக்கின பணம். நம்பிக்கை மோசடி செய்து, எத்தினை பேற்றை காணியளைக் கொண்டிசன் உறுதியெழுதிவிச்சு அந்தக் காணியளை அமத்தி யெடுத்தியள்”.

அவள் ஆத்திரத்தில் குமுறிக் கொண்டிருக்கின்றாள். வேறு எவராவது இப்படி அவருக்கு நெற்றிக்கு நேர் கூறியிருந்தால் அவர்களுடைய நிலை அதோ கதிதான். என்ன செய்வது? அவருடைய ஒரே ஒரு செல்ல மகள்தான் இப்படிக் கூறுகின்றாள். அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

அவர் தனக்குள் தானே குமைந்து குமுறுகின்றார்.

“உங்கடை ஆம்பிளைப் பிள்ளையள் மூண்டும் வெளி நாட்டிலை என்ன செய்யினை? மூத்த மகன் பவுடர் கடத்தி பிடிபட்டுக், கம்பியெண்ணுறார். மற்ற இரண்டாவது செல்லம் லட்சக் கணக்கிலை சீட்டுப் பிடிச்சு மற்றவையின்ரை கா செல்லாத்தையும் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டார். கடைசி மகன் வெளிநாடுகளுக்கு ஆக்களைக் கடத்தி பிடிபட்டு, ‘மாமியார்’ வீட்டுக்கையிருக்கிறார். ஆனால் நீங்கள் இஞ்சை பெரிசாய்க் கதைத்துக் கொண்டு மற்றவயின்ரை தோளிலை ஏறிச் சவாரி விடுகிறியள்.”

அவளுடைய வார்த்தைகள் தீப்பிழம்புகளாய்ச் சுழன்று அவரைச் சாடுகின்றன.

“ஏன், செல்லடியிலை செத்த உங்கடை தம்பியின்ரை பிள்ளையளை என்ன செய்தியள் ? அதுகளைப் பராமரிக்கிற ணெண்டு பொறுப்பெடுத்தியள். பிறகு என்ன செய்யிறியள்? பள்ளிக்கூடத்துக்குப் போகவிடாமல் மறிச்சு அதுகளின்ரை படிப்பைக் குழப்பினியள். பிறகு இரவு பகலாய் அதுகளைக் கொண்டு வீட்டிலையும் தோட்டத்திலையும் மாடு மாதிரி வேலை செய்விக்கிறியள். சரி அப்படியென்டாலும் அதுகளுக்கு ஆனவாகிலை சாப்பாடுதானும் குடுக்கிறியளே? அதுகளுக்கு வேறை சாப்பாடு, எங்களுக்கு வேறை சாப்பாடு. வரியப் பிறப்பு, தீபாவளியெண்டு நல்ல நாள் பெருநாளுக்குத்தானும் ஆனவாகிலை உடுப்புக்களை எடுத்துக் குடுக்கிறியளே? அதுகளுக்கு மலிவான இளக்க உடுப்புக்கள், எங்களுக்கு விலை கூடிய நல்ல உடுப்புகள், இதுக்காகத்தான் நீங்கள் எனக்கு எடுத்துத் தாற உடுப்புக்களை நான் உடுக்க மறுத்துச் சண்டை பிடிக்கிறனான்.”

அவளுக்கு உடலெல்லாம் எரிவது போலிருக்கின்றது. “அப்பா உங்கடை குடும்பமே பழிக்குடும்பம். அந்தப் பழிக் குடும்பத்திலை நான் ஏன் வந்து பிறந்தேனோ?”

அவளுடைய குரல் தளதளக்கின்றது. கண்களில் நீர்த்திரை.

அவர் சடமாய் நிற்கின்றார்.

அவள் விசுக்கென அவ்விடத்தை விட்டகல்கின்றாள்.

“அண்ணா!”

பாசக்குரல் கேட்டு அவன் தலை நிமிர்கின்றது

என்றுமேயில்லாதவாறு அவள் அன்று தனது சைக்கிளி லிருந்து இறங்கிஅவனுக்குக் கிட்ட வந்து தனது பரீட்சைப் பெறுபேற்றுப் பத்திரத்தை அவனிடம் கொடுத்துவிட்டு கம்பீரமாக நிற்கின்றாள்.

அவனுடைய சகோதரியும் அன்றொரு நாள் தனது பரீட்சைப் பெறுபேற்றை அவனிடம் ஒப்படைத்துவிட்டுக் கம்பீரமாக நின்ற காட்சி அவனுடைய மனத் திரையில் நிழலாடுகின்றது.

அவனுடைய மனதில் பொருமல்.

சிறிது நேரக் கலக்கம் அவனுக்கு.

தன் நிலைக்கு வந்த அவன், அவளுடைய பெறுபேற்றைப் பார்த்ததும் வியப்படைகின்றான். முகத்தில் மலர்ச்சி.

“என்ன, எட்டுப் பாடங்களிலும்’ டீ’ எடுத்திருக்கிறாய்! கெட்டிக்காரி. மிச்சம் சந்தோஷம். நீ இப்படி திறமையாய் செய்வாயெண்டு எனக்கு நல்ல நம்பிக்கையிருந்தது.”

அவள் மகிழ்ச்சிப் பெருமிதமாய் அவனைப் பார்க்கின்றாள்,

‘என்னை எப்படிப் பட்டவள் ‘ என்று நினைக்கிறாய், என்பது போலிருந்தது அவளது பார்வையும் நிலையும்.

“சரி இனி என்ன டொக்டருக்குத்தானே படிக்கிற உத்தேசம்?”

வினாவுடன் அவளை நோக்குகின்றான்.

“என்னுடைய அப்பாவும் அப்பிடித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அவர் என்னை லண்டனுக்கு அனுப்பிப் படிப்பிக்கப் போகிறாராம்.

“அட, பிறகென்ன! நல்லதுதானே! பிறகு நாங்களெல்லாம் டொக்டர் அம்மாவுக்குக்கிட்ட வரேலாது”.

கிண்டல் பண்ணுகின்றான் அவன்.

“ஆனா எனக்கு அது விருப்பமில்லை”.

“ஏன் என்னத்துக்கு விருப்பமில்லை? அப்பாவாக்களை விட்டிட்டு லண்டனுக்குப் போக விருப்பமில்லையோ?”

“அதுக்கில்லை, ஒரு சாதாரண ரீச்சராய் வரத்தான் எனக்கு விருப்பம் .”

“இதென்ன வேடிக்கையாயிருக்கு? லண்டனுக்குப் போய் படிக்க ஆர்தான் விரும்பமாட்டினை? அதுவும் டொக்டருக்குப் படிக்க சான்ஸ் கிடைக்குதே.

ரீச்சர் தொழிலைத்தான் நான் விரும்புகிறன். எங்களுக்கு ஒரு ரீச்சர் படிப்பிக்கிறா. என்ன மாதிரி அருமையாய்ப் படிப்பிக்கிறா. எங்கள் எல்லாரையும் தன்ரை சொந்தப் பிள்ளை யள் மாதிரி அன்பாய் நேசமாய் கவனிக்கிறா. அதோடை சரியான அக்கறையாய்ப் படிப்பிக்கிறா. எங்கள் எல்லாருக்கும் அவவிலை உயிர். அவ மாதிரி ரீச்சராய் வரத்தான் நான் ஆசைப்படுகிறன்”

அவன் அவளைப் பேராச்சரியமாய்ப் பார்க்கின்றான்.

“நல்ல எதிர்கால சந்ததியை உருவாக்கிறவை ஆசிரியர் மார்தானே?”

ஆசிரியத் தொழில் புனிதமானது. அது மாத்திரமே? இந்த டொக்டர்மார் எல்லாரையும் படிப்பிச்சு உருவாக்கிறது ஆர்? அது ஆசிரியர்மார்தானே?”

“அடிசக்கையெண்டானாம், அப்பிடி வா வழிக்கு. எங்கடை சனத்திலை எத்தனை உன்னைப் போல நினைக்கினை?” அவன் அவளை வாஞ்சையுடன் பார்த்துக் கேட்கின்றான்.

“இந்த உலகத்தை ஆதிசேடன் என்ற ஒரு பாம்பு தன்ரை தலையிலை சுமந்து கொண்டிருக்கும் எண்டு ஒரு கர்ண பரம்பரைக் கதையுண்டு. அதைப் போலத்தான் டொக்டர்மார் தலையிலைதான் உலகம் இருக்கெண்ட எண்ணம் எங்கடை ஆக்களுக்கு”.

அவன் வியப்புடன் அவளைப் பார்த்தபடியே நிற்கின்றான்..

“ஒரு குழந்தையின்ரை முதலாவது பிறந்த தினக் கொண்டாட்டத்திலண்டு அல்லது அந்தக் குழந்தைக்கு ஏடு துவக்கிற அண்டைக்கே அந்தப் பிள்ளையை டொக்டருக்குப் படிப்பிக்கிறதுக்குத் திட்டம் போட்டிடுவினை எங்கடை ஆக்கள். அதை அடிக்கடி எல்லோருக்கும் சொல்லிப் பெருமைப்படுவினை. இந்த எண்ணத்தை அதாவது இந்த மனப்பான்மையைத் தகர்த்தெறிந்தால்தான் எங்கடை சமூகம் முன்னேறும்.” கொதிப்புடன் கூறுகின்றாள் அவள்.

“ஏன் அப்படிச் சொல்லுறாய்.?”

ஒன்றும் புரியாமலே அவன் கேட்கின்றான். “இவையள் எல்லாம் ஆற்றை காசிலை படிக்கினை. “அவை தங்கடை காசிலைதானே படிக்கினை.

“மண்ணாங்கட்டி, நாங்கள் எல்லோரும் சனங்களின்ரை வரிப்பணத்திலதான் படிக்கிறம். இது எத்தனை பேருக்குத் தெரியும்?”

“அதுக்கென்ன ?”

“அவை படிக்கட்டும். நல்லாய்ப் படிக்கட்டும். அது நாட்டுக் கும் நல்லதுதான். ஆனால் இந்த டொக்டர்மார் இப்ப என்ன செய்யினை?”

“ஏன் என்ன செய்யினை?”

“இந்தப் பயங்கரமான யுத்த காலத்திலை சனங்கள் எல்லாம் செல்லடியிைைலயும் குண்டு வீச்சிலையும் காயப்பட்டு செத்துக் கொண்டிருக்குது. ஆனால் சனங்களின்ரை வரிப் பணத்திலை படிச்ச டொக்டர்மாரிலை கனபேர் என்ன செய்தவை? கொஞ்சப் பேரைத் தவிர மற்றெல்லா டொக்டர் மாரும் இஞ்சை ஆயிரக்கணக்கில மக்கள் செத்துக் கொண்டி ருக்கிற நேரத்தில் வெளிநாடுகளுக்கு ஓடித் துலைஞ்சிட்டினை. ளாலை அவையளாலை எங்களுக்கும் எங்கடைநாட்டுக்கும் என்ன பிரயோசனம். ஆனால் இஞ்சை கொஞ்ச டொக்டர்மார் நிண்டு சரியான கஷ்டங்களுக்கையும் சனங்களுக்கு சேவை செய்து எத்தனையோ பேற்றை உயிரைக் காப்பாத்தினை. உண்மை யிலை இந்த டொக்டர்மார்தான் மனிதத் தெய்வங்கள். “அதுக்கு எங்களாலை என்ன செய்யேலும்?” இயாலாமையை வெளியிடுகின்றன அவனுடைய வார்த்தைகள்.

“அதனாலைதான் நான் சொல்லிறன், எங்கடை ஆக்க ளின்ரை இந்த மனப்பான்மையை உடைத்தெறிய வேண்டு மெண்டு”.

அவள் கொதித்துக் குமுறிக் கொண்டு கூறுகின்றாள். “பிள்ளை உனக்கு வயதுக்கு மிஞ்சின புத்தி. உன்ரை பேச்சும் அப்பிடித்தானிருக்கு. ஆனால் எனக்கு உன்ரை கதையளைக் கேக்கேக்கை ஏதோ ஒரு வித பயமாய்க்கிடக்கு மோனை.

“இதிலை பயப்பிட என்ன கிடக்கு. எங்கடை ஆக்களின்ரை மனப்பான்மையைப் பற்றித்தானே நான் சொன்னன். சரி இப்ப என்ன வாறது வரட்டும் பாப்பம்.”

சவால் விடுவதுபோல அவள் கூறுகின்றாள்.

ஏதோ நினைத்தவள் போல அவள் திடீரெனத் தனது சைக்கிளை எடுக்கின்றாள்.

“அண்ணைா! நான் போட்டு வாறன்”.

“சரி ரீச்சர் போட்டு வாங்கோ!”

குறும்புத்தனமாகச் சிரித்தபடியே அவன் கூறுகின்றான். அவள் கலகலவெனக் சிரித்தபடியே பைசிக்களில் ஏறுகின்றாள், அவர்கள் இருவருக்கும் என்றுமேயில்லாத பூரிப்பு இன்று! திடீரென பயங்கர இரைச்சல்.

“அது என்ன இரைச்சல்?”

இருவரும் உஷாரடைந்து அவதானிக்கின்றனர் இரும்புக் கழுகுகளின் பயங்கர இரைச்சல்

அந்த இரைச்சல் எங்கோ தூரத்தில் கேட்கின்றது. அவள் புறப்படுவதற்கு எத்தனிக்கிறாள்.

“பொறு மோனை. கொஞ்சம் பொறுத்துப் பார்த்துப் போகலாம்.”

சிறிது நேரத்தில் அந்த இரைச்சல் சத்தம் அழிந்து மறைகின்றது.

“அண்ணா, நான் போட்டு வாறன் ” தயங்கியபடியே அவள் கூறுகிறாள்.

“சரி மோனை அவதானமாய்ப் போட்டு வா”.

அவன் மனமின்றி விடை கொடுக்கின்றான்.

அவள் செல்ல மனமின்றி செல்கின்றாள்.

சிறிது தூரம் சென்ற அவள் திரும்பிப் பார்த்து, தனது தலையைச் சரித்து அதே பக்கவாட்டுப் பார்வையையும் சிரிப்பொளி வீச்சையும் சிந்தி விட்டுச் சென்றுவிட்டாள்.

அவனுடைய தங்கையும் ஒருநாள் “அண்ணா நான் போட்டு வாறன்” என்று கூறி, இதே பக்கவாட்டுப் பார்வையையும், அதே சிரிப்பொளிவீச்சையும் சிந்திவிட்டுத்தான் சென்றாள். அவள் இன்று வரை திரும்பி வரவேயில்லை.

“அவள் களத்தில் பலியானாள்” என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் அதை நம்பவில்லை. ஏனென்றால் அவளுடைய உடலை அவர்கள் காணவில்லை.

என்றாவது ஒருநாள் அவள் திரும்பி வருவாள் என்று அவளுடைய பெற்றோர்கள் எதிர்பார்த்துக் கொண்டுதானிருக் கின்றார்கள்.

ஆனால் அவளுடைய அண்ணன்.

அவளுக்குப் பதிலாக மற்றொரு தங்கை கிடைத்து விட்டாள் அவனுக்கு. அவளுடைய வருகைக்குப்பின் அவனது வாழ்வில் மீண்டும் வசந்தம் வந்தது.

அதே தங்கையின் தரிசனத்திற்காகத்தான் அவனுடைய இதயம் இப்போ ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கின்றது.

அவனுடைய உள்ளத்தில் ஒருவித பதட்டம். நேற்றை யிலிருந்தே இந்தப் பதட்டம் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டேயிருக்கின்றது.

நேற்றைய அந்தக் கனத்த இரவில். அந்த இரவின் மௌனச் சுமை அவனை அழுத்திக் கொண்டேயிருக்கின்றது. அந்த ஆத்ம வேதனையை அவனால் தாங்கிக்கொள்ள முடியாமலேயிருக்கின்றது.

நேரம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அவனுடைய கண்களில் அந்த மரம் தட்டுப்படுகின்றது.

அன்று கிளைத்துச் சடைத்து விஸ்வரூபமாய் நின்ற அந்த மரம் இன்று பட்டுப்போய் கொப்புகளும் கிளைகளும் காய்ந்து முறிந்து சிதைந்து மொட்டை மரமாய் நிற்கின்றது. தப்பி யொட்டியிருந்த பட்டுப் போன ஒரேயொரு உச்சாணிக் கொப்பின் தலைப்பில் பறவையொன்று தன்னந் தனியனாயிருந்து சோகக் குரலெழுப்பிக்கொண்டிருக்கின்றது.

அந்த பட்ட மரத்தின் அடியில் அடுக்கி வைக்கப் பட்டிருக் கின்ற மண் மூட்டைகள் கிழிந்து சிதைந்து தேடுவாரற்றுக் கிடக்கின்றன.

நேரம் எட்டரை மணிக்கு மேலாகிவிட்டது.

அவள் இன்னும் வரவில்லை.

பட்டுப் போன மரத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவனுடைய மனதில் சோகச் சுமை.

அவனுடைய இதயம் அவளுடைய தரிசனத்திற்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றது.

அவனுடைய நண்பன் வருகின்றான். அவனுடைய கையில் அன்றைய செய்திப்பத்திரிகை. அவனுடைய முகத்திலும் கவலை படர்ந்திருக்கின்றது. அவன் பத்திரிகையை அவனிடம் தயங்கியபடியே கொடுக்கின்றான்.

நண்பனிடமிருந்து வாங்கிய பத்திரிகையை அவன் வேண்டா வெறுப்புடன் திறக்கின்றான்.

பத்திரிகையின் முன்பக்க வலதுபுற கீழ் மூலையில் தடித்த கறுப்புக் கோடுகளால் கட்டப்பட்ட பெட்டிக்குள் அவளுடைய படம்!

அவனுக்குப் பேரதிர்ச்சி!

அவன் அவளுடைய வீட்டிற்கு விரைகின்றான். அங்கு ஊரே கூடி நிற்கின்றது. எல்லோருடைய முகங்களிலும் சோகம்! வெறுப்பு! கோபாவேசம்!

ஐந்து பிள்ளைகளின் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டி ருக்கின்றன.

அவளுடைய அந்தக் குழந்தைத்தனமான முகம் முதலில் அவனுடைய கண்களில் படுகின்றது.

‘ஐயோ! என்ரை தங்கச்சி உனக்கும் இந்த முடிவா?” அவனுடைய இதயம் ஓலமிடுகின்றது.

வரிசையாக வைக்கப்பட்டிருக்கின்ற அந்த ஐந்து பிள்ளை களின் உடல்களைப் பார்த்தபடியே நிற்கின்றான் அவன்.

அவர்களுடைய முகங்களை மாத்திரம்தான் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

அந்தக் குழந்தைத் தனமான பிஞ்சு முகங்களைப் பார்த்த படியே நிற்கின்றான்.

நாங்கள் வாழ்வதற்காகவே பிறந்தோம். ஆனால் இது காலவரை நாங்கள் வாழ்வின் துன்ப துயரங்களைத் தவிர வேறு எதைத்தான் அனுபவித்தோம்? வாழ்வின் வசந்த காலத்தை எட்டிப்பிடிக்க ஏங்கித் துடித்துக் கொண்டிருந்த எங்கள் வாழ்வின் எதிர்கால இன்பங்கள் அனைத்தும் தட்டிப்பறிக்கப்பட்டு, நாம் வஞ்சிக்கப்பட்டு எமது வாழ்வவே அரைகுறையில் அழிக்கப்பட்டு விட்டதே!’ என்று அந்தக் குழந்தைத் தனமான பிஞ்சு முகங்கள் கூறுவது போல அவனுக்குத் தோன்றுகின்றது.

‘ஐயோ! இந்தக் கொலைகளுக்கும் அழிப்புகளுக்கும் முடிவேயில்லையா? அவனுடைய உள்ளம் குமுறுகின்றது.

“நண்பனே, போர் என்ற போர்வையில் இன்று மக்களுடையே சொத்துக்கள் பல தரப்பினராலும் அபகரிக்கப்படுவதுடன் அழிக்கப்படுகின்றன. அதுமாத்திரமல்ல, ஆயிர மாயிரமாக மக்கள் படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.”

அவனுடைய நண்பன் கூறியது அவனுடைய மனத் தடத்தில் தோன்றுகின்றது.

“இந்த அழிப்புகளும் கொடூரக் கொலைகளும் எப்பொழுது தான் முடிவுக்கு வரும்?’ என்று அவன் கேட்கின்றான்.

“நண்பா, எமது நாட்டில் இன்று நரபலி எடுக்கிற நவீன நரகாசுரர்கள் உருவாகிவிட்டார்கள். இந்தப் பிணம் தின்னிக் கழுகுகளை என்று அழித்தொழிக்கிறோமோ அன்று தான் இந்தப் பலியெடுப்பு முடிவடையும்.

அவனுடைய நண்பன் கூறியது அவனுடைய மனத்திரையில் ஓடுகின்றது.

“நேரமாகின்றது, ஏன் சுணங்குவான், தூக்குவம்”.

அந்த ஊர் பெரியவரின் வார்த்தைகள் அவனைச் சுய உணர்விற்குக் கொண்டு வருகின்றன.

ஊரே அழுது புலம்பி ஓலமிடுகின்றது!

இந்த மரண ஓலம் வான் முகில்களைப் பிளக்கின்றன.

சோக அலைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.

இறுதி யாத்திரை ஆரம்பம்.

“பாழாய்ப் போவாங்கள்! பூவெண்டும் பிஞ் செண்டும் பாராமல் எல்லாத்தையும் கூடடி அள்ளிக்கொண்டு போட்டாங்களே! இந்த பாடேலை போவங்கள் எப்பதான் அழியப் போறாங்களோ?”

ஒரு முதியவர் குமுறிக் கொண்டே கூறுகின்றார்.

“இந்த நரபலி எடுக்கிற யுத்த வெறிக்கு நாங்கள் முடிவு கட்டத்தான் போறம். இது நிச்சயம் நடக்கும். கெதியாய் நடக்கும்.

அவர்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டிய அவன் உறுதியான ஒரு முடிவுக்கு வந்தவனாய் அவ்விடத்தை விட்டகல்கின்றான்.

சென்று கொண்டிருக்கின்ற அவன் ஏக சித்தனாய் வானத்தை அண்ணாந்து பார்க்கின்றான்.

நீலவானத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்ற இரண்டு வெண்புறாக்கள் தென் திசையை நோக்கிச் சென்று மறைகின்றன.

வானத்துத் தேவதைகளாகி விட்ட செல்லச் சிரிப்பொளி வீச்சைச் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற இரண்டு குழந்தைத் தனமான எழில் முகங்கள் அவன்கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

“அண்ணா!” என்ற ஜீவநாதம் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது.

– 1996, வேட்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *