வில்லங்கத்தை போக்கிய விருப்பம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 25, 2024
பார்வையிட்டோர்: 12,689 
 
 

சுட வைத்த எண்ணையில் கடுகு போட்டால் பொறிவது போல் இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த கவிதாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவளது ஒன்று விட்ட அத்தை மகன் நவீன்.

குஞ்சம் வைத்த இடை மேல் தவழும் சடையும், அன்னம் போல் நடக்கும் நடையும், ‘ஒடிந்து விடுமோ?’ என அஞ்ச வைக்கும் ஒரு சாண் இடையும்‌ அவளை சிலை வடிக்க சிற்பி தேடும் அழகியாகக்காட்டியது. சென்னையில் மேக்கப் போட்ட பெண்களையே பார்த்து வளர்ந்தவனுக்கு கவிதா மேக்கப்போடாத மேனகையாகத்தெரிந்தாள்.

‘பேசவே மாட்டாள், சாது, வெகுளி’ என்றெல்லாம் தன் சகோதரன் முறையுள்ள ஒன்று விட்ட சித்தி மகனான தம்பி பெண் கவிதாவைப்பற்றி தனது தாய் அடிக்கடி சொல்லுவதைக்கேட்டிருக்கிறான். “இந்தக்காலத்திலும் வெட்கம், நாணம் உள்ள பெண்களைப்பார்க்க முடிகிறதென்றால் ஆச்சர்யம் தான். அவளை கண்டிப்பாக ஒரு நாள் சந்திக்க வேண்டும்” என்று கூறுவான். 

கிராமத்திலுள்ள சொத்து பிரச்சினையால் குடும்ப உறவுகள் பகையாகிவிட, பத்து வருடங்களாக சென்னையிலிருந்து கோவைக்கு செல்லாமலேயே இருந்து விட்டனர் நவீனின் குடும்பத்தினர். இன்று கவிதாவின் பாட்டி, தன் தாயின் சித்தியின் இறப்புக்கு குடும்பத்துடன் வந்ததில் உறவுகளை சந்தித்து பேச நேர்ந்தது.

கவிதா அடையாளம் தெரியாத அளவுக்கு வாலிப வயதின் உதவியால் உருவ மாற்றம் அடைந்திருந்தாள். “பருவத்துக்கு வந்துட்டா உருவம் மாறிப்போகும்னு சொல்லுவாங்க. அப்படித்தான் நீயும் சல்லையாட்டா நெடு,நெடுன்னு வளர்ந்துட்டே…..” என கவிதாவைப்பார்த்து தன் தாய் முதலாக கிராமத்து பாஷையில் பேசியது பிடித்திருந்தது நவீனுக்கு.

“நவீன்னு பேருள்ள உங்களுக்கு நவீனமான பொண்ணுங்களைத்தான் பிடிக்குமா?” துடுக்காகக் கேட்டதும் வாயில் எடுத்து வைத்த லட்டின் சுவையில் லயித்திருந்தவன் நிமிர்ந்து அவளையே பார்த்தான்.

“கவிதான்னு பேருள்ள உங்களுக்கு கவிதை எழுதுகிறவரைத்தான் பிடிக்குமா?” தன் பங்கிற்கு அவனும் கேட்டான்.

“முதல்ல என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்க. அப்புறம் உங்களோட கேள்விக்கு நான் பதில் சொல்லறேன்” என்றாள் வெடுக்கென தலையை வெட்டித்திருப்பியபடி.

“என்னமோ தெரியலைங்க. உங்களைப்பார்த்ததுல இருந்து உங்களை மட்டுமே எனக்கு பிடிச்சிருக்கு. நவீனம், கிராமத்து டைப் அப்படி இப்படி எதுவுமே யோசிக்கத்தோணலை” என்று நவீன் சொல்ல வெட்கப்பட்ட கவிதாவின் முகம் இரத்தோட்டம் அதிகரித்ததால் கோவைப்பழம் போல் சிவந்திருந்தது. வாயடித்தவள் பேச்சிழந்து நின்றாள். அப்போது அவளிடம் வெட்கமும், வெகுளித்தனமும் வெளிப்பட்டது. பெருமூச்சு விட்டாள். ஓட்டமும் நடையுமாக வீட்டிற்குள் சென்றவள் கதவைத்தாழிட்டு சிறிது நேரம் வெளியே வராமல் இருந்து கொண்டாள்.

சற்று நேத்துக்கு பின் வெளியே வந்தவள் கைகளில் இருந்த தட்டில் காபி டம்ளர்கள் இருந்தன. வெட்கத்தைக்கட்டுப்படுத்த முடியாமல் வீட்டிற்குள் சென்றதை மறைக்கவே காபி நாடகம் என்பதை அங்கிருந்தவர்கள் புரிந்து கொண்டு புன்சிரிப்புடன் காபியை வாங்கி சுவைத்தனர்.

“பத்து வருசமா தீராம கெடக்கிற சொத்துப்பிரச்சினை இப்ப தீர்ந்து போச்சு” என பேசி நிம்மதிப்பெருமூச்சு விட்ட சித்தப்பாவை புரியாமல் பார்த்தாள் நவீனின் தாய் வசந்தி.

“என்ன வசந்தி புரியாம ஆந்தை மாதிரி முழிக்கிறே? என்ற பேத்தி கவிதாவுக்கு உன்ற பையன் நவீனைப் புடிச்சுப் போச்சு. உன்ற பையனும் அவளை ரொம்பப் புடிச்சிருக்குன்னு சொல்லிப்போட்டான். உடனே ரெண்டு பேருக்கும் கண்ணாலத்தப் பண்ணி வெச்சுப்போடுவோம். கவிதாவுக்கு வர வேண்டிய சொத்தும் நவீனுக்கு சொந்தமாகிப் போறதுனால பாகத்த பிரிக்க வேண்டிய அவசியமே இருக்காது” என கூறிய சித்தப்பாவின் மேல் இது வரை இருந்த கோபம் வெளியேறியதோடு, விருப்பங்களுக்கு வில்லங்கங்களை ஒன்றுமில்லாமல் செய்து விடும் வலிமை உள்ளதாக எண்ணி மகிழ்ந்தாள் நவீனின் தாய் வசந்தி!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *