பெருநகர் வெளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 1,663 
 

சூழல்கள் மண்வாரி இயந்திரங்களாகித் தோட்டப் புறங்களிலிருந்தும் சிறிய கிராமங்களிலிருந்தும் மனிதர்களைக் கூட்டிப் பெருக்கி வாரி நகர்ப்புறம் நோக்கிக் கொட்டிக் கொண்டிருந்த அந்த கால கட்டம்.

சூரிய கதிர்கள் பெருநகரமான கோலலம்பூரில் வானிலிருந்து இறங்கி மக்களோடு பயணித்த அந்தக் காலை வேளையில் இவனும் இணைந்து பேருந்து இறங்கி வாடகை வண்டி பிடித்து வந்து சேர்ந்திருந்தான் மாமா வீட்டிற்கு.

பெரியக்காவுக்கு அப்படியொரு மகிழ்ச்சி. கதவு தட்டலிலிருந்து கண்டு கொண்டிருந்தாள் இவனாகத்தானிருக்குமென்று. அக்கம் பக்கத்தவர்கள் நகரத்தில் இவர்களைத் தெரிந்தவர்கள் சுட்டு விரலை மடித்து நாசுக்காகவும் மென்மையாகவும் தட்டுவார்கள். ஆனால், இவன் வலது கையை அகல விரித்து தொப் தொப் என தட்டியதோடு, ‘பெரியக்கா பெரியக்கா..!’ எனவும் அழைத்தான்.

அந்த, ‘பெரியக்கா…பெரியக்கா..!’ என இவனையன்றி யாருமே அப்படிக் கூப்பிடமாட்டார்கள். அந்தச் சொல்லில் அப்படியொரு பாசத்தின் பிடிமானம் இறுக்கமாக இருக்கும்.

தாழ்ப்பாளை படக்கென திறந்த பெரியக்காவின் முகம் அவிழ்ந்த மொட்டாக மலர்ந்த நிலையில், “ஏங்க இங்கன வந்து பாருங்க, “தம்பி குணா வந்திருக்காங்க..!” உள்ளே திரும்பி கணவனைக் கூப்பிட்டாள்.

“காலையிலேயே நாலு வீட்டுக்குக் கேக்கற மாதிரி கூப்பாடு போடுறே…!” மாமாவின் சிறு அதட்டலில் பெரியக்காவின் குரலில் ஒரு சோர்வு தட்டிப் போனதை குணா உணர்ந்து கொண்டான்.

“இவரு இப்படித்தாண்டா, நீ வாடா உள்ள… எல்லாம் நல்லா இருக்காங்களா… தோட்டத்தில திருவிழாவுக்கு கூட வர முடியாமப் போச்சு… தீமிதி, சாமி ஊர்வலம் எல்லாம் நல்லா நடந்துச்சு இல்ல? உங்க மாமா தான் கடசி நேரத்தில போக நேரமில்லனிட்டாரு..!” என்று சொல்லும்போது அவள் குரலில் சோகம் இழையோடிக் கிடந்தது.

“உங்க அக்காவுக்கு தோட்ட திருவிழாவுக்கு கூட்டிட்டுப் போகலையின்னு மூஞ்சி ஒரு அடி நீட்டு தொங்கிப் போய் கிடந்துச்சு… நீ வந்த பின்னாடிதான் நேரா நிமிந்து கெடக்கு… நமக்கு என்ன நேரமா இருக்கு… நாலு காச பாக்கணுமில்லே… உங்கக்கா சொல்ற மாதிரி தீமிதி திருவிழான்னு ஊர சுத்திக்கிட்டிருந்தா இந்த கோலலம்பூர்ல பேரு போட முடியாது… பேருதான் பெரியக்கா… இன்னும் சின்ன புள்ளையா இருக்கா..!”

மாமா மதிவாணன் சொல்லியதிலும் கொஞ்சம் உண்மை இருந்தது. துரோங் மாதிரி சின்ன ஊர்களில் வாழ்வதற்கும் கோலலம்பூர் மாதிரி பெரு நகரங்களில் வாழ்வதற்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பது உண்மைதான். இதை குணாவும் அறிந்துதான் வைத்திருந்தான். அக்கா இன்னும் தோட்டத்தில் இருந்ததைப் போன்றே வெள்ளை மனதுக்காரியாகவே காணப்பட்டாள்.

மறுநாள் காலையில் தான் வந்து சேர்ந்ததைப் பற்றி மாமா மதி விசாரிப்பார் என ஆவலாகக் காந்திருந்த வேளையில் அவர் அவசரம் அவசரமாக வீட்டை விட்டுக் கிளம்பிப் போயிருந்தார். ஆனாலும் மாமா வீடு தான் ஐந்து ஆண்டுகளில் பல மடங்கு மாறிப்போயிருந்தது. மாமாவிலும் அந்த மாற்றம் தெரிந்தது. அதோடு அவை சமீபத்தில் ஏற்பட்டவையாக இருந்தன. வீட்டின் முன்னாடியும் பின்னாடியும் அகலப்படுத்தி செப்பம் செய்யப்பட்டதோடு உள்ளேயும் அழகு படுத்தப்பட்டிருந்தது. அதோடு, புதிய மெத்தென்ற ‘சோபா செட்’ உட்காருவதற்கு இதமாக இருந்தது. நான்கு அறைகளும் குளிர்சாதன வசதியோடு இல்லம் குளிர்ந்து போயிருந்தது.

“என்னடா குணா வீடே மாறிப்போயிடுச்சுன்னு கண்ண விரிச்சுப் பாக்கத் தோணுது இல்லே… ஆச்சர்யமா இருக்குதா? எல்லாம் அலாவுதீனும் அற்புத வெளக்கும் போல எனக்கு தெரிமயாமலே மாறிக்கிட்டே வருது… அவரும் முன்ன மாதிரி ‘கீலாங்’ல வேல செய்யல… தினசரி ‘டை’ கட்டிக்கிட்டு போறாரு… யார் யாரோ வர்றாங்க… ‘மீட்டிங் மீட்டிங்’னு கெளம்பிடுறாரு… நம்ம வீட்லயும் கூட்டம் போடுறாங்க… பணமும் தாராளமா வருது..! என்னவோ போ எல்லாம் கண்ண மூடி கண்ண தெறக்கறதுக்குள்ள நடந்துடுது…!” என்று சொன்ன அக்காவின் குரலில் ஆயாசமும் சோர்வும் தட்டிக்கிடந்தது. மாமாவின் மாற்றமும் அதற்கேற்ற மகிழ்ச்சியும் பெரியக்காவிடம் தெரியவில்லை என்பதை இவனும் புரிந்து கொண்டான். இருந்தாலும், வீட்டின் தோற்றமும் வீட்டின் முன்னால் நின்ற ‘மெர்செடிஸ்’ ரக வண்டியும் அவனைப் பிரமிக்கவே செய்தது.

மாமாவின் நடவடிக்கையும் முன்னேற்றமும் அக்காவுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தி விட்டிருக்குமோ..? அக்கா எப்போதுமே எந்தச் செயலாக இருந்தாலும் யோசித்து யோசித்து அமைதியாகச் செய்யக்கூடியவள். அதிர்ந்து பேச மாட்டாதவள். ஆறாம் வகுப்போடு கல்வியை முடித்துக் கொண்டு வீட்டில் அவனையும் இரண்டு தங்கைகளையும் கவனித்துக் கொள்ளவும் அம்மாவுக்கு கைவேலைக்கு உதவவும் நிறுத்தபட்டு விட்டதால் அவளுடைய வெளியுலகப் பார்வை ஒரு எல்லைக்குள்ளேயே சுருங்கிக் கொண்டு விட்டது. மாமாவின் அசுரத் தனமான காரிங்கள் அச்சத்தைத் தந்திருக்கலாம். அதனால்தான் இப்படியெல்லாம் பயம் கலந்த உள்ளுணர்வில் நினைப்பாள் போலிருக்கிறது.

கடந்து போன சில நாட்களில் மாமா தன்னைப்பற்றி விசாரிப்பார் எனவும் காத்திருந்தான். அவரைப் போலவே அவனும் ஒரு வளமான வருமானம் வரும் வேலையில் சேர்ந்து வீடு வாகனத்தோடு வாழ வேண்டும் என மனம் கற்பனையில் ஆழ்ந்து போனது. அவரின் சிபாரிசில் ஒரு நல்ல வேலையாக ஏற்பாடு செய்து தருவாரெனவும் நம்பிக்கை உண்டாகியிருந்தது. அதற்காகவே தோட்டத்திலிருந்து புறப்பட்டும் வந்திருந்தான். தோட்டத்தில் வரவுக்கும் செலவுக்கும் சரிக்கட்டிப் போகும் வாழ்க்கை. தோட்டத்தை விட்டு வெளியே போனவர்கள் கோலலம்பூர், பத்துகேவ்ஸ், பினாங்கு போன்ற பெரு நகரங்களில் குடியேறியிருந்தார்கள். அவர்களில் சிலர் தாங்கள் பிறந்து வளர்ந்த தோட்டத்தை மறக்காமல் திருவிழா தீமிதி உற்சவங்களில் அன்னதானம் என்ன கலை நிகழ்ச்சிக் குழுவை ஏற்பாடு செய்தல் என்ன என கோயிலுக்கு நன்கொடைகளும் உதவிகளும் செய்து தாங்கள் வாழ்ந்த மண்ணுக்கு விசுவாசம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில் மாமா இவன் காத்திருத்தலின் ஆவலை அதிகப் படுத்தியதோடு அவர் எப்போது வருகிறார் எப்போது வெளிக்கிளம்பிப் போகிறார் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் போயிருந்தது.

அப்படியான ஒரு நாளில் பொறுமையிழந்த பெரியக்கா, “என்னங்க தம்பி தோட்டத்திலயிருந்து ஒரு வேலய தேடிக் கொடுபீங்கன்ற நம்பிக்கையில நம்மள நம்பி வந்திருக்கான்… நீங்க அவன கண்டுக்கவே இல்ல..!” என தன் ஆதங்கத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“சரி…சரி … நான் இப்போ எதுவும் செய்ய முடியாது… எனக்கு நேரமே இல்ல.. பிறகு பார்க்கலாம்..!” என கூறி அவனது நம்பிக்கையைக் கொஞ்சமாகத் தகர்த்து விட்டுச் சென்று விட்டார்.

இது நடந்த ஒரு வாரத்தில் அக்காவுக்குத் தெரிந்த ஒருவர் மூலமாக கோலக்கிள்ளான் நகரில் அமைந்திருந்த ஒரு எரிவாயு கிடங்கில் சாதாரண தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்திருந்தான் குணா. வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் தோட்டத்தில் தன் குடும்பம் வழிவழியாக உழன்று கிடந்ததை மாற்றியமைக்க வேண்டும் எனும் உத்வேகத்திலும் நேர்மையாக உழைத்தான். பண்போடு நடந்து கொண்டான். சக தொழிலாளர்களுடன் குடும்பத்தில் ஒருவனாகப் பழகினான். நாட்டில் மட்டுமல்ல உலகத்திலேயே எரிவாயுக்கு அபரிதமான வாய்ப்பும் மதிப்பும் உள்ளதை அந்த தொழிலுக்குச் சென்ற பின்பே அறிய வாய்ப்பு ஏற்பட்டுப் போனது. இந்த தொழிலுக்கு வருவதற்கு முன்பு வரை தோட்டமும் ரப்பர் மரங்களும் எண்ணெய்ப்பனை மரத் தொழிலில் மட்டுமே வாழ்க்கை நத்தையாக நகர்ந்து கொண்டிருந்தது. இங்கு வந்த பின்புதான் உலகம் தோட்டத்தை விட்டுத் தலைகீழ் விகிதத்தில் மாறுபட்டுப் போயிருந்ததை அறிந்து கொள்ள முடிந்தது.

இதற்கிடையில் சில தடவைகளில் மட்டுமே பெரியக்காவை பார்க்க கோலலம்பூர் நகரம் வந்து போயிருந்தான். அப்போது மாமா மதி முன்னிலும் மாற்றம் அடைந்து போயிருந்தார். அவர் ஏதோ புதிய புதிய முயற்சியிலும் தொழிலிலும் இறங்கி இருப்பதாகவும் பெரும்பாலான நாட்கள் மற்றவர்களோடு கூட்டாகச் சேர்ந்து தொழில் செய்வதாகவும் பெரியக்கா சொல்ல இவன் காதில் மட்டும் அரை குறையாக போட்டுக் கொண்டான்.

‘மாமா மதி காப்புறுதி தொழிலில் மிக மும்மூரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அந்த தொழில் செய்பவர்கள் என்னேரமும் தங்கள் வாடிக்கையாளர்களைச் சந்திக்க வேண்டும். புதியவர்களைத் தேட வேண்டும். வீட்டில் தங்க விடாத ஒரு பணம் ஈட்டும் தொழில். அப்படித்தான் இருக்க வேண்டும்..!’ இவன் மனம் மாமாவைப் பற்றிக் கற்பனை செய்து கொண்டது. அப்படிப்பட்ட எண்ணமும் அன்று அக்காவை சந்திக்கச் சென்ற போன போது அடிபட்டுப் போனது.

“குணா, மாமா ரெண்டு நாளாகியும் வீட்டுக்கு வரல.. போனும் எடுக்க மாட்டேங்கிறாரு… செலவுக்கு பணம் இல்ல… நூறு ரிங்கிட் கொடுத்துட்டு போ..!” என அக்கா தயக்கத்துடன் கேட்டபோது அவன் சற்றே அயர்ந்து போனான். அதோடு, அக்காவின் முகம் எதையோ மறைத்துக் கொண்டிருந்ததையும் அவனால் அறிய முடிந்தது.

காலம் ஓர் ஆண்டை உருட்டித் தள்ளியிருந்தது. அதற்கென்ன நின்று நிதானித்து யார் யார் வாழ்க்கை இப்படித்தானிருக்க வேண்டுமெனும் நியதியையும் சட்டத்தையும் வகுத்து வைத்துக் கொண்டா இருக்கிறது. ஒவ்வொரு மனிதரும் அதன் இயக்கத்திற்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு காலச் சுழற்சிக்கு இணைந்து சென்று கொண்டே இருக்க வேண்டும்.

இந்த முன்னூற்று அறுபத்தைந்து நாட்களுக்கும் கொஞ்சம் கூடுதலான கால கட்டத்தில் குணா எவ்வளவோ அறிந்தும் தெரிந்தும் வைத்துக் கொண்டிருந்தான். பணம் சேமிக்க வேண்டும் தன் குடும்பத்துக்கென கிள்ளான் நகரில் ஒரு வீடு வாங்க வேண்டும் குடும்பத்தினரை இங்கேயே அழைத்துக் கொள்ள வேண்டுமெனும் ஆவலும் நிறைவேறிக் கொண்டிருந்தது. அதற்காகப் பிரத்தியேக நியாயமான சில உதிரியான வருமானம் ஈட்டும் தொழிலிலும் ஈடுபட வேண்டியிருந்தது.

இப்படியான ஒரு தினத்தில் நண்பர் ஒருவர் சுலபமான பணம் சம்பாதிக்கும் திட்டம் ஒன்று இருப்பதாகவும் அதற்கு ஒரு சந்திப்புக் கூட்டம் இருப்பதாகவும் அழைப்பு விடுத்து கூட்டிக் கொண்டு சென்றார்.

‘நம்ம இனம்தாங்க பொருளாதாரத்தில பின் தங்கி இருக்கு… மத்தவங்க பணம் சம்பாதிக்கிறதில மேல மேல போய்க்கிட்டே இருக்காங்க… இந்த நெலம இப்படியே நீடிக்க விடக்கூடாது. கெடைக்கிற வாய்ப்ப நம்ம சமுதாயமும் கெட்டியா பிடிச்சிக்கணும்… அப்படியொரு வாய்ப்பு உங்களுக்கு வந்திருக்கு… என் பாசத்துக்குரிய தோழர்களே… அப்படிப்பட்ட பணம் வர்ற ‘ஸ்கிம்’ல சுலபமான முதலீட்டுத் திட்டத்தில சேர்ந்து மாதாமாதம் சம்பாதிங்க..!’ கூட்டத்தின் முன்னாடி ‘கோட்’ போட்டு ‘டை’ கட்டிய பேச்சாளர் தொனி உயர்த்தி வேண்டும் போது விழியை உருட்டி முழங்கிக் கொண்டிருந்தார்.

“நம்ம வாய்ப்ப விட்றக்கூடாதுங்க குணா… நான் உடனடியா சேர்ந்துடப் போறேன்… நீங்களும் உங்களால முடிஞ்ச தொகயப் போட்டு சேர்ந்துடுங்க…!” அழைத்துக் கொண்டு போன நண்பர் காதில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘அன்பான நண்பர்களே..! பெருமதிப்புகுரியவர்களே..! ஒரு லாட் முன்னூற்று ஐம்பது ரிங்கிட் தான்… ஒரு மாதம் பூர்த்தி ஆன உடனே உங்க ‘பேங்க் அக்கவுண்ட்ல’ ஐம்பது ரிங்கிட் பூந்துடும். இப்படி மாசா மாசம் இல்லை அன்பர்களே… நீங்களே நம்ப மாட்டீங்க… வாரா வாரம். ஏழே வாரத்தில நீங்க போட்ட தொகை உங்களுக்கு கெடைச்சி அதுக்குப் பின்னாடி தொடர்ந்து வந்துகிட்டே இருக்கும். நீங்க நம்பலையா… இதோ அப்படி ஒரு தொகய போட்ட ஒரு இல்லத்தரசி..!’ என ஒரு முதிய அம்மையாரை அழைக்க அவரும் ஒரு வங்கி சேமிப்புப் புத்தகத்தை அங்கு இருந்தவர்களிடம் காட்டிக் கொண்டிருந்தார். பலர் முகத்தில் மகிழ்ச்சியும் இலேசான பிரமிப்பும் காணப்பட்டது. பக்கத்திலிருந்த நண்பர், ‘ரொம்ப நல்ல திட்டம்… நான் ஒடனே பத்து லாட் எடுக்கப் போறேங்க..! நீங்க..?’ என குணாவைப் பார்த்தார்.

அவன் வாழ்ந்த துரோங் வட்டாரத்தில் இப்படியான ஒரு திடீர் பணக்காராகும் திட்டம் கேள்விப்பட்டிருந்தான். அதற்கு, ‘செபாட் காயா பா பூத்தேக்,’ என்பதாகும். பலர் அதில் முதன் முதலில் பணம் கட்டியவர்கள் ஓரளவு ஆதாயம் பெற்றதைச் சொல்லக்கேட்டு ஆர்வம், பேராசை மிகுதியால் பெரிய தொகை செலுத்தி உள்ளதையும் இழந்து மொட்டை போட்டுத் தலையில் துணி சுற்றிக் கொண்டிருந்தவர்களும் இருந்தார்கள். இதெல்லாம் அவன் மனதில் ‘தம்பி அதிக ஆசை கொள்ளாதே,’ என தலையில் குட்டிக் கொண்டே இருந்ததால் நண்பருக்கு ஒரு மௌனமான புன்னகை கலந்த பதிலையே முகக் குறிப்பில் காட்டினான் குணா.

ஒருநாள் காலைப் பொழுது..! பெரியக்காவிடமிருந்து, ‘அவசரம் உடனடியாக வா குணா,’ என கை பேசி அழைப்பு வந்தது.

இடைப்பட்ட காலத்தில் சிக்கனமாக ஒரு ‘விவா’ வாகனமும் வாங்கி இருந்தான். அக்கா வீட்டுக்குச் சென்றபோது வீடே காய்ச்சலில் அடிபட்டது போலிருந்தது. மாமா வீட்டில்தானிருந்தார். அவர் முகம் வீங்கிப் போயிருந்தது. அக்கா சோகச் சித்திரமாகி குத்துக் காலிட்டு அமர்ந்திருந்தாள். கண்ணீரின் வடு இன்னும் முகத்தில் கோடிட்டிருந்தது.

அதற்கு முன்னால் அவன் அக்கா வீட்டுக் குடியிருப்பில் ஒரு தெருவில் நுழையும் போது கண்ட காட்சியும் செய்தியும் மனம் பதைபதைப்பும் வருத்தமும் கொள்ளூம் நிகழ்ச்சியாக இருந்தது. ஒரு வீட்டுக்கு முன்னால் காவல் துறையினர் வாகனத்தில் வெண்மை துணி போர்த்திய பிரேத்ததை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அக்கா இவனைப் பார்த்து முகம் நிமிர்ந்தாள். “குணா எல்லாம் போச்சுடா… இந்த மனுசன் செஞ்சிக்கிட்டிருந்த வேலய விட்டுட்டு யார் யாரோ ‘சின்னாங்கா’ சம்பாதிக்கிற வழியக் காட்றேன்னு சொல்லக் கேட்டு அவங்க பின்னாடி ‘டை’ கட்டி கிட்டு வீடு புள்ளைங்கள மறந்துட்டு சுத்திக்கிட்டிருந்தாரு..!” சொல்லி விட்டு முதன் முறையாக பெண் சிங்கமாக மாமாவை சினந்து பாத்தாள். மாமாவும் அக்காவை அச்சம் கலந்து பரிதாபத்துடன் நோக்கினார்.

“வீட்டுக்கு முன்னால மெப்புக்கு நின்னுக்கிட்டிருந்துச்சே வண்டி போன வாரம் வந்து இழுத்துக்கிட்டு போயிட்டானுங்க… என்னமோ ஒரு திட்டமாம்… அஞ்சாயிரத்துக்கு ஒரு ‘லாட்’ வாங்கினா மாசா மாசம் பெரிய வட்டி தொக கேக்காம கொள்ளாம பேங்ல பூந்துடுமாம். அதுல ‘ஏஜெண்டா’ இருந்து லட்சத்துக்கு மேல சேத்து கொடுத்திருக்காரு. அது திடீர்னு கவுந்து போச்சாம்… கொடுத்தவங்க இவரு மென்னிய புடிக்க ஏங்கிட்டயிருந்த நக நட்ட வித்து கொடுத்தாச்சு… இந்த வீட்டயும் வித்து கை நீட்டி வாங்கனவங்க கிட்ட மானத்தோட கொடுத்துடனும்னு சொல்லிட்டேன்… இப்ப வர்ற வழியில பாத்திருப்ப ஒரு மனுசன் வீட்லய மாட்டிகிட்டு தொங்கிட்டாரு.. அவரும் இப்படித்தான் பெரிய அளவில ‘சேர்’ சேத்துக் கொடுத்தவராம்..!”

அக்கா பேச மாமா வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். “போதும்பா டவுனு… தோட்டத்துக்கே போயி கெடைக்கிற வேல செஞ்சி நிம்மதியா இருக்கலாம்னு கூப்பிட்டேன்… வர்றேன்னு ஒத்துகிட்டாரு..!”

மாமாவின் முகம் இன்னும் வெளிறியே காணப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *