நாட்டு மக்களை வாழ வைத்தவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,339 
 

மலையப்பிரபன் என்ற அரசன், ஒரு நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தான்.

தொடர்ந்து அந்த நாட்டில் மழை பெய்யாததால், பஞ்சம் உண்டாயிற்று. மக்கள் பட்டினியால் வாடி உயிர் இழந்தனர். கால் நடைகளுக்கு தண்ணீரும் இல்லை; தீவனங்களும் இல்லாமை யால் அவை செத்துப் போயின.

குடிமக்களின் துயரத்தைக் கண்டு மனம் சகியாமல், அரசன் இரக்கம் கொண்டு பக்கத்து நாடுகளிலிருந்து தேவையான உணவுப் பொருள்களை வரவழைத்து நாட்டு மக்களின்

துன்பத்தைப் போக்க முயன்றான்.

ஆனால், சுயநலமிக்க கரண்டல் காரர்களான அமைச்சர்கள், அரசனின் நல்ல நோக்கம் நிறைவேற விடாமல் சூழ்ச்சி செய்தனர்.

இளவரசனான இந்திரபிரபன் நாட்டுமக்களின் துன்பத்தையும், அமைச்சர்களின் போக்கையும் அறிந்து வேதனை அடைந்தான்.

தந்தையிடம் சென்று, “அமைச்சர்களின் தீயயோசனை களைக் கேட்டு, குடிமக்களை அழிய விடுவதுதான் ஆட்சி முறையா? மக்களின் தேவையை நிறைவேற்றக் கட்டிய கற்பக விருட்சம் போன்றவர் அல்லவா அரசர்” என்று வாதாடினான் இளவரசன்.

அமைச்சர்களின் கைப்பொம்மையாகிவிட்ட அரசன், மகனின் போக்கைச் சிறிதும் விரும்பாமல், “மக்களின் தேவைகளை நிறைவேற்ற நான் குபேரன் அல்ல! உனக்கு ஆற்றல் இருந்தால், நீயே அதைச் செய்யலாமே?” என்று கண்டிப்பாகக் கூறினான்.

தந்தையின் பிடிவாதத்தைக் கேட்டு வருந்திய இளவரசன், “விரும்பியதை எல்லாம் அளிக்கக் கூடிய கற்பகத்தருவாக இருக்க வேண்டும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டு உயிரைவிடவேண்டும் என்ற உறுதியோடு, மலைப்பகுதிக்குச் சென்று, கடுமையான தவத்தை மேற்கொண்டான்.

அவனுடைய தியாக உள்ளத்தையும், உறுதியையும் அறிந்த இந்திரன் கருணை காட்டி, அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றினான்.

மக்களை வாட்டிய பஞ்சம் நீங்கியது. நாட்டில் மழை பொழிந்தது , மக்கள் செழிப்புடன் வாழலானார்கள்.

இப்படி இருக்கும்போது, இளவரசன் இந்திரபிரபன் முன், இந்திரன் தோன்றி, “இந்த நாட்டில் உன்னிடமிருந்து உதவி கேட்டுப் பெற எவருமே இல்லை. ஆகையால், நீ சுவர்க்க லோகத்துக்கு வந்து வாழ்வாயாக” என்று அழைத்தான்.

இந்திரனின் அழைப்பை ஏற்காமல், “என் நலனை மட்டும் பெரிதாகக் கருதி, நான் மட்டும் எப்படி வருவேன் ? என் குடிமக்களுடன் வாழ்வதே எனக்கு சுவர்க்கலோகம்” என்று மறுத்து விட்டான். இளவரசன்.

அவனுடைய பரந்த நோக்கத்தையும், தியாக உள்ளத்தையும் பாராட்டி, “உன் நாட்டு மக்கள் அனைவரும் சுவர்க்க பூமிக்கு வந்து சேரலாம்” அவர்களை உன் விருப்பம் போல் அழைத்துச் செல்லலாம். என்று பெருந்தன்மையோடு கூறினான் இந்திரன்.

ஆனால், எதிர்காலத் தலைமுறையினருக்கு உதவ நான் இங்கு இருக்க வேண்டும்” என்றான். இளவரசன்.

அவனுடைய புகழ் எங்கும் பரவியது. மக்கள் போற்றினர்.

இக்கதையில் தியாகம், பரந்த நோக்கம், சுயநலமின்மையே மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *