கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 21, 2024
பார்வையிட்டோர்: 2,988 
 
 

சோ…வென்று பேய் மழையடித்துக் கொண்டிருந்த மார்கழி நாள் இரவு. ஜன்னல் கிறீல்களூடாக வரும் கூதல் உடலில் காமம் கிளர்த்திக் கொண்டிருக்க அறையின் மூலையில் போடப்பட்டிருந்த கட்டிலில் கம்பளியால் உடலை இழுத்து மூடிக்கொண்டு தலையணையில் சாய்ந்தபடி சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ படித்துக் கொண்டிருந்தேன். தலைமாட்டில் இருந்த என் செல்பேசி ‘கிளிங்’ என்று ஒலியெழுப்பியது. அது யாரோ முகநூல் நண்பரின் குறுஞ்செய்தி வந்தமைக்கான அடையாள ஒலி. செல்பேசியை எடுத்து அதன் திரை வெளிச்சத்தை குறைத்துக் கொண்டு முகநூல் செய்திப் பெட்டியை திறந்து பார்த்தேன்.

‘Jonisha joni’ என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்திருந்தது.

‘Hi’

‘Who are you?’ என்று கேட்டேன்…

‘lam Jonisha’ என்று பதில் வந்தது.

அதுவரை அந்தப் பெயருடைய யாரையும் எனக்கு பழக்கமும் இல்லை,

முகநூல் நண்பராகவும் இல்லை. அந்த முகநூல் பக்கத்தின் முகப்பில் (profile) ‘The God Of Small Things’ நாவல் மூலம் உலகப்புகழ் பெற்ற இந்தியாவின் கேரளத்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் அருந்ததிராயின் புகைப்படம் பதிவேற்றப்பட்டிருந்தது. அதில் ‘யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு’ என்ற வாசகமும் பதிவிடப்பட்டிருந்தது.

யாரோ இலக்கியத்தில் ஆர்வமுள்ள பெண்ணாக இருக்க வேண்டும். அவள் யார்? எப்படியிருப்பாள்? அவளுக்கு என்னை எப்படித் தெரியும்? என அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கியது. சரி அவளோடு ‘சாட்’ செய்து பார்க்கலாமே என்று ‘தமிங்கிலிஷ்’-இல் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

‘நீங்க யார்? உங்கள எனக்கு தெரியயேல?’

‘என்னை உங்களுக்கு நல்லாவே தெரியும்’ என அவளிடமிருந்து பதில் வந்தது.

‘அப்படியா? உங்கட ‘போட்டோ’ ஒன்டு அனுப்புங்க’

‘போட்டோ ஒண்டும் அனுப்ப முடியாது. உங்கட போன் நம்பர் அனுப்புங்க. நாளைக்கு மோர்னிங் கோல் பண்ணி பேசுறன். நேரில சந்திக்கலாம் குட்நைட்’.

அவளுக்கு என்னுடைய இலக்கத்தை அனுப்பி வைத்துவிட்டு, அவள் யாராக இருக்கும்? என்ற சிந்தனையில் அமிழ்திருந்தேன். முகநூலில் அநேகமானவர்கள் தங்கள் சொந்தப் பெயர்களிலல்லாது வேறு பெயர்களைத் தானே பயன்படுத்துகிறார்கள். அதனால் சிறுவயதிலிருந்து என்னோடு ஒன்றாக படித்த, பழகிய, இப்போது நீண்ட காலமாக தொடர்பில் இல்லாத பெண்களெல்லாம் நிழல் உருவமாக என் கண்முன் தோன்றி மறைந்தார்கள்.

சில வேளைகளில் இது என்னுடைய நண்பர்களின் விளையாட்டாகவும் இருக்கலாம். இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் நிதர்சன் ‘றெமோனிஷா’ என்ற பெயரில் முகநூல் ஒன்றினை ஆரம்பித்து கபிலனை காதலிப்பதாக கூறி இரண்டு வாரங்கள் இரவு பகலாக அவனோடு குறுஞ்செய்தியில் பேசித்திரிந்தான். கபிலனும் அவனுடைய பேச்சில் மயங்கி காதல் வசப்பட்டு நிதர்தனின் கைபேசிக்கு அயிரம் ரூபாய்க்கு மேல் ‘ரீலோட்’ செய்திருக்கிறான். இந்த கதை ஊர் முழுவதும் தீப்பிடித்து கபிலன் அவமானபட்டது போல நானும் யாரிடமாவது ஏமாந்து விடக்கூடாது என நினைத்து கொண்டேன். ஒருவேளை நாளைக்கு அவள் என் இலக்கத்திற்கு அழைத்து பேசினால் மட்டும் நேரில் சென்று சந்தித்து, அவள் யாரென்று அறிய வேண்டும் என்ற முடிவோடு படுத்து உறங்கினேன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. காலை எட்டு மணியிருக்கும், என் செல்பேசியில் பதிவேற்றப்படாத புதிய இலக்கமொன்றிலிருந்து அழைப்பு வந்தது.

‘ஹாலோ’

‘நான் ஜொனிஷா பேசுறன்’. உண்மையில் அது ஒரு பெண் குரல் தான்!

‘ஜொனிஷா வென்றால், எந்த ஜொனிஷாவென்று விளக்கமா சொல்லுங்க? என்னோடு உங்களுக்கு எப்படி பழக்கம்?’

‘அது எல்லாம் சொல்ல முடியாது ஜெனா. அது ‘சப்றைஸ்’. நான் இப்ப யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில இருக்கிறன். இன்டைக்கு ஒரு வேலையா வெளியே போய் இரவு 7 மணிக்குத் தான் வீட்டுக்கு வருவன். என்னை சந்திக்க வரமுடியுமா?’

‘சரி நான் வாறன். உங்கட அட்ரஸ்?’

‘பின்னேறம் 6.30 போல நான் கோல் பண்ணி பேசுறன். பாய்…’ என்று கூறி அழைப்பினை துண்டித்து விட்டாள்.

அந்த இலக்கத்தை என்னுடைய கைபேசியில் ‘ஜொனிஷா’ என்ற பெயரில் பதிவேற்றினேன். பகல் முழுவதும் எந்தவொரு கார- பியத்திலும் மனம் நிலைகொள்ளவில்லை. அன்று முழுவதும் சரியாக சாப்பிடவும் முடியவில்லை. கடிகார முட்கள் நகர்வதாயில்லை. மாலை 6.30 மணியிருக்கும். ஜொனிஷா என்ற பெயரில் கைப்பேசி சினுங்கியது.

‘ஹலோ…’

‘நான் தான் ஜொனிஷா. இப்ப தான் வேலையெல்லாம் முடிச்சு வீட்டுக்கு வந்தனான். இப்ப என்னை சந்திக்க வரமுடியுமா?’

‘சரி… நான் எங்க வர வேணும்?’ என்று கேட்டேன்.

அவள் தன்னுடைய முகவரியை கூறி, வீட்டின் முன் ஒரு மல்லிகை பந்தல் அமைந்திருப்பதாகவும் குறிப்புக் கூறினாள். குளித்துவிட்டு தயாராகி மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவள் கூறிய முகவரியை விசாரித்து அந்த தெருவிற்குள் நுழைந்த போது நாலஞ்சு தெருநாய்கள் என்னை பின்தொடர்ந்து. ஏதோ வேற்றுக் கிரகவாசியை கண்டது போல குரைத்துக் கூப்பாடு போட்டன. ஒருவாறு அவற்றிடமிருந்து தப்பி சென்றேன். பந்தலில் பூத்துச்சிரித்த மல்லிகை வாசம் வரவேற்றது. அந்த வீட்டின் முன் சென்று ‘கார்ண்ணை’ ஒலித்தேன். அப்போது நேரம் இரவு 7.15 ஆகியிருந்தது. கதவை திறந்து கொண்டு அழகான பெண்ணொருத்தி வந்து என்னை பார்த்து புன்முறுவல் செய்தபடி ‘உள்ளே வாங்க’ என்று அழைத்தாள். வீதியில் அமைந்திருந்த மின்விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் அவள் உடலின் வளைவு நெளிவுகள் கண்களுக்கு போதை தருவதாக இருந்தது. அவளின் அகன்ற விழிகளும், இணைந்த புருவங்களும், சுருண்ட கருங்கூந்தலும், பார்பவரை சற்று கிறுக்குப் பிடிக்க வைப்பதாக இருந்தது.

நான் வாசலில் நின்றபடியே ‘நீங்கள்… யார் ?’ எனக் கேட்பதற்குள்.

‘நான் தான் ஜொனிஷா. உள்ள வாங்க, இருந்து ஆறுதலா பேசலாம்’ என்று கூறி வீட்டினுள்ளே அழைத்துச் சென்றாள். நிச்சயமாக அந்தப் பெண்ணை என் வாழ்நாளில் இதற்கு முன் நான் கண்டதேயில்லை!

ஆடம்பரமற்ற சிறிய வீடு. வரவேற்பறையில் சொகுசு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அதில் ஒரு இருக்கையில் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அந்த ஜொனிஷா என்னை காண்பித்து ‘இவன் தான் ஜெனா’ என உரிமையோடு அந்த பெண்ணுக்கு அறிமுகம் செய்த போது என் மனதில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டது. பின்னர் அந்தப் பெண்ணை காண்பித்து ‘இது வாணி அக்கா’ என அவளை அறிமுகம் செய்த போது…

‘ஜொனிஷா உங்கள பற்றி நிறையவே சொல்லியிருக்கிறாள்’ என்று கூறி அவள் புன்னகைத்தாள்.

எதுவுமே புரியாது முழித்தபடி… ‘நீங்கள் யார் என்று இன்னும் எனக்கு புரியவே இல்லை?’ என்று நான் அந்த ஜொனிஷாவிடம் சொன்னேன்.

அவள் ‘நீங்க… சென் பற்றிக்ஸ் கொலிஜ்’இல தானே படிச்சனீங்க?’

‘ஓம்.. ஏன் கேட்கிறீங்க?’ என்றேன்.

‘உங்களுக்கு 2012-இல் ஆட்ஸ் படிச்ச ஜொனிய தெரியுமா?’

சிறிதும் தாமதமின்றி ‘ஓம் தெரியுமே… அவன் என்ர பிரண்ட் (Friend) தான். அவன ஏன் கேட்கிறீங்க?’ என்று கேட்டேன். ‘அவன் தான் நான்’ என்றாள் ஜொனிஷா!

எனக்கு என்ன பேசுவதென்று தெரியாமல் வாயடைத்து போனேன். உடலில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்த கணப்பொழுதொன்றில் பல காட்சிப் பதிவுகளை ஆழ்மனம் மூளைக்கு அனுப்பியது. அது ஒரு தேவதூதனின் தரிசனம் பெற்ற கணம் போலவே இருந்தது. என் மனதை துளைத்துக் கொண்டிருந்த ‘யார் இந்த ஜொனிஷா?’ என்ற வினாவிற்கு விடை கிட்டிய போது ஆச்சரியம் தாளாத கண்களால் அவளை உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை பார்த்து.

‘டேய் ஜொனி!’ என்று வியப்போடு அழைத்தேன்…

‘நான் இப்ப ஜொனி இல்லை, ஜொனிஷா! என்னை இனி டேய் போடாதே டீ போட்டு கூப்பிடு’ என்று சொல்லிக்கொண்டே சில வினாடிப் பொழுதுகள் இமைக்காது என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் கண்கள் கலங்கின. அதற்கான காரணமும் எனக்கு புரிந்தது. ‘ஜெனா இரு! ரீ எடுத்துக் கொண்டு வாறேன். பேசலாம்…’ என்று கூறிக்கொண்டே சமையலறைக்குள் போனாள்.

2010இல் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் எனக்கும் ஜொனிக்குமான நட்பு ஏற்பட்டது. அது ஒரு ஆண்கள் பாடசாலை. அப்போது நான் உயர்தரத்தில் வணிகப்பிரிவில் படித்துக்கொண்டிருந்தேன். ஜொனி கலைப்பிரிவு. அவனிடம் பெண் தன்மை மேலோங்கி இருந்தது. மாநிறமான தேகம், மினுமினுத்த தோல், சிவந்த உதடுகள், நெற்றியில் விழுந்து கிடக்கும் சுருள் முடியோடு அவன் மெதுவாக இடையை வளைத்து நெளித்து நடந்து வரும் போது பார்ப்பவர்களுக்கு அசலாக ஒரு பெண் வருவது போலவே இருக்கும். பெண்குரலில் மென்மையாக பேசுவான். பேசும் போது கைகளாலும், புருவங்களை அசைத்தும் சைகை காட்டுவான். இதனால் பாடசாலையில் பலர் அவனை இழிவாக நடத்தினார்கள்.

ஒருநாள் இடைவேளை நேரம். நானும் என்னுடைய நண்பர்களான அலைக்ஸ், ஜேம்ஸ், ஆகியோரும் சிற்றுண்டிச் சாலைக்கு முன்பாக அமைந்திருந்த மணிக்கூண்டிற்கு அருகாமையில் நின்று கொண்டு சிரித்துப் பேசியவாறு சிற்றுண்டிகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சற்றுத் தொலைவில் பாடசாலையின் தலைமை மாணவத் தலைவனான (School Head Prefect) திவாகரனும் சிலரோடு நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அந்த வேளையில் தான் ஜொனி அந்தப் பக்கமாக சிற்றுண்டி வாங்குவதற்காக வந்தான். கூட்டமாக நின்றவர்களில் ஒருவன் ஜொனியை பார்த்து

‘டேய் பொண்ட்ஸ்சுக் குட்டி’ என்று கத்திக் கூப்பிட்டான்.

இன்னொருவன் ‘அயிட்டம் வாங்களேன் ஒதுங்குவோம்…’ என்று நழினக் குரலில் அழைத்தான்.

மற்றவன் ‘ஜொனி நீங்க ஒம்பதா?’ என்று கேட்டான்.

எதையும் காதில் வாங்காது அவன் அவர்களை தாண்டிச் செல்ல முற்படுட்ட போது நவதீபன் என்றொருவன் ‘அக்காச்சி நில்லுடி’ என்று அவனின் கையை பிடித்து இழுத்து, கட்டிப்பிடித்து, வலிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.

‘பிலீஸ்… பிலீஸ்… விடும்’ என்றபடி அவனின் கையை உதறிவிட்டு ஓடமுட்பட்ட போது ‘அடியே வா…டி’ என்று உடும்புப் பிடியாக பற்றிக்கொண்டு அவனுடைய சேட் பொத்தான்களை கழற்றி, அதற்குள் கையை விட்டு நெஞ்சை கசக்கினான். அவனோடு நின்றவர்களும் ஜொனியை மொய்த்து அவனின் இடுப்பிலும், குண்டியிலும் கிள்ளி அருவருக்கத்தக்க விதத்தில் நடந்துகொண்டார்கள். அவர்கள் இயல்பாகவே முரட்டு சுபாவம் கொண்டவர்களாய் இருந்த படியால் அவர்கள் செய்வதை தவறு என்று தட்டிக் கேட்டாலோ அல்லது பொறுப்பாசிரியர்களிடமோ, அதிபரிடமோ தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க முயன்றாலோ தங்களுக்கும் ஏதும் ஆக்கினை கொடுப்பார்கள் என்று அஞ்சி அவ்விடத்தில் நின்றவர்கள் எல்லோரும் வாய்பொத்தி வேடிக்கை பார்த்தார்கள்.

எனக்கென்றால் எங்கள் கண்ணெதிரே அவன் இப்படி கண் கலங்கி நிற்பதை பார்க்க மனம் பொறுக்கவில்லை. நான் அவர்களை நோக்கி சென்ற போது அலைக்ஸ்சும் என்னோடு வந்தான். ‘அவன் பாவம்டா… அவனை விடுங்கடா’ என்று சொன்னேன். காதிலேயே விழாதது போல் அவனோடு இன்னும் எல்லை மீறி சென்று கொண்டு இருந்தார்கள். அதில் ஒருவன் ‘உனக்கு இது தேவையில்லாத வேல மரியாதையா போ…’ என்று என்னை அதட்டினான். அலைக்ஸ்சும் அவனை விட்டுவிடுமாறு ஏதேதோ கெஞ்சி பார்த்தான். அவர்கள் நாங்கள் சொல்வது எதையும் கேட்பதாயில்லை.

இதையெல்லாம் தலைமை மாணவத் தலைவனான திவாகரன் பார்த்துக் கொண்டுதான் நின்றானென்று எங்களில் யாருக்கும் தெரியாது. வீறு கொண்ட சிங்கம் போல வந்த அவன், ஜொனியிடம் சேட்டை விட்டுக்கொண்டிருந்த நவதீபனின் கையை இழுத்தெறிந்துவிட்டு அவனுக்கே உரிய தொனியில் ‘நீல் டவுண்’ (Neel down) என்று உரக்கக் கத்திச் சொன்னான். நவதீபன் ஒரு கணம் நிலைகுலைந்து போனான். அவன் அதை இம்மியும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் படித்த காலத்தில் தலைமை மாணவத் தலைவனுக்கு ஒரு பகுதித் தலைவரைப்போல (Sectional Head) அதிகாரம் (Sectional Head) அதிகாரம் இருந்தது. மாணவர்களின் ஒழுக்கமின்மைக்காக யாரையும் எந்த வேளையிலும் இப்படித் தண்டிக்கலாம். ஆனால் அடிக்க முடியாது. நவதீபன் ‘இது இன்ரவல் ரைம் (Interval). உங்கட டியூட்டி டைம் இல்லை’ என்றான். ‘அதை பிறகு அதிபரோடு பேசலாம். நீல் டவுண்’ என்று அதட்டி சொன்னான் திவாகரன். வேறு வழியின்றி நடுவெயிலில் வெறுந்தரையில் நவதீபன் முழங்காலில் இருந்தான். ஏராளமானவர்கள் அந்த பக்கமாக சிற்றுண்டிச்சாலைக்கு போவதும் வருவதுமாக அந்த இடமே பரபரப்பாக இருந்தது. அனை- வரின் கண்களும் நவதீபனையே நோக்கின.

நாங்கள் ஜொனியை சற்றுத் தொலைவில் இருந்த வேம்பமரத்தடிக்கு எங்களோடு கூட்டிக் கொண்டு சென்றோம். அவனுடைய சீருடை கசங்கிப் போயிருந்து. கண்கள் கலங்கியபடி வெருண்டு போய் நின்றான். ஜேம்ஸ் கன்ரீனுக்குச் சென்று சிற்றூண்டிகள் வாங்கி கொண்டு வந்து ஜொனிக்கு சாப்பிட கொடுத்தான். இப்படி தான் வகுப்பிலும் ஆசிரியர்கள் வாராத பாட வேளைகளி- லெல்லாம் இவர்கள் தன்னை முறைகேடாக நடத்துவதாகவும் கூறினான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, தான் பெரிதும் மதிக்கின்ற ஆசிரியர் ஒருவர், வகுப்பில் எல்லோர் மத்தியிலும் ‘நீ ஏன் வளைஞ்சு நெழிஞ்சு நடக்கிறாய்? ஏன் பொட்டைகள் போல கதைக்கிறாய்? உன்னை கொண்டு போய் இங்கிலீஷ் கொன்வென்ரில் சேர்த்து விடட்டுமா?” என்று கேட்டு அவமானப் படுத்தியதாக கூறும் போது அவனது இரு கண்களாலும் ஆறாக ஓடியது. நாங்கள் அவனுக்கு ஆறுதல் கூறினோம். கைகளால் கண்களை துடைத்துக் கொண்டு ‘ஒரு நிமிசம் என்னோடு வாங்களேன்’ என்று கூறி சற்றே தொலைவில் இருந்த கழிவறை பக்கமாக கூட்டிக்கொண்டு சென்று கழிவறையின் உட்பக்கச் சுவரை காண்பித்தான். அதில் ஒரு பெண்ணின் நிர்வாண உடலை வரைந்து அதற்கு ‘ஜொனி’ என பெயர் குறிப்பிட்டு, பச்சை ஆபாசமாக ஏதேதோ எழுதப்பட்டிருந்தது.

‘நான் என்ன பாவம் செஞ்சன்? நான் இப்படி இருக்க நானா காரணம்? ஏன் எல்லாரும் என்னை வெறுத்து ஒதுக்குறாங்க? என்னோட யாருமே உண்மையாக பழகுறதில்ல, என்னை யாருக்கும் பிடிகிறதில்ல, என்னை யாரும் புரிஞ்சு கொள்றதும் இல்லை, எல்லோருமே என்னை கேவலமாகத் தான் பார்க்குறாங்க’. விம்மலோடு ஒரு பெருமூச்செடுத்து, ‘வீட்டிலேயும் அண்ணா அடித்து சித்திரவதை செய்கிறான். என்ர அப்பாவே நீ இப்படி இருகிறத செத்து துலைஞ்சு போ சனியன்’ என்று திட்டுறார். உன்னால நாங்க ஊருக்குள்ள தல நிமிந்து நடக்க முடியல எண்டு சொல்லி இரண்டு கிழமையா அறைக்குள்ளேயே பூட்டி வச்சவர். என்னை பெத்த குற்றத்துக்கு அம்மாவுக்கும் ஒரே அடி உதை. என்னால யாருக்குமே நிம்மதியில்லை. பிறகு எதற்காக நான் வாழவேணும்? நான் சாகப் போறன்’ என்று வெடித்து அழுதான். அவனது குமுறலை கேட்டு எங்களுக்கும் கண்கள் கலங்கியது… ஏதேதோ சொல்லி அவனை சமாதானப் படுத்தினோம். இந்தச் சம்பவத்தின்பின் தினமும் இடைவேளை நேரங்களில் ஜொனியும் எங்களோடு இணைந்து கொண்டான். அவனுடைய வகுப்பிலும் சில நண்பர்களோடு பேசி அவனுடைய நிலைமையை விளக்கினோம். அவர்கள் அன்றிலிருந்து வகுப்பில் ஜொனியை தம் பக்கத்து இருக்கையில் அமர்த்தி யாரும் அவனை தரக்குறைவாக நடத்தாதவாறு பார்த்துக் கொண்டார்கள்.

2012-ஆம் ஆண்டு உயர்தர பரீட்ச்சைக்கு தோற்றி பாடசாலையில் இருந்து வெளியேறிய பின் இரண்டு வருடங்கள் ஜொனிக்கும் எனக்குமான தொடர்புகள் அற்றுப் போனது. ஒருநாள் எதேச்சையாக ஜொனியை ‘சூப்பர் மார்க்கெட்’ஒன்றில் சந்தித்தேன். முன்னர் இருந்ததை விட மார்பு பெருத்து, இடை மெலிந்து, இமைகளை அழகுபடுத்தியிருந்த அவனை காண பரிதாபமாக இருந்தது. ‘ஜெனா வரவர என்ர உடம்பில பெண் தன்மை கூடிக் கொண்டே போகுதுடா. சொல்லுறேன் எண்டு தப்பா நினைக்காத. உங்களுக்கெல்லாம் கேர்ல்ஸ் (girls) மேல தானே ஈர்ப்பு வரும்? ஆனா எனக்கு போய்ஸ் (boys) மேல தான் அப்பிடி தோனுதுடா. நான் இந்தியாக்கு போய் ஒப்பிறேசன் செய்து, ஒரு பெண்ணா மாற றை பண்ணுறன். இதப் பற்ரி நீ என்ன நினைக்கிறாய்?’ என்று கேட்டான். ஆரம்பத்தில் அவன் சொல்வது என்னவென்றே எனக்கு புரியவில்லை. ஏனென்றால் அந்த விடயம் பற்றி அதற்கு முன்னர் நான் அறிந்திருக்கவுமில்லை. அப்படி யாரையும் என் வாழ்நாளில் சந்தித்திருக்கவுமில்லை. ‘இந்தியாவில இப்பிடி நிறைய பொடியங்க ஒப்பிறேசன் செய்து பொம்பிளையா மாறி இருக்காங்க. அவர்கள ‘ரான்ஸ் ஜென்டர்ஸ்’ (Transgenders) எண்டு சொல்லுவாங்க’ என்று அவன் கூறிய போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘ஜொனி நீ இப்பிடியிருக்குறதவிட ஒரு பொம்பிளயா மாறுவது உன்ர எதிர்காலத்திற்கு நல்லது எண்டுதான் எனக்கும் தோணுது.’ என்றேன்.

ஜொனிஷா கோப்பைகளில் தேநீர் கொண்டு வந்து பரிமாறினாள். அவளின் முகத்தில் உலகையே வென்ற பெருமிதம் தென்பட்டது. தேநீரை எடுத்துக் கொண்டு யாருடனோ போன் பேசுவதற்காக வாணி அக்கா தனது அறைக்குச் சென்றாள். எனக்கென்றால் அவனுக்கு நடந்த ஆப்பிரேசன் பற்றியே அறிய வேண்டும் போலிருந்தது. அதைப்பற்றி கேட்டேன். ‘இதை இரண்டு முறைகளில் செய்யுறாங்க. ஒன்று ஆங்கில வைத்திய முறையில் மயக்க மருந்து ஏற்றிய பிறகு ஆணுறுப்பை வெட்டி அகற்றும் முறை. மற்றொன்று நான் செய்து கொண்ட முறை இந்தியாவின் விழுப்புரத்தில் உள்ள தாயம்மா என்கின்ற பாரம்பரிய முறை. அங்க மூத்த அனுபவமான திருநங்கைகள் இந்தச் சடங்கை செய்வாங்க.

நான் அண்டைக்கு அதிகாலையில சேவல் கூவும் முன் எழும்பி மஞ்சல் தண்ணியில முழுகி சந்தோஷ் மாதாவிற்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிச்சேன். ஏற்கனவே தாயம்மா என்னுடைய ஆண்குறியையும் விதைகளையும் சேர்த்து சனல் கயிறு ஒன்றினால் இறுக்கமாக கட்டிவிட்டிருந்ததால் அதற்கான இரத்தவோட்டம் தடைப்பட்டிருந்தது. எனக்கு நீளமான தலைமுடி இல்லாததால் ஒரு திருநங்கை அக்கா சிவப்பு துணியொன்றை எடுத்து கொண்டு வந்து அதனால் என்ர வாயை மூடி கட்டிவிட்டாள். நான் நிர்வாணமாக நிலத்தில் படுத்திருந்தேன் அங்கிருந்த எல்லா திருநங்கை அக்காமாரும் கண்களை மூடி சந்தோஷ் மாதாவை உருக்கமாக வேண்டிக் கொண்டிருக்க, சொடக்கு போடுவதற்குள்ளே கூரான சவரக்கத்தியால் தாயம்மா என்ர ஆணுறுப்பை வெட்டி எடுத்துவிட்டாள்.’ என்று ஒரே மூச்சில் கூறி முடித்தாள். கேட்டுக் கொண்டிருந்த நான் கண்களை மூடி ‘ஏய்…’ என்று முகம் சுழித்தேன்.

‘வலி உயிர் வலி! ஆனாலும் அது என்ர உறுப்பு இல்லையே? நான் ஒரு பெண். தேவையில்லாததை அகற்றித்தானே ஆகவேணும்?’ என்றாள்.

நான் வாயடைத்து போனேன். ‘அதற்கு பிறகு என்ன நடந்தது’ என்று கேட்டேன்.

‘கச்சைத் துணியை கட்டி சாக்கிலே சப்பானியிட்டு இருக்க வைத்தார்கள். அப்பதான் மரண வேதனையாய் இருந்தது. அந்த நேரம் நான் போட்ட கூச்சல் வானத்தை பிளந்திருக்கும்’ என்றவள்…

‘உன்ர உயிர் நாடியை அறுத்தால் எப்பிடியிருக்கும்?’ என்று என்னைப் பார்த்துக் கேட்டாள். நான் பதிலே சொல்லாது முழித்துக் கொண்டு அவள் கண்களையே உற்றுப்பார்துக் கொண்டிருந்தேன்.

‘ஆணுறுப்பை வெட்டுறதுக்கு முதல் உனக்கு மயக்க ஊசி போட்டாங்களா?’ என்றேன்.

‘தாயம்மா முறையில் மயக்க ஊசிகளோ மருந்துகளோ எதுவுமில்லை. உறுப்பை வெட்டி எடுத்த பிறகு மூலிகை எண்ணெயை காய்ச்சி கொதியாற முதல் அந்த புண்ணிலேயே ஊத்தினாங்க… இப்பிடியே இரண்டு வாரங்கள் செய்தவங்க. வலி… சாவு வலிடா…’ என்றாள். சொல்லும் போதே அவளின் கண்களிலும், முகத்திலும் அந்த வலி அப்பிக் கிடந்தது.

உனக்கு அந்த வலியாறி எல்லாம் குணமாக எத்தனை நாட்கள் எடுத்தது?’

‘இரண்டு வாரமா பயங்கர வலி. அதற்கு பிறகு அந்த ரணமே பழகிப் போச்சு. புண்ணெல்லாம் முழுசா காஞ்சு போன பிறகு நாப்பதாவது நாள் தலையில் பால் வைத்து, மஞ்சள் தண்ணி ஊத்தி, புடவை உடுத்தி விட்டு சடங்கு செய்தவங்க. அண்டைக்கு அங்கிருந்த திருநங்கைகள் எல்லாருக்கும் கடா அறுத்து விருந்து. அண்டைக்கு இரவெல்லாம் கண்ணாடிக்கு முன்ன நிண்டு என்னையே நான் பார்த்து இரசிச்சுக் கொண்டிருந்தன். அண்டுதான் இந்த பிறவிக்கான அர்த்தமே கிடைச்சது. எனக்கு வாழ்கையில ஒரு பிடிப்பு வந்தது’. என்று சொல்லி விட்டு ஒரு சிறிய மௌனத்தின் பின்…

‘ஜெனா இது எனக்கு மறுபிறப்புடா’ என்றாள்.

‘உனக்கு இதையெல்லாம் தாங்குற தைரியம் எப்பிடி வந்தது?’ என்றேன்.

‘எல்லாம் நீங்க கொடுத்தது தான். உங்கட ஆண்களின் உலகம் கொடுத்துதான். பள்ளிக்கூடத்தில, சொந்த ஊரில, றோட்டுகளில, போய்வரும் இடங்களில் எல்லாம் பொண்ட்ஸ்சு… பொண்ட்ஸ்சு… எண்டு கூப்பிடேக்கயெல்லாம் இவங்களுக்கு முன்னால வாழ்ந்து சாதிச்சு காட்ட வேணும் எண்டு தான் நினைப்பேன். அது தான் இப்ப இப்படியிருக்கிறேன்’ என்று கூறிவிட்டு பக்கத்தில் இருந்த மேசையிலிருந்து புத்தகமொன்றை எடுத்துக் கொடுத்து ‘இது நான் எழுதி வெளியிட்ட நாவல். வீட்டுக்கு கொண்டு போய் படித்துப் பார்’ என்றாள். எனக்கு அது அடுத்த அதிர்ச்சி!

‘நீ புத்தகமெல்லாம் எழுதுவியா? படிக்கிற காலத்தில இப்படி எதையுமே உன்னட்ட அடையாளம் காணயில்லையே…’ என்றேன். அப்பயெல்லாம் என்னையே எனக்கு பிடிக்காது… எழுதப் பிடிக்குமா என்ன?’ என்று கேட்டாள்.

‘நான் உன்னை ஒன்று கேட்கலாமா?’

‘ம்… கேள்’ என்றாள்.

‘இப்ப நீ ஒரு ஆப்பிளய கல்யாணம் பண்ணி அவனோட சந்தோசமா வாழ முடியுமா?’ என்று கேட்டேன்.

‘ஏன்டா நீ என்ன கல்யாணம் பண்ண போறியா?’ என்று சிரித்துவிட்டு

‘நான் ஒரு ஆம்பிளய கல்யாணம் பண்ணி, அவனோட தாம்பத்திய உறவை வச்சு அவனை திருப்த்திப் படுத்தலாம். ஆனால், எங்களப் போல திருநங்கைகளால அவனுக்கு ஒரு வாரீசை பெற்றுக் கொடுக்க ஏலாது. 6 மாதமா ஒருத்தன் என்னை காதலிக்கிறான். என்னை பற்றி எல்லாமே அவனுக்கு தெரியும். அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி இரண்டரை வயதில ஒரு ஆம்பிளப் பிள்ளை. மனுசி போன வருசம் அக்சிடென்ட் ஒண்டில இறந்துட்டா. எனக்கும் அவனில விருப்பம் தான். ஆனால் இன்னும் நான் விருப்பம் சொல்லயில்ல. பாப்போம்… இப்படி ஒருத்தனென்றால் அவனுக்கு என்னால ஒரு குழந்தையை குடுக்க முடியாதேயென்ற குற்றவுணர்ச்சி எனக்கு இருக்காது’ என்று அவள் கூறும்போது கவலையாக இருந்தது. அவளோடு பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. சுவர் கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தேன் ஒன்பது முப்பதை காட்டியது.

‘சரி நேரமாகிற்று… நான் போக வேணும்’.

‘இண்டைக்கு என்னோட இங்கேயே தங்கி விடிய போ’ என்றாள்.

‘என்னதான் நீ என்ர பிரண்ட்டா இருந்தாலும் இப்ப நீ ஒரு திருநங்கை. ஒரு பெண். உன்னோட நான் எப்படி ஒரே வீட்டில தங்குறது? அது தப்பு இல்லையா? அதைவிட வீட்டையும் சொல்லாமல் திடீரெண்டு வெளிக்கிட்டு வந்திட்டன்…’

‘அது ஒண்டும் தப்பில்லை. உங்கட அம்மாவிற்கு போன் பண்ணித் தாடா. நான் பேசுறேன்’ என்றாள்.

இந்தக் கதையை அம்மாக்களுக்கு சொல்லி புரியவைப்பதென்றால் சும்மா காரியமா? வீட்டிற்கு போன் செய்து ‘நான் ஒரு பொடியன்ர பிறந்தநாள் வீட்டிற்கு வந்தனான். பிரண்ட்ஸ்சோட இங்கேயே தங்கி நாளைக்கு விடிய வாறன்’ என்று அம்மாவிடம் பொய் சொல்லி சமாளித்துவிட்டேன். அந்த வீட்டில் அவர்கள் இருவரும் மட்டுமே இருந்தார்கள். வாணி அக்கா ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு அவளின் அறைக்குச் சென்று தூங்கிவிட்டாள். ஜொனிஷா இரவுணவு எடுத்து வந்து எனக்குப் பரிமாறினாள். பாடசாலையில் இடைவேளைநேரம் மணிக்கூண்டின் அருகில் நண்பர்களாக சிற்றூண்டிகளை பகிர்ந்து சாப்பிட்ட நினைவுகள் வந்து போனது. பழைய கதைகளை பேசிச் சிரித்தோம். ஜொனிஷா என்னை தன்னுடைய அறைக்குள்ளே வரச் சொல்லி கூப்பிட்டாள். ஏனோ தெரியவில்லை எனக்கு நெஞ்சு ‘பக் பக்’ என்று அடித்தது.

நான் அந்த அறைக்குள் சென்ற போது, அவள் அணிந்திருந்த ஆடையை மாற்றிவிட்டு ‘நைட்டி’ ஒன்றினை அணிந்து கொண்டு நின்றாள். கண்ணெதிரே சுவரில் மாட்டப்பட்டிருந்த அவளின் உள்ளாடைகளை கண்டும் காணாதவன் போலவே நான் நின்று கொண்டிருந்தேன். அந்த அறையில் போடப்பட்டிருந்த கட்டில் மிகவும் ஒடுக்கமாக இருந்தது. அதில் இரண்டு தலையணைகள் இருந்தன. அவள் தும்புத்தடியை எடுத்து நிலத்தை கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு பெரிய போர்வையொன்றை எடுத்து கீழே விரித்து, கட்டிலில் இருந்த தலையணைகளை எடுத்துப் போட்டாள். மின்விளக்கை அணைத்து விட்டு இருவரும் அதில் படுத்துக் கொண்டோம். என்னோடு பேசிக் கொண்டிருந்த போதே ஜொனிஷா தூங்கிவிட்டாள். என்னைப் பொறுத்தவரை அது காமத்தோடு போராடி நட்பை காத்துக் கொண்ட இரவு!

யன்னலூடாக நுழைந்த வெயில் என் முதுகில் ஊர்ந்து கொண்டு இருந்தது. ஜொனிஷா முழுகிவிட்டு நீர் சொட்டிக் கொண்டிருந்த கூந்தலோடு வந்து என்னை அரட்டி, சூடாக தேநீர் பரிமாறினாள். தேநீரில் ஒவ்வொரு மிடறு அருந்தும் போதும் திருநங்கைகள் என்றால் ஏதோ ‘காமப் பேய்கள்’ என்று அதுவரை என் மனதில் இருந்து கொண்டிருந்த தவறான எண்ணம் ஆவியாகிக் கொண்டிருந்தது.

– தாய்வீடு – பெப்பிரவரி 23

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *