சுதந்திர மாடன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 13, 2024
பார்வையிட்டோர்: 257 
 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் தேதியன்று நள்ளிரவில் சுதந்திரம் பிறந்துவிட்டதைக் காட்டும் வகையில் நாடெங்கிலும் உள்ள சுவர்க்கடிகாரங்கள் பன்னிரண்டு தடவை மணி அடித்து, டில்லி செங்கோட்டையிலும் பீரங்கிகள் முழங்கியபோது, குட்டாம்பட்டியிலும் பண்ணையார் பரமசிவத்தின் கவர்க்கடிகாரம் பன்னிரண்டு தடவை முழங்கியது. ஊர்ச்சாவடியில் அவர்வைத்திருந்த ரேடியோவில், ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ பாடலோசை அலைகளாக காதில் மோதியபோது, விடுதலை வீரர்கள் குதூகலமாக கூடிக்குலாவி , கிட்டப்பாவின் பாட்டுக்களை எட்டரைக் கட்டையில் பாடிக் கொண்டிருந்தபோது –

அதே ஊரில் எட்டடி நீள அகல குடிசை வீட்டுக்குள் மங்கம்மா, பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் பிரசவத்தைக் கவனிக்க குடிமகள் தவிர யாரும் அங்கில்லை .

மங்கம்மா , கூரையைப் பார்த்தாள். கண்களில் இருந்து நீரூற்றுபோல் தோன்றிய கண்ணீர் கன்னங்களில் விழுந்து அமங்கலமாக இருந்த கழுத்தை நீர்த்தாலிச்சரடாய் சுற்றி மங்களம் ஆக்கியது. எட்டுமாத கர்ப்பிணியாக இருக்கும் போது, வண்டியில் கருப்பட்டியை ஏற்றிக்கொண்டு, கேரளாத்தில் உள்ள புனலூர் சந்தைக்குப் போன அவள் கணவன் – ஏழமாதங்களுக்கு முன்புவரை, தாலி கட்டிய மனைவிக்கு கையில் மல்லிகைப் பூவோடும், பையில் மிட்டாய்களோடும் திரும்பும் அவள் கணவன், வண்டியில் கிடத்தப்பட்டு, கழுத்தில் ஒரு மாலையுடன் இன்னொருவன் வண்டியோட்ட, இவன் பிணமாகத் திரும்பினான். காலரா என்றார்கள். காத்துக் கருப்பு என்றார்கள். சொந்தக்காரர்கள், இந்த முண்டயோட ஜாதகம்… கழுத்துல இருக்கிற அறுதலி, ரேகையை பார்த்தியளா…’ என்றார்கள்.

இந்திய சுதந்திர தினத்தில் மங்கம்மாவுக்கு, அதே நள்ளிரவில் ஆண்குழந்தை பிறந்ததால், உள்ளூர் கிராம முன்சீப், அவள் பையனுக்கு சுதந்திரமாடன்’ என்று பெயர் வைத்தார். ‘போயும் போயும் அந்த அறுதலி மவனுக்கா… இந்த மாதிரி பேரு…. ஒமக்கு மூளகிள பிசகிட்டா மச்சான்’ என்று சிலமைத்துனர்கள், முனீசிப்பை ‘கோட்டி’ பண்ணினாலும், பயலுக்கு எப்படியோ சுதந்திரமாடன்

என்று பெயர், நமது சுதந்திரத்தைப் போல் நிலைத்துவிட்டது.

பாரதம், சுதந்திரம் அடைந்ததால், மங்கம்மாவும் ஓரளவு முன்னேறினாள். குழந்தையை ஆரோக்கியமாக வளர்த்து, அவன் அப்பனை மாதிரி, அவனும் சொந்தத்தில் ஒரு வண்டி வாங்கி புனலூர் சந்தைக்குப் போகாமல், சீவலப்பேரிச் சந்தையில் கருப்பட்டி வியாபாரம் செய்யவேண்டும், என்ற வைராக்கியத்தில், பக்கத்தில் உள்ள சட்டாம்பட்டியில் ஒரு ரெட்டியாரின் பூந்தோட்டத்தில் உள்ள மல்லிகை இருவாட்சி பூக்களை உதிரியாக வாங்கிவந்து வீட்டில் இருந்துகொண்டே மாலையாகத் தொடுத்தாள்.

குட்டாம்பட்டியின் முடிசூடா மன்னராக விளங்கிய பரமசிவம், அடிக்கடி அந்த ஊரிலும், அடுத்த ஊர்களிலும் விழாக்கள் நடத்தியதால், அவள் மாலைகளுக்கு நல்ல கிராக்கி. அந்தப் பக்கம் வரும் எல்லா அமைச்சர்களுக்கும், மங்கம்மாவிடமே மாலைகள் வாங்குவார்கள், கூட்டங்கள், கோஷ்டிகள். கால்கோள் விழாக்கள், கட்டிடத் திறப்புக்கள் முதலியவை சதா இருந்ததால், மங்கம்மாவின் தொழிலுக்கு மதிப்பு ஏற்பட்டது.

நாட்டில் போடப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களால், கிணறு வெட்டுவதற்கும், மாந்தோட்டம் போடவும், கோழிப் பண்ணை வைக்கவும் கொடுக்கப்பட்ட கடன்களை, வாங்கவேண்டியது, ஒரு குடிமகனின் கடமை என்ற நாட்டுப்பற்றான தேசபக்தியின் உந்தலில், பரமசிவம், தானும் வாங்கி, சொந்தக்காரர்களையும் வாங்க வைத்து, அந்தப் பணத்தை வைத்தே ஏழை எளியவர்களின் நிலத்தை வாங்கிப் போட்டார்:

மங்கம்மா, சாதாரண பூமாலை விற்பதில் இருந்து, ரோசாப்பூ மாலை விற்கும் அளவுக்கு முன்னேறியபோது, பரமசிவம், கூட்டுறவு சங்கத் தலைவரானார். பஞ்சாயத்துத் தலைவரானார். அவர் மைத்துனர் பள்ளிக்கூட தலைமை ஆசிரியராகவும், பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டராகவும் மாறினார்.

அப்போது, பஞ்சம் வந்தது. கூடவே மங்கம்மாவுக்கும், பரமசிவத்திற்கும், தத்தம் முன்னேற்றத்தில் ஒரு பரீட்சை வந்தது. அவள், மாலையை விலைபேச ஆளில்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும், தலைவர்களும், அந்தப் பஞ்சப் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு அஞ்சியதால். கூட்டங்கள் நடக்கவில்லை. மாலைகளுக்கு அவசியமில்லை.

அதே சமயத்தில், நாட்டின் உணவுப் பொருட்களை சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டும் என்ற உன்னத நோக்கில், வந்த ரேஷனைப் பயன்படுத்தி, ‘எங்க ஊரு ஏழைங்க…. ரேஷன் இல்லாட்டா செத்துப் போயிடுவாங்க’ என்று சொல்லி, பரமசிவம் ரேஷன்கடை வைத்தார். குழந்தைகள் உணவில்லாமல் வயிறு முட்டியபோது, அவர் வயிறும் முட்டியது. ரேஷன் கடையால், பல நன்மைகள் ஏற்பட்டன. பரமசிவம், பக்கத்து டவுனில் மரக்கடை வைத்தார். உள்ளூரில் ஜவுளிக்கடை வைத்தார். ஏழை விவசாயத் தொழிலாளிகளின் சிரமத்தைக் குறைப்பதற்காக, வயலுக்கு டிராக்டர் வாங்கிப் போட்டார். ஆக ரேஷன் கடை வைத்ததால், ஏழைகளுக்கு வயிற்றுக்கு கிடைத்ததோ இல்லையோ, கைவேலை செய்ய மரக்கடையும்; எண்சாண் உடம்பில் இருசாணையாவது மறைக்க ஜவுளிக்கடையும் கிடைத்தன.

குட்டாம்பட்டியும், நாட்டோடு சேர்ந்து முன்னேறியது. அப்படி முன்னேற முன்னேற, மங்கம்மாவும், இதர ஏழைகளுடன் சேர்ந்து பின்னேறிக் கொண்டிருந்தாள். பொதுக்கூட்டங்கள், விழாக்கள், மாலைகளை நேசிக்காமல், ‘துண்டுகளையும்’ ‘பொன்னாடைகளையும் நேசிக்கும் அளவுக்கு பிரமுகர்கள் முன்னேறிவிட்டதால், அவள், கூலி வேலைக்குப் போனாள். நடவுக்கு கிடைத் எட்டணாவை வைத்துக்கொண்டு, தன்னையும், தன் மகனையும் தற்காத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, சுதந்தர மாடன், ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். மக்காச் சோளத்தை சாப்பிடும் அவனை, பெரிய இடத்துப் பையன்கள் சோத்து மாடன்’ என்று அழைத்தாலும், அவன், படிப்பில், ‘வேட்டைக்குப் போகும் உதிரமாடன் போல் ஆர்வம் காட்டினான். பரமசிவம் மகன் பரீட்சைகளில் கீழே முதலாவது ஆளாகவும், இவன் மேலே முதலாவதாகவும் இருந்தபோது, விதி சிரசாசனம் செய்தது. பள்ளிக்கூடத்திற்குப் போய்க்கொண்டிருந்த சுதந்திர மாடனைப் பார்த்த பரமசிவத்திற்கு, மனசு கேட்கவில்லை. சாய்ந்து கிடந்த அவன் வயிற்றையும், அம்மாவிடம், சிலேட்டு வாங்க காக கேட்டு, கையடி பெற்றதால், கன்னத்தில் கறையாமல் நின்ற உப்புநீரையும் பார்த்த அவருக்கு, உப்புக்கடலளவு கருணைபிறந்தது. அவர், ஆள்வைத்து நடத்தும் பால் கடையில், ஒரு மசால் வடையை, அவன் கையில் திணித்தார். பயல், அவரை நன்றிப் பெருக்கோடு பார்த்தபோது, “இன்னும் வடை வேணுமா…?” என்றார்.

“எனக்குப் போதும்… அம்மாவுக்கு….. ஒண்ணு வேணும்…”

“இந்தா….. வாங்கிக்கல… இதோ பாருல… நம்ம தலைவருங்கெல்லாம்… தொழில் கல்வி வேணுமுன்னு சொல்லு தாங்க… நீ சுதந்திர நாள்ல பிறந்த பய… ஒன் பிறந்தநாள்… சாதாரணமான துல்ல…. நீ கூட… தொழில் கல்வியப் பத்தி நினைக்காட்டா என்னல… அர்த்தம்?”

“நான், என்ன மாமா செய்யணும்…?”

“ஊர்ல… எல்லாரும் படிச்சிட்டு டவுனுக்குப் போயிட்டா – நம்ம ஊர் என்னாவுறது? ஒன்ன மாதிரி புத்திசாலிப்பயலுவளுக்கே புரிய மாட்டக்கே… அப்புறம் வேற எவனுக்கு புரியப் போவுது..?”

“நான் என்ன மாமா செய்யணும்…?”

“நம்ம நாட்டுக்கு இப்போதேவை உழைப்பு… நம்ம தலைவரு சொன்னது மாதிரி, நாம் உற்பத்தியப் பெருக்கணும்… உணவு… ஏற்றுமதியாகணும்… அதுக்கு … சுதந்திர நாள்ல பிறந்த ஒன் பங்கு என்னடா… சொல்லு பார்ப்போம்…”

“நல்லா படிக்கணும்… வாத்தியார் சொல்றபடி நடக்கணும்… தாயிற் சிறந்த கோவில் இல்லன்னு நினைக்கணும்…”

“மெத்தப் படிச்சவன், சுத்தப் பயித்தியக்காரன்னு ஒரு பழமொழி இருக்கு….. தெரியுமால? படிச்சது போதாதா….? படிப்பு, உழைப்புக்காகவா… உழைப்பு… படிப்புக்காக…. அதனால், பேசாம, ஒன்னை மாதிரி பையங்க, பேனா பிடிக்கக்கூடாது. ஏர் பிடிக்கணும்… சிலேட்டுக்குப் பதிலா… உரமூட்டை தூக்கணும்…”

“ஒம்ம மவன் மட்டும் படிக்கான்…”

“அவன், உருப்படாடத பய… நீயும் அவனை மாதிரி கெட்டுப் போகணுமுன்னு நினைச்சா, பேஷா படி…. அம்மாவுக்கு கஞ்சி ஊத்தணும்….. பிறந்த கிராமத்தை, முன்னுக்கு கொண்டு வரணுமுன்னா … வயலுல உழை… ஒன் இஷ்டம்…”

“வயலு இல்லியே. மாமா.” “அறிவிருக்காடா… என் வயல் வேற… ஒன் வயலு வேறயா.?” “மாமா….”

“இந்தால் இன்னொரு வடை. ஏய் , ஜோஸப்பு! நான் சொன்னேன்னு அவன் மாசானம் கசாப்புக் கடையில், அரைச் சேரு கறி வாங்கி, இந்தப் பயகிட்ட கொடு. வீட்ல போயி… அம்மாவ , ஆட்டுக்கறி வைக்கச் சொல்லி, சாப்புடுல…. அப்புறம் அடுத்த விஷயத்த யோசிக்கலாம். நல்லாச் சாப்புடு… ஏமுல… பட்டினி கிடக்க..? உன் வயித்தப் பார்த்தால், என் வயிற என்னவோ பண்ணுது…”

ஆட்டுக்கறி சாப்பிட்ட சுதந்திர மாடன், அம்மாவின் ஆலோசனையை மீறி – அடிக்கப்போன அவளை, எதிர்த்து அடிக்கப் போனான். பிறகு இப்படி வார்த்தைகளை வீசிப் போட்டான்.

“இனிமேல்… வயலுல நடுறதுக்கு போனீயான்னா, செறுக்கி மவளே கொன்னுப்புடுவேன்… இன்னயில் இருந்து, நான் வேலக்கி… போறேன்… ஆட்டுக்கறி வாங்கி வருவேன்… சமையல் பண்ண ணும், நான் ஊட்டுறபோது, வாயைத் திறக்கணும்…. இல்லன்னா …. கொன்னுப்புடுவேன்…. அதுவும் இல்லன்னா… பட்டணத்துக்கு ஓடிப் போயிடுவேன்… மசால் வடையை, ரெண்டு நாளா… ஏன் திங்கமா வச்சிருக்க….? திங்கிறியா? பம்பாய்க்கு ஓடிப் போவட்டுமா…?”

மங்கம்மா, அவன் ஓடிப்போகாமல் இருக்க, அழுத வாய்க்குள் மசால்வடையை வைத்தாள். மற்றபையன்களைப்போல், தன் மகனும் படித்து, வாத்தியாராகி, ‘இஸ்திரி’ போட்ட சட்டையோடு, இன்னொரு ‘வாத்திச்சியைக் ‘ கல்யாணம் பண்ணி, சுகமாக வாழவேண்டும் என்று நினைத்த அந்தத் தாய், இப்போது மகன் எப்படியோ இந்த ஊரில் வாழ்ந்தால் சரிதான் என்று நினைத்தான், ஒரே பிள்ளை, கண்ணுக்கு முன்னாலேயே இருக்கவேண்டும் என்று எண்ணியும், தொண்டைக்குள் விக்கிய மசால்வடைத் துண்டுகளை, தண்ணீரைக் குடித்து வயிற்றுக்குள் அனுப்பினாள்.

சுதந்திரமாடன், பரமசிவத்தின் வீட்டிற்குத் துள்ளிக் குதித்துப் போனான்.

ஆண்டுகள் போய்க்கொண்டிருந்தன. மங்கம்மாவின் உடம்பும், உயிரும் பிரிந்ததை பொருட்படுத்தாமல் போய்க் கொண்டிருந்தன.

‘நாட்டில் ஒருமைப்பாடு நிலவவேண்டும்; நிலவப்பட வேண்டும்’ என்றும், அதற்கு முன்னோடியாக, கிராமத்து மக்கள் தங்களுக்குள் ஐக்கியப்பட வேண்டும்’ என்றும், ஊரில் பரமசிவத்தின், ரைஸ்மில்லை திறந்து வைத்து, உணவு அமைச்சர் பேசியதை, சுதந்திர நாளில் பிறந்த மாடன், கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

அம்மா இறந்த துக்கத்தை, பரமசிவத்தின் மனைவியை அம்மா’ என்றழைத்து மறந்தான். அவளும் , “அடகட்டையில் போற மவனேன்னு” சொல்வதை, ஒரு தாயின் கரிசனமாக எடுத்துக்கொண்டு, “போற பய மவனுன்னு, சொல்லாதிய… எங்கய்யா, போயிட்டதால… போன பய மவனேன் னு சொல்லணும்…” என்று சொன்னபோது, திருமதி பரமசிவம், ‘பய மவனுக்கு… வாயப் பாரு…’ என்று சிரிப்பாள்.

நாட்டில் ஒருமைப்பாடு ஏற்பட்டதோ இல்லையோ, சுதந்திரமாடன் பரமசிவக் குடும்பத்துடன் ஐக்கியமானான். சமயலறை வரைக்கும் இவன் சாம்ராஜ்யம். வீட்டில் ஆள் இல்லையென்றால், இவனே பானையைத் திறந்து, சாப்பாடு போட்டுக் கொள்ளலாம். மிளகாய் வத்தல் மூட்டைகளை, இவனே வண்டியில் ஏற்றி, சந்தைக்கு கொண்டுபோய் விற்கலாம். விற்ற பணத்தில், இவனே, பரமசிவத்துக்கு எட்டுமுழ வேஷ்டி வாங்கி வரலாம். இவனே சந்தையில், ‘மஞ்சள் மசலாக்களையும்’ லட்டுகளையும் வாங்கி வரலாம்.

பரமசிவத்தின் மகள் – செகண்டரி கிரேட் வாத்தியார் டிரெயினிங் படிக்கும் பத்மாவை, இவன்தான், திருநெல்வேலியில் கொண்டு போய் விடுவான். அவள்கூட, இவன் மூலந்தான், தன் பிரச்சினைகளை அம்மாவிடம் சேரும்படிச் செய்வாள். கல்லூரியில் படிப்பதாகக் கருதப்படும் பகிருஷ்ணன், இவனைச் சரிக்கட்டித்தான், அப்பாவிடம் மோசடிப் பணத்தை வாங்கப் பார்ப்பான். தன் காதலுக்குக்கூட, இவனைத்தான் நம்பி இருக்கிறான்.

அவள் ஒருதடவை, பரமசிவம், நான்கு மூட்டை கத்தரிக்காய்களை விலைபேசி, ‘அட்வான்ஸ்’ வாங்கிவிட்டார். அப்போதுதான் வயலில், இருந்துவந்த சுதந்திரமாடன், “கொஞ்சமாவது முன்ன பின்ன யோசித்து பார்த்தீரா….? மூட்டை எட்டு ருபாயா இருக்கையில்… ஆறு ரூபாய்க்குக் கொடுக்கிறதா… அதெல்லாம் முடியாது…” என்று சொல்லி, வியாபாரியின் வேலையாட்கள் முதுகுகளில், பரமசிவம் ஏற்றிய மூட்டைகளை, இறக்கி வைத்தான். பத்மாவுக்கு, பக்கத்து ஊரில் இருந்துவந்த ஒரு வரனுக்கு பரமசிவம் சம்மதித்தபோது, “யாரு , அந்த முட்டக்கண்ணுப் பயலுக்கா…? ஆலம்பழத்த, அண்டங்காக்கா கொத்துறதா…?” என்று முறியடித்தான். பரமசிவம், பயலுக்கும், தன் மகளுக்கும் இஸ்கு – தெஸ்கு இருக்குமோ என்று சந்தேகப் பட்டபோது, என் தங்கச்சிக்கு எப்படி மாப்பிள்ளை பார்க்கணுமுன்னு…. எனக்குத்தான் தெரியும்… ஒம்ம பாட்டுக்கு கிடயும்…” என்றான்.

மொத்தத்தில், அந்த வீட்டின் நிர்வாகமே அவன் கையில். வீட்டில் எல்லா இடங்களிலும் சுதந்திரம்… வயலில், எந்தப் பயிரையும் விளைவிக்க கதந்திரம்…. எதையும் விற்கச் சுதந்திரம், எந்த யோசைனையும் சொல்லச் சுதந்திரம்… எங்கும் சுதந்திரம்… எல்லாவற்றிலும் சுதந்திரம்….. ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்ற பாரதி பாட்டுக்கு நாயகனாய் விளங்கும் அளவுக்கு, அளவற்ற சுதந்திரம்.

பரமசிவத்தையும், சும்மாச் சொல்லக்கூடாது. சுதந்திர மாடனின் பேச்சு சுதந்திரத்திற்கு, செயல் சுதந்திரத்திற்கு , வீட்டு சாசனத்தில் உத்திரவாதம் அளித்துவிட்டார். அவனுடைய , உடல் நலத்தில், அவனைவிட, அதிக அக்கறை செலுத்தினார். ஒரு தடவை, சந்தையில், தக்காளி மூட்டைகளை விற்றுவிட்டு, பெற்ற பணத்தில் நோட்டுக்களை , ‘மடிச்சீலைக்குள்’ வைத்துவிட்டு, சில்லறை நாணயங்களை, கைகளில் வைத்துக் குலுக்கிக் கொண்டே, ஒரு சிங்கிள் டீயை, மசால்வடையின் துணையில்லாமல் குடித்துக் கொண்டிருந்த அவனைப் பார்த்ததும், பரமசிவம் கோபப்பட்டார்; சினந்தார் ; சீறினார்; எகிறினார்.

“வெறும் டீயைக் குடிச்சால்… உடம்பு என்னத்துக்குல ஆகும்? போயி வைரமுத்துக்கடையில்… பிரியாணி சாப்புடுறதுக்கு என்னல….? என் பணம் வேற… உன் பணம் வேறயால… போல…. போயி பிரியாணி சாப்புடுல… வேணுமுன்னா , ஒரு ஆம்லேட்டும்…. சாப்புடு… டீ குடிக்கானாம் டீ…..”

இதேபோல், இன்னொரு நிகழ்ச்சி நடந்தது.

கல்லூரிக்காரன், வாத்தியரம்மாவான பத்மா, ஆகியோருக்கு உடன் பிறப்பாய், அறுபது வயது பரமசிவத்திற்கு, ஐந்தாண்டுக்கு முன்பு பிறந்த ஒருபொடியன், அவர் மனைவி ஆகியோர் எல்லோரும் ‘கோரம் பாயில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சுதந்திரமாடனும், அவர்களோடு, உட்கார்ந்து உணவருந்தினான். கல்லூரிக்காரன், “மாடா கொஞ்சம் உப்பு எடுத்துக்கிட்டு வா…” என்றான். உடனே, நமது மாடன், “காலு ஒடிஞ்சா போயிட்டு போடா… உப்பு எடுத்துக்கிட்டு வாரகையோட எனக்குத் தணணியும் கொண்டுவா…” என்றான். பரமசிவம், சிரித்தார். பத்மா, புன்னகைத் தாள். பல சினிமாப் படங்களில், ‘குணசித்திர வேலைக்காரர்கள் எசமான்… எசமான்…. உங்க உப்பத் திங்கிற நாயி… நான்…’ என்று நெளிந்து, குழைந்து, ஓரளவு விலகி, வினயமாய்ப் பேசும் காட்சிகளை, கதாநாயகத் தோரணையில் கண்டுகளித்த கல்லூரிக்காரன், சுதந்திரமாடனின் போக்கை அதிகபட்சமாகக் கருதி, வார்த்தைகளை ஏவிவிட்டாள்.

“மாடா…! நீ வேலைக்காரன் எங்கிறதை மறந்துடாத… எதுக்கும் ஒரு அளவு வேணும்… எல்லாம் இவங்க… கொடுக்கிற இளக்காரம். நரிக்கு… நாட்டாம கொடுத்தால்…”

அவ்வளவுதான்.

பரமசிவம், அனல் பிழம்பாக எழுந்தார். மகனை, அடிக்கப்போன அவரை, மாடனே தடுத்தான். ஆனால், அவர் பேச்சைத் தடுக்கவில்லை.

“என்னல… வேலக்காரன்… கீலக்காரன்னுபேசுற… பைத்தியம் பிடிச்சுட்டால்….? யார்ல்… வேலைக்காரன் ? ஒன்னை …. நான் பெத்ததுனால…. இந்த வீட்ல வச்சிருக்கேன். இவன் பெறாம, பெத்தப் பிள்ள… இவனயால், வேலைக்காரன்னு சொல்றே? எங்க…. இன்னொரு தடவை சொல்லுல பார்க்கலாம். குடல உருவி, தோள் மலயா போடுறனா இல்லியான்னு பாரு… எல்லாம் இந்தச் செறுக்கி மவள்…. கொடுக்கிற இளக்காரம்… ஒன்னெல்லாம், பிறகும்போதே வாயில் நெல்லப்போட்டு கொன்னுருக்கணும்…”

“செறுக்கி மவளான” அவர் மனைவி, “இன்றிருப்பார், நேற்றில்லை… நேற்றிருப்பார் இன்றில்லை… இப்படி இருக்கையில்…. வேலக்காரன்னு நாக்குமேல பல்லப் போட்டுச் பேசலாமடா…. நீ… படிச்சவனாக்கும். மூக்காலமும் காக்கா, முழுவிக் குளிச்சாலும், அது கொக்காயிடுமா….? ஒய்யாவோட… அல்பத்தனமதானே ஒனக்கு வரும்.?” என்றாள்.

அன்று, பாசத்தால் விம்மிய சுதந்திரமாடன், இப்போதும் விம்மிக் கொண்டிருக்கிறான். பரமசிவத்தின் வீட்டையே , பாரதத் திருநாடாகக் கருதி, எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவித்ததாக கருதிய இதே சுதந்திரமாடன், இப்போது, எருமை மாட்டுக் கொட்டடிக்கருகே, கொசுக்கள் அரிக்க, ‘லொக் லொக்’ என்று இருமிக் கொண்டிருக்கிறான்.

நாளைக்கு , வருடப் பிறப்பு.

எப்படியும் பரமசிவ மாமாவிடம் பக்குவமாகச் சொல்லிவிட வேண்டும். இனிமேல் இந்த வீட்டில் இருக்கமுடியாது. இருக்கக்

கூடாது… நடந்ததை நினைத்தான்.

சென்ற பொங்கலின் போது, இரவே பொங்கலிட்டு, பூஜை செய்துவிட்டு, “இன்னைக்குமாடா வயலுக்கு?” என்று சொன்ன பரமசிவத்தை, கண்களால் எரித்துவிட்டு, வேலைக்குப் போனான். மறுநாள், மாட்டுப்பொங்கல். உழவுமாடுகளை, தொழுவில் இருந்து

அவிழ்த்து, புண்ணாக்கு கலந்த தொட்டியில், தண்ணி காட்டிவிட்டு, அவற்றைக் குளிப்பாட்ட குளத்துக்குக் கொண்டு போனான். ஒரு மாட்டைக் குளிப்பாட்டியபோது, அது தற்செயலாகவோ அல்லது கூச்சத்தாலோ திமிர, அதன் கொம்பு, விலாவில் பட்டு, இருபது அடிக்கு அப்பால் தூக்கி எறியப்பட்டான். ரத்தமில்லாத ஊமைக்காயம். பிராணனைப் பிடுங்கும் வலி. பரமசிவம், பதைபதைத்தார். அவர் மனைவி, படபடத்தாள். ‘அயோடக்ஸ்’ போட்டார்கள். ‘அய்யய்யோ ‘ என்றார்கள். ‘இதப் போயி பெரிசா…’ என்றான் மாடன்.

நாளாக நாளாக, சுதந்திரமாடன் இருமத் துவங்கினான். வர்மப்பிடி என்றார்கள். அவனால், வேலைகளைச் செய்ய முடியவில்லை . எழுந்தால், ‘களுக்குப் பிடித்தது. உட்கார்ந்தால், மூச்சு முட்டியது. அவனால், வழக்கம்போல் அதிகாலையில் எழ முடியவில்லை. மிளகாய் மூட்டைகளை, தூக்கவே முடியவில்லை.

முதல் தடவையாக, பரமசிவத்திடம், தயங்கிக் கொண்டே வந்து, தலையைச் சொறிந்துகொண்டே “உடம்புக்குள்ள… எலும்பு முறிஞ்சிருக்கலாம்…. இல்லன்னா , நரம்பு பிசகி இருக்கலாமாம். போட்டோ எடுத்து பார்க்கலாமா…?” என்றான்.

பரமசிவம், அவனைச் சினந்து பார்த்துக் கொண்டே, “அதெல்லாம் ஒண்ணுமிருக்காது… ஒன் மனசுல தான் பீதி…. சரியாயிடும்….” என்றார்.

சரியாகவில்லை.

சுதந்திரமாடனின் இருமல், நாட்டின் பிரச்சினைகள்போல், நாளுக்கு நாள் வளர்ந்தது. வைரம் பாய்ந்த அவன் உடம்பு, கரையான் அரித்த பூவரசு மரம்போல் ஆகியது. நெஞ்செலும்புகள் வெளியே வரத் துடித்தன. கண்கள், உள்ளே போக முயன்றன. இருமும்போது, லேசாக ரத்தம் வரத் துவங்கியது. ஆரம்பத்திலேயே கவனிச்சிருக்கலாம்… இனிமேல் பார்த்தால், ஆயிரம் ரூபாய்க்கு மேல… ஆகுமே…’ என்று யோசித்த பரமசிவம், தற்செயலாக வெளியூரில் இருந்து வந்த, இன்னொரு பன்னிரண்டு வயது அனாதைப் பயலை, வீட்டுக்குக் கொண்டு வந்து, விளக்கேற்றச் சொன்ன துடன், சுதந்திரமாடனை, விடவும் முடியாமல், தொடவும் முடியாமல், விலக்கவும் முடியாமல், அவன் விலகுவதற்கான் சூழ்நிலைகளை உருவாகினார்.

சுதந்திரமாடன் கண்ணெதிரிலேயே, புது வேலைகாரப் பையனை, மிளகாய் மூட்டைகளை விற்கச் சொன்னார். “பிரியாணி சாப்பிட்டுட்டு வாடா…” என்றார் ; கொஞ்சினார்; குலாவினார். போதாக்குறைக்கு மாடனைப் பார்த்து, “நாலு எருமை மாடு வாங்கித்தாரேன்… மேய்க்கியா..?” என்றார். அவரது தர்ம பத்தினியும், “இப்படியே இருமுனா எப்படி… மாடு முட்டுன சாக்குல, வயலுக்கு போகாட்டா என்ன அர்த்தம்…? பாசாங்குக்கும் அளவு வேணாமா…?” என்றாள். பழைய சுதந்திரக் கோளாறில் அல்லது உரிமையில், கல்லூரிக்காரனை, கிருஷ்ணா…. இந்த சட்டை ஒனக்கு நல்லா இல்லடா…’ என்று சுதந்திர மாடன் கேட்டபோது, ‘நான், ஒன்னமாதிரி, வேலைக்காரனா… கண்டதப் போடுறதுக்கு..” என்றான் அந்த கிருஷ்ணன். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பரமசிவம், லேசாகச் சிரித்தார்…. லேசாத்தான்….

சுதந்திரமாடன், இந்த முப்பத்திரண்டாவது வயதில், மனைவி வேண்டும், மனை வேண்டும் என்று நினைக்காமல், ‘உழைப்பு…. உழைப்பு…’ என்று சொல்லாமல் செயலில் காட்டியவன், இன்றும் இருமிக் கொண்டிருந்தான். குடலை, வாய்க்குக் கொண்டுவரும் இருமல், வெள்ளைச் சளி ; குங்கும் எச்சில். எம்மா… எம்மா…’ என்ற வார்த்தைப் பிளிறல்கள். எனக்காம்மா ரத்தம்’ என்ற கத்தல்கள். எனக்குச் சீக்கிரமா சாவு வரமாட்டங்கே…’ என்ற புலம்பல்கள். இருபதாண்டு கால உழைப்புக்கு, ஒரேயடியாய் ஓய்வெடுக்கும் இயலாமைப் பெருமூச்சு . இதுதான் உலகமா என்ற ஆதங்கம். எல்லா இடத்துலயும் ஏழைகள் கறிவேப்பிலைகளோ என்ற இருமலுகளுக்கிடையே தோன்றிய ஆராய்ச்சி.

சுதந்திர மாடன் இருமினான். யானை பிளிறுவதுபோல் இருமினான். ஆந்தையின் மரண ஓலத்தைப்போல் இழுத்துக் கொண்டே இருமினான். பாம்பு வாயில் அகப்பட்ட சாகாத தவளைபோல் – பல்லியிடம் சிக்கிய பூச்சி போல், இருமலில் சிக்கி, ரத்தஞ் சொட்டச் சொட்ட கக்கி, இருமியபோது –

பரமசிவம், வந்தார். படுத்திருந்த கோலத்தோடு வந்தார்.

“என்னடா… ஒன் மனசுல என்ன… நெனப்பு… நாங்கெல்லாம் தூங்கணுமா….? வேண்டாமா…?”

திருமதி. பரமசிவம், வந்தாள்.

“எல்லாம் நீரு கொடுத்த இளக்காரம். நாம தூங்கக் கூடாதுன்னு வார பாசாங்கு இருமலு… நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்ச கத… நம்ம வீட்டுக்கும் வந்துட்டு…”

சுதந்திரமாடன், பரமசிவத்தைப் பார்த்தான். நாளைக்கு வருஷப் பிறப்பு. சொல்லிட வேண்டியதுதான்.

“மாமா, என்னால முடியல…. நாளையிலே இருந்து நின்னுடுறேன்…. ஒம்ம கையால… ஒரு வெத்துல பாக்கு கடைவச்சிக் கொடுக்கணும்… என் கணக்கப் பார்க்கணும்.”

“பொல்லாத கணக்கு… ஒம்மா சாவும்போது, முந்நூறு கொடுத்தேன். அந்த முந்நூறு இப்போ மூவாயிரம் ரூபா மாதிரி. நாளைக்கு கணக்குப் பார்க்கலாம். யாரு யாருக்கு கொடுக்கணும் என்கிறதை… காலையில் பேசிக்கலாம்… ஒன் பணத்துல, ஒருபைசா வேண்டாம்…”

பரமசிவம், மனைவியோடு போய்விட்டார்.

சுதந்திரமாடனுக்கு, ரத்தம் உறைவது போலிருந்தது. இருமல் கூட, அவனுக்குப் பயப்பட்டு சிறிது விலகியது.

‘சாமக் கோழி கூவியது. புதிய வேலைக்காரப் பையனிடம், பரமசிவம் பேசுவது அவனுக்குக் கேட்டது.

“ஏய்… ராசதுரை…. எழுந்திரு ராசா. மாட்டுக்கு தண்ணி காட்டு… வயலுக்கு ஜாக்கிரதையா போடா… இல்லன்னா – கொஞ்சநேரம் தூங்கு….. முடியாட்டா தூக்கக் கலக்கம் போறதுக்கு… காத்தமுத்து கடையில் ஒரு டீ குடிச்சிட்டுப்போ….. வெறும் டீ ஆகாது…. ஒரு மசால்வடையும் தின்னு … இந்தா காக…. எழுந்திரு… ராஜா…. மாடு , ஒன்னையே பாக்குது பாரு…”

சுதந்திரமாடன், ஒரு முடிவுக்கு வந்தான்.

பரமசிவத்தின், சாப்பாட்டுக்குள் சாப்பாடாகப்போகும் அந்த, பையனிடம் தன் கதையை பக்குவமாகச் சொல்லி, அவனை மீட்க வேண்டும்….. அப்புறம், தான் அலட்சியப்படுத்திய சக விவசாயத் தொழிலாளிகளின் இடத்திற்குப் போகவேண்டும். ‘என்னைப்போல் ஆகாமல் இருக்க என்ன வழி…’ என்று கேட்க வேண்டும். அதற்கு, ஏதாவது செய்தாக வேண்டும்.

அப்புறம்… இருமல் விட்ட வழி…

– தாமரை, ஆகஸ்ட் – 1979

– தராசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, கங்கை புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *