கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2023
பார்வையிட்டோர்: 9,421 
 
 

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம்-7

முன்கதை

திரைப்பட நடிகன் ராஜீவ் முரண்பாடான குணாதிசயங்களைக் கொண்டவன். சொந்த இன்பங்களுக்காகவும் ஆசை நாயகிகளுக்காகயும் பணத்தை நீர் போல் வாரி இறைப்பவன். ஆனால் அதேசமயத்தில் எத்தனை எந்தனைமோ நல்ல காரியங்களுக்கும் அனாதை விடுதிகளுக்கும் வாரி வழங்கும் நல்லிதயமும் படைத்தவன். ராஜீவின் அந்தரங்கக் காரியதரிசி சுரேஷ். அவனது மனமறித்து நடந்து கொள்ளும் உதவியாளன்.

அன்று ராஜீவ் மேக்கப்பை முடித்துக் கொண்டு வெளி வந்த போது காரியதரிசி சுரேஷ், ராஜீவைக் காணக் கல்லூரிப் பெண்கள் சிலர் வந்திருக்கும் செய்தியை அறிவித்தான், உள்ளுக்குள் ராஜீவ் கசப்புணர்ச்சி எய்தினாலும் அதைக்காட்டிக் கொள்ளாமல் அந்தப் பெண்களைச் சந்திக்க வந்தான். அந்தக் கல்லூரிப் பெண்களில் உஷா என்னும் கல்லூரி மாணவி அவன் மனத்தை வெகுவாக ஈர்த்தாள். உஷாவின் வேண்டுகோளுக்காகவே கல்லூரி ஆண்டு விழாவுக்கு ராஜீவ் தலைமை வகிக்க ஒப்புக் கொண்டான். கல்லூரி அவனது வரவால் அமர்க்களப்பட்டது. கண்டிப்புக்கும் பேர் போன பிரின்ஸ்பால் மிஸ் மைத்ரேயி அன்று கலகலப்பாகக் காணப்பட்டாள். ஆண்டு விழாவில் ராஜீவின் கண்கள் உஷாவின் பேரழகைத் தரிசிக்கவே பர பரத்தன. சாருந்தலம் நாடகத்தில் உஷா வந்து ராஜீவை மெய் சிலிர்க்க வைத்தாள். கல்லூரியை விட்டுச் செல்லும் போது ராஜீவ் தன் காரியதரிசி சுரேஷிடம் நான்கு வரிகளை ஒரு தாளில் கிறுக்கித்தந்து விட்டுப் போனான். சுரேஷ் அதை உஷாவிடம் சேர்ப்பிக்க உஷா திக்கு முக்காடிப் போனாள். அந்தக் கடிதத்தின் விளைவான டெலிபோன் காலுக்காகக் காத்திருந்தான் ராஜீவ், தாங்க முடியாத பொறுமையின்மைமோடு தவித்தான், கடைசியில் உஷாவின் இனிய குரல் டெலிபோனில் ஒலித்த போது, ‘உஷா உன்னை நான் தனியா சந்தித்துப் பேசணும்!’ என்று கேட்டுக் கொண்டான். உஷாவிட மிருந்து பதில் வரவில்லை. ‘தானாகக் கனியவேண்டிய மலரை அச்சுறுத்தித் துரத்தி விட்டோமோ’ என்று தவித்தான் ராஜீவ். இனிமேலே தொடர்ந்து படியுங்கள்.


Love is a power too strong to be overcome
by anything but fiight
-Cervantes

உஷா ஃபோனை வைத்துவிட்டுப் போய் விட்டாள் என்று ராஜீவ் நினைக்க ஆரம்பித்து விட்டான், “உஷா?” என்று மறுபடியும் அவள் பெயரைச் சொன்னான்.

ஒரு விநாடி தாமதித்து “இங்கேதான் இருக்கேன்” என்றாள் உஷா, ராஜீவுக்கு அப்போதுதான் உயிர் திரும்பின மாதிரி இருந்தது.

”உஷா! நான் சொன்னது கேட்டதா?”

“உம்”

”என்ன ‘உ.ம்’?”

“கேட்டது. ”

“உன் பதில்?”

”நான்… வந்து… என்ன சொல்றதுன்னு எனக்கு புரியல்லை” என்றாள் உஷா தயங்கியவாறு

”உஷா!” அவன் குரல் அழுத்தமாக ஒலித்தது.

“உஷா! உனக்கு என்னைப் பார்க்கணும்னு தோன்றவில்லையா? என்னைச் சந்தித்துப் பேச உனக்கு ஆசை இல்லையா?”

அவன் கேள்வி அவள் ஆசைகளைத் தூண்டி விட்டு அவளை வாட்டி எடுத்து விட்டது. அவன் குரல் அவளை வசீகரித்தது, உருக வைத்தது. அடக்கிக் கொள்ள முடியாத ஒரு சக்தி வாய்ந்த ஏக்கம் அவளுக்குள் தோன்றியது. ஆனால் அவன் கேள்விக்கு அவளால் உடனே பதில் அளிக்க முடியவில்லை, என்ன சொல்வது, எப்படிச் சொல் வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில்- ”உஷா! பதில் சொல்லு!” என்று ராஜீவ் மீண்டும் வற்புறுத்தினான்.

திணறிப்போய் உஷா பேச முயன்றபோது உணர்ச்சிப் பெருக்கு அவள் தொண்டையை அடைத்தது.

”உஷா! சொல்லு உஷா!”

“ஆ…ஆ…ஆமாம்”

“என்ன ஆமாம்?”

“எ.. எனக்கு…உ… உங்களை.. பா… பா…. பார்க்கணுன்னு ஆசையா இருக்கு.”

போர்க் களத்தில் ஆயிரம் எதிரிகளை வீழ்த்திய வெற்றி உணர்வும் உற்சாகமும் ராஜீவுக்கு ஏற்பட்டது. ”உன்னை எப்படிப் பார்க்கிறது? ஹாஸ்டலை விட்டு உன்னாலே வெளியே வர முடியுமா?” என்று கேட்டான்.

This image has an empty alt attribute; its file name is %E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D6.png

பயத்தில் உஷாவுடைய கால்கள் நடுங்கத் தொடங்கி விட்டன. இம்மாதிரியான சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டிய அவசியம் இதுவரை அவளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. அவள் மனத்துக்குள் ஒரே கலவரம். ”உஷா! நீ என்ன காரியம் செய்யத் துணிந்திருக்கிறாய்? வேண்டாம்! இதெல்லாம் உனக்கு வேண்டாம். இந்தப் பேச்சை இத்தோடு நிறுத்திவிடு! ஃபோளை வைத்துவிட்டு ஓடிவிடு!” ஆனால் – மனச்சாட்சி கூறிய அறிவுரையைப் பின்பற்ற அவளால் முடியவில்லையே?

வேறு யாரோ பேசுவதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதைப் போல் தன் குரல் உரக்க பதில் கூறியதைக் கேட்டுத் தானே வியந்தாள். ”அது ரொம்பக் கஷ்டம். இங்கே எத்தனையோ ரூல்கள் போட்டு வைச்சிருக்காங்க” என்றாள் உஷா.

கடவுளே! அவள்தான் அப்படிப் பதில் சொன்னாளா? அப்படியானால், அதன் பொருள் முடிந்தால் ஹாஸ்டலை விட்டு வெளியே வந்து ராஜீவைச் சந்திக்க அவள் தயாராக இருக்கிறாள் என்பதுதானே? “உ.ஷா! நீயா இப்படிப் பேசுகிறாய்? என்ன ஆகிவிட்டது உனக்கு? போ! இங்கிருந்து ஓடிவிடு!”

ஆனால் அதைச் செய்ய அவளால் இயலவில்லை, அவன் குரல் அவளை முழுமையாக மயக்கி, சுண்டி இழுத்தது. அந்தக் கம்பீரமான குரலைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அவனோடு பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.

விட்டில் பூச்சி நெருப்பை அணுகினால் ஆபத்து என்று தெரிந்தும், வலியப் போய் அதில் விழுவதில்லையா? நெருப்பில் தன்னை மாய்த்துக் கொள்ளுமாறு யார் அதனைக் கட்டாயப்படுத்துகிறார்கள்?

“ஏதாவது ஒரு வேளையில் உன்னால் வெளியே வரமுடியாதா?” என்று ராஜீவ் கேட்டுக் கொண்டிருந்தான்.

”சனி, ஞாயிறு அன்றுதான் வெளியே போக அனுமதி தருவாங்க. ஆனால், அந்த நாட்கள்கூட, சாயங்காலம் ஆறு மணிக்குள்ளே ஹாஸ்டலுக்குத் திரும்பிடணும்” என்றாள் உஷா.

“உஷா! உண்மையாகவே உனக்கு இத்தனை நெஞ்சழுத்தமா? கள்ளக் காதல் சந்திப்புக்கு நீ அங்கீகாரம் தந்துவிட்டாயா?” என்று அவள் மனச்சாட்சி அவளைக் கண்டிக்க முயன்றது. உஷா அதனைச் சட்டை செய்ய மறுத்தாள்.

“உஷா, இன்னிக்குச் சனிக்கிழமை ஆச்சே! இன்னிக்கு உன்னாலே வர முடியுமா?” என்று ஆர்வத்தோடு ராஜீவ் கேட்டான்.

உஷா திடுக்கிட்டாள். ”ஓ நோ! அது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இங்கே எத்தனையோ கேள்விகள் கேட்பாங்களே? யார் கூடப் போகப் போறேன், எங்கே போகப் போறேன் – எல்லாத்தையும் சொல்லி ஆகணும். நான் இங்கே என்னத்தைச் சொல்வேன்?”

“உஷா, உஷா!.சொன்னால் கேளு! இப்போது கூட ஒன்றும் குடி மூழ்கிப் போய்விடவில்லை! இப்போது நீ மனம் வைத்தால் இதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்”. அவள் மனச்சாட்சி இறுதி முறையாக அவளை எச்சரிக்கை செய்ய முயன்றது. பாவம் – அதனுடைய வீணான அலட்டலை உஷா பொருட்படுத்தவில்லை.

வேடன் மானைப் பிடிக்க வலையை விரித்துத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தான், ஆனால் இந்த மானோ அவனுக்குச் சிரமம் ஏதும் தராமல், தானாகவே விரைந்து, வலியப் போய் வலைக்குள் விழுவதற்காகத் துடித்துக் கொண்டு அல்லவா இருந்தது!

உஷாவைச் சந்திக்க ஒரு வழியைக் கண்டு பிடிக்க ராஜீவ் தனது மூளையைப் புரட்டினான்.

“சாதாரணமா சனி, ஞாயிறு அன்று நீ எங்கே போவே?” என்று கேட்டான்.

”சினிமாவுக்கு, இல்லேன்ன ஷாப்பிங், இல்லை. ஃபிரண்ட் வீட்டுக்கு.”

“மெட்ராஸ்லே உனக்கு ரொம்ப நெருங் கிய ஃபிரண்ட்ஸ் இருக்காங்களா?”

”ஓ. பூர்ணிமான்னு ஒருத்தி இருக்கா. அவளுடைய அப்பா அம்மாவுக்கு எங்க அம்மாவை நல்லாத் தெரியும். அடிக்கடி அவங்க வீட்டுக்குப் போவேன்”

“சரி. இந்தப் பூர்ணிமாவைப் பார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டு நீ வந்துவிட முடியாதா?”

உஷா சற்றுத் தயங்கினாள். ‘‘உம்… முடியும்… ஆனா.. அதுக்கு பூர்ணிமாவோட ஒத்துழைப்புத் தேவைப்படும். அப்படீன்னா, நான் அவ கிட்ட உண்மையைச் சொல்லி ஆகணும். வேறே வழியே இல்லை” என்றாள்.

“பூர்ணிமாவை நம்பலாமா? இதைப் பத்தி யார் கிட்டயாவது அவள் பேசினால்? எனக்குப் பரவாயில்லை, உனக்காகத்தான் பயப்படறேன்” என்றான் ராஜீவ்.

”இல்லை, இல்லை, பூர்ணிமாவை நிச்சயம் நம்பலாம். ஒரு ரகரியத்தை அவள்கிட்ட ஒப்படைச்சு வெளியிடக்கூடாதுன்னு சொல்லி வச்சுட்டா. உயிரே போனாலும் அதைப் பத்திப் பேச மாட்டாள். ஆனால்…”

”ஆனால்….?”

“சாதாரணமா பூர்ணிமா எனக்காக எதையும் செய்யத் தயங்க மாட்டாள். அவ என் பெஸ்ட் ஃபிரண்ட். ஆனால், இந்த விஷயத்தை அவகிட்டச் சொன்னா, இதை எப்படி எடுத்துக்குவாளோ தெரியாது. அது மட்டுமில்லை. அவளுடைய அப்பா- அம்மாவுக்கு என்னைப் பத்தி துளி சந்தேகம் ஏற்பட்டாலும் உடனே எங்கம்மாவுக்குத் தகவல் கொடுத்துடுவாங்க. அதான் பயமா இருக்கு” என்றாள் உஷா.

“உஷா, ப்ளீஸ்! எப்படியாவது, நான் உன்னைத் தனியா சந்தித்தே ஆகணும்!” என்று ராஜிவ் மன்றாடி கேட்டான். அவனுடைய கரகரத்த குரலில் புதைத்து இடந்த ஆசையின் வேகம் உஷாவை மெய் சிலிர்க்க வைத்தது. ஆழமான ஓர் ஏக்கம் அவளைத் தனது பிடியில் பற்றிக் கொள்ளவே, அவள் உடல் பலவீனம் அடைந்தது போல் மயக்கம் வருவது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. அவள் கால்கள் தள்ளாடின. நிமிர்ந்து நிற்க முடியாமல் டெலிபோன் பூத் சுவரின் மீது சாய்ந்து அதன் ஆதரவை நாடினாள்.

மெல்லிய குரலில் ”எனக்கும் அப்படித் தான் இருக்கு…..!” என்றாள். அவள் தொண்டையும் சுரசுரத்துப் போயிருந்தது.

”நாளைக்கு?” என்று வற்புறுத்தினான் ராஜீவ்.

“பூர்ணிமாகிட்டே இன்னிக்குப் பேசறேன், அவள் எனக்கு உதவி செய்யச் சம்மதிச்சா, நான் மறுபடியும் உங்களுக்குப் போன் பண்றேன். அவ மறுத்துட்டா, என்னாலே ஒண்ணும் பண்ண முடியாது. உங்களை நான் சந்திக்கிறதுக்கு வேறே வழியே இல்லை” என்றாள் உஷா.

”உஷா, ப்ளீஸ், இப்பவே உன் ஃபிரண்டைக் கேட்டுப் பாரு. எப்படியாவது அவளை கன்வின்ஸ் பண்ணு. நாளைக்காவது நான் உன்னைப் பார்க்கணும்!” என்று கெஞ்சினான் ராஜீவ்.

“சரி, அவளோட பேசிட்டு, நான் மறுபடியும் ஃபோன் பண்றேன்.”

“எப்போ போன் பண்ணுவே?” ராஜீவுடைய பழைய ஆசை நாயகிகள் இதைக் கேட்டிருக்க வேண்டுமே! இப்படி கெஞ்சுவது ராஜீவ்தானா என்று ஸ்தம்பித்துப் போயிருப்பார்கள். ‘எப்போக் கூப்பிடுவீங்க? எப்போ ஃபோன் பண்ணுவீங்க? உங்களை எப்போ பார்க்கிறது?’ என்று வழக்கமாக அவர்கள் அல்லவா அவனைக் கெஞ்சிக் கொண்டு கிடப்பார்கள்?

“நீங்க எப்போ வீட்டிலே இருப்பீங்க?” என்று திருப்பிக் கேட்டாள் உஷா.

“நீ எத்தரை மணிக்கு ஃபோன் பண்ணுவேன்னு சொல்லு, அந்த டயத்துக்கு கரெக்டா ஃபோன் பக்கத்திலே ஆஜர் ஆயிடுவேன்!” என்றான் ராஜீவ்.

உஷா சிரித்தாள்.

“நிஜமாவா?”

“நிஜமா”

“சாயங்காலம் ஆறு மணிக்கு ஃபோன் பண்ணா வீட்டிலே இருப்பீங்களா?”

“நான்தான் ஏற்கனவே சொன்னேனே உஷா, நான் எங்கே இருந்தாலும் ஓடிவந்து மணி ஆறு அடிக்கும்போது ‘டாண்’ன்னு இங்கே வந்து நிற்பேன்.”

உஷா மீண்டும் கலகலவென்று சிரித்தாள். இதெல்லாம் வெறும் முகஸ்துதியோ, இல்லை உண்மையோ – எதுவாக இருந்தாலும் என்ன? உஷாவைப் பொறுத்த வரையில் தேனாகத் தித்திக்கும் இந்த இனிய பேச்சு, சர்க்கரைப் பாகு போல் இனிக்கும் இந்தக் காதல் வார்த்தைகள் எல்லாமே அவளுக்குப் புதிய, ரம்மியமான அனுபவங்கள்தானே?

“சரி. ஆறு மணிக்கு ஃபோன் பண்றேன்.”

”அதுக்காவே காத்துக்கிட்டு இருப்பேன்!”

“பை!”

“பை உஷா. மை ஸ்வீட் உஷா!”

”மை ஸ்வீட் உஷா!” “மை ஸ்வீட் உஷா!” போன் தொடர்பைத் துண்டித்த பிறகும் இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் காதில் இன்ப நாதமாய் ஒலித்துக் கொண்டே இருந்தன.

எப்படியாவது பூர்ணிமாவைத் தனக்கு உதவி செய்யுமாறு ஒப்ப வைக்க வேண்டும்! அவசரமாகப் பூர்ணிமாவுடைய வீட்டு நம்பரை உஷா சுழற்ற ஆர்ம்பித்தாள்

அத்தியாயம்-8

I have spread my dreams under your feet;
Tread softly because you tread on mydreams
-William Butler Yeats 1865-1939

உஷாவோடு பேசிய பிறகு ராஜீவ் ஸ்டூடியோவுக்குப் புறப்பட்டுப் போய்விட்டான். அன்று முழுவதும் அவன் கவனம் வேலையில் இல்லை. ராஜீவ் அபார ஞாபக சக்தியுடையவன். சாதாரணமாக எவ்வளவு நீளமான வசனம் கொடுத்தாலும் ஒரு வார்த்தை கூடப் பிசகாமல் ஒரே ‘டேக்’கில் சரியாகப் பேசி முடிப்பவன். இன்று, ஓரிரு வாக்கியங்கள் மட்டுமே கொண்ட சுருக்கமான வசனங்களைக் கூட ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறினான்.

இன்று படம் பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்த காட்சியில் ஒரு புதிய நடிகை அவனுக்குத் தங்கையாக நடித்துக் கொண்டிருந்தாள், அவளுக்கு வயது 19, 20க்குள் இருக்கும். இதுவே அவள் தோன்றும் முதல் தமிழ்ப் படம், இதுவரை மலையாள, கன்னடத் திரைப் படங்களில் சில்லறைப் பாத்திரங்களில் தோன்றியிருந்தாள். அவளைப் பொறுத்த வரையில் ஒரு வண்ணத் தமிழ்ப் படத்தில், அதிலும் ராஜீவ்குமாரோடு நடிக்கும் சந்தர்ப்பம் என்றால், இதுவே அவளது திரை வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமையப் போவதாகக் கனவுகள் கண்டு கொண்டிருந்தாள்.

This image has an empty alt attribute; its file name is %E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D7.png

அவள் பெயர் மாலா. கூடவே அவளுடைய தாயும் இருந்தாள். இருவரும் ராஜீவைப்பு பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தார்கள். ராஜீவினுடைய கண்ணியமான இமேஜ் எல்லாம் வெளி உலகத்தோடு சரி, சினிமா வட்டாரத்தில் எந்த ரகசியமும் கிடையாது. இருக்கவும் முடியாது, அவனுடைய சபல புத்தி, பழக்க வழக்கங்கள், இங்கே பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

இந்தத் தாயும் மகளும் படப்பிடிப்புக்கு வரும் முன்பே பேசிக் கொண்டிருந்தார்கள். எப்படியாவது ராஜீவுடைய கவனத்தை ஈர்த்து, அவனை வலைக்குள்ளே போட்டுக் கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று; அவனோடு உறவு ஏற்பட்டாலும் அதிக காலம் நீடிக்காது என்பது அவர்களுக்குத் தெரியும், அதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை, விரும்பவும் இல்லை. இந்தப் பெண்ணை அவனுக்குப் பிடித்துவிட்டால் குறைந்தபட்சம் நான்கு ஐந்து படங்களிலாவது அவளைச் சிபாரிசு செய்ய மாட்டானா! அது மட்டும் நடந்து விட்டால், திரை உலகில் நன்றாகக் கால் ஊன்றி விடலாமே. சில நல்ல வேடங்களுக்கு ராஜீவ் இவரைச் சிபாரிசு செய்கிறார் என்ற விஷயம் தெரிந்தவுடனேயே மற்ற எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவளை ஒப்பந்தம் செய்ய ஆட்டு மந்தை மாதிரி போட்டி போட்டுக் கொண்டு வர மாட்டார்கள்? அதற்குப் பிறகு ராஜீவுடைய தயவு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? வேறு எத்தனையோ படங்கள் கிடைக்கும். பணம் வந்து குவியும். அவள் பெரிய நட்சத்திரம் ஆகிவிடலாம்!

இப்படி எண்ணற்ற ஆசைக் கனவுகளோடு வந்திருந்த தாய்க்கும் மகளுக்கும் பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சியது. ராஜீவ் செட் டுக்குள் பிரவேசித்த உடன், தாய் மகளைத் தூண்டி விட்டாள். “போய் வணக்கம் சொல்லுடீ!”

ராஜீவுக்கு முன்னால் போய் நின்று “வணக்கம் அண்ணே!” என்றாள் மாலா.

கடுப்போடு ராஜீவ் அவளை முறைத்துப் பார்த்தான், பாவம் மாலா! அவளிடம் ராஜீவைப் பற்றி இத்தனை விவரங்கள் கூறிய நண்பர்கள், “அண்ணே” என்று அழைத்தால் அவனுக்கு அறவே பிடிக்காது என்பதைச் சொல்ல மறந்து விட்டனர்.

வேண்டா வெறுப்புடன் ”வணக்கம்” என்று கூறிவிட்டு ராஜீவ் ஷாட்டுக்குப் போய் விட்டான்.

ஷாட் முடிந்ததும், ராஜீவ் செட்டில் ஒரு புறமாகத் தனது சொந்த நாற்காலியில், வீட்டிலிருந்து கொண்டு வந்து வைக்கப்பட்ட ஏர்-கூலருக்கு முன்னால் போய் அமர்ந்தான். மாலாவுடைய அம்மா அவளை முழங்கையால் ஒரு குத்துக் குத்தினாள். “போய் அவர் பக்கத்தில் உட்காருடீ! ஏதாவது பேசு!” என்றாள்.

“வேண்டாம்மா. பயமா இருக்கு. வணக்கம் சொன்னபோதே என்னை முறைச்சுப் பார்த்தார்!” என்றாள் மாலா.

“இந்தா, பயம் அது இதுன்னா பல்லே ஒடைப்பேன். போய்ப் பேசுடி போ!” மாலாவை ஒரு தள்ளுத் தள்ளினாள் அம்மா, தயங்கியவாறே மாலா ராஜீவ் அருகில் சென்றாள். அவன் நாற்காலியில் பின்னுக்குச் சாய்ந்து கொண்டபடி கண்களை முடிக் கொண்டிருந்தான். அவன் எண்ணங்களில் உஷா நிறைந்திருந்தாள்.

அவன் பக்கத்தில் ஒரு நாற்காலி இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மாலா அதில் உட்கார்ந்தாள்.

நாற்காலி சற்று நகர்ந்த சத்தம் கேட்கவே ராஜீவ் கண்களைத் திறந்து பார்த்தான். ஸ்ரீ ராமபிரான் சீதாபிராட்டியை நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் சூர்ப்பனகை தோன்றிய மாதிரி அவன் உஷாவைப் பற்றி நினைக்கையில் மாலா அவன் கண்களுக்குச் சூர்ப்பனகையாகக் காட்சி அளித்தாள்.

கோபமாக அவளை விரைத்துப் பார்த்தான். திணறிப் போய் என்ன செய்வுதென்று புரியாமல் மாலா அசடு வழிய “இ… ஹி… ஹி” என்று இளித்தாள், அவள் அங்கே வந்து அமர்ந்ததன் நோக்கம் ராஜீவுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், உஷாவைக் கண்டது முதல் இந்த மாதிரிப் பெண்களிடம் அவனுக்கு இப்பொழுது வெறுப்பே தோன்றிற்று. ”உஷா எங்கே. இது எங்கே? உஷாவைப் பார்த்த கண்களோடு இந்த மாதிரி ஜென்மங்களைப் பார்ப்பதே பாவம்!” என்று நினைத்தான்.

”முத்து!” அஸிஸ்டெண்டை அழைத்தான்.

“சார்?”

“என் நாற்காலியை வெளியே கொண்டு வா. செட்டுக்கு வெளியே உட்காரப் போறேன்” என்று ராஜீவ் எரிச்சல் அடைந்த வகையில் எழுந்து வெளியே போய்விட்டான்.

பாவம், மாலா! அவளுக்கு முகத்தில் அடித்த மாதிரி ஆகிவிட்டது. என்ன செய்வது? அவள் வேளை சரியில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜீவ் உஷாவைச் சந்திப்பதற்கு முன்பாக மாலாவை ராஜீவ் பார்த்திருந்தால், யார் கண்டார்கள். ஒரு வேளை அவள் விதியே வேறு மாதிரி அமைந்திருக்கலாம்! இந்த மினி நாடகத்தைக் கவனித்த செட்டில் உள்ள மற்றவர்கள் எல்லோரும் மாலாவைப் பார்த்து நகைக்க ஆரம்பித்து விட்டனர். ஏமாற்றத்துடன் போய் மறுபடியும் தனது அம்மா பக்கத்தில் உட்கார்ந்தாள். “போம்மா! அப்பவே வேண்டாம்னு சொன்னேன். நீ கேட்கலே. என்ன நடந்தது பார்த்தாயா?”

“பார்த்தேன் டீ. பார்த்தேன். நீ ஒரு மக்கு. அவரை எப்படி நைஸ் பண்றதுன்னு உனக்குத் தெரியலை!”


மாலை ஐந்து மணிக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறிவிட்டு, ராஜீவ் அத்தோடு அன்றைய படப்பிடிப்பை நிறுத்தும் படி செய்துவிட்டான். நேராக வீட்டுக்கு விரைந்தான். சீக்கிரம் மேக் அப்பைக் கலைத்துக் குளித்துவிட்டுப் படுக்கை அறையில் ஃபோன் அருகில் உட்கார்ந்து அதையே ஆவலோடு பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஆறடிக்க இன்னும் ஐந்து நிமிடங்கள இருக்கும்போதே, ஃபோன் மணி அடித்தது. உடனே ரிஸீவரை எடுத்தான்.

“ஹல்லோ?”

“உஷா ஹியர்.”

“உன் ஃபிரண்ட் கூடப் பேசுனியா?”

“பேசிட்டேன். ”

”என்ன சொன்னாள்?”

“சரின்னு சொல்லிட்டா”

“உண்மையாகவா?”

“ஆமாம்”.

ராஜீவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

“தட்ஸ் வொண்டர்ஃபுல்!”

“அது சரி, நான் எங்கே உங்களை மீட் பண்றது?”.

“உன்னை பிக்-அப் பண்ண சுரேஷை அனுப்பறேன். தப்பா நினைச்சுக்காதே உஷா. நானே கார் எடுத்துக் கிட்டு வந்து உன்னை அழைச்சுக்கிட்டு வரணும்னு ஆசையா இருக்கு. பட் தட்ஸ் இம்பாஸிபிள். ஏன்னு உனக்குப் புரியுது இல்லையா?”

“புரியுது, சுரேஷை எங்கே அனுப்புவீங்க?”

“நீ சொல்லு. எங்க எத்தனை மணிக்கு அனுப்பட்டும்?”

“பூர்ணிமாவும் நானும் மார்னிங் ஷோவுக்குப் போறதாச் சொல்லிட்டு சபையர் தியேட்டருக்குப் போறோம். 9:30 மணிக்கு சுரேஷ் தியேட்டருக்கு வந்தால், அங்கிருந்து அவர் கூட உங்க கார்லே வந்துடறேன்.”

“உன்’ ஃபிரண்ட் என்ன செய்வாள்?”

“அவள் படத்தைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போயிடுவாள். என்னை ஏற்கனவே ஹாஸ்டல்லே இறக்கி விட்டதா அவள் வீட்டிலே சொல்விடுவாள்.”

“மறுபடியும் ஹாஸ்டலுக்கு எப்படிப் போய்ச் சேருவே?”

“சாயங்காலம் ஆறு மணிக்கு முன்னாலே என்னை ஹாஸ்டலிலிருந்து கொஞ்சம் தூரத்திலே இறக்கிவிட சுரேஷ் கிட்டச் சொல்லுங்க. அங்கிருந்து நடந்து போயிடுவேன். யாருக்கும் சந்தேகம் வராது”

“பூர்ணிமாவுக்குக் கார் இருக்கா?” என்று கேட்டான் ராஜீவ்.

“இருக்கு. ஏன்?”

“இல்லை, காலையிலே அவளுடைய டிரைவர் நீ வேறே கார்வே போறதைப் பார்த்துட்டா…” என்று ராஜீவ் எழுப்பிய சந்தேகத்துக்கு உஷா குறுக்கிட்டு விளக்கம் சொன்னாள்.

”அதைப் பத்திக் கவலைப்பட வேண்டாம். பூர்ணிமா தானே டிரைவ் பண்ணுவாள். அவளுக்கு டிரைவிங் லைசென்ஸ் இருக்கு. நாளைக்கு அவளே கார் எடுத்துக்கிட்டு ஹாஸ்டலுக்கு வந்து என்னைத் தியேட்டருக்கு அழைச்சுக்கிட்டுப் போவாள்.”

“இதனாலே உன் ஃப்ரண்டுக்கு டிரபிள் ஒண்ணும் உண்டாகாதே?” என்று ராஜீவ் கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அவளுடைய அப்பா – அம்மா அவ மேலே பரிபூர்ண நம்பிக்கை வெச்சிருக்காங்க. எத்தனையோ தடவை அவளும் நானும் இப்படி ஒண்ணா வெளியே போயிருக்கோம். அதனாலே சந்தேகப்பட மாட்டாங்க” என்றாள் உஷா.

”குட்! ஸோ, நாளைக்கு உண்மையா நான் உன்னைப் பார்க்கப் போறேன் இல்லையா?”

“யெஸ்….பட்…” உஷாவின் குரலில் திடீரென்று தடுமாற்றம் தோன்றிற்று.

“வாட் இஸ் த மேட்டர் உஷா?”

இத்தளை நேரம் இருந்த உற்சாகம் மறைந்து, உஷாவின் நெஞ்சுக்குள் பதற்றம் தலைதூக்க ஆரம்பித்தது.

“எ…. எனக்கு. என்னவோ ப…பயமாயிருக்கு!” அவள் குரலில் லேசான நடுக்கம் உண்டாயிற்று.

“டார்லிங்!” இதுவரை அவள் கேட்டிராத அந்த இனிய சொல்லால் முதன் முறையாக ராஜீவ் அவளை அழைத்ததும் உஷாவின் உடல் முழுதும் சிலிர்த்துப் போய் விட்டது. அவன் உணர்ச்சி ததும்பும் குரலில் தேங்கிக் கிடந்த ஆவலும், தீவிர விருப்பமும் அவளை மனம் உருகச் செய்தது. ஏதோ விவரிக்க முடியாத உணர்ச்சிகள் அலை அலையாய் அவள் உடல் முழுதும் பாய்ந்தன. கொடி போன்ற அவளை அதிர வைத்தன.

“டார்லிங்! பயப்படாதே. ஐ ப்ராமிஸ் யூ. எவ்ரிதிங் வில் பீ ஆல் ரைட், உனக்கு எந்த ஆபத்தும் வராமே நான் பார்த்துக்கறேன்.”

ராஜீவுடைய ஆண்மை நிரம்பிய குரல் அவளைத் தழுவியது; வருடியது; அவளுடைய பயத்தைப் போக்கி நம்பிக்கை யூட்ட முயன்றது. அவளுடைய பதற்றத்தைச் சாந்தப்படுத்தப் பார்த்தது. பலவிதமான உணர்ச்சிகள் மனத்துக்குள் எழ, அவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு சுழன்று வர, குழப்பத்தில் உஷா தத்தளித்தாள். அவள் தலை சுற்றியது.

“ஐ டோண்ட் நோ, ஜ’ம் அஃப்ரேய்ட்… இப்படி நான் இதுக்கு முன்னாடி எங்கேயும் போனது கிடையாது..” என்றாள் நடுக்கத்தோடு.

“டார்லிங், ப்ளீஸ் பீ அஃப் ரேய்ட், பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லை. நீ கண்டிப்பா வரணும். வருவே இல்லை? ப்ளீஸ் ஸ்வீட் ஹார்ட், ஐ மஸ்ட் ஸீ யூ! ஸே யூ வில் கம்!” அவன் குரல் விடாப்பிடியாக அவளைக் கெஞ்சியது, மன்றாடியது. வற்புறுத்தியது. இந்த இனிய தூண்டுதலுக்கு முன்னால் உஷாவுடைய பயமெல்லாம் சூரியனின் பிம்பங்கள் தோன்றியதும் அதிகாலை பனி மறைவதுபோல் மறைந்து விட்டது. அவள் மனத்துள் நடைபெற்ற போராட்டத்தில் ஆசை வென்றுவிட்டது. ”ஐ வில் கம்” என்று வாக்களித்தாள்.

“தேங்க்யூ மை டார்லிங்!”, ரிஸிவரின் மீது ராஜீவ் ஒரு முத்தமிட்டான். அதற்கு உஷாவிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.

”உஷா?”

”காதில் விழுந்ததா?”

“உம்!”

”அதுக்கு பதில் கிடையாதா?”

ஒரு வினாடி தயங்கினாள். பின்பு உஷாவும் அதே மாதிரி ரிஸீவரில் முத்தமிட்டாள்.

“தேங்க் யூ ஸ்வீட் ஹார்ட்! அண்டில் டுமாரோ!”

“அண்டில் டுமாரோ” அவன் கூறிய அதே வார்த்தைகளை உஷா மறுமொழிந்தாள்.

‘”ஸ்வீட் ட்ரீம்ஸ்!” என்றான் ராஜீவ்.

“குட் நைட்”

“ராத்திரி பூராவும் உள்னைப்பத்தியே கனவு காணப் போகிறேன்!” என்றான் ராஜீவ் குரல் தழைய.

அவன் வார்த்தைகளின் உள் நோக்கத்தைக் கிரகித்துக் கொள்ளவே உஷாவின் ஒவ்வொரு நரம்பும் துடித்தது.

“ரூட் நைட்!” என்று மெதுவாக மீண்டும் ஒருமுறை கூறிவிட்டு ரிசீவரை வைத்து விட்டாள்.

– தொடரும்

– உறவின் கைதிகள், கல்கியில் (22-06-1980 – 26-10-1980) இருந்து வெளியான தொடர்கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *