கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: February 21, 2024
பார்வையிட்டோர்: 5,768 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம்-1

அன்று திரும்பி வந்த புத்தகங்களைத் தலைப்புப் பார்த்து ஏபிசிடி வரிசைப்படி, வேகமாக அடுக்கும்போதே, உள்ளிருக்கும் விஷய ரீதியாகவும் பிரித்து வைத்தாள், மதுரவாணி. இன்னமும், தாத்தா வருமுன், இவைகளை புத்தக அலமாரித் தட்டுக்களில், உரிய இடத்திலும் வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால்… ‘ஆன்ட்டீ’ என்று, இளங்குரல் ஒன்று கேட்கவும், வேலையில் தீவிர மாக ஈடுபட்டிருந்த மதுரவாணி திடுக்கிட்டு நிமிர்ந்தாள். திடுக்கிடல் அழைப்புக்காக அல்ல! 

ஒரு ‘லெண்டிங் லைப்ரரி’யில் அதை நடத்திக் கொண் டிருப்பவளுக்கு, அக்கா, ஆன்ட்டி, சிஸ்டர், மகளே… எந்தவித அழைப்புமே அதிசயம் அல்ல! 

ஆனால் அழைத்த குரலும், அழைக்கப்பட்ட நேரமும் தான் அவளுக்கு வியப்பை அளித்தன! 

பொதுவாகச் சின்னப் பிள்ளைகள் வாசகசாலைக்கு வருவது சனி, ஞாயிறுகளில் அதிகம் இருக்கும்! வெள்ளிக் கிழமை மாலையே, சிறுவர், சிறுமியர் வருவது தொடங்கி விடும்! 

முந்திய வாரம் எடுத்தவற்றைத் திருப்பிக் கொடுப் பதும், புதிதாக எடுப்பதுமாக, வாரக் கடைசியில் பள்ளிச் சிறுவர்கள் நிறையப் பேர் வருவார்கள். அப்போதும் இந்த ஏழெட்டு வயதுப் பிள்ளைகளோடு, பெரும்பாலும் பெரியவர்கள் யாராவது கூட வருவார்கள். 

ஆனால் இது போல வார நாளான திங்கள் கிழமை, அதுவும் சரியான பள்ளி நேரத்தில்… இப்படித் தனியாக எப்படி? 

சிறுமியின் பள்ளிச் சீருடை மதுரவாணியின் ஐயத்தை உறுதிப்படுத்த “என்னம்மா… பள்ளிக்குப் போகவில்லை?” என்று அவளிடம் வினவினாள். 

பள்ளிக்குச் சென்றிருந்தால், மாலையில் பள்ளி விடு முன், யாரையும் வெளியே விட மாட்டார்கள். எனவே, இடையில் வருவதானால், பள்ளிக்குப் போயிருக்கவே முடியாது! பள்ளிக்கே செல்லாமல், இந்த எட்டோ, ஒன்பதோ வயதிருக்கக் கூடிய சிறுமி இங்கே சுற்றிக் கொண்டிருப்பது எப்படி? 

இவளும் அவ்வப்போது வாசகசாலைக்கு வருகிறவள் தான். பெயர் நிலா. பாட்டியோடும், வயிற்றைத் தள்ளிக் கொண்டு, அத்தை என்று அவளால் அழைக்கப்படும் ஓர் இளம் பெண்ணுடனும் வருவாள். அத்தை, பிரசவத்துக் காக வந்திருந்தாள் போலும்.

கொஞ்ச நாளாக ஒருவரையும் காணோம்! அத்தைக்கு குழந்தை பிறந்திருக்கிறதோ, என்னவோ? 

ஆனால், தனியாக நிலா வந்ததே இல்லை. முன்பு அவள் எடுத்துச் சென்றிருந்த புத்தகங்களைக் கூட அவர்கள் வீட்டுக் காரோட்டிதான் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனார். 

தனியாக அவளை எங்கும் அனுப்புவது இல்லை என்றால், இப்போது மட்டும் எப்படி? 

சிறுமியின் கவனம், யாரோ திருப்பித் தந்து, மேஜை மேல் ‘ட்விங்கிளி’ல் இருக்கவும். “என்னம்மா பள்ளிக்குப் போகவில்லையா என்று கேட்டேனே” என்று சற்று அழுத்தமாகக் கேட்டாள் பெரியவள். 

“பள்ளி நேரத்தில் இப்படி வெளியே வருவது தப்பில்லையா? அங்கு தேட மாட்டார்கள்?” என்று மேலும் கேளவி கேட்டாள் மதுரவாணி. 

புத்தகத்திலிருந்து விழிகளைப் பிரித்தெடுத்து கள்ள மற்று மதுரவாணியை நோக்கி “தேட மாட்டாங்க ஆன்ட்டி. இன்னிக்கு ஸ்கூல் டே… நான் மார்ச் ஃபாஸ்டிலே இருந்தேன். அது முடிந்து போச்சு. யார் யாரோ மேடையிலே பேசிட்டே இருந்தாங்க, செம போர், வெயில்ல வேற நிக்க வேண்டி இருந்தது. பள்ளி முடிந்து தான் வீட்டுக்குக் கூப்பிட வருவாங்க. அதான் இங்கே வந்து புத்தகமாவது எடுக்கலாமின்னு வந்தேன்” என்று கோவையாக விளக்கம் தந்தாள் பெண்! 

பொய்யாயிருக்க வாய்ப்பில்லை! 

“ஆனாலும், நீ பள்ளிக்கூடத்திலே இருப்பாய் என்று தானே எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஒருவரையும் கேளாமல் வரலாமா? அதுவும் தனியாக?” 

சின்னப் பிள்ளைகள் தனியே சுற்றுவதின் ஆபத்துகள் இவளுக்குச் சொன்னால் புரியுமா? இந்த வயதில், வழி தெரியாமல் தொலைந்து போய்விட மாட்டாள்தான். ஆனால், தனியாகப் போய் வரவும், பழக்கப்படுத்தப்பட் டிருக்க வேண்டும்! சாலை விதிகள், யார் யாரிடம் பேச லாம், பேசக்கூடாது என்பன போன்ற அந்த விளக்கங் களும், அறிவுரைகளும் பெற்றவர்களிடமிருந்துதான் வர வேண்டும். 

ஆனாலும் “கூட யாரும் இல்லாமல், இப்படி வரக் கூடாதும்மா!” என்று மெல்லச் சொன்னாள் மதுரவாணி. 

ஏனெனில், இந்தப் பெண் நிலா. அவளுடைய உறவினரோடு வரும்போது கூடக் காரில்தான் வருவாள். தனியாக வந்ததே கிடையாது. 

“வீட்டிலே சொல்லியிருக்காங்க. ஆன்ட்டி! ஆனால், குட்டி பாப்பா வந்ததிலே இருந்து, அத்தைக்கும் பாட்டிக் கும் செம வேலை. ஆன்ட்டி. அதனால என்கூட வரலை! ஆனால், எனக்கு புக் கட்டாயம் வேணுமே!” என்றாள் சிறுமி. 

தாய் என்று ஒருத்தியோடு நிலா வந்தது இல்லை… ஆனால் சிறுமியின் நிலா முகத்துக்கு ஏற்றவாறு அழகாகப் பெயர் வைத்தவள் ஏன் மகளோடு வராதிருக்க வேண் டும்? படித்தவள் இல்லையோ? முழுநேரப் பணி ஏதாவதா? அல்லது வீட்டில் தகறாரா? 

கண்ட காரணங்களை யோசிக்கும் போதே, தன்னை யறியாமல் “உன் அம்மா ஏன் வரவில்லை?” என்று மதுரவாணியின் வாய் கேட்டுவிட்டது. 

கட்டுப்பாடின்றிக் கேட்டதுமே, வம்பு பேசுகிற மாதிரி என்ன கேள்வி கேட்டோம் என்று அவளது மனம் கூசுகையில், அந்த தலைக் குனிவை அதிகரிப்பவள் போன்று “எனக்கு அம்மா இல்லை ஆன்ட்டி… அப்பவே செத்துப்போயிட்டாங்க” என்றாள் சிறுமி. 

சட்டென மனம் அப்படியே உருகி விட்டது பெரியவளுக்கு… 

எழுந்து, நிலாவின் அருகில் வந்து “இப்போது உனக்கு என்ன புத்தகம் வேண்டும்?” என்று கேட்டாள். 

“ஆன்ட்டி, உங்ககிட்டே, ‘ஏன், எப்படி எதற்காக’ என்று அறிவியல்படி விவரம் சொல்லுகிற புத்தகம் இருக்கிறதா ஆன்ட்டி?” என்று நிலா வினவவும், ஆச்சரியமாக இருந்தது மதுரவாணிக்கு. 

பொதுவாக, இந்த வயதுச் சின்னவர்கள், கார்ட்டூன், ட்விங்கிள், படக்கதைகள் என்றுதான் கேட்பார்கள். இவள் பொது விவரம் அறிகிற புத்தகங்களை கேட்கிறாளே! 

வியந்து நோக்கி, “ஏன், எப்படி, என்கிற மாதிரி புத்தகங்களா யாருக்காக நிலா?” என்று விசாரித்தாள். 

“எ… எனக்காகத்தான்!” என்று விழிகளை விரித்த போதும், பேச்சில் இருந்த தடுமாற்றமும், முகத்தில் பரவிய சிவப்பும் மேலும் வியப்பளிக்க, “உனக்கேயா? எதற்காக?” என்று மேலும் விவரம் கேட்டாள் மதுரவாணி. 

பொதுவாக, இது போன்ற விவரம் தெரிவிக்கும் புத்தகங்கள் ஒன்றிரண்டு பிரதிகள்தான் இருக்கும்.சிலர், அவைகளில் உள்ள படங்களுக்காகப் புத்தகங்களை எடுத்துச் சென்று படங்களை வெட்டி எடுத்துக் கொண்டு சத்தமின்றி திருப்பி வைத்துவிட்டுப் போய் விடுவார்கள். 

இந்தப் பெண் நிலா அப்படிச் செய்வாள் என்று தோன்றா விட்டாலும், வேறு யாராவது பெரிய வகுப்பு பிள்ளைகள் அவளைத் தூண்டியிருக்கலாம் அல்லவா? 

நிலாவின் முகச் சிவப்பும், தடுமாற்றமும் கூட, அந்த ஐயத்தை வலுப்படுத்தவேதான். வாணி விவரம் கேட்டது.

இப்போது பதில் சொல்வதற்கு நிலா இன்னமும் தயங்கினாள். 

கூச்சமோ, குற்ற உணர்வோ காரணமாக அவளது முகம் மேலும் சிவக்க, பள்ளிச் சீருடையின் பெல்டை நோண்டியபடி “அது… அது…” என்றவள் மேலே தந்த விளக்கம். மதுரவாணியை ரொம்பவே வியக்க வைத்தது. 

நிலாவுக்கு ஜிகே ரொம்பப்பிடிக்கும். அதிலும் இயற்கை நிகழ்வுகளை அறிவது ரொம்ப ரொம்பவே பிடிக்கும். அவைகளைப் பற்றி எழுதவும் தனக்கு முடியும் என்று அவளுக்கே சமீபத்தில்தான் தெரிந்தது.

கடல் அலைகள் வந்து வந்து திரும்புவது பற்றி,அப்படி ஒரு கதை எழுதியிருந்தாள்! 

முத்துச்சிப்பி ஒன்று டென்னீஸ் பந்து அளவுக்கு தன் முத்தைப் பெரியதாக, ஆசையாக வளர்த்ததாம்… ஒரு நாள், அம்மா முத்துச் சிப்பி இரை தேடிவிட்டு வருமுன், அலைகளில் உருண்டு விளையாடிக் கொண்டிருந்த முத்து காணாமல் போய் விட்டதாம். அலைகள்தான் தன் முத்துப் பாப்பாவைக் கரையில் வீசிக் காணாமல் போக்கி விட்டதாகவும், அதைக் கண்டு பிடித்துத் தரும்படியும் முத்துச்சிப்பி கடல் ராஜாவிடம் போய்க் கேட்டதாம். முத்தைத் தேடித் தேடி கடலரசன் தன்னுடைய போர் வீரர்களான அலைகளை, ஒன்றன் பின் ஒன்றாக அனுப்ப அவையும் வந்து தேடிவிட்டுக் காணவில்லை, காண வில்லை என்று திரும்பிப் போய் சொல்லிக் கொண்டே இருப்பதாக நிலா எழுதியிருந்தாளாம். 

அதைப் படித்துவிட்டு வகுப்பு ஆசிரியை அவளைக் கூப்பிட்டு, இது போலக் கதைகளுக்காக ஒரு போட்டி இருப்பதாகவும், அதில் அவள் கட்டாயம் கலந்து கொண் டால் அவளுக்குப் பரிசு கிடைக்கும் என்று போட்டியில் சேரச் சொன்னார்களாம்! அதற்காகத்தான் இந்தப் புத்தகங்களாம். 

மனம் உருக, “கதை நன்றாயிருக்கிறது, செல்லம்!” என்றாள் வாணி. 

தொடர்ந்து, “உனக்கு சுனாமி தெரியும் அல்லவா?” என்று கேட்டவள், நிலா “ஆமாம்” எனவும். “அப்படியானால் அந்தக் கதையில் இதைக் கூடச் சேர்க்கலாம். என்றைக்காவது அம்மாச் சிப்பி தன் பாப்பாவுக்காகக் கடல் ராஜாவிடம் ரொம்ப அழுது, அவரும் இன்னும் பெரிய அலையை அனுப்பி ரொம்ப தூரம் தேடச் சொன்னதாகவும், அதுதான் ஊருக்குள்ளே எல்லாம் வந்த சுனாமி அலை என்றும் எழுதலாம்” என்று கூற, நிலா உற்சாகத்துடன் கைகொட்டிக் குதித்தாள். 

“இது ரொம்ப நல்லாயிருக்குது ஆன்ட்டி, நான் இன்னும் எழுதிட்டு வர்றேன், அதிலே, இதுபோல இன்னும் எனக்கு சொல்லித் தாங்களேன்” என்று பணிவாகக் கேட்டுக் கொண்டாள். 

புன்னகையோடு, “நீ முதலில் எழுதிக் கொண்டு வா. அதற்கப்புறமாக வேற என்ன சேர்க்கலாம் என்று பார்ப்போம்” என்று ஒத்துக் கொண்டாள் பெரியவள். 

தாயில்லாத இந்த சூட்டிகைப் பெண்ணுக்கு இது கூடச் செய்யவில்லை என்றால் எப்படி? 

கூடவே, நிலாவுக்குத் தேவைப்படுகிற மாதிரி இரண்டு புத்தகங்களை எடுத்து, அவளிடம் கொடுத்து “பள்ளிக்கு விரைவில் போய்ச் சேர்” என்று அவளோடு கூட வாயிலுக்குச் சென்றாள். 

தெருவின் மறுகோடிதான் அவளது பள்ளி. அவள் பத்திரமாக செல்லுகிறாளா என்று பள்ளி செல்லும் வரை பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும் என்று எண்ணித் தான் நிலாவோடு அவள் சென்றது. 

ஆனால், புத்தகங்கள் இருக்கும் ஹாலைக் கடக்கும் முன் விரைந்து, வந்த கார் ஒன்று சடன்பிரேக் போட்டு சத்தத்துடன் நிற்க அதிலிருந்து இறங்கியவன் கார்க் கதவைச் சாத்திய வேகத்தில் அந்தத் தெருவே அதிர்ந்தது. 

அதே வேகத்தில் தரை அதிர வாசகசாலைக்குள் வந்தவன், அங்கே நிலாவைப் பார்த்ததும், “கேள்விப் பட்டது சரியாகத்தான் இருக்கிறது. போய் காரில் ஏறு’ என்று கட்டளையிட்டான். 

“வந்து…” என்று ஒரு கணம் தயங்கிய சிறுமி “போ…” என்ற உறுமலில் அங்கிருந்து ஓடியே போய் அவன் சொன்னதைச் செய்தாள். 

பார்த்துக் கொண்டிருந்த மதுரவாணிக்கும் ஆத்திரம் வந்தது! 

அவனைக் கோபமாகப் பார்த்து “யார் சார் நீங்கள்… எங்கள் இடத்துக்கு அத்துமீறி வந்ததோடு, இங்கே வந்திருப்பவர்களை மிரட்டுவதற்கு? கொஞ்சம் ஒழுங்கு முறையோடு நடந்து கொள்ளுங்கள், இல்லாவிட்டால்..” என்று அவள் மிரட்டலாகச் சொல்லி முடிக்கும் முன், அவன் குறுக்கிட்டான். 

“இல்லாவிட்டால்? இல்லாவிட்டால் என்ன செய்து விடுவாய்? ஒழுங்கு முறையைப் பற்றி நீ பேசுகிறாய்? அத்துமீறி வந்தேனா? அத்துடன் நின்றேனே என்று சந்தோஷப்படு! நீ செய்திருக்கிற வேலைக்கு இந்த இடத்துக் உள்ளே ஒரு பெட்ரோலை ஊற்றி, இந்த இடத்துக் கதவை இழுத்து மூடி, உள்ளே ஒரு டின் பெட்ரோலை ஊற்றி, இந்த புத்தகங்களை எல்லாம் கொளுத்தாமல் விட்டேனே அதுவே பெரிது! ஆனால் ஒன்று, இன்னொரு தரம் இப்படிச் செய்தால் அதுதான் நடக்கும். ஒரு மணி நேரம் ஒப்பனை செய்து முகத்தை அழகாகக் காட்டி விட்டால், அதில் எல்லோரையும் மயக்கி விடலாம் என்று எண்ணமா? நான், முழுக்க முழுக்க வேறு மாதிரி தெரிந்துகொள்.” 

ஒரு ஒரு மணி நேர ஒப்பனையா? அவளா? அப்படியே ஒப்பனை செய்தாலும், அவளது முகம், அவள் செய்கிறாள்… அதைப் பற்றி இவன் என்ன பேசுவது? 

அதைவிட, வாசகசாலையை இழுத்து மூடுவதாக உளறுவதா? அதை விடவும் அங்கிருக்கும் விலை மதிப்பற்ற புத்தகங்களான பெரும் பொக்கிஷங்களைப் பெட்ரோல் ஊற்றி எரிப்பதா? இவனுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? இப்படி உளறுகிறான்? 

“என்ன சார் புத்தி கெட்டு விட்டது போல வாய்க்கு வந்தபடி உளறுகிறீர்கள்?” என்று அவளும் பதிலுக்கு சீற்றத்துடன் கேட்டாள்.

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல அவன் இன்னமும் குதித்தான். 

“உளறலா? யார்? திமிராடீ?” என்று கேட்ட விதத்தில் அவளுக்கு இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.

‘டீ’யா? 

தாத்தா, சுந்தரி, முத்தையா யாரும் இல்லாத நேரத்தில் ஒரு வெறி பிடித்தவனிடம் மாட்டிக் கொண்டாளா? இப்போது என்ன செய்வது? 

மேலே யோசிக்கக் கூட இடமளிக்காமல் வந்திருந்தவன் பொரிந்து தள்ளினான். 

“உளறுவது யார்? நீயா, நானா? கெட்ட புத்தி உனக்கா? அல்லது எனக்கா? கண்ட புத்தகங்களைக் காட்டிச் சின்னப் பிள்ளைகளை வலை போட்டு இழுக்கிறாயே. அந்தப் பெண் நிலா எடுக்கும் புத்தகங்கள் மூலமாக உனக்கு எவ்வளவு பணம் வரக் கூடும்? இருபது ரூபாய்? முப்பது? மிஞ்சி மிஞ்சி ஓர் ஐம்பது ரூபாய்? இந்தப் பிச்சைக் காசுக்காகப் பள்ளி நேரத்தில் ஒருவரிடமும் சொல்லாமல் தனியாக அவளை வரவழைத்திருக்கிறாயே. வெறும் ஒன்பது வயதுப் பெண். அவளுக்கு என்னென்ன ஆகியிருக்கக் கூடும். கடத்திக் கொண்டு போய் பிச்சை யெடுக்க வைத்து… இன்னும் என்னென்ன கொடுமைகள் நடக்கக் கூடும் என்று தெரியாதா, உனக்கு? அது மட்டுமல்ல. இன்றைக்கு இவள் எத்தனை கோடிக்கு வாரிசு தெரியுமா? உன் முட்டாள் மூளைக்கு அது தெரியா விட்டாலும் தெரிந்தவர்கள் எத்தனை பேர். அவளைக் கடத்திக் கொண்டு போய் பணம் கேட்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? ஏன்? ஐம்பது ரூபாய்க்காக பள்ளியிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வரவழைக்கிற நீயே இது போலக் கடத்தலுக்கும் ஏற்பாடு செய்ய மாட்டாய் என்றுதான் என்ன நிச்சயம்?” 

நிலாவை நான் வரச் சொல்லவில்லை. வந்தவளையும் இப்படி வரக்கூடாது என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தாள் என்று சொல்வதற்கு, வாணி எவ்வளவோ முயன்ற போதும், இதற்குச் சற்றும் இடம் கொடாமல் கண்டபடி அவனது சுதி ஏறிக் கொண்டே போக, ஒரு கட்டத்தில் இவனிடம் பேசிப் பயனில்லை என்று வாணி குறுக்கே பேசும் முயற்சியையே கைவிட்டாள்! 

அகங்காரம், திமிர், கர்வம் இவற்றின் மொத்த உருவம் இவன். இவன் தானாகப் பேச்சை நிறுத்தினால்தான் உண்டு. 

பேசிப் பேசி… அலுத்துப்போய், தாத்தா வருமுன், இவன் தன் உளறலை முடித்துப் போய் விட்டால் நல்லது என்பது மட்டும்தான் மதுரவாணியின் மனதில் இப்போது இருந்தது. 

ஏனெனில், இழுத்து மூடிவிடுவேன், புத்தகங்களை எரித்து விடுவேன் என்பன போன்ற வார்த்தைகளை எல்லாம் அவர் தாங்கவே மாட்டார். 

அவரைப் பொறுத்தவரையில் இந்த வாசகசாலை ஒரு கோயில். அவருடைய அருமை மனைவி கொலுவிருந்த ஆலயம். 

இப்போதும் உள் அறையில் மனைவியின் படத்துக்கு எதாகிலும் ஒரு பூவை வைத்து, சற்று நேரம் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டு நின்ற பிறகுதான் வாசக சாலையை மற்றவர்களுக்காகத் திறந்து வைப்பார். 

இதைப்போய் மூடுவதாம். பெட்ரோல் ஊற்றிக் கொளுத்துவதாம். 

கற்பூர வாசனை தெரியவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? 

மனதுக்குள் அவனைக் கழுதை என்று சொல்லாமல் சொல்லித் திருப்திப்பட்ட போதும், அதையே அவனைப் போல வெளிப்படையாகத் தன்னால் சொல்ல முடியாதது அவளுக்குக் குன்றலாகத்தான் இருந்தது. 

கூடவே, அவனது பேச்சை நிறுத்துமாறு செய்யக் கூட அவளால் முடியவில்லையே! 

ஒருவாறு தொண்டை காய்ந்து விட்டதாலோ என்னவோ, ஒரு வழியாக அவனும் “இன்னொரு முறை இப்படி ஏதும் நடந்தால், இந்த வாசகசாலைக்கு ஒரு பெரிய முழுக்குப் போட வேண்டியிருக்கும் என்பது நினைவில் இருக்கட்டும்?” என்ற கடைசி மிரட்டலோடு, பேச்சை முடித்துக் கொண்டு வந்த அதே வேகத்தில் வெளியேறிக் காரையும் வேகமாகவே ஓட்டிக் கொண்டு சென்று விட்டான். 

அவ்வளவு நேரம் நின்று கொண்டிருந்ததே அதிசயம் போல, மதுரவாணியின் கால்கள் துணியாய் துவள, அவசரமாக இருக்கையில் உட்கார்ந்து கொண்டாள். 

இல்லாவிட்டால், கால் மடங்கிக் கீழே விழுந்திருப்பாள். 

சற்று நேரம் மூச்சு வாங்கிக் கொண்ட பிறகே, அவளால் விழி உயர்த்திச் சுற்றிலும் பார்க்க முடிந்தது! 

எப்படிப்பட்ட வாசகசாலை அது. 

அதைப் போய் என்ன வார்த்தை சொன்னான்? 

அத்தியாயம்-2

‘கலைவாணி’ என்று பொருத்தமான பெயரைக் கொண்டிருந்த இந்த வாசகசாலை உருவான கதையே அழகானது. 

அந்தப் பகுதியில் முதல் முதலாக ஒரு பெரிய கார் தொழிற்சாலை தொடங்கியபோது, அதில் பணி புரிபவராக, முதலிலேயே அங்கே வந்தவர்களுள் மதுரவாணியுடைய தாத்தா மணிவாசகம் ஒருவர். 

பெரியதாகத் திட்டமிட்டுத் தொடங்கிய தொழில்.

பணிபுரிவோருக்கான குடியிருப்பு, அவர்களுடைய பிள்ளைகளுக்குப் பள்ளி, மருத்துவமனை, விளையாட்டுத் திடல்… இப்படி எல்லாமே கூட! 

திட்டப் பணியில் மணிவாசகமும் இருந்ததால் சென்னையிலிருந்து இங்கே குடி பெயர்ந்து வருவதற்கு அவர் சற்றும் தயங்கவில்லை. 

நல்ல தண்ணீர் இராது… காட்டுக்குள் பாம்பு பல்லிக்கு இடையே வாழ நேரும் என்றெல்லாம் கூறி எத்தனையோ பேர் தயங்கியபோதும், ஐந்து வயதுப் பையன், இரண்டு வயதுப் பெண்ணோடு மணிவாசகமும், அவருடைய மனைவி மதுரவல்லியும் இந்தக் குடியிருப்பில் வசிக்கத் தொடங்கிய முதல் குழுவில் துணிந்து வந்து விட்டார்கள். 

திட்டமிட்டபடியே நிறுவனத்தினர். வசதிகளைச் செய்து கொடுக்கவும், எந்தவிதக் குறையுமின்றியே பிள்ளைகளை வளர்த்துப் படிக்க வைத்து, திருமணம் செய்து, நல்ல வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்க தன் பெற்றோரால் முடிந்ததாகக் கதிரேசன் ஒரு தரம் மகள் மதுரவாணியிடம் சொல்லியிருந்தார். 

பாட்டியின் பெயரைக் கொண்டுதான் மதுரவாணிக்குப் பெயர் வைக்கப்பட்டது. ஆனால், பாட்டியின் பெயரில் இருந்த ‘வல்லி’ இந்தக் காலத்துக்குச் சரி வராது என்று மருமகள் ஆட்சேபிக்கவே, அவளது விருப்பமும் மதிக்கப் பட்டு, மதுரவாணி என்று வைத்ததாகவும் அவள் கேள்வி யுற்றிருந்தாள். 

அவளை ‘மதுரம்’ என்று பாசமாக அழைப்பது தாத்தா மட்டுமே! உயிருடன் இருந்த பாட்டியின் பெயரைச் சொல்லி அழைப்பது கூடாமல் மற்றவர்களுக்கு அவள் வாணியாக இருந்தாள். 

அவள் பிறந்து வளரும்போது, தொழிற்சாலையும் பல மடங்கு பெரிதாகி, அதற்கு ஏற்ற விகிதாச்சாரப்படி குடியிருப்பும் ரொம்ப பெரிதாகி விட்டது. 

அத்தோடு, அத்தனை மக்களின் தேவைக்கு ஏற்றபடி, கடைகள், உணவகங்கள் எல்லாம் உருவாயின. ஒரு திரை அரங்கு கூட கட்டப்பட்டது. 

இத்தனையிலும் திருப்தி இல்லாது போய், விடுமுறை நாட்களில் ஷாப்பிங், கேளிக்கை என்று நகரத்துக்கு ஒரு பெரும் கூட்டம் செல்லும்! 

மணிவாசகத்தின் அறுபதாவது வயதில், பணியி லிருந்து ஓய்வு பெற்ற போது அவருக்கும், அவருடைய மனைவிக்கும் அந்த இடத்தை விட்டுச் செல்ல மன மில்லை. 

அதற்குள், மக்கள் இருவருமே படித்து, முடித்து, மணமாகி அவரவருக்குக் குடும்பம் அமைந்திருந்தது. 

மகளுக்குத் திருமணமாகி, இரு பையன்களோடு சிங்கப்பூரில் இருந்தாள். 

மகன்தான் மதுரவாணியுடைய அப்பா. கதிரேசன் ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார். மகன்… மதுரவாணியுடைய தம்பி, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அம்மா தாரிணி ஒரு ‘பொட்டிக்’ வைத்து நடத்திக் கொண்டிருந்தாள். 

எல்லோரும் பிஸி என்றபோதும், பெற்றோரைத் தங்களுடன் இருக்கச் சொல்லி கதிரேசன் கேட்டார்தான்… 

ஆனால், மணிவாசகம் தம்பதிக்கு, பணி ஓய்வு காலத்தை கழிக்க வேறு யோசனை இருந்தது. 

குடியிருப்பில் இவ்வளவு பேர் இருந்தும், சனி, ஞாயிறு சென்னைக்குச் செல்லும் போதுதான், புத்தகங்கள் வாங்குவதோ, வாடகைக்கு எடுத்து வருவதோ நடந்தது! 

எனவே, மணிவாசகமும், மதுரவல்லியும் ஓய்வூதியத்தில் ஒரு தொகையை எடுத்து அதற்குள், சொந்தமாகி விட்டிருந்த வீட்டின் முன்புறமாக ஒரு பெரிய ஹால் கட்டி, அதில் ஒரு ‘லெண்டிங் லைப்ரரி’ அமைத்தார்கள். புத்தகங்களுக்கு இன்னும் ஒரு தொகை. வாசகசாலை வேலைக்கு ஒரு பெண். மொத்தக் காவல், எடுபிடிக்கு ஒருவன். 

இப்படித் திட்டமிட்டுத் தொடங்கியதுதான் இந்தக் கலைமகள் லெண்டிங் லைப்ரரி. 

கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகள், புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ள கணவன் மனைவி இருவருக்குமே வாழ்க்கை சுவாரசியமாகவும் தேக்கமின்றி உற்சாகமாகவும் கழிந்தது. 

அதன் காரணமும், இதே வாசகசாலைதான். 

என்னென்ன புத்தகங்கள் வாங்குவது என்று பட்டியல் போடுவதும், பைண்டிங் கொடுத்து வாங்குவதும், என்ன தலைப்பில் வருகிறது என்று பார்த்து குறித்து விட்டு, அலமாரித் தட்டுக்களில் அடுக்கி வைப்பதும். 

முதல் ஆட்களாகப் புதிதாக வாங்கி வந்த புத்தகங் களைப் படித்துவிட்டு இருவருமாகக் குறை நிறைகளை ஆராய்வார்கள். 

இரு பெரியவர்களுக்கும், ஒரு கவலையுமற்ற, சுகமான, ஆனந்தமான, தெள்ளிய நீரோடையாக வாழ்க்கை சென்றது. 

சுமார் பதிநாலு ஆண்டுகள்! 

இடையிலே, பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட் டால், வாசகசாலைக்கு விடுமுறை விட்டுவிட்டு, பேரன் பேத்திகளை வந்து பார்த்து விருப்பப்பட்டதை வாங்கிக் கொடுத்துவிட்டுப் போவார்கள். 

இவர்களும் விடுமுறைக்குப் போவார்கள். தன் பொட்டிக்கை விட்டுவிட்டு சொர்க்கபுரி குடியிருப்புக்கு தாரிணி லேசில் வருவது இல்லை. என்றாலும்,கணவர், பிள்ளைகள் அங்கே செல்வதைத் தடுத்தது கிடையாது. 

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகள் கருணா வுடைய குடும்பம் இந்தியாவுக்கு வரும்போதும், பிள்ளைகள் பாட்டி வீட்டில்தான் ஆட்டம் போடுவார்கள். 

சுகமோ, துக்கமோ, எதற்கும் ஒரு முடிவு உண்டு தானே? 

சென்ற ஆண்டுதான், ஒரு பேரிழப்பாக, மதுரவல்லியின் மரணம் நிகழ்ந்தது! 

ஊர்ப் பக்கம் திருவிழாவுக்காகச் சென்றவள், ஏதோ நோயைப் பிடித்துக் கொண்டு வர, ஒரே வாரத்தில் எல்லாம் முடிந்து விட்டது. 

பெரிதாகக் காட்டிக் கொள்ளாமல் மறைந்தாலும், மணிவாசகம் அதிர்ந்து போயிருப்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரிந்தது. 

அப்போதும் தந்தையைத் தங்களோடு வந்து இருக்கும்படி, மகன், மகள் இருவருமே அழைத்தனர்தான். ஆனால் மணிவாசகத்துக்கு அது பிரியமில்லை. 

மகள் வயிற்றுப் பிள்ளைகள் சற்று வளர்ந்த பிள்ளை கள், பெற்றோர், பிள்ளைகள் மட்டுமே குடும்பம் என்று பழகிவிட்ட இடத்தில், திடுமெனப் போய் தாத்தா இங்கே தான் இருக்கப் போகிறேன் என்றால் சரிவராது. 

கெட்டவள் கிடையாது என்றாலும், மருமகளுக்குச் சற்றுப் பெரிய வாய். சட்டென வேண்டாத வார்த்தை வந்து விழுந்து விடும். 

அந்த வார்த்தை விழுவதற்கான வாய்ப்பைக் கொடுக்காமல் இருந்து கொள்ள வேண்டுமே தவிர, சொன்ன பிறகு வருத்தப்பட்டுக் கொண்டிருப்பது கூடாது என்பது, மதுரவல்லியின் கொள்கை. வாழும் வரை அப்படித்தான் இருந்தாள். 

அதையும் கருத்தில் கொண்டு தான் பணி ஓய்வுக் காலத்துக்காக, அவர்கள் இப்படி ஒரு தொழில் திட்டம் போட்டதே. 

இப்போது தனி மரமாக நிற்க நேர்ந்த போதும், மனைவியின் கருத்தை அலட்சியமாகக் கைவிட, மணிவாசகத்துக்கு விருப்பம் இல்லை. 

இருக்கும் மதிப்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது அவரும் எண்ணினார் என்றுதான் அத்தோடு, யார் வீட்டிலும் சும்மா உட்கார்ந்து பொழுதை நெட்டித் தள்ளிக் கொண்டிருப்பதும் அவருக்கு கடினமே. 

அத்தோடு ‘சொர்க்கபுரி’யில் அவருக்கு ஒன்றுமில்லாமல் போய் விடவில்லையே. மனைவியும் அவருமாக உருவாக்கிய வாசகசாலை ஒன்று போதுமே. அதன் வேலைகளைப் பார்த்தால் பொழுதும் நல்லபடியாகவே கழிந்து போய்விடும். 

அத்தோடு, மனைவி மதுரவல்லியின் ஆவியும் அங்கே தான் கலந்திருப்பதாக ஓர் எண்ணம் அவருக்கு. அதை விட்டு வேறெங்கும் அவர்தான் எப்படிப் போவார். 

எனவே அவரால் மொட்டு மொட்டென்று சும்மா இருக்க முடியாது என்பதை மட்டும் சொல்லி, வேலைக்கு இரண்டு ஆட்களும் இருப்பதால், உடம்பு முடிகிறவரை இதையே தொடரப் போவதாகவும் ஒரே பிடியாகக் கூறி முடித்து விட்டார். 

முடிந்தவரை சொல்லிப் பார்த்துவிட்டு “அப்பாவின் மனம் மாறினால் எனக்குத் தெரிவியுங்கள் அண்ணா” எனத் தமையனிடம் தெரிவித்து விட்டே விமானமேறினாள் மகள். 

கதிரேசனும் தந்தையிடம் முயன்று பார்த்துவிட்டு தோல்வியும் சிறு மன உறுத்தலுமாகச் சென்னைக்குத் திரும்பினார்.

அப்போதுதான் யாரும் எதிர்பாராத விதமாக, மதுரவாணி ஒன்று செய்தாள். 

அவளது பட்டப் படிப்பு அப்போதுதான் முடிந்திருந்தது. 

வேலைக்காக முயற்சி செய்.. அல்லது ‘பொட்டி’க்கில் உதவி செய் என்று தாரிணி மகளிடம் கூறிக் கொண்டிருந்தாள். 

“தாத்தாவிடம் நிறைய பழைய புத்தகங்கள் இருக்கின்றன. படித்துவிட்டு வருகிறேன்!’ என்று பெற்றோருடன் கிளம்பாமல் அங்கேயே தங்கி விட்டாள். 

தாரிணிக்கு கோபமே, வேலை வாய்ப்புக்களைப் பார்த்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளச் சென்னை தான் வசதி. அதை விட்டு புத்தகம் படிக்கவென்று நகரம் என்று கூடச் சொல்ல முடியாத இடத்தில் உட்கார்ந்து வாழ்க்கையை வீணடிப்பதா என்று ஆத்திரம். 

ஆனால் தந்தை கதிரேசனுக்குத் தனித்திருந்த தந்தை பற்றி கவலை அப்போதைக்குத் தீர “வயது வந்த பெண், நல்லது கெட்டது அவளுக்குத் தானாகத் தெரிய வேண்டும். நாம் தடுத்து வாணி மீறிக் கொண்டு போவதைவிட, நாம் பேசாதிருந்து விடுவது மேல்” என்பதுபோலப் பேசி, அவர் மறைமுகமாக ஆதரவு தரவே, மதுரவாணி சந்தோஷமாகவே தாத்தாவிடம் இருந்து விட்டாள். 

மணிவாசகத்துக்கு ரொம்பவும் மகிழ்ச்சியே. 
 
மனைவியும் அவருமாகச் சேர்ந்து செய்த வேலையைத் தனியாகச் செய்து முடிப்பது, அந்த வயதில் அவருக்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். 

அத்தோடு ஆணும் பெண்ணுமாக ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்பது போல், இருவருமாகப் பேசிப் பேசி செய்த வேலைகளைத் தன்னந்தனியே செய்வது மனதிற்குக் கடினம்தானே? 

அது புரிந்தது போலப் பேத்தி தங்கி விட்டது, அவருக்கு மிகவும் ஆறுதலை அளித்தது. 

மற்றவர்கள் கிளம்பிப் போன பிறகே, வாசகசாலை மேல் தாத்தாவுக்கு இருந்த அக்கறையை மதுரவாணி சரியாகப் புரிந்து கொண்டாள் எனலாம். 

அத்தோடு, இதை இந்த அளவுக்கு வளர்ப்பதற்கு தாத்தாவும் பாட்டியும் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்றும் அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. 

வாசகசாலை மேல் அவளுக்கும் மிகுந்த ஈடுபாடு வந்துவிட அதை இன்னமும் மேம்படுத்த வேண்டும் என்று நிறைய யோசித்து, யோசித்து புதுப் புது ஐடியாக்களைச் செயல்படுத்தினாள். சொல்லப் போனால் சிறுவர் பகுதி இவ்வளவு பெரிதானது அவளது யோசனைப் படிதான். 

“பாட்டி மாதிரியே யோசிக்கிறாயே?” என்று அவள் சொன்னதை அப்படியே செயல்படுத்துவார் பெரியவர்.

சிறுவர்களுக்காக பத்து தட்டுக்கள் கொண்ட ஒரு புது ‘ராக்’கே வைத்தார்கள். 

செலவு அதிகம் ஆனாலும் வரவும் பெருகியது. 

இதைப் போய் எரிப்பேன்.. கொளுத்துவேன் என்கிறானே ஒருவன். இன்னமும் தாங்கவில்லை அவளுக்குச் சே… என்ன மனிதன். 

மீண்டும், அவளது மனம் அவனில்தான் வந்து நின்றது.

அவளுக்குச் சரிவர நினைவு தெரிந்த காலத்தில் இருந்து, இவ்வளவு கடுமையாக அவளிடம் யாருமே பேசியதில்லை. அவ்வப்போது கடுப்பான வார்த்தைகளை அள்ளிவிடும் அம்மாகூட.. 

அதனால்தான் இவ்வளவு பாதிப்போ? 

சுவரில் மாட்டியிருந்த பழைய காலப் பெண்டுலக் கடிகாரம், தாத்தாவுக்கும் பாட்டிக்கும் திருமணமான புதிதில் பத்து ரூபாய்க்கு வாங்கியது. டங் டங்கென்று மூன்று தரம் மணியடிக்கவே மதுரவாணி திடுக்கிட்டு நிமிர்ந்தாள். 

வேண்டாத நினைவுகளில் நேரத்தை வீணாக்காதே என்று கடிகாரம் நினைவூட்டுகிறது போல. இன்னும் சற்று நேரத்தில் தாத்தா வந்து விடுவாரே. 

அந்தச் சிறுமி நிலா வருமுன் செய்து கொண்டிருந்த வேலைகளை மீண்டும் அவசரமாகச் செய்யலானாள் வாணி. 

அந்தந்த இடம் பார்த்து. எழுத்து வரிசைப்படி அடுக்குவதுதான் நேரத்தை இழுத்தது. 

பெரும்பாலும் இந்த வேலையை இங்கே பணிபுரியும் சுந்தரிதான் செய்வாள். வெறும் நாலாம் வகுப்பு ஃபெயிலான அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து, தலைப்பு பார்த்து, உரிய இடத்தில் வைப்பது, எடுத்து வருவது போன்ற வேலைகளுக்கு அவளைப் பழக்கியது எல்லாம் மதுரவல்லியின் திறமையும், மனிதாபிமானமும்தான். 

சம்பளம் என்று ஒரு தொகையை அவள் பெயரில் பாங்கில் போட்டு, சேமிக்க வைத்து, அத்துடன் கூடுதலாகச் செலவு செய்து, அவளுக்குத் திருமணம் செய்து வைத்தது மணிவாசகம், மதுரவல்லி தம்பதியர்தான். இப்போது அவளுடைய இரு பிள்ளைகள் பள்ளியில் படிக்கிறார்கள். பள்ளிச் சீருடை, புத்தகங்கள் என்று தாத்தாவின் உதவியும் உண்டு. 

மதுரவாணியும் கூட மாலை வேளைகளில் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பாள். 

அத்தோடு சுத்தம், சுத்தம் என்று அதிலும் பாட்டியின் வார்ப்பு சுந்தரி. 

ஆண்டுதோறும் ஒரு வாரம் அவளுடைய கணவனின் ஊரில் அம்மன் கோயில் திருவிழாவுக்கென்று செல்வது அவளது வழக்கம். இன்னும் இரு தினங்களில் வந்து விடுவாள். 

அதுவரை இந்த அதிகப்படி வேலையைச் செய்வதில் தாத்தாவுக்கும் பேத்திக்கும் சிறு போட்டி நடந்து கொண்டே இருக்கும். 

அப்படியே பாட்டி மாதிரி, என்னை ஒரு வேலை செய்ய விட மாட்டேன் என்கிறாள் என்று தாத்தா சொன்னதாக யாராவது சொல்லும்போது முதியவர்கள் இடையே இருந்த அன்பு, வாணிக்கு இன்னமும் தெளிவாகப் புரியும்.

சுந்தரி விடுமுறை எடுக்கும் ஒரு இந்த வாரத்தில் பாட்டியும், தாத்தாவும் கூட இப்படித்தான் அடுத்தவருக்கு அதிக வேலை வந்து விடாமல் தானே செய்வார்கள் போல என்று எண்ணுவாள். உத்தமத் தம்பதிகள். 

அவள் இந்த வேலை செய்து முடிக்கவில்லை என்றால், அவளுக்கு வேலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே அவள் போய் மாலை சிற்றுண்டி உண்டு, இரவு உணவு வேலைகளைச் செய்து முடித்துத் திரும்பி வருமுன் தாத்தா கஷ்டப்பட்டேனும் செய்து முடித்து விடுவார். 

அவர் கஷ்டப்படக் கூடாது என்றுதான் இந்த வேலையை வாணி இப்படி அவசர அவசரமாக முடிப்பதே. 

‘கலைவாணி’ ஒன்றும் ரொம்பப் பெரிய வாசகசாலை கிடையாதுதான். ஆனால் அதற்காகச் சின்னது என்றும் சொல்லிவிட முடியாது. சுமார் பதினைந்து ஆண்டுகளாகத் தாத்தாவும் பாட்டியும் சேர்த்த புத்தகங்கள். மிகவும் சிதிலமாகிக் கழித்தவை போக, ஓரளவு நிறையத்தான் இருந்தன. 

பெரும்பாலும் கதைப் புத்தகங்களைத்தான் அங்குள்ள வர்கள் விரும்பி எடுத்துப் போய் படிக்கிறார்கள் என்பதால், அது போன்ற புத்தகங்களைத்தான் வாசகசாலைக்கு அதிகம் வாங்குவதும். 

ஆங்கிலமாகட்டும், தமிழாகட்டும், சிறிய பெரிய நாவல்களுக்குத்தான் அதிகத் தேடல். முக்கியமாக பெண்களிடமிருந்து. 

காதல் கதைகளுக்கு அடுத்து, துப்பறியும் நெடுங் கதைகள் பெரும்பாலும் ஆண்களுக்குப் பிடித்தம் இவை தான். 

“கதை தொடங்கிப் பத்து பக்கங்களுக்குள் ஒரு கொலை கூட விழாமல் அதெல்லாம் கதையா?” என்று அலுத்துக் கொள்பவர்களும் உண்டு. 

அவர்களுக்கும் வேண்டுவது கேட்டு எழுதி வைத்து வாங்குவார்கள்.

அந்தப் பகுதியி ஓர் அருமையான பள்ளி உண்டு. தொழிற்சாலை அமைத்த நிறுவனத்தாருடையதுதான். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் கல்வி பயிற்றுவித்தார்கள். 

அதன் பயனாகச் சிறுவர் படிக்கும் புத்தகங்களும் நிறைய வாடகைக்கு எடுத்துப் போய்ப் படித்தனர். 

இவர்களை மனதில் கொண்டுதான் சிறுவர் பகுதியை மதுரவாணி விரிவு படுத்தியதே. 

அட்டவணைப் போட்டுப் புத்தகங்களை வாங்கி, அவற்றை ‘பைண்ட்’ செய்து சின்னக் கயிறுகளில் இணைத்த புக் மார்க்கையும் வைத்த பிறகே, புத்தகங்களை வாடகைக்கு கொடுப்பதே. 

அப்படியும் பல புத்தகங்களில் அங்கங்கே கிறுக்கி வைத்திருக்கும். 

கோலம் பூ வரைந்திருப்பார்கள். 

அதைவிட மோசமாக பெண்களின் படங்களுக்கு மீசையும், ஆண்களுக்கு பூவும் பொட்டும் வைத்திருப்பார்கள். 

‘போகிறது’ என்று தாத்தா தலையாட்டி விடுவார். ஆனால் மதுரவாணி விட மாட்டாள். தனியே குறித்து வைத்திருந்து, அடுத்த முறை வரும்போது, இன்னொரு தரம், இப்படிச் செய்தால், இங்கே புத்தகம் தர இயலாது, என்று தெளிவாக, ஆனால் குரலை உயர்த்தாமலே சொல்லி விடுவாள். 

அதனால் முன்னைப் போல அல்லாமல், புத்தகங்கள் அதிக காலம் புதியதாகவே இருப்பதாக, அவளுடைய தாத்தா மணிவாசகம் சொல்லுவார். 

“நீங்களும் கண்டிப்பாக இருங்களேன் தாத்தா” என்று பேத்தி சொன்னால் சிரிப்பாரே தவிர, ஒரு நாளும் அவர் யாரிடமும் கண்டிப்பு, கடுமை காட்டியதே கிடையாது. 

வெளியாரிடம் மட்டுமல்ல, பேரன் பேத்திகளிடமும் கூட, அவர்கள் என்ன குறும்பு செய்தாலும் கடுமை காட்டியதில்லை. 

அதிலும் மதுரவாணி, சற்று நாள் கழித்து பிறந்தவள் என்பதால் அவளிடம் தனி அன்பு. செல்லம், கண்ணு என்பார். 

அவளைப் போய் என்னவெல்லாம் சொல்லி விட்டான். இருந்திருந்து அவள் ஒரு சின்னப் பெண்ணைக் கடத்த ஏற்பாடு செய்வாளாமா? 

எதிர்பாராத வேளைகளில். அந்த நிலாவுடைய உறவினனின் கடுமையான பேச்சு வாணிக்கு நினைவு வந்து விடும். 

ஒரு திமிர்ப்பிடித்தவனின் அர்த்தமற்ற உளறல் என்று என்னதான் அலட்சியப்படுத்த முயன்றாலும் வனது கோப முகமும், வார்த்தைகளும் நினைவு வரும்போது அவளுக்கு மனம் வருந்தத்தான் செய்தது. 

நல்லவேளையாக அவன் அந்த வாசகசாலையின் வாடிக்கையாளன் அல்ல. அன்று நிலா எடுத்துப் போன புத்தகங்களும் கூட டிரைவர் மூலமாகத் திரும்பி வந்து விட்டன. 

புத்தகங்களை காரோட்டி கொண்டு வந்து தருவது என்றால் என்ன அர்த்தம்? இந்தப் பெண் நிலாவும் இங்கே வரப்போவது இல்லை என்று தானே? 

அதனால் அவனைப் பார்க்கவே தேவையே இல்லை. ரொம்பவும் நல்லது. 

இப்படி எண்ணி, எண்ணி மதுரவாணி மனதை ஆறுதல் படுத்தி, ஒரு வாறு அதில் வெற்றியும் அடைந்து விட்ட சமயத்தில் ஒரு நாள் நிலா, மறுபடியும் வாசக சாலைக்குள் வந்து நின்றாள். 

“ஆன்ட்டி” என்று ஆர்வத்துடன் அழைத்தபடி! 

– தொடரும்…

– வாணியைச் சரணடைந்தேன் (நாவல்), முதற் பதிப்பு: 2013, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *