சுமங்கல்யன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 3,448 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏவ் – ஏவ்!” இடி குமுறுவது போன்று ஒரு ஏப்பத்தை விட்டு, தொப்பையைத் தடவி, சற்று எட்டவிருந்த செல்லத்தைக் கிட்ட நகர்த்தி…

இன்றைய சமையலே வெகு ஜோர் – பரவாயில்லை. குட்டி கை வாயிக்கிறது! மைசூர் ரஸமும், டாங்கர் பச்சடி யும், அந்த கத்தரிக்காய் எண்ணெய்க் கறியும் நன்னா அமைஞ்சு போச்சு.

இந்தக் கத்திரிக்காயிருக்கே , இவள் திருத்திய மாதிரியே அவாதி. கதம்ப சாம்பாருடன் சேர்த்தாலோ? மொச்சைப் பருப்பு, முருங்கைக்காய், கத்திரிக்காய், முள்ளங்கி, வெங்காயம் எல்லாம் ஒன்றாய்ப் போட்டு, பருப்பைக் கொட்டி, தேங்காயும் அரைத்து விட்டு, அப்பளத்தையும் பொரித்துவிட்டால், ஆஹா? ஹாஹா! நாக்கில் ஜலம் சொட்டறது. ஆனால் இந்த வெங்காயத்தை தள்ள வேண்டியிருக்கே? ஒரொரு சமயமும் ஏண்டா காசிக்குப் போனோம் என்றிருக்கு. என்ன பண்ணுகிறது, போகிற வழிக்கும் புண்ணியம் தேட வேண்டியிருக்கே. வயது அப்படியே உட்காந்து கொண்டேயிருக்கிறதா?- சரி – வெற்றிலையைப் போடலாமா? ஓரொரு காரியத்துக்கும் ஒரு ஒரு தர்மம் இருக்கிறது. வெற்றிலை போடுவதையும் சேர்த்துத்தான் பாக்கை ஊதி வாயுள் எறிந்து, மெல்ல அதுக்கிக் கொண்டே வெற்றிலையை தொடையில் துடைத்து, காம்போடு நடு நரம்பை உரித்தெறிந்து விட்டு, சுண்ணாம்பைத் தடவி மடித்துக் கடைவாயில் கொடுத்து மெள்ள உள்ளே செலுத்தி… இந்த சுகம் போடறவனுக்குத் தானே தெரியும்!

இந்த நாளில் யார் இப்படி அநுபவித்து வெற்றிலை போடறா? பெரிசிலேருந்து சிறிசு வரை பொம்மனாட்டி சுள் உள்பட இப்ப எல்லாம் ‘பீடா, கிள்ளி’ என்று அலையறதுகள். பழைய நாள் போல் எத்தான் இருக்கிறது? அந்த ஆரோக்கியமென்ன, ஆசாரமென்ன, பழைய காலமே காலந்தான்- வெற்றிலைப் பாக்கி லிருந்தே பேசுவோம். அந்த நாளைய வாசமும் காரமுமா யிப்போ இருக்கிறதோ? உதடும் நாக்கும் எப்படிப் பற்றும்! இப்பொத்தான் சிவப்புக்கு என்னவோ ஒரு பென்சிலை யெடுத்து கண்ணாடிக்கெதிரில் ஒரு மணியா தீட்டிண்டு நிற்கிறதுகளே! பிறக்கிற போதே பீடி பிடிச்ச மாதிரி கறுப்பு உதடோடு பிறக்கிறதுக்கள்! பண்ணுவதெல்லாம் அக்கிரமம்! அல்பாயுசுக்கள். ஈர், பேன் நசுக்கிற மாதிரி மடிந்து விடுகிறதுகள் ! உயிரோடு வளைய வரக்கூடத் துப்பில்லை கர்மம் கர்மம்! சரி, இருக்கிறவரைக்குமாவது சரியாயிருக்கிறதுகளா? உயிரை வாங்கி விடுகிறதுகள்.

பாறேன், இந்தக் குட்டிக்கு முன் அந்த வத்சலை யிருந்ததே அதன் கிட்டவிருந்து தப்பிச்சாலே போது மென்று ஆய்விட்டது. மூணு வருஷத்துக்குள் மூச்சு திணறிப் போச்சு. ஏதோ படித்த பெண்ணாயிருக்கே, நீக்குப் போக்குத் தெரிந்து நுட்பமான மனஸறிஞ்சு நடக்கும் என்று கட்டிக் கொண்டது போக, அது பணத்தைத் தண்ணிக் கணக்கில் வாரிவிட்ட தினுசைப் பார்த்தால் பத்துக் குழந்தை பெற்ற சம்சாரி கெட்டான் போ! ஏதேது, மனசு நோகடிப்பில் அவளை நானே முந்திக்கொண்டு விடுவேனோ போல் அல்லவா ஆயிடுத்து! எத்தனை தினுசு புடவை, வாசனைத்தைலம், ஸ்நோ , கொண்டை ஊசி, பவுடர்! கண்ணாறாவி! இத்தனை சிங்காரத்துக்கும் தக்கபடி லக்ஷணமாவது உண்டா ? புருவத்திலிருந்து நெற்றிக்கு முன் மயிர் ஆரம்பித்து விட்டது! மூக்கு, மேட்டைப் பார்த்துக்கொண்டு — பல்லில் சுல்யாணத்துக்குத் தேங்காய் துருவலாம். அந்தக் கோணவகிடும் அதற்கு ஒவ்வாமல் கொசுவக்கட்டும், கர்நாடகமும் நாகரிகமும் கலந்த ஒரு புது நாடகமாய் –

வேறே வேலையோ கிடையாது. பொழுது எப்படித் தான் போகிறது? எந்த இடத்தில் என்ன சினிமா, என்ன பாட்டுக் கச்சேரி, கூத்து, சர்க்கஸ், என்று அலைந்து கொண்டேயிருக்கும். எத்தனை நாளைக்கு, ஆய்ந்து ஓய்ந்து வீட்டில் ஆறுதலையடைய நினைந்து வந்தால் – படியேறுமுன் பக்கத்து வீட்டிலிருத்து பையன் வந்து விடுவான் – “எங்காத்துப் பாட்டியோடு உங்காத்து மாமி சினிமாவுக்குப் போயிருக்கா. உங்களை நேரமாச்சுன்னா சாதத்தை எடுத்துப் போட்டுண்டு , எலி தள்ளாமல் அழுந்த மூடிவைக்கச் சொன்னா?” அடராமா இப்படியும் என் பிழைப்பு ஆகணுமா? ‘அழுத்த மூடிவைக்கச் சொன்னா’என்ன வக்கணை! கோர்த்து அறையலாமா என்று ஆத்திரம் வரது. வந்து என்ன பண்ணுகிறது?

வருவாள் – குறட்டு விட்டுத் தூங்கும் பிரம்மானந்தத்தை கலைக்க , வாசற்கதவின் வெளித் தாழ்ப்பாளைத் தடதடவென்று ஆட்டிக்கொண்டு , லலல” சினிமாவில் கேட்ட புதுமெட்டை இழுத்தபடி, “என்ன தூக்கம் அதுக்குள்ளே, படம் பத்தாயிரம் அடிதானே? சுருக்க விட்டுட்டான். சுமாராய்த்தானிருந்தது ஐய! நன்னாவேயில்லை” –

ஒரொரு தடவையும் இப்படித்தான் போவதில் என்னவோ குறைச்சலில்லை. “பூ! என்னத்தைப் பாடிப்பிட்டேன்! என்னவோ- தேவலை- த்ஸுசுமாராயிருக்கு” நன்றாயில்லை என்று சொன்னால்தான் நாகரிகத்தின் சிகரத்தைப் பிடித்து விட்டதாய் நினைப்பு.

என்ன ஆச்சரியம்! பொறுப்பில்லாமல், சின்னக் குழந்தை மாதிரி. அப்படியே அவளும் காலத்தைத் தள்ளி விட்டாளே! சரியா மூணுவருஷங்கூட வாழவில்லை இதே மாதிரி ஒருநாள் ராத்திரி கொட்டு மழையில் எங்கேயோ காட்சி பார்த்துவிட்டுத் தெப்பமாய் நனைந்து வந்து உடம்பு வெடவெடவென உதறிக்கொண்டு வந்து படுத்தவள் தான்.

மூணாம் நாள் காலி – உடம்பு என்னவோ பூஞ்சை. அவள் வேலை வெட்டிக்கு லாயக்கில்லை ஆனால் அதை நம்பியா பண்ணிண்டோம்? என்னவோ நமக்கு வயது ஆகிண்டே வரதே, இந்த ‘புத்’ என்னும் நரகத்தைத் தாண்ட மாட்டோமா என்கிற சபலம் தான். ஆனால் பிராப்தி வேண்டாமா? நாம் என்ன செய்வது?

ஏதோ நாமும் சாப்பிடுகிறோம் ஆமாம்! தன் வயிற்றுக்கே தின்னாத கருமிகள் எத்தனை பேர் இல்லை? தனக்குப் போடுவதே தருமம், பெண்டாட்டிக்குப் போடுவது தானமாயிருக்கும் இந்நாளில் நம் வீட்டிலும் நாலுபேர் சாப்பிடுகிறார்கள். வெள்ளிக்கிழமை தவறினா லும் கோவில் அர்ச்சனை தவறுவதில்லை பிரதி தினமும் சாளக்ராம பூஜை பண்ணுகிறேன். ஏதோ சாப்பிட உட்காரும் வரை என்னால் முடிந்த வரை . நாலுபேர் மாதிரி பூணூலை முதுகு சொறியவும், சோப்பு அறுக்கவும் மாத்திரம் உபயோகிக்கிறேனா? ஞாயிற்றுக்கிழமை தோறும் திண்ணையில் உட்காந்து என் கையாலேயே ஒரு பிடி அரிசி பிச்சைக்காரர்களுக்கு அள்ளிப்போட வில்லையா? அதுவும் என் கையென்ன சின்னக்கையா? மடி ஆசாரம், ஜபம் வெச்சிட்டிருக்கேன். காசியிலிருந்து கன்யாகுமரி வரைக்கும் தீர்த்த யாத்திரை போயிருக் கிறேன். கோவில் குளம் என்று எவ்வளவு பணத்தை வாரியிறைத்திருக்கிறேன் ! பண்ணிக்கொண்ட அத்தனை கலியாணங்களும் என் செலவில் தானே! வரதக்ஷணைக்கும். ஆசைப்பட்டு பல்லையிளித்தேனா? இதைவிடப் பெருந் தன்மையாய் யாராலிருக்க முடியும்? இதையறிஞ்சவர் யார்?

ஆனால் ஒருத்தி அறிந்திருந்தாள். மாமியார் என்றால் எந்த மாமியார் என்று எனக்கே சந்தேகம் வந்து விடப் போகிறது! துளசியின் தாயார். அன்றைக்கு மாப்பிள்ளை யழைத்த பின், முகூர்த்தத்திற்கு முதல் நாளிரவு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தாளே!

“ஏண்டி துளசி – பக்கத்தறையில் பேசினது தலையிலி டிக்கிறமாதிரியிருந்தது, அந்த அம்மாவுக்கே குரல் கட்டை. ரகஸ்யமாய்ப் பேசறாளாம், சிரிப்பு வரது!

“ஏண்டி துளசி – உம்முணாமூஞ்சியாருக்கயே! நாமி ருக்கும் நிலையென்ன நிலவரமென்ன? உனக்கு அப்புறம் இன்னும் நாலு பெண் குதிராகக் காத்திண்டியிருக்குகள் ! மங்கல்யத்துக்கு மஞ்சள் கயிறுகூட நமக்கு செலவு வைக்காமல் பண்ணிக்கறப்போ, இந்த மட்டுக்கும் அகப்பட்டதேன்னு இல்லாமே …!”

அதற்கு ஏதோ பதில் கிளம்பிற்று. ஆனால் காது கேட்கவில்லை. என்றைக்காவது கேட்டிருந்தால் தானே அன்றைக்கு கேட்கப்போகிறது! கையைப் பிடித்து வீட்டுக்குக் கூட்டி வந்ததிலிருந்து சாகறவரைக்கும் அப்படியே தானே!

மறுபடியும் மாமியார் – “என்ன உத்தியோகம் பண்ணறான்னு தெரியுமா? இப்போதான் புதுசா சம்பளம் ஒசந்திருக்காம், உனக்கென்னடி குறைச்சல்? நகையும் நட்டும், பட்டும் பனாரிசுமா வாங்கி வாங்கி உன் மேல் அடுக்கப்போறான் பாரு ! கூறைப் புடவையைப் பார்த்தையா துளசி? கண்ணைப் பறிச்சுண்டு போறதுடி ஜரிகை உடம்பை அறுத்தூடுமேன்னுதான் கவலை – உம்? என்ன சொல்றே? ஊம்? சொல்வதை உரக்கச் சொல்லித் தான் அழேன்! ஒரு வழியா ஊமையாயிருந்துட்டால் என் பெண் ஊமைன்னு சொல்லிவிடுவேன், அப்பவும் அவன் பண்ணிக்கத் தயார் , அவ்வளவு நல்லவனா யிருக்கான்” – திடீரென்று – “அடி போடி அசடே! என்னமோன்னு பார்த்தேன், அவனுக்கென்னடி குறைச்சல்? கூனா, குருடா ஊமையா? வியாதியா? ஆண் பிள்ளைக்கு ஏதுக்கடி அழகு?- ஆமா, நீ சிவப்பா யிருக்கையே – அந்தப் பெருமை தாங்க முடியல்லையாக்கும்! ஆனை கறுத்தாலும் ஆயிரம் பொன்னு டி ! ஆள் கல்லாட்டம் இருக்கான் கடோத்கஜன் மாதிரி! அந்தக் கூட்டமே ஆயுசு கெட்டிடீ ! அத்தோட அவனுக்குத்தான் செவ்வாய் தோஷம் இருக்கேயொழிய உன் ஜாகத்தில் இல்லே. அதனாலே தாலி கட்டிக்கறபோதே அடிச்சு விழாதே! (நான் கொஞ்சம் பூசினாப்போல்தான் இருக்கேன் அதற்காக கடோத்கஜன் என்கணுமா?). சரி அழுதூண்டேயிரு. அம்மா செத்துப் போயிட்டால் இப்படித்தான் அழுவேன் என்று அழுது காண்பிக்கிறையே அது வரைக்கும் ரொம்ப சந்தோஷண்டீ-”

ஆமாம், எரிச்சலாய்த்தான் வரும். வராதா கல்யாண வீட்டில் இப்படி மூக்கைச் சிந்திப் போட்டுக்கொண் டிருந்தால்? இதுகளையெல்லாம் கட்டிக்கலையென்று யார் அழறா? எல்லாம் அம்மா சொல்லைத் தட்டப்படாதுன்னு தானே?

“அப்பா, நான் செத்தால் சவுண்டிக்கு உன் தோல்மேல் ஒருத்தி தர்ப்பை பிடிச்சால் தான் நான் கரையேறுவேன் என்று தீர்த்துச் சொல்லிவிட்டாளே! தவிர, இதில் அம்மா சொல்லி ஆகவேண்டியதே என்ன இருக்கிறது? நமக்கும் சந்ததி வேண்டாமா? சந்ததிக்கென்று எத்தனை பேர் என்னென்ன பண்ணவில்லை? வியாசன் கூட, தாய் சொல் தட்டாது தம்பி மனைவிகளைக் கருவுறுத்த வில்லையா? அந்த உயர்ந்த தத்துவம் யாருக்கு இருக்கு? யாருக்குப் புரியப்போகிறது? இவள் அழகைப் பார்த்தா நான் இவளைக் கலியாணம் பண்ணிக்கொண்டேன்?

ஆனால் துளசி அழகி. அதுவும் எப்படிப்பட்ட அழகு முன்னையே பெண்பார்க்கப் போயிருந்தபோது, அவளைப் பார்த்திருந்த போதிலும், அன்று பொலபொலவென விடி வேளையில் பரதேசிக் கோலத்திலிருந்து திரும்பினதும், அவள் உள்ளிருந்து மணக்கோலத்தில் வெளிப்படுகையில், உஷத்காலத்து தேவதையே, ப்ரஸன்மானாற்போல் அல்லவா இருந்தாள்! பளிங்கிலடித்த சிலை போன் றிருந்தாள். கடியாரத்துக்குள் அமுக்கி வைத்த எஃகுச் சுருள் போல், இருகாதண்டையும் மயிர் சுயமாகவே சுருண்டு, காற்று மூச்சில் என் மார்போல் படபடத்தது. அவள் மேல் போட்டிருந்த அணிகள் அழகுக்கு அழகு செய்வது போல் அர்த்தமில்லாமல் போய்விட்டன. தாழ்ந்த கண்களின் மேல் கவிந்த இமையும், படர்ந்த ரப்பையும் தூக்கவேயில்லை. எப்படித்தான் கலியாணம் முழுவதும், நம் கண்ணில் பட்டவரை அப்படியே தந்தப் பொம்மை மாதிரியிருந்தாளோ?

அன்னிக்கி மாத்திரமா , என்னிக்குமே, அவளோடு வாழ்ந்த பத்து வருஷங்களுமே, அப்படித்தானேயிருந்தாள்! நாளுக்கு நாள், பிறைச்சந்திரன் மாதிரி, கொஞ்சங் கொஞ்சமாய் , ஏதோ கணக்கில், கண்பட எப்படியோ தேய்ந்து வந்தாள் வாயைத் திறக்கமாட்டாளா, மஹராஜி! ஏதோ கேட்ட கேள்விக்குத் தலையை ஆட்டியே எப்படி காலத்தைக் கழித்தாள்? ஏன் பேசாமடந்தையா யிருக்கிறாய் என்று கடிந்தாலும், குபுகுபுவென்று முகத்தில் குங்குமம் குழம்பு மே ஒழிய சண்டையாவோ சமாதானமாவோ வாயிலிருந்து ஒரு முத்து உதிராதா? இவளிடமிருந்து ஒரு வார்த்தைக்குக் கூட லாயக்கற்ற மஹாபாபியா நான்? ஊஹூம்! அவளாலேயே வீட்டில், நம் குரலே நமக்கு இரைச்சலாப் போச்சு.

ஆனால் வீட்டு வேலை செய்யாதவளா , கையா லாகாதவளா , பின்னால் வந்தவளைப் போல் கப்பியா? ஒரு நாளுமில்லை. அப்படிச் சொன்னால் சொன்ன வாய் புழுத்துப் போகும். நன்றாய்த் தான் உழைத்தாள். மாமியாருக்கும் கொண்டவனுக்கும் செய்யும் பணிவிடை யில் ஒரு குறைவில்லை. ஆனால் ஒன்றிலும் ஒட்டாது உணர்ச்சியின் சூடு இல்லாத உழைப்பிலோ பணிவிடை யிலோ, அதை அடைபவருக்கு என்ன ருசியிருக்கிறது? சந்தோஷமாய்க் கை கொட்டி, கலகலவென்று வாய் திறந்து பல் தெரியச் சிரித்து ஒரு நாள் …? ஊஹூம்.

அவள் விபரீதம் தான். அவள் தாயார் செத்ததுக்கு அவள் போகவேயில்லை. அன்னிக்கு அழுது காண்பித்த துக்கே அந்த அம்மாள் அவ்வளவு சந்தோஷப்பட்டாளே! அதற்காகாவது போக வேண்டாமோ? தீட்டு உண்டே என்று கூடப் பார்க்காமல் அன்றைக்கு தான் வடாம் பிழியற வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு மாவைக் கிண்ட ஆரம்பித்து விட்டாள். “என்னடி துளசி இப்படிப் பண்ணறே? செத்துப் போனது உங்க அம்மாதாண்டி! நீ போகாவிட்டாலும் உங்காத்து மனுஷா எங்களை என்ன சொல்லுவா?” ஊஹும்! அசைந்து கொடுத்தால் தானே?

“அப்பா என்னதான் இருந்தாலும் உன் ஆம்படையாள் கடப்பாறை கஷாயம் போட்டுக் குடிச்சவள் தான்” என்று அம்மா சொன்னது சரியாப் போச்சு.

எல்லாத்துக்குமே அப்படித்தான். ஓட்டிற்குள் நத்தை போல் தனக்குள் ஒரு பத்ரம், ஒரு உணர்ச்சியும் காண்பிக்காத இந்த பொம்மையுடன் குடித்தனம் நடத்தி என்ன சுகத்தைக் கண்டேன்!

ஆனால் ஓரொரு சமயம் – யாரும் இல்லாத சமயத்தில் அவள் ஓட்டிலிருந்து அவள் வெளி வரும் வேளைகளில் … சில மாலைகளில் அவள் தோட்டத்தில் செடிகளண்டை தயங்கி நிற்கையில், மாடியிலிருந்து நான் அவளை கவனிக்கையில், அவள் அழகு அமானுஷ்யத் தன்மையைப் பெற்று – பிரமிக்கத்தக்கதாயிருக்கும். உள்ளத்தில் இம்சை கிளறும், இன்னும் சற்று கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தால் கரைந்து விடும் கானலோ என்று கூட மனம் திகைக்கும். கதையில், நந்தவனத்தில் ராஜகுமாரி போல், அவள் எதற்காக, எதை எதிர்பார்த்து அப்படி நின்றாள்?

இன்னொரு சமயம், ஒரு நாளிரவு நடு நிலவு. அன்று பௌர்ணமி, இறுக்கம் தாங்க முடியவில்லை. தூக்கம் வரவில்லை. மாடியில் திறந்த வெளியில் சற்று உலாவலாம் என்று வந்தால், அங்கு உட்காந்து முகத்தைக் கையில் புதைத்து, அழுது கொண்டிருக்கிறாள். தலைமயிர் அவிழ்ந்து தரையில் புரள்கிறது. அன்னிக்குத்தான் அடிவயிற்றில் ‘பகீர்’ என்றது. இதென்னடா கிரஹசாரம்! ஏதாவது யக்ஷிணியைக் கட்டிக்கொண்டு விட்டேனா? இது மாதிரி தான், நடுராத்திரியில், நடுநிலவில், பாட்டை யில், அதுகள் அழகான ரூபம் எடுத்து அழுது கொண் டிருக்குமாம். அனுதாபப்பட்டு பக்கத்தில் போகிறவர்களை அடித்துவிடுமாம் – ஓசைப்படாமல் பின்வாங்குவது தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்?

அடுத்தநாள் அதைப்பற்றி – இதைப்பற்றி அவளைக் கேட்கவே அச்சமாயிருக்கிறது. வெறும் பேச்சுக்கே பூனையைப் பார்த்த எலி போல உடம்பெல்லாம் வெட வெடவென்று உதறுமே, இதற்கா பதில் சொல்லப் போறாள்?

எல்லாம் போகட்டும், நான் என்ன சிங்கமா , புலியா, கரடியா. மனுஷ்யன் தானே! எதிலே குறைச்சலாயிருக் கிறேன்? புத்தியில் குறைச்சலா? ஆபீசில் என் வார்த்தைக்கு எவ்வளவு மதிப்பிருக்கிறது! நான் காண்பித்த இடத்தில் கண்ணை மூடிண்டு துரை கையெழுத்துப் போட வில்லையா? காரியசாதனையில் குறச்சலா? அல்லது பணத்தில் குறைச்சலா? இன்னிக்குத் தேதியில் நான் கண்ணை மூடினால் மரணபண்டு பத்தாயிரம் அவளைச் சேராதா? இதைவிட ஒரு புருஷன் ஒரு பெண்டாட்டிக்கு என்ன செய்யமுடியும்? நான் சாகிறதுக்கு முன்னால் அவள் செத்தால், அது என் தப்பா? அல்பாயுசுக்கட்டை அல்பாயுஸ்!

ஒரு தினுசில் அவள் கொடும்பாவிதான். அவள் கர்ப்பமா இருக்கையில் அவள் எண்ணத்தை யார் கண் டார்கள்? அத்தனை நாள் கழித்து, என்னவோ எதிர்க்க வலுவற்றதால் அல்ல, முற்றுகையின் நீடிப்புக்கு அலுத்துப் போய் கோட்டை சரண் அடைந்தது போலன்றி. உள் வேகமில்லை .

மூன்று மாதமாய் அவள் ஸ்நானம் பண்ணவில்வை என்று நிச்சயமானதும் பாவம், அம்மாவுக்குத்தான் சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஆனால் எனக்குத்தான் சுவாரஸ்யப்படவில்லை. சப்பென்றிருந்தது. அவள் மாறி னால் தானே! “எல்லாம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத் தால் சரியாய்ப் போயிடும். பொம்மனாட்டிகளே அப்படித் தாண்டா” என்று அம்மா தைரியம் சொன்னாள் என்றாலும் அவள் என்னவோ உலகத்தையே தன் உதரத்தில் அடக்கினதைப்போல், என்ற மாதிரி தனக்குள் தானே பத்திரமாயிருந்தாள்.

பிரசவம் கூடியவரையில் செவ்வையாத் தானே நடந்தது! குறைமாசத்தில் ஆகியும், பிரசவம் சுகப் பிரசவம்தான். குழந்தைதான் என்னவோ மாவுப் பொம்மை மாதிரி…. முதல் எட்டு நாள் வரை ஒரு தொந்தரவுமில்லை. எட்டா நாள் ராத்திரி லேசாய் உடம்பு சுட்டது. ஏதோ பால்கட்டு ஜூரம் என்று நினைத்தது. விடியற்காலை வேளையில் துளசி எவ்வளவு அழகாய் இருந்தாள் !

காலை எட்டு, எட்டரையிருக்கும். ‘ அத்தை, தாகம் தொண்டையை வரட்டறது” என்றாளாம். ‘இரு, பார்லித் தண்ணி போட்டிருக்கேன் சுடவெச்சுக் கொண்டு வரேன்” என்று அம்மா சமையலுள் உள்ளே போனாள். அதற்குள் அவசர அவசரமாய் எழுந்து வெளியே வந்து குழாயண்டை போய் சொம்பு பச்சை ஜலத்தை மடக் மடக்கென்று குடித்து விட்டாள். குடித்துவிட்டு அவள் சொம்பைக் கீழே வைக்கறதுக்கும் இப்பொ மாதிரி யிருக்கிறது – அம்மா சமையலறையிலிருந்து வெளியே வந்து இந்தக் கோலத்தைப் பார்த்துவிட்டு கன்னத்தில் அறைந்து கொண்டு நிக்கறதுக்கும் நான் பத்தியத்துக் கென்று பிஞ்சு கத்திரிக்காயா பார்த்து வாங்கி உத்தரி யத்தில் முடிச்சுப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையறதுக்கும் –

“துளசி! என்ன காரியண்டீ பண்ணீனே?”

“இல்லே அத்தை, தாகம் தாங்க முடியல்லே சொம்பைக் கவிழ்த்து வெச்சிருக்கேன். தண்ணியைத் தெளிச்சு எடுத்துக்கோங்கோ.” அமைதியாய் நடந்து போய் படுக்கையில் படுத்தவள் தான். அப்புறம் எழுந்திருக் கவேயில்லை. அன்று பகலும், இரவும் அந்த உடம்பில் காய்ந்தது ஜுரமா, நெருப்பா? அனல் வீச்சு பக்கத்தில் அண்ட விடல்லியே! என்னென்னவோ வைத்தியம் பண்ணி னேன். புலிப்பாலையே கொண்டு வந்தேன். என்னத்தைப் பண்ணி என்ன? சாகவே தீர்மானம் பண்ணிவிட்ட வளுக்கு சஞ்சீவி மருந்தைக் கொண்டு வந்துதானென்ன? அதுவேதான் அவளுக்கு விஷம். அப்படித்தான் நான் அவளுக்கு என்ன தீங்கு இழைத்து விட்டேன் ? விடிந்ததும் கூப்பிட்றா பிராம்மணாளை, கொண்டு வாடா மூங்கிலைத்தான்!

முகமாற்றமாய் குழந்தையாவது தங்கிற்றா? எப்படித் தக்கும்? பிறக்கும் போதே பூனைக்குட்டி மாதிரிக் கத்திற்று; தாய்ப்பாலுமில்லை. கொடுக்கவே மறுத்துவிட்டாள். எட்டாம் மாதம் தொட்டில் ஏறாது என்று சும்மாவாச் சொன்னார்கள்?

போதுமடா போதும் அழகைக் கட்டிக்கொண்டு அவஸ்தைப்பட்டது போதும் போதும். அழகின் திக்குக்கே ஆயிரம் சலாம்!

தருமி இருந்தாளே, கன்னிகாதானமாய்ப் பெற்று மூத்தாள் , தர்மபத்னி உண்மையான சகதர்மிணி, அவளிடம் இந்த சங்கடமெல்லாம் கிடையாது. ஆள் என்னவோ மத்தளம் மாதிரிதான் இருப்பாள் . மூக்குமுழி கிடையாது. சூதுவாதும் கிடையாது. மனசில் எதையும் பொத்தி வைக்கவே தெரியாது. மெதுவாய்ப் பேசினாலே கூடம் அதிரும், கருவேப்பிலைக்காரிக்கு ஒரு கையரிசி போட்டு விட்டு இன்று முழுக்க கொசுறிக் கொண் டிருப்பாள். “விட்டூடேன்” என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும். காசின் அருமை உங்களுக் கென்ன தெரியும்?’ என்று கையை நீட்டிக்கொண்டு நம்மோடு சண்டைக்கு வந்து விடுவாள். இருந்தால் என்ன? அதிர்ஷ்டசாலி அவள் வந்து தான் வீடே விளங்க ஆரம்பித்தது நமக்கும் உத்தியோகம் வளர்ந்தது. அவளுக்கு வேணுமானால் அதிர்ஷ்டமில்லை. பிறந்தும் ஒன்றும் தக்கவில்லை. குழந்தைகளைக் கண்டாலே எவ்வளவு ஆசை! என்ன அருமையாய் சமைப்பாள்! அந்த எலுமிச்சபழ ரஸம் ஒண்ணே போதுமே, சின்ன விஷயங் களிலே சிறு மனசாயிருந்தாலும்!

கடைசியில் அதுதான் அவள் உயிருக்கு உலை வைத்தது. ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறது என்று வெச்சுக்கோ. ஊசிப் போன பண்டங்களிலேயே அவளுக்கு ஒரு தனி ருசி. ”சாஸ்திரி பொண்ணே , இங்கே நன்னா சாப்பிடலாண்டி” என்றாலும் கேட்க மாட்டாள். 4.உங்களுக்கென்ன தெரியும் இளம் ஊசலுக்கே ஒரு ருசி. எனக்கு இப்போ ஆசாரமா, ஜபம் கியம் தட்டுக் கெட்டுப் போறதா? சாமானை வீணாக்க எனக்கும் மனசாகாது” என்று ஒரே அடி அடித்து விடுவாள்.

“ஏன் மிஞ்ச வைக்கணும்? கொஞ்சமாய்ப் பண்றது” – என்றால் வந்தது ஆபத்து.

“ஏன், நான் நிறையத் தின்கறேனே என்று வயிறெரியறதா?” என்று ஏதாவது ஆரம்பிப்பாள். இந்த ஏடா கோடத்துடன் என்ன செய்வது?

வீட்டில் ஏதாவது விசேஷ தினம் வந்தால் அவளுக்குக் கொண்டாட்டம். மூணு நாளைக்கு மிச்சங்களை எரியப் போட்டுத் தின்று கொண்டிருப்பாள்.

கடைசியில் அப்பா திவசக் காய்கறிகள் தான் அவளைக் கொண்டு போய் விட்டன. வேளையும் வந்து விட்டது வெச்சுக்கோ. சுண்டாங்கியைத் தின்று விட்டு இரண்டு தடவை பேதியாகி அப்புறம் அதிஸாரத்தில் கொண்டு விட்டு விட்டது.

பாவம்! இருந்த வரைக்கும் அவளுக்கு மிஞ்சித்தான் மற்ற துகள். காசின் அருமை நன்றாய்க் கண்டவள். கணக்காய் போகவர ஜேபியில் பஸ்ஸுக்கும், வெற்றிலைக் கும் தான் சில்லரை போட்டு வைப்பாள். கையில் தான் பொட்டலமும், ப்ளாஸ்க்கும் கட்டிக்கறோமே!

நம் ஆம்படையான் பெரிய உத்தியோகம் பண்றான் என்ற எண்ணம், பெருமை அவள் ஒருத்திக்குத்தானி ருந்தது. ஆசையாய்க் கோட்டை மாட்டிவிட்டு வெற்றிலை மடித்து கையில் விரலுக்கிடுக்கில் கொடுத்து, சந்துமுனை திரும்பும் வரை, கதவுக் கம்பியைப் பிடித்துக் கொண்டு வாசலிலேயே நின்று கொண்டிருப்பாள். நெற்றி யில் மஞ்சள் பற்றி அதில் அரையணா அகலத்துக்கு குங்குமம் ஜ்வலிக்கும். எனக்குத் தலைவலியென்றாலும் தாங்கமாட்டாள்.

உம்– ம்- எல்லாம் போச்சு, நானும் அந்தக் காலத்தில் இன்னமும் கொஞ்சம் வயசு குறைஞ்சு இதை விட முடுக்காய்த்தானிருந்திருப்பேன். இப்பவோ, நமக்கு வயசாயிடுத்து. உடம்பு தளர்ந்து விட்டது. அம்மாவும் போயிட்டாள். நம்மை கவனிக்கறதுக்கு ஆளில்லை. இப்போ குட்டியைக் கட்டிண்டதே அதுக்காத் தானே! இல்லாட்டா இனிமேல் குழந்தை பெறப் போறோம் என்றா?

குட்டி மனுஷாளுக்கெல்லாம், தத்து பித்து: எண்ணங்கள் கிடையாது. அவாளுக்கு நன்னா தெரியும் நான் செத்தபிறகு சொத்தெல்லாம் குட்டிக்குத்தான் என்று. பாவம், ஊசக்குழம்பெல்லாம் சாப்பிட்டு தருமி: சேர்த்து உசிரையே கொடுத்த சொத்து! நமக்கும் இன்னும் எத்தனை நாள்! ஆச்சு போச்சு. கைகாட்டி சாய்ந்தாச்சு. இன்னும் கொஞ்சம்தான் பாக்கி.

குட்டியும் நன்னா சமைக்கிறாள் – ஏதோ இருக்கும் வரை பிரியமாயிருக்காள். இந்த வயசில் எனக்கு இதைவிட என்ன வேணும்? இன்னும் கொஞ்சம்தான் பாக்கி.

உஸ்…ஸ்… தூக்கம் கண்ணை அயட்டறது… உண்ட களைப்போன்னோ, இப்படியே திண்ணையில் சாய்வோமா……?

குட்டி …வத்சலை … துளசி…த…ரு…மி!…உ…ர்ர் …ர் ற் … கொர்ர்ர்…

– பச்சை கனவு (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

1 thought on “சுமங்கல்யன்

  1. சுமங்கலிக்கு எதிர்பதம் சுமங்கல்யன்..வா.சா.ரா.வைத்தவிர ஆணாதிக்க சமூகத்தின் அவலத்தை நையாண்டியாக எடுத்துரைக்க வேறு யாரால் முடியும்???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *