வெறுப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2023
பார்வையிட்டோர்: 2,765 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இல்லத்திற்குள் நுழைந்த சந்திரன், தன் மகனின் செய்கையைக் கண்ணுற்றதும் துணுக்குற்றான். வேலை முடிந்து களைத்து வந்திருந்த அவனுக்குச் சூடு விரைவாகத் தலைக்கு ஏறியது. வந்ததும் நெருப்பாய்க் கொட்ட வேண்டாமென்று எண்ணித் தன் தடித்த காலணிகளைக் கழற்றத் தொடங்கினான்.

தந்தை வந்ததையோ, முறைத்ததையோ சற்றும் பொருட்படுத்தாத நிலையில் ரவி விளையயாட்டில் மூழ்கிப் போயிருந்தான். ஒரு வாரத்திற்கு முன்பு தான் வாங்கிய புத்தம் புதிய வானொலிப் பெட்டி ரவியின் கையில் அகப்பட்டு உருமாறிப் போயிருந்தது.

பேட்டரிகள் மூலைக்கொன்றாய்க் கிடந்தன. சில விசைகள் கழற்றப்பட்டுத் தரையில் கிடந்தன. ஒலிவாங்கிக் கம்பி வளைந்திருந்தது. ஒரு நூலைக் கட்டி அவ்வானொலிப் பெட்டியை வண்டியைப் போல இழுத்துக்கொண்டு ரவி வலம் வந்து கொண்டிருந்தான்.

“ஓரம் போ… ஓரம் போ… ருக்குமணி வண்டி வருது…”

“டேய் ரவி, என்னடா இது?..” தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல் சந்திரன் இரைந்தான். சந்திரனின் இராணுவக் குரலால் அவ்வீடு அதிர்ந்தது.

சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த யோகம், தன் கணவரின் கடுகடுப்பைக் கண்டு உடனே தலையைப் பின்னுக் கிழுத்துக் கொண்டாள்.

சந்திரனின் அதட்டல் ரவியைப் பாதிக்கவில்லை. மிகச் சாதாரணமாய்த் தன் தந்தையை ஒரு நோக்கு நோக்கி விட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தான் அச்சிறுவன்.

சந்திரனின் தலையில் சடுதியில் வெப்பம் ஏறி, ஏற்கனவே ஏறியிருந்த சூட்டை ஆவி பறக்கச் செய்தது

அவன் கண்கள் இரண்டு நெருப்புத் துண்டங்களாய்ச் சிவந்தன. “என்ன நெஞ்சழுத்தம்!” என்று பொறுமிக் கொண்டே எழுந்து சென்று, ரவியின் தலைமயிரைப் பிடித்துக் குலுக்கினான்.

“டேய், இது என்ன விளையாட்டுப் பொருளா? எல்லாத்தையும் பொறுக்கி எடு!…”

“என் முடியை விடு, எடுக்கிறேன்… “

“நீ எடுடா நான் விடுறேன்…”

“நீ முடியை விடு, நான் எடுக்கிறேன்…”

“எடுடா, மடையா என்னை அதிகாரம் பண்றியா?…”

“மாட்டேன். நீ மொதல்ல விடு…”

“எடு!”

“முடியாது…”

“மரியாதையா எடுத்திடு. சொன்னதைச் செய்…”

“…”

“அவ்வளவு திமிரா உனக்கு?…” என்று சொல்லிய வண்ணம் பிடரியில் நான்கு அடிகள் வைத்தான் சந்திரன்.

ரவி அசையவில்லை; ஆவென்று ஓலமிடவில்லை. அப்படியே விறைத்துக் கொண்டு நின்றான். ஆனால் அவன் கன்னங்களில் மட்டும் கண்ணீர்க் கோடுகள் பளபளத்தன.

கொஞ்சங்கூட அசையாமல் நிற்கும் தன் மகனைப் பார்க்கப் பார்க்கச் சந்திரனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

“ஒழுங்கா நான் சொன்னதைச் செய். இல்லே உன்னைக் கொன்னுடுவேன் …”

“நீ முடியை விடு…” பையனும் சளைக்கவில்லை. பிடிவாதம் குழந்தை உருவில் எதிர் நின்றது.

அடுத்து என்ன நிகழப்போகிறதோ என்ற கலவரத்தோடு யோகம் வாயடைத்துப் போனாள். ரவியின் நல்ல காலம். அந்த நேரத்தில் செல்லம்மாள் வந்து சேர்ந்தாள்.

அங்கு நடந்துகொண்டிருந்த சிண்டுபிடிச் சண்டையைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்து போனாலும், மறுவினாடி ஓடிச் சென்று சந்திரனின் பிடியை விலக்கிவிட்டு ரவியை வாரி அணைத்துக் கொண்டாள்.

“என்னடா சந்திரா இது? அவன் சின்னக் குழந்தை தானே? அவனிடம் மல்லுக்கு நிற்கிறாயே? அவனுக்கு என்ன தெரியும்?…”

“நீங்க சும்மா இருங்கம்மா. இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்திடுறேன். படவா. அதற்குள்ள இவனுக்கு இவ்வளவு நெஞ்சழுத்தம ?….”

“ஆமா. இருக்கிறது, கறிவேப்பிலைக் கொத்துமாதிரி ஒண்ணே ஒண்ணு. அவன்கிட்ட தானா உன் வீரத்தைக் காட்டணும்? குறும்பு செய்யிற பிள்ளைகளை எல்லாம் கொன்று தீர்த்திட்டா, உலகத்தில யாரும் மிஞ்சமாட்டாங்க.. நல்ல பிள்ளையாண்டான்!…”

“அம்மா, இப்படிச் செல்லம் கொடுத்துத்தான் அவனைக் குட்டிச் சுவராக்கிட்டீங்க. உங்களாலதான் அவன் கெட்டான்…”

‘அப்படி என்ன நான் பொல்லாதது பண்ணிட்டேங்கிறே ?…”

“ஒண்ணா ரெண்டா..”

“உனக்குத் தெரிஞ்சது எல்லாத்தையும் தான் சொல்லேன்; அப்படி என்ன நான் பாதகம் செஞ்சிட்டேன்னு தெரிஞ்சிக்கிறேனே?”

இப்போது சண்டையின் போக்கு திசை மாறியது. தாய்க்கும் மகனுக்கும் நேரடி மோதல் ஏற்படத் துவங்கியது. ரவி தன் பாட்டியின் கால்களைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தான். யோகம் வாயைத் திறக்கவில்லை. தன் கணவனின் கோபத்தை நினைக்கும் போது அவளுக்கு அடிவயிறு கலங்கியது.

“குழந்தையைக் கண்டிக்கிறது ஒரு தகப்பனுக்குள்ள உரிமை. அதை நீங்க புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க. அஞ்சில வளையாதது எப்படி ஐம்பதில் வளையும்? இதெல்லாம் உங்களுக்கு எங்கே புரியப் போகிறது?.. “

செல்லம்மாளுக்குச் சரக்கென்று நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல இருந்தது. தன் மகன் சுற்றி வளைத்து என்ன சொல்ல வருகிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.

‘என் பிள்ளையைக் கண்டிக்கும் போது இடையிலே நீ யார்’ என்பது பேலல்லவா பேசுகிறான். கடவுளே!….செல்லம்மாள் விக்கித்துப் போனாள்.

“இந்தாடாப்பா உன் பிள்ளை. உன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்துக்கோ; எனக்கென்ன வந்தது? ஆனா ஒன்றை மட்டும் தெரிஞ்சுக்க, இந்த ஒன்றுந் தெரியாத செல்லம்மாள் வளர்த்த சந்திரன் தான், இப்ப இராணுவத்தில் பெரிய பதவியில இருந்துகிட்டு, மாசம் இரண்டாயிரம் வெள்ளிச் சம்பளம் வாங்குகிறாய்!”

துக்கம் தொண்டையை அடைக்கத் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் செல்லம்மாள். “பாட்டி!..” என்று கைகளையும் கால்களையும் உதறிக் கொண்டு அப்பொழுது தான் முதல் தடவையாகக் குழந்தை ரவி அழத்தொடங்கினான். பலிபீடத்தில் நிற்பதைப் போல் அச்சிறுவனின் உடல் நடுங்கியது.

“போதாத காலம்!…” என்று தனது தலைவிதியை நொந்து கொண்டவாறே, இருக்கையில் சாய்ந்தான் சந்திரன். இது தான் தக்க தருணம் என்று ரவியும் பாட்டியின் அறைக்குள் அடைக்கலம் புகுந்தான்,

பொழுது புலர்ந்தது. ஆனால் செல்லம்மாளுக்கு மட்டும் தன் உலகம் முதல் இரண்டு நாட்களுக்கு முன்பே இருண்டு விட்டது. படுத்த படுக்கையாகவே கிடந்தாள். உணவை ஏறிட்டுப் பார்க்கவும் மறுத்தாள்.

“அத்தே, எழுந்திருங்க. பசியாற கொண்டு வந்திருக் கேன். பச்சத்தண்ணி பல்லிலேபட்டே இரண்டு நாளாச்சே! எழுந்திருங்க!….” யோகம் அன்பு கனிய எழுப்பினாள்.

“அங்கே வச்சிட்டுப் போ!….” திரும்பிக் கூடப் பார்க்காமல் செல்லம்மாள் கூறினாள்.

“ஒவ்வொரு வேளையும் நான் வச்சிட்டுத்தான் போறேன். நீங்க அதைத் தொட்டுக்கூடப் பார்க்கிறதில்லையே” துக்கத்தினால் மருமகள் குரல் கரகரத்தது.

“அப்புறம் உன் விருப்பம்!…” கம்பளியைத் தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு செல்லம்மாள் புரண்டு படுத்தாள். நீ போகலாம் என்பது போலிருந்தது.

எதுவும் செய்யத் தோன்றாமல் துக்கம் நெஞ்சையழுத்த எழுந்து போனாள் யோகம். அவளுக்கு மாமியார் நிலையைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. பேச எப்படித் துணிவு பிறக்கும்?

யோகம் அவ்வீட்டு மருமகளாய் காலடி எடுத்துவைத்து ஐந்தாண்டுகளாகி விட்டன. செல்லம்மாள் தன் மகன் மேல் கோபித்துக் கொண்டு இப்படிக் கொலை பட்டினி’ கிடப்பது இதுவே முதல் தடவை. அவ்வப்போது சிறு சிறு வாக்கு வாதங்கள் நிகழ்ந்ததுண்டு தான். ஆனால் நிலைமை இந்த அளவிற்கு முற்றியதில்லை.

“அம்மா ! ..” ரவி அழைத்தான்.

“என்ன?”

“பாட்டி எங்கே ?…”

“அறையில படுத்திருந்தாங்களே..”

“காணுமே!…” பையன் கையை விரித்தான்.

யோகம் எழுந்து சென்று பார்த்தாள். அறை காலியாய் இருந்தது. அவள் வைத்துவிட்டுச் சென்ற அப்பமும் காப்பி யும் அப்படியே இருந்தன. ஆள் ஓடியில் சென்று கீழே குனிந்து பார்த்தாள். அடுக்குமாடி வீட்டின் பத்தாவது மாடியிலிருந்து கீழே பார்த்தால் என்ன தெரியும்? மனிதர்கள் குட்டிச்சாத்தான்களாய் ஊர்ந்து கொண்டிருந்தனர். அக் கூட்டத்திலும் செல்லம்மாள் இல்லை.

“கடைக்குப் போயிருப்பாங்க. திரும்பி வருவாங்க…” என்று மகனுக்கு ஆறுதலாகக் கூறினாலும், மனம் துணுக்குறவே செய்தது.

காலைப் பொழுது போய் பகல் வந்து, பகல் தேய்ந்து மாலையாகி- அதுவும் இரவை ஈன்றெடுத்தது. செல்லம்மாள் வரவில்லை. யோகம் பதற்றமடையத் துவங்கினாள்.

வழக்கமாக விரைவாக வீடு திரும்பிவிடும் சந்திரன், அன்று இரவு ஏழு மணிக்குத்தான் வந்து சேர்ந்தான்,

“என்னங்க, அத்தையைக் காலையிலே இருந்து காணலை. எங்காவது போய்த் தேடிப் பாருங்க” அழாக்குறையாகத் தன் கணவனிடம் யோகம் வேண்டினாள்.

“என்னை எங்கே போய்த் தேடச் சொல்கிறாய்? உறவினர்கள் வீடுகளுக்குத் தொலைபேசி போட்டுக் கேட்கலாம். அவங்கள்லாம் என்ன நடந்ததுன்னு விசாரிக்க மாட்டாங்களா? அப்போது நான் என்ன சொல்றது?…”

“அதற்குப் பயந்துகிட்டு அத்தையை விட்டுவிட முடியுமா? சண்டையும் சச்சரவும் எந்த வீட்டில இல்லே…”

“நீ சொல்றதும் சரிதான்…” என்று கூறிவிட்டுத் தொலைபேசியைத் தொட்டானோ இல்லையோ “அத்தை வந்திட்டாங்க அத்தான்…” என்ற யோகத்தின் குரல் கேட்டு வெளியே ஓடினான்.

செல்லம்மாள் வந்து கொண்டிருந்தாள். வந்தவள் நேரே சென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டாள். வெளியே நின்ற இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

செல்லம்மாள் கட்டிலில் ரவி உறங்கிக் கொண்டிருந்தான். பாட்டியின் அன்பில் தோய்ந்திருப்பதை உணர்த்தும் வகையில், அவன் ஒரு காலை பாட்டியின் வயிற்றில் போட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தான்,

கோழி தன் சிறகுக்குள் வைத்துக் குஞ்சைக் காப்பது போல் செல்லம்மாள் தன் பேரப் பிள்ளையை வளர்த்து வந்தாள். ரவிக்கு நோய் நொடி வந்து மருத்துவமனைக்குச் சென்றதே இல்லை. இந்த நவீன காலத்தில் எங்கோ அரிதாகக் கிடைக்கும் நொச்சித் தழையும், ஆடாதுடை இலையும், கண்டங்கத்தரி விதையும், வேலிப்பருத்தி வேரும் கொண்டு கைமருத்துவத்தாலேயே குழந்தைக்கு ஏற்படும் நோய்களை எல்லாம் குணப்படுத்தி விடுவாள்.

ரவியும் மந்திரவாதியின் பின்னே சுற்றும் பூனையைப் போல எப்போதும் பாட்டியையே வலம் வந்தவண்ணமிருப்பான். உணவுகூட பாட்டிக்கு அடுத்தபடிதான் குழந்தை ரவிக்கு.

மறுநாளைய ஞாயிற்றுக்கிழமைப் பொழுது சோம்பலாய் தலை நீட்டியது. எல்லாரும் இன்னும் உறக்கம் கலைந்து எழவில்லை .

“அம்மா! அம்மா!” ரவி கதறினான். யோகமும் சந்திரனும் அரக்க பரக்க எழுந்து ஓடினர். செல்லம்மாளின் உடல் விறைத்துப் போயிருந்தது. பல் கிட்டியிருந்தது.

“ஐயோ அத்தே!..” பதறியபடி மூக்கில் விரலை வைத்துப் பார்த்தாள் யோகம். மூச்சு இருந்தது; யோகம் தண்ணீர் கொடுத்தாள். செல்லம்மாளின் கண்கள் கொஞ்சம் திறந்தன.

“அத்தே …”

“பாட்டி…”

“அம்மா, அப்படி நான் என்ன சொல்லிவிட்டேன்? உங்களை நீங்களே இப்படி வருத்திக் கொள்றீங்களே?….” சந்திரன் கண்கலங்கினான்.

“என்னை நேருக்கு நேர் பார்த்துச்சொல்லு…நீ ஒன்றுமே சொல்லலையா?…” செல்லம்மாளுக்கு மூச்சு வாங்கியது.

சந்திரனால் தன் தாயை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. அவன் தலை தானே தாழ்ந்தது; பிறகு நிமிரவே இல்லை.

“உன்னால என்னை நிமிர்ந்து பார்க்க முடியாது. பார்க்கவே முடியாது…” செல்லம்மாளுக்குத் தொண்டையை அடைத்தது. அவள் கண்களை மூடினாள். மனத்திரையில் சம்பவத்தன்று இரவு நிகழ்ந்தது படக்காட்சியாய் விரிந்தது.

“என்னங்க நீங்க? அத்தையிடம் இப்படிப் பேசலாமா?…”

“உனக்குத் தெரியாது யோகம். என் அப்பாவிடம் என்னை ஒட்டவிடாமல் செய்தது மாதிரி, எம் மகனை எங்கிட்ட இருந்து பிரிச்சிடுவாங்களோன்னு பயப்படுறேன்.”

“ச்சூ… மெதுவாகப் பேசுங்க. அத்தை காதில் விழுந்து வைக்கப் போகுது. உங்கப்பா மலாய்க்காரியைப் பிடிச்சிகிட்டு ஓடினதுக்கு அத்தை என்ன செய்வாங்க?”

“என்ன இருந்தாலும், அப்பா இருந்தும் இல்லாதவனாகத்தானே நான் வளர்ந்திருக்கிறேன். எனக்கு எவ்வளவு பெரிய துன்பங்களும் ஏமாற்றங்களும் ஏற்பட்டிருக்கும். இந்த மாதிரி நிலை எம் மகனுக்கும் ஏற்படாதுன்னு என்ன நிச்சயம்?…”

“என்னங்க நீங்க? எதுக்கு எதை ஒப்பிட்டுப் பேசுறீங்க?…போதும், போதும் உங்களுக்கு இன்னிக்கு என்ன ஆச்சோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம். விபரீத சிந்தனையும் வேண்டாத பகையும்…”

செல்லம்மாளின் கண்கள் மூடியிருந்தன. ஆனால் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது. சிறு தேம்பலும் வெளிப்பட்டது.

“ஏன் பாட்டி அழுறே?….” குழந்தை ரவியும் தேம்பத் தொடங்கிவிட்டான். பாட்டி அழுததை அவன் பார்த்ததே இல்லை.

“நன்றி கெட்ட இந்த உலகத்தை நெனைச்சி அழறேண்டா ரவி. பிள்ளைன்னு பாசம்னு, இத்தனை வருடங்களாக என் கண்களை மறைச்சிகிட்டிருந்த திரை அன்னிக்குத் தாண்டா-உனக்காக பரிந்து கிட்டு உன் அப்பன் கிட்டே வாங்கிக் கட்டினேன் பாரு, அன்றிரவுதாண்டா விலகினிச்சு. முப்பத்தைஞ்சு வருடங்களாக எனக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தாம் எத்தனை? அதை யாரால ஈடுகட்ட முடியும்? கடைசியில எனக்கு மிஞ்சினது கெட்ட பேருதான்! உறவைப் பிரிச்ச பாவியாயிட்டேன்; சொந்தத்தை பிரிச்சு கூறு போடற சூனியக்காரியாயிட்டேன். என் உழைப்பெல்லாம் வீணாகப் போச்சே!… நான் பாடுபட்டதெல்லாம் பலனில்லாமல் போச்சே!…” செல்லம்மாளின் பேச்சு நின்றது. அவள் தொண்டை அடைத்துக் கொண்டது.

“அம்மா, என்னை மன்னிச்சிடுங்கம்மா. ஆத்திரத்தில அறிவிழந்து அப்படிப் பேசிட்டேம்மா, உங்க அருமையை மறந்து பேசிட்டேம்மா. என்னை மன்னிச்சிடும்மா. என்னை மன்னிச்சிடு தாயே!…”

சந்திரன் அவள் பாதங்களைப் பற்றினான்.

செல்லம்மாளின் பாதங்கள் குளிர்ந்திருந்தன. தன் மகனுக்கு மன்னிப்பு வழங்க விரும்பாமலே அந்தத் தாய் தனது பயணத்தைக் துவங்கிவிட்டாள்.

– 1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *