வானிலே தீப ஒளி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 1,684 
 

ஏர் ஆசிய விமானம் மேடான் பொலோனிய அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகிறது. காலை எட்டு முப்பதுக்கு அது தன் பயணத்தைத் தொடங்கவிடும். இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. கடைசி நேரப் பயணிகளில் ஒரு சிலர் பரபரப்புடன் விமானத்தினுள் நுழைகின்றனர். அழகு தேவதைகளாகப் பவணி வந்து கொண்டிருந்த பணிப்பெண்கள் இனிய முகத்துடன் வரவேற்று அவர்களுக்குரிய இருக்கைகளில் அமர்த்துத்கின்றனர்.

“ஹல்லோ…….மலர் ஹவ்வார் யூ?” 

“ஒ……..மேரி சோங்………..! ப்பைன் தெங்கியூ” 

காலியாக இருந்த பக்கத்துத் இருக்கையில் அமர்கிறாள் மேரி சோங். மலர்விழியும் மேரி சோங்கும் ஒரே பல்கலைக்கழகத்தில்தான் மருத்துவம் பயில்கின்றனர். எனினும் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வது குதிரைக் கொம்புதான். 

“ஹப்பி தீபாவளி…!” 

“தெங்கியூ………..!” புன்னகைக்கிறாள் மலர்.

நாளை மலரவிருக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு மறக்காமல் வாழ்த்துத் கூறிய தோழியை மனதுக்குள் எண்ணி மகிழ்கிறாள்.வேற்று நாட்டில் இருக்கும் போதுதான் மலேசியரிடையே அன்பு மேலும் பெருகும் என்னும் கூற்றை தோழியின் உரையாடல்கள் மெய்ப்பித்துக் கொண்டிருந்தன. நோயுற்ற தம் தாயாரைக் காண்பதற்கு அவள் தாயகம் திரும்பிக்கொண்டிருந்தாள். 

விமானம் இன்னும் சற்று நேரத்தில் புறப்படுவதற்கான அறிவிப்பு செய்யப்படுகிறது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பு வார் பட்டைகளை அணிந்து கொள்கின்றனர். விமானத்தில் ஏறுவதற்கு முன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் பேசியதுடன் மலர் தன் வருகையை உறுதி செய்திருந்தாள். சுமார் இரண்டு மணி நேரத்தில் ஒரு வருட இடைவேளைக்குப் பின் குடும்பத்தை ச் சந்திக்கப் போவதை எண்ணி மகிழ்கிறாள்.

“பயணிகள் அனைவருக்கும் காலை வணக்கம். நான்தான் உங்கள் கேப்டன் தேவேந்திரன் பேசுகிறேன். உங்கள் பயணம் மகிழ்வுடன் அமைய வாழ்த்துகிறேன்.நன்றி”. 

இனிய தமிழில் கேப்டன் தேவேந்திரன் கூறிய வரவேற்பு மலரின் காதில் தேனாய் விழுகிறது. கேட்பது தமிழ்தானா? மலரால் நம்பவே முடியவில்லை! 

கடந்த ஒருவருடமாக ஏர் ஆசியா விமானத்தில் பயணிக்காததால்,தமிழில் அறிவிப்பு செய்யப்படுவதை மலர் அறியாமல் போனதற்காக வெட்கப்பட்டாலும்,வெளியூரில் அதுவும் அனைத்துல விமானப் பயணத்தில் தமிழ்மொழியில் அறிவிப்பைக் கேட்டட் து மலருக்கு இன்ப அதர்ச்சியாகவும் ஆனந்தமாகவும் போகிறது. மலர் தனக்குள் சிரித்துக்கொள்கிறாள். 

அப்போது தம் அருகே வந்துகொண்டிருந்த பணிப்பெண்ணிடம் தமிழ் அறிவிப்பைப் பற்றிக் கேட்ட போது, “மிஸ்.மலர்….. கடந்த 2013 ஆம் ஆண்டே தமிழில் அறிவிப்புகள் செய்யும் முறை வந்துவிட்டது. விமானத்தை இயக்கும் விமானி தாய்மொழியில் பேசுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது!” தகவலை மிகவும் துல்லியமாகச் சொல்லி நகர்கிறாள் அழகு தேவதை பூவிழி. அவள் வழங்கிச்சென்ற தகவலைக் கேட்டு மலர் வியப்படைகிறாள். “ம்……தமிழுக்கு இனி ஏறுமுகம்தான்!” மனதுக்குள் எண்ணி மகிழ்ச்சியடைகிறாள். 

ஏர் ஆசியாவின் நிறுவனர் தான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தொலைநோக்குப் பார்வையால் தமிழுக்கு தம் நிறுவனத்தில் வழங்கியுள்ள வாய்ப்பை எண்ணி வியந்தும் போகிறாள் மலர். நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய மூன்று இனங்களையும் அங்கீகரிக்கும் வகையில் அனைத்துத் மலேசிய நிறுவனங்களும் தாய்மொழிகளின் பயன்பாட்டை அதிகரித்தால் சம்பந்தப்பட்டட் இனங்கள் மகிழ்ச்சியடையும் அல்லவா? நாட்டின் சரித்திரத்தை மக்கள் மறக்காமல் இருப்பதற்கு இது அடித்தளமாக அமையலாம். 

வீட்டைப்பற்றிய நினைவிலிருந்து சிறிது விலகி இனம்,மொழி பற்றிய சிந்தனையில் மூழ்கிப்போகிறாள் மலர். ஏர் ஆசியா நிறுவனர் தமிழர்களின் நம்பிக்கை நச்சத்திரம் அல்லவா ! தமிழர்களின் சிறப்புகளை உலகுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் அவரை நாம் மறந்துவிட முடியுமா என்ன? எண்ணச்சிறகினின்றும் மலர் விடுபட்டட் போது,விமானம் தரையிலிருந்து வானை நோக்கிப் பறக்கத் தொடங்குகிறது. பல்வேறு சிந்தனைகளுடன் பயணிகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தபடி சன்னல் வழியே வெளியுலகைக் கண்டு களிக்கின்றனர்.

தனக்காக விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் முகங்கள் மனத்திரையில் நிழலாடுகின்றன. கடைக்குட்டியான தன்னை வரவேற்க அப்பாதான் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பார். அவரைக் காணாத வெறுமையை மலர் அதிகமாக உணர்கிறாள். தொலைதூரத்தில் கல்வி கற்பதால் அப்பா ஏக்கம் அதிகமாக அவளைப் பாதித்துக்கொண்டிருந்தது.அவரை நினைக்கும் போதெல்லாம் அவளது கண்கள் ஈரமாகிப் போகின்றன. 

விழிகளின் ஓரத்தில் அரும்பி நின்ற கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள். அருகில் அமர்ந்திருக்கும் தோழி இசைக்கருவியைக் காதில் அணிந்த நிலையில் வேறொரு உலகில் சஞ்சரித்துத் க் கொண்டிருந்தாள்.மற்ற பயணிகள் இருக்கைகளில் வசதியாகச் சாய்ந்தவாறு தங்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

வானில் அரைமணி நேரமாக சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறது விமானம். விமானத்தின் கேப்டன் தேவேந்திரனிடமிருந்து திடீரென அவசர அறிவிப்பு வருகிறது. “பயணிகளே…..உங்களுக்கு ஓர் அறிவிப்பு. யாரும் பயப்பட வேண்டாம். இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள ஒரு சிறிய கோளாறு காரணமாக விமானம் மீண்டும் விமான நிலையத்துக்கே திரும்புகிறது. சில மணி நேரத்தில் கோளாறு சரி செய்த பின்னர் மீண்டும் நமது பயணத்தைத் தொடங்கலாம். சிரமத்துக்கு வருந்துகிறோம். அன்புடன், உங்கள் கேப்டன் தேவேந்திரன்”. 

இதுவரையிலும் அமைதியுடன் இருந்த பிரயாணிகளிடையே கேப்டனின் அறிவிப்பு சிறிது கலக்கத்தை ஏற்படுகிறது. அதர்ச்சியில் பிதற்றத் தொடங்கிய வயதான பிரயாணிகளிடம் விமானப்பணிப் பெண்கள் ஆறுதல் வார்த்தை களைக் கூறிக்கொண்டிருந்தனர். சில பயணிகள் பயத்தின் மேலீட்டால் முகம் வெளிரிய நிலையில் காணப்படுகின்றனர். அடுத்த என்ன நடக்குமோ என்ற அச்சம் காரணமாகப் பயணிகளில் சிலர் அமைதியில் மூழ்கிப்போகின்றனர். அடுத்த அரைமணி நேரத்தில் விமானம் பத்திரமாக தரை இறக்குவதில் கேப்டன் தேவேந்திரன் தனது திறமையைக் காட்டுகிறார். தரையில் விமானம் இறங்கிய போது, போன உயிர் மீண்டது போல் பயணிகள் உற்சாகமடைகின்றனர்.

இதற்கிடையே, வானொலி, தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்கள் மூலம் மலேசிய மக்களுக்குச் செய்தி தெரிவிக்கப்படுகிறது. விவரமறிந்த மலேசியர்கள் தங்களின் உறவுகளை வரவேற்க கே.எல்.ஐ.ஏ. அனைத்துலக விமான விமான நிலையத்தில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

மலர் அப்பாவுக்கு கை பேசி மூலம் விவரம் தெரிவிக்கிறாள்.

“மலர்….உனக்கு ஏதும் அசம்பாவிதம் நடக்கிலையே…..?” 

“எனக்கு ஒன்றும் ஆகலப்பா….! வீணா கவலைப்படாதீங்க. இன்னும் சிலமணி நேரத்தில் உங்களையும் என் இரண்டு அக்காவைகளையும் சந்திப்பேன்….!” 

“விடிந்தா நாளை தீபாவளி….!” 

“எதற்கும் நீங்க கவலைப்படாதிங்கப்பா. நான் கண்டிப்பாக உங்களைச் சந்திப்பேன்……..!”

“இறைவா….! என் மகளுக்கு ஏதும் ஆகாம நீதான் காப்பாத்தனும்…!” 

சோகத்தால் தழுதழுத்தக் குரலை மிகவும் சிரமப்பட்டு கட்டுப் படுத்திக்கொள்கிறார். 

அண்மைய காலமாக நாட்டில் நடைபெற்ற இரண்டு விமான விபத்துகளால் ஏற்பட்டட் உயிரிழப்பினால் ஒட்டு மொத்த மலேசியர்களை உலுக்கிய துயரச் சம்பவங்கள் மலரின் அப்பாவையும் பெரிதும் பாதித்திருந்தது. தான் வணங்கும் முருகக் கடவுள் நிச்சயமாக தம் மகளைக் காப்பார் என்று பெரிதும் நம்புகிறார். தம் மகள் மட்டுமல்லாது விமானத்தில் பயணம் மேற் கொண்டுள்ள அனைவரும் பாதுகாப்புடன் நாடு திரும்ப இறைவனிடம் இறைஞ்சுகிறார்.

சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்,நண்பகல் பன்னிரண்டு மணிக்கு விமானம் இருநூறு பயணிகளுடன் மலேசியாவை நோக்கிப் புறப்படுகிறது. “அனைவருக்கும் நண்பகல் வணக்கம். நான்தான் உங்கள் கேப்டன் தேவேந்திரன் பேசுகிறேன். மீண்டும் உங்களுடன் பேசுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் உங்கள் அனைவரையும் பத்திரமாக நமது தாயகத்திற்குக் கொண்டு செல்வேன் என்று உறுதி கூறுகிறேன். மகிழ்ச்சியாக உங்கள் பயணம் அமைய வாழ்த்துகிறேன். இறைவன் நம்மோடு இருக்கிறார். நன்றி.”

கேப்டனின் நம்பிக்கை மொழியினைக் கேட்ட பயணிகள் புதிய நம்பிகை யோடு இருக்கைகளில் நிமிர்ந்து உட்காருகின்றனர். வானம் வெளுத்திருந்தது. தெளிவான வானிலை பயணத்திற்கு ஏற்றதாக அமைந்திருந்தது. விமானம் தாயகத்தை நோக்கிப்பயணிக்கிறது. விமானத்தின் அமைதியான சூழல், பயணம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பயணிகளில் பலர் கண்களை மூடி ஓய்வெடுக்கின்றனர்.

சன்னல் வழி வெளிக்காட்சி களைச் சிலர் ஆர்வமுடன் ரசித்துக் கொண்டிருந்தனர். சிலர் புத்தகம் வாசிப்பதில் தங்கள் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருந்தனர்.

நேரம் செல்லச்செல்ல மலருக்கு இருப்புக் கொள்ளமுடியவில்லை. பல மணி நேரமாக அப்பாவும் தம் இரண்டு அக்காள்களும் விமான நிலையத்தில் தனக்காகக் காத்துத் க் கொண்டிருப்பதை நினைக்கும் போது மனம் வருந்தினாள்.மருத்துவம் பயிலச் சென்று ஒரு வருடமே ஆகின்ற வேளையில் முதல் முறையாகத் தீபாவளியைக் கொண்டாட இல்லம் திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் இப்படியாகிவிட்டதே என்று கவலையடைகிறாள். 

நாளை மலரப் போகும் தீபாவளிப் பண்டிகையைக் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாட இறைவன் அருள்புரிய வேண்டுமாய் மன்றாடுகிறாள். பல ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கிறது. சன்னல் வழியாக மலர் பார்வையைச் சுழவிடுகிறாள். வானம் தெளிவாகக் காணப்படுகிறது. 

ஒன்றரை மணி நேரப்பயணத்திற்குப் பின் கேப்டன் தேவேந்திரன் பேசுகிறார். பயணிகளின் அவர் கூறப்போகும் தகவலை உண்ணிப்பாகக் கேட்கின்றனர். “அன்பான பயணிகளே அனைவருக்கும் பிற்பகல் வணக்கம். நாம் இப்போது கே.எல்.ஐ.ஏ. அனைத்துலக விமான நிலையத்தை அடைந்துவிட்டோம். இன்னும் சில நிமிடங்களில் நமது விமானம் தரை இறங்கும். பயணத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி. நாளை தீபாவளியைக் கொண்டாடும் இந்துகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.” 

கேப்டனின் அறிவிப்பைக் கேட்டு மலர் மகிழ்ச்சியடைகிறாள்.ஓராண்டுக்குப் பின் தாய் மண்ணை மிதிக்கப் போகிறோம் என்ற எண்ணம் அவளைப் பூரிப்படையச் செய்கிறது.

அறிமுகம் இல்லாத மலேசியர்கள் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் தம்மோடு பயணித்த வேற்று நாட்டவர் பலரும் தமக்குத் தீபாவளி வாழ்த்துக் கூறியதைக் கண்டு மலர் வியந்து போகிறாள்! 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *