யாருக்கு நிறைவு?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 5,837 
 

சடக் சடக் என ஓடிக்கொண்டிருந்த அந்த பிரமாண்டமான இயந்திரத்தில்

வரிசையாக அமைக்கப்பட்டிருந்த கோனிலிருந்து நூல் செல்வதை பார்த்துக்கொண்டிருந்த கண்ணபிரான் முகத்தில் சோகம் படிந்து கிடந்தது. பையன் ஸ்கூல் பீஸ் கட்ட நாளையோட கடைசி நாள். பணத்துக்கு என்ன பண்ணறது? எல்லாத்து கிட்டயும் கடன் வாங்கியாச்சு, யோசித்து கொண்டிருந்தவன் ஒரு கோனிலிருந்து நூல் பிரிந்து விட்டதை கூட கவனிக்காமல் நின்று கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த பரமன் சட்டென அந்த கோனிலிருந்த நூலை இணைத்து மீண்டும் இயங்க விட்டான். அதை கூட கவனிக்காமல் நின்று கொண்டிருந்த கண்ணபிரானை உலுக்கினான், கண்ணா, கண்ணா, திடுக்கிட்டு சுதாரித்த கண்ணபிரான் என்ன? என்ன? என்று கேட்டான். சரியா போச்சு போ, கோனில இருந்து நூல் அறுந்து போனது கூட தெரியாம அப்படி என்ன யோசனை பண்ணிகிட்டு இருக்கே, நல்ல வேளை நான் வந்ததுனால தப்பிச்ச, இப்ப மேஸ்திரி வந்திருந்தான்னா, உன் கதி அவ்வளவுதான், சொன்னவன் சரி மதியம் சாப்பாட்டுக்கு வரும்போது சொல்லு என்ன பிரச்சினையின்னு? இப்ப சூதானமா வேலைய பாரு. தோளை தட்டி கொடுத்துவிட்டு அவன் இடத்தில் ஓடிக்கொண்டிருந்த இயந்திரங்களை பார்க்க சென்றான்.

சட்டென தன்னை சுதாரித்துக்கொண்ட கண்ணபிரான், நல்ல வேளை இருக்கற வேலைய தொலைக்க தெரிஞ்சேன், சொல்லிக்கொண்டே வேலையில் கவனமானான்.

மதியம் இடைவேளையில் மகனுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட நாளைக்கு கடைசி நாள் என்று சொன்னவனுக்கு, சாயங்காலம் நாலு மணிக்கு ஷிப்ட் முடிஞ்சு வா, என் வீட்டுக்காரிகிட்ட நகை ஏதாவது இருந்தா வாங்கி அடகு வச்சு தாரேன், சாதாரணமாய் சொன்ன பரமனை நன்றியுடன் கையை பிடித்துக்கொண்டான்.

பரமன் தன் மகனிடம் சொல்லிக்கொண்டிருந்தான், பாருடா கண்ணபிரான் பையன் உன் ஜோடிதானே பத்தாவதுல எப்படி மார்க் வாங்கியிருக்கான்? நீ இப்படி பெயிலாயிட்டு வந்திருக்கறியேடா. புலம்பினான். அப்பா எனக்கு படிப்பு வரலை, தயவு செய்து ஏதாவது வொர்க்ஷாப்பில்யோ, இல்லை உன் மில்லுலயோ சேர்த்து விடு, சொன்னவனை அடிக்க பாய்ந்தான், அவன் மனைவி தடுத்தாள். பாரு எப்படி பேசறான் பாரு, நாந்தான் இந்த மில்லு வேலைக்கு போய் நெஞ்சு முழுக்க பஞ்சு பொதிய பதிய வச்சுட்டு மூச்சு விட முடியாம தடுமாறிகிட்டு இருக்கேன், இவனாவது நல்லா படிச்சு நல்ல உத்தியோகத்துக்கு போவான்னு பார்த்தா இப்படி பேசறானே, ஆதங்கத்துடன் சொன்னான்..

காலையில் மில்லுக்கு வந்தவுடன், வருகை பதிவிட சென்றபோது கண்ணபிரானை பார்த்த பரமன் பையனை எப்படியோ பத்தாவதுல நல்ல மார்க் வாங்க வச்சுட்டே, அடுத்து எங்க படிக்க வைக்க போறே? பார்க்கலாம் பரமு, கொஞ்சம் பண முடையாவும் இருக்கு, யோசிக்கணும்.

பணத்தை பார்த்து அவன் படிப்பை கெடுத்துடாதே, எதுனாலும் எங்கிட்ட கேளு, சொல்லிவிட்டு அவரவர்கள் இடத்துக்கு சென்றனர்.

இரவு ஒன்பது மணிக்கு ஆடை முழுக்க எண்ணெய் படித்து அழுக்காய் களைத்து வரும் மகனை பார்த்து, மனசு கேட்காமல், அவன் மனைவியிடம் வாய் விட்டு புலம்பினான் பரமன். படிடா படிடா அப்படீன்னு தலை தலையா அடிச்சுகிட்டேன், இப்படி கஷ்டப்பட்டு வாறான்.

நீ கொஞ்சம் சும்மா இருக்கறியா? இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி குதிக்கறே, முதல்ல போய் தூங்கு, காலையில ஏழு மணிக்கு மில்லுக்கு ஓடறே, நான் இடையில இடையில வீட்டுக்கு வந்துட்டு போயிட்டுதான் இருக்கேன். நீ போய் இப்ப தூங்கு, கடு கடுவென சொன்னாலும், அதனுள் இருந்த அப்பனை பற்றிய அக்கறை பரமனை பேசாமல் போய் படுக்க் வைத்து விட்டது.

வேலையை விட்டு நின்று விடுவதாக ஒரு மாத நோட்டீஸ் எழுதி கொடுத்துவிட்டான் கண்ணபிரான். பரமனிடம் “பையன் பெங்களுரில பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துட்டான், இனிமேல் மில வேலைக்கு போக வேணாமின்னுட்டான், அங்கேயே கூப்பிட்டான், எங்க ! நம்ம ஊரில இருந்துட்டு வெளியில போறதுன்னா கஷ்டம், அதனால நல்லா பெரிய வீடா பார்த்து இங்கேயே குடி வச்சுட்டான். சொல்லிவிட்டு நிறைவாக சிரித்தான். பரமன்

கண்ணபிரானை கட்டிப்பிடித்து, இனி நீ இல்லாமல் எனக்குத்தான் வெறிச்சுன்னு இருக்கும். நான்தான் கடைசி வரைக்கும் கஷ்டப்பணும்னு என் தலையில எழுதியிருக்கு. பையன் தனியா வொர்க்ஷாப் வச்சுட்டான், அவன் வேலையே அவனுக்கு கஷ்டம், இதுல நான் போய் ஏன் தொந்தரவு செய்யணும். கவலைப்படாதே பரமு, உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாய் நடக்கும், கண்ணில் வெளி வர தயாராயிருக்கும் கண்ணீரை மறைக்க சட்டென கிளம்பி விட்டான்.

பரமன் மகனிடம் கத்திக்கொண்டிருந்தான் ஏண்டா கிணத்துக்கடவுக்கு பொண்ணு பாக்க போலாமுன்னு சொன்னா இதா அதான்னு நாளை கடத்திகிட்டு இருக்கே? சும்மா கத்தாதே எனக்கு இன்னைக்கு நாலு வண்டி டெலிவரி பண்ணியாகணும், நான் வர்றதே அப்பவோ இப்பவோன்னு இருக்கேன், நீயும், அம்மாவும் போய் பார்த்து முடிவு பண்ணு போதும். சொன்னவன் வேகமாக கிளம்பி விட்டான்.

நல்ல பையனை பெத்து வச்சிருக்கே, சொல்லிவிட்டு, சரி கிளம்பு, உன் அண்ணனுகளை கூப்பிட்டுட்டு போய் முடிவு பண்ணலாம். மனைவியிடம் சொன்னான்.

மருதமலை கோயிலுக்கு சென்று தன் இரு பேரக்குழந்தைகளுக்கு மொட்டை போட்டு விட்டு பரமன் அவன் மனைவி மருமகளுடன், பஸ்ஸுக்கு நின்று கொண்டிருந்தான். அவன் அருகில் கார் ஒன்று நின்றது. அதிலிருந்து இறங்கிய கணவன் மனைவியை அடையாளம் காண சற்று திணறத்தான் வேண்டி இருந்த்து பரமனுக்கு. அடையாளம் கண்டபின் “கண்ணபிரான் எப்படி இருக்கே” என்று சொன்னவன் அவனது உடைகளையும், தோரணையும் பார்த்தவன் நாக்கை கடித்துக்கொண்டு “எப்படி இருக்கீங்க கண்ணா? என்று கேள்வியை மரியாதையாக்கினான்.

நான் நல்லா இருக்கேன். கோயிலுக்கு வந்தோம், வர்ற வழியில உன்னை பாத்தேன், அதான் நின்னு விசாரிச்சுட்டு போலாமுன்னு. நீ எப்படி இருக்கே பரமு, பாசமுடன் கைகளை பிடித்துக்கொண்டான். நான் நல்லாத்தான் இருக்கேன், எங்க உன் பையனை காணோம்? அதை ஏன் கேக்கறே? குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கறவரைக்கும் நின்னான், திடீருன்னு வொர்க்ஷாப்பில இருந்து போன் வரவும் நீங்க எல்லாம் பஸ்ஸுல வாங்க அப்படீன்னு வண்டிய எடுத்துட்டு போயிட்டான்.குரலில் மகனை பற்றிய பெருமையா, ஆதங்கமா தெரியவில்லை?

உன் பையன் எப்படி இருக்கான் கண்ணா? இப்பவும் பெங்களூரிலதான் இருக்கானா?

உங்களை எப்படி கவனிச்சுக்கறான்? இருக்கான், நல்லா கவனிச்சுக்கறான், இப்ப கூட பாரு மருதமலைக்கு போகணும்னு அவங்கிட்ட போன்ல சொன்ன உடனே தயவு செய்து கார்லயே போயிட்டு வாங்க அப்படீன்னு சொல்றான். சரி பையனுக்கு கல்யாணம் பண்ணிட்டியா?

ம்..ஆச்சு, அவனுக்கு இரண்டு குழந்தைங்க, எல்லாம் பெங்களுரிலதான் இருக்காங்க.

சரி நான் வரட்டுமா,வேணா எல்லாம் வாங்க உங்களை வீட்டுல இறக்கி விட்டுட்டு போறேன்.

உடனே மறுத்தான் பரமன், வேண்டாம் கண்ணா, நாங்க அப்படியே பொட்டானிக்கல் கார்டன்ல இறங்கி கொஞ்சம் குழந்தைங்களை விளையாட விட்டுட்டு மெதுவா கிளம்புவோம். நீ போயிட்டு வா. உடமபை பார்த்துக்கோ.

காரில் ஏறிக்கொண்ட கண்ணபிரானும், அவன் மனைவியும், ஏக்கத்துடன் பரமனையும் அவன் குழந்தைகளையும் பார்த்துக்கொண்டே சென்றனர்.

இந்த மாதிரி நம்முடைய மகன் நம்மை நம்பி தன் குழந்தைகளை விட்டு செல்வானா? இல்லை நம்முடன்தான் ஒரு நாளாவது தன் குடும்பத்தை இப்படி கலந்து கொள்ள விடுவானா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *