வாணியைச் சரணடைந்தேன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 23, 2024
பார்வையிட்டோர்: 5,299 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம்-3

நிலா முதல் தடவை வந்தபோது மதுரவாணி திடுக்கிட்டாள் என்றால் இப்போது அவளுக்குத் தூக்கி வாரிப் போடவே செய்துவிட்டது. 

இந்தப் பெண். இப்போது இங்கே ஏன் வந்தாள்? எதற்காக வந்திருந்தபோதும் பின்னோடு இவளுடைய தந்தை… அவ்வளவு அதிகாரத்தோடு… அதிகப்படி என்றாலும் அக்கறையோடும் பேசுகிறவன் தந்தையாகத் தான் இருக்க வேண்டும். அவனும் வந்து நிற்பானே.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன் அப்பாவும் நீயும் எப்படியோ போங்கள், இனிமேல் நீ இந்த வாசகசாலைப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கக் கூடாது. இங்கே வரவும் கூடாது. நீ எழுதியதை எல்லாம், எல்லாம் உன் வீட்டிலேயே யாரிடமாவது காட்டிக்கொள். நான் பார்க்கவோ, கேட்கவோ மாட்டேன், மாட்டவே மாட்டேன். என்னால் முடியாது. முதலில் இங்கிருந்து கிளம்பு. போ…” என்று விரட்டினாள். 

வாடிய முகத்துடன் சிறுமி செல்ல, அதிசயத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள் சுந்தரி. இப்போது இவளிடம் என்னவென்று விளக்க? 

சம்பளம் கொடுக்கிற நான், உனக்கு ஒன்றும் விளக்கம் சொல்லத் தேவையில்லை என்று இருக்க, மதுரவாணியால் முடியவில்லை. சுந்தரியிடம் அவள் அப்படிப் பழகவுமில்லை. 

அவள் யோசிக்கும்போதே “பாவம்மா அந்தப் புள்ளை. கண்ணைத் தொடச்சிக்கிட்டே போவுது” என்றாள் இரங்கிய குரலில் “நீ எதுக்கும்மா அதுங்கிட்டே போய் அவ்வளவு கண்டீசனாப் பேசினே? நல்ல வசதியான பொண்ணா வேறத் தெரியுது. வந்ததானா, நிறையப் புஸ்தகம் எடுக்குமில்ல?” என்று வெகு இயல்பாக வினவினாள். 

பதில் சொல்வாள் என்கிற நிச்சயம்! 

சுந்தரியின் கேள்வியிலேயே பதிலைப் பிடித்து “ரொம்ப வசதிதான் சுந்தரி. ஒரே வாரிசாம். பெண்ணை யாரேனும் கடத்திப் போய் விடுவார்கள் என்று அதன் அப்பாவுக்கு ஒரே பயமாம். அதனால், எங்கேயும் தனியாக அனுப்ப மாட்டோம், இங்கே கூட வர விடாதீர்கள் என்று ரொம்பக் கேட்டுக் கொண்டார்கள். நீ திருவிழாவுக்குப் போயிருந்த போது, இங்கே வந்து சொன்னார். அவளிடமும் சொன்னார்கள். ஆனால் அவள் சின்னப் பெண், பள்ளி வேறு பக்கத்தில் இருக்கிறதா? வரக்கூடிய ஆபத்து புரியாமல் ஓடி ஓடி வந்து நிற்கிறாள். அவள் இங்கே வருகிற நேரத்தில், அவள் அப்பா சொல்கிற மாதிரி ஏதாவது விபரீதம் நடந்து விட்டால் என்ன செய்வது? அப்புறம், நம் வாசகசாலைக்கும் எவ்வளவு கெட்ட பெயராகி விடும்? அதனால்தான், காய்ச்சலுக்கு கசப்பு மருந்து கொடுக்கற மாதிரி, இப்படிக் கொஞ்சம் கடுப்பாகவே பேசி அனுப்பினேன்! இனிமேல் வரமாட்டாள் பார். அவளுக்கு நல்லது அதுதான் இல்லையா?” என்று வாணி விளக்கிய விதத்தில் சுந்தரியும் அமைதியடைந்தாள். 

மற்ற எதையும் விட, வாசகசாலைக்குக் கெட்ட பெயர், யாரும் வர மாட்டார்கள் என்கிற மாதிரி ஏதேனும் சொன்னால் சுந்தரி தாங்கவே மாட்டாள். 

அவளை வாழ வைத்த தெய்வமாகக் கருதும் பெரியம்மா, இந்த வாசகசாலைக்காக எவ்வளவு பாடுபட்டிருக்கிறாள் என்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறாளே! 

சுந்தரிக்கு சமாதானமாகப் பேசி. விஷயத்தை முடித்து விட்டாலும், மதுரவாணியின் மனதில், நிலாவின் வாடிய முகம் அடிக்கடி தோன்றி, அவளை உறுத்திக் கொண்டே இருந்தது. 

எவ்வளவு ஆவலோடு வந்தாள். 

ஆசையாக ஓடி வந்த செல்ல நாய்க் குட்டியை எட்டி உதைத்தது போலப் பாவம், அந்தச் சின்னப் பெண்ணைப் போய் நோகடித்து விரட்டி விட்டாளே! 

திரும்பித் திரும்பிப் பார்த்தபடி செல்லும்போது, நிலாவின் முகத்தில் இருந்த திகைப்பும், வாட்டமும் மதுரவாணியை ரொம்பவே வாட்டி வதைத்தன. 

அவளுடைய தந்தை, வாணியைத் திட்டினான் என்றால், அவனுக்குப் பதில் கொடுக்க வேண்டும். அதை விட்டு அந்தச் சின்னக் குழந்தையிடம் காய்ந்து கடுத்தாளே. 

எட்டு, அல்லது ஒன்பது வயதிருக்குமோ? அதற்குள் எவ்வளவு கெட்டிக்காரத்தனம்! 

அலைகள் வருவதையும் போவதையும் பார்க்கும் பெரியவர்களிலேயே பெரும்பான்மையோருக்கு அது பற்றி ஒன்றும் தோன்றுவது இல்லை. 

அப்படியிருக்க இந்தச் சின்னப் பெண் அது பற்றி யோசித்து அதற்கொரு காரணம் கற்பித்து, இப்படி ஒரு கதையை உருவாக்கி இருக்கிறாளே. 

முத்துச்சிப்பி அம்மாவாம், முத்து அதன் குழந்தையாம்.

எப்படித்தான் தோன்றியதோ? 

இன்னும் இரண்டு கதைகள் எழுதி வைத்திருக்கிறாளாமே அவை எதைப் பற்றியவைகளாக இருக்கக் கூடும்? அவைகளும் இந்தக் கதை போல அழகாகத்தான் இருக்கும். 

அவைகளைப் படித்துப் பார்த்து ரசிப்பதோடு, இன்னும் ஏதேனும் சேர்க்க முடிந்தால் அதைச் சொல்லி.. நிலாவுக்கு உதவுவதே ஒரு சுகமாக, எவ்வளவு இனிமையாகப் பொழுதைக் கழித்திருக்கலாம். 

நல்ல பெண்! 

தான் எழுதியதுதான் கதை என்று விறைத்துக் கொண்டு போகாமல். வாணியில் சுனாமிக் கருத்தையும் சந்தோஷமாகச் சேர்த்துக் கொண்டாளே. 

நிலாவைப் பார்க்க வேண்டும், அவளோடு பேச வேண்டும் என்ற ஆவல் அவளது உடம்பின் ஒவ்வோர் அணுவையும் பற்றி இழுப்பது போன்ற பிரமை தோன்றவும் மதுரவாணிக்கே ஆச்சரியமாக இருந்தது. 

அநியாயமாக நிலாவை திட்டி விரட்டியது சற்றும் நியாயமற்ற செய்த ஒரு காரியம் அவ்வளவு தூரம் அவளைப் பாதித்திருக்கிறது. 

செல்ல நாய்க்குட்டியைப் போல எவ்வளவு ஆசையாகப் பார்த்தாள் என்று எண்ணும்போது, வீட்டு நாய்க் குட்டியின் நினைவும் வந்தது. ‘க்யூட்டி’ என்று அவள் கூப்பிட்டால், பாதிச் சாப்பாட்டை விட்டு விட்டுக் கூட அவளிடம் ஓடி வந்து விடும். 

அதைப் பார்க்க வேண்டும். அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டும்… எதிர் வீட்டு ஆன்ட்டி… அக்கம் பக்கம் பார்த்துப் பழகிய அனைவரையும் போய்ப் பார்த்து விட்டு வர வேண்டும் என்று உள்ளூர மனம் பரபரத்தது. 

திங்கள் தோறும், வாசகசாலையின் விடுமுறை தினம். பொதுவாக அந்த விடுமுறை தினத்தன்றுதான் தாத்தாவும், பேத்தியுமாகவோ அல்லது இருவரில் ஒருவரோ சென்னைக்குச் சென்று, வாசகசாலைக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கி வருவது, பட்டியல் பெரிதாக இருந்தால், வாணி கூடுதலாக ஒரு நாள் தங்கி, அவைகளையும் வாங்கிக் கொண்டு வருவாள். அலைந்து, திரிந்து பழைய காலத்துப் புத்தகங்களையும் வாங்குவது உண்டு. 

கொஞ்ச காலமாக அலைச்சல் முடியாமலோ, என்னவோ பேத்தியை மட்டும் அனுப்பிக் கொண்டிருந்தார் மணிவாசகம். 

அவர் மனம் நோகத் தாயார் ஏதேனும் சொல்லியிருப்பாளோ என்று சந்தேகம் மதுரவாணிக்கு. ஆனால் அவள் கேட்டதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று அடித்துச் சொல்லி விட்டார் பெரியவர். 

ஆனால் வாணியின் சந்தேகம் தீர்வதாக இல்லை. 

அதற்கு ஏற்றாற் போல, இடையில் மகளைப் பார்க்க வென்று வந்த தாரிணி, மகள் வாசகசாலைக்குச் சென்ற பிறகு, மாமனாரிடம் “சொல்லச் சொல்லக் கேளாமல், வாணியின் எதிர்காலத்தை நாசம் பண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள்” என்று கடுகடுத்ததை. வாணியே கேட்க நேர்ந்தது. 

நம்மைப் பார்க்க வென்று வந்திருக்கும் அம்மாவிடம் கூடச் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று, சுந்தரியிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு வந்த வாணியின் காதுகளில், இந்தக் குற்றச்சாட்டு தெளிவாகவே விழுந்தது. 

வாசகசாலையின் பின்புறம் தானே வீடு! 

அப்போதைக்குச் சத்தமின்றித் திரும்பிப் போய், ஓசை எழுப்பியபடியே திரும்பி வந்த பெண், அதன் பிறகு தாத்தாவையும் தாயையும் தனியே பேச விடவில்லை. 

ஆனால், தனிமையில் தாயிடம் ஆத்திரப்பட்டாள். “ரொம்பக் கெட்டிக்காரத்தனம் அம்மா உங்களுக்கு? அப்பாவையும் கூடக் கூட்டி வரவில்லை. அதனால் ரொம்பத் தைரியமாகத் தாத்தாவிடம் இவ்வளவு கடுமையாகப் பேசுகிறீர்கள். இதே போல என் தம்பி, குறைந்த பட்சம் அவனுடைய மனைவியேனும் பின்னொரு காலத்தில் உங்களிடம் பேச மாட்டாள் என்று உங்களுக்கு என்ன நிச்சயம்?” என்று காரமாகக் கேள்வி கேட்டாள். 

முதலில் வாயடைத்து நின்றபோது “என் மகளைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு இருக்காதா? அத்தோடு உன் எதிர்காலம்? சென்னையில் உனக்கு வேலை வாய்ப்புகள் முன்னேற்றத்துக்கு வழி எல்லாம் அதிகம் இல்லையா? இதை அறிந்தும் தாயாய் இருந்து, எடுத்துச் சொல்லாமல் எப்படி இருப்பது? திருமணம் என்றாலும் கூட பையன்கள் பார்க்க…” என்ற அன்னையின் பேச்சில் “போதும்” என்று குறுக்கிட்டாள் மகள். 

“நீங்கள் என்ன சொன்னாலும் செய்வதும், செய்யாதிருப்பதும் என் கையில்தானே இருக்கிறது? அதனால், சொல்வதை என்னிடம் மட்டும் சொல்லுங்கள், தாத்தாவிடம் வேண்டாம்! அவரது மனதைத் துன்புறுத்துவது பாவம்” என்றாள் மகள். 

“அம்மா உன்னைப் பிரிந்திருக்கக் கஷ்டப்படுகிறாள்…” என்று தொடங்கிய மணிவாசகத்திடமும், “தொலை தூரமாக வெளியூரில் வேலை கிடைத்து அங்கே போயிருந்தால் எப்படி தாத்தா? ஒரு வார்த்தை மறுக்காமல் அனுப்பியிருப்பார்கள்தானே? இப்போதாவது அவ்வப்போது போய்ப் பார்க்க முடிகிறது?” என்றாள் மதுரவாணி. 

“சென்னையில் எல்லாவற்றுக்கும் வாய்ப்பு வசதிகள் அதிகம்” என்று அவர் மேலும் தொடங்கிய போது “அம்மா சொல்லுகிற வாய்ப்பு தருகிற அளவுக்கு இந்த வாசகசாலை வருமானத்தை பெருக்க முடியும் தாத்தா, இப்போது அந்த அளவுக்கு இல்லை என்றாலும் இதிலே கிடைக்கிற திருப்தியை வேறு எந்த வேலை தரும் சொல்லுங்கள்? அம்மா, பேச்சு, வெறும் காசை மட்டும் கணக்குப் போடுகிற பேச்சு. நமக்கு உதவாது, விடுங்கள் தாத்தா?” என்று பேத்தி அழுத்திக் கூறவும் அவரும் அதற்கு மேல் ஒன்றும் சொல்வதில்லை. 

“அவ்வப்போது அம்மாவோடு அதிகப்படியாக ஒரு நாள் இருந்து விட்டு வாம்மா! அவளுக்கும் மகளைப் பார்க்க வேண்டும், அவளோடு பேச வேண்டும் என்று இருக்குமல்லவா?” என்று ஓரிரு முறை சொன்னதோடு சரி. 

ஆனால், இதெல்லாம் பல மாதங்களுக்கு முன்பு நடந்த கதை. 

தாத்தா சொன்னதற்காக மட்டுமின்றி, தன் விருப்பமாகவும் மதுரவாணி சென்னைக்குச் சென்றாள்தான். 

ஆனால், கொஞ்ச நாள் சும்மா இருந்த தாரிணி, “அந்த பட்டிக்காட்டில் வீணாகிக் கொண்டிருக்கிறாய். இங்கே யானால் வேலை வாய்ப்புகள் மட்டுமில்லாமல் கல்யாணத்துக்கும் நாலு பேர் பார்வையில் படும்படியாக இருக்கும். எல்லாவற்றையும் பெரியவர் கெடுக்கிறாரே…” என்று மீண்டும் தொடங்கவும் மகளின் சென்னை பயணங்கள் மறுபடியும் குறைந்து போயின. 

ஆனால், இப்போது நிலா பற்றிய வருத்தம், எங்கோ அடிபட்டால் எங்கோ நெறி கட்டி வலிக்க வைக்கும் பரிவு நரம்பு மண்டலத்தைப் போல, அக்கம் பக்கம், நாய்க் குட்டி, வீடு, அப்பா, அம்மா என்று மற்ற ஏக்கங்களைக் கிளப்பி விட்டு விடவே, விரைவில் சென்னைக்கு ஒரு தரம் போய் வருவது என்று மதுரவாணி தீர்மானித்தாள். 

மணிவாசகம்தான் அதை என்றைக்குமே தடை செய்கிறவர் அல்லவே! 

எனவே அடுத்த விடுமுறை நாளை ஒட்டி அவள் சென்னைக்குச் செல்வது என்று தீர்மானம் ஆனது. அங்கிருந்து அவள் வாங்கி வர வேண்டிய புத்தகங்கள், மற்ற பொருட்கள் பற்றிப் பட்டியல் தயாரிப்பதில் எல் லோரும் ஈடுபட்டார்கள். 

மணிவாசகமும், சுந்தரியும், மதுரவாணியும். 

இதற்கு நடுவிலும், நிலாவின் ஏக்கமும் வருத்தமுமான பார்வை, வாணிக்கு நினைவு வந்து கொண்டே தான் இருந்தது. 

அதற்கு ஏற்றாற்போல, நிலாவுடைய வகுப்பு ஆசி ரியையும் ஒரு நாள் வாசகசாலைக்கு வந்து, அவளைப் பற்றி வாணியிடம் பேசினாள். 

ஏற்கனவே வாசகசாலையுடைய வாடிக்கையாளர்தான் அந்த ஆசிரியை. புத்தகம் எடுத்துப் பதிவேட்டில் குறித்துக் கொண்டிருந்தபோது, நிலாவுக்கு வாணி கொடுத்த புத்தகங்கள் பற்றி பேச்சு வந்தது. 

“கெட்டிக்காரப் பெண். இப்போதே, புதுமையாகச் சிந்திக்கிறாள். பெற்றவள் இல்லாத குறை, தாய் இருந்து செய்யக் கூடிய உதவிகளை, அவள் வெளியே தேட வேண்டியிருக்கிறது. ஆனால் தானாக முன் வந்து கலகலப்பாக பழகிறவள் இல்லை என்பதால், அதுவும் சிரமமாகிப் போகிறது. ஆசிரியையாக இருந்து கொண்டு, நான், அவளுக்கு தனிப்பட்டு எதுவும் செய்ய முடியாது. அது மாணவர்களிடையே பாரபட்சம் காட்டுவது போல ஆகிவிடும். ஆனால் நீங்கள் ஏதோ ஐடியாக் கொடுத்ததாகச் சொன்னாள். அவளுக்குப் பரிசு கிடைத்தால் ஊருக்கே பெருமை” என்று ஆசிரியை சொன்னது, மதுரவாணியின் குற்ற உணர்வை மேலும் பெருக்கியது. 

சே!… நிலாவிடம் அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கவே கூடாது என்று மதுரவாணி நூறாவது முறையாக தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டபோது, நிலாவுடைய குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாவது அங்கத்தினளான, அவளுடைய அத்தை அங்கே வந்து சேர்ந்தாள். 

பிள்ளையைச் சுமந்திருக்கும் பெரிய வயிற்றோடு அந்த அழகிய பெண். நிலாவோடு வாசகசாலைக்கு முன்னே வந்திருக்கிறாள். 

நிலா எத்தனை புத்தகங்கள் எடுத்தாலும், தடையின்றிப் பணத்தைக் கட்டுவாளே தவிர, அவள் தனக்காக எதையும் எடுத்து வாணி பார்த்ததில்லை.

“உங்களுக்கு எதுவும் வேண்டாமா?” என்று மதுர வாணி ஒருதரம் கேட்டபோதும், புருவம் உயர்த்தி “எதுவும் வேண்டாமாவா? வேண்டும் வேண்டும்… நிறைய்ய வேண்டும். ஒரு பென்ஸ் கார்… அண்ணா சாலையில் ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெரீய்யய… பங்களா… இதெல்லாம் உங்க வாசகசாலையில் பத்திருபது ரூபாய்க்கு கிடைக்காதே என்றுதான் ஒன்றுமே கேட்காமல் சும்மா இருக்கிறேன்” என்று கூறி வாய்விட்டுக் கலகலவெனச் சிரித்தாள் நிலாவுடைய அத்தை. 

கூடச் சேர்ந்து சிரித்துவிட்டு “பத்திருபது ரூபாய்க்கா? ஆனாலும் மார்க்கெட் நிலவரம் தெரியாமல் அவ்வளவு அதிக விலைக்கா கேட்பது? இதைவிட சல்லிசாகவே, இனிமேல் விலை கேளுங்கப்பா” என்று மதுரவாணி பதில்தர, அடக்க மாட்டாமல் நகைத்தாள் மற்றவள். 

“இந்த மாதிரி சரிக்குச் சரியாகப் பேசுகிறவர்கள் பக்கத்தில் இருந்தால், எப்போதும் உற்சாகமாகவே இருக்கலாம்” என்று அவள் கூற. “பழைய கால ராஜாக்கள் அதற்காகத்தான் விதூஷகன் என ஒருவனைப் பக்கத்திலேயே வைத்திருந்தார்களாம்… படித்தேன்” என்று வாணி அப்பாவியாய்ப் பக்கத்தில் இருந்த புத்தகத்தைக் காட்ட, மறுபடியும் ஓர் அவுட்டுச் சிரிப்பு அவளிடமிருந்து வெடித்தது. 

சிரித்தவாறே வாயில் பக்கம் போய் நின்று கொண்டு “இதற்கு மேல் நின்று பதிலைக் கேட்க எனக்கு நேரம் கிடையாது. ஆனால், இது கேள்வி நம்மில் யாருக்கு யார் விதூஷகன்? பதில் ஒருவருக்கு ஒருவர் சரிதானே?” என்று கண் சுருக்கி முறுவலித்துவிட்டு போனாள் அன்று. அந்த முகமும் சிரிப்பும் வாணிக்கு இன்னமும் மறக்கவில்லை. ஒத்த சிந்தனையும், நகைச்சுவை உணர்வுமாய், இங்கே இன்னொருவரை அவள் பார்க்கவுமில்லை. 

கூடவே. இப்போது வயிற்றுச் சுமை இறங்கி விட்டதால் நிலாவுடைய அத்தையின் உடலமைப்பும் எழிலாகத் தெரிந்தது. 

ஆனால், மருமகள் நிலா இல்லாமல் தனியாக அவள் வருவதைப் பார்த்தது வாணிக்கு மனதில் உறுத்தியது.

“ஹல்லோ” என்றாள் மெல்லிய குரலில் புன்னகை யோடு. 

பதிலுக்குப் புன்னகை செய்தாள் மற்றவளும். 

சில கணங்கள் இருவருக்குமே பேச்சு ஓடவில்லை. அன்று போல் அல்லாமல் இருவருமே ஆளுக்கு ஒரு தடையில் கண்டுண்டு கிடந்தனர் போலும். 

இவளிடம் என்ன பேசுவது என்று பேசும் பொருள் நாடி. அவசரமாகத் தேடினாள் வாணி. 

இவள் புத்தகம் எடுப்பது இல்லை… அதனால் என்ன புத்தகம் வேண்டும் என்று கேட்க முடியாது. பொதுவான பேச்சாகவே வெய்யில் மழை பற்றிப் பேசினால். அது பற்றியும் தனிப்பட ஒன்றும் இல்லாததால். அந்தப் பேச்சு அசட்டுத்தனமாகத் தோன்றும். மன அலை நீளம் இரு வருக்கும் ஒன்றுபோல் இருப்பதால் வந்திருப்பவளுக்கும் உடனே அது புரிந்து போகும்.

ஆனால், அன்று எவ்வளவு இயல்பாக பேசிச் சிரிக்க முடிந்தது. 

அவசரமாக விஷயம் தேடுகையில் சும்மா இராமல் கைகளும் பரபரவென்று ஏதோ வேலை செய்தன. அன்று அதுவரை திரும்ப வந்திருந்த புத்தகங்களைப் பழக்கதோஷத்தில் கை தானாக அடுக்க பார்வையும் அதில் சென்றது. 

குழந்தைகளுக்கான பெயர்கள் அடங்கிய புத்தகம் அது! ஆஹா முறுவலித்து “என்ன குழந்தை?” என்ற மென் குரலில் வினவினாள் வாணி. 

மற்றவளின் முகம் மலர்ந்தது. “பெண் குழந்தை. அச்சு அசல்… நிலா மாதிரியே இருக்கிறாள். அவளை மாதிரியே துறுதுறுப்பாகவும்… இப்போது உங்களுக்கு என்ன தோன்றுமோ, ரொம்பச் சின்னதில் எங்கள் நிலா ரொம்பவும் சுட்டி… ஒரு வயது நிறைவு முன்பாகவே ஓடுவாள். முதலாம் பிறந்த நாளன்று டேப்பில் ஓடிய பாட்டுக்குச் சரியாக ஆடிக் கொண்டிருந்தாள் என்றால் பாருங்களேன்” என்று பூரிப்புடன் அண்ணன் மகளின் பெருமை பேசியவளின் முகம் சற்றே வாடியது. 

“கெட்டிக்கார பெண். ஆனால் உற்சாகப்படுத்த ஆளில்லாமல், இந்த வயதுக்குள் துள்ளல் அடங்கிப் போயிற்று, அண்ணிக்குத்தான் காலம் முடிந்து விட்டது என்று பார்த்தால், சின்ன அண்ணிக்கும் நிலாவுக்கும் ஒத்தே போகவில்லை. அண்ணனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அம்மாவால் தலையிட முடியவில்லை. அப்… அப்புறம் இரண்டு தலைமுறை கால வேறுபாடு.. இன்னமும் என்னென்னவோ… நானும் திருமணமாகி ஊரை விட்டுப் போய்விட்டேனா. பாவம் மனம் விட்டு பழக ஆளில்லாமல் குழந்தை ஒரு மாதிரி தனித்துப் போனாள்.” 

வாணி சற்று தடுமாறி திணறினாள். 

இதெல்லாம் நிலாவுடைய குடும்ப விஷயங்கள்..! 

அன்று ‘அம்மா வரவில்லையா?’ என்று கேட்டதையே வம்பு பேசுவதாகக் கருதி வருந்தியவள் வாணி. இப்போது இத்தனையும் கேட்கும்போது, என்னிடம் ஏன் சொல்லுகிறாய் என்று ஒதுங்கத் தோன்றவில்லை. ஆனால் மகளோடு ஒத்துப் போவாளா. இல்லையா என்று அறியாமல் அவ்வளவு அவசரப்பட்டு திருமணம் செய்ய வேண்டுமா என்று மனம் ஆத்திரப்பட்டது. 

இப்போது அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை யாம். அதாவது பொண்டாட்டியிடம் பெட்டிப் பாம்பாக சுருண்டு கிடக்கிறான். 

இந்த அழகில், அவன் இருந்து கொண்டு அடுத்தவரிடம், ஆத்திரத்தைக் கொட்டுகிறானோ. அல்லது, அவனது கையாலாகாத் தனத்தை, இந்த அதட்டல் மிரட்டலில் மறைக்கும் முயற்சியா? 

என்ன மனிதன் உன் அண்ணன் என்று ஏதோ சொல்லப்போனவள், சமயத்தில் உணர்வு வந்து வாயை இறுக மூடிக் கொண்டாள். 

நிலாவுடைய அத்தைதான் ஏதோ ஆதங்கத்தில் புலம்புகிறாள் என்றால், இவளும் அதற்கேற்ப அபிப்பிராயம் சொல்லத் தொடங்கி விட்டாளே. 

அப்பட்டமான ஊர் வம்பு அடுத்தவர் குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைப்பது! 

அது மட்டுமல்ல, அவன் அண்ணனை, அவள் உரிமையோடு திட்டலாம். அதே வார்த்தையை அடுத்தவர். சொன்னால், என் அண்ணனை நீ என்னடி சொல்வது என்று திருப்பிக் கொள்ள மாட்டாளா? இதிலெல்லாம் வாயைத் திறப்பதே தப்பு. 

நிலாவுடைய தந்தையிடம் இருந்து பேச்சைத் திசை திருப்பும் முயற்சியாக “நிலா இப்போது மிகவும் கெட்டிக்காரிதான். அன்றைக்குக் கடல் அலை பற்றி ஒரு கதை எழுதிக் கொண்டு வந்து காட்டினாள், அற்புதமான கற்பனை, நீங்கள் படித்துப் பார்த்தீர்களா?” என்று நிலாவின் கதை பற்றி வியந்து கூறலானாள். 

அது உண்மையும் கூடத்தானே? 

என்னவோ தேடிப்போன பொருள் தானாகக் கையில் வந்து விழுந்தது போல, மற்றவளின் முகம் சட்டென பிரகாசமாக மலர்ந்தது. “பாருங்களேன். நானே அதற்காகத் தான் உங்களைப் பார்க்க வந்தேன், அவள் எழுதியது உங்களுக்கு இவ்வளவு பிடித்திருக்கிறதே? இனி எனக்குக் கவலையே இல்லை!” என்று குதூகலத்துடன் கூறினாள் அவள். 

அத்தியாயம்-4

வந்திருந்த அந்தப் பெண்ணின் குதூகலத்தைப் பார்த்த வாணிக்கு சில வினாடி நேரம் ஒன்றும் புரியாத குழப்பம். 

நிலாவின் கட்டுரை சிறப்பாக இருப்பதாக அவள் சொன்னதற்கும் அதனால், அவளுடைய அத்தையின் கவலை தீருவதற்கும் என்ன சம்பந்தம்? 

அதிக நேரம் அவள் குழம்ப நேராமல், அத்தைக்காரி விவரம் சொன்னாள். 

பளீர் என்ற ஒரு புன்னகையோடு அவள் விளக்கத்தை தொடங்கினாள். “பாருங்கள் வாணி… உங்கள் பெயர் வாணி என்று எனக்குத் தெரியும். உங்கள் தாத்தா அப்படிக் கூப்பிடக் கேட்டிருக்கிறேன். மதுரம் என்றும் கூப்பிட்டிருக்கிறார். ஒருமுறை சுந்தரியிடம் கேட்டபோது மதுரவாணி என்று சொன்னாள். ஆனால் வாசகசாலையில் இத்தனை புத்தகங்களுக்கு இடையில் உங்களை பார்க்கும் போது, வாணிதான் ரொம்பப் பொருத்தமாகத் தோன்றுகிறது. அதிலும், நான் பார்க்கிற நேரமெல்லாம் பெரும்பாலும் கையில் ஒரு புத்தகத்தோடேயே காட்சி தருகிறீர்களா. அந்த கலைவாணியாகவே தோன்றுகிறது. ‘கலைவாணியில் கலைவாணி'” என்று கூசாமல் ஐஸ் வைத்தாள். 

கொஞ்சம் உச்சி குளிர்ந்தபோதும், “இங்கே வருகிற எல்லோரும் கையில் புத்தகத்தோடு இருப்பதால், எல்லோரும் கலைவாணிகள்தான்… ஒரு நிமிஷம்” என்று புத்தகம் எடுத்து வந்த் ஒரு பெண்ணிடம் புத்தகத்தை வாங்கி, ரிஜிஸ்டரில் அவளது பெயர்ப் பக்கத்திலும், புத்தகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் தாளிலும் குறித்துக் கொண்டு, “பத்து நாட்களில் திருப்பி விடுங்கள். இது புதுப் புத்தகம்” என்று சொல்லி புத்தகத்தைக் கொடுத்து அனுப்பினாள். 

நிலாவுடைய அத்தை இன்னமும் அருகிலேயே நிற்பதை பார்த்ததும் சிறு வியப்புடன் “நீங்கள் புத்தகம் எதையும் எடுத்த மாதிரியே தெரியவில்லையே” என கேட்டாள். 

“நீங்கள்தான் புத்தகம் எடுக்கிற எல்லோரும் கலைவாணிகளே என்று ஒரு போடு போட்டுவிட்டீர்களே. எனக்கு சரஸ்வதியைவிட லட்சுமியைத்தான் ரொம்பப் பிடிக்கும்! பிழைக்கும் வழி தெரிந்தவள். தெரிகிறதா? என் பெயரே சுபலட்சுமிதான். எல்லோரும் சுபா என்று கூப்பிடுவார்கள். என் கணவர் மட்டும் என்னை சுபி என்பார். எல்லோர் கூப்பிடுவதைப் போலவும் அவர் அழைப்பது இருக்கக் கூடாதாம். அதற்கு லட்சுமி என்றே கூப்பிடலாம்தானே? சொன்னால் லட்சுமியைத்தான் நான் தொழிலில் சம்பாதிக்கிறேனே என்கிறார். ம்ம்ம்… எங்கே போய்விட்டேன் பாருங்கள். இப்படி ஊர்க்கதையெல்லாம் அளந்து கொண்டு இருந்தேன் என்றால், நான் விஷயத்துக்கு வருமுன் என் குட்டிச் செல்லம் விழித்துக் கொண்டு அழுது… அழுதால் அவளுக்கு முகம் சிவந்து, கன்றி, அப்புறம் நீலமாகவே தொடங்கிவிடும். அப்படி ஓர் அடம், இப்போதே. அதனால் அவள் முகம் சிணுக்கு முன்பாகவே, என்னைக் கூட்டி வர அம்மா ஆளே அனுப்பி விடுவார்கள். என் பெண்ணுக்கு ரொம்பப் பெரிய தொண்டை வேறு. அழத் தொடங்கினாள் அக்கம் பக்கம் எல்லாம் அதிர்ந்து விடும். பின்னால் பெரிய பாடகியாக வருவாள் என்று நினைக்கிறேன். எம்.எஸ். எம்.எல்.வி…” என்றவள், தலையில் தட்டிக் கொண்டு “மறுபடியும் எங்கே போகிறேன், பாருங்கள்” தன்னையே நிந்தித்துக் கொண்டாள். 

வந்த காரியத்தை விட்டு, சம்பந்தமற்ற எதையெதையோ பேசியபோதும், வாணிக்கு அந்த சுபாவிடம் கோபம் வரவில்லை. மாறாகச் சிரிப்புதான் வந்தது. 

அத்தோடு, அவளது தேவைக்கு வார்த்தை வடிவம் கொடுப்பதற்கு அவள் தயங்குகிறாள் என்றும் தோன்றியது. 

நிலாவின் கதையைப் பற்றி ஏதோ..! 

சும்மாவே நிலா விஷயமாகக் குற்ற உணர்வு இருந்ததால், அவள் இங்கே வர நேராமல் ஏதாவது உதவி செய்ய, வாணியும் தயாராகவே இருந்தாள். 

எனவே “நிலாவின் கதையைப் பற்றிப் பேச வந்தீர்கள், அதானே? சொல்லுங்கள். என்ன விஷயம்?” என்று எடுத்துக் கொடுத்தாள். 

லேசாக முகம் சிவந்தபோதுதான் “அதுவேதான்” என்று முறுவலித்தாள் சுபா. “ஏதோ போட்டிக்கு அனுப்புவதாமே. நிலா இன்னும் சிலது எழுதி வைத்திருக்கிறாள். ஆனால் அதையெல்லாம் நீங்கள் படித்துப் பார்த்து அபிப்பிராயம் சொல்ல வேண்டுமாம். தப்பு இருந்தால் திருத்தி, இன்னும் கொஞ்சம் சீர்படுத்த வழியிருந்தால் ஆலோசனை சொல்லி… இதுபோல உதவிகள் தேவைப்படுகிறது. அதை, நானே செய்யலாமே என்று உங்களுக்குத் தோன்றலாம்! தோன்றுவதில் தப்பே கிடையாதுதான். ஆனால், இதை ஆங்கிலத்தில் எழுத வேண்டுமாம். ஆங்கிலமோ, தமிழோ படிக்கிற காலத்திலேயே இலக்கணத்தில் நான் மகா மட்டம். ஏதோ தக்கி முக்கி ஒரு பட்டம் வாங்கி விட்டேன். பட்டத்தைப் பார்த்து பெரிதாக எண்ணி விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கெல்லாம் தனி ‘ட்யூஷன்’ தான் வைக்க வேண்டும் என்று நான் முதலிலேயே என் கணவரிடம் சொல்லி விட்டேன். இந்த அழகில் இருந்து கொண்டு, உதவி செய்கிறேன் என்று நான் உள்ளதையும் கெடுத்து விடக் கூடாதே. அத்தோடு என் குட்டிப் பிசாசு வேறு, எப்போது கத்தும் என்று சொல்ல முடியாது. அதனால், நீங்கள் கொஞ்சம் எங்கள் வீட்டுக்கு வந்து…” என்றவள், வாணியின் முகம் போன போக்கில் வாக்கியத்தில் முடிக்காமல் இடையிலேயே நிறுத்தி விட்டு விழித்தாள் 

“எ…என்ன?” 

அண்ணனுக்கு அகம்பாவம் என்றால், தங்கைக்கும் திமிருக்குக் குறைச்சல் இல்லை என்று ஆத்திரத்துடன் எண்ணிய வாணி, மற்றவளின் திகைத்த தோற்றத்தைக் கண்டதும் சற்று இளகினாள். 

ஒருவேளை இவளுடைய அண்ணன் இங்கே வந்து கத்தி விட்டுப் போனதெல்லாம் இவளுக்குத் தெரியாதோ? 

தெரிந்திருந்தால், அந்த அண்ணனின் வீட்டுக்கே எப்படி அழைப்பாள்? 

என்னவென்று விசாரித்தவளுக்குப் பதிலாக, லேசாகத் தலையசைத்து “நன்கு பழகியவர்கள் தவிர, வேறு யார் வீட்டுக்கும் நான் செல்வதில்லை சுபலட்சுமி” என்றாள் சற்று அழுத்தமான குரலில். 

“ஐயோ, அப்படி நீளமாக என் பெயரை இழுக்காதீர்கள். என்னமோ காதைப் பிடித்து முறுக்கி, செமடோஸ் விடப் போகிற மாதிரி இருக்கிறது. எங்கள் அம்மாவுக்குக் கோபம் வந்தால் இப்படித்தான் ‘சுபலட்சுமீ…’ என்று கூப்பிடுவார்கள். ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு” என்று அதே போலவே சுபா கூப்பிட்டுக் காட்டவும் தன்னை மீறிச் சிரிப்பு வந்தது வாணிக்கு. 

அவள் முகத்தில் சிரிப்பைக் காணவும் கலக்கம் அகன்று “ப்ளீஸ் வாணி, இப்போதுதான் நாம் பழகி விட்டோமே, இனிமேல் வரலாமே” என்று கெஞ்சுதலாகக் கேட்டாள். 

இவள் இப்படிக் கூப்பிடும்போது, போகலாம் போலத் தான் வாணிக்கும் இருந்தது. ஆனால் அந்த வீடு அவளுக்கு மட்டும் உரிமையானது அல்லவே. 

அவளுடைய அண்ணன் ஒருவன் அங்கே இருப்பானே… அவ்வளவு கடுமையாக அவள் பேசிய விதத்துக்கு, அவன் வீட்டுக்கு என்ன, அவன் இருக்கும் திசையைத் திரும்பிப் பார்ப்பது கூடத் தவறு. தப்பு. மடத்தனம். 

“இல்லை. முடியாது!” என்றால் அவள் தெளிவாக. ஆனால் சுபா அவ்வளவு எளிதில் அதை ஒப்புக் கொள்வதாக இல்லை! 

“யோசித்துப் பாருங்கள் வாணி… ஒரு சின்னப் பெண், புத்திசாலித்தனமாக ஒன்று செய்தால், நாம் அவளை உற்சாகப்படுத்த வேண்டாமா? ஒரு சின்ன பூச்செடிக்கு உரமிட்டு, தண்ணீர் ஊற்றி என்னவெல்லாம் செய்கிறோம். இவளுக்கு முழுதாக எழுதிக் கொடுங்கள் என்று ஏமாற்று வேலை செய்யச் சொல்லியா கேட்கிறேன்? சும்மா ஒரு தரம் படித்துப் பார்த்து, மேலே எதுவும் செய்ய வேண்டுமா என்று நகாசு வேலைகள், என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமா சொன்னால் போதும். அவளையே இங்கே வரச் சொல்லலாம் என்றால்…” என்று சுபா சொல்லி வரும்போதே குறுக்கிட்டு. “வேண்டாம்… வேண்டாம்” என்று அவசரமாகத் தடுத்தாள் வாணி. 

“இதே கருத்துதான் அண்ணனுக்கும். சின்னப் பெண். பெரிய இடத்துப் பிள்ளைகளைக் கடத்திக் கொண்டு போய் பணம் பறிப்பதும், பணத்தை வாங்கிக் கொண்டு அடையாளம் காட்டி விடுவார்களே என்று அந்தப் விடுவதும் இப்போது சாதாரணம் ஆ வருகிறது. வருமுன் காப்பது நம் பொறுப்பு. இப்போது இரட்டைப் பொறுப்பு வேறா? ஒருவருக்குப் பதில் சொல்லும் நிலை வேறு ஆயிற்றே? பள்ளி தவிர வேறு எங்கேயும் போகக் கூடாது என்று அவளுக்குத் தடை உத்திரவு போட்டிருக்கிறார். பாவம் கோபம் வந்தால் இந்த அண்ணன் வேறு கண்டபடி கத்துவாரா? அதுவும், இப்போது பெண்களிடம் ரொம்பக் கோபம் வேறா? அவரை மீற. நிலாவுக்கு ரொம்ப பயம். எனக்குமே அப்படித்தான்…. அவரை மீறி, அவளைக் கூட்டி வரத் தைரியம் கிடையாது. அதனால், நீங்கள் ஒரு முறை வீட்டுக்கு வந்து, அவள் எழுதியிருப்பதைச் சரி பார்த்துவிட்டு போனால், அவளும் அதை போட்டிக்கு அனுப்பி விடுவாள். இன்னும் ஒரு வாரம் தானே இருக் கிறதாம். அங்கே நிலாவுடைய ஆசிரியை வேறு, எழுதி விட்டாயா எழுதி விட்டாயா? என்று விரட்டுகிறார்களா, பாவம் நிலாக்குட்டிக்கு இப்போது பள்ளிக்கு போகக் கூடப் பிடிக்காமல் போகிறது. இப்படியே போனால், பாவம் அவளது படிப்பு கூடக் கெட்டு விடக் கூடும். அவள் கெட்டிக்காரப் பெண்ணாக இருந்தும்” என்று பெருமூச்சு விட்டாள் சுபா. 

என்ன மாதிரி வாதாடுகிறாள்! நிலாவுக்கு உதவி செய்யா விட்டால் அது வாணி செய்யும் பெரும் குற்றம் என்றே கொண்டு வந்து விடுவாள் போல. 

உள்ளூர எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “நிலாவின் கெட்டிக்காரத்தனம் யாரைப் போலவோ என்று யோசித்தேன். அவளுடைய அத்தை போல என்று இப்போது தெரிகிறது. அதனால், நீங்களே லேசாகப் பாருங்கள் அது போதும்” என்று முடித்தாள் வாணி.

ஏமாற்றத்தை ஒதுக்கி “ஆனால் இலக்கணம்… அந்தப் பிரச்சினை இருக்கிறதே” என்று இன்னொரு காரணத்தை எடுத்துக் காட்டினாள் சுபா. 

“இவ்வளவு சின்ன வயதில் எழுதுவதில், அந்த மாதிரிப் பிழைகள் அதிகம் பொருட்படுத்த மாட்டார்கள்” என்று சொல்லும்போதே. வாணிக்கும் சற்று வருத்த மாகத்தான் இருந்தது. 

நிலாவின் அளவே தகுதி உள்ள இன்னொரு போட்டிக் கதையில் தப்பு இல்லாமல் இருந்தால், அதைத் தானே தேர்ந்தெடுப்பார்கள். 

ஆனால் எதற்காகவும் அவன் வீட்டுக்குப் போவது… ஊகூம் முடியாது. 

தன்னைத்தானே வாணி கடினப்படுத்திக் கொண் டிருந்த வேளையில் “என்ன ஒரே வாக்குவாதமாக இருக்கிறதே. என்ன விஷயம்?” என்று கேட்டபடியே மணிவாசகம் அங்கே வந்து சேர, தாத்தாவைக் கண்ட வாணிக்கு, வழக்கத்துக்கு விரோதமாக உள்ளம் சற்று சோர்ந்தது. 

சுபா வந்த காரணம் தெரிந்தால், அவள் வீட்டுக்கு போய் விட்டு வா என்றுதான் தாத்தாவும் சொல்லுவார். ஏனெனில் நிலாவுடைய தாத்தாவிலிருந்து அந்தக் குடும்பம் முழுவதும் அந்த நாளில் இருந்தே மணிவாசகத்துக்கு பழக்கமானவர்களாகத்தான் இருப்பார்கள். 

இன்னும் அந்தக் குடியிருப்பில் உள்ள மற்றும் பலரையும் போல. 

ஒரேயடியாக ஒட்டிக் கொள்ளும் சினேகம் இல்லை என்றாலும், பார்த்தால் புன்னகையோடு பழகும் அளவுக்கு சுமூக உறவே. அதிலும் நிலாவைப் பார்த்தால், இரண்டு தரமேனும் அவளைப் பற்றி சந்தோஷமாகப் பேசுவார். அவளுடைய அத்தை போல இருப்பதாகக் கூறுவார். 

இப்படிப்பட்ட தாத்தாவை வீணாக வருத்தப்பட வைக்க பிடிக்காததாலேயே, நிலாவுடைய தந்தை நியாயமற்றுக் கத்திய சம்பவத்தை அவள் பெரியவரிடம் சொல்லவே இல்லை. 

எனவே இப்போது வாணி மறுப்பதன் நியாயமும் அவருக்குப் புரிவதற்கில்லை. 

வாணி அஞ்சியது போலத்தான் நடந்தது. 

தன் கட்சிக்கு ஆள் வந்தது என்று, நிலாவின் பிரச்சினையை எடுத்து, சுபா விளக்க, மணிவாசகமும், “அவள் இவ்வளவு கூப்பிடும்போது போய் வாயேன் மதுரம். அந்தச் சின்ன குட்டி நிலாவைப் பார்த்த மாதிரியும் இருக்கும். உனக்குத்தான் அவளை ரொம்பப் பிடிக்குமே. ஏதோ அருமையாக எழுதுகிறாள் என்று சொல்லிக் கொண்டே இருந்தாயே” என்று சுபா முன்னிலையில் விஷயத்தை வேறு போட்டு உடைத்தார். 

முடிந்தவரை வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்பது இதற்காகத்தான் போலும். 

எப்படியும், சொன்னதை மாற்ற முடியாது என்றாலும், “அவள் கெட்டிக்காரிதான் தாத்தா. ஆனால், அதற்காக அவள் வீட்டிற்கு நான் போக முடியுமா? அங்கே வேறு யார் யார் இருக்கிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. சும்மா யார் வீட்டுக்கும் நான் போக மாட்டேன் என்று உங்களுக்குத் தெரியும் தானே?” என்றாள் பேத்தி. 

“ஓகோ, அதுவா?” என்று தாத்தா தலையை ஆட்டவும், அப்பாடி கவலை விட்டது என்று எண்ணினாள் வாணி. 

ஆனாலும், நிலா என்ன செய்யப் போகிறாளோ என்ற உறுத்தலை அடக்க முயன்றபடி, “அப்பறம் உங்களுக்கு ஏதேனும் புத்தகம் வேண்டுமா?” என்று சுபலட்சுமியிடம் குறிப்பாகக் கேட்டாள் அவள். 

மறுப்பாகத் தலையசைத்தபடி அவள் முக வாட்டத்துடன் எழவும், “பொறும்மா” என்றார் மணிவாசகம். “நிலாப் பொண்ணு வீட்டுக்குத் தனியாகப் போகத்தானே வாணிம்மா உனக்குத் தயக்கம்? நானும் கூட வர்றேன், வா… போய் கொஞ்ச நேரம் இருந்து. அந்தச் சுட்டிப் பெண்ணுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்துட்டு வரலாம். இந்த வட்டாரப் பெண்ணுக்கு ஒரு பெரிய பரிசு கிடைக்கும் என்றால், அது நம்மால் கெடக் கூடாது. முடிந்த உதவி செய்ய வேண்டும்” என்றவர் பதில் சொல்லும் அவகாசம் ஏதும் அவளுக்குத் தராமல் சுந்தரியை அழைத்தார். 

அவள் விரைந்து வந்ததும் “வாசகசாலையைப் பார்த்துக் கொள் சுந்தரி. நானும் வாணியும் இவர்கள் வீடு வரை போய்விட்டு வந்து விடுகிறோம். நாங்கள் வரத் தாமதம் ஆகி விட்டால் வழக்கப்படி எல்லாம் எடுத்து வைத்து விட்டுக் கிளம்பிவிடு. முத்தையாவைக் கூப்பிட்டுத் துணைக்கு இங்கேயே இருக்கச் சொல்.” என்று கூறி கிளம்பியபோது, திகைத்தாளே தவிர, வாணியால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. 

சுபாவுக்கு ஒரே சந்தோஷம்! 

“பாருங்களேன். இப்படி ஒரு வழி இருக்கிறது என்று தெரியாமலே வெறுமனே வாதாடிப் பொழுதை வெட்டியாகக் கழித்தோமே. சும்மாவா சொல்கிறார்கள். ‘ஓல்ட் இஸ் கோல்ட்’ என்று. ரொம்ப நன்றி. அங்கிள். வாருங்கள் போகலாம்” என்று முன்னே நடந்தாள்.

இந்தத் தாத்தா ஓர் ஐந்து நிமிஷம் கழித்து வந்திருக்கலாம். அல்லது வந்ததும், புத்தகம் அடுக்கைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம். இப்படி விரும்பாதவன் வீட்டுக்கு வேண்டாத விருந்தாளியாகச் செல்ல நேர்ந்திராது என்று, வாணி உள்ளூரப் புலம்பிக் கொண்டிருக்கையிலேயே காரின் வேகம் குறைந்து போயிற்று. வீடு வந்து விட்டது போலும். வீட்டில் அவன் இருப்பானா? 

என் பெண்ணை விரட்டிக் கொண்டு வீட்டுக்கே வந்தாயா என்பானா? 

அப்படி எதுவும் கேட்டான் என்றால், அவனுடைய தங்கைதான் பதில் சொல்ல வேண்டும். அவள் தானே, பிடிவாதமாக எல்லோரையும் இங்கே கொண்டு வந்து சேர்த்தவள். 

சங்கடமும் சஞ்சலமுமாகத்தான் வாணி சென்றது. ஆனால், கார் வழுக்கிக் கொண்டு உள்ளே சென்று நிற்கும் போதே, கலக்கத்துடன் எட்டிப் பார்த்த நிலாவின் முகம் அவளைப் பார்த்ததும் மலர்ந்த விதத்தில் எல்லாம் மறந்து மறைந்து போயிற்று. 

போகட்டும்! ஒரு தந்தையுடைய கடமைகளைப் பற்றிய அக்கறையே இல்லாமல், உரிமைகளை மட்டும் உடும்பாகப் பற்றிக் கொண்டு அலட்டுகிற தகப்பன் என்ன வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும். 

வாணியைப் பொறுத்தவரை நிலாவுக்கு உதவி செய்யத் தான் போகிறாள். இது அவனுக்குப் பிடித்தாலும், பிடிக்கா விட்டாலும் அதைப் பற்றி அவளுக்கு அணுவளவும் அக்கறையில்லை. 

“ஹல்லோ ஆன்ட்டி…” என்று முகம் மலர அவளிடம் ஓடி வந்தான் நிலா. 

ஓடி வந்து அவளது கையைப் பிடித்துக் கொண்டு “ஆன்ட்டி நீங்கள் வர மாட்டீங்களோ என்று நான் ரொம்ப பயந்து போயிருந்தேன்” என்று குதித்தாள். 

“அதுதான் வந்து விட்டார்களே. முதலில் ஆன்ட்டியை உள்ளே கூட்டிப் போய் உட்கார வைடாம்மா.. சும்மா இங்கேயே குதித்துக் கொண்டிருந்தால், ஆன்ட்டி அப்படியே திரும்பிப் போய் விடப் போகிறார்கள்” என்று அன்புடனேயே அண்ணன் மகளுக்குக் குறிப்பாக அறிவுறுத்தினாள் சுபலட்சுமி. 

“ஓகோ…” என்று மிரண்ட நிலாவின் முகம் உடனே தெளிந்தது. “என்னை மிரட்டுகிறீங்களா அத்தை? ஆன்ட்டி ஒன்றும் அப்படித் திரும்பிப் போகவே மாட்டாங்க. ஆனா, நீங்களும் உள்ளே வாங்க ஆன்ட்டி… உள்ளே வந்து…” என்று கையை விடாமல் அழைத்து போனவளுக்குத் திடீரென்று சந்தேகம் வந்துவிட “அத்தை ஆன்ட்டியை ஹாலிலே உட்கார வைக்கணுமா? அல்லது, என் அறைக்குக் கூட்டிப் போய் அங்கே உட்காரச் சொல்ல வேணுமா?” என்று வினவினாள். 

அவள் கவலையாகக் கேட்ட விதத்தில் இரு பெண்களுக்கும் சிரிப்பு வந்து விட்டது. 

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபோதும், புன்னகையை வெளியே காட்டாமல் அடக்கி, “ஆன்ட்டியை மட்டுமல்ல, இந்தத் தாத்தாவையும் சேர்த்து உள்ளே அழைத்துப் போய், ஹாலில் உட்காரச் சொல்லி, பாட்டிக் கெல்லாம் அறிமுகப்படுத்தி, ஏதாவது சாப்பிடக் கொடுத்துவிட்டு, அதற்கு பிறகு, ஆன்ட்டியை உன் அறைக்கு அழைத்துச் செல்லலாம்?” என்று தாயற்ற பெண்ணுக்கு அழகாக முறைமை கற்றுக் கொடுத்தாள் அத்தைக்காரி. 

அத்தையின் சொல்லை அப்படியே ஏற்று “ஓ.கே. அப்படியானால், இங்கே வாங்க ஆன்ட்டி, தாத்தா நீங்களும் உள்ளே வந்து உட்காருங்க,” என்று நிலா இருவரையும் உபசரித்த விதம் நெஞ்சைத் தொட, அவளோடு வீட்டினுள்ளே சென்ற போதும் “சாப்பிடுவதற்கெல்லாம் ஒன்றும் வேண்டாம் சுபா. சுந்தரியால் அதிக நேரம் வாசகசாலையைச் சமாளிக்க முடியாது. அதனால் வந்த வேலையை முடித்துக் கொண்டு நாங்கள் சீக்கிரமாகக் கிளம்ப வேண்டும்” என்று சுபாவிடம் மெல்லிய குரலில் கூறினாள் வாணி. 

“ஆமாம்மா. எங்கள் மதுரம் சொல்வது சரிதான். வீணாக நேரம் போக்காமல் எங்களைச் சீக்கிரமாக அனுப்பிவிட்டால், நன்றாக இருக்கும். ஆனால் அதற்காக நிலாச் செல்லத்தை விரட்ட வேண்டாம்” என்றார் மணிவாசகம். 

ஹாலில் அவர்களை விட்டு விட்டு உள்ளே ஓடிச் சென்றிருந்த நிலா. இப்போது அவளுடைய பாட்டியோடு வந்து கொண்டிருந்தாள். 

பாட்டியைக் கையைப் பற்றி இழுத்தபடி “பாருங்க எனக்கு உதவி பண்ணனுமின்னு நம்ம லைப்ரரி ஆன்ட்டி வந்திருக்கிறாங்க. ரொம்ப நல்லவங்கன்னு சொன்னேனில்லை? முதலிலேயே ரொம்ப உதவி பண்ணினாங்க, ஆனால் இவங்களைத்தான் அன்னைக்கு…” என்று மேலும் ஏதோ சொல்ல முயன்ற பேத்தியின் பேச்சில் குறுக்கிட்டு “தாத்தாவை உட்காரச் சொன்னாயா கண்ணு? உட்காருங்கள் மணிவாசகம் சார். உடம்பு ஆரோக்கியம், தொழில் எல்லாம் நல்லபடியாக இருக்கிறதா? மகன், மகள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்? பொண்ணு சிங்கப்பூரிலே இருப்பதாக கேள்விப்பட்டேன்…” என்று குசலம் விசாரித்தாள். 

மக்களைப் பற்றிப் பேச மணிவாசகத்துக்குப் பிடிக்கும். எனவே உரிய பதில்களை அவர் சொல்ல, இரு பெரியவர்களும், அவர்களுடைய தலைமுறை பற்றி சுவாரசியமாகப் பேசலாயினர். 

அதற்குள் ஒரு பணியாள், கொறிக்கவும், குடிக்கவுமாக அவல் மிக்ஸ்சரும், பழச்சாறும் கொண்டு வந்து வைத்து விட்டு போனான். 

“சாப்பிடுங்கள்” என்று தேவகி அம்மாள் உபசரிக்க, ஒவ்வொருவருக்கும் அருகில் உள்ள மோடாவில் ஒரு தட்டு மிக்ஸ்சரும் பழச்சாறு எடுத்து வைக்கலானாள் சுபா. 

“அத்தை நானும்” என்று அவளிடமிருந்து தட்டை வாங்கி வாணியின் முன் வைத்தாள் நிலா. “சாப்பிடுங்க ஆன்ட்டி.” 

“நிலாவுக்கு உங்கள் பேத்தியை ரொம்பப் பிடித்துப் போயிற்று. வாயைத் திறந்தால் லைப்ரரி ஆன்ட்டி அப்படி இப்படி என்று அதே பேச்சுத்தான். போய்ப் பார்க்க முடியவில்லை என்று ரொம்ப அழுதாள். நான் கூடக் காரிலேயே போய்விட்டு வரட்டுமே என்று சொல்லிப் பார்த்தேன். ஆனால்…” என்று தேவகி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவளது பேச்சை யார் மறுத்திருக்கக் கூடும் என்று வாணி ஊகித்தாளோ அவனே.. “அம்மா…” என்று அழைத்தபடி அங்கே வந்து நின்றான். 

எங்கோ வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான் என்பது ஷர்ட்டின் மணிக்கட்டு பொத்தானைப் போட்டபடியே அவன் பேசிக் கொண்டு வந்ததிலிருந்து நன்றாகத் தெரிந்தது. 

பொத்தானில் பார்வையைப் பதித்திருந்ததாலேயே, வீட்டுக்கு வந்திருந்தவர்களை அவன் கவனிக்கவில்லையோ என்னவோ “தள்ளிப் போட்டுக் கொண்டே போகாமல் சென்னையில் வாங்க வேண்டிய பொருட்க…” என்று சொல்லிக் கொண்டே வந்தவனின் பேச்சு, ஹாலில் புதிய ஆட்களைப் பார்த்தவுடன் சட்டென நின்றது. 

“சாரிம்மா விருந்தினர் வந்திருப்பதைக் கவனிக்கவில்லை” என்று தாயிடம் கூறியவாறு, வரவேற்பாய் முறுவலித்த வண்ணம் வந்தவர்களைப் பார்த்தவனின் முகம் வாணியைப் பார்த்ததும் இறுகிறது. 

அன்று அவ்வளவு திட்டியும், வெட்கமின்றி என் வீடு வரை வந்து விட்டாயா என்று ஏளனமும் இகழ்ச்சியுமாக கேட்டது அவனது பார்வை. 

– தொடரும்…

– வாணியைச் சரணடைந்தேன் (நாவல்), முதற் பதிப்பு: 2013, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *